ஒரு தலைவன் இருக்கிறான்!

"Break the moulds of the past, but keep safe its gains and its spirit, or else thou hast no future. “
Sri Aurobindo


Thoughts and Aphorisms- Aphorism 237



அது 1965 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் தேதி.
இடம் ஐ.நா சபையின் பாதுகாப்பு கவுன்சில் அறை.


பத்திரிகையாளர்களும், சர்வதேச ராஜதந்திரிகளும் குழுமியிருக்கிறார்கள். அன்றைய பாகிஸ்தானின் வெளியுற‌வுத் துறை அமைச்ச‌ராக இருந்த புட்டோ, பாகிஸ்தான் பத்திரிகைகளில் வெளியாகி இருந்த செய்திகளையும், இந்தியா மீது வழக்கம் போல வெறுப்பையும் வன்மத்தையும் கக்கும் பிரசாரத்தையும் முடித்துவிட்டு நெற்றியில் வேர்வையும் வெறுப்பும் கொப்பளிக்க அமர்ந்திருக்கிறார்.


அடுத்து என்ன செய்தி என்று எல்லோரும் காத்திருக்கிறார்கள்.


ஆசியாவில் மூண்ட‌ சண்டை ஓயுமா இல்லை இன்னும் பெரிதாகுமா? இந்த சண்டை இந்தியா‍ பாகிஸ்தான் அளவோடு நின்று விடுமா அல்லது சீனாவும் உள்ளே நுழைந்து, அப்படியே பக்கத்து நாடுகளும் ஒவ்வொன்றாக சேர்ந்து கொண்டு சண்டை பெரிதாகி விடுமா?


ஐ நா சபை சண்டையை நிறுத்தும்படி இரண்டு தரப்புக்கும் எச்சரிக்கை விடுத்தாயிற்று. சண்டை நிறுத்தம் செய்யப்படுமா என்ற கேள்விக்கு பாகிஸ்தான் என்ன சொல்லப் போகிறது என்பதைத் தெரிந்து கொள்வதற்காகத் தான் அத்தனை பரபரப்புமே! போர் நிறுத்தம் செய்வதற்கு அதிகாலை மூன்று மணி வரை அவகாசம் தரப்பட்டிருந்தது.


புட்டோ எவ்வளவு அவகாசம் எடுத்துக் கொள்ள முடியுமோ, அவ்வளவு காலம் தள்ளிப்போட முயன்றுமே கூட அந்த அறிவிப்பை தவிர்க்க முடியவில்லை பாவம்! அதிகாலை மூன்று மணியாவதற்கு ஒரு நிமிடம் முன்னதாக அந்த செய்தியைத் தன் எதிரே குவிந்து கிடந்த செய்தித் தாள்களுக்கிடையே அதிகாரபூர்வமாக தந்தி மூலம் வந்திருந்த தகவலைத் துழாவி எடுத்து வாசிக்க ஆரம்பித்தார்.



"In the interests of inter national peace ... I have issued the following order to the Pakistani armed forces: they will stop fighting as from 1205 hours West Pakistan time today."


பாகிஸ்தான் ஜனாதிபதியாக இருந்த மொஹமது அயூப் கான் அறிவித்த போர்நிறுத்தம் இப்படி புட்டோவினால் வேண்டாவெறுப்பாக அறிவிக்கப் பட்டது.புட்டோவின் இந்த வெறுப்பு இன்னொரு போருக்கான பாகிஸ்தானியரின் மன நிலையை எடுத்துக் காட்டுவதாகவே இருந்தது. கேவலம், இந்தியர்களிடம் தோற்பதா?


அமெரிக்க மற்றும் சர்வதேச உதவிகளை எல்லா விதத்திலும் நம்பியிருந்த நிலையில், பாகிஸ்தானுக்கு வேறு வழி அந்த நேரத்தில் இருக்கவில்லை. இரண்டு முக்கியமான தப்புக் கண‌க்குகளைப் போட்ட பாகிஸ்தான், வேண்டா வெறுப்போடு வாலைச் சுருட்டிக் கொள்ள வேண்டிய பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டது.


