காகித ஓடம் கடல் அலை மீது போவது போலே......காகிதப் பணமும்!




இந்த ஆறு ஆண்டுகளில், தமிழில் பதிவுகள் எழுதுவது அதிகமாகிக் கொண்டிருக்கிறது என்பது மிகவும் நல்ல விஷயம்!


என்ன எழுதுகிறோம், எத்தனை பேருக்குப் பயன்படும் வகையில் எழுதுகிறோம், குறைந்தபட்சமாக, எழுதுகிற நமக்கே ஒரு தெளிவைத் தருவதாக எத்தனை பதிவுகளைச் சொல்ல முடியும் என்பதை அளவிட்டுப்  பார்த்தால், முதல் வரியில் கண்ட உற்சாகம் வைகையில் வெள்ளம் வந்த கதையாக உடனேயே வடிந்தும் போய்  விடும்
 
"மலை மேலே மழை விழுந்து வைகையிலே வெள்ளம் வந்து
வயலேறிப் பாயும் முன்னே வந்த வெள்ளம் போனது ராஜா!"

என்று எங்கள் சிறுகூடற்பட்டியில் பிறந்த கவிஞன் கண்ணதாசன்  அழகாகச் சொன்னாரே அப்படி!

பதிவர் கோவி கண்ணன்! ஆயிரம் பதிவுகளைத்  தாண்டினவர்! ஒவ்வொரு பதிவிலும், ஏதோ ஒரு சர்ச்சையைக் கிளப்பி, விவாதத்திற்கு வலுக்கட்டாயமாகக் கூட்டத்தைச் சேர்க்கும் கலை தெரிந்தவர். உடன்பட முடிகிறதோ இல்லையோ, புறக்கணிக்க முடியாத வலைப்பதிவர்களில் ஒருவராக இருக்கிறார்! எனக்குப் பிடித்த பதிவர்கள் வரிசையில், இவருடைய பதிவுகளை நான் பார்த்த விதத்தில்  தனியாக ஒரு பதிவு எழுதலாம் என்று இருந்தவனை, வால்பையனுடைய சீரியஸ் தனம் இல்லாத சீரியஸ் பதிவு ஒன்றும், அதே தலைப்பில் கோவிகண்ணன் எழுதிய இன்னொரு பதிவும் எழுத நினைத்த விஷயங்களின் வரிசையைக் கொஞ்சம் மாற்றி விட்டன!

வால்பையனுடைய சீரியஸ் தனம் இல்லாத சீரியஸ் பதிவு!

அப்படீன்னா என்னங்கண்ணா? தலையிருக்காது, அதாவது முழுசா இருக்காது! ஆனால் வால்தனம்  மட்டும்  இருக்கும்!

"அமெரிக்காவுக்கு முன்னாலேயே காகிதப் பணத்தை ஓவர்டைம் வேலை செய்து அச்சடித்தது இந்தியா தான்னும் , கொஞ்சம் ஒய்வு கொடுக்கற மாதிரி, பாகிஸ்தானின் ஐ எஸ் ஐ அப்புறம் உள்ளூர் வெளியூர் வாழ் மக்கள், அரசுக்கு அச்சடித்துக் கை வலிக்கும் என்று ஆதூரத்துடன் என்று தாங்களும் இரு கை கொடுத்துக் கொண்டிருப்பது வால்பையனுக்குத் தான் தெரியாது, வங்கியாளரான உங்களுக்குமா?

Keynesian economics
பற்றி வால் பையனுக்குக் கத்துக் கொடுப்பீங்கன்னு பாத்தா, நீங்க வாலை இன்னமும் முறுக்கி விடறீங்களே! நியாயமா?"

அந்தப் பதிவில் இப்படிப் பின்னூட்டம் எழுதியபோதே, வங்கித்துறையைப் பற்றிக் கொஞ்சம், பொருளாதாரப் பிரச்சினைகளைப் பற்றிக் கொஞ்சம் எழுதலாம் என்று முடிவு செய்தாகி விட்டது!

