முகமூடி சீர்திருத்தங்கள்! யாருக்காக....?

ஐ.மு.கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் இரண்டு 
ஒட்டு மட்டும் போட்ட மக்களுக்கு "அடி மேல் அடி" கொடுப்பதைக் கொஞ்சம் கூடுதல் வேகத்துடன் நடத்திக் கொண்டிருப்பதன் இன்னொரு முகமாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு இவைகளின் விலையை அதிகரிப்பது என்ற அரசின் முடிவு இருக்கிறது. இந்த ஒரு ஆண்டு காலத்துக்குள்ளேயே, விலை உயர்வு அறிவிக்கப் பட்டிருப்பது இது மூன்றாவது முறை. இந்த ஒரு முடிவால் மட்டுமே விலைவாசிக் குறியீடு ஒரு சதவீதம் வரை அதிகரிக்கும் என்று அரசே மதிப்பிட்டிருக்கிறது. உண்மை நிலவரம் அதை விடக் கூடுதலாகக் கூட இருக்கலாம்.

பொருளாதாரச் சீர்திருத்தத்தின் ஒரு அங்கமாக எரிபொருட்களின் விலையை சர்வதேச நிலவரத்துக்குத் தகுந்த மாதிரி நிர்ணயிக்கிற எரிபொருள் விலை சீர்திருத்தம் தவிர்க்க முடியாதது என்று இன்றைக்கு பிரதமர் மன்மோகன் சிங் கருத்துத் தெரிவித்திருக்கிறார். இந்த சீர்திருத்தம் எவ்வளவு பெரிய மோசடி என்பதைக் கொஞ்சமாவது இந்தப்பக்கங்களுக்கு வருகிறவர்கள் தெரிந்து கொள்ளட்டுமே என்பதற்காக  இந்தப் பதிவு.

இப்போதைய விலை உயர்வால், உடனடியாகவும் அதிக லாபமும் பெறப்போவது அம்பானிகளுடைய ரிலையன்சும், எஸ்ஸார்  குழுமத்தின் எண்ணெய் நிறுவனங்களும் தான் என்பது செய்திகளைக் கொஞ்சம் கூர்ந்து படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நன்றாகவே புரியும்.அரசுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்குக்  கொடுப்பது போலவே மானியமும் சலுகையும் வேண்டும் என்று ரிலையன்ன்ஸ் கம்பனி முதலில் போர்க்கொடி தூக்கியது. இல்லைன்றால் இந்தியாவுக்குள் வணிகம் செய்வது கட்டுபடியாகாது, வெளி நாட்டுக்கு ஏற்றுமதி செய்வது மட்டும் செய்யப் போகிறோம் என்றும் கூட செய்திகள் வந்தன.

இப்போது அறிவிக்கப் பட்டிருக்கும் விலை உயர்வுக்குப் பின்னாலும் அரசுக்கு சுமார் இருபத்துமூன்றாயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு இருக்கும் என்று அரசு சொல்லும் மதிப்பீடு இருக்கிறது பாருங்கள், இங்கே தான் அரசு செய்யும் மோசடி இருக்கிறது. 

2009 ஆம் ஆண்டில் பெட்ரோலியப் பொருட்களின் மீதான வரி வருவாய் 56365 கோடி ரூபாய்கள்! மானியமாகத்  தந்ததோ வெறும் 14058 கோடி தான்!. ஒட்டகத்தின் மீது ஏற்ற வேண்டிய பாரத்திற்கும் அதிகமாகவே சுமையை ஏற்றி விட்டு, அதை மாற்றுவதகாகக் கொஞ்சூண்டு சுமையைத் தூக்கி எறிகிற மாதிரிப் பாவனையிலேயே முட்டாள் ஒட்டகங்கள் ஏமாந்து, சுமையைச் சுமந்து வாயில் நுரைதள்ளிக்  கொண்டு போகிற கதை மாதிரி இல்லை?! 


போதாக்குறைக்கு, விலைவாசி உயர்வைக் கட்டுப் படுத்த பெட்ரோல் பொருட்களின் மீது மாநில அரசுகள் விதிக்கும் விற்பனை வரியைக் குறைத்துக் கொண்டால், பொதுமக்களுக்கு அதிகச் சுமை இருக்காது என்று ஒரு மத்திய அமைச்சர் பேசியிருப்பதன் பின்னணியைக் கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால் இன்னும் கொஞ்சம் விவரங்கள் தெரிய வரும்.
 
Crude Oil and Commodity Prices
June, Tuesday 29 2010 - 12:04:51

Crude Oil
$75.60 ▼2.65   3.39%
12:04 PM EDT - 2010.06.29

Natural Gas
$4.58 ▼0.16   3.34%
12:04 PM EDT - 2010.06.29

 எண்ணெய் விலை சந்தை நிலவரத்தில் மாறிக் கொண்டிருப்பது இரண்டு படங்களிலும் தெளிவாக! படத்தின் மீது க்ளிக் செய்தால், நீங்கள் க்ளிக் செய்யும் நேரத்தில் எண்ணெய் விலை நிலவரத்தையும் தெரிந்து கொள்ளலாம்.

கடந்த ஒன்பது மாத நிலவரத்தைப் பார்த்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து இறங்கு முகமாகவே இருக்கிறது. ஒரு பேரல் கச்சா எண்ணெய் (சுமார் 160 லிட்டர்கள்) விலை இன்றைய நிலவரப்படி 75.60 டாலர்கள்.  எல்லா மதிப்புக்களையும் ரவுண்டாக எடுத்துக் கொண்டு பார்த்தால்  லிட்டருக்கு இருபத்திரண்டு ரூபாய் தான் அடக்கமாகிறது. பெட்ரோல் டீலருக்குக் கொடுக்கும் கமிஷன் வெறும் ஒன்றரை சதவீதம் தான். மிச்சம் எல்லாம் மத்திய அரசு பல வகைகளிலும் விதிக்கிற வரிகள் தான். அடக்க விலைக்கு மேல் நூறு முதல் நூற்று முப்பது சத வீதம் வரை பலவிதமான வரிகளை மத்திய அரசு விதிக்கிறது. இவர்கள் விதித்தது போக மாநில அரசுகள் தங்கள் பங்குக்கு விற்பனை வரியை விதிக்கின்றன,

விலைவாசி உயர்வைக் கட்டுக்குள் கொண்டுவர மாநில அரசுகள் தாங்கள் விதிக்கும் வரியைக் குறைத்துக் கொள்ளவேண்டும் என்று உபதேசம் செய்கிற மத்திய அமைச்சர்கள் தாங்களே அதைச் செய்தால் என்ன? எவரும் இந்தப் பேச்சுக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் போவதில்லை என்பது பேசுகிற புண்ணியவான்களுக்கே நன்றாகத்  தெரியும்

இங்கே பேரலுக்கு 159 அல்லது 160 லிட்டர்கள் என்று சொல்லும்போது சுத்திகரிக்கப்படாத கச்சா எண்ணெயில் சரிபாதிக்கும் கொஞ்சம் குறைவாகத் தான் பெட்ரோல் இருக்கிறது. அப்படியென்றால், மிச்சமிருப்பதெல்லாம் வீண் தான் என்று நினைத்துவிடாதீர்கள்!

ஒரு பேரலில் கிடைப்பது என்ன என்ன என்று பார்க்கலாமா?

27.5 லிட்டர் பெட்ரோ கெமிகல் பொருட்கள்-- இதில் ரசாயன உரங்கள் தயாரிக்கப் பயன்படும் அம்மோனியா உட்பட பிடுமேன், தார் போன்றவைகளோடு, பெட்ரோலியம் ஜெல்லி, வாசனை திரவியங்கள் தயாரிக்கப் பயன்படும் வேதிப் பொருட்கள், சலவை செய்யப் பயன்படும் வேதிப் பொருட்கள், பபிள் கம் தயாரிக்கப் பயன்படும் பொருட்கள், பிளாடிக் பொருட்கள் தயாரிப்பில் என்று பட்டியல் கொஞ்சம் பெரிது.

6.5 லிட்டர் எல்பிஜி எரிவாயு.

14.5 லிட்டர் ஒயிட் கெரசின்  என்றழைக்கப்படும் விமானத்திற்கான எரிபொருள். புகை வராது. இங்கே நாம் வீடுகளில் உபயோகிக்கும் மண் எண்ணெய் தரம் மிகவும் கம்மி, புகை நிறைய வரும்.

6.6 லிட்டர் எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் எண்ணெய் 

6.6 லிட்டர் ஹீட்டிங் ஆயில்

72.5 லிட்டர் பெட்ரோல்

35 லிட்டர் டீசல்

ஆகப் பெட்ரோல் சுத்திகரிப்பில், பெட்ரோலை விட லாபகரமான வேறு பல பொருட்கள் கிடைப்பதால் தான், இன்றைக்குப் பெட்ரோல் தயாரிப்பு நிறுவனங்கள் அந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கின்றன என்பதை விட, அரசுகளையே ஆட்டிப் படைத்து விடக் கூடிய அளவுக்குக் காசு அதில் புழங்குகிறது என்பதை புஷ் காலத்தில் ஈராக்கின் மீது யுத்தம், பிரிட்டிஷ் பெட்ரோலியக்  கம்பனியின்  ஆழ்துளைக் கிணற்றில் இருந்து கடலை மாசு படுத்திவரும் எண்ணெய்க் கசிவு போன்ற நிகழ்வுகள் அம்பலப் படுத்தின.

இப்போது இங்கேயும் அப்படித் தான்!

மக்களை நேரடியாகப் பாதிக்கக் கூடியதாக இந்த விலையேற்றம் இருக்கும் என்று தெரிந்தும் இதைச் செய்கிறார்கள் என்றால், தேர்தல் நேரத்தில் கொஞ்சம் வாக்குறுதிகள் ப்ளஸ் ஒட்டுக்குக் கொஞ்சம் காசுடன், அதைத் தள்ளுபடி செய்கிறேன், இதைத் தள்ளுபடி செய்கிறேன் என்று கடன் தள்ளுபடித் தில்லுமுல்லுக்களோடு சேர்த்து--

எவ்வளவு அடிமேல் அடிவிழுந்தாலும் பொறுத்துகிட்டு ஓட்டுப் போடறாங்களே! இந்த ஜனங்க எவ்வளவு ரொம்ப நல்ல இளிச்சவாயங்கன்னும்

சொல்வது புரிகிறதா?

புரியவில்லை என்றால், உங்களை அந்த ஆண்டவன் கூடக் காப்பாற்ற முடியாது!


வேறு பதிவுகளில், வலைக் குழுமங்களில் இந்தப் பிரச்சினையை அலசுகிறார்களோ இல்லையோ, மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்தில் ஒரு இழை ஆரம்பித்து, அப்புறம் வேறுபக்கங்களில் கவனம் சிதறி விட்டது. ஜனங்களால் என்ன செய்துவிட முடியும், கொஞ்ச நாள் காக்கைகள் போலக் கூடிக் கரைவார்கள் அப்புறம் கலைந்து விடுவார்கள் என்ற அரசியல் வாதிகளுடைய பால பாடத்தில் கற்றுக் கொண்டதைத் தவறு என்று நிரூபித்துப் பாடம் புகட்டும் வரை .........!