இந்தியர்களைக் குறித்த அலட்சியமான மனோபாவம், பிரிடிஷ்காரர்களால் தோற்றுவிக்கப் பட்டது. இந்தியர்களைப் போரிடத் தைரியமில்லாத கோழைகள் என்று அவர்கள் நினைத்தார்கள்.இந்தியாவிலேயே போர் செய்யத் தைரியம் இருந்த இரன்டு ஜாதியினராக, முஸ்லிம்களையும்,சீக்கியர்களையும் மட்டுமே ரகம் பிரித்து வைத்திருந்தார்கள்.


ஆக, தாங்கள் போர் செய்யும் ஜாதி என்று பாகிஸ்தானியர்கள் தங்க‌ளைக் கற்பனை செய்ததோடு, இந்தியர்களைக் கோழைகள் என்று முடிவு செய்தது முதல் தவறு என்றால், நேருவின் சமாதானப் புறா ஆசையும், 1948 ஊடுறுவல்கள், 1962 இந்தியசீனப் போர் எல்லாம் சேர்ந்து எற்பட்ட தவறுதலான பிம்பம் ‍இது முதல் தப்புக் கணக்கு.


அடுத்ததாக, ரஷியாவுக்கு எதிராகக் கொம்பு சீவிவிடுவதற்காக, அமெரிக்கா கொடுத்த ஏராள‌மான‌ ஆயுதங்க‌ள்,ந‌வீன ரகப் போர் விமானங்கள், அப்புறம் ஆசியாவில் பெரிய வஸ்தாத் கணக்காகத் தன்னைக் காட்டிக் கொண்டு போர் தொடங்கினால் தங்களுடைய நேரடியான, ராணுவ ரீதியிலான துணையிருக்கும் என்ற சீனாவின் வாக்குறுதி இவைகளைக் கொண்டு மட்டும் போரில் வென்று விட முடியும் என்றுபோட்ட இரன்டாவது தப்புக் கணக்கு.


யுத்தம் ஒரு வழியாக முடிவுக்குக் கொண்டு வரப் பட்டது.


இப்படிச் செய்தியை வெளியிட்டு, டைம் பத்திரிகை இந்தப் போரில் எவருக்குமே வெற்றியில்லை என்பதாக சொல்கிற‌து.முக்கியமாக செஞ்சீனம், ஆசிய மக்களிடம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படும் முகத்தை வெளியில் காட்ட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் சொல்கிறது.


Victory, in fact, belonged to no one in last week's ceasefire. Kashmir remained divided. India still claimed 690 sq. mi. of Pakistani territory (see map), but had failed by a scant three miles to capture the strategic Sialkot plateau. Pakistan held 250 sq. mi. of Indian Kashmir and Rajasthan, but had lost —temporarily at least — half its armor. And Red China had lost that most valuable of Asian commodities: face.


1965 ஆம் வருடம் செப்டெம்பெர் 17 ஆம் தேதி, சீன அரசு இந்தியாவைப் பகிரங்க‌மாக எச்சரித்ததும், அரசு முறைக் கடிதம் எழுதியதும் மும்முனைப்போர் ஏற்படப்போவதாக ஒரு சித்திரத்தைத் தோற்றுவித்தது. சீன எல்லைக்குள் இந்தியப் படைகள் பல இடங்களில் புகுந்த‌தாகவும், இரன்டு திபெத்தியர்களைக் கடத்திச் சென்றதாகவும், எண்ணூறு ஆடுகள், 59 யாக் (எருமைகள்) இவற்றையும் கடத்திச்சென்று விட்டதாகவும் சீனா குற்றம் சாட்டியது. சீன எல்லைக்குல், இந்தியப்படைகள் ஆயுதங்க‌ளைக் குவித்து வைத்திருப்பதாகவும், உடனடியாக அவைகளை அகற்றாவிட்டால், கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் "உதார்" பலமாகவே இருந்தது.