துபாய்! டுபாக்கூர்! பொருளாதாரம்!வட கொரியா!

உலகம் போகும் போக்கை முடிவு செய்யும் காரணங்கள்!

வாலு போயிக் கத்தி வந்தது...டும்..டும்..டும்!

இந்தப்பதிவுகள் ஒவ்வொன்றிலுமே, ஒன்றோடொன்று தொடர்புடைய, அரசியல், பொருளாதாரம், வங்கி, நிதித்துறை மூன்றுமே தனித்தனியாகத் தெரிந்தாலுமே எப்படி ஒன்றையொன்று ஆளுமை செய்துகொண்டிருக்கின்றன என்பதைக் கோடி காட்டத் தான் முடிந்தது!

"
சேத்த பணத்தை சிக்கனமா,செலவு செய்ய பக்குவமா
அம்மா கையிலே கொடுத்துப்போடு செல்லக்கண்ணு
அவங்க..ஆறை..நூறு..ஆக்குவாங்க ..சின்னக்கண்ணு"

மருதகாசியின் இந்தப்பாடலை எடுத்துச் சொன்னது கூட, வால்பையன் நினைக்கிற மாதிரி இடைச்செருகல் இல்லை, பொருளாதாரத்தின் ஒரு அடிப்படை அம்சத்தைச் சொல்வதற்காகத் தான்!

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை, உற்பத்தியும், சேமிப்புமே தீர்மானிப்பவைகளாக இருந்த ஆரம்பகாலப் பொருளாதாரம், எப்படிக் கடன், கடனை அடைக்க இன்னொரு  கடன், அதற்கு வட்டி கட்ட இன்னொரு கடன், இப்படியே போய்க் கடைசியில் தவணை கேட்பது, நாணயம் தவறுவது, திவாலாகி விட்டது என்பதைக் கூட ஒப்புக் கொள்ள முடியாமல், "துபாய் உலகத்தின் கடனுக்கு அரசு எந்தவிதத்திலும் பொறுப்பேற்றுக் கொள்ளாது, அது கடன் கொடுத்தவர்கள் பொறுப்பு!" என்று பொறுப்பைத் தட்டிக் கழிக்கிற அளவுக்கு மட்டுமே துபாய் கடன் நெருக்கடி இருக்கிறது!

இதைச் சொல்லும் போதே, இதைவிட விபரீதமான பயங்கரம் அமெரிக்கப் பொருளாதாரத்தில்  இருக்கிறது, எப்படி இதில் நாமும் விரும்பியோ விரும்பாமலோ சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பதிவுகளில் சொல்லலாம் என்று இந்த முயற்சியை ஆரம்பித்தாயிற்று! புலி வாலைப் பிடித்த நாயர் கதைதான்! வால்பையன் என்னதான் வந்து, பின்னூட்டங்களில் தாளித்தாலும், புலி விடாது!

சற்றேறக் குறைய நூறே ஆண்டுகள்! நூறே ஆண்டுகளில், பொருளாதாரம் என்பது வெறும் கருவியாக இருந்தது, கொஞ்சம் கவனக் குறைவாக இருந்தாலும் பேரழிவைத்தரும் ஆயுதமாகவும் மாறிப்போனது! வரலாறு முக்கியம்! கற்றுக்கொள்ளத் தயாராக இருப்பவர்களுக்கு வரலாறு மாதிரி, சிறந்த ஆசிரியன்எவருமில்லை!

