ஸ்ரீராம நவமி! பெரியவாச்சான் பிள்ளை அருளிய பாசுரப்படி ராமாயணம்

இன்று ஸ்ரீராம நவமி! பத்ராசலத்தில் சீதாராம கல்யாணம் SVBC தொலைக்காட்சியில் நேரலையில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இங்கே வலைப்பதிவில் நேரலையில் ஒளிபரப்புகிற வசதி இவனிடத்தில் இல்லையென்றால் என்ன? பெரியவாச்சான் பிள்ளை என்கிற வைணவ ஆசாரியர் நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் இருந்து வரிகளை எடுத்து பாசுரப்படி ராமாயணம் என்று முழு ராமாயணக்கதையையும் 9 நிமிடங்களுக்குள் பாராயணம் செய்துவிட முடிகிற படி பரம கருணையோடு அருளிச்செய்திருக்கிறார்! கேட்டுப்பாருங்கள்!


கேட்கிறபோதே பாசுரப்படி ராமாயணத்தை நாமும் சேர்ந்தே சொல்வதற்கு வசதியாக வரி வடிவில் இருந்தால் இன்னும் கொஞ்சம்  வசதியாக இருக்கும் இல்லையா?


ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அவர்கள் அருளிச் செய்த பாசுரப்படி ஸ்ரீராமாயணம்

பால காண்டம்

திருமடந்தை மண்மடந்தை இருபாலும் திகழ
நலம் அந்தம் இல்லதோர் நாட்டில்
அந்தம்இல் பேரின்பத்து அடியரோடு
ஏழுலகம் தனிக்கோல் செல்ல வீற்றிருக்கும்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யான
அணியார் பொழில்சூழ் அரங்க நகரப்பன்
அலைநீர்க் கடலுள் அழுந்தும் நாவாய்போல்
ஆவார் ஆர்துணை என்று துளங்கும்
நல் அமரர் துயர்தீர
வல்லரக்கர் இலங்கை பாழ்படுப்பதற்கு எண்ணி
மண்உய்ய மண்உலகில் மனிசர் உய்ய
அயோத்தி என்னும் அணிநகரத்து
வெங்கதிரோன் குலத்துக்கு ஓர்விளக்காய்க்
கௌசலைதன் குல மதலையாய்த்
தயரதன் தன் மகனாய்த் தோன்றிக்
குணம்திகழ் கொண்டலாய்
மந்திரம்கொள் மறைமுனிவன் வேள்விகாக்க நடந்து,
வல்அரக்கர் உயிர்உண்டு கல்லைப் பெண்ணாக்கிக்
காரார்திண் சிலைஇறுத்து
மைதிலியை மணம் புணர்ந்து,
இருபத்தொருகால் அரசு களைகட்ட
மழுவாளேந்தி வெவ்வரிநற் சிலைவாங்கி வென்றிகொண்டு
அவன் தவத்தை முற்றும் செற்று,
அம்பொன்நெடு மணிமாட அயோத்திஎய்தி
அரியணைமேல் மன்னன் ஆவான் நிற்க;

அயோத்தியா காண்டம்

கொங்கைவன் கூனி சொற்கொண்டு
கொடிய கைகேயி வரம்வேண்ட
கொடியவள் வாய்க் கடிய சொற்கேட்டு
மலக்கியமா மனத்தினனாய் மன்னவனும் மறாது ஒழிய
குலக்குமரா, காடுறையப் போஎன்று விடை கொடுப்ப
இருநிலத்தை வேண்டாது
ஈன்றெடுத்த தாயாரையும் இராச்சியமும் ஆங்கொழிந்து
மைவாய களிறெழிந்து மாஒழிந்து தேர்ஒழிந்து
கலன் அணியாதே காமர்எழில் விழல் உடுத்து
அங்கங்கள் அழகுமாறி
மான் அமரும் மெல்நோக்கி வைதேகி இன்துணையா
இளங்கோவும் வாளும் வில்லும் கொண்டுபின் செல்லக்
கலையும் கரியும் பரிமாவும்
திரியும் கானம் நடந்து போய்ப்
பக்தியுடைக் குகன்கடத்தக் கங்கைதன்னைக் கடந்து
வனம் போய்ப் புக்குக் காயோடுநீடு கனிஉண்டு
வியன்கானம் மரத்தின் நீழல்
கல்லணைமேல் கண்துயின்று
சித்திர கூடத்து இருப்ப, தயரதன் தான்
'நின் மகன்மேல் பழிவிளைத்திட்டு
என்னையும் நீள் வானில்போக்க
என்பெற்றாய் கைகேசீ
நானும் வானகமே மிகவிரும்பிப் போகின்றேன்'
என்று வான்ஏறத்
தேன் அமரும் பொழில்சாரல் சித்திரகூடத்து
ஆனை புரவி தேரொடு காலாள்
அணிகொண்ட சேனை சுமந்திரன்
வசிட்டருடன் பரதநம்பி பணியத்
தம்பிக்கு மரவடியை வான்பணையம் வைத்துக் குவலயமும்
துங்கக் கரியும் பரியும் இராச்சியமும்
எங்கும் பரதற்கு அருளி விடைகொடுத்துத்
திருவிடை திசைக்கருமம் திருந்தப் போய்த்
தண்டகாரண்யம் புகுந்து

