ஃபிளெமிங், ஒரு ஏழை விவசாயி! ஸ்காட்லாந்து பகுதியில் டார்வேல் என்ற கிராமப் பகுதி, அன்றாட ஜீவனத்திற்கே மிகவும் கஷ்டம்!
ஒரு நாள் யாரோ, அபாயத்தில் சிக்கி உதவி கேட்டுக் கூச்சலிடுவது கேட்டது.
போய்ப் பார்த்தபோது, ஒரு இளைஞன், புதைசகதியில் இடுப்பளவு சிக்கி, வெளியே வர முடியாமல் பயத்தோடு கத்தித் தவித்துக் கொண்டிருந்ததை அந்த விவசாயி பார்த்தார். புதை சகதியில் இருந்து அந்த இளைஞனை மெல்ல விடுவித்து, தேற்றினார். அந்த விவசாயி, சரியான நேரத்தில் உதவிக்கு வராமல் இருந்திருந்தால், அந்த இளைஞன் கத்தி கத்தியே, பயம் பாதி சகதிக்குள் முழுகுவது மீதி என்று கதை முடிந்திருக்கும்.
மறுநாள், அந்த விவசாயியைத் தேடி, வண்ணச் சாரட் வண்டியில், ஒரு பெருந்தனக்காரர் வந்திறங்கினார். " என் பெயர் ரண்டால் ஃப் ! நேற்று நீங்கள் காப்பாற்றிய இளைஞன், என் மகன்! அவனுடைய உயிரைக் காப்பாற்றியதற்காக என்னுடைய நன்றியைத் தெரிவித்துப் போக வந்தேன், உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் கேளுங்கள்! என்னிடம் இருப்பதைத் தருகிறேன்." என்று தழுதழுத்தார்.
ஸ்காட்லாந்து மக்களே கொஞ்சம் பெருமிதமும், சுயகௌரவமும் பார்க்கிற மக்கள். ஒரு உயிரைக் காப்பாற்றுவது மனிதனுடைய கடமை! ஆபத்தில் இருப்பவன் எதிரியே ஆனாலும் காப்பாற்ற வேண்டும், அப்படியிருக்க செய்த உதவிக்குக் கைம்மாறு எதிர்பார்ப்பதா? அந்த விவசாயி, பணிவோடு பெருந்தனக்காரருடைய உதவியை மறுத்தார். அந்த நேரம் ஒரு சின்னப்பையன், ஃபிளெமிங்குடைய மகன், அங்கே வந்தான். விவசாயி, அவனைத் தன்னுடைய மகன் என்று அறிமுகம் செய்து வைத்தார்.பிரபு அவனைப் பார்த்துவிட்டுச் சொன்னார்.
"இதையாவது கேளுங்கள்! இவனை நான் அழைத்துப் போகிறேன், நன்றாகப் படிக்க வைக்கிறேன்! உங்களுடைய நல்ல குணம் இவனிடம் இருக்குமானால், நீங்களே பார்த்துப் பெருமிதப்படுகிற மாபெரும் மனிதனாக இவன் வருவான்!"
அதே மாதிரி, அந்தச் சிறுவன், லண்டனில் இருந்த பிரபுவோடு அனுப்பப் பட்டான். லண்டனில், செயிட் மேரி மருத்துவப் பள்ளியில் படித்துப் பெரிய மருத்துவராகவும், கண்டுபிடிப்பாளராகவும் உயர்ந்தான். பின்னால் சர் அலெக்சாண்டர் ஃபிளெமிங் என்று உலகம் முழுக்க அறியப்பட்ட மருத்துவர். பெனிசிலின் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்தவர்.
ரண்டால் ஃப் பிரபுவின் மகன், முன்னால் ஸ்காட்லாந்து விவசாயியால் புதை சகதியில் இருந்து காப்பற்றப் பட்டவன், நிமோனியா காய்ச்சல் வந்து அவதிப்பட்டபோது, காப்பாற்றியது பெனிசிலின் தடுப்பு மருந்தால் தான்!
