தமஸோர்மா ஜ்யோதிர் கமய! தீபங்கள் ஒளிரட்டும்!

பிரதமர் நரேந்திர மோடி வேண்டிக்கொண்டபடி இன்றிரவு 9 மணிக்கு நமது இல்லங்களில் தீபங்கள் ஏற்றி ஒரு ஒன்பது நிமிடமாவது, அறியாமையும், திமிரும் வேண்டாத வேலைகளும் ஒன்றுகூடிக் கவிந்திருக்கும் இருள் விலகி ஒளி பிறக்கட்டும் என்று மனதாரப் பிரார்த்தனை செய்வோம்!  பாரத தேசம் பழம்பெரும் புண்ணிய பூமி! கர்மபூமியும் கூட! இப்படித்தான் வாழவேண்டும் என்று நல்ல நெறிகளை வகுத்துத் தந்த முனிவர்கள் பலரும் வாழ்ந்த பூமி! இன்னமும் மருந்து கண்டுபிடிக்கப் ப்டாத கொரோனா நோய்த்தொற்றுக்காக பயந்து இந்தப் பிரார்த்தனை இல்லை!  நம்மிடமிருக்கிற அறியாமை இருள் விலகவும், நமது ஒற்றுமைக்குக் குந்தகம் வராமலிருக்கவும் செய்யப்படுகிற பிரார்த்தனை இது என்று கூடச் சொல்லலாம்!

 
முக்கியமாக எதற்கெடுத்தாலும் நொள்ளை சொல்லியே கருத்துசொல்கிற இன்ஸ்டன்ட் போராளிகளிடமிருந்து எதிர்மறையான மனவோட்டம்  நம்மை அணுகாமல் பாதுகாக்கும் கவசமாகவும் பிரார்த்தனை உதவும். நல்ல எண்ணங்கள் ஒருமிக்கும்போது, சோதனைகளை வெல்லும் வழியைக் கண்டறிவது தானே நிகழும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.



படித்ததில் பிடித்தது 

Sundar Raja Cholan  7 மணி நேரம்

ஸ்பெயினில் இருந்து சென்ற மாதம் ஒரு செய்தி வந்தது.அதாவது வயது முதிர்ந்து நோய்வாய்ப்பட்டு இருந்தவர்களை பார்க்க நியமிக்கப்பட்டவர்கள் கொரோனா பரவுவதால் விட்டுவிட்டு சென்றுவிட்டார்கள்.பார்க்க ஆளில்லாமல் அந்த முதியவர்கள் படுக்கையிலேயே மரணித்து கிடந்தார்கள் என்று கொரோனா மீட்பு பணியில் இறங்கிய ராணுவம் சொன்னது.இப்படி செய்பவர்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாவார்கள் என்று அரசும் எச்சரித்தது..

எவ்வளவு துயரமிக்கது மேலுள்ள செய்தி?

நம்மை சூழ்ந்த இந்த லிபரல் கலாச்சாரம் எதை அழிக்கும்,நம்மை என்னவாக்கும் என்பது இந்த மாதிரியான பேரழிவு காலத்தில்தான் தெரியும்.குடும்பம் என்கிற அமைப்பு எவ்வளவு பெரிய பாதுகாப்பு மானுடத்திற்கு என்பது புரிய வரும்.பல்லாயிரம் வருடங்கள் வேட்டையாடி,பொருளீட்டி,உண்டு களித்த சமூகம் நமக்கு கொடுத்த பொன் சாவி இந்த குடும்ப அமைப்பு.

சங்கப்பாடலில் புலவர் நெட்டிமையார் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை புகழ்ந்து ஒரு பாடல் பாடியிருப்பார்.

// ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
எம்அம்பு கடிவிடுதும் நும்அரண் சேர்மின்//

பெருவழுதி போரைத் துவக்கும் முன் சிலரை பாதுகாப்பான இடம் தேடி செல்லச் சொல்கிறான்.பசு,பசுவின் குணங்களை ஒத்த பார்ப்பனர்,பெண்கள்,
நோய்வாய்ப்பட்டவர்களையும் பாதுகாப்பான இடத்திற்கு போகச் சொல்லுகிறான்.இவற்றோடு கூடுதலாக ஒன்றையும் சேர்க்கிறான், இறந்தவர்களுக்கு இறுதிக் கடன் செய்வதற்கு புதல்வர்களை பெறாதவர்களையும் பாதுகாப்பான இடத்திற்கு செல்லச் சொல்லுகிறான்.

எதிரி நாட்டை சேதப்படுத்தி அழிக்கும் போதும் இவர்களுக்கு பாதுகாப்பு தர வேண்டியது தர்மம் என்பது பாரத போர் மரபு.இறந்தால் தர்ப்பணம் தர மகனில்லாதவர்களை கொலை செய்வது தர்மமல்ல என்கிறது இந்த பண்பாடு..இதிலிருந்தே நம் கலாச்சாரம் குடும்பம் என்கிற அமைப்பை எப்படி விரித்துப் பார்த்திருக்கிறது,முக்கியத்துவம் கொடுத்துள்ளது என்பது புரிந்துகொள்ள முடிகிறது.நிற்க.