ஆரணிய காண்டம்

தயங்கு மறை முனிவர்க்கு
'அஞ்சேன்மின்' என்று அருள் கொடுத்திட்டு
வெங்கண்விறல் விராதன்உக வில் குனித்து,
வண் தமிழ்மா முனிகொடுத்த வரிவில் வாங்கி,
புலர்ந்து எழுந்த காமத்தால்
சுடுசினத்துச் சூர்ப்பணகா
பொன்னிறம் கொண்ட
சீதைக்கு நேராவன் என்றுவரக்
கொடிமூக்கும் காது இரண்டும்
கூரார்ந்த வாளால் ஈராவிடுத்துக்
கரனேடு தூடணன்தன் உயிரை வாங்க
அவள்கதறித் தலையில் அங்கை வைத்து
மலை இலங்கை ஓடிப்புக,
கொடுமையில் கடுவிசை அரக்கன்
அலைமலி வேற்கண்ணாளை அகல்விப்பான்
ஓர்உருவு ஆய மானை அமைத்து, சிற்றெயிற்று
முற்றல் மூங்கில் மூன்று தண்டத்தனாய் வஞ்சித்து
இலைக்குரம்பையில் தனி இருப்பில்
கனிவாய்த் திருவினைப் பிரித்து
நீள்கடல்சூழ் இலங்கையில்
அரக்கர் குடிக்கு நஞ்சாகக் கொடுபோந்து
வம்புலாம கடிகாவில் சிறையா வைக்க
அயோத்தியர் கோன் மாயமான் மாயச்சொற்று
அலைமலிவேற் கண்ணாளை அகன்று தளர்வெய்தி
சடாயுவை வைகுந்தத்து ஏற்றிக்
கங்குலும் பகலும் கண்தியில் இன்றிக்
கானகப்படி உலாவி உலாவிக்
கனை ஒன்றினால் கவந்தனை மடித்துச்
சவரிதந்த கனிஉவந்து,

கிஷ்கிந்தா காண்டம்

வன்மருவு கவிஅரசன் தன்னோடு காதல் கொண்டு
மராமரங்கள் ஏழும் எய்து
உருந்து எழு வாலி மார்பில்
ஒரு கணை உருவ ஓட்டி
கருத்துடைத் தம்பிக்கு
இன்பக் கதிர்முடி அரசு அளித்து
வானரக்கோன் உடன் இருந்து வைதேகி தனைத்தேட
விடுத்த திசைக் கருமம் திருத்தித்
திறல்விளங்கு மாருதியும்
மாயோன் தூது உரைத்தல் செய்ய;

