நான் பேச நினைப்பதெல்லாம்........!


வால்பையனோட படம்! கருத்து தளத்துல இருந்து சுட்டது!

தேடுபொறிகள், வாசகர்களைக் கையைப்பிடித்து இழுத்துக்கொண்டுவந்து உங்களுடைய பக்கங்களுக்குக் கொண்டுவர வேண்டுமானால்,


காமம், காதல், கடவுள், நாத்திகம், பெரியார்,நம்புகிறவன் முட்டாள், கவிதை, கவுஜை, எதிர் கவுஜ, கானா பாட்டு, ஈழம், பொழுதுபோக்கு நாத்திகம், நமீதா, நயன்தாரா, பிரபுதேவா, ரஜினிகாந்த்,குஷ்பூ, சீமான், போலி டோண்டு, பிரபலப் பதிவர், நடேசன் பூங்கா, பதிவர் வட்டம்,மொக்கை, மொட்டைமாடி, மொட்டை மாடிக் கூட்டம், கிழக்கு, இம்சை, பா.ராகவன், சாரு நிவேதிதா, ஜெய மோகன், லக்கிலூக்,செக்ஸ் சாமியார், புதுசு கண்ணா புதுசு, குச்சிக்காரி..........................



மேலே குறிப்பிட்ட வார்த்தைகளில் எது ஒன்றை எடுத்துக் கொண்டு பதிவு எழுதினாலும், ஹிட்ஸ் குவிவது நிச்சயம்!நீங்கள் எழுதியதற்காக இல்லை! அப்படியெல்லாம் நினைத்துக் கொண்டு காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளாதீர்கள்! பின்னூட்டத்தில் கும்முவதற்காகவே, இங்கே என்னை மாதிரி நிறையப்பேர் இருக்கிறோம்! ஒரு எல்லைக்கு மேல் படிப்பவர்கள் ரத்தக் கொதிப்பு அளவு எகிறுவதும் சர்வ நிச்சயம்!


இந்த வார்த்தைகள் பட்டியலில் இன்னும் ஒன்றைக் கூட சேர்த்துக் கொள்ளலாம்!

வால்பையன்!


நம்ம வால்ஸ் சிறுகதைப் பட்டறைக்குப் போன ஞாயிற்றுக்கிழமை சென்னைக்குப் போய்விட்டு வந்தார். யுத்தம் சரணம் கச்சாமி, சுகம் ப்ரம்மாஸ்மி இப்படி என்னவோ அந்த நேரத்தில் தோன்றுகிற வார்த்தைகளை வைத்துக் கொண்டே, பதிவுகள், புத்தகங்கள் எழுதிக் குவிக்கிற பா.ராகவன் கூட இவருடைய வம்புத்தனமான பின்னூட்டங்களைப் பார்த்துக் கொஞ்ச அதிகமாகவே மிரண்டு போனார் போல இருக்கிறது!

பால் வடியும் முகத்தோட படத்துல பச்சப்புள்ள மாதிரி இருக்கற இவரா வால்ஸ்?
நம்ப முடியலையே என்று நினைப்பவர்களுக்காக, மேலே ஆரம்பத்தில் கருத்து தளத்தில் இருந்து சுட்ட படம்.  

சிறுகதை எழுதுவது எப்படி என்பதை, அதைப் பத்திரிகைகளில் படித்துப்பார்க்கிற உதவி ஆசிரியரின் கண்ணோட்டத்தில் இருந்துபேசிவிட்டு வந்த அனுபவத்தைத் தன் பதிவில் எழுதும் போது, வம்புப்பின்னூட்டங்களில் மிரண்டு போய், இவரிடம் தான் எவ்வளவு விஷயம் இருக்கிறது அன்று ஆச்சரியப்பட்டுப்போய் [அல்லது அரண்டுபோய்?] எழுதி இருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!


