இன்னும் எத்தனை காலம் தான் ஏமா(ற்)றுவார் இந்த நாட்டிலே...?

தினமணி தலையங்கம் : என்னதான் நடக்கிறது?


"ட்டம் வளைக்கப்படும்போது, ஆட்சியாளர்கள் சமூக விரோதிகளையும், சட்டமீறல்களையும் பாதுகாக்க முற்படும்போது, நீதிமன்றம் வரம்பு மீறி செயல்பட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு விடுகிறது. மக்களால், மக்களின் நலனுக்காகத் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் அரசு, ஆட்சியையும் அதிகாரத்தையும் மக்களின் நல்வாழ்வுக்காகப் பயன்படுத்தாமல், தங்களையும், தங்களைச் சார்ந்தவர்களையும் வளப்படுத்திக் கொள்வதற்காகப் பயன்படுத்த முற்படும்போது, நீதி நிலை தடுமாறி விடாமல் காப்பாற்றுவதற்காக நீதிமன்றம் வரம்பு மீறுவதில் நாம் தவறு காண முடியாது.

டந்த பல ஆண்டுகளாகவே, பல்வேறு பிரச்னைகளில் நீதித் துறை தனது அதிகார வரம்பை மீறி, நிர்வாகத்தின் செயல்பாடுகளைக் கண்காணிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்ட வண்ணம் இருக்கிறது. 1991-ல் உச்ச நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் ஜெயின் ஹவாலா வழக்கில் விசாரணை நடத்தப்பட்ட போது, தில்லி உச்ச நீதிமன்றத்துக்குப் போதுமான ஆவணங்களை மத்திய புலனாய்வுத் துறை அளிக்காமல் வழக்குத் தள்ளுபடி செய்யப்பட வழிகோலியது.

முதல் முதலாக ஒரு வழக்கில், மத்திய புலனாய்வுத் துறை வழக்கு விசாரணை பற்றிய எந்தத் தகவலையும் பிரதமரின் அலுவலகத்துக்குத் தெரிவிக்கக்கூடாது என்றும், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் நேரடிப் பார்வையில் விசாரணை தொடரப்பட வேண்டும் என்றும், தனது வரம்பை மீறி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது


ந்த வழக்கில்தான்.2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு (ஸ்பெக்ட்ரம்) விசாரணையிலும் அதேபோல, மத்திய புலனாய்வுத் துறை முறையாக விசாரணை நடத்தாமல் காலம் கடத்துவதை சகித்துக் கொள்ள முடியாமல், உச்ச நீதிமன்றம் தலையிட்டுத் தனது நேரடி மேற்பார்வையில் விசாரணையைத் தொடர உத்தரவு பிறப்பித்திருக்கிறது. கடந்த அக்டோபர் 2009-ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தும்கூட, மத்திய புலனாய்வுத் துறை தனது கடமையைச் சரிவரச் செய்யாமல் இருக்கும் காரணத்தால் உச்ச நீதிமன்றமே தலையிட்டு விசாரணையை முடுக்கி விட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

தோ இப்போது அடுத்தபடியாக ஹசன் அலிகான் விவகாரம், நமது அரசின் அவலங்களை சந்தி சிரிக்க வைத்திருக்கிறது. தேசத்தை எதிர்நோக்கும் மிகவும் முக்கியமான பிரச்னைகளை மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு எந்த அளவு மெத்தனத்துடனும், அக்கறையே இல்லாமலும் கையாள்கிறது என்பதற்கு இந்த ஹசன் அலிகான் விவகாரம் ஒரு சிறந்த உதாரணம்.கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பிருந்தே, வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்தியர்களின் கறுப்புப் பண விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையாகத் தொடர்கிறது.

தேர்தலின்போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால், உடனடியாக வெளிநாட்டு வங்கிகளுடன் தொடர்பு கொண்டு அங்கே பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை வெளிக்கொணர்வோம் என்று பிரதமரும், நிதியமைச்சரும் பேசிய வீர வசனங்கள் ஏராளம் ஏராளம்.தேர்தல் முடிந்து ஆட்சி அமைத்ததும் ஒரேயடியாக பல்டி அடித்து விட்டார் நிதியமைச்சர்.

ந்தத் தகவல்களை வங்கிகள் தர மறுக்கின்றன என்றும், அப்படியே தந்தாலும் அந்தத் தகவல்கள் வருமான வரி மீறல்களாக இருந்தால் மட்டுமே பயன்படுத்திக் கொள்ளப்பட வேண்டும் என்று அந்த வங்கிகள் நிபந்தனை விதிப்பதாகவும் கூறினார் நிதியமைச்சர். ÷ஏறத்தாழ 72 லட்சம் கோடி ரூபாய், வெளிநாடுகளில் நமது இந்தியர்களின் கறுப்புப் பணம் வங்கிகளில் போடப்பட்டிருப்பதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படிப் போடப்பட்டிருக்கும் பணம் நமது அரசியல்வாதிகளின் "பினாமி' பணம்தான் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதும் இல்லை. அதனால்தானோ என்னவோ, இந்தப் பணத்தை இந்தியாவுக்குத் திரும்பப் பெற்று எடுத்து வரவோ, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ அரசு தயங்குகிறது.