டில்லியில் 1984 இல் நடந்த சீக்கியர்களைப் படுகொலை செய்த விவகாரத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் சப்பைக் கட்டுக் கட்டிருக்கிறார். அந்த சம்பவம் நடந்தே இருக்கக் கூடாது என்று சொல்லிருக்கிறார். சீக்கிய சமூகத்திடம் மன்னிப்பும் கேட்டிருக்கிறார்! இருபத்தாறு ஆண்டுகள் கழித்து! இதற்கு முன்னாலும் இப்படி ஒரு மன்னிப்புக் கோரும் நாடகம் இந்தியாவிலேயே அரங்கேறியது. எந்த மரியாதையும் கிடைக்கவில்லை. இப்போது கனடாவில் போய் அதே மன்னிப்புக் கேட்கும் வசனம் ஒலி பரப்பாகி இருக்கிறது.

இந்திரா காண்டி குடும்பத்து வாரிசுகள் எவரும் இந்தப் படு கொலைக்காக இது வரை வருத்தம் தெரிவிக்கவில்லை. அதற்குக் கூட மன்மோகன் சிங் மாதிரி ஒரு டம்மிப் பீஸ் தேவைப் படுகிறது!  


காங்கிரசுக்கு வேண்டுமானால் டம்மிப் பீஸ்கள், முகமூடிகள் தேவையாயிருக்கலாம்!

நமக்குமா?

கொஞ்சம் உரக்கச் சொல்லுங்களேன்!








அந்த கறுப்பு தினத்தின் முப்பத்தைந்தாவது நினைவு தினம்!.



எது எதற்கோ நினைவு நாள் கொண்டாடுகிறார்கள், எது எதற்கோ பாராட்டு விழா, மாநாடெல்லாம் நடத்துகிறார்கள்.

நடத்திவிட்டுப் போகட்டும்!


இந்திய ஜனநாயகம்  என்பது காங்கிரஸ் கையில் சிக்கிய பூமாலை தான் என்பதைத் தெளிவாக உலகத்துக்கு எடுத்துக் காட்டிய நெருக்கடி நிலை பிரகடனம்  அறிவிக்கப் பட்டு, அதையடுத்துப் பத்தொன்பது மாதங்கள் இம்மென்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசம் பிரிட்டிஷ் குள்ளநரிகள் ஆண்டபோது இருந்ததை விட அதிகமாக நடத்திக் காட்டப் பட்ட இருண்ட காலம்.

1975, ஜூன் 25! இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப் பட்ட அந்த கறுப்பு தினத்தின் முப்பத்தைந்தாவது நினைவு தினம்.

நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப் பட்ட பிறகு தான் இந்த தேசத்தில் ஊழலே இல்லாமல், வேலைகள் எல்லாம் ஒழுங்காக நடந்த மாதிரியும், வறுமையே வெளியேறு என்று பூசாரி வேப்பிலை அடித்துக் கூவுவது போல கூவிய பிறகு இந்த தேசத்தில் வறுமையே இல்லாமல் போய்விட்ட மாதிரியும் கோயபல்சை மிஞ்சுகிற வகையில் அரசு இயந்திரமும், காங்கிரஸ் காரர்களும் சாதனைகளைத் தம்பட்டமாக அடித்துக் கொண்டிருந்த இருண்ட காலம்.

குஷ்வந்த் சிங் மாதிரி எழுத்தாளர்கள் கூட நான் ஏன் எமர்ஜென்சியை ஆதரிக்கிறேன் என்று புத்தகம் வெளியிட வைத்த நாட்கள் அவை. 

 நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் தகுதியை இந்திரா காந்தி இழக்கிறார்  என்பதை அலஹாபாத் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெளிவாகவே  சொன்னது, ஆக நெருக்கடி வந்தது இந்திரா காந்திக்குத் தானே தவிர, தேசத்துக்கு இல்லை.

மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதிகளில் சொல்லப் பட்டதை மீறி தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டது நிரூபிக்கப் பட்டதாகவும், அதனால் இந்திரா காந்தி பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் தகுதியை இழக்கிறார் என்றும் ஜூன் மாதம் 12 ஆம் தேதி அலஹாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேல்முறையீடு செய்வதற்கு மூன்று வார அவகாசமும் கொடுக்கப் பட்டது. மேல் முறையீடு செய்யவில்லை என்றாலோ, உச்ச நீதி மன்றம் மேல்முறையீட்டை நிராகரித்தாலோதான் இந்த உத்தரவு நடைமுறைக்கு வரும் என்று தீர்ப்பு சொன்னது.

சகுனிகள் ஆலோசனையின் பேரில் நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப் பட்டது. ஆள் காட்டிகள் காட்டின பேர்  எல்லாம் மிசா அது இது என்று என்னென்னமோ கறுப்புச் சட்டங்களின் கீழ் சிறையிலடைக்கப் பட்டனர்.

ஜெயப்ரகாஷ் நாராயணன் மாதிரி அனுபவமுள்ள காந்தீயவாதி இந்த இரண்டாவது சுதந்திரப் போரை முன்னின்று நடத்தினார்.

தேவ காந்த பரூவா மாதிரி கிறுக்கு மாய்க்கான்களால் இந்திரா தான் இந்தியா, இந்தியா தான் இந்திரா என்று உளறிக் கொண்டிருந்தவர்களால், இந்திரா என்ற தனிநபருக்கு வந்த நெருக்கடி என்னவோ தேசத்துக்கே வந்த மாதிரி ஒரு பிரச்சாரம் செய்யப்பட்டது. இருபது அம்சத் திட்டம் அது இது என்று என்னென்னவோ செய்து பார்த்தும் கூட, மக்களுடைய அதிருப்தி பெருகிக் கொண்டே போனதைத் தடுக்க முடியவில்லை. 

அதற்குப் பின் நடந்தவை எல்லாம் சமீப கால சரித்திரம்! இப்போது மறுபடி மறுபடி நினைவு படுத்திப் பார்த்துக் கொள்ள வேண்டிய தருணமும் கூட.

சுதந்திரம், விடுதலை, உரிமைகள் என்பவை எவரோ பார்த்துக் கருணையோடு பஞ்சு மிட்டாய் கொடுப்பது போல அல்ல.

சுதந்திரம் என்பது அதன் அருமையை உணர்ந்து காப்பாற்றிக் கொள்ளத் தெரிந்தவர்களுக்குமட்டுமே நிலைக்கக் கூடிய ஒரு வரம்!

நெருக்கடி நிலையை எதிர்த்து உறுதியாகப் போராடிய பலர் காலம் செய்த கோலத்தில் காங்கிரசோடு கூட்டு சேர்ந்து ரொம்பவுமே நல்லவர்களாகிப் போனார்கள். பதவிக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் தியாகிகளாகவும் ஆனார்கள் என்பதையும் பார்க்கும்போது சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்வதில் இருக்கும் சிரமங்கள் எவ்வளவென்பது  புரிகிறதா?

உள்நாட்டிலும், வெளியுலகிலும் ரொம்பவுமே அசிங்கப்பட்டுப் போன பிறகு தான் 1977 இல் இந்திரா காந்தி மறுபடி தேர்தலைச் சந்திக்க முன்வந்தார் என்பதும், அந்தத் தேர்தலில் காங்கிரஸ் வேரோடு சாய்க்கப் பட்டது என்பதும் தெரிந்த கதை.

அப்படி வேரோடு சாய்ந்ததை, நம்முடைய அலட்சியத்தாலும், பொறுப்பற்ற தன்மையினாலும், நம்பக் கூடாதவர்களைத் தலைவர்களாக ஏற்றுக் கொண்டதாலும், இந்தியத் தேர்தல் முறைகளில் இருக்கும் குளறுபடிகளாலும் மறுபடி உயிர் கொடுத்திருக்கிறோம் என்பதை நினைவு படுத்திக் கொள்ள வேண்டிய தருணம் இது.







 

செய்திகளில் வெளிப்படுகிற அவலம் என்ன மொழி? என்ன நிறம்?

முதலில் தமிழ்நாடு!


வரப்புயர நீர் உயரும்! நீர் உயர நெல் உயரும்!
நீர் உயரக் குடி உயரும்! குடி உயரக் கோன் உயர்வான்


இப்படி அவ்வைக் கிழவி சொல்லி வைத்துப் போனதெல்லாம் செம்மொழியாகாது போல! 


தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று சொல்லிக் கொண்டதெல்லாம் பொய்யாய்ப்  பழங்கனவாய்ப் போய்விடும்  போல இருக்கிற  அவலத்தை முழுதும் படிக்க.....

"ஏதோ சில காரணங்களால், நெல் சாகுபடிப் பரப்பளவு குறைவதைப் போலவே ஒரு ஹெக்டேருக்கான நெல் உற்பத்தி அளவிலும்கூட குறைவுபட்டுக் கொண்டே வருகிறோம் என்பதையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. 2008-2009-ம் நிதியாண்டின் புள்ளிவிவரப்படி, தமிழக நெல் சாகுபடியில் ஒரு ஹெக்டேருக்குக் கிடைக்கும் நெல் உற்பத்தி 2,683 கிலோ மட்டுமே.

அப்படியானால் மற்ற மாநிலங்களில் நெல் உற்பத்தி ஒரு ஹெக்டேருக்கு என்னவாக இருக்கிறது? தில்லியில் 4,243 கிலோ, பஞ்சாபில் 4,022 கிலோ, ஆந்திரத்தில் 3,246 கிலோ, அந்தமான் நிகோபார் தீவில் 2,797 கிலோ, ஹரியானாவில் 2,726 கிலோ, தமிழ்நாட்டில் 2,683 கிலோ. அதாவது இந்தியாவில் 7-வது இடத்தில் இருக்கின்றோம். (காவிரித் தண்ணீரை வம்படியாகப் பிடித்து வைத்துக் கொண்டுள்ள கர்நாடகம் 11-வது இடத்தில் இருக்கிறது. அங்கே, ஒரு ஹெக்டேருக்கு 2,511 கிலோ நெல் விளைகிறது).

தமிழ்நாட்டில் நெல் சாகுபடிப் பரப்பு குறையத் தொடங்கியுள்ளது. ஒரு ஹெக்டேருக்கான உற்பத்தி அளவும் குறைவாக இருக்கிறது. ஆனால், நியாயவிலைக் கடைகளில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கிடைப்பதும் சாத்தியமாகிறது.  


நெல்லை விளைவித்து, விற்றதும், விதைநெல்லும் போக, மீதமுள்ளதை வைத்து வயிறார உண்ட விவசாயி, ஒரு ரூபாய் அரிசிக்காக நியாயவிலைக் கடையில் காத்து நிற்கிறார். இது என்ன முரண்?