சரி, வால்ஸ் சிறுகதைப் பட்டறைக்குப் போய் வந்தார், ஏதோ ஒரு சிறுகதை அல்லது வெறும் கதையாவது எழுவார் என்று நினைத்தீர்கள் என்றால், நீங்கள் வெறும் பச்சைப்புள்ளை, ரத்தம் கொப்பளிக்கிற யுத்த பூமியாக இருக்கும் சூடான தமிழ் வலைப்பதிவுகள் பக்கம் வந்தறியாதவர் என்றும், அப்படியே அபீட்டாயிக்கறது தான் நல்லதுன்னும் அர்த்தம்!


அதையும் மீறி வந்தவர்கள் என்றால், என்னை மாதிரி வால்பையன் ரசிகர் மன்றம், அல்லது வால்பையன் நற்பணி இயக்கத்து ஆளாகத் தான் இருக்க வேண்டும்! அட, மெய்யாலுமேங்க!

நற்பணி மன்றத்துக்காரங்க எல்லாரும் கூடி, சீக்கிரமே ஒரு நற்பணி ஆரம்பிக்கப் போறோங்க!




ஐம்பத்தைந்தே வரி, எட்டுப்பத்தியாகப் பிரித்து, நடுவில் சும்மா உள உளாக்காட்டிக்கு இரண்டு படம். தலைப்பு வைப்பதிலும் திறமையான தில்லாலங்கடி வேலையைக் காட்டி இருக்கிறார்! சென்ற பதினாறாம் தேதி போட்ட பதிவு. எப்பவும் போல, பட்டாசுச் சரத்தைக் கொளுத்திப் போட்டுவிட்டு, ஓரத்தில நின்னு வேடிக்கை பார்க்கிற வால்பையன், ஒன்னு ரெண்டு பின்னூட்டங்களில் கொஞ்சம் வீராவேசமாகப் பதில் எழுதியிருக்கிறார்.


பார்பனீயத்தின் புதிய தில்லாலங்கடி ! இது தான் தலைப்பு. இது வரைக்கும் நானூற்றுச் சொச்சம் பின்னூட்டங்கள்! ஏற்கெனெவே வால்பையனுடைய ஒரு பதிவில் டம்பி மேவீ ஏதோ பின்னூட்டமிடப்போக, ஈஸ்வரி ஆத்தா 'போடா லூசு' என்று அருள் வாக்குச் சொன்னதில், மனிதர் ரொம்பவுமே எச்சரிக்கையாக, "என் கருத்தை சொல்லி மீண்டும் ஒரு முறை "போடா லூசு" என்று பட்டம் வாங்க நான் தயாராக இல்லை........" என்று ஒதுங்கிக் கொண்டுவிட்டார்.


அவர் பதிவு போட்டார். பின்னூட்டக் கும்மிகள் குவிந்தன, சரி இங்கே என்ன சொல்ல வருகிறாய் என்று தானேகேட்கிறீர்கள்?


இங்கே தான், எந்த ஒரு விஷயத்துக்கும் நேரெதிரான இரட்டைத் தன்மை இருக்கிறது என்று, இந்தப்பக்கங்களின் அடிநாதமாக இருக்கும் கருத்தை, மறுபடி உண்மையென நிரூபிக்கப்பட்டிருப்பதைக் கண்டேன்.


"கடளையே நம்பளையாமாம், வேதத்தை என்னாத்துக்கு நம்புறோம்!,

ஏன் எல்லா கடவுளுக்கு ரூல்ஸ் & ரெகுலேஷன் இருக்கு?

அது இல்லாம இருந்தா அது கடவுள் இல்லையா?

என்ன கொடும சார் இது!? “



பின்னூட்டத்திலும் வந்து நம்ம வால்ஸ் கொளுத்திப்போட்ட சரவெடி இது!


கொஞ்சம் கூட அசராமல், அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் வார்த்தைகளை உருவி எடுத்து. பின்னூட்டச் சரவெடிகளாக வால்பையன்வெடிப்பதைப் பார்த்து நம்ம ஜெய் ஹிந்துபுரத்துக்காரர் பீர், தனியாகவே ஒரு பதிவு போட்டார் "யானைக்கு மதம் பிடிக்கும், வாலுக்கு?" ரொம்பப் பொறுமையாக, இஸ்லாம் மார்கத்தை வால்பையனுக்கு எப்படியாவது புரியும்படி சொல்லியே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு எழுதினமாதிரி இருந்தது. ஜெய்ஹிந்துபுரத்துக்காரருக்குச் சொன்னேன்:


'வாலுக்கு'பிரத்யேகமான பதிவு என்றாலும், சில விஷயங்கள் பொதுவாகச் சொல்லவேண்டித்தான் இருக்கிறது!


