ச்சும்மா ஜாலிக்கு! ஒரு திரைப்பட விமரிசனம்! வரணே அவஸ்யமுண்டு

மலையாளத்திரைப்படங்களின் மிகப்பெரிய பலமே மிகக்குறைந்த பட்ஜெட்டில் திரைப்படம் எடுத்துவிட முடிவதுதான்! ஏதோ ஒருகதை! அதையே கொஞ்சம் வித்தியாசமாகப் படமாக்குகிற வித்தை மலையாளிகளுக்கு இயல்பாகவே தெரிந்திருக்கிறது. சமீபத்தில் பாக்ஸ் ஆபீஸ் நிலவரங்களைத் தகவலாகத் தருகிற ஒருதளத்தில் இருந்து தான், வெறும் நாலரைக்கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட வரணே அவஸ்யமுண்டு படம் கடந்த இருமாதங்களில் 32 கோடி ரூபாய்அளவுக்கு வசூலைக் குவித்திருக்கிறது என்ற தகவலைத் தெரிந்து கொண்டேன். படத்தைப்பார்க்கிற ஆவலையும் தூண்டிவிட்டது.


துல்கர் சல்மான் இந்தப்படத்தின் மூலம் ஒரு தயாரிப்பாளராகவும் முதன்முறையாக ஆகி இருக்கிறார் என்பது தவிர கொஞ்ச வருடங்களாகவே திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து ஒதுங்கியிருந்த நடிகர் சுரேஷ் கோபியும், ஷோபனாவும் இந்தப்படத்தில் ரீ என்ட்ரி கொடுத்து இருப்பது கூடுதல் விசேஷம். கல்யாணி பிரியதர்ஷன் அறிமுகநடிகையாகவே தெரியாதபடி அப்படி ஒரு இயல்பான நடிப்பு! அது போக மீரா கிருஷ்ணன், ஊர்வசி, என்று பரிச்சயமான முகங்கள். சத்யன் அந்திக்காடின் மகன் அனூப் சத்யன் இந்தப்படத்தின் வழியாக இயக்குனராக ஆகியிருக்கிறார். ஒரு நல்ல டீம் ஒன்றுசேர்ந்து இருப்பதில் ஒரு சுமாரான கதையையும், சுவாரசியமாகக் காட்சிப்படுத்தி இருப்பதில் சுமார் இரண்டரை மணிநேரம் அலுப்புத்தட்டாமல் படம் நகர்கிறது.


சென்னை அடுக்குமாடிக் குடியிருப்பில் அண்டைவீட்டுக்காரர்களாக கதாபாத்திரங்கள் ஒவ்வொரு செட்டாக அறிமுகமாகிக் கொண்டே வருகிறார்கள். பிபீஷ் என்கிற   fraud ஆக துல்கர் சல்மான்,  சென்னையில் தன்னுடைய நிகிதா என்கிற மகளுடன் (கல்யாணி ப்ரியதர்ஷன்)  குடியேறும் ஆசிரியை நீனா (ஷோபனா), அதே குடியிருப்பில் திருமணமாகாத பட்டாளக்காரராக (சுரேஷ் கோபி) மேஜர் உன்னிகிருஷ்ணன் இவர்கள் தான் கதையின் முக்கியமான கதாபாத்திரங்கள். மற்றவர்கள் இந்த முக்கியமான கதாபாத்திரங்களுக்கு இடையிலான உறவு காதலாக முகிழ்ப்பதற்கு உறுதுணையாக இருக்கிறார்கள் என்பது கதைச்சுருக்கம். காட்சிகளைக் கோர்வையாகச் சொல்லிக்கொண்டே போகிற விதம் இந்த அரதப்பழசான கதையைக் கூட மிக நேர்த்தியான கதைக்களமாக மாற்றிவிடுகிறது. 


துல்கர் சல்மானுக்கு இது ஒரு வெற்றிப்படமாகவும் ஆகியிருக்கிறது. கதையைத் தேடாமல், லாஜிக் மீறல்கள் இருக்கிறதா என்ற நோண்டல்கள் இல்லாமல் இருந்தால், பொழுதுபோக்க ஒரு நல்ல படம் என்றே சொல்லலாம். Netlix இல் கிடைக்கிறது. 

என்னுடைய ரேட்டிங் 7.5 / 10 

மீண்டும் சந்திப்போம்.  
      

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!