அப்படியே கொஞ்சம் உலக நடப்பும்....!


மின்தமிழ், தமிழ் மரபுக்கட்டளையின் நிறுவனர்களில் ஒருவரான  முனைவர் நா.கண்ணன் தென் கொரியாவில் இருந்து செம்மொழி மாநாட்டுக்கு தமிழில் உள்ள அரிய விஷயங்களை மின்னாக்கம் செய்வதைப் பற்றிய ஒரு ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிப்பதற்காக வந்திருக்கிறார். இன்றைய தினமலரில் அவரது பேட்டி வெளியாகியிருக்கிறது. தமிழுடன் தென் கொரிய  மொழிக்குத் தொடர்பு இருக்கிறது. ஹங்குல் என்ற எழுத்து சீர்திருத்தத்திற்குப் பிறகுதான் கொரியா முன்னேற ஆரம்பித்தது என்று சொல்லியிருக்கிறார். கொஞ்சம் தலை சுற்றியது!

இரண்டாவது உலகப்போர் முடிவுக்குப் பிறகு, அமெரிக்காவும், சோவியத் யூனியனும் உலகத்தைப் பங்கு போட ஆரம்பித்ததன தொடர்ச்சியாக, 1948 இல்கொரியாவின் வடபகுதியை ரஷ்யாவும், தென் பகுதியை அமெரிக்காவும் தங்கள்  பனிப்போரை தொடர்ந்து நடத்தும் களமாகக் கூறு போட்டுக் கொண்டன. ஒரு கட்டத்தில் கொரியாவிலிருந்து சோவியத் யூனியன் விலகிக் கொண்டது. வட கொரியாவின் தலைவர்களுக்கு ஆதர்சமாக மாசேதுங் ஆகிப்போன காலகட்டம். 1950 இல் 38 ஆவது அட்சக் கோடு என்று பரவலாக அறியப்படும் கொரியாவை  இரண்டாகப் பிரித்து வைத்திருக்கும் எல்லைக் கோட்டை மீறி, வட கொரியா மூன்றாண்டுகள் தென்பகுதி மீது தாக்குதலைநடத்தியது.. இந்தத் தாக்குதலின் அறுபதாவது ஆண்டு நிறைவின் தருணத்தில் முனைவர் கண்ணனின் இந்த ஒப்பீடு எனக்குக் கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது. எந்த ஒரு மொழிக்குமே எழுத்து வடிவங்கள் காலம் தோறும் மாறிக் கொண்டே வந்திருக்கின்றன. இன்று நாம் தமிழில் கையாளும் எழுத்துக் குறியீட்டுக்கும், பழைய கல்வெட்டுக்களில் காணப் படுகிற வட்டெழுத்து வடிவத்துக்கும்  நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. மொழி ஆராய்ச்சியை மொழி வல்லுனர்கள் பார்த்துக் கொள்ளட்டும்!


சீனாவின் செல்லப் பிள்ளையாக, மாசேதுங்கின் ஒரே சீடப் பிள்ளையாக (மற்றவர்கள் எல்லாம் உஜாலாவுக்கு மாறுவதைப் போல கொஞ்சம் யதார்த்தத்துக்கு நெருக்கமாக பொருளாதார சீர்திருத்தங்களுக்கு மாறி விட்டார்கள்)  இருக்கும் வட கொரிய அதிபர் கிம் ஜோங் இல், எந்த நேரத்தில் என்ன செய்வார் எப்படி விபரீதமாக இருக்கப் போகிறது என்று புரியாமல் ஜப்பானும், தென் கொரியாவும் அலறிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் கொரியா டைம்ஸ் பத்திரிகையில், கொரிய யுத்தம் முற்றுப் பெறவில்லை, இன்னமும் நடந்து  கொண்டுதான் இருக்கிறது   என்ற செய்திக் கட்டுரையை படிக்க! அறுபதாண்டுகளாகப் புகைந்து கொண்டிருக்கும் ஒரு பிரச்சினை, முற்றினால் எல்லோரையுமே பாதிக்கக் கூடியது என்ற வகையில் தெரிந்து கொள்வதற்காகவும்!





 

இன்பக் கனவுகள்! எண்டமூரி வீரேந்திரநாத்

இன்பக் கனவுகள்



எண்டமூரி வீரேந்திரநாத்

சுசீலா கனகதுர்க மொழிபெயர்ப்பில் திருமகள் நிலைய வெளியீடு.
முதலில் வெளிவந்த வருடம் 1992 பக்கங்கள் 136


டித்ததும் பிடித்ததும் என்ற தலைப்பில் இந்தப்பக்கங்களில் எழுதி நீண்ட நாட்களாகி விட்டது இல்லையா?!

த்தனையோ விஷயங்களைப் பற்றிப் படிக்கிறோம். அதில் ஏனோ சில விஷயங்கள் உடனேயே பிடித்துப் போய்விடுகின்றன. நீண்ட நாட்கள் மனதில் தங்கியும் விடுகின்றன. எதனால் அப்படி என்று கேள்வி கேட்டுக் கொண்டோமேயானால், வெவ்வேறு விதமான பதில்கள், அந்தந்த நேரத்துக்குத் தகுந்த மாதிரி
ருவதைப் பார்க்க முடியும்.

"நல்ல இலக்கியம் என்பது உண்மையை ஒரு படைப்பாளன் தேடும் தவம். உண்மையை அவனவன் கண்ட விதத்தில் வெளிப்படுத்தும் போது மனிதக் குரல்களையும் முகங்களையும் போல சாயல்களும் தனித்தன்மையும் வளமாகக் கொழிக்கின்றன. உண்மையைக் காணத் திராணி இல்லாதவர்கள் வேறு எவற்றுக்கேல்லாமோ ஆசைப் பட்டுத் தங்களையே நகல்களாக்கிக் கொண்டு விடுகிறார்கள். பலபேர் வார்ப்படம் வைத்துக் கொண்டு ஒரே மாதிரியாக பொம்மை செய்து கொண்டே போகிறார்கள். போலி என்பதைக் கூட்டிக் கொண்டு போகிறார்கள்."

தி.ஜானகிராமன் இப்படிச் சொல்லியிருந்ததை, அவருடைய அம்மா வந்தாள் புதினத்தைப் பற்றி இந்தப் பக்கங்களில் எழுதியபோது, எடுத்தாண்ட வரிகளை  எண்டமூரி வீரேந்திரநாத் என்ற திறமையான கதை சொல்லி, எழுத்தாளரைப் பற்றி எழுதும்போது நினைத்துப் பார்த்தேன்.

ந்தவொரு எழுத்தாளனுக்கும்  தான் தேடுவது என்ன, தான் கண்டுகொண்டதென்ன என்பதை வெளிப்படுத்துகிற விதமாகத் தான்  அவரவர் எழுத்து அமைந்து விடுகிறது. சிலபேருக்கு மெய்த்தவம். வேறு சிலருக்கோ பூனைத் தவம். எப்படி இருந்தாலும் எழுத்து என்பது வெற்றிடத்தில் இருந்து பிறக்க முடியாது. உண்மையைப் புரிந்து கொண்டு எழுதுவது ஒருவகைத் தவம். உண்மையை நேருக்கு நேர் எதிர் கொள்ளத் திராணியற்றவர்கள், வேறு எதற்கெல்லாமோ ஆசைப்பட்டு, தங்களையே இழந்துவிடுகிற விபரீதத்தையுமே சந்தோஷத்துக்கு ஒரு குறுக்கு வழி திரைப்படம், கதையை இந்தப்பக்கங்களில் தொட்டு எழுதியது நினைவிருக்கிறதா?

ன்று காலை, இன்பக் கனவுகள் என்ற எண்டமூரி வீரேந்திரநாத் எழுதிய ஒரு சிறு நாவலை மறுபடி படித்தபோது, ஆசிரியர் எவ்வளவு நுட்பமாக மனித இயல்புகளைப் படித்திருக்கிறார் என்ற ஆச்சரியம் தான் தி.ஜானகிராமன் எழுதிய மேற்கண்ட வாசகங்களை மறுபடி அசைபோட வைத்தது. 


ந்தக் கதையின் கரு அல்லது முடிச்சு மிக மிகச் சிறியது தான்! அந்தச் சிறிய முடிச்சை,  வெகு சாதாரணமாகக்  காணப்படும் மனித இயல்பு ஒன்றை வைத்து, எவ்வளவு லாவகமாகக் கதை பின்னி ருக்கிறார்! 136 பக்கங்களுக்குள் ஒரு அழகான  சித்திரத்தைப் படைத்திருக்கிறார். பக்கங்களின் எண்ணிக்கை வேண்டுமானால் ஒரு குறுநாவல் என்று வகைப்படுத்துகிற விதத்தில் இருக்கலாம்.ஆனால், இந்த சிறிய புதினத்தில் வருகிற ஒவ்வொரு பாத்திரமுமே, அவரவர் குணசித்திரத்தில் நெடிது உயர்ந்து நிற்கிறார்கள்.

சஞ்சு என்ற சஞ்சீவி! இந்தக் கதையின் நாயகன். சிறுவயதில், வீம்பும் பிடிவாதமும் நிறைந்தவனாக இருக்கிறான்.படிப்பில் அவ்வளவு நாட்டமில்லை, உள்ளூர் குட்டி தாதாக்களுக்குத் தலைவனாக அவ்வளவு சேட்டை! தாய் ஜானகி மிகவும் கண்டிப்புக்காரி. ஒரு முடிவு எடுத்து விட்டாள் என்றால்  மாற்றிக் கொள்ளவே மாட்டாள். அவ்வளவு வைராக்கியம்! மகன் செய்கிற ஒவ்வொரு தவறுக்காகவும் கடுமையாகத் தண்டிக்கிறாள். எவ்வளவுக்கெவ்வளவு அம்மாக்காரி தண்டிக்கிறாளோ, அவ்வளவுக்கவ்வளவு பையனுடைய வீம்பும் பிடிவாதமும் அதிகரித்துக் கொண்டே போகிறது. அம்மாக்காரிக்கே ஒரு சலிப்புத் தோன்றி விட, இந்தப் பிள்ளையை உலகத்தில் எவருமே மாற்ற முடியாது, ஒழிந்துபோகட்டும் என்ற முடிவுக்கு வந்து விடுகிறாள்.

அம்மாக்காரிக்கு எவ்வளவு வைராக்கியம் இருந்ததோ அதை விடக் கூடவே அந்த சிறுபையனுடைய வீம்பு, பிடிவாதம், முரட்டுத் தனத்துக்குப் பின்னால்  இருப்பதை வெளிப்படுத்தும் ஒரு தருணமும் வருகிறது. மாறவே மாட்டான் என்று இருந்தவனைத் தலைகீழாகப்
புரட்டிப் போட்டுவிடுகிற தருணமாகவும் அது ஆகிப் போகிறது. தாய் தகப்பனை இழந்து, இவர்கள் வீட்டிலேயே ஒன்றாக வளரும் மாமன் மகள் பாவனி, இந்த முரட்டுப் பிள்ளையிடம் நேசத்தோடு இருக்கிறாள். ஒரு சந்தர்ப்பத்தில் வெளியே செம்மண் சுழலுக்குள் சிக்கிக் கண், வாயெல்லாம் செம்மண் விழுந்து உறுத்தும்போது, மருந்தென்று சொல்லி அவள் கண்களில் எருக்கம் பாலை ஊற்ற, பாவனிக்குக் கண்பார்வை போய்விடுகிறது.