தனி மனித சுதந்திரம் என்பது ஒரு மாய கோஷம்..உண்மையில் அது நம் அகங்காரத்தின் ரசம் பூசப்பட்ட வார்த்தை.அதை அடைவதே லட்சியம் என்பதெல்லாம் கடைசியில் நம்மையோ அல்லது நம்மை சார்ந்தவரையோ ஒரு அநாதை பிணமாக ஆக்கத்தான் உதவும்.

எவ்வளவு இக்கட்டிலும் நாம் மனிதனாக,குடும்பமாக,சமூகமாக,
நாடாக,
உலகமாக இருப்பது ஒரு தொடர் சங்கிலி நிகழ்வு.இதில் எது இல்லையோ பிறிதொன்றை அதாக கருத வேண்டியது அவசியமானது.இல்லையென்றால் நாம் எதிர்நிலை சக்தியாக மாறிவிடுவோம்.எல்லாவற்றையும் அழித்து ஆடும் மனநிலையை எய்திவிடுவோம்.

திருமணங்கள் தோல்வியில் முடியலாம் அந்த இணைவு தங்களுக்குள் பரஸ்பர திருப்தியின்மையை ஏற்படுத்தலாம் ஆனால் அது ஒரு அந்தரங்க ஒவ்வாமைதான்.எல்லாமே மனிதனுக்கு கசந்துவிடும் வழக்கமான தேக்க நிலைதான்.

ஒரு குடை பல நேரங்களில் அநாமதேயமாக வீட்டில் தொங்கும்,இதை ஏன் இங்கே அசிங்கமாக தொங்கவிட்டோம் என்று தோன்றும்.. ஆனால் வரும் மழை அது வீணாக கழித்த மொத்த நாட்களை விடவும் பல மடங்கான உழைப்பையும்,பாதுகாப்பையும் நமக்கு குறைவான மழை நாட்களில் கொடுத்துச் செல்லும்..

எந்த மனிதனாலும் தோண்டி எடுத்து முழு விழியால் காண முடியாத தனிமையின் கொடூரம் மனதில் புதைந்து கிடக்கிறது..ஏதோ ஒரு ஆதிமானுடன் அடைந்த சுயபோதத்தால் அதனுடைய வீச்சின் துளியை கண்டறிந்துவிட்டான்.இசை,கவிதை,எழுத்து,விளையாட்டு,
புலம்பல்,அழுகை,காமம்,போதை என்று எதையோ இழுத்து சேர்த்து அந்த கொடூரத்தை மேலெழும்ப விடாமல் இழுத்து மூட நினைக்கிறான்.

எப்படிச் சூரியனை நம் கண்களுக்கு மறைத்துக்கொள்ள முடியும் மற்றபடி உலகத்திற்கு மறைக்க முடியாதோ அதே போலத்தான் இதுவும்..அந்தத் தனிமை எனும் கொடூரம் மேலெழுந்து நம்மை சர்வநிச்சயமாக உண்ணும்.அந்தப் பொழுதுகளில் அதை ஏமாற்றிவிடப்போவதாக ஒரு மன ஆறுதலுக்காவது மனிதர்கள் தேவை.அதை குடும்பத்தை தவிர வேறொன்று தராது.

நமக்கு முந்தைய சமூகம் தன் குடும்பத்திற்காக எதையும் செய்ய தயாராக இருந்தது.தன்னையே அழித்துக் கொண்டு தன் குடும்ப அமைப்பை இந்த சமூகத்தில் நிலை நிறுத்திய ஜீவன்கள் இருந்தது.இந்த ஜீவன்கள் அதிகம் இருந்ததால்தான் அன்று சுதந்திரப் போராட்டம் கூட நம்மால் செய்ய முடிந்தது..இன்றைய நமது தன்-மையவாதப் பார்வை அவர்களுக்கிருந்திருந்தால் இங்கே எந்த போராட்டமும் சக மனித பொறுப்புணர்வுடன் நிகழ்ந்திருக்காது.

இன்று தியாகம் என்பது பொருளற்றதாக,ஏமாளித்தனமாக ஆக்கப்பட்டுவிட்டது.இது நாம் நமக்கு உறுதியாக கட்டிக் கொண்ட சமாதியின் வலுவான அடித்தளத்தின் குறியீடு.தோல்வியடைந்த திருமணம்,ஏமாற்றிய உறவுகளையே காட்டி அதை மறுப்பது விபத்துகளை காட்டி குகையில் வாழ முயல்வதை போன்றது.மரணத்தை காரணம் காட்டி தற்கொலை செய்து கொள்வதைப் போல.

மீண்டும் சந்திப்போம் 

 

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!