அப்படி, தகப்பன், மகன் இருவராலும் இரு வேறு தருணங்களில் காப்பாற்றப்பட்ட அந்த இளைஞனின் பெயர் வின்ஸ்டன் சர்ச்சில்! பின்னாட்களில் இங்கிலாந்துப் பிரதமராகவும் பதவி வகித்த, அதே வின்ஸ்டன் சர்ச்சில்!
சர் அலெக்சாண்டர் ஃபிளெமிங் நோய்த் தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கத் தீவீரமாகப் பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தபோதிலும், பெனிசிலின் கண்டுபிடிக்கப் பட்ட விதம், ஒரு தற்செயலான தருணத்தில் தான்! கிருமிகளால் ஏற்படும் நோய்கள், மரணத்திற்கு எதிராக மருந்தே இல்லை என்ற நிலையை மாற்றப் பிறந்த முதல் ஆண்டிபயாடிக் மருந்து பெனிசிலின்! நடந்தது 1928 ஆம் ஆண்டு! அடுத்த ஆண்டில், ஃபிளெமிங் முழுமையான ஆராய்ச்சிக் குறிப்புக்களை வெளியிட்டார்,
ஒரு சிக்கலான தருணத்தில் தான் அதற்குத் தீர்வும் பிறந்தது!.
அதற்கும் பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னால், அமெரிக்காவில் ஒரு ஆராய்ச்சியாளனுடைய அத்தனை உபகரணங்களும், குறிப்புக்களும் தீயில் கருகிச் சாம்பலாயின. மறுநாள், அந்த அழிவைப் பார்த்து விட்டு, அந்த மனிதர் சொன்னார்,
"இந்த அழிவிலும் பெரிய வரம் இருக்கிறது. நம்முடைய எல்லா முட்டாள்தனங்களும் அழிக்கப் பட்டு விட்டன! ஆண்டவனுக்கு நன்றி சொல்லிவிட்டு, இனிமேல் நாம் புதிதாகத் தொடங்கலாம்!"
அதற்கடுத்த மூன்றாவது வாரம், அந்த கண்டுபிடிப்பாளர், தனது புதிய கண்டுபிடிப்பான போனோக்ரா ஃப் (கிராமபோன்)-ஐ அறிமுகம் செய்தார்! அந்த விந்தை மனிதரின் பெயர் தாமஸ் ஆல்வா எடிசன்!
வெற்றி, சாதனை என்பதெல்லாம், பேரிடர், சோதனை, சிக்கல்கள் என்பதில் இருந்து தான் பிறக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறதா?
இளம் பருவ சர்ச்சில், இன்னும் சிறிது நேரம் கவனிக்கப் படாமல் இருந்தால், முக்கிப் போயிருக்க வேண்டியது. பயம் ஆட்டிப் படைத்த நேரத்திலுமே கூட உதவி கோரிக் கூச்சல் எழுப்புவது ஒன்று தான் அந்த நேரத்தில் செய்ய முடிந்தது. அதைச் செய்தபோது, யாரோ ஒருவரது கவனத்தை ஈர்க்கவே வந்து காப்பாற்றுகிறார்.
அதே மாதிரி, பாக்டீரியாக்களால், நோயாளிகள் மரணமடைந்து கொண்டிருந்த நேரம், காரணம் என்ன என்பது புரிகிறது, ஆனால், மருந்து என்ன என்பது தெரியவில்லை! அதே சிந்தனையாக இருந்த ஃபிளெமிங் கண்ணில், கிருமிகள் இருந்த தகட்டில் தற்செயலாக, பூசனம் பிடித்த ஒரு தகட்டில் இருந்த ஒரு விஷயம், கிருமிகளை அறவே காலி செய்து விட்டது படுகிறது. ஆக, இந்த நுண்ணுயிர்க் கொல்லியாக ஒன்று இருக்க முடியும், மருந்தாகப் பயன்பட முடியும் என்பது தெரிய வருகிறது. அடுத்தடுத்த சோதனைகளில் உறுதிப் படுகிறது.
