"பல்பு வாங்குறது" அல்லது அடுத்தவங்களை "பல்பு ஆக்குகிறது" !
அடுத்தவர்களைப் பியூஸ் போன பல்பாக மாற்றுகிறவல்லமை படைத்த பிரபல, பிரபலமாகத் துடிக்கிற, ஏழரை, ஏழே முக்கால் லட்சம் ஹிட்சை எட்டின, எட்டப் பார்க்கிற, எம்பிப்பார்க்கிற அத்தனை தமிழ் வலைப் பதிவர்களுக்கும் ஒரு நற்செய்தி! உங்கள் திறமைக்கு மிகப் பெரிய பரிசு காத்திருக்கிறது! தயார்தானே!
உங்களால் ஒரு சிறந்த பல்பை உருவாக்க முடியுமானால், உங்களுக்கு ஒரு கோடி அமெரிக்க டாலர்கள் பரிசாகக் காத்திருக்கிறது! ரீல் அல்ல! நிஜம் தான்! என்ன, அடுத்தவரை பியூஸ் போன பல்பாக மாற்றவேண்டாம், ஒரு நல்ல பல்பை உருவாக்கத் தெரிந்தாலே போதும்!
பல்ப்! பல்பா இருக்கறது அல்லது பல்பு வாங்கறது!
வலைப்பதிவர்கள் சர்வ சாதாரணமாகக் கையாளும் சொல் தான் இது!
இதுக்கு மேலும் பல்பு புராணம் வேண்டுமானால், மொழி திரைப்படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளவும்! தலைக்கு மேலே ஒரு பல்ப் பிரகாசமாக எரிந்து,டணார், டணார் மணிச்சத்தமும் கேட்டதானால் நீங்கள் தான் சிறந்த பல்ப்! அப்படி பல்பு எரியும் போது மணிச்சத்தம் கேட்டால் போதும், தலையில் விழுந்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்!
இங்கே சொல்லப்போகும் பல்பு அது அல்ல! மெரினா பீச்சில் காந்தி சிலைக்குப் பின்னால் ஒதுங்கி, அல்லது நடேசன் பூங்காவில் ஏதோ பைனான்ஸ் கம்பனியில் பணத்தைத் தொலைத்து விட்டு மாதாமாதம் கூட்டம் நடத்தி ஒப்பாரி வைக்கிற சடங்காக நடத்துகிற மாதிரி பதிவர் சந்திப்பு, கூட்டம் எல்லாம் வேண்டாம்! பதிவுல அடிச்சுக்குவாங்களாம்! நேர்ல, பதிவர் சந்திப்புல மட்டும் 'கட்டிப்புடி, கட்டிப் புடிடான்னு' கட்டிக்குவாங்களாம்! ஓசிச் சுண்டல், போண்டா, காபி தேத்தண்ணீர் எதுவும் வேண்டாம்!
ஒரு ஐடியா! ஒரே ஒரு ஒரிஜினல் ஐடியா! இது இருந்தால் போதும்!
அப்படி என்ன தான் இருக்கணுமாம்? டங்க்ஸ்டன் இழைகளை வெற்றிடத்தில் சூடாக்கி ஒளி கொடுக்கிற, அறுபது வாட்ஸ் மின்சாரத்தைச் செலவழித்து ஒரு குண்டு பல்பு கொடுக்கும் அதே வெளிச்சத்தை வெறும் பத்தே வாட்ஸ் மின்சாரத்தை மட்டுமே செலவழித்துக் கொடுக்க வேண்டும். குண்டு பல்புடைய சராசரி ஆயுள் ஆயிரம் மணி நேரம் மட்டுமே என்றால், இந்தப் புதிய பல்பு 25000 மணி நேரத்துக்குக் குறையாமல், எரிய வேண்டுமாம். மின்சிக்கனம் 83 சத வீதம் இருக்குமாம்! .
எங்கேயிருந்து இதெல்லாம் ஆரம்பிச்சதுன்னு பாக்கறீங்களா?
உலகத்துலேயே மிகவும் ஊதாரித்தனமான நாடுன்னு பொருளாதார அடிப்படையில் பேர்வாங்கின அமெரிக்காவுல தான்! ஜனாதிபதி தேர்தல்ல தோத்துப் போன பிறகு அதுக்கு முன்னாடி துணை ஜனாதிபதியா இருந்த அல் கோரேவுக்குப் பொழுது போகணுமில்லையா? உலகத் தட்ப வெட்ப நிலையில அபாயகரமா மாறிக்கிட்டிருக்கிற சூழ்நிலையை பத்தி பாடம் நடத்த ஆரம்பிச்சாச்சு! ஓசோன்படலத்துல ஓட்டை விழுந்ததில் ஆகட்டும், பனிமலைகள் உருகி வெப்பம் கூடி வருவதற்குக் காரணமான கார்பன் டை ஆக்சைடு அதிகமா வெளிவரச் செஞ்சதிலும் சரி, அமெரிக்கத் தொழிற்சாலைகளுக்கு முதலிடம் உண்டு.