அன்று பிரதராக இருந்த சாஸ்திரி, உறுதியோடு சீனாவின் மிரட்டலை எதிர்கொண்டார். புது தில்லியில் இருந்த சீன தூதரகம் முன்னால் நிறைய ஆடுகளின் அணிவகுப்புடன் கூடிய கண்டனப் பேரணி ஒன்று நடந்தது. ஆடுகளின் கழுத்தில் இப்படி வாசகங்கள் எழுதிய அட்டைகள் தொங்கின.


"எங்களை வேண்டுமானால் சாப்பிடுங்கள்! உலகத்தைக் காப்பாற்றுங்கள்!"


சீனர்களுக்கே கொஞ்சம் வெட்கமாக இருந்திருக்க வேண்டும்!என்ன காரண‌த்தினாலோ, ஐம்பத்தாறு இடங்களில் இருந்து இந்தியப் படைகள் ஆயுதங்களை அகற்றியதால் பிரச்சினை முற்றாமல் தவிர்க்கப் பட்டதாகவும் சீனா ஒரு அசடு வழிந்த அறிக்கையுடன் நிறுத்திக் கொண்டது.


பாகிஸ்தானில் ஆட்சியாளர்களும் ராணுவமும் அமெரிக்க டாலரில் கொழுத்திருக்க, முல்லாக்களும் மௌல்விகளும் அமெரிக்காவைத் திட்டித் தீர்ப்பார்கள். புனிதப் போருக்கு அறைகூவல் விடுப்பார்கள். ஏமாந்துபோகத் தயாராக இருக்கும் ஒரு கூட்டம் எப்போதும் இவர்கள் பின்னால் செம்மறியாடுகள் மாதிரி பலியாவதற்கோ, அடுத்தவரைப் பலி கொள்வதற்கோ வந்து கொண்டே இருக்கும்!


இதற்குப் பெயர் ஜிஹாத்! புனிதப்போர்! நாலாவது தூண் கதையில் வரும் வில்லன் சொல்வதுபோல் ஜனங்கள் எப்போதுமே முட்டாள்கள் தான் என்பதை இந்தியா, பாகிஸ்தான் இந்த இரண்டு நாடுகளிலுமே அடிக்கடி நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.


தங்களுக்கு அளித்த ஆதரவுக்காக, அயூப் கான் வெளிப்படையாகவே சீனாவுக்கும் இந்தோனெஷியா உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளுக்கும் நன்றி தெரிவித்தார். அமெரிக்காவுக்கு வெளிப்படையாகச் சொல்ல முடியவில்லை. போர் நிறுத்தம் செய்வதற்கு முந்தின நாள்தான் லாகூரிலும், கராச்சியிலும் அமெரிக்க தூதரகக் கட்டடங்களுக்கும் நூலகங்களுக்கும் வெறிபிடித்த கூட்டம் கல்லெறிந்தும் வேறுவிதமாகவும் வன்முறையில் ஈடுபட்டிருந்தது. லிண்டன் ஜான்சனுக்குத் தொலைபேசியில் அயூப் கான் தனிப்பட்ட முறையில் தொடர்புகொண்டு போர் நிறுத்தத்திற்கு சம்மதிப்பதாகவும், அமெரிக்கா அளித்து வரும் உதவிகளுக்கு நன்றி தெரிவித்துப் பேசியதாகவும் செய்திகள் வெளிவந்தன.


பாகிஸ்தான் அரசும், அரசியல்வாதிகளும் அமெரிக்க நிதியுதவி தயவில் வாழ்ந்து கொன்டிருக்க, ஜனங்களோ அமெரிக்க எதிர்ப்பில் கொந்தளித்துக் கொன்டிருந்தார்கள். பாகிஸ்தான் அரசியலில் இன்றைக்கும் காணக் கூடிய மிகப் பெரிய முரண்பாடு இது தான்! எதற்கோ தலையையும் வேறெதற்கொ வாலையும் காட்டிக் கொண்டிருக்கும் போக்கு, பாகிஸ்தானுடைய சாபக் கேடு. இது தொடர்கிற வரை உண்மையான சமாதானம் மலர்வதற்கு வழியுமில்லை என்பதை இந்த இடத்தில் கவனமாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.


