அசுரன் படம் பார்த்த உடனே எழுதத் தோன்றியது...
நோட்ஸில் எழுதி வைத்தது. இன்று தான் கண்ணில் பட்டது.
"நம்ம கிட்ட காடு இருந்தா எடுத்துக்கிடுவானுவ ரூவா இருந்தா புடிங்கிக்குவானுவ ஆனா படிப்ப மட்டும் நம்ம கிட்ட இருந்து எடுத்துக்கிடவே முடியாது சிதம்பரம்"
- அசுரன் பட கிளைமாக்ஸ் வசனம்.
இன்றைய சமூகத்தில் யாரெல்லாம் அந்த சிதம்பரம்?
1. ஒடுக்கப்பட்ட சாதிகளில் இருந்து கல்வியைக் கொழுகொம்பாய்ப் பற்றி சாதி வெறுப்பைக் கடந்து, நீந்தி அவமானங்களை முதலை போல் ஜீரணம் செய்து, தான் அந்த சமூக சிக்கலுக்குள் சிக்கிவிடாமல் 'நானும் மனிதர்களில் ஒருவன், எனக்கான இடம் இங்கே உண்டு, எனக்கு அது வேண்டும், யார் தடுத்தாலும் முடியாது' என்று எதிர்நீச்சல் போட்டு நிலைநாட்டிய எண்ணற்ற ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த சாதனையாளர்கள்
2. 'உப்பு விக்கப் போனா மழை பெய்யுது, மாவு விக்கப் போனா காத்தடிக்குது' என்ற நிலையில், சட்டப்பூர்வமாக எதைச் செய்தும் தொழிலின் மூலமும் அடுத்த நிலைக்கு மேம்பட முடியாத கையறு நிலையில் இருக்கும் பலப்பல இடைசாதி மக்களின் வீடுகளில் இருந்து வந்து அதே கல்வியைக் கொழுகொம்பாகப் பற்றி 'இங்கே எனக்கும் ஒரு பங்குண்டு, அதை நியாயமாக எடுத்துக் கொள்ள உரிமையுண்டு' என்று வாழ்க்கைக் களம் காணும் அவர்களின் பிள்ளைகள்
3. "நீ கலக்கலைன்னா உங்க தாத்தன் கலக்கியிருப்பான்" என்ற ஆடு - ஓநாய் கதை போல அரசியல் நோக்குடன் வார்த்தெடுக்கப்படும் சாதி பழிவாங்கல் வன்மத்தால் பாப்பான் பாப்பாத்தி என்று சில முன்னோரின் தவறுகளுக்காக வசை பாடப்பட்டு பல அக்ரஹாரங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட நிலையில் கல்வி ஒன்றே கொழுகொம்பென்று பற்றி பிறந்த மண்ணில் இருந்து வெளிநாடுகளுக்குச் சென்று தமக்கான வாழ்க்கைப் பாதையை மாற்றியமத்துக்கொண்ட ஒவ்வொரு பாப்பானும் பாப்பாத்தியும் அம்பியும்
மேலே சொல்லப்பட்ட அசுரன் பட வசனத்தில் மூன்றாம் வரியை பிள்ளைகளைப் படிக்க வைக்கும் எல்லா பெற்றோரும் சொல்வது தான். முதல் இரண்டு வரிகள் எல்லோர் கண் முன்னே இருந்த, உணர்ந்த உண்மைதான்.
ஷெர்லாக் ஹோம்ஸ் துப்பறியும் கதைகளில் கண் முன்னே இருந்தும் யாரும் பேசாத கவனிக்காத விஷயங்களை பகுத்து உண்மையை வெளிக்கொணர்வது போல வெற்றிமாறன் முதல் இரண்டு வரிகளையும் படத்தில் அழகாக வடித்துள்ளார்.
மேலே எழுதியதைப் படித்ததும் 'ஒடுக்கப்பட்டவர்கள் ஒடுக்கப்பட்டவர்களாகவே இருப்பதாகவும் ஒடுக்குவோர் ஒடுக்கிக் கொண்டே இருப்பதாகவும்' நினைப்போருக்கு எட்டிக்காய் அல்லது பச்சைமிளகாய் கடித்தது போலிருக்கலாம். நான் பொறுப்பல்ல...
Paulo Freire — 'The oppressed , instead of striving for liberation, tend themselves to become oppressors.' - இதுதான் இன்றைய நிதர்சனம்.
தமிழாக்கம்: பாவ்லோ ஃப்ரெய்ரே - ஒடுக்கப்பட்டோர் ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை அடைவதற்கு முனையாமல் தாங்களே ஒடுக்குவோராய் மாற எத்தனிக்கிறார்கள்
No comments:
Post a Comment
ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!