சன் அலிகான், புனேவில் உள்ள குதிரைப் பண்ணை அதிபர். இவர் பெயரில் ஸ்விஸ் வங்கியில் 800 கோடி ரூபாய் இருப்பதற்கான ஆதாரங்கள், 2007-ல் வருமானவரித் துறை இவரது வீட்டை சோதனை போட்டபோது கிடைத்தது. அந்த ஆதாரத்தின் அடிப்படையில் வட்டியு ம் அபராதமும் வரியுமாக ரூ.50,000 கோடி உடனடியாக அடைக்கும்படி வருமானவரித் துறை இவருக்குத் தாக்கீது அனுப்பியது.இவ்வளவு நடந்ததே, இந்தத் தொகையை வசூலிக்கவோ, ஸ்விஸ் வங்கியிலிருந்து அந்தக் கறுப்புப் பணத்தை மீட்கவோ அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்ததா என்றால் இல்லை.

ருவர் பொது நல வழக்குத் தொடர்ந்து பிரச்னை உச்ச நீதிமன்றத்துக்கு வந்தது. நீதிபதிகள், ""இந்த தேசத்தில் என்னதான் நடக்கிறது?'' என்று வாய்விட்டுத் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி, ராணுவத் தளவாடத் தரகர் ஆன்டன் கசோகி உள்ளிட்டவர்களுடன் தொடர்புடைய ஹசன் அலிகானை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து, பின்னணியை விசாரிக்க உத்தரவிட்டனர்.மத்திய அமலாக்கப் பிரிவு, முறையான ஏற்பாடுகளைச் செய்யாமல் பெயருக்குச் சாட்சியங்களை ஜோடித்து ஹசன் அலிகானைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தியபோது, போதிய ஆதாரங்கள் இல்லாததால் மும்பை செஷன்ஸ் நீதிபதி எம்.எல். தஹிலியாணி, ஹசன் அலிகானை விடுதலை செய்து விட்டார்.

ன்னும் 15 நாள்கள் அவர் அமலாக்கப் பிரிவினர் அழைத்தால் விசாரணைக்கு உதவ வேண்டும் என்றும் நீதிமன்றம் ஹசன் அலிகானுக்கு நிபந்தனை விதித்திருக்கிறது.அதற்குப் பிறகு முறையாக வழக்குப் பதிவு செய்யாமல் போனால், ஹசன் அலிகான் வெளிநாடுகளுக்குத் தப்பித்துப் போனால் ஆச்சரியப்பட எதுவுமில்லை. இது நடக்கும் என்று தெரிந்து தானே வழக்கே ஜோடித்தனர் நமது அமலாக்கப் பிரிவினர். இப்படி நடக்க வேண்டும் என்றுதானே ஆசைப்பட்டது அரசு. கைது செய்வதுபோலக் கைது செய்து, தகுந்த ஆதாரங்களைத் தராமல் ஹசன் அலிகானுக்கு விடுதலையும் வாங்கித் தரப்பட்டால், பிரச்னை ஓய்ந்து விடுமா என்ன?

நிதியமைச்சகம் நடத்தி இருக்கும் இந்தக் கபட நாடகத்தின் பின்னணி என்ன?  
ஹசன் அலிகானின் பணம் யாருடையது? இப்படி எத்தனை எத்தனையோ கேள்விகள் எழுகின்றன.÷உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எழுப்பிய நியாயமான கேள்வியைத்தான் நாமும் எழுப்புகிறோம்-

"இந்த தேசத்தில் என்னதான் நடந்து கொண்டிருக்கிறது?''

உச்சநீதிமன்றம் ஹசன் அலியின் ஜாமீனை ரத்து செய்தவுடன், ஹசன் அலி "காணாமல் போய்விட்டதாக" அதிகாரிகள் தெரிவித்ததாக என்டிடீவீ செய்தி சொல்கிறது.
 

கண்முன்னால் நடப்பது தெரிந்தாலும் கூட, வெளிநாட்டுக்காரன் வந்து சொன்னால் தான் நம்புவோம் என்றிருப்பது இந்திய ஜனங்களின் தனித் தன்மை போல இருக்கிறது!இந்திய அரசியலும் கூட, அந்த லட்சணத்தில் தான் இருக்கிறது.

