ட்விட்டுக் குருவி! ட்விட்டுக் குருவி! சேதி தெரியுமா?டிவிட்டரில் கலக்கிக் கொண்டிருக்கிறார் மத்திய அமைச்சர் திரு சசி தரூர்! 5,38,861 பேர்கள் சசி தரூர், ஜரூராக டிவிட்டுவதைப்  பின்தொடர்கிறார்கள் என்று சொல்கிறது இந்த செய்தி! அனேகமாக, இந்த அளவுக்கு டிவிட்டரில் ஒருத்தர், அதுவும் அரசியல்வாதி, அமைச்சர் ஒருத்தர் இந்த அளவுக்குப் பிரபலமாக இருப்பதே ஒரு ரெகார்ட் தான்! 


அதனால் தானோ என்னவோ, அடிக்கடி சர்ச்சையிலும் சிக்கிக் கொள்கிறார் என்பதை விட, டிவிட்டரில் இவரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு, மனம் திறந்து பதில்களைச் சொல்வதை, மேலிடத்திற்கு எதிராகச் செய்யும் கலகம் என்று அடிக்கடி போட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை!


போன செப்டெம்பரில் சோனியா காண்டி சிக்கன நடவடிக்கை என்று எகானமி வகுப்பில் பயணம் செய்ததை நக்கல் அடித்து இவர் அனுப்பிய ட்விட்டர் செய்தி மிகவும் பிரபலமானது! காட்டில் கிளாஸ் என்றும் புனிதப் பசுக்கள் என்றும் சோனியாவைத் தாக்குகிறார் என்று போட்டுக் கொடுத்தது ஒரு க்ரூப்! அசடு வழிந்து கொண்டு காங்கிரஸ் இந்த விமரிசனத்தை தாங்கிக் கொண்டது.


அக்டோபர் மாதம் அடுத்த ட்விட்டர் பாம் கிளம்பியது. "காந்தி வேலையே கடவுள் என்றார். அவருடைய பிறந்த நாளை விடுமுறையாக அறிவித்திருக்கிறோம் நாம்' என்று டிவிட்டரில் யாரோ கேட்ட  ஒரு கேள்விக்குப் பதில் சொன்னதை எதிர்த்தும் கோள்மூட்டும் கும்பல் ஒன்று சலசலப்பைக் கிளப்பியது.


இப்போது விசா வழங்குவதைக் குறித்து அவருடைய வெளிப்படையான ட்விட்டர் செய்தி கொந்தளிப்பை உருவாக்கியிருக்கிறது. டூரிஸ்ட் விசாவில் ஒன்பது வருடத்திற்கு மேல் தீவீரவாதி ஹெட்லி இந்தியாவில் தங்கிஇருந்ததைக்  கிண்டல் செய்த மாதிரி இருந்த செய்தி, பானா சீனாவைச் சீண்டிப் பார்த்திருக்கிறது. வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா, கொள்கை குறித்த விவகாரங்களைப் பொதுவில் போட்டு உடைக்கக் கூடாது என்று பேட்டி அளித்திருக்கிறார். எஸ் எம் கிருஷ்ணாவின் இந்த அறிக்கையே  செம காமெடி தான் என்றாலும், அவரால் நல்ல காமெடியனாகக் கூட இருக்க முடியவில்லை! செய்தியைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்!


"External Affairs Minister S M Krishna on Monday ticked off his junior minister Shashi Tharoor for publicly questioning new visa guidelines, saying if he had any "perceptions", those should be discussed within the "four walls" of the government.

"These (issues) are not to be discussed in public. If there are any perceptions, then I think it should be sorted out within the four walls of the ministry," Krishna told reporters when asked to react to Tharoor's comments on social networking site Twitter regarding tightening of visa regime.

Krishna underlined that "the business of government is far too serious" and "has to be conduced in a manner in which we decide."

While tweeting, Tharoor had wondered whether tightening of the visa norms for foreign nationals made any sense at all and if it would actually "protect" security.

பானா சீனா, ஒரு சப்பைக் கட்டு கட்டி அறிக்கை கொடுத்திருக்கிறார்!கிழடுதட்டிப் போன காங்கிரஸ் கட்சியில், அவ்வப்போது சசி தரூர் மாதிரி இளம் ரத்தங்கள் கொஞ்சம் கலகலப்பை உண்டாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும்! இந்த லிங்கில் போய்ப் பாருங்கள்! சசி தரூர் டிவிட்டரில் நடத்திய அத்தனை சாதனைகளையும் பார்க்க முடியும்!