இப்போதும் கூட 1965ஆம் வருடப் போரில் உண்மையாக வென்றவர் யார் என்பதில் பலவிதமான குரல்கள் பல இடங்களில் இருந்தும் வந்து கொண்டிருக்கின்றன. டைம் பத்திரிக்கை, ஒரு மேற்கத்திய நாட்டு ராஜதந்திரி சொன்னதாக, ஒரு தகவலை வெளியிட்டிருந்தது:" இந்தியா என்று ஏதாவது எடைபார்க்கும் மெஷினில் காசுபோடுவ்து மாதிரி, ஒரு இயந்திரத்தில் போட்டிருந்தால், அது உடனே மகாராஜாக்கள், பாம்புகள், எக்கச்சக்கமான குழந்தைகள், ஏராளமான மாடுகள், தொடை நடுங்கிகளான ஹிந்துக்கள் என்று தான் விவரத்தைத் துப்பியிருக்கும். ஆனால், இன்றைக்குத் தன்னுடைய சொந்த வலுவிலே ஆசியாவின் வலிமையான சக்தியாக உருவெடுக்கப்போவதை எல்லோருக்கும் புரிய வைத்திருக்கிறது."


இப்படி, ஒரு போரில் ஜெயித்ததனால் இந்தியா வலிமையான சக்தியாகி விட்டதாக இங்கே நான் செல்வதாக நினைக்க வேண்டாம். சாஸ்திரி என்ற மாபெரும் மனிதர், ஒரு தேசத்தை ஒன்றுபடுத்திய தருணம் அது. நாடு பிரிவினையானபோது, வெள்ளையர்கள் விதைத்துவிட்டுப்போன விஷ வித்துக்களில் ஒன்று போர்க்குணம் வாய்ந்த ஜாதிகள்! மற்றவை எல்லாம் அடங்கிக் கிடக்க வேண்டியவை என்ற கோட்பாடு.பிரித்தாள நினைத்தவர்களின் எண்ணத்தைத் தவிடுபொடியாக்கிய, பெருமிதப்பட வேண்டிய நேரம் அது!


ஹிந்துக்கள் என்றாலே தொடை நடுங்கிகள் என்ற எண்ணமே தவறு என்ற கசப்பான படிப்பினையாக பாகிஸ்தான் ராணுவத்துக்குக் கற்றுக் கொடுத்த தருணம் அது. நேருவுக்கு அந்த தைரியம் இருந்ததில்லை. சாஸ்திரி பதவியில் இருந்த காலமே ஒன்றரை ஆண்டுகள் தான்! ஒரு கணமே ஆனாலும் இருளைக் கிழித்துப் புறப்பட்ட மின்னலாக, இந்த தேசத்தின் பெருமிதமாக சாஸ்திரியை வணங்க வாருங்கள் என்று உங்களையுமே அழைக்கிறேன்!


ஐந்தாண்டுத் திட்டங்கள், சோஷலிசக் கனவுகள் என்று நேரு தூங்கி வழிந்தபோது, நாடு கடுமையான உணவுப்பற்றாக்குறையைச் சந்தித்தது. பிரிடிஷ் காரர்களிடம் இருந்து கற்றுக்கொண்ட சிவப்பு நாடா, லைசன்ஸ் பெர்மிட் ராஜ் என்று தான் நேருவின் ஆட்சிக் காலத்தைச் சொல்ல முடிகிறது. நேருவின் அமைச்சரவையில் இருந்தவர்கள் ஒவ்வொரு நாடாகப் போய், உணவுக்காகக் கையேந்திக் கொண்டிருந்தார்கள்.