விக்கிலீக்ஸ் என்று, அமெரிக்க தூதரகங்களில் இருந்து அமெரிக்க அரசுக்கு அனுப்பப்பட்ட ரகசியத் தகவல்கள் (கேபிள்கள் என்று சொல்லப் படுகின்றன) கூந்தல் கறுப்பு, குங்குமம் சிவப்பு என்று எவனோ ஒருகவிஞன் ஒரு சினிமாப் படத்துக்குப் பாட்டு எழுதிய பிறகுதான் தெரிய வந்த மாதிரி, இங்கே நடக்கும் கூத்துக்கள் கூட அங்கே இருந்து இறக்குமதியானபிறகுதான் உறைக்க ஆரம்பித்திருக்கிறதாம்!

ஹிந்து நாளிதழ் உபயத்தில் இறக்குமதி செய்யப்படும் இந்த விக்கிலீக்ஸ்... கூந்தல் கறுப்பு! குங்குமம் சிவப்பு ரகசியங்கள் என்னதான் சொல்கிறதாம்?

2008 ஆம் ஆண்டில் நம்பிக்கையில்லாத்தீர்மானத்தை எதிர்கொள்வதற்காக, சுயேச்சை மற்றும் சிறிய கட்சிகளின் எம்பிக்களைக் காங்கிரஸ் அரசு விலைகொடுத்து வாங்கியதாம்!

கண்டனூர் பானாசீனாவின் மகன் மற்றும் மதுரை இளவரசர் அழகிரி தேர்தலில் ஓட்டுக்குப் பணம் கொடுத்தார்களாம்!

அப்சல் குருவைத்தூக்கில் இட்டால் முஸ்லிம் ஓட்டுக்களை இழந்துவிடுவோமென்று காங்கிரஸ் அரசு அஞ்சுகிறதாம்!

26/11 மும்பை நகரில் தீவீரவாதிகள் நடத்திய தாக்குதல்களின் போது, தகவல்களைப் பரிமாறிக் கொள்வதில் தவிர்க்க முயன்று அப்புறம் மாறியதாம்!

எம்கே நாராயணனை அமெரிக்க தூதர் சந்தித்தபிறகு, பாகிஸ்தான் விவகாரத்தில் (என்ன முடிவெடுப்பதென்பதில்) பிரதமர் மன்மோகன் சிங் தனிமைப்படுத்தப்பட்டிருந்தது தெரிய வந்ததாம்!

2006 இல் கேபினெட் மாற்றம் செய்யப்பட்டபிறகு, மத்திய அமைச்சரவை அமெரிக்கச் சார்புடன் இருந்ததாம்!

ஐமு கூட்டணிக் குழப்பம், மேற்காசிய விவகாரங்களில் முஸ்லிம்களைத் திருப்தி செய்யும் நோக்கத்துடனேயே கொள்கைகளை வகுத்ததாம்!

காங்கிரஸ் தலைமை, ஹிந்தி பெல்ட் என்றழைக்கப்படுகிற பகுதகளில் ஜனங்களோடு சேர்ந்து செயல்படத் தயங்குகிறதாம்!

3 comments:

  1. கொஞ்சமேனும் " சொரணை " ஜனங்களுக்கும் வேண்டாமா??
    தமிழ் நாடு மட்டுமின்றி ஒட்டு மொத்த இந்தியாவும் இந்த பாழாய் போன டி. வி. / மேனமினுக்கி அரிதாரம் பூசிய சினிமா கூத்தாடிகளின் முன்னாள் பல்லிளித்து மெய்மறந்து கிடக்கும் பொது?

    ReplyDelete
  2. தங்களின் எதிர்பார்ப்பு படியே அணு உலைகளின் அவலம் பற்றி " மூன்று முகங்கள் " என்ற தலைப்பில் நான்கு பதிவிகளை போட்டு தள்ளிவிட்டேன். தாங்கள் முதலில் வந்து பின்னூட்டம் மிட்டது எனக்கு அதனை பற்றி மேலும் எழுதவேண்டும் என்ற வேகத்தை அளித்தது. தங்களின் தூண்டுகோளுக்கு மிக்க நன்றி. ஒரே மூச்சில் அவைகளை எழுதியதில் "மண்டை காய்ந்து' போனாலும் இருதியியில் ஒரு நிம்மதி வந்தது பாருங்கள்! தங்களின் ஆதரவிற்கும் அன்புக்கும் நன்றி!

    ReplyDelete
  3. ரீடரில் அத்தனை பதிவுகளையும் படித்துவிடுகிறேன், மாணிக்கம்! தமிழில் இந்த மாதிரி முயற்சிகள் நிறைய வர வேண்டும். விழிப்புணர்வுக்காக மட்டுமில்லை, விஞ்ஞானத்தையும் தமிழில் பேசும் பதிவுகள் வளரவேண்டும்.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!