பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கு மனசாட்சியோ விவஸ்தையோ இருப்பதில்லை என்பது நமக்குத் தெரியும். சற்றுமுன் பேசியதைக்கூட அப்படியே மாற்றிப்பேசுவதும் கூடத் தேர்ந்த அரசியல்வாதிகளுக்கு ரொம்பவுமே கைவந்த கலைதான்! அதற்காக இப்படியா? பிஜேபியின் தேவேந்திர ஃபட்னவிசும் சிவசேனாவின் சஞ்சய் ரவத்தும் சந்தித்துக் கொண்ட போது கண்கள் பனித்தன வசனம் மறுபடி உயிர் பெற்றதாம்! இதயம் இனித்ததா என்பது இன்னமும் தெரியாத நிலையில் சிவசேனா எங்கள் எதிரி அல்ல; நண்பர்கள்தான் என்று தேவேந்திர ஃபட்னவிஸ் சொல்லி இருப்பதை வைத்து கூட்டணிக்கணக்குகள் மாறுகிறதா என்று இந்து தமிழ்திசை கூட செய்தி கதைக்கிறது.
அன்புமணி ராமதாசுடைய இந்தக்கருத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று இந்தப்படத்தைப் போட்டு பிபிசி தளம் கேள்வி கேட்டிருக்கிறது.லாபம் இல்லாத எந்தவொரு அசைவு , முடிவும் எடுக்காதவர்கள் அவர்கள் என்று தெரிந்ததனால் பாமகவை, அதன் தலைவர்களை அறிந்த எவருமே இதுபோல சிறுபிள்ளைத் தனமான கேள்வியெல்லாம் கேட்கமாட்டார்கள்.
ஸ்டேன்லி ராஜன் எதிர்பார்ப்பதை எல்லாம் எங்கூரு நிதியமைச்சர் செய்துவிடுவாரா என்ன? நிதிநிலை அறிக்கை தயாரிப்பதைவிட அவரை விமரிசித்த நபர்களைக் காவல்துறையினரை விட்டுக் கைது செய்வதில் தான் அதிகம் முனைப்பு காட்டுகிறார் என்று செய்திகள் வருகின்றன. தரமற்ற விமரிசனம் என்றால் அதற்குத்தீர்வு காண சட்டபூர்வமாக நிறைய வழிகள் இருக்கின்றன. ஆனால் பழைய ஜமீன்தார்கள் மாதிரியே செயல்பட மந்திரி விரும்புகிற மாதிரி இருக்கிறது என்பது பெரும் சோகம். மதுரைக்கு வந்த சோதனையும் கூட!
பதிவின் தலைப்பில் சொன்னமாதிரி எல்லா அரசியல் வாதிகளும் விவஸ்தை இல்லாதவர்கள் இல்லை. ஒரு சில அரசியல்வாதிகள் மிகத்தெளிவான பார்வையுடன் தங்கள் கருத்துக்களை முன்னுக்குப்பின் முரண் இன்றி வெளிப்படுத்தி வருகிறார்கள். அதில் ஒருவர் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.
2021 திரைத்துறைத் திருத்தச் சட்டம் ::திரைப்படத் துறையினரைத் திருத்தும் சட்டமாகவே இருக்கும் !
திரைப்படப் படைப்பாளிகளே ! திரைக்கருவில் பிழை இல்லையேல், மறுதணிக்கைக்கு அஞ்ச தேவையில்லை !! சாதி, மத பேதத்தை உண்டாக்காத; தேசப்பற்றை வளர்க்கும் படங்கள் வெளிவர 2021 திரைத்துறைத் திருத்தச் சட்டம் உந்துதலாக இருக்கும்!!