******

ஒரு மனிதன் எதோ யோசனையில் நடந்துபோய்க் கொண்டிருந்தான்.


"நில்!" என்ற குரலைக் கேட்டு, திடுக்கிட்டு நின்றான். சுற்றும் முற்றும் பார்த்தபோது யாருமே கண்ணுக்குத் தெரியவில்லை.


"என்னை எதற்காக நிற்கச் சொல்கிறீர்கள்?"


"இன்னும் ஓரடி, இரண்டடி எடுத்து வைத்தால், அந்தச் சுவர் இடிந்து உன்மேல் விழுந்துவிடும்! அதற்காகத் தான் நிற்கச் சொன்னேன்"

அந்தக் குரல் சொல்லிக் கொண்டிருந்தபோதே, பக்கத்தில் இருந்த சுவர் இடிந்து விழுந்ததையும், எச்சரிக்கைக்குக் கட்டுப் பட்டு நின்றிருக்காவிட்டால், சுவர் தன் மீதே விழுந்திருக்கும் என்பதையும் புரிந்து கொண்டான். இன்றைக்கு என்னுடைய அதிர்ஷ்டமான நாள் தான் போல இருக்கிறது என்று நினைத்துக் கொண்டே மேலே நடக்க ஆரம்பித்தான்.


"நில்! இன்னும் ஒரு அடி எடுத்து வைத்தால், விபத்தில் சிக்கிக் கொள்வாய்!" என்று அதே குரல் மீண்டும் எச்சரித்தது. 

அடுத்த எட்டு எடுத்து வைக்கப் போன  அந்த மனிதன், தயங்கி நின்றான். வேகமாக வந்த ஒரு கார், அவனை உரசிக் கொண்டு போனது! காரோட்டி கதவு வழியாக எட்டிப் பார்த்து, "சாவுக் கிராக்கி! ஊட்டுல சொல்லிட்டு வந்தியா?" என்று திட்டி விட்டுப் போனான்.


அந்த மனிதன் திகைப்பு நீங்காதவனாக, "அங்கே யாரும் இருக்கிறீர்களா?குரல் மட்டும் கேட்கிறதே, நீங்கள் யார்? இங்கே என்ன நடக்கிறது?" என்று கூவினான்.


"நான் உன்னுடைய காவல் தேவதை  என்று வைத்துக் கொள்ளேன்!"


"காவல் தேவதை  என்றால்....?" என்று இழுத்தான் மனிதன்.


"சரியாப் போச்சு போ! தெய்வம், தேவதை  என்றால் என்னவென்றே தெரியாதா? அப்புறம் காவல் தேவதை  என்பதை உனக்கு எப்படிப் புரிய வைப்பது?" என்று அலுத்துக் கொண்டது அந்தக் குரல்.


"கோபம் கொள்ளாதே! நான் இந்த தெய்வம், கடவுள் இதையெல்லாம் கதைகளில், சினிமாவில் மட்டும் தான் பார்த்திருக்கிறேன். அதிலிருந்தும் கூட ஒன்றுமே புரிந்ததில்லை. அதனால் தான் கேட்கிறேன்!"


"புதுமைப் பித்தன் கதைகளைப் படித்திருக்கிறாயோ?கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்? குறைந்த பட்சம் அந்தக் கதையைத் தொட்டு  ராஜ நாயஹம் எழுதிய பதிவையாவது....?""ம்ம்ஹூம்! எங்கே, பதிவுகளை படிப்பதை விட, பின்னூட்டங்களில் கும்மியடிப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது! இதில் எங்கே தேடிப் பிடித்துப் படிக்க?" என்றான் அந்த மனிதன்.


காவல் தேவதை கொஞ்சம் முனகிக் கொண்டு சொன்னது" உன்னை மாதிரி ஆசாமிகளைக் கரை சேர்ப்பது ரொம்பவுமே  கஷ்டம்!"


"அது சரி காவல் தேவதையே! காவல் என்கிறாய், தேவதை என்கிறாய்! இப்போது இரண்டு தடவை என்னைக் காப்பற்றியிருக்கிறாய், எல்லாம் சரி!
இப்போது ஒரு வாரத்திற்கு முன்னால் கல்யாணம் என்ற ஒரு விபத்தில் சிக்கிக் கொண்டேனே, அப்போது எங்கே போனாயாம்?"   என்றான் அந்த மனிதன்.