யானைக்கு மதம் பிடிக்கும்! ரொம்ப சரி, அதை விட மனிதனுக்கு 'மதம்' பிடித்துப்போய் விடும் நிலை இருக்கிறதே, அது அதைவிட மோசமானது!


அதைக் கண்டிக்கிறோம் என்று உண்மையிலேயே சீர்திருத்தங்களில் ஆர்வம் இருந்த சில பேர் வந்தார்கள்!அப்புறம் அது நிறையப் பேருக்குப் பொழுதுபோக்காகி விட்டது!


இங்கே பலரும் பேசுகிற நாத்திகம், பொழுதுபோக்கும் நாத்திகம் தான்!அவர்களுக்கு, விடைகளில், ஏன் எப்படி எதனால் என்று கேட்டுத் தெரிந்துக் கொள்ளும் பொறுமையும் இல்லை!


அதனால், யானைக்கு மதம் பிடிக்கும்! அப்புறம் வாலுக்கு என்ன பிடிக்கும் என்றால், 'லொள்ளு' தான்! அதுதான் சரியான விடையாகவும் இருக்கும்:-)).


ஒரு படத்தில் வடிவேலு, உளறிக் கொட்டி விட்டு,"அப்ப நானாத்தான் உளறி மாட்டிக்கிட்டனா?" என்று பரிதாபமாக முகத்தை வைத்துக் கொள்வது போல, பொழுதுபோக்கு நாத்திகம் பேசுகிறவர்களுக்கு, 'அவல்' எங்கிருந்து கிடைக்கிறதாம்?


மதங்களை உயர்த்திப் பிடிக்கிறேனென்று தாங்கிப்பிடிப்பதாகச் சொல்லிக் கொள்பவர்கள் வார்த்தையில் இருந்தே தான் கிடைக்கிறது!


ஆமாம், எனக்கு ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்லும் இந்த வரிகள் தான் நினைவுக்கு வருகிறது!



"The defenders of the truth are often worse than the enemies of the truth."



இந்தப்பதிவிலும் பின்னூட்டங்கள் ஒரு சதத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனாலு, விவாதம் முடிந்த பாடில்லை, யாரும் புதிதாக எதையும் தெரிந்துகொண்டதாகவும் இல்லை. உண்மையைச் சொல்லப்போனால், இப்படிப்பட்ட விவாதங்கள் ஒருபோதும் முடிவுக்கு வருவது இல்லை.


சீசன் ஒண்ணு, சீசன் ரெண்டு, சீசன் மூணுன்னு வளந்துகிட்டேபோகும்!


இது ஒருபக்கம் நடந்துட்டேயிருக்கும் அதே சமயம், இன்னொரு பக்கத்துல, மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்துல கொஞ்சம் சுவாரசியமான விவாதம், ஏற்கெனெவே ரெண்டு மூணு வாட்டி சொல்லியிருக்கேன், "எது பக்தி" இந்தக் கேள்விக்கு விடைதேடும் விதமாக, ஒரு இழையில் விவாதம் நடந்துட்டிருக்கு!



அங்கே எல்லாமே சைவம் தான்! ரத்தம் சிந்துற, குடிக்குற வேலையெல்லாம் கெடையாது!


ரெகா என்கிற திரு கார்த்திகேசு, ஒரு மலேசியத் தமிழ் எழுத்தாளர், போனமாசம் கலைமகள் மாத இதழில் கூட இவரோட நேர்காணல் வந்திருக்கு, அப்புறம் மோகனத் தமிழ் பேசும் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ரெண்டுபேரும் இழையில்  விவாதத்தை இப்படி நடத்துகிறார்கள்-வால்பையன் ரவுசு கட்டுற நாத்திகத்துலேயோ, நம்ம பீர், அவரோட நம்பிக்கையை உயர்த்திப் பிடிக்கிறதுலேயோ காண முடியாத ஒரு விஷயம், கிட்டத்தட்ட, இதுதான் விஷயம்னு பிடிபடற அளவுக்கு இங்கே நடக்குது! படிச்சுப் பாருங்க!