சுந்தர காண்டம்

சீராரும் திறல் அநுமன் மாகடலைக் கடந்தேறி
மும்மதிள் நீள் இலங்கை புக்குக் கடிகாவில்,
வாராரும் முலைமடவாள் வைதேகி தனைக்கண்டு,
'நின் அடியேன் விண்ணப்பம் கேட்டருளாய்
அயோத்தி தன்னில் ஓர்,
இடவகையில் எல்லி அம்போது இனி இருக்க
மல்லிகைமாமாலை கொண்டு அங்கு ஆர்த்ததுவும்;
கலக்கியமா மனத்தினளாய் மன்னவனும் மறாதொழியக்
'குலக்குமரா, காடு உறையப்போ' என்று விடைகொடுப்ப
இலக்குமணன் தன்னோடு அங்கு ஏகியதும்
கங்கை தன்னில்,
கூர் அணிந்து வேல்வலவன் குகனோடு
சீர் அணிந்த தோழமை கொண்டதுவும்;
சித்திரகூடத்து இருப்பப் பரதநம்பி பணிந்ததுவும்;
சிறுகாக்கை முலைதீண்ட அனைத்துலகம் திரிந்துஓடி
'வித்தகனை, ராமவோ, நின் அபயம் ' என்ன
அத்திரமே அதன்கண்ணை அறுத்ததுவும்;
பொன்ஒத்த மான்ஒன்று புகுந்து இனிது விளையாட
நின் அன்பின் வழிநின்று சிலைபிடித்து எம்பிரான் ஏகப்
பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததுவும்
'அயோத்தியர் கோன் உரைத்த அடையாளம்;
ஈது அவன்கை மோதிரமே' என்று
அடையாளம் தெரிந்து உரைக்க,
மலர்க்குழலாள் சீதையும்,
வில் இறுத்தான் மோதிரம் கண்டு,
அநுமான் அடையாளம் ஒக்கும் என்று
உச்சிமேல் வைத்து உகக்க,
திறல் விளங்கு மாருதியும்,
இலங்கையர்கோன் மாக்கடிகாவை இறுத்துக்
காதல் மக்களும் சுற்றமும் கொன்று
கடி இலங்கை மலங்க எரித்து
அரக்கர்கோன் சினம் அழித்து, மீண்டு, அன்பினால்,
அயோத்தியர்கோன் தளிர்புரையும் அடிஇணை பணிய;

யுத்த காண்டம்

கான எண்கும் குரங்கும் முச்வும்
படையாக் கொடியோன் இலங்கை புகலுற்று
அலையார் கடற்கரை வீற்றிருந்து
செல்வ வீடணற்கு நல்லவனாய்
வரிநீர் இலங்கை அருளிச்
சரண்புக குரைகடலை அடலம்பால் மறுக எய்து,
கொல்லை விலங்கு பணிசெய்ய
மலையதனால் அணைகட்டி மறுகரையை ஏறி
சிலைமலி செஞ்சரங்கன் செல உய்த்துக்
கும்பனொடு நிகும்பனும்பட
இந்திரசித் தழியக் கும்பகர்ணன்பட
அரக்கர் ஆவி மாள, அரக்கர்
கூத்தர்போலக் குழமணி தூரம்ஆட,
இலங்கை மன்னன் முடி ஒருபதும்
தோள்இரு பதும்போய் உதிரச்
சிலைவளைத்துச் சரமழை பொழிந்து
வென்றிகொண்ட செருக்களத்துக்
கடிக்கமல நான்முகனும் கண் மூன்றத்தானும்
எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர்
மற்றுமள்ள வானவர் மலர்மழை பொழிந்து
மணிமுடி பணிதர அடியிணை வணங்கக்
கோலத்திருமா மகளோடு
செல்வவீடணன் வானரக் கோனுடன்
இலகுமணி நெடுந்தேர் ஏறிச்
சீரணிந்த குகனொடு கூடி
அங்கண்நெடு மதிள்புடை சூழ் அயோத்தி எய்தி
நன்னீராடிப்
பொங்கிள ஆடை அரையில் சாத்தித்
திருச்செய்ய முடியும் ஆரமும் குழையும்
முதலா மேதகு பல்கலன் அணிந்து
சூட்டுநன் மாலைகள் அணிந்து
பரதனும் தம்பி சத்துருக்கனனும்
இலக்குமணனோடு இரவும் நண்பகலும்
வடிவிணை இல்லாச் சங்குதங்கு முன்கைநங்கை
மலர்க்குழலாள் சீதையும் தானும்
கோப்புடைய சீரிய சிங்காதனத்திருந்து ஏழுலகும்
தனிக்கோல் செல்ல வாழ்வித்தருளினார்"

|| ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் ||

எதுவும் முடியவில்லையா? ராம கோவிந்த ஹரி என்றே  சொல்லிக் கொண்டாவது இருக்கலாமே! கபீர் தாசர் பாடலை எனக்கு கபீரன்பன் என்கிற திரு. உமேஷ் அறிமுகம் செய்துவைத்தார். பாடல் முழுவதும் மனப்பாடம் ஆகவில்லை. ராம கோவிந்த ஹரி என்ற நாமமே மனதில் தங்கிவிட்டது. 

ஸ்ரீராமன் நம் அனைவருக்கும் மங்களத்தை அருள்வானாக. மீண்டும் சந்திப்போம்.  

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!