விபத்து எதிர்பாராமல் நடப்பது! அது விளைவிக்கும் சேதமும் கூட அப்படித்தான்!
ஆனால் ஒரு மனிதர், தான் அது வரை மேற்கொண்ட ஆராய்ச்சியில் உருவாக்கிய விஷயங்கள், குறிப்புக்கள் எல்லாமே எதிர்பாராத தீ விபத்தில் மொத்தமாகப் பறி கொடுத்த தருணத்திலும் கூடக் கலங்கவில்லை.
எல்லா முட்டாள்தனங்களும் தடையமே இல்லாமல் ஒழிந்தன என்று சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார். இனிமேல் புதிதாகத் தொடங்கலாம் என்று சந்தோஷப் பட்டுக் கொள்கிறார்! அவர் சந்தோஷப் பட்டுக் கொண்ட மாதிரியே, நூற்றுக்கணக்கான கண்டுபிடிப்புக்கள் தொடர்ந்துவருகின்றன.
இதே மாதிரித் தான், மின்சாரத்தினால் எரியும் (ஒளிர்விடும்) பல்ப் ஒன்றைக் கண்டுபிடிக்கும் முயற்சியில், தாமஸ் ஆல்வா எடிசன் தொடர்ச்சியாகத் தோல்வியையே சந்தித்துக் கொண்டிருந்தார். தோல்வி மாதிரியே முயற்சியும் தொடர்ந்தது. வெவ்வேறு விதமான இழைகள், அதில் கடைசியாக ஜப்பானிய மூங்கிலில் இருந்து தயார் செய்யப்பட இழைகளும் அடங்கும்! கடைசியாக டங்க்ஸ்டன் உலோக இழை பொருத்தமாக இருப்பது கண்டறியப்பட்டது. இன்றைக்கும் உலகம் முழுவதும் டங்க்ஸ்டன் இழை கொண்ட குண்டு பல்ப் புழக்கத்தில் இருக்கிறது. இப்போது கூட, உங்களால் ஒரு சிறந்த பல்பை உருவாக்க முடியுமானால், உங்களுக்கு ஒரு கோடி அமெரிக்க டாலர்கள் பரிசாகக் காத்திருக்கிறது! ரீல் அல்ல! நிஜம் தான்!
சோதனை முடிவுகளில் ஏற்பட்ட தொடர்ச்சியான தோல்விகளை, எடிசன் எடுத்துக் கொண்ட விதமே அலாதி! " ஒரு விஷயத்தை எப்படியெல்லாம் செய்யக் கூடாது என்பதைப் பத்தாயிரம் முறைகளில் இருந்து கற்றுக் கொண்டேன்!"
இங்கே துணுக்குகளாகப் பேசப்பட்டசம்பவங்கள் சொல்வது என்ன?
தோல்வியே வெற்றிக்கு அடிப்படை! அடுத்த படிக்கட்டு!
அதான் எனக்குத் தெரியுமே என்று "அறிவாளி" திரைப்படத்தில் முத்துலட்சுமி திரும்பத் திரும்பச் சொல்லி, டணால் தங்கவேலுவை வெறுப்பேற்றுகிற காமெடியாக மட்டும் பார்த்துவிட்டுப் போய்விடுவதால் எதையும் தெரிந்துகொள்ள முடிவது இல்லை.
வாழ்க்கையில் எதிர் கொள்ளும் ஒவ்வொரு சம்பவத்தையும் நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில் மட்டுமே அதன் வெற்றியோ, தோல்வியோ தீர்மானிக்கப் படுகிறது.