"அரங்கனாரே!


நானும் ரவுசு (இதன் மூலம் செங்கிருதமா?) பிடித்தவன்தான்!தெரிந்த விஷயம்தானே!


பக்தி பற்றிப் பேசும் உங்கள் திறந்த மனப்பன்மை எனக்குப் பிடிக்கிறது. பக்தி என்பதை விரல் சுட்டிச் சொல்லிவிட முடியாது என்பது போல்தான் தொனிக்கிறீர்கள். அதுதான் யதார்த்தம் எனப்படுகிறது.


ஆனால் இப்படியே பேசிக்கொண்டே போய், ஒரு கட்டத்தில்,இப்ப்டியெல்லாம் பேசுவதில் பிரயோஜனமில்லை. "பகவத்கீதையில் கண்ணன் ஏற்கனவே சொல்லியிருக்கிறான்"


அல்லது "ஆழ்வார்கள் அப்போதே சொல்லிவிட்டார்கள்" என்று சிவப்பு நாடா கட்டி இந்தக் கோப்பை மூடிவிடுவீர்கள் என்றஅச்சம் எனக்கு இருக்கிறது.


ஏற்கனவே நமது ஆன்மீகப் பாரம்பரியத்துக்குள் எல்லாம் சொல்லப்பட்டுவிட்டது; வேறு இடத்தில் தேடுவானேன் என வாய் அடைக்கப் பட்டிருக்கிறேன்.


எனினும் இந்த விசாரணைப் பாட்டை, அதில் காணுகின்ற தத்துவ நுணுக்கங்கள், மேற்கோள்கள், மனம், மூளை (அந்தர், பஹிர்-உள்ளே, வெளியே) பற்றிய அலசல்கள் அனைத்தும் எனக்குப் பிடிக்கின்றன. நீங்கள் சொல்லும் விதம் மிக அழகு. ஆகவேதான் விடாமல் படிக்கிறேன்.


நான் பயணி.பயணத்தின் இறுதி அடைவு பற்றி எனக்கு அவ்வளவாக அக்கறையில்லை (நம்பிக்கையும் இல்லை). ஆனால் உங்களோடு பயணம் செய்வது சுகானுபவம்,. அறிவைக் கிளறும் அனுபவமும் கூட.


என்னுடைய இரண்டு தம்பிடி ரவுசு இதோடு முடிகிறது.


ரெ.கா.


"வாருங்கள் திரு ரெ கா! இந்த அச்சமே உங்களுக்குத் தேவையில்லை.ஏனெனில் நான் எழுதுவது ஓர் இலக்கிய உத்தி என்ற முறையில் இல்லை. அதுவுமின்றி என்றுமே வெறும் நம்பிக்கையின் கட்சியை எள்ளளவும் மதிக்காதவன் நான்.


இனியும் மதிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் எனக்குப் படவில்லை. எனக்கு உள்ளூற மயக்கம் என்பது அரிஸ்டாட்டிலின் கருத்துலகத்தில். பக்தி என்பதும், கடவுள் என்பதும் மிக ஆழமான கருத்து,அனுபவ உலகம் என்பது விடாமல் தோன்றிக் கொண்டிருக்கும் ஐயம்.



பக்தி என்பது எப்படிப் பெரும் அறிவுக்கான உழைப்பை உள்வாங்கத் தக்கதாய் இருக்கிறது எனப்படுகிறதோ அதைப்போலவேதான் அறிவின் பாற்பட்ட மூட நம்பிக்கைகளும் அறிவு போன்ற தோற்றம் கொண்டு சென்றவை வேஷம் கலைகின்றன.


எது எப்பொழுது நடக்கிறது என்பதுதான் நிச்சயம் இல்லாமல் இருக்கிறது.