வீட்டுப்பக்கமே இரண்டு நாட்கள் வராமல் சுற்றிக் கொண்டிருந்து விட்டுத் திரும்பும்போது அம்மாக்காரி கடுமையான வார்த்தைகளால் அவனைச் சுடுகிறாள். இனிமேல் வீட்டுப்பக்கமே வராதே போய்விடு என்கிறாள்.

சஞ்சீவி நகர்ந்தான். அவன் நடையில் முன்னைப்போலக் குறும்புத் தனம் இல்லை. ஆயிரம் வருடத்து அனுபவம் இருந்தது. இரண்டு நாள் தூக்கமில்லாத இரவுகளின் தளர்ச்சி தெரிந்தது. அழுது அழுது சோர்ந்து போய்விட்ட மனம் பாரமாயிற்று.

நாலடி முன்னோக்கி வைத்துத் தாயிடம் வந்தான்.

"போறேம்மா" என்றான். அந்த ஒரு வார்த்தையில் செய்த காரியத்தால் வெட்கமும், அதற்கு அனுபவித்த தண்டனையால் அடியுண்ட அவமானமும், அது ஏற்படுத்திய அனுபவமும் துணிச்சலும் கலந்திருந்தன.

தாய் பேசவில்லை.

கணபதியின் கண்களில் இருந்து கண்ணீர் உதிர்ந்தது.

சஞ்சீவி நகர்ந்து வாசலுக்கு வரப்போனவன் நின்றான். பாவனி கட்டிலில் படுத்திருந்தான். மெல்ல அந்தப் பக்கமாய்ப் போனான். சந்தடியைக் கேட்டு பாவனி கைகளால் துழாவிப் பார்த்தாள்.

அவள் கைமேல் கையை வைத்தான்.

அவனுக்கு அழுகை வரவில்லை. வெறுப்பாய் இருந்தது. ரோஷமாய் இருந்தது.யார் மேல் என்பதே தெரியாமல் கோபம் வந்தது.

அப்போது அவன் பத்து வயது சிறுவனைப் போலில்லை. விதி ஆடுகிற நாடகத்தின் மிக வேதனையான கட்டத்தை ஏற்று நடத்திக் கொண்டிருந்த சூத்திரதாரியைப் போல இருந்தான்.

அனுபவம் வாய்ந்த சேஷகிரியே வாயடைத்துப் போய்விட்டார்.

அன்பாய்த் தன்னைத் தொட்ட கையை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டாள். அவன் பேசவில்லை. கன்னங்களில் கண்ணீர் கோடிட்டுக் கொண்டிருந்தது. அவ்விடத்தில் ஒரு வினாடி மௌனமாய் நின்று விட்டு அவன் மெல்ல நகர்ந்தான்.

அந்த நேரத்தில் மட்டும் அவன் மனதிலிருந்த உணர்ச்சிகளெல்லாம் ஒரு உருப் பெற்றுவிட்டிருந்தால், "பாவனி! போயிட்டு வரேன்! டாக்டராகித் திரும்பி வருவேன். உன் கண்களை நானே குணமாக்குகிறேன். என் பணத்திலேயே.....!என்னைப் போகச் சொல்லுகிறாளல்லவா அம்மா? என் முகத்தைப் பார்க்க மாட்டாளாம்! ஆம், நானும் பார்க்க மாட்டேன்--திரும்பவும் உன் கண்கள் குணமாகும் வரை இந்த ஊருக்கே வர மாட்டேன்" என்று சொல்லி இருப்பான்.

அந்த யோசனைகளுடன் அந்த வீட்டை விட்டுப் புறப்பட்டு  விட்டான் அவன்.

ந்தப்பகுதியை கதையைப் பின்னோக்கிப் பார்க்கிற விதத்தில் டாக்டர் சஞ்சீவியாக அவன் ஆன பிறகு அவனுக்கு தங்கள் அவுட் ஹவுசில் தங்க இடமும் கொடுத்து, எல்லா உதவிகளையும் செய்து கொண்டிருக்கிற ஒரு தொழிலதிபர் ரகுநந்தனுடைய  மகளும், சக டாக்டருமான கவிதாவிடம் சொல்கிற மாதிரி வருகிறது. 


பிடிவாதத்தில் ஜெயித்து டாக்டராகியாயிற்று. பாவனிக்கு மருத்துவம் செய்வதற்கு முன்னாள் பரிசோதிப்பதற்காக இவன் அனுப்புகிற டாக்டர்களை அவன் தாய் நிராகரித்து அனுப்பிவிடுகிறாள். அப்படியிருந்தும் வேறு விதமாக பாவனியின் நிலையைத் தொடர்ந்து சஞ்சீவி கவனித்துக் கொண்டு தான் இருக்கிறான்.

ரே பிடிவாதம்! அவனுடைய தவறால் பறிபோன கண்களை பாவனிக்கு மீட்டுக் கொடுத்துவிட வேண்டும்! இதைத் தவிர அவனுக்கு வேறோர் நினைப்பில்லை. அங்கே பாவனி வேறோர் நினைப்பில் இருக்கிறாள்.

தாபாத்திரங்கள் எண்ணிக்கை இந்தக் கதையைப் போலவே கொஞ்சம் சின்னது தான்! ஆனால் ஒவ்வொரு பாத்திரமும் தனித்துவமாக நிற்கிற மாதிரி, ஒவ்வொரு பாத்திரமும் ஒவ்வொரு வகை மனித இயல்பைத் தொட்டுச் சொல்கிற மாதிரிப் படைத்திருக்கிறார்  எண்டமூரி.வீரேந்திரநாத். 
ன்னுடைய மகளுடைய சிநேகிதன் என்றாலும் தன்னையே பிரதி பலிக்கிற மாதிரி உணர்கிற ரகு நந்தன்,  சிநேகிதியாக வருகிற டாக்டர் கவிதா, அவளை மணந்துகொள்ளப் போகும் மாப்பிள்ளையாக வரும் டாக்டர் ரமேஷ், அவனது ரஷ்ய நண்பர்கள் எல்லோருமே ஒரு விதமென்றால், அங்கே கிராமத்தில் நாயகனுடைய தாய், ஜானகி, சகோதரன் கணபதி, உதவி செய்கிற மாதிரி வந்து பணத்தைக் கொஞ்சம் திருடிக் கொண்டிருக்கும்  சித்தப்பா சேஷகிரி மொத்தத்தையும் சுருட்டத் துணிகிற வஞ்சகத் தனம் கடைசியில் , அவருடைய வெகுளிப் பிள்ளை  பாலு என்று கதா பாத்திரங்கள் ஒவ்வொருவரும், வாழ்க்கையில் நாம் தினசரி பார்த்துக் கொண்டிருக்கிற எவரையோ நினைவு படுத்துகிறார்கள். அல்லது, படித்துக் கொண்டிருக்குபோதே  நாமும் அவர்கள் உலகத்துக்குள் புகுந்து அவர்களோடேயே வாழ்கிறமாதிரியான ஒரு அனுபவத்தைக் கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்தி விடுவதில் எண்டமூரி கதை சொல்கிற பாணி தனித்து மனதில் நிற்கிறது.

தொலைவில்  இருக்கிற வெளிச்சத்திற்காகத் தவித்துக்
கொண்டு இருந்தேன் என்று  தன்னுடைய தவிப்பைச் சொல்கிறான் கதாநாயகன். பார்வை இழந்த நிலையிலும் கூட, பாவனி அவன் தேடிக் கொண்டு இருந்த வெளிச்சத்தை எப்படிக் காட்டிக் கொடுக்கிறாள் என்பது தான் கதை.

கொஞ்சம் நம்மையே உள்நோக்கிப் பார்த்தோமேயானால், நமக்குள்ளும் முரட்டுப் பிடிவாதமும் வீம்பும்நிறைந்திருப்பதையும், பெரும்பாலான தருணங்களில் உண்மையை, வெளிச்சத்தை மறைக்கிற தடைகளாகவும் வாழ்க்கையின் பெரும்பாலான தருணங்களில் ஆகிப்போயிருப்பதைப் பார்க்க முடியும்.

ன்பக் கனவுகளுக்காகத் தான் ஒவ்வொருவரும் ரகசியமாகவாவது ஏங்கிக் கொண்டிருக்கிறோம்.
எது இன்பக் கனவு என்பதைக் கூட அறியாமலேயே! 

ன்பக் கனவில் ஒரு விதத்தை அற்புதமாகச் சொல்லியிருக்கும் கதை இது. சுசீலா கனகதுர்காவின் மற்ற மொழிபெயர்ப்புக்களைப் போல அல்லாமல், இந்தக் கதையில்  ஜானகி தன்னுடைய மைத்துனர் சேஷகிரியை அழைக்கும் இடங்களில் கொஞ்சம் பிசிரடிக்கிறது.
மச்சினரே..மைத்துனரே இப்படி தெலுங்கில் தன்னுடைய கணவனின் உடன்பிறந்தவர்களை எப்படி அழைப்பார்கள் என்று எனக்குத் தெரியாது.  இப்போது படிக்கும் போது, மொழிபெயர்ப்பில் அப்படி விளிக்கும் பகுதிகள் பிசிரடிப்பதாகத் தோன்றுகிறது.  
கதையின் சுவாரசியம் மொழிபெயர்ப்பில் உள்ள குறைகளையும்  மீறி  வாசகரை ஈர்ப்பதாக இருக்கிறதென்னவோ, இன்றைக்கும் நிஜம்!




துப்பில்லாத ஜனங்களுக்குக் கிடைப்பது இது தான்!



தொடர்ந்து அரசியலைப் பற்றியே பதிவெழுதிக் கொண்டிருப்பதில் வெறுத்துப்போய், வேறு உருப்படியான வேலை, படிப்பதைப் பார்க்கப் போகலாம் என்று தான் இருந்தேன்.

ன்றைக்கு சேத் கோடின் மார்கெடிங் துறையைப் பற்றி எழுதிய பதிவொன்றின் முதல் வரி இது:

"People who don't care, selling products to people who care less."

துப்புக் கெட்டவர்களிடமிருந்து, தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் துப்பில்லாத ஜனங்களுக்குக் கிடைப்பது இது தான்!

பானா சீனாவின் பேட்டியை ஊடகங்களில் படித்த போது சேத் கோடின் மார்கெடிங் துறையைப் பற்றிச் சொல்லியிருந்த வாக்கியம் இப்படித்தான் நினைக்கத் தூண்டியது.  