பிரிட்டன், சிறிய தீவு! உள்ளூரில் வாய்ப்புக்கள் குறைவு! இயற்கையாகவே கடலோடுவதும், வணிகம் செய்வதும், வணிகம் செய்யப்போன இடத்தில் மோசம் செய்து, ஒட்டகத்தைக் கூடாரத்துக்குள் முதலில் தலை, அப்புறம் கழுத்து, அப்புறம்.......இப்படியே வரிசையாக ஒட்டகம் மொத்தக் கூடாரத்தையுமே ஆக்கிரமித்துக் கொண்டு, கூடாரத்தில் இருந்தவனை வெளியே நிர்க்கதியாய் நிற்க வைத்த கதை நடந்து முடிந்து, அடிமை நாடுகள், புதிய சந்தைகள், இயற்கை வளங்களை ஏகபோகமாகக் கொள்ளையடிக்கக் கிடைத்த வாய்ப்பு, தொழிற்புரட்சியோடு சேர்ந்து பிறந்தது.  


உள்ளூர் மக்களை முதலில் ஒட்டாண்டிகளாகவும், கூலிகளாகவும், கிராமங்களை அழித்து நகர்ப்புறத்துக்கு அகதிகளாகவும் மாற்றின கொடுமையை, சார்லஸ் டிக்கென்ஸ் எழுதிய "ஆலிவர் ட்விஸ்ட் " கதையின் முதல் அத்தியாயமே, சொற்சித்திரமாகக் கொண்டு வந்து கண் முன்னே நிறுத்துகிறது. தெரிந்து கொள்ள ஆர்வம் இருப்பவர்களுக்காக மட்டுமே இந்தக் கூடுதல் குறிப்புக்கள்!


தொழிற்புரட்சி, புதிய கண்டுபிடிப்புக்கள் என்பது பிரிட்டனின் ஏகபோகமாக இருக்கவில்லை. குறுகிய காலத்திலேயே ஜெர்மனி முதலான நாடுகள் உற்பத்தி செய்து குவிக்கத் தொடங்கிவிட்டன! எங்கே குவிப்பது? யார் தலையில் கட்டுவது? ஒரு உலகப்போர் மூள்வதற்கான மூலக்கூறுகள் 1870 ஆம் ஆண்டுகளிலேயே ஆரம்பித்து 1914 வரை, அதிகாரப்போட்டி, ஆதிக்கப் போட்டியாக  ஒரு முனை ஜெர்மனியை மையமாக வைத்தும், மறுமுனை பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தை வைத்தும் வளர்ந்துகொண்டே போயின.  


இதில் சுவாரசியமான தகவல்அமெரிக்கா, முதல் உலகப் போர் முடியப்போகிற தருணம் வரை போரில் பங்கெடுத்துக் கொள்ளவில்லை. சுருக்கமாக, முதல் உலகப் போர் சந்தைகளைப் பங்கிட்டுக் கொள்வது என்பதில் தான் கருக்கொண்டிருந்தது. சந்தைகள், அரசியல் அதிகாரம், ஆதிக்கத்தை அடித்தளமாகக் கொண்டிருந்தன என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தால், இந்த காபிடலிசம், கம்யூனிசம்...........அப்படியே கடைசியாக நம்மூர் அண்ணாயிசம் வரை எல்லா இசங்களைப் பற்றிய ஆராய்ச்சி இன்னமும் சுலபமாகிவிடும்!

1914 ஜூன் 28 ஆம் தேதி, ஆஸ்திரிய ஹங்கேரிய அரசுக்கு இளவரசரான ஃபிரான்ஸ் ஃபெர்டினாண்டை  செர்பியர்கள்  படுகொலை செய்ததில் இருந்து உலகம் தயாராக இரண்டு அணிகளாகப் பிரிந்து உலக யுத்தம் ஆரம்பித்தது என்று சொல்வார்கள்!முதல் உலக யுத்தம் முடிந்த பின் ஜெயித்தவர்களாக, பிரிட்டிஷ் பேரரசு, ரஷ்யா (1917 வரை) இத்தாலி, பிரான்ஸ், அப்புறம் அமெரிக்கா ( 1917 இற்குப் பிறகு)!

கவனியுங்கள்! போர் என்றால் பிணங்கள் குவியும்! அமெரிக்கக் கழுகும் உள்ளே வந்தாயிற்று!