மற்றபடி எப்படி முடிப்பது, அல்லது எங்கு கொண்டுபோவது, அல்லது முடிவு என்று ஒன்று இயலுமா, அல்லது இப்படி விசாரத்திலேயே இருப்பதுதான் என்தலைவிதியா? எதுவும் எனக்குப் புரிபடவில்லை. 'அறிதொறும் அறியாமை கண்டு, அற்று, ஆல்!' என்ற அர்த்தம் மட்டும் நன்கு புரிகிறது.



வர வர எழுத்தைக்கண்டே பயமாய் இருக்கிறது. மிகவும் தெரிந்துதான் ஒன்றை எழுதுகிறோம். ஜாக்கிரதையாக நன்கு கவனித்துத்தான் ஒரு கருத்தைக் கூறுகிறோம். ஆனால் எழுதி முடித்து அச்சாகி வந்து ஓர் உலா போனபின்பு அதே விஷயத்தில் புதிதாக ஒரு கதவு திறக்கிறது.


அப்பொழுது எழுதியது தவறா? இல்லை, பின் இந்தக் கதவு தெரியாமல் அதை எப்படி எழுதியது முழுமையாகும்? பின் தெரிந்து எழுதாமல், தெரியாமலேயே எழுதித் தொலைத்தோமா?



ஒரு நிலையில் நாம்தான் எழுதுகிறோமா அல்லது அவைதான் நம்மை வைத்து எழுதிக் கொள்கின்றனவா? இந்தப் புதிர் நிலத்தில் கால் வைத்தபடிதான் நான்
எதையுமே சிந்திக்கவோ எழுதவோ வேண்டியிருக்கிறது.


இதைவிட சுத்த அறியாமை நிலை சுகமாக இருந்தது."



--ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்


இருக்கிறது என்று சொல்பவரும், ஒரு எல்லைக்கு உட்படுத்தித் தான் சொல்ல வருகிறார்.

இல்லை என்று மறுப்பவரும் அந்த எல்லையை மறுப்பதில் மட்டுமே தனிக்கவனம் செலுத்துகிறார். ஆக, கடவுள் உண்டா, இல்லையா என்ற கேள்வி இங்கே ஒருவருக்கு ஒருவர் செய்துகொள்ளும் வரையறைகளை நிராகரிப்பது, மாற்றியமைப்பது என்ற அளவில் மட்டுமே நடந்து கொண்டிருப்பது தெளிவாகப் புலனாகிறது, இல்லையா?


விஷயம் என்னதென்று விளங்கிக்கொள்ளாமலேயே விவாதம் மட்டும் நடத்திக் கொண்டிருக்கிறோம்!


அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் உள்ளது. பிண்டத்தில் உள்ளதே அண்டத்தில் உள்ளது!



இது சித்தர்கள் ஞான மரபு. இதே மாதிரி, இன்னொருத்தரும் கிட்டத்தட்ட இதே மாதிரி உருவகத்தில் சொன்னது நினைவு வருகிறதா?



But do not think that the drop alone becomes the ocean.


The ocean, too, becomes the drop.

சிறுதுளி மட்டுமே கடலாக ஆகிவிடும் என்றெண்ணாதே!
பெருங்கடலும் சிறுதுளியாய் ஆவதைப் பார்!



-ரூமி



3 comments:

  1. அய்யா ,தங்களின் கருத்துகளை வழிமொழிகிறேன்

    ReplyDelete
  2. சார் என்னைய இப்படி உசுபேத்தி உசுபேத்தியே ரணகளம் ஆக்கிருவிங்க போலயே!

    ReplyDelete
  3. மலைவிழுங்கி மகாதேவனுக்கு எதுவோ அப்பளம்னு சொல்வாங்க! ரவுசு கட்டி ஆடுற வால்பையனை, நானா உசுப்பேத்தி, ரணகளமா ஆக்க முடியும்?

    ரவுசு கட்டி ஆடுறவங்களை விசிலடிச்சு ரசிக்கும் சாதாரண ரசிகன் நான்!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!