டகங்களில் போபால் தீர்ப்பும், காங்கிரஸ் அரசின்  மெத்தனமும் கிழி கிழியென்று கிழித்துத் தோரணம் கட்டிச் சிவப்புச் சேலைகளாகத் தொங்க விடப் பட்டுக் கொண்டிருப்பதில், ஐ மு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் 2 இற்குத் திடீர் சுரணை, சுறுசுறுப்பு வந்து விட்ட மாதிரிக் காட்டிக் கொள்வதற்காக அமைச்சரவைக் குழு அதிக நிவாரணத்தைப் பரிந்துரை செய்திருப்பதைக் கண்டனூர் பானா சீனா 
இன்னமும் மூன்று நாட்கள் அவகாசம் இருந்தும் முன்னாலேயே செய்தியாளர்களிடம் வெளியிட்டிருக்கிறார்.  

னால் அதன் பின்னணிப் பூனைக் குட்டியும் ஊடகங்களில் உடனேயே வெளியே வந்து விட்டதுதான் பரிதாபம்!

நாளைக்கு வாஷிங்டனில் கூடவிருக்கும் இந்திய -அமெரிக்கத்  தொழில் துறை தலைமை நிர்வாகிகளின் கூட்டத்தில் இந்திய அரசு அமெரிக்க மூலதனத்துக்கு எந்த விதத்திலும் இடைஞ்சல், சுமையைத் தராது என்பதைக் கோடிட்டுக் காட்டுகிற மாதிரித் தான், இந்த நிவாரணக் கண்துடைப்பு நாடகம் இருக்கிறது. 


த்தன் டாட்டாவின் தலைமையில் பன்னிரண்டு தலைமை நிர்வாகிகள், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.

செத்தவர்களுக்குப் பத்து லட்சம், முழுமையாக
ஊனம் அடைந்தவர்களுக்கு ஐந்து லட்சம், அரைகுறை ஊனமுற்றவர்களுக்கு மூன்று லட்சம் என்று நிவாரணம் வழங்க அமைச்சரவைக் குழு பரிந்துரை செய்திருக்கிறது.  ராஜீவ் காந்தி போபால் விஷ வாயுக் கசிவு விவகாரத்தில்  எந்த விதத்திலும் சம்பந்தப்படவே இல்லை என்று  சான்றிதழும் கொடுத்திருக்கிறது.  

மைச்சரவையின் கூட்டுப் பொறுப்பு என்பது ராஜீவ் காந்திக்கு மட்டும் இல்லை போல இருக்கிறது!
 

தாயாருடைய மரணத்துக்குப் பழிதீர்ப்பதுபோல டில்லியிலும் சுற்றுப் புறங்களிலும் அதே நேரம் சீக்கிய மக்கள் பலியாகிக் கொண்டிருந்ததை சர்வசாதாரணமாக எடுத்துக் கொண்ட ஒரு பிரதமர், போபால் மக்களுக்கு என்ன ஆறுதல் சொன்னார், என்ன நிவாரணம் வழங்க முயற்சித்தார்? 

தையாவது நேர்மையாக நெஞ்சைத் தொட்டு எந்தக் காங்கிரஸ் காரராவது சொல்ல முடிகிறதா? அர்ஜுன் சிங், செத்துப் போன நரசிம்ம ராவ், இன்னும் பலர் மீது பழியைத் தள்ளிவிட்டு, ராஜீவ் காந்தி மட்டும் உத்தமர், இதெல்லாம் அவருக்கு ஒன்றுமே தெரியாது என்று சாதிக்க வேண்டிய அவசியம் என்ன? ராஜீவ் காந்தி பேர் சந்திக்கு வருகிறது என்றவுடனேயே அமைச்சரவைக் குழு அமைக்கப் பட்டு, நிவாரண அறிவிப்பு உடனே வருகிறதே, இதை ஏன் இருபத்தாறு ஆண்டுகளில் எந்த ஒரு தருணத்திலும் செய்ய காங்கிரஸ் ஆட்சியினால் முடியவில்லை?

து போக, நிவாரணம் எதில் இருந்து கொடுக்கிறார்கள் என்று பார்த்தால், இந்திய அரசு வரியாக வசூலிக்கும் பணத்தில் இருந்து தானாம்! செத்ததற்கு நிவாரணம் கொடுப்பது மத்திய அரசின் பொறுப்பாம்! போபால் யூனியன் கார்பைட்
ஆலை வளாகத்தில் கொட்டிக் கிடக்கும் நஞ்சுக் கழிவை அகற்றும் பொறுப்பு மத்தியப் பிரதேச மாநில அரசை சேர்ந்ததாம்! வருகிற இருபத்தைந்தாம் தேதி, அமைச்சரவைக் கூட்டத்தை இது விஷயமாகக் கூட்ட இருப்பதாகவும் பானா சீனா தெரிவித்திருக்கிறார்.

ண்டை வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே என்று எங்கும் எதிலும் ஊழல் செய்து சுவிஸ் வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கும் பணத்தைப் பறிமுதல் செய்து, அதில் இருந்து நிவாரணம் கொடுத்திருந்தால் கூடப் போகிறது என்று சொல்லலாம்! உங்கள் சட்டைப் பையில் இருந்தே பிக்பாக்கெட் அடிக்கிற மாதிரி வரி வசூல் செய்து, அதில் கொஞ்சம் ஊழல் போகக் கிள்ளி எடுத்து  உங்களுக்கே நிவாரணமாகக் கொடுப்பது என்றால்.....? பானா சீனா உள்ளிட்ட அமைச்சரவைக் குழு செய்திருக்கும் வேலை அதுதான்!

ழிசடைக் காங்கிரஸ் அதைவிடக் கடையழிந்த கட்சிகளோடு  கூட்டணி சேர்ந்து நடத்தும் குழப்பமான இந்த அரசிடம் இருந்து வேறெதையும் எதிர்பார்க்க முடியாதுதான்! 


சொந்த ஜனங்களை நொந்து சாகவிட்டு,வெள்ளைத் துரைமாருக்கு அடிமைச் சேவகம் செய்கிற குணம் காங்கிரஸ் உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்களுக்கு இன்னமும் இருப்பது கேவலமாகக் கூட அவர்களுக்குத் தான் தெரியவில்லை!

டி மேல் அடி வாங்கிக் கொண்டிருக்கிற ஜனங்களுக்குமா இன்னமும் தெரிந்து கொள்ள முடியவில்லை?

வர்கள் நடத்துகிற அரசியல் கூத்துக்கள், தமிழ் சினிமாவில் வரும் நாட்டாமைகள் சொல்கிற தீர்ப்பு மாதிரியே இருப்பது தான் பெரும் கொடுமை! கற்பழித்துச் சீரழித்துவிட்டான் என்று விசாரணை செய்ய வந்தவர்கள், வெறும் ஆயிரமோ, இரண்டாயிரமோ தண்டம் கட்டி விட்டுப் போ என்று சொல்கிற மாதிரிக் கூட இல்லை! நீ பத்திரமாகப் போய்ச் சேர், தண்டத்தை  நாங்களே கட்டிக் கொள்கிறோம் என்று சொல்கிற மாதிரிக் கேவலத்தைத் தான் கண்டனூர் பானா சீனா, இன்றைக்கு செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

ப்படிக் கடையழிந்த காங்கிரஸ் அரசு அணு உலை விபத்து நட்ட ஈடு வரையறை செய்யும் மசோதாவிலும் இந்த மாதிரித் தான் எவனோ வந்து இந்த தேசத்தை சீரழித்து விட்டுப் போவானாம், அவனை ஒன்றுமே செய்யக் கூடாதாம், கட்டுப்படுத்தவோ, நட்டத்தை ஈடு செய்யச் சொல்லிக் கேட்கவோ முடியாதாம்!எல்லாவற்றையும் ஜனங்கள் தலையிலேயே கட்ட முயற்சிக்கிற அயோக்கியத்தனம் அடுத்து, தலைக்குமேல் கத்தி தொங்குவது போல ஒரு சூழலை ஏற்படுத்தி வைத்திருக்கிறது.


மெரிக்காவில், இதே யூனியன் கார்பைட் தனது ஊழியர்கள் நச்சுத் தன்மை கொண்ட வேதியியல் பொருட்களால் பாதிக்கப் பட்டபோது வழங்கிய ஈட்டுத் தொகை இரண்டாயிரத்து இருநூறு கோடி டாலர்கள்!  அங்கே உயிர்ச் சேதமோ, போபாலில் நடந்த மாதிரிப் பேரழிவோ இல்லை.

ந்திய உயிர்கள்  அவ்வளவு கேவலமா? அமெரிக்க உயிரை விட இந்திய உயிர் எந்த விதத்தில் தாழ்ந்து போய்விட்டது?




தற்கான ஒரே பதில், துப்புக் கெட்டவர்களை ஆட்சியில் அமர்த்திய ஒரே குற்றத்திற்காக இந்திய மக்கள் சர்வதேச அரங்கில் கேவலப் படுத்தப்பட்டு வருகிறோம். வெள்ளைத் துரைமாருக்குத் தலை வணங்கும் அடிமைகளுக்கு, நாம் அடிமைகளாக ஆக்கப் பட்டுக் கொண்டிருக்கிறோம்.

விடுதலை நம் கைகளில் மட்டுமே இருக்கிறது! துப்புக் கெட்ட
அரசியல்வாதிகளிடம் நம்முடைய விடுதலையையும் தொலைத்து விட்ட துப்புக் கெட்டவர்களாக ஆகிவிடாமல் பாதுகாத்துக் கொள்வதும் நம்மிடமே இருக்கிறது.

ன்ன சொல்கிறீர்கள்?

ன்ன செய்யப் போகிறீர்கள்?

கொஞ்சம் உரக்கச் சொல்லுங்கள்!






சண்டேன்னா மூணு! செய்திகள்! படங்கள்! கற்றுக்கொள்ளத் தவறிய பாடங்கள்!


பிரிட்டிஷ் பெட்ரோலியம் கம்பனியின் ஆழ்துளைக் கிணற்றில் இருந்து சுத்திகரிக்கப்படாத கச்சா எண்ணெய் ஏப்ரல் இருபதாம்  தேதியில் இருந்து கடலில் கலந்து, மெக்சிகோ வளைகுடா வரை பரவி அமெரிக்கக் கடற்கரை சூழலை மாசுபடுத்தி வருகிறது.மேலே உள்ள படத்திலேயே கச்சா எண்ணெய் கடலில் பரவி இருப்பதை, அங்கங்கே எரிக்கப் படுவதைப் பார்க்கலாம்.


ம்மூர்  செய்தித் தாட்களிலோ , தொலைக் காட்சி நிகழ்ச்சிகளிலோ உலகம் எந்த திசையில் போய்க் கொண்டிருப்பது என்பதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பதிவுகள் எழுதுகிற பெரும் பாலான நண்பர்கள் கூட ராவணன் படத்தில் ரஞ்சிதா வரும் காட்சிகளில் கைதட்டல், விசில் தூள் பரத்துகிறது என்ற அளவில் நின்று விடவே விரும்புகிறார்கள். 