அமெரிக்காவின் பப்ளிக் லா நானூற்றி எண்பது என்ற சட்டத்தின் கீழ், அமெரிக்கா தரம் குறைந்த கோதுமையை இந்தியாவுக்கு அனுப்பிவைத்தது. பார்த்தீனியம் என்ற அரிப்பை உண்டாக்கும் ஒரு விதமான நச்சுத் தாவர விதைகளையும் கலந்து அமெரிக்க உதவி கிடைத்தது. நிலத்து நீரை உறிஞ்சிப்பாலைவனமாக்கும் சீமைக் கருவிளை கூட அந்தக் காலத்து அமெரிக்க உதவியாகக் கிடைத்ததுதான்!


தரம் குறைந்த உதவியை பெறுவதைவிட, பட்டினி கிடப்பது மேல், நல்லதும் கூட என்ற துணிச்சலோடு, தரம் குறைந்த உணவுப்பொருட்களை உதவி என்ற பேரில் தலையில் கட்ட வேண்டாம் என்று சொல்கிற துணிச்சல் லால் பஹதூர் சாஸ்திரி என்ற மாபெரும் ஒரு மனிதர் ஒருவருக்கே இருந்தது.


வாரம் ஒரு நாள் உபவாசம் இருந்து, பற்றாக்குறையை சமன் செய்துகொள்வோம் என்று திங்கள் கிழமையைத் தேர்ந்தெடுத்து அன்றைய நெருக்கடியை காந்தீய வழியில், சமாளித்த துணிச்சலும் சாஸ்திரி ஒருவருக்கே இருந்தது.


இந்தத் தொடர், அரசியலைப் பொழுதுபோக்குவதற்காக அலசுவது என்று நின்றுவிடாமல், கடந்துபோன நிகழ்வுகளில் பெறவேண்டிய பாடம், தலைமைப் பண்பு, என்ற வெவ்வேறு கோணங்களில் இருந்து பார்க்கும் முயற்சியாகத் தொடர்ந்து பேசுவோம்!

17 comments:

  1. அருமையான பதிவு தோழரே .... இது போன்ற நெஞ்சுரம் கொண்ட தலைவர்கள் உருவாக வேண்டும் ..

    ReplyDelete
  2. நிறைய வரலாற்று நிகழ்வுகளை அறிந்து கொண்டேன்.

    நன்றி !

    ReplyDelete
  3. வாருங்கள் திரு கோவி.கண்ணன்!

    வரலாறு என்பது கற்றுக்கொள்வதற்கு மிகவும் அடிப்படையான சாதனம். செக்குமாடுகள் மாதிரியே ஒரே இடத்தில் சுற்றிச் சுற்றிவராமல், பழைய நிகழ்வுகளில் இருந்து பாடத்தைக் கற்றுக்கொள்வதும் அதில் இருந்து அடுத்து அடுத்து முன்னேறுவதும், சிந்திக்கத் தெரிந்த மனிதர்களுக்குக் கொடுக்கப் பட்டிருக்கும் பெரிய வரப்பிரசாதம்.

    நேற்றைய நிகழ்வுகளில் பாடம் கற்றுக் கொள்வது என்பது, அதில் காணும் குறையை இடித்துரைத்து அல்லது இழிவுபடுத்தி அங்கேயே நின்றுவிடுவதில் அல்ல, அதையும் கடந்து போவதில் தான் இருக்கிறது.

    ReplyDelete
  4. சாஸ்த்திரி புகழ் ஓங்குக!

    பார்பனியம் தான் இந்தியாவை காப்பாற்ற ஒரே சக்தி!

    @ கோவி கண்ணன்

    வரலாறு முக்கியம் அமைச்சரே!