******
ஒரு மாண்புமிகு! மந்திரியோ, இல்லை ச.ம. உ  ஏதோ ஒன்று! சாலையோரத்தில் நடந்துபோய்க் கொண்டிருந்தார்! மருத்துவர் ஆலோசனை! தினசரி நாற்பத்தைந்து  நிமிடம் நடந்தே ஆக  வேண்டும்!  

திடீரென்று ஒருவன் துப்பாக்கியைக் காட்டி வழி மறித்தான்  "மரியாதையாக உன்னிடமிருக்கும் பணத்தைக் கொடுத்துவிடு! இல்லாவிட்டால்....!"

"மாண்புமிகு, கொஞ்சம் அதிர்ச்சியோடேயே கேட்டார். "நான் யார் என்று தெரிந்து தான் மிரட்டுகிறாயா? நான் இந்தத் தொகுதியின் மாண்புமிகு! தெரியுமில்லையா?"

அந்த மனிதன் உடனே சொன்னான். "அப்படியானால், நீ எங்களிடமிருந்து கொள்ளையடித்த பணத்தை மரியாதையாகக் கொடுத்து விடு!"

6 comments:

 1. சசிதரூர் சொன்னது கிண்டலடித்திருப்பதுபோல் இருந்தாலும் அதில் உண்மையும் இருக்கிறது. எஸ்.எம்.கிருஷ்னா இதையெல்லாம் நான்கு சுவர்களுக்குள் பேசவேண்டிய விஷயம் என்று சொல்லியிருப்பதும் காமெடியான விஷயம்தான். என்னை கலாய்க்கனும்னா ரூம் போட்டு கலாய்னு சொல்றமாதிரி.

  ReplyDelete
 2. ///இப்போது ஒரு வாரத்திற்கு முன்னால் கல்யாணம் என்ற ஒரு விபத்தில் சிக்கிக் கொண்டேனே, அப்போது எங்கே போனாயாம்?" ///

  பந்தியில் இருந்திருக்கும் பாஸு.

  ReplyDelete
 3. ட்விட்டர் குருவியோடு சசிதரூர் உரையாடியதில் எந்தத் தவறுமே இல்லை!
  எஸ் எம் கிருஷ்ணா நான்கு சுவற்றுக்குள் பேசியிருக்க வேண்டியது என்று சொன்னது செம காமெடி!

  இந்த இரண்டு நிலைகளிலும் தவறே இல்லை! எப்போது?
  அவரவர் தங்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல் படும்போது!
  அமைச்சரவை என்பது கூட்டுப் பொறுப்புள்ள உண்மையான அமைச்சரவையாகச் செயல் படும்போது!
  காங்கிரஸ் எப்போதுமே அரிச்சுவடி முதல் கணக்கு இப்படி எல்லாவற்றிலுமே வீக் பார்ட்டி தான்!

  இப்போதுமே கூட, இந்த விஷயம், உள்நாட்டுப் பாதுகாப்பில் கவனக் குறைவாக இருப்பதாக உள்துறை அமைச்சகம் தொடர்ந்து அடிவாங்கிக் கொண்டிருக்கும் நிலையில், பானா சீனாவைக் காப்பாற்றவேண்டும் என்பதற்காகவே கிருஷ்ணா பேசிய மாதிரி இருக்கிறது. அமைச்சரவை முடிவுகளை,வெளியே விமரிசித்தால் அவரை பதவி நீக்கம் செய்து விட வேண்டியது தானே? அதை விட்டு, ஏன் கிருஷ்ணாவும், பானா சீனாவும் மாறி மாறி அறிக்கைகள் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்?

  எப்படியோ, டிவிட்டும் குருவி சொல்லும் சேதி தமாஷாக இருக்கிறது!

  ReplyDelete
 4. அரசியலில் உண்மையே பேசக் கூடாது...பாலபாடம். சசி அதை மீறி விட்டார் போலும்.

  காவல் தேவதை ஏதோ பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றத்தான் அந்த 'சின்ன' ஆபத்தில் அவரை மாட்டி விட்டுருக்க வேண்டும்!!

  ReplyDelete
 5. நானும் தான் டுவிட்டரில் இருக்கேன்! இம்புட்டு பேமஸாக முடியலயே!? யாராவது ஒரு ஐடியா கொடுங்களேன்!

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!