மானாட மயிலாட, மச்சான்ஸ் நமீதா, ரஞ்சிதா, சுகாசினி, நித்தியானந்தாவைத் தாண்டி விஷயங்களைத் தேட விரும்புகிறவர்கள் மட்டும் .இந்தப் படங்களைப் பாருங்கள்!



டலில் மிதக்கும் எண்ணெயை சுத்தப் படுத்துவது என்பது, கட்டுப் படுத்தக் கூடிய விதத்தில் கடலிலேயே எரிப்பது தான்! இயற்கை வளங்களை அளவுக்கு மீறிச் சுரண்டும்போதும், அலட்சியமாகக் கையாளும்போதும் ஒரு தீமையை, இன்னொரு தீமையால் சமாளிப்பது என்பதைத் தவிர நவீன தொழில்நுட்பம் வேறு வழியைச் சொல்வதில்லை. 


ல்லாமே காசுக்குத் தான் என்கிற போது, சேதத்தைக் கட்டுப் படுத்துவதை விட ஆகிற  செலவு தான் இந்த மாதிரிக் கொழுப்பெடுத்த நிறுவனங்களுக்கு முதலில் கண்ணுக்குத் தெரிகிறது.


மேற்கத்திய நாடுகளில் ஒரு நல்ல அம்சம், தங்களுடைய நாடோ, மக்களோ இது மாதிரியான தீமைகளில் சிக்கிக் கொண்டுவிடக் கூடாது என்ற முன் எச்சரிக்கையோடு  இருப்பது! 

தன் இன்னொரு இருண்ட பக்கமாக, அவர்களைப் பிடித்த சனியனை, இந்தியா மாதிரி துப்புக் கேட்ட அரசியல்வாதிகள் ஆளுகிற நாட்டின் மீதோ, வேறு ஏதாவதொரு ஏழை நாட்டின் தலையிலோ கட்டி விடுவதும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

ங்கே கூட, ரிபப்ளிகன் கட்சியைச் சேர்ந்த பல செனெட் உறுப்பினர்கள் ஒபாமா இப்படி சட்டம் வழக்கு எதுவுமில்லாமல் கையை முறுக்கி நஷ்ட ஈடு கொடுக்க வைத்ததைக் குறை கூறி, பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்திடம் மன்னிப்புக் கோரிய  வேடிக்கை நடந்திருக்கிறது. முந்தைய அதிபரும் ரிபப்ளிக் கட்சியைச் சேர்ந்தவருமாகிய புஷ் குடும்பத்திற்கு பெட்ரோல் வணிகம் உண்டு என்பதும், ஈராக் மீது படையெடுத்தது கூட தங்களுடைய வணிக நலன்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தான் என்ற செய்தியை அறிந்தவர்கள், இந்த பெட்ரோ-டாலர்கள் உலக அரசியலில் ஏற்படுத்திவரும் பொருளாதாரச்சிக்கல்களைப் பற்றியும் தெரிந்து வைத்திருக்கலாம். 

ப்பட்டமான கார்பரேட் முதலாளித்துவ அமெரிக்காவில் அப்படி நடப்பது சரி!

யூனியன் கார்பைட் செய்த கொலைபாதகத்தில் இருந்து தப்புவதற்கு, காங்கிரசில் யார் யாரெல்லாம் உடந்தையாக இருந்தார்கள் என்பதைப் பட்டியல் இடுவதை விட, யார் யார் உடந்தையாகவும் ஒத்து ஊதவும் இல்லை என்பதைப் பட்டியல் இடுவது எளிது என்று சொல்கிற இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் நாளிதழின் கட்டுரையைப் படிக்க இங்கே .

ன நாயக சோஷலிசம் பேசிக் கொண்டு ஜன நாயகக் காவலர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் காங்கிரஸ் கட்சியுமே கூட, அப்படி ஒரு வெட்கம் கெட்ட நிலையைக் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக அரங்கேற்றி வருவது அம்பலமான பிறகும் கூட, அழுகிய புண்ணுக்குப் புனுகு பூசுவதைப் போலத் தான் இன்னமும் நடந்து கொள்கிறதே ஏன்?

ராஜீவ் காந்திஆண்டர்சன் விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருந்தாரா, முடிவெடுப்பதில் தவறு செய்தாரா இல்லையா என்பது உண்மையான பிரச்சினையே அல்ல! ஏதோ ஒரு சூழ்நிலையில், ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருந்தால் கூட, தவறில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு இருந்தால், மக்களுடைய பிரச்சினையில் அதற்கு அப்புறமாவது அக்கறை எடுத்துக் கொண்டு செயல் பட்டிருந்தால், மன்னித்து ஏற்றுக் கொண்டிருக்கலாம்.  

னால், செத்துப் போன நரசிம்ம ராவ் மீது பழியைத் திருப்புகிறார்கள். அர்ஜுன் சிங் தான் தவறு செய்தார் என்று மறைமுகமாகத் தங்கள் கை என்னவோ கரை படியாதது போலக் காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார்கள். இத்தனைக்கும் பிறகு கூட பாதிக்கப் பட்ட சொந்த ஜனங்களுக்கு நீதி கிடைப்பதில், நிவாரணம் வழங்குவதில் உண்மையான அக்கறை காட்ட மாட்டேன் என்கிறார்கள்.

மெரிக்காவின்  கையை முறுக்குகிற தந்திரத்தில் செய்து கொள்ளப் பட்ட அணு ஒப்பந்தம், அதைத் தொடர்ந்து அமெரிக்க கார்பரேட்டுகளுக்கு மட்டுமே சாதகமான அணு உலை விபத்துக்கான நஷ்ட ஈடு வரையறை செய்யும் சட்ட முன்வரைவை  நிறைவேற்றிக் கொள்வதற்காக மட்டுமே, நாளை திங்கள் கிழமை அமைச்சரவைக் குழு, போனால் போகிறதென்று போபால் மக்களுக்கு நிவாரணத் தொகையை இன்னும் கொஞ்சம் கூட்டி கொடுப்பதான முடிவை அறிவிப்பார்கள்.

காங்கிரசிடம் தொடர்ந்து ஏமாறுகிற ஏமாளிகளாகவே இருந்து விடப் போகிறோமா?

காங்கிரஸ் தான் என்னவோ இந்த தேச மக்களுக்கு  ஏதோ பெட்டிக் கடையில் மிட்டாய் வாங்கிக் கொடுக்கிற மாதிரி சுதந்திரத்தையும் வாங்கிக் கொடுத்ததாகக் கதைத்துக் கொண்டே,இந்த தேசத்தின் இறையாண்மையையும், இந்த மக்களின் எதிர்காலத்தையும் கொள்ளை லாபம் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட கார்பரேட் பிணம் தின்னிக் கழுகுகளிடம், மண்டியிட்டு கைமாற்றிவிடப் போகிற அவலத்தையும் சகித்துக் கொள்ளப் போகிறோமா?  

போபால் தந்த பாடத்தில் இருந்து எதையும் கற்றுக் கொள்ளத் தெரியாத காங்கிரஸ் மாதிரியே, நாமும் இருந்து விடப் போகிறோமா?

ன்ன செய்யப் போகிறோம்? 

கொஞ்சம் உரக்கச் சொல்லுங்களேன்! 

 


ஒளி பிறந்தபோது மண்ணில் உயிர்கள் பிறந்ததம்மா....!



ண்டை நாடான மியான்மர் ராணுவ ஆட்சியின் சிறைக் கதவுகளுக்குப் பின்னால், ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடும் ஆங் சான் சூ குயி இன்றைக்கு அறுபத்தைந்தாவது பிறந்த நாளைக் காண்கிறார். செய்தி, மேல் விவரங்கள் இங்கே


ர்வதேச அளவில், ஒரு ஆயத்தமாக, ஆங் சான் சூ குயிக்கு ஆதரவாக பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆதரவுக் குரல் எழுவதை வீடியோவில் பாருங்கள்! 

ண்டைநாடுகள் அத்தனையும் ஒரு ரவுடிக் கும்பலாக இருக்கிற பெருமை, அவஸ்தை இந்தியாவுக்கு மட்டுமே உண்டு! வெளியில் இருந்து வருகிற ஆபத்துக்கள், அச்சுறுத்தல்கள் போதாதென்று, ஆளுகிற, எதிர்க்கிற அத்தனை அரசியல் கட்சிகளும் பெரும் தொற்றுநோயாக இருப்பதும் இங்கே இந்தத் திருநாட்டில் தான்!


தினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆங் சான்  சூ குயி வீட்டுச் சிறையில் வைக்கப் பட்டிருக்கிறார். அவருடைய ஆதரவாளர்களை, உரிமை கேட்டுப் போராடுபவர்களை பர்மிய ராணுவ அரசு படிப்படியாகக் களைஎடுத்து வந்தபோதிலும், உலகெங்கும் ஆதரவு பெருகிக் கொண்டே வருகிறது.வெளியில் இருந்து எழும் நிர்பந்தத்திற்கு செவி சாய்க்க வேண்டிய கட்டாயம் ராணுவ அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது. 

ந்த வருடக் கடைசிக்குள், ஒரு பொம்மலாட்டத்தை, தேர்தலை நடத்தப் போகிறார்களாம்! அது வெறும் பித்தலாட்டம் தான் என்பதை நேரடியாகவே முகத்தில் அறைகிற மாதிரி சொல்கிற விதத்தில், ஆங் சான்  சூ குயியின் சிறை வாசத்தை நீட்டித்திருக்கிறார்கள், அவரோ, அவருடைய ஆதரவாளர்களோ தேர்தலில் நிற்க முடியாது. ஆங் சான் சூ குயி ஆதரவாளர்களில்  2200 பேர் சிறையில்!



வருடைய கட்சியான என் எல் டியை வலுக்கட்டாயமாகக் கலைத்திருக்கிறார்கள், தடை செய்திருக்கிறார்கள். 

முக்கியமானவர்கள் என்று தெரிந்தவர்களை எல்லாம் சிறைக்குள் தள்ளியிருக்கிறார்கள்.

த்தனைக்குப் பின்னாலும் மியான்மர் மக்களுடைய ஆதரவு ஆங் சான் சூ குயிக்கு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது!


குரூரமான துப்பாக்கி முனைகளையும் தேக்கி வைத்து அமைதியாகப் போராட்டத்தைக் கையில் எடுத்திருக்கும் ஆங் சான்  சூ குயிக்கு இன்றைக்குப் பிறந்த நாள் வாழ்த்து, வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்வோம். 


சுதந்திரம் என்பது எவரோ வாங்கி எவருக்கோ கொடுப்பது அல்ல. நம்முடைய சுதந்திரத்தைப் பாதுகாத்துக்  கொள்வது நம்முடைய கைகளில் தான் இருக்கிறதென்பதை நமக்கே நினைவு படுத்திக் கொள்ள இது உதவும்.

ங்கே போய்க் கொண்டிருக்கிறோம்? 

ன்ன செய்து கொண்டிருக்கிறோம்? 
ன்னவாகப் போகிறோம்?