    ReplyDelete
  5. We are BLINDED by this latest TV/Magazine exposer of ONLY the Nehru family (3 PMs ruled more than 36 Years)as the GREAT LEADERS (Infact they only defaced our NATIONS glory).
    Let us expose the SELFISH nature of NAHRU, Corroptted INDRA GHANDI & the BOFORS FAME Rajiv.
    They offerd 2 houses to the NATION and taken the WHOLE NATION for their FAMILY (Rahul is the FUTURE PM) Vasan

    ReplyDelete
  6. நல்ல பதிவு. 1965லிருந்து வாழ்ந்த அனைவருமே திரு. சாஸ்திரியை புகழ்ந்தவர்களே. (எம் தந்தை உட்பட)

    ReplyDelete
  7. திரு.வால்பையன் (எ) அருண்!

    குழந்தைகள் சுட்டியாக வால்தனங்கள் செய்தால் அது ரசிக்கும் படியாக இருக்கும்! எல்லை மீறும் போது நறுக்கப் படுவதாகவுமே ஆகிவிடக் கூடும்!

    இந்தப் பதிவில் பார்ப்பனீயம் பற்றிய பிரச்சினை எங்கு வந்தது?

    வரலாறு உங்களுக்கு அலெர்ஜியாக இருந்தால், அது உங்களுடைய பிரச்சினை. கற்றுக் கொள்ளப் போவது இல்லை என்ற நிலைஎடுப்பதும் உங்கள் விருப்பம்,அதற்குமேல் நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது?

    ReplyDelete
  8. //குழந்தைகள் சுட்டியாக வால்தனங்கள் செய்தால் அது ரசிக்கும் படியாக இருக்கும்! எல்லை மீறும் போது நறுக்கப் படுவதாகவுமே ஆகிவிடக் கூடும்!//


    சுட்டித்தனத்தை ரசிக்க வரலாற்றை அறிந்து கொள்ளும் ஆர்வத்தை விட பொறுமை வேண்டுமா என்ன!?

    கடந்த பத்து இடுங்கைகளாக உங்களுடய பதிவில், சீனா, பாகிஸ்தான் கூடவே அமெரிக்கா செய்த மொள்ளமாறி தனக்களும் விரிவாக அலசப்பட்டாலும் சாரம்சம் என்னவென்றால், சாஸ்த்திரி இரும்பு மனிதர் மாதிரி இந்தியாவை காத்தார் என்பது தான்!

    அதை தான் முதல் பதிவிலேயே சொல்லியாச்சே பின் ஏன் மறுபடி மறுபடி, சபரிநாத் மாதிரி எத்தனைபேர் ஆதரிக்கிறார்கள் என கருத்து கணிப்பு நடத்துகிறீர்களா?

    இன்னும் பாக்கப்போன இந்த விசயத்தை தூக்கத்திலும் விடமுடியாத நிலை போல இருந்தது தொடர்ச்சியான பதிவுகள், புவனேஸ்வரி பற்றி எழுதினாலும் சீனா தவிர்க்கமுடியாமல் போய்விட்டதே!?

    இப்ப உங்க பிரச்சனை மக்கள், சீனாவை மறந்ததா!? சாஸ்த்திரியை மறந்ததா!?

    ReplyDelete
  9. //செக்குமாடுகள் மாதிரியே ஒரே இடத்தில் சுற்றிச் சுற்றிவராமல், பழைய நிகழ்வுகளில் இருந்து பாடத்தைக் கற்றுக்கொள்வதும் அதில் இருந்து அடுத்து அடுத்து முன்னேறுவதும், சிந்திக்கத் தெரிந்த மனிதர்களுக்குக் கொடுக்கப் பட்டிருக்கும் பெரிய வரப்பிரசாதம்.//

    இதுவரைக்கும் வரலாறு நமக்கு என்ன சொல்லி கொடுத்துறுக்குன்னா, வரலாற்றில் இருந்து நாம் ஒரு புண்ணாக்கும் தெரிந்து கொள்ளவில்லை என்பதே!

    செக்குமாடுக்கும், புண்ணாக்குக்கும் எதோ தொடர்பு இருப்பது போல் தெரிகிறதே!

