இன்று புதன் கிழமை! வடக்கும் தெற்குமாக நான்கு செய்திகள்!




சிறை, நீதிமன்றத்தில் கழிந்தது ஆ.ராசாவின் பிறந்தநாள்

புது தில்லி, மே 10: முன்னாள் மத்திய  அமைச்சர் ஆ.ராசா செவ்வாய்க் கிழமை தனது 48-வது வயதில் அடியெடுத்து வைத்தார். ஆனால் அவர் பிறந்தநாளை கொண்டாடவில்லை.  அட! புலனாய்வுப் பத்திரிகைகள் கூட இதைக் கவனிக்கவில்லை!

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் திகார் சிறையில் அடைக்கப் பட்டுள்ள அவர், தனது பிறந்தநாள் குறித்து சிறையில் யாரிடமும் தெரிவிக்கவில்லை. வழக்கம்போல காலை 5 மணிக்கு எழுந்தார். சக கைதிகளுடன் மூச்சுப் பயிற்சி செய்தார். பின்னர் காலை உணவாக அளிக்கப் பட்ட இரண்டு ரொட்டி, ஒரு கப் டீயை சாப்பிட்டார். இதையடுத்து கைதிகளுக்கு அளிக்கப்படும் வெள்ளைச் சட்டை, ஊதா நிற டிரவுசரை அணிந்து கொண்டார். 

பின்னர் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் பாட்டியாலா சிறப்பு நீதி மன்றத்தில் ஆஜராக வேண்டியிருந்ததால் அவர் அழைத்துச் செல்லப் பட்டார். நீதிமன்றத்துக்கு வந்திருந்த மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியை சந்தித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது.{அவராவது பிறந்த நாள் வாழ்த்து சொன்னாராமா?)  நீதிமன்றத்தில் ராசா அமைதியாகவே காணப்பட்டார். அவர் மாலை 4.30 மணி வரை நீதிமன்றத்தில் இருந்தார். பின்னர் அவரை சிறைச்சாலைக்கு அழைத்து வந்தனர்.

கடந்த ஆண்டுகளில் பிறந்தநாளை பிரமாண்டமாகக் கொண்டிய ராசாவுக்கு இந்த பிறந்தநாளை சிறையிலும், நீதிமன்றத்திலும் கழிக்க வேண்டியது ஆயிற்று.  முன்னாள் அமைச்சரும், திமுகவின் முக்கிய தலைவருமான ராசாவுக்கு செவ்வாய்க்கிழமை பிறந்தநாள் என்பது எங்களுக்கு தெரியவில்லையே என்று திகார் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதான ஆ.ராசா, கடந்த 83 நாளாக திகார் சிறையில் இருந்து வருகிறார்.
கனிமொழி, சரத்குமாரிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை

டெல்லி: திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டி ஆகியோரிடம் இன்று புதன் கிழமை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தினர். ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கனிமொழி கூட்டுச் சதியாளராக சேர்க்கப் பட்டுள்ளார். சரத்குமார் ரெட்டியும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இவர்கள் மீது குற்றப் பத்திரிக்கையும் தாக்கலாகியுள்ளது.

இதையடுத்து இருவரும் கடந்த 6ம் தேதி சிபிஐ கோர்ட்டில் ஆஜராகினர். முன்ஜாமீன் கோரி மனு தாக்கலும் செய்துள்ளனர். இந்த மனு மீதான தீர்ப்பு வருகிற 14ம் தேதி வெளியாகவுள்ளது.இந்த நிலையில் இவர்கள் இருவரையும் விசாரணைக்கு வருமாறு அமலாக்கப் பிரிவு உத்தரவிட்டது. அதை ஏற்று இருவரும் இன்று டெல்லி அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார்கள். அவர்களிடம் அதிகாரிகள் குழு விசாரணை நடத்தியது.