அதே மாதிரி, அதைச் சரி செய்ய முயற்சித்துக் கொண்டிருப்பதிலும், அமெரிக்காவே முன்னால் நிற்கிறது என்பதையும் மறந்து விட முடியாது.
அமெரிக்க எரிசக்தித் துறை, ஒரு சின்னக் கணக்கைச் சொல்கிறது. அடுத்த வருஷத்து மதிப்பீடுகளின் படி, அமெரிக்காவில் தொண்ணுற்றேழு கோடியே பத்து லட்சம் அறுபது வாட்ஸ் குண்டு பல்புகள், புழக்கத்தில் இருக்குமாம். ஒருநாளைக்கு இரண்டு மணி நேரம், வருஷத்துக்குக் குறைந்தது எழுநூறு மணி நேரம் எரிந்தால், இப்படி ஒரு அடிப்படையை வைத்துக் கொண்டு, அறுபது வாட்ஸ் குண்டு பல்புக்குப் பதிலாக, மாற்று, அறுபது வாட்ஸ் என்பது பத்து வாட்ஸ் மின்சாரத்தை மட்டுமே சிக்கனமாகச் செலவழிக்க வேண்டும், ஐம்பத்தாறு லட்சம் மெட்ரிக் டன் நிலக்கரியை எரித்தால் எழும் சூடு, கார்பன் வெளிப்பாடு குறைய வேண்டுமாம்!அப்படி ஒரு சிக்கனமான பல்பை கண்டு பிடிக்க வேண்டும் என்ற முனைப்போடு, இரண்டு வருடங்களுக்கு முன்னாலேயே திட்டமிட்டு, போன வருடம்எல் ப்ரைஸ் [லைட்டிங் ப்ரைஸ்] என்ற பெயரில், அப்படிப் பட்ட சிக்கனமான பல்பை உருவாக்குபவர்களுக்குப் பத்து மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசு, அதோடு மட்டுமல்ல, அமெரிக்க அரசே பெருமளவில் வாங்கிக் கொள்ளுவதற்கான வாய்ப்பு, அது போக சந்தையில் மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்தி தருகிற கதவாக இந்த ஒருகோடி அமெரிக்க டாலர் பரிசுத் தொகை அறிவிக்கப் பட்டிருக்கிறது.
இது போக, உள்நாட்டுப் பொருளாதாரத்தையும் மனதில் வைத்துக் கொண்டு 75 சதவீதம் அமெரிக்காவிலேயே தயாராக வேண்டுமாம்!
இது குறித்த தகவல்களை அறிவதற்கு இங்கே! பல்ப் எரிந்து மணியும் அடிக்க இன்னமும் விவரம் வேண்டும் என்றால் இங்கிருந்தே பி டி எப் கோப்புக்களாகவும் பெற முடியும்.
இப்போதைக்கு பிலிப்ஸ் நிறுவனம் தான் தனது முதல் தயாரிப்பு விவர அறிக்கையைச் சமர்ப்பித்திருக்கிறது.கிட்டத் தட்ட இரண்டாயிரம் வடிவமைப்புக்களைச் சோதனைக்காகவும் பிலிப்ஸ் நிறுவனம், அமெரிக்க எரிசக்தித் துறையிடம் அளித்திருக்கிறது! இப்போது சந்தையில் கிடைக்கும் தயாரிப்புக்களை விட மிகச் சிறந்த வடிவமைப்பு என்று பிலிப்ஸ் நிறுவனம் சொல்கிறது.
இதில் மிகவும் சுவாரசியமான விவரம் என்னவென்றால், இந்த அறுபது வாட்ஸ் குண்டு பல்பு தான் அமெரிக்காவில் உபயோகத்தில் ஐம்பத்து சதவிகிதமும், வருடத்திற்கு நாற்பத்திரண்டரைக் கோடி எண்ணிக்கையில் விற்பனையாவதுமாக இருப்பது தான்.ஆரம்பத்தில், நம்மூர் மாதிரியே , அங்கேயும் தகுதி, தர நிர்ணய நெறிமுறைகள் எதுவும் வரையறுக்கப் படாமல் தான் இருந்ததாம். குண்டு பல்பை விடக் கொஞ்சம் தேவலை என்ற ரீதியில் வந்த இருபத்தைந்து வடிவமைப்புக்களை அமெரிக்க எரிசக்தித் துறை நிராகரித்திருக்கிறது. நெறிமுறைகளைக் கொஞ்சம் கடுமையாக்கியிருக்கிறது.