இன்றைக்குப் பொருளாதார மந்தம், ஒரு பக்கம் வளர்ச்சி என்பது, மற்ற விஷயங்களை வெகு பள்ளத்தில் தள்ளிவிடுவதாக ஆக்கிக் கொண்டிருக்கும் ஒழுங்கு முறை எதுவுமில்லாத போக்கு, வேலைவாய்ப்புக்கள் சுருங்கிக் கொண்டே போவது, எதிர்காலத்தைப் பற்றிய அச்சம் இப்படி ஏராளமானவற்றை ஒவ்வொருவரும் எதோ ஒரு விதத்தில் சந்தித்தாக வேண்டியிருக்கிறது. பார்க்கும் விஷயங்கள், அத்தனையுமே மன நிறைவைத் தருவதாக இல்லை. பல விஷயங்கள் மன நிம்மதியைக் குலைப்பது போலத் தான் இருக்கின்றன.
அதனால் என்ன? நமக்குப் பிடித்தமான விளையாட்டில், ஆர்வத்தோடு பங்குபெறும் பொது, இப்படி எதிர்மறையான விஷயங்களைப் பற்றி யோசிக்கிறோமா? அங்கே நம்முடைய அடுத்த மூவ் என்னவாக இருக்க வேண்டும் என்பதிலும், அதைச் செயல்படுத்துவதில் மட்டுமே கவனத்தை வைத்திருக்கிறோம் அல்லவா!
அதே மாதிரித் தான், எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்சினையும், சோதனையும், தன்னுள் ஏராளமான வாய்ப்புக்களைச் சுமந்து கொண்டு தான் வருகிறது என்பதைப் புரிந்து கொண்டாலே, வருகிற வாய்ப்புக்களைத் தவறவிடக் கூடாது என்பதில் மட்டுமே நம்முடைய கவனம் இருக்கும்.
இரண்டாவது உலகப் போருக்குப் பின்னால், மிகப் பெரிய அழிவை ஜப்பான் சந்தித்தது. அணுகுண்டு வீசப்பட்டது மட்டுமல்ல, அவர்களுடைய தேசீயப் பெருமிதமே பெரும் சரிவைச் சந்தித்தது. தன்னை விடப் பெரிய வஸ்தாத் எவனுமில்லை என்று இறுமாப்போடு அட்டகாசம் பண்ணிக் கொண்டிருந்த ஒருவன், அவனுடைய ஆணவத்தின் மீது, பெருமிதத்தின் மீது விழுகிற அடி மாதிரிக் கொடுமையான அனுபவம், பிரச்சினை வேறு ஒன்று இருக்க முடியுமா?
ஜப்பானிய மக்கள் துவண்டு விடவில்லை. தங்களுக்கு விழுந்த அடியை, வலியை ஏற்றுக் கொண்டார்கள். அழிவில் இருந்து மீண்டு வருவதற்கு உறுதி கொண்டார்கள்.
அடித்துத் துவம்சம் செய்து விட்டு அப்புறம் தடவிக் கொடுப்பது போலப் பொருளாதார உதவிகளை, அமெரிக்கா செய்தது. உற்பத்தி செய்யப் படும் பொருட்களை வாங்கிக் கொள்ளக் கதவைத் திறந்தது.
ஆனால், ஆரம்ப காலங்களில் மேற்கத்திய மக்களுடைய விருப்பங்கள், தேவைகள் என்ன என்பது, அவர்களுடைய ஆங்கில மொழி போலவே, ஜப்பானியர்களுக்குப் புரியவில்லை. தயாரித்து விற்பனை செய்த பொருட்கள் எல்லாம், தரக் குறைவாக, கேலிக்குரியவைகளாக இருந்தன.