நாடாளுமன்றத்தில் விரைவில் கொண்டுவரப்படவுள்ள 1952-ம் ஆண்டு திரைப்படத்துறைத் திருத்தச்சட்டத்திற்கு சிலர் தேவையில்லாமல் தங்களுடைய எதிர்க் கருத்துக்களை பதிவு செய்து வருவதாகவே கருதுகிறேன். 'கலை கலைக்காக' என்பதும், கலை சார்ந்த விஷயங்களில் அரசு தலையீடுகள் இருக்கக்கூடாது என்பதும் பலரது விருப்பமாக இருக்கலாம். ஆனால்,அரசு கட்டுப்பாடுகள் இருக்காது அல்லது இருக்கக்கூடாது என்பது எதார்த்தமாகுமா?
ஒரு தெளிவான அரசியல் சாசன கட்டமைப்பு உள்ள எந்த ஒரு தேசத்திலும் சட்டங்களும், விதிகளும் இல்லாமல் அரசு செயல்பட இயலுமா? ஒரு தேசத்தின் எல்லைக்குள் வாழும் அறிவுஜீவிகள் அவர்களின் அடிப்படை உரிமைகள் என்ன? அதன் எல்லைகள் என்ன? என்பதைத் தெரிந்திருக்க வேண்டாமா?
உரிமை பற்றி மட்டும் பேசுகிறவர்கள், கடமை மற்றும் பொறுப்புகள் குறித்துப் பேச மறுப்பது ஏன்?
ஒவ்வொரு தனி மனிதனும் அல்லது சமூக குழுக்களும் தங்களது கடமைகளையும், பொறுப்புகளையும் தாங்களாகவே உணர்ந்து செயலாற்றக் கூடிய ஒரு காலகட்டம் உருவாகும் பட்சத்தில் திருட்டு இருக்காது; திருட்டைப் பிடிக்க போலீசும் தேவைப்படாது. கொலை; கொள்ளை இருக்காது, சாதிய; மத வன்மங்கள் இருக்காது. சுரண்டுவோர்; சுரண்டப்படுவோர் என்ற பேதமைகள் இருக்காது. அப்போது சட்டங்களும் தேவைப்படாது; சட்டங்களை அமலாக்கக் கோடிக் கணக்கில் செலவழித்து அரசின் நிர்வாகத் துறையையும் உருவாக்க வேண்டிய தேவையும் இருக்காது. அக்கால கட்டங்களில் "அரசு என்ற நிறுவனம் உதிர்ந்துபோகும்" என்று பொதுவுடைமை தளகர்த்தர்களான காரல் மார்க்ஸும், ஏங்கல்ஸும் தங்களது கருத்தைச் சொல்லி இருக்கிறார்கள். இதுவே "இராம ராஜ்ஜியம்" என்று கூறுகிறோம். இப்போது என்ன அப்படிப்பட்ட அரசியல், சமூக, பொருளாதார பேதமற்ற சமூகத்திலா நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்?
கோடிக்கணக்கில் பணத்தைச் செலவு செய்து, நூற்றுக்கணக்கான கலைஞர்களும்; தொழிற்நுட்ப பிரிவினரும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் அல்லும் பகலும் அயராது உழைத்து உருவாக்கப்பட்ட ஒரு திரைப்படத்தை, சிலர் ஏதோ ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு, ஒரு சில மணித்துளிகளில் நவீன விஞ்ஞான அறிவைப் பயன்படுத்தி, ஒட்டுமொத்த திரைப்படத்தையும் பதிவுசெய்து அத்திரைப்படங்கள் திரையில் திரையிடப்படுவதற்கு முன்பாகவே இணையத்திலும், திருட்டு 'வி சி டி'க்களாகவும் வெளியிட்டு அத்திரைப்படக் குழுவினரின் அனைத்து முயற்சிகளையும், உழைப்பையும், பொருளாதாரத்தையும் கொள்ளையடித்து விடுகிறார்களே, இதைத்தடுக்க ஒரு வலுவான திரைத்துறை திருத்தச் சட்டம் கொண்டு வருகின்ற போது, அதை ஏன் திரைப்படத்துறையினர் எதிர்க்கிறார்கள் எனத் தெரியவில்லை.?