இன்று சென்னை திரும்பும் இருவரும் நாளை சென்னை நுங்கம்பாக்கத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் முன் விசாரணைக்கு ஆஜராகிறார்கள்.

"நமக்கு நாமே துணை" - ஆந்திர எம்.எல்.ஏ.வை அடித்து விரட்டிய மலைவாழ் பெண்கள்
ஹைதராபாத்: தங்களது எதிர்ப்புகளையும் மீறி சுரங்கம் தோண்ட அனுமதி அளித்ததால் ஆத்திரமடைந்த மலைவாழ் மக்கள் ஆந்திர மாநில தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏவை அடித்து விரட்டிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.ஆந்திர மாநிலம் அரக்கு தொகுதி சட்டசபை உறுப்பினர் சிவேரு சோமா. இவர் தெலுகு தேசம் கட்சியைச் சேர்ந்தவர். இத்தொகுதிக்குட்பட்ட சயாரி கிராமத்தில் சைனா களிமண் சுரங்கம் தோண்ட அனுமதி தரப் பட்டுள்ளது. இந்த சுரங்கப் பணிகளுக்கான காண்டிராக்ட் ஒரு பெண்ணுக்கு அளிக்கப் பட்டுள்ளது.

இந்த சுரங்கத்திற்கு இப்பகுதி மலை வாழ் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து அவர்களை சமாதானப்படுத்தவும், அமைதிப் படுத்துவதற்காகவும் அங்கு ஒரு சமாதானக் கூட்டம் ஏற்பாடு செய்யப் பட்டது. கூட்டத்தில் சோமா கலந்து கொண்டார்.அப்போது மலைவாழ் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்தனர். இதனால் பதட்டமான நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கூட்டம் ரத்து செய்யப்பட்டது. சோமா அங்கிருந்து வேகமாக கிளம்பினார்.

ஆனால் அவரை மலை வாழ் மக்கள், குறிப்பாக பெண்கள் முற்றுகையிட்டு அடிக்க ஆரம்பித்தனர். அவரை கீழே தள்ளி விட்டனர். இதனால் அவர் வேகமாக தனது காரை நோக்கி நடக்க ஆரம்பித்தார். ஆனாலும் விடாத பெண்கள் அவரை தலை, தோள்பட்டை, முதுகு ஆகியவற்றில் தாங்கள் வைத்திருந்த நீண்ட கம்புகளாலும், கையாலும் குத்தி தள்ளி விரட்டினர். இதையடுத்து எம்.எல்.ஏவுடன் வந்திருந்த அவரது ஆதரவாளர்கள் சோமாவை பத்திரமாக காருக்குக் கூட்டிச் செல்ல முயன்றனர். அப்போது அவர்களையும் பெண்கள் தாக்கினர். கார்களையும் தாக்கி கண்ணாடிகளை உடைத்தனர்.

இதையடுத்து தப்பித்தோம், பிழைத்தோம் என்று எம்.எல்.ஏவும், அவருடன் வந்தவர்களும் அங்கிருந்து ஓடி உயிர் தப்பினர்.
அரசியல்(வி)யாதிகளிடமிருந்து தப்பித்துக் கொள்ளவேண்டுமானால், நமக்கு நாமே, நம் கைகளே நமக்குதவி என்பதை அந்த மலைவாசிப் பெண்களிடமிருந்து கற்றுக் கொள்ளவேண்டும் போல இருக்கிறதா?
நகைச்சுவையாக எடுத்துக் கொண்டாலும் சரி, சீரியஸாக எடுத்துக் கொண்டாலும் சரி!

மார்க்சிஸ்ட் கட்சியின் டி கே ரங்கராஜன், தமிழகத்தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பியிருக்கும் கடிதம் இது:

"தமிழ்நாட்டில் தற்போது ஆளும் கட்சியாக இருப்பவர்கள் தங்களுடைய கடைசி முயற்சியாக வாக்கு எண்ணிக்கை நடைமுறையினை சீர் குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக எங்களுக்கு செய்தி கிடைத்திருக்கிறது.