தோற்ற தரப்பாக, ஜெர்மானியப் பேரரசு, ஆஸ்திரிய-ஹங்கேரி, பல்கேரியா, அப்புறம் ஆட்டோமான் அரசு இருந்தன. பலவீனப்பட்டு உருக ஆரம்பித்தன. சமாளித்து எழுந்தது ஜெர்மனி ஒன்று தான்


தோற்றவர்கள் மட்டுமல்ல, ஜெயித்த தரப்புமே கூட பொருளாதாரத்தில் பலவீனப்பட  ஆரம்பித்த தருணமாக முதல் உலகப் போர் முடிந்தது. அடுத்த போருக்கான தளமாகவும் காரணமாகவுமே ஆகிப்போனது.


இதன் பின்னணியோடு சேர்த்துப் பார்த்தால்தான், காகிதக் கரன்சிகளாக இன்று நாம் உபயோகித்துக் கொண்டிருக்கும் பணம் மதிப்பிழந்து போய்க் கொண்டிருந்ததும், ஒரு புதிய பிசாசாக உருவெடுத்துக் கொண்டிருந்ததும் புரிய வரும்.அதற்கு முந்தைய காலங்களில் பணத்தின் மதிப்பு, தங்கம் அல்லது வெள்ளியின் மதிப்பினால் மட்டுமே அளவிடப்பட்டது. வங்கி  நோட்டுக்கள்  அல்லது கரன்சி எப்போது வேண்டுமானாலும், அதற்குச் சமமான தங்கத்தையோ, வெள்ளியையோ பெற்றுக் கொள்கிற வசதியோடு இருந்தது. இப்போதும் கூட சில நாடுகளில் இந்த வசதி இருக்கிறது.

1929 களில் அமெரிக்கா மிகப்பெரிய பொருளாதாரச் சரிவைச் சந்தித்தது. Great Depression என்று அழைக்கப் படும் இந்த சரிவில் இருந்து மீண்டு வரப் பத்தாண்டுகளுக்கும் மேலானது. மீண்டு வரப் பெரும் உதவியாக இருந்தவை இரண்டு விஷயங்கள்!

ஒன்று
, Keynesian Theory அடிப்படையில் கடனை அஸ்திவாரமாக வைத்து, ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கிவைத்து எழுப்பப்படும் சீட்டுக் கட்டுக் கோபுரம்! இதை அமெரிக்க வங்கிகள், நிதித்துறை மிகவும் திறம்படவே சாதித்தன! வாலு போயிக் கத்தி வந்தது...டும்..டும்..டும்!   இந்தப் பதிவில் மூன்றாவது வீடியோ, சுருக்கமாக, எளிமையாகச் சொல்கிறது.

இரண்டாவதாக
, அமெரிக்கத் தொழில்துறை நவீன ஆயுதங்களை  உற்பத்தி செய்து விற்பனை செய்கிற மரண வியாபாரிகளாக மிகப் பெரிய அளவில் உருவாகிக் கொண்டிருந்தது. அடுத்ததாக மருந்துகள் தயாரிப்பு! கொள்ளை லாபம் சம்பாதிப்பதற்காக, நோய்களைப் பரப்பும் சதிகாரர்களாகவுமே மருந்துத் தயாரிப்புத்துறை இருப்பதாக வலுவான சந்தேகங்கள், செய்திகள் அவ்வப்போது வரும்

இரண்டாம் உலகப்போர் முடிவில், எந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் சூரியன் அஸ்தமிப்பதே இல்லை என்று பெருமையாகத் தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்தார்களோ, அந்தப்பெருமை எல்லாம் போய், பெயரளவுக்குத் தான் சிங்கம் , பல், நகம் எலும்பு எல்லாமே  இழந்து, அமெரிக்காவை அண்டியே வாழ வேண்டிய நிலை உருவாயிற்று.

