ஒரு புதன் கிழமை! #பழ.கருப்பையா #தராசுஷ்யாம் #பொதுத்துறை

பழ.கருப்பையா பழைய காங்கிரஸ்காரர். அங்கிருந்து  அதிமுகவுக்குப் போனார், அங்கிருந்தும் வெளியேறி திமுகவை ஆதரிக்க ஆரம்பித்தார். அப்புறம் அதையும் மாற்றிக் கொண்டார். பல இடங்களுக்கு மாறினாலும், காமராஜர் இருந்த ஸ்தாபன காங்கிரஸ் ஞாபகம் அவ்வப்போது வந்து விடுவதைத் தவிர்க்க முடியாமல் கொஞ்சம் நியாயமாகவும் பேசி விடுகிறார் என்பது செட்டியாருடைய தனிப்பட்ட சோகம்.


இந்த 19 நிமிட வீடியோவை இன்றுதான் பார்த்தேன். ஏதோ ஒரு புதுக்கட்சியின் கூட்டத்தில் பேசுகிறார், ஆனால் எங்கே, எப்போது, பேசிய மொத்தமும் இவ்வளவு தானா என்ற விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. காமராஜர் அந்தநாட்களில் சொன்னதுதான்! திமுகவும் அதிமுகவும் ஒரே குட்டையில்  ஊறிய மட்டைகள்! அதையே இன்றைய அரசியல் சூழலோடு பொருத்தி, திமுக, அதிமுகவை நிராகரிப்போம் என்று சொல்வதும், அதிமுக, திமுகவை நிராகரிப்போம் என்று சொல்வதும் எத்தனை போலித்தனமானது என்று பழ.கருப்பையா  எழுப்புகிற கேள்வி நம்மை யோசிக்க வைக்கிறதா? இந்தக்கேள்விக்கு  நண்பர்கள்தான் கொஞ்சம் யோசித்துப் பதில் சொல்ல வேண்டும். 


தராசு ஷ்யாம்! இன்றைய தலைமுறைக்கு, அவ்வப்போது தமிழ் ஊடகங்களில் அரசியல் கருத்துக்களை சொல்கிற நபராக மட்டும் தான் தெரிந்திருக்கும்! Investigative  Journalism என்பதைத் தமிழில் மிகவும் கெட்ட வார்த்தையாக்கியவர். தராசு என்ற வார இதழின் ஆசிரியராக இருந்து, செய்திகளை வைத்தே  காசு பறிக்கும் வித்தையின் முன்னோடி. நக்கீரன் கோபால் இவருடைய தராசில் இருந்து உருவானவர்தான் என்பது நிறையப்பேருக்குத் தெரியுமோ தெரியாதோ? இந்த 6 நிமிட வீடியோவில் கேள்வியே சசிகலா வருவதால் அதிமுகவில் பிளவு, பின்னடைவு வருமா என்பதுதான். புலனாய்வுப் பத்திரிகையாளர் தெளிவாக எதையாவது சொன்னாரா என்பதைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள்! தேர்தல்களம் சூடாகும்போது இவர்போல இன்னும் நூறுபேர் கிளம்பி ஊடகங்களில் நம்மைக் குழப்புவதற்காகவே வருவார்கள் என்று எச்சரிக்கை செய்வதற்காகத்தான் ஒரு சின்ன சாம்பிள்.