    ReplyDelete
  10. வருகைக்கு நன்றி திரு.வாசன்,

    நேருவின் குடும்பம் வெறும் இரண்டு வீடுகளை மட்டும் தேசத்துக்குக் கொடுத்து விட்டு தேசத்தையே சுருட்டிக் கொண்டதாகக் குற்றம் சொல்வது, நியாயமான குற்றச்சாட்டு அல்ல!

    சுதந்திர இந்தியாவை வடிவமைத்ததில் நேருவின் பங்கை, அவ்வளவு குறைத்தும் மதிப்பிட்டு விட முடியாது. நேருவிடம் இருந்த ஒரு நல்ல குணம், எவ்வளவு கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், எவரையும் தன்னுடைய எதிரியாக நினைக்காதது!
    இந்த தேசம் போகவேண்டிய பாதையைக் குறித்து, அவருக்கு ஒரு அற்புதமான கனவு இருந்தது என்பதும், அவருடைய குடும்பத்தினர் அனைவருமே இந்த தேசத்தை மிகவும் நேசித்தவர்கள் என்பதிலும் எந்த சந்தேகமும் கிடையாது.

    இங்கே, நேரு அரசியல்ரீதியாக சறுக்கிய தருணங்களை மட்டுமே, தேசத்தின் தலைவராக, மக்களை வழிநடத்திச் செல்வதில் தவறிய, ஒரு வெற்றிகரமான நிர்வாகியாகவோ, தலைவராகவோ இல்லாமல் போன துரதிர்ஷ்டத்தை மட்டும் விமரிசனத்திற்கு எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
  11. சபரிநாதன் அவர்களே!
    வடக்கே எப்படியோ எனக்குத் தெரியாது. இங்கே தமிழ்நாட்டில் நிலைமை கொஞ்சம் வேறு விதமாக இருந்தது. ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம், ரேஷன் கடைகளில் காத்துக் கிடந்த அவலம், பிரச்சினைகளைத் திறமைக்குறைவாக அன்றைய முதலமைச்சர் பக்தவத்சலம் கையாண்ட விதம், எல்லாம் சேர்ந்து சாஸ்திரியை பற்றிய கண்ணோட்டம் அவ்வளவு நன்றாக இருந்ததில்லை. திங்கட்கிழமை உபவாசம் (இங்க தமிழ் நாட்டில் வியாழக் கிழமையாக) என்ற யோசனையை இங்கே ஆதரித்தவர்கள் எவருமில்லை.

    பாகிஸ்தானுடனான போர் அவரைப் பற்றியகண்ணோட்டத்தைக் கொஞ்சம் மாற்றியது, தவிர தாஷ்கெண்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மறுநாளே சந்தேகத்துக்கிடமான முறையில் அவரது மரணம் எல்லாமாகச் சேர்ந்து அவருடைய இமேஜைத் தமிழ் நாட்டில் உயர்த்தியது என்று வேண்டுமானால் சொல்லலாம்.

    ReplyDelete
  12. /செக்குமாடுக்கும், புண்ணாக்குக்கும் எதோ தொடர்பு இருப்பது போல் தெரிகிறதே/

    செக்குமாடுகளுக்குப் புண்ணாக்கு தான் உணவு! வேறென்ன?

    ReplyDelete
  13. /இப்ப உங்க பிரச்சனை மக்கள், சீனாவை மறந்ததா!? சாஸ்திரியை மறந்ததா!?/

    நீங்கள் சொல்வது எதுவுமில்லை!

    யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலே-அட
    அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியலே

    என்று கவிஞர் கண்ணதாசன் வார்த்தைகளில் தெரிகிற சத்தியம். யாரைத்தான் தலை மேல் தூக்கி வைத்துக் கொண்டாடுவது, எவரைத் தான் தலைவராக ஏற்றுக்கொள்வது என்பதே தெரியாமல் இருக்கும் ஜனங்களுடைய அறியாமை, அயோக்கியர்களைத் தாங்கிப்பிடிக்கும் நான்கு தூண்களாகவுமே ஆகிப்போன விபரீதத்தை எடுத்துச் சொல்வதைத் தவிர வேறெதுவும் இல்லை!