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு, உலகம் மூன்று கூறாகப் பிரிந்து நின்றன. போரில் ஜெயித்தவர்கள், தோற்றவர்கள், அடிமை நாடுகளாக இருந்தவர்கள் என்று ஒரு புறம்! அமெரிக்கா ஒரு புறமும், ரஷ்யா ஒரு புறமும், தோற்றவர்களைக் கூறு போட்டுப் பங்கீடு செய்துகொண்டதில் உண்டான மூன்று என்று இன்னொரு
விதமாகவும் கூட!

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னால், இரண்டு தரப்பிலுமே வலிமையானவர்களாக, வங்கி நிதித்துறையைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இருந்தார்கள். பணம், வெறும் காகிதமாக மட்டுமே மாறிப்போனது!

காகித கரன்சி போதாதென்று, பிளாஸ்டிக் கடன் அட்டைகள் ஆரம்பித்து வைத்திருக்கும் சீரழிவு வேறு! மறுபடி நினைவு படுத்துகிறேன்!

The Money Changers!

ஆர்தர் ஹைலி எழுதிய நாவல்! இரண்டு நேர் எதிரான குணாதிசயங்கள் கொண்ட வங்கி நிர்வாகிகளை வைத்து, வங்கித் துறை எப்படி பேராசையால் இயங்குகிறது, தான் சேதப்படுவதுமல்லாமல், சுற்றி இருப்பவர்களையுமே நாசம் செய்கிறது என்பதை அழகாகச் சொன்ன புதினம்!கிடைத்தால் படித்துப் பாருங்கள்!

அப்படி மாற்றிப்போட்ட தகிடுதத்தத்தில் தானே சிக்கிக் கொண்ட கதையாக, இன்றைக்கு அமெரிக்கா மாட்டிக் கொண்டு முழிக்கிறது!காகித டாலர்களை லட்சக்கணக்கான கோடிஎண்ணிக்கையில்  அடித்து வெளியிட்டுமே கூட, கரை சேர முடியவில்லை! G-7 என்று வளர்ந்த நாடுகளாகச் சொல்லப்படும் நாடுகளில் அமெரிக்காவும், பிரிட்டனும் ஏற்கெனவே மீள முடியாத அளவுக்குத் திவாலாகிப்போய் விட்டன.

அதற்குப் பின்னாலும் எத்தனை மர்மங்கள்........?

இப்போது, கடந்த பத்தாண்டுகளில் நிகழ்ந்த முக்கியமான செய்தியாக, அடுத்து வரும் பல பத்தாண்டுகளின் போக்கைத் தீர்மானிக்கும் பொருளாதார, ராணுவ சூப்பர் வல்லரசாக சீனா உருவெடுத்திருக்கும் செய்தியின் முக்கியத்துவம் கொஞ்சமாவது புரிய ஆரம்பித்திருக்கும் என்று நினைக்கிறேன்!
 
முந்தைய பதிவுகளை, குறைந்தபட்சம் அந்த மூன்று வீடியோக்களை மட்டுமாவது பார்த்து விடுங்கள். உங்கள் இணைய இணைப்பின் வேகத்தைப் பொறுத்து, வீடியோ லோடாகும் நேரம் இருக்கும். டவுன் லோட் செய்து கூடப் பார்க்க வேண்டிய அடிப்படை விஷயங்கள்! என்ன சந்தேகம் என்பதைப் பின்னூட்டத்தில் சொல்லுங்கள், தொடர்ந்து பேசுவோம்

 

4 comments:

  1. எதுக்குங்க இதெல்லாம்....அதான் 2012 ல உலகமே அழிஞ்சிடப் போகுதே...!

    ReplyDelete
  2. @ஸ்ரீராம்,

    இப்ப பதவியில் இருப்பவர்களையே மறுபடியும் தேர்ந்தெடுப்பதுன்னு முடிவே பண்ணீட்டீங்களா?
    இவ்வளவு தெளிவாச் சொல்றீங்க:-((

    ReplyDelete
  3. ஹா....ஹா....ரசித்தேன்...

    ReplyDelete
  4. நீங்க சொன்னா சரிதான்!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!