பொதுத் துறை நிறுவனங்கள் ஒன்றிரண்டை தவிர மற்றவை...மக்கள் வரிப்பணத்தை ஏராளமாக விழுங்கிக் கொண்டும், ஏராளமான அசையா சொத்துகளைக் கொண்டிருந்தும்...நஷ்டத்தில் இயங்குகின்றன என்பது தான் கள எதார்த்தம்.
இவை ஏன் தொடர்ந்து நஷ்டத்திலேயே இயங்குகின்றன?
''நஷ்டத்தில் இயங்கும்'' பொதுத்துறை நிறுவனங்கள் பொதுமக்களுக்கான சேவையில் துரிதமாக/ வேகமாக இயங்குகின்றனவா என்றால் இல்லை.
பொதுமக்களுக்கான சேவையில் இழுத்தடிப்புகள்,தாமதங்கள் இன்றி..குறிப்பிட்ட காலவரையறைக்குள் சேவையை அளிக்கின்றனவா என்றால் இல்லை.
பணியாளர்களையும் ஓரளவிற்கு மேல் கேள்வி கேட்கவோ...பணியில் சிறப்பாக முனைப்புடன் பணியாற்றுமாறு வலியுறுத்தவோ முடியாது. யூனியன்,போராட்டம் என்று பிரச்சினைகள் திசை மாற்றப்பட்டுவிடும்.
உயர்மட்ட நிர்வாக அதிகாரிகளோ...இன்ன பிற நியமனங்களோ .. அரசியல் அழுத்தமின்றி நடப்பதில்லை. அரசியலுக்கான தளமாக இருக்கிறது என்பதைத்தவிர மக்கள் பெறும் பயன் என்ன ?
அனைத்திற்கும் மேலாக....பொதுத்துறை நிறுவனங்களில்.. ஊழலின் சதவிகிதம் என்ன ??????????????
மக்களுக்கும் சிறப்பாக பணியாற்றாமல், அரசுக்கும் நஷ்டத்தை ஏற்படுத்திக் கொண்டு, மக்கள் வரிப்பணத்தையும் ஏராளமாய் விழுங்கிக் கொண்டு இருக்கும் ..''நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை விற்பதில் என்ன தவறு ? என்பதே பொதுமக்களின் எண்ணமாக உள்ளது.
தனியார் ஏற்படுத்தும் போட்டியில்...மக்களுக்கு.. 'குறைந்த விலையில் சேவைகளை பெறுவது' என்கிற பயன் கிடைக்கிறது...என்பது களம் உணர்த்தும் எதார்த்தம். மக்கள் உணரும் எதார்த்தம்.
இன்னொரு கோணத்தில்..
பணிப்பாதுகாப்பு, நஷ்டத்தில் இயங்கினாலும் இயற்கை & செயற்கை பேரிடர் காலங்களில் ..துரிதமான , இலவசமான சேவைக்கு அரசுக்கு பயன்படுவது பொதுத்துறை என்பதும் கள எதார்த்தம்.
இருப்பினும்...மக்களிடம் ஆதரவில்லை. ஏன் ?
அடிப்படையில்...அரசியல் நுழைந்து... யூனியன், போராட்டம், அரசுக்கு நெருக்கடி தருவது, ஊழல்... போன்ற சுயநல அரசியல் செயல்பாடுகளால் வீணாகிப் போய் ....பொதுமக்கள் ஆதரவை இழந்து நிற்கின்றன பொதுத்துறை நிறுவனங்கள் என்பதே உண்மை. ஜனநாயக நாட்டு மக்களின் அடிப்படையான இக் கேள்விகளுக்கு பதிலளிக்காமல்...வெறுமனே தனியார் மயம் கூடாது என்கிற அரசியல் கோஷங்கள் ...வேடிக்கையானவை. தனியார் மயத்தை எதிர்த்து கோஷமிடுவது... ஆகப்பெரும் முதலாளிகளாக / தொழிலதிபர்களாக இருக்கும் 'அரசியல்வாதிகள்' என்பது இன்னுமொரு வேடிக்கை.      
   
பொதுத்துறை இங்கே யாருக்காக? பொதுத்துறை பற்றி இந்தப்பக்கங்களில் நிறையப்பேசி இருக்கிறோம். அதை மீண்டும் நினைவுபடுத்தி ......

மீண்டும் சந்திப்போம்.

2 comments:

  1. 1. பொதுத்துறை என்பதே மக்களுக்காக இயங்குவதாகத் தெரியவில்லை. வேலை வாய்ப்பு பென்ஷன், வேலை செய்யாத சம்பளம் போன்றவைகளுக்குத்தான் இயங்குகிறது.

    2. சசிகலா வளர வாய்ப்பு இருக்கிறது. அது பெரிய விஷயமில்லை. இன்னொரு புறத்தில் லட்சத்து 75 ஆயிரம் கோடி ஊழல் இருக்கும்போது, ஊழல் என்பது தேர்தலில் எடுபடாது என்று நினைக்கிறேன்.

    3. பழ.கருப்பையா நன்றாகப் பேசுவார்...ஆனால் அத்தனையும் விழலுக்கு இரைத்த நீர். ஒரு கட்சியில் காலம் தள்ளி தன் பேச்சு வன்மையால் நல்லா வந்திருக்கலாம். எல்லோரும் சரியில்லை என்று சொல்வதற்கு பேச்சு வன்மை எதற்கு?

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் நெல்லைத்தமிழன் சார்!


      1. பொதுத்துறையினால் கிடைத்த நன்மைகளை, ஊழல், அரசியல் குறுக்கீடு, நிர்வாகத் திறமையின்மை இப்படிப் பலகாரங்கள் அடித்துக் கொண்டுபோய்விட்டன. பொதுத்துறை என்றால் யார்வேண்டுமானாலும் புகுந்து கொள்ளையடிப்பதற்கான இடமாக மாற்றிய பாவம் காங்கிரசையே சாரும். இந்தப்பக்கங்களிலேயே புள்ளிராசா வங்கி, பொதுத்துறை வங்கி, நிர்வாகம், மேலாணமை என்ற குறியீட்டில் நிறைய எழுதிய காலம் உண்டு.கடைசியாக BSNL பற்றியும்

      2. KD brothers, ஆ.ராசா, TR பாலு, சசிகலா &வகையறா இதுவரை வளர்ந்ததே தேசத்துக்குப் பெரும் சுமை. . இன்னும் இந்த திருக்குவளை,மன்னார்குடி mafiaக்கள் வளரவேண்டுமா என்ன? 1976 ஜனவரியில் கருணாநிதி அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டதற்குப் பிறகு வந்த ஒரே ஒரு பொதுத்தேர்தலில் மட்டும் ஊழல் ஒரு தேர்தல் பிரச்சனையாக இருந்தது. அதற்குப்பிறகு 1996 தேர்தலில் திமுக தம்பட்டத்தில். ஊழல் இங்கே பிரதானமான தேர்தல் பிரச்சினையாக இருந்ததே இல்லை என்று சொல்கிற அளவுக்கு அது நமக்குப் பழகிப்போய் விட்டது.

      3. நான் 1970களின் கடைசியில் பார்த்த பழ. கருப்பையா இந்த வீடியோவில் கொஞ்சம் ஞாபகத்துக்கு வந்தார் என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல? :-((

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!