ட்யூப் லைட், அதையே சுருக்கி, கையடக்கமான ஒளிர் விளக்குகள்( சி எப் எல்) என்ற பெயரில், தயாரித்து அதி மின்சிக்கனம் என்று தம்பட்டம் அடித்ததில், சீக்கிரமே நுகர்வோரிடமிருந்து குறைகள், அதிருப்தியாய் வெடிக்க ஆரம்பித்தது. குண்டு பல்பை விட அதிக வெளிச்சம், கொஞ்சம் மின்சிக்கனம் என்ற அளவில் இருந்தாலும், சுற்றுச் சூழலுக்கு மிகவும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய பாதரசம் இந்த வகை விளக்குகளில் இருப்பதும் கவலையை அதிகரிக்கச் செய்தது.
அடுத்து என்ன என்ற தேடல் மும்முரமாகி சாலிட் ஸ்டேட் லைட்டிங் தான் சரியாக இருக்கும் என்று ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இது குறித்து விவரம் அறிய இங்கே. எரிசக்தி விரயமாகாமல் இருக்க வேண்டுமானால், சாலிட் ஸ்டேட் முறையில் தான் விளக்குகள் வடிவமைக்கப் படவேண்டும் என்று கடுமையான தர நிர்ணயம் செய்துகொண்டு, முயற்சிகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.
ரென்செலேர் பாலிடெக்னிக் இன்ஸ்டிட்யூட் , நியூ யார்க் நகரில், லைட்டிங் ரிசர்ச் சென்டெர் என்ற ஆய்வுக்கூடத்தில் தொடர்ந்து பூமியின் பசுமையைக் காக்கும் பல ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. திரு நடராஜா நரேந்திரன் [பெயரே தமிழர் என்று சொல்கிறது!] இந்த ஒளி ஆய்வுக்கூடத்தின் இயக்குனராக இருக்கிறார்.
பிலிப்ஸ் வடிவமைத்திருக்கும் எல்ஈடி (LED) விளக்குகளின் வடிவமைப்பு, எரிசக்திச் சிக்கனத்தில் நிச்சயமாக ஒரு புலிப் பாய்ச்சல் தான்." என்கிறார் திரு நடராஜா நரேந்திரன். இந்த ஆராய்ச்சிக்காக, அமெரிக்க அரசு பதினெட்டு லட்சம் அமெரிக்க டாலர்களை வழங்கியிருக்கிறது.
எல்லாம் சரி. அது அமெரிக்காவில்! இங்கே இந்தியாவில், தமிழ்நாட்டில் ஒரு மூலையில் இருந்து கொண்டு இதைப்பற்றியெல்லாம் விலாவாரியாக எழுதிக் கொண்டிருப்பானேன்?
புதிதாக மின் உற்பத்தி நிறுவனங்களைத் தொடங்கத்தான் வக்கில்லை!
எரிசக்தி சிக்கனத்தை இந்த மாதிரி வழிகளிலாவது ஊக்குவிக்கக் கூடாதா என்ற ஆதங்கத்தில் தான்!
விதியே! விதியே! தமிழச் சாதியை என் செய நினைத்தாய்?
நமக்கு நாமே திட்டத்தில் இந்த விருதைத் தனக்கும், அந்த விருதை அவருக்கும் வழங்கிக் கொண்டு, அரசியலில் நுழைந்து குடைச்சல் தராமல் இருக்கும் ஒரே காரணத்திற்காகவே சிறந்த நடிகர் விருதை இவருக்கும் அவருக்கும் வழங்கும் சாமர்த்தியத்தில், ஏதோ ஒரு சிறு அளவாவது, மின் சிக்கனத்தை ஊக்குவிப்பதில் காட்டக் கூடாதா?
உன்னைப்போல் ஒருவன் ரேஞ்சிலோ, ஒரு புதன் கிழமை ரேஞ்சிலோ எந்தப் பாமரனும் வந்து உங்களைக் கேட்க மாட்டான் என்ற தைரியம் தானே?!
அப்புறம் என்னத்துக்குத் தமிழ் வலைப்பதிவுலகம் இந்த ஒண்ணுக்கும் ஆகாத உன்னைப் போல் ஒருவனுக்காக இப்படிப் பத்திக்கிட்டு எரிஞ்சுது?