2009இல் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடந்தபொழுது சிவகங்கை தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின் போது என்ன நடைமுறை செயல் படுத்தப்பட்டதோ அதே மாதிரியான நடைமுறையினை அவர்கள் பொதுத் தேர்தலிலும் செயல்படுத்த இருப்பதாக எங்களுக்கு நம்பகமான தகவல் கிடைத்திருக்கிறது. இந்த சிவகங்கை பார்முலா தொடர்பாக தேர்தல் வழக்கு ஒன்று (தேர்தல் மனு எண் 5-25.6.2009 - ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் (எதிர்) ப. சிதம்பரம்) சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

மே 13இல் நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின் போது இறுதியாக கிடைக்கப் பெறும் எண்ணிக்கையினை சரிபார்க்கும் நேரத்தில் வாக்கு விவரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஒரு சில அலுவலர்களை (Data Entry Operators) பயன்படுத்தி வாக்குகளின் எண்ணிக்கையினை மாற்றுவதற்கு முயற்சி நடக்கிறது என்று நாங்கள் அறிகிறோம். இந்த அலுவலர்கள்தான் வாக்கு எண்ணிக்கைகான நடைமுறையின் கடைசி இணைப்பாக உள்ளவர்கள். 
இவர்கள் எதிர்கட்சி வேட்பாளர்கள் பெற்றிருக்கும் வாக்குகளை மிகவும் ஆளும் கட்சியின் உந்துதலுடன் அவர்களது வேட்பாளர்களுக்கு சாதகமாக மாற்றி பதிவு செய்யக் கூடும் என நாங்கள் அஞ்சுகிறோம். இம்மாதிரி மக்களின் தீர்ப்பை சீர்குலைக்கும் அனைத்து முயற்சிகளையும் தடுத்து நிறுத்துவதை உறுதி செய்ய வேண்டுமென தேர்தல் ஆணையத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கேட்டுக் கொள்கிறது.

எனவே, ஏற்கனவே உறுதி செய்யப்பட்டிருந்த வாக்கு எண்ணிக்கைக்கான டேட்டா எண்ட்ரி அலுவலர்களை எண்ணிக்கை மையத்திற்குள்ளேயோ அல்லது எண்ணிக்கை மையங்களுக்கிடையையோ இடமாற்றம் செய்யலாம் என்ற எங்களுடைய ஆலோசனையினையும் உங்கள் முன்வைக்கிறோம்.

கட்சிகளின் தலைமை முகவரோ அல்லது பிற முகவர்களில் ஒருவரோ, அந்த டேட்டா எண்ட்ரி அலுவலர் முன்பு அமர்ந்து வாக்குகள் கணக்கிடுவது சரியாக நடைபெறுகிறதா என மேற்பார்வையிட அனுமதிக்க வேண்டும். மேலும் தேர்தல் பார்வையாளர்கள் விழிப்புடன் இருக்க இம்மாதிரியான செயல்பாடுகள் குறித்து நன்கு அறிவுறுத்தப்பட வேண்டும். வாக்குப்பதிவு செய்யும் டேட்டா எண்ட்ரி அலுவலர்கள் மீதான கண்காணிப்பினையும் உறுதி செய்ய வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறோம்.

வாக்கு எண்ணிக்கை நடைமுறை எந்த வகையிலும் பழுதுபடாமல் மக்களின் உண்மையான தீர்ப்பினை வெளிக்கொணர்வதற்கு அனைத்து நடவடிக்கை களையும் எடுக்க வேண்டுமென மீண்டும் உங்களை கேட்டுக் கொள்கிறோம்என்று அந்த கடிதத்தில் டி.கே.இரங்கராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இன்று புதன் கிழமைக்கு இந்த நான்கு போதுமா?



 

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!