இன்றைய நவ நாகரீக கால கட்டங்களில் திரைப் படங்களால் குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள் சீரழிந்து போய்விடக் கூடாது என்பதற்காக எந்தெந்த திரைப்படங்களை எந்தெந்த வயதினர் பார்க்க வேண்டும் என வரையறை செய்யப்படுவதைக் கண்டு ஏன் திரைப்படத்துறையினர் அஞ்ச வேண்டும்? 'பிஞ்சு உள்ளங்களில் நஞ்சு கருத்துகள் பரப்பப்பட்டு விடக்கூடாது' என்ற பொறுப்புணர்வு திரைப்படத் துறையினருக்கு ஏன் வர மறுக்கிறது?
இப்போது, தணிக்கை சான்றிதழை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் என்பதை ஒரே ஒருமுறை சான்றிதழ் பெற்றாலே போதுமானது என திருத்தம் கொண்டு வருவதில் இவர்களுக்கு என்ன சங்கடம்? மத்திய திரைப்பட சான்றிதழ் ஆணையத்தால் (Central Board Of Film Certification) தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்ட பின்பு, ஒரு திரைப்படத்திற்கு பல்வேறு முகாம்களிலிருந்து ஆட்சேபனை எழும் பட்சத்தில், மறு தணிக்கைக்கு உத்தரவிட மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு என்ற 2021 திரைப்படத்துறை திருத்தச் சரத்தை எதிர்த்து "கலை சார்ந்த விஷயங்களில் அரசு தலையிடுவது படைப்பாளிகளின் கருத்துச் சுதந்திரத்தைச் சிதைத்துவிடும்" என்று எதிர்ப்புக்குரல் எழுப்புகிறார்கள். 1952-ம் ஆண்டு திரைப்படத்துறை சட்டம் அமலுக்கு வந்த பிறகு, ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் அச்சட்டத்தின்படியே தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வெளிவந்துள்ளன.
தணிக்கைக்கு உட்படுத்தப்பட்ட எல்லா படங்களுக்கும் சான்றிதழ் கிடைத்துவிட்டது என்று சொல்ல முடியாது. இன்னும் சொல்லப் போனால் கடந்த காலங்களில் தான் Censor Board மிகவும் கடுமையாகவே நடந்து கொண்டிருக்கிறார்கள். அண்மை காலத்தில் Censor Board என்பதை Central Board Of Film Certification என்று பல படிகள் குறைத்து சான்றிதழ் வழங்கும் ஆணையமாக மாற்றப் பட்ட பின்னரே, பொறுப்பற்ற முறையில் புற்றீசல் போல பல திரைப்படங்கள் வந்தவண்ணம் உள்ளன.
ஒரு திரைப்படத்திற்கு Censor Board அல்லது Central Board Of Film Certification அனுமதி அளித்த பிறகு அரசால் கூட தலையிட முடியாத சூழல் இருக்கின்ற காரணத்தினால் தான் ஆட்சேபனைக்குரிய திரைப்படம் வெளியாகும் திரையரங்குகள் முன்னால் போராட்டங்களும், வன்முறைகளும் நடந்தேறுகின்றன. தவறான திரைப்படங்களால் பாதிக்கப்படுவோருக்கு இன்று வரையிலும் நீதிமன்றம் செல்வது மட்டுமே தீர்வாக இருக்கிறது.