யார் குற்றவாளி? கண்டுபிடியுங்களேன் பார்க்கலாம்!

யார் குற்றவாளி?

தினமணி தலையங்கத்தின் கேள்வி! சரியான விடை, கயவர்களைத் தேர்ந்தெடுத்த நாம் தான்!
 

போபால் விஷவாயு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு நிவாரணம் கிடைக்க உளப்பூர்வமாக எந்த நடவடிக்கையும் மத்திய அரசால் எடுக்கப் படவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரிகிறது.

சுமார் 23,000 பேரின் மரணத்துக்குக் காரணமாக இருந்த சம்பவத்தில் அந்நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கையை எடுக்காமல் மெத்தனமாக இருந்தது என்பதும், குறைந்தபட்ச  இழப்பீட்டைத்தான் அரசு பெற்றுத்தந்தது என்பதும்தான் இதுவரையிலும் விவாதமாக இருந்து வந்தது. ஆனால் இப்போதுதான் அம்பலமாகியிருக்கிறது, குதிரை குப்புறத் தள்ளியதோடு குழியும் பறித்த கதை. 

 
வாரன் ஆன்டர்சனை போபாலிலிருந்து தனி விமானத்தில் தில்லிக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து அமெரிக்காவுக்குத் தப்பவிட்டனர் என்ற உண்மை இப்போது வெளியுலகுக்குத் தெரிந்த பிறகு, அதற்குக் காரணமே அப்போதைய மத்தியப் பிரதேச முதலமைச்சர் அர்ஜுன் சிங்தான் என்று கூசாமல் பழிகூறி பொறுப்பைத் தட்டிக்கழிக்கிறது காங்கிரஸ். ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளும் இந்தப் பதிலை கேட்டுக்கொண்டு சும்மா இருக்கின்றன.

அப்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்திக்கு இதில் என்ன பங்கு என்று யாரும் கேள்வி எழுப்புவதற்கு முன்னதாகவே ""ராஜீவ் காந்தி குற்றமற்றவர், அவர் இதில் சம்பந்தப்படவே இல்லை'' என்று மறுக்கிறார் கட்சியின் செய்தித் தொடர்பாளர். ஏன் இந்த அவசரம், எதற்காக இத்தனை பதற்றம்? "எங்க அப்பன் குதிருக்குள் இல்லை' என்று சொல்வதைப்போலத்தான் இதுவும்.

காங்கிரஸ் கட்சியின் முதல்வர் என்ற முறையில், மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்குத் தெரியாமல் அர்ஜுன் சிங் இத்தகைய முடிவை எடுத்திருக்க மாட்டார். ஆனாலும், பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்பது தானே வழக்கம்.
பதில் ஏதும் அளிக்காமல். அர்ஜுன் சிங்கும் சும்மா இருக்கிறார்,  அர்ஜுன் சிங்குக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கும் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி "சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படுமே என்று அஞ்சியே வாரன் ஆன்டர்சன் அனுப்பி வைக்கப்பட்டதாக'வும் அர்ஜுன் சிங் அந்த நோக்கிலேயே செயல் பட்டதாகவும் கூறி அவரையும் காப்பாற்ற முயற்சி செய்திருக்கிறார். இது  இந்திய அரசின் நிர்வாக லட்சணம் எப்படி இருக்கிறது என்பதையே பறைசாற்றுகிறது.
 

யூனியன் கார்பைடு நிறுவனப் பங்குகளை "டவ் ' நிறுவனத்துக்கு விற்பனை செய்தபோது, கார்பைடு நிறுவனத்தின் இழப்பீடுகளில் "டவ் ' நிறுவனத்தைத் தொடர்புபடுத்த மாட்டோம் என்று அப்போதைய காங்கிரஸ் அரசு உறுதி அளித்ததாக சில தினங்களுக்கு முன்பு ஒரு புகார் எழுந்தது. இந்தப் புகாரும் நிரூபிக்கப்படுமேயானால், அதைவிட மோசமான விவகாரம் எதுவும் இருக்க முடியாது.

25 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கை நடத்தி, முதல் குற்றவாளியான வாரன் ஆன்டர்சன் பற்றி ஒரு வார்த்தைகூடச் சொல்லாமலேயே தீர்ப்பு வழங்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதன் காரணமாக, இது குறித்து 10 நாள்களுக்குள் அறிக்கை அளிக்கும்படி அமைச்சர் குழுவை பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார். இதெல்லாம், கொதித்துப்போய்க் கிடக்கும் மக்கள் மனதை சற்று குளிர வைக்க மட்டுமே. இதனால் ஏதோ புதிதாக ஒரு குற்றப்பத்திரிகை தயாரித்து, தண்டனை பெற்றுவிடுவார்கள் என்று நம்புவதற்கில்லை.

ஏனென்றால் யூனியன் கார்பைடு நிறுவனத்துக்கு போபால் விஷ வாயு விபத்து வழக்கில் சட்ட ஆலோசனை அளித்த அபிஷேக் மனு சிங்வி, அதில் என்ன தவறு என்று கேட்டுக்கொண்டே காங்கிரஸ் கட்சியின் பத்திரிகைத் தொடர்பாளராக இருக்கும்போது நாம்தான் மத்திய அரசைப் புரிந்து நடக்க வேண்டும்.  இனியும் இந்த தேசத்தை இவர்கள்தான் காப்பாற்றப் போகிறார்கள் என்று நினைத்தால் அது அவர்களின் தவறு அல்ல.
 

நிலம், நீர், காற்று என்று அனைத்தையும் பாழாக்கும் தோல் பதனிடும் ஆலைகளும் சாயப்பட்டறைகளும் ரசாயன உர ஆலைகளும் நிறுவப்பட உகந்த இடம் இந்தியாதான் என்று மேற்கத்திய நாடுகள் எப்போதோ தீர்மானித்துவிட்டன. அன்னியச் செலாவணி கிடைக்கிறது, வேலைவாய்ப்பு பெருகுகிறது என்று புளகாங்கிதம் அடைந்து நம்முடைய அரசியல் தலைவர்கள் அவற்றுக்கு நடைபாவாடை விரிக்கின்றனர் என்று நம்மை நம்ப வைக்கிறார்கள் என்றாலும், அரசியல்வாதிகளுக்கு மட்டுமே இதில் லாபம், கமிஷன் எல்லாமும் என்பது நாம் சொல்லாமலேயே விளங்கும்.
 

மேற்கத்திய நாடுகள் இந்தியாவைத் தங்களுடைய குப்பைத் தொட்டியாகவே நினைப்பதை அவ்வப்போது அமெரிக்காவிலிருந்தும் ஐரோப்பாவிலிருந்தும் நகரக் கழிவுகளையும் சுத்திகரிக்கப்படாத மருத்துவமனைக் கழிவுகளையும் கன்டெய்னர்களில் ஏற்றிவரும் வெளிநாட்டுக் கப்பல்கள் உறுதிப்படுத்தி வருகின்றன.

அமெரிக்காவில் ஒரு சாதாரணமான சத்துமாவை, ஊட்டச்சத்து மாவு என்று விற்பனை செய்ய வேண்டும் என்றால் அந்த நாட்டின் உணவுத் துறையின் கடுமையான நிபந்தனைகளுக்கு உட்பட்டாக வேண்டும். அமெரிக்காவுக்கு ஒரு உணவுப் பொருள் அல்லது மருந்தை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றால், இந்தியாவில் உள்ள அந்த ஏற்றுமதி நிறுவனம், சீரிய தயாரிப்பு முறைகளை (குட் மானுபேக்சரிங் புராஸஸ்) அமெரிக்கா நிபந்தனைகளுக்கு ஏற்ப கொண்டிருக்க வேண்டும்.  


ஆனால் அமெரிக்கர்கள் இந்தியாவில் தொழில் செய்ய வேண்டும் என்றால் இந்தியச் சட்டம் அவர்களைக் கட்டுப்படுத்தாது. இதுதான் யதார்த்த நிலைமை.

விஷவாயு கசிவு நேர்ந்தபோது, ஆன்டர்சன் போபாலில் இருந்திருந்தால், விஷவாயு இந்தியர்களை மட்டுமே கொன்றிருக்குமா, இல்லை, அவரைக் கட்டுப்படுத்தவோ, அவருக்குப் பாதிப்பு ஏற்படுத்தவோ தனக்கு அதிகாரம் இல்லை என்று சும்மா கடந்துபோயிருக்குமா?


oooOooo 

தங்களால் ஒன்றும் செய்ய முடியாது , எதையும் கட்டுப் படுத்தவோ, சரியான முறையில் நிர்வகிக்கவோ முடியாது என்பதைத் தெரிந்து வைத்துக் கொண்டே இன்னொரு பேரழிவுக்கு இந்த நாட்டை அணு உலை விபத்து நட்ட ஈடு  வரையறை செய்யும் சட்ட முன்வரைவு என்று தைரியமாக, அடிப்படை நாணயமோ, நேர்மையோ, குறைந்தபட்சம் முதுகெலும்போ இல்லாத காங்கிரஸ் கட்சி அரசு, ஐ மு கூட்டணிக் குழப்பமாக முயல்கிறது என்றால்............

அதற்கு முதல் காரணம், இந்தக் கையாலாகாதவர்களைத் தேர்ந்தெடுத்த நாம் தான் முதல் குற்றவாளி!

தவறைத் திருத்திக் கொள்ளக் கொஞ்சமாவது முயற்சிக்கப் போகிறோமா?

நீங்கள் தான் சொல்ல வேண்டும்! உங்களுக்குத் தெரிந்த அத்தனை பேரிடமும்! அழுத்தமாக!

கார்டூன்கள், தலையங்கத்திற்கு தினமணி நாளிதழுக்கு நன்றியுடன்!



சண்டேன்னா மூணு! சிவப்புச் சேலையைக் கண்டு மிரளும் காங்கிரஸ்!அப்புறம்....!




ஐ மு கூட்டணிக் கூட்டணிக் குழப்பங்களில், சாதனையாக எது இருந்ததோ இல்லையோ, கூட்டணிக் குழப்பத்தின் மெஜாரிட்டி பார்ட்னர் காங்கிரஸ் கட்சியை எவர் விரட்டுகிறார்கள், எப்படி மிரட்டுகிறார்கள் என்பதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போவதை நிச்சயமாகத் தொட்டுச் சொல்லலாம்! டம்மிப் பீஸ் பிரதமர் மன்மோகன் சிங் தன்னுடைய ஆட்சியின் சாதனைப் பட்டியலில் இதையும் சேர்த்துச் சொல்லாவிட்டாலும், அத்தனை பேருக்கும் தெரிந்த ரகசியமாகத் தான் இது இருக்கிறது!

காங்கிரசை இப்போது ஒரு சிவப்புச் சேலையும் சேர்ந்து மிரட்டிக் கொண்டிருக்கிறது!