ஜப்பானிய மக்கள், அந்த ஏளனத்தையும் சகித்துக் கொண்டார்கள். சகித்துக் கொண்ட விதம், வேறு வழியில்லை என்ற விரக்தியின் வெளிப்பாடாக இல்லை! தம்முடைய குறைகள் என்ன என்பதை, பதறாமல் சிந்தித்தார்கள். தயாரிப்பதில் ஏற்டும் குறைகள் என்ன என்பதை, தயாரிக்கப் படும் கட்டத்திலேயே கண்டுபிடித்து அங்கேயே சரி செய்தது மட்டுமல்ல, முன்னை விட இன்னும் அதிகம் பயனுள்ளதாக, ஒரு வளர் நிலை மாற்றத்தை, இயல்பான பண்பாடாகவே வளர்த்துக் கொண்டார்கள். ஜப்பானியத் தயாரிப்பு என்றாலே தரம் மிகுந்தது என்ற உத்தரவாதத்தை, மிகக் குறைந்த காலத்திலேயே சாதித்துக் காட்டினார்கள்.
இங்கே நாம் பார்க்க வேண்டிய முக்கியமான அம்சம், என்ன செய்யப் போகிறோம் என்பது தெரியாமல் நம்மைத் திகைக்க வைக்கிற, முடக்கிப் போட்டுவிடுகிற சூழ்நிலைகள் அவ்வப்போது வந்துகொண்டே தான் இருக்கும்! 2012 இல் உலகம் அழிந்து விடப் போகிறது என்று ஒரு கற்பனை உலவிக் கொண்டிருக்கிறது அல்லவா, அதே மாதிரி! கொஞ்சம் நிதானித்துப் பார்த்தீர்களேயானால், இதற்கு முன்னாலும் கூட இதே மாதிரி அச்சம், பீதி ஏதோ வடிவத்தில் கிளப்பி விடப்பட்டுக் கடைசியில் ஒன்றுமே இல்லாமல் போயிருப்பதைப் பார்க்க முடியும்!
இத்தனைக்கும் ஆதார சுருதியாக இருப்பது நம்பிக்கை! நம்மால் முடியும் என்கிற தன்னம்பிக்கை! கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பது என்றோ எவனோ வேலையில்லாமல் எழுதி வைத்துப் போனதல்ல, கூடி வாழும்போது மட்டுமே மனிதர்களால் உன்னதமான தருணங்களை எட்டிப் பிடிக்க முடிகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிவது தான்!
நானும் நீங்களும் வேறுபட்டுத் தனித்தனியாக நிற்பதற்கு தனித்தனியாக ஆயிரம் ஆயிரம் காரணங்களைச் சொல்ல முடிகிற போது, நாம் ஏன் ஒன்றாக இருக்கமுடியாது என்பதற்கு ஒரே ஒரு காரணத்தையாவது கண்டுபிடிக்க முடியாதா என்ன! வேறுபாடுகளை வளர்த்துக் கொண்டு, பகைமையை, வெறுப்பை வளர்த்துக் கொண்டு போவது மிருகங்களுக்கு வேண்டுமானால் இயல்பானதாக இருக்கலாம்.
மனிதர்களுக்கு......!
"In the ignorance and darkness of the beginning, faith is the most direct expression of the Divine Power which comes to fight and conquer. "
அறியாமையும், இருளும் கூடிய தொடக்கத்தில், நம்பிக்கைஒன்றே மனிதனுக்குத் துணையாக வழங்கப்பட்ட சாதனமாக இருக்கிறது, என்று ஒரு உரையாடலில் ஸ்ரீ அரவிந்த அன்னை தெளிவுபடச்சொல்கிறார். இன்னொரு இடத்தில், இன்னும் கொஞ்சம் விரிவாக,
“Faith is the movement of the soul whose knowledge is spontaneous and direct.
Even if the whole world denies and brings forward a thousand proofs to the contrary, still it knows by an inner knowledge, a direct perception that can stand against everything, a perception by identity.
The knowledge of the psychic is something which is concrete and tangible, a solid mass. You can also bring it into your mental, your vital and your physical; and then you have an integral faith - a faith which can really move mountains.”
-ஸ்ரீ அன்னை