'சண்டியர்' படப்பெயர் மாற்றத்திற்கு நாம் மக்களைத் திரட்டி பெரும் போராட்டம் நடத்த வேண்டி இருந்தது; 'கொம்பன்' பட வன்முறை காட்சிகளை நீக்க நீதிமன்ற போராட்டம் நடத்தினோம். அண்மைக்காலமாக திரைப்படங்களால் இந்தியா முழுமைக்கும் சமூகத்தில் பல்வேறு சட்ட-ஒழுங்கு பிரச்சினைகள் உருவாகின்றன. எனவே,அதை எதிர் கொள்ளவே இப்பொழுது மறு தணிக்கைக்கு உத்தரவிடும் அதிகாரத்தைச் சட்டமாக்கத் திருத்தச் சட்டம் கொண்டுவரப்படுகிறது.இது போன்ற ஒரு மறுதணிக்கை செய்ய சட்டத்தில் இடமிருக்க வேண்டும் என்பதைத்தான் 'புதிய தமிழகம் கட்சி' தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. நாம் மட்டுமல்ல; திரைப்படப் பெயர், கதை, வசனங்கள், காட்சிகளால் பாதிக்கப்பட்டு நீதிமன்றமே தீர்வு என்று இருந்த பலரும் இந்த மறுதணிக்கை சட்டம் திரைப்படத் துறையினரை திருத்துவதற்கான ஒரு திருத்தச் சட்டமாகவே நிச்சயம் வரவேற்பார்கள்.
கருத்துச் சுதந்திரம் பற்றிப் பேசுபவர்கள் எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் படம் எடுப்போம்; அதைத் தணிக்கைக்கு உட்படுத்த மாட்டோம் என்று கூற முடியுமா? Censor Board-க்கு கட்டுப்பட்டுத் தானே திரைத்துறை தனது 75 ஆண்டுகால பயணத்தைக் கடந்து வந்துள்ளது. திரைப்படத் துறையினர் கூறுவதைப்போல கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் எந்த திருத்தச் சட்டமும் இப்போது கொண்டு வரப்படவில்லை. மத்திய திரைப்பட தணிக்கை துறை ஒரு திரைப்படத்திற்குச் சான்றிதழ் வழங்கிய பின்னர் இந்த நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, ஒற்றுமை, பொது அமைதி ஆகியன கருதி மறு தணிக்கைக்கு மத்திய அரசு உத்தரவிட முடியும் என்பது இப்போது புதிதாகச் சேர்க்கப்பட உள்ள சட்டத்திருத்தம். இதைக் கண்டு ஏன் திரைத்துறையினர் பயப்பட வேண்டும்.?
"மடியில் கனம் இருந்தால்தானே, வழியில் பயப்பட வேண்டும்" என்பதற்கிணங்க நேர்மை, தூய்மை அடிப்படையிலான திரைப்பட தயாரிப்பாளர்கள் இச்சட்டம் குறித்து அஞ்ச வேண்டிய அவசியம் இல்லையே?
'பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை' இந்திய அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளாக இருப்பினும் - ‘With Reasonable Restrictions’ அதாவது தேவையான கட்டுப்பாட்டுடன் கூடிய சுதந்திரமே. அதேபோல, 'There Is No Such thing as Absolute Freedom for Cinema and OTT Platform'.
1952-ம் ஆண்டு திரைப்படத்துறை சட்ட விதிகளின்படி இந்திய இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும் குந்தகம் விளைவிக்கக் கூடியதாகவும், நமது நட்பு நாடுகளுக்கு இடையேயான உறவு, பொது அமைதி மற்றும் தனிப்பட்ட அல்லது சமூக அல்லது நாட்டின் மதிப்பிற்கு பங்கம் விளைவிக்கக் கூடியதாகவும், குற்றச் செயல்களைத் தூண்டக் கூடியதாகவும் உள்ள திரைப்படங்கள் பொதுவெளியில் வெளியிடத் தகுதியற்றவை என நிராகரிக்கச் சட்டம் ஏற்கனவே 70 ஆண்டுகளாக அமலில் தான் இருக்கிறது என்பதை படைப்பாளிகள் என்பவர்கள் ஏன் படித்து புரிந்து கொள்ளவில்லை? என்பதே கேள்வி.
ஆங்கிலேயர் காலத்திலேயே தெருக்கூத்து நடத்துவதற்கும், கிராமங்களில் நாடகங்கள் நடத்துவதற்கும் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என்பதே நடைமுறையும், சட்டமும் ஆகும். தெருக்கூத்து நாடகமாகி, ஊமை படங்