சிவப்புச் சேலை என்றதும் மம்தா, அல்லது கம்யூனிஸ்ட் கட்சியின் வீரம் மிகுந்த பெண் என்று தப்புக் கணக்குப் போட்டு விடாதீர்கள்! 


இந்த சிவப்புச் சேலை ஒரு புத்தகம்! சிவப்புச் சேலை:வாழ்க்கையே அதிகாரத்தின் விலை ( The Red Saree: When Life is The Price of Power)!

ஐ மு கூட்டணிக் குழப்பத்திற்குத் தலை தாங்குகிற சோனியா காந்தியின் கதையை ஜேவியர் மோரோ என்ற ஸ்பானிஷ் எழுத்தாளர், ஸ்பானிஷ் மொழியில் எழுதி இரண்டு லட்சம் பிரதிகளுக்கும் மேல் விற்றுத் தீர்ந்த பிறகு, அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியாகத் தயாராக இருப்பது காங்கிரசின் ஒப்பற்ற தலைவிக்கு தர்ம சங்கடத்தைத் தோற்றுவித்திருக்கிறது.  ஏற்கெனெவே இந்தப் புத்தகம்  பிஞ்சு, இத்தாலிய, போர்த்துகீசிய மொழிகளிலும், பிரேசிலியன், கடலா மற்றும் டச்சு மொழிகளிலும் வெளியாகி விட்டதைப் புத்தக ஆசிரியரின் வலைப்பக்கங்களில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. 


புத்தகத்தின் முகப்பிலேயே " dialogues, conversations and situations found therein are the product of the author's own interpretation and do not necessarily reflect authenticity." உரையாடல்கள், சம்பவங்கள் எல்லாம் ஆசிரியர் புரிந்துகொண்ட விதத்தில் இருந்து உருவாக்கப் பட்டவை; அப்படியே அச்சு அசலாக நடந்ததாகச் சொல்லவில்லை என்று சொல்லி விட்டு இந்த அறுநூறு ப்ளஸ் பக்கங்களைக் கொண்ட புத்தகத்தில், மோதிலால் நேரு, ஜவஹர், ராஜீவ், சோனியா என்று மேற்கத்திய வாசகர்கள் புரிந்துகொள்வதற்கு வசதியாக நடப்பைத் தொகுத்திருப்பதாக ஆசிரியர் சொன்னதை, காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்ளவில்லை. சோனியாவின் புகழுக்குக் களங்கம் விளைவித்திருப்பதாக வழக்கறிஞர் நோடீஸ் அனுப்பப் பட்டிருக்கிருக்கிறது.

நோடீசை அனுப்பியிருப்பவர், காங்கிரஸ் கட்சியின் பேச்சாளரும் வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வி! இந்தப் புள்ளி காங்கிரஸ் கட்சிப் பேச்சாளர் மட்டுமல்ல  யூனியன் கார்பைடின் புதிய முக மூடியான டவ் கெமிகல்சின் வழக்கறிஞரும் கூட!  யூனியன் கார்பைடுக்கு வக்காலத்து வாங்குகிற காங்கிரசின் கோர முகங்களில் ஒருவர்.

காங்கிரஸ் கட்சி சிவப்புச் சேலையைக் கண்டு மிரள்கிற மாடு மாதிரி மிரளும்படிக்குப்  புத்தகத்தில் அப்படிஎன்னதான் சொல்லி
ருக்கிறாராம்?

1977 இல் இந்திரா காந்தி தேர்தலில் தோற்றவுடன் சோனியா,ராஜீவ் மற்றும் தன்  குழந்தைகளை  அழைத்துக் கொண்டு இத்தாலியில் குடியேற விரும்பினாராம்! அதே மாதிரி, ராஜீவ் காந்தி படுகொலை செய்யப் பட்டவுடன் சோனியாவின் அம்மா போலோ மைனோவும், அக்கா அனுஷ்காவும் சோனியாவைக் குழந்தைகளோடு  இத்தாலியில் அவர்கள் சொந்த கிராமமான ஆர்பசானோவுக்கே குடிபெயர்ந்துவிடுமாறு வலியுறுத்தியதும் சொல்லப் பட்டிருக்கிறதாம்.

நேருவின் வீரப்பரம்பரை  வரலாற்றுக் கற்பிதத்துக்கு இப்படிச் சொல்லியிருப்பது, களங்கம் விளைவித்து விட்டதாம்! வீரத்தாய் இந்திரா பெற்ற வீரத் திருமகன் ராஜீவைத்  திருமணம் செய்து கொண்டதாலேயே வீராங்கனை ஆகிப் போன சோனியாவின் புகழுக்கு இந்தப் புத்தகம் குற்றம் கண்டுபிடித்துச் சொன்னதால், இதன் ஆங்கில மொழிபெயர்ப்புக்குத் தடை விதிக்க வேண்டுமாம்! மற்ற மொழிகளில் ஏற்கெனவே வெளிவந்த பதிப்புக்களுக்கு....?

அதைப் பற்றி எல்லாம் கவலை இல்லை! ஓட்டை இருப்பது இந்தியாவுக்குள் மட்டும் தெரியக் கூடாது! அம்புட்டுத்தேன்!

ஜேவியர் மோரோ நன்றாகத் தான் எதிர்க் கேள்வி கேட்டிருக்கிறார்! தன்னுடைய புத்தகத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கூக்குரல் எழுப்புகிறவர்களிடம் அவர் முன்வைக்கும் கேள்வி இது தான்!

"ஏற்கெனெவே வெளியான புத்தகங்களில் இருப்பதைத் தான் நானும் சொல்லியிருக்கிறேன். பரம்பரை என்ற புத்தகத்தில் ஜாட் ஆடம்ஸ் சொல்லியிருப்பது, பப்புல் ஜெயகர் எழுதிய இந்திரா காந்தி: அணுக்கமான சரிதையில் சொன்னது, அப்புறம் கேதரைன் பிராங்க்ஸ் எழுதிய இந்திரா நேரு காந்தியின் வாழ்க்கை இவைகளில் சொல்லி
ருப்பதன் அடிப்படையில் தான் நானும் சொல்லி ருக்கிறேன். அந்தப் புத்தகங்களுக்கு எதிராக எவரும் எதுவும் பேசவில்லையே!"

சாதாரண  சர்டிபிகேட் கோர்ஸ் படித்ததையே பெரிய பட்டப் படிப்புப் படித்துக் கொண்டிருந்தபோது ராஜீவுடன் காதல் கொண்டதாக இங்கே பில்டப் கொடுத்து சரித்திரம் எழுதிக் கொண்டிருக்கிறவர்களிடம், அம்மா சும்மா ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்த சாதாரணமான மனுஷிதான்..கல்யாணம் பண்ணிக் கொண்டு வீட்டோடு மனைவியாக இருக்க விரும்பிய கதையை எல்லாம் எடுத்து விட்டால் தாங்குவார்களா?

காங்கிரஸ்காரர்கள் அடிக்கும் கூத்துக்களை, ஜேவியர் மோரோ தன் வலைப் பக்கங்களிலேயே சுட்டி கொடுத்துக் காண்பித்திருக்கிறார்! காங்கிரஸ் காமெடியைத் தாங்கிக் கொள்ள முடிகிறவர்கள் போய்ப் படித்துக் கொள்ளுங்கள்!


இன்னும் கொஞ்சம் பொறுமை அவகாசம் இருப்பவர்கள், நம்மூர் சுப்பிரமணியம் சுவாமி தன்னுடைய வலைப் பக்கங்களில் ஜேவியர் மோரோ சொன்னதை விடக் கொஞ்சம் அதிகமாகவே சொல்லிருக்கிறார், அதில்  மூன்று பொய்கள் என்ற பகுதியை  இங்கே பார்க்கலாம்!

******
  
கிட்டத் தட்ட இரண்டு மாதங்களாக, மெக்சிகோ வளைகுடாப் பகுதியில் பிரிட்டிஷ் பெட்ரோலியம் கம்பனியின் எண்ணெய்க் கிணறில் இருந்து சுத்திகரிக்கப்படாத கச்சா எண்ணெய் கடலில் கலந்து சுற்றுச் சூழலை  நாசப் படுத்திக் கொண்டிருக்கிறது. இது வரை பதினொருபேர் இறந்திருப்பதாக, கடல் வாழ் உயிரினங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் நிரம்பச் சேதமாகியிருப்பதாகவும் அதை பிரிட்டிஷ் பெட்ரோலியம் கம்பனி ஈடு செய்தே ஆகவேண்டும் என்று ஒரு வழியாக அமெரிக்க அதிபர் ஒபாமா உரக்கக் குரல் கொடுத்து விட்டார்! நாற்பத்தெட்டு மணி நேரக் கெடு வேறு விதித்தாயிற்று!

அமெரிக்க அதிபர் உரக்கக் குரல் கொடுக்கவில்லை என்று முந்தின வாரம் தான் அமெரிக்காவில் மனக்குறை பெரிதாக எழுந்தது. ரக்கக் கூவுவதால் மட்டுமே பிரச்சினை தீர்ந்து விடுமா என்று அதிபரும் கேட்டுப் பார்த்தார். எடுபடவில்லை. வேறு வழியில்லாமல் குரல் எழுப்பியுமாயிற்று!


சுற்றுச் சூழலுக்கு ஊறு விளைவிக்கும் நிகழ்வுகளுக்குப் பிறகாவது இப்போதிருக்கும் சட்டங்கள் மாற்றியமைக்கப் பட வேண்டும் என்று ஒபாமா பேசியிருக்கிறார். அங்கே அமெரிக்காவுக்கு  ஒன்று என்றால் எப்படிப் பேசுகிறார்கள்? இங்கே போபால் விஷவாயு விபத்து அப்புறம் அணு உலை விபத்து நட்ட ஈடு  மசோதா என்று வரும்போது எப்படிப் பேசுகிறார்கள் என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!

இந்திய அரசின் அமைச்சர்கள் நாட்டு மக்களுக்காகச் செயல்படுவதை விட இந்த மாதிரி பன்னாட்டுக் கொலைகாரர்களுக்குப் பரிந்து பேசுவதில் எவ்வளவு குறியாக இருக்கிறார்கள் என்பதையும் கொஞ்சம் சேர்த்துப் பாருங்கள்!
****** 

அமெரிக்க  ஒபாமா இருக்கட்டும், கண்டனூர்ப் பானா சீனா கிடக்கட்டும்! எவராக இருந்தால் தான் என்ன?

ஒரு சீரழிவு, தவறு என்று வருகிற பொழுது பன்னாட்டு நிறுவனங்கள் அதை எப்படிக் கையாள்கின்றன என்பதைக் கொஞ்சம்
அழுத்தமாக அதே நேரம் வேடிக்கையாகச் சொல்கிற இந்த வீடியோ இரண்டரை நிமிடங்கள் தான்!


உனக்கும் பெப்பே....உங்கப்பனுக்கும் பெப்பே! கொடுக்கிற பெட்டியை வாங்கிக் கொண்டு பேசாமல் போய்ச் சேர் என்கிற மாதிரி இல்லை?!