    ReplyDelete
  14. சகோ வால்பையன்,

    லால் பகதூர் சாஸ்திரி நீங்கள் குறிப்பிடுவது போல பார்ப்பனர் அல்லர். பிறப்பின் அடிப்படையில் சாதியை எதிர்த்து தனது கடைசி பெயரை சாஸ்திரி என மாற்றி கொண்டார். நானும் சாதி என்பதையே நான் ஏற்கவில்லை.

    உங்களது பார்பன பாட்டு அவசியம் தானா ? இது சாதி ஒழிப்பிற்கு பயன்படுமா ? இது ஒரு வகையில் முற்போக்கு தீண்டாமை என கொள்ளலமா? :(

    ReplyDelete
  15. கிருஷ்ணமூர்த்தி அவர்களே,

    எனக்கு அக்காலத்தின் நிலமை தெரியாது. ஆனால் எம் தந்தை (1965ன் இளைஞர்) எனக்கு நல்ல தலைவர் எனக் கூறிய இந்திய தலைவர் லால் மட்டுமே.
    ”ஜெய் ஜவான் ஜெய் கிசான்” எனும் முழக்கத்தை இன்றும் நினைவு கூறுபவர்.
    --
    இவ்விடுகையில் உள்ள கருத்துக்கள் இந்தியா நல்ல மேன்மைக்கு வர வேண்டும் என்ற நோக்கில் இருப்பதாக மட்டுமே எனக்கு தோன்றுகிறது. அது சரி ஏன் இது சிலருக்கு எரிச்சலை தருகிறது ?

    ReplyDelete
  16. உண்மைதான்! லால் பஹதூர் ஸ்ரீவத்சவா என்பது தான் சாஸ்திரியின் உண்மையான முழுப்பெயர்! ஸ்ரீவத்சவா என்ற குடும்பப் பெயரை, இதை ஒரு ஜாதி என்று கூடச் சொல்லமுடியாது, ஒரு கூட்டம் அல்லது கோத்திரப்பெயர், தன பெயரோடு இருப்பதைத் தவிர்த்த உண்மையான காந்தீயவாதி அவர்.

    சாஸ்திரி என்பது,காசி வித்யா பீடத்தில் அவர் கல்வியை முடித்த பிறகு 1926 இல் அளிக்கப்பட்ட பட்டம், அதாவது டிகிரி! பின்னாட்களில் சாஸ்திரி என்று அவர் பெயரோடு நிரந்தரமாக ஒட்டிக் கொண்டது.

    இங்கே கூட ஒரு விசித்திரமான வேற்றுமையைச் சொல்ல முடியும்! நேருவின் முன்னோர்களில் எவரோ காஷ்மீரில் பண்டிதர்களாக, அதாவது கற்ற அறிஞர்களாக இருந்திருக்கிறார்கள். அதுவே நேருவின் குடும்பத்தில் ஜவகர்லால் நேரு வரை பண்டிட் நேரு என்று அழைக்கப் படுவதாயிற்று. காஷ்மீர் பண்டிட்டுகள் என்ற தனி அடையாளமாகவும், சாதியும் ஆன மாதிரி இல்லை இது.

    ஏதாவது ஒரு ஈயம், இசம் மீது வெறுப்பை வளர்த்துக் கொண்டே இருப்பது தமிழ்நாட்டில் ஒரு பிழைப்பாகவே ஆகிவிட்டது!

    ReplyDelete
  17. //ஏதாவது ஒரு ஈயம், இசம் மீது வெறுப்பை வளர்த்துக் கொண்டே இருப்பது தமிழ்நாட்டில் ஒரு பிழைப்பாகவே ஆகிவிட்டது! //

    அந்த பின்னூட்டத்தில் இருந்ததும் வரலாறு தான்! அதை சொல்லாமல் சும்மா சாஸ்த்திரி புராணம் பாடி கொண்டிருந்தால் எல்லோருக்கும் சந்தேகம் வரத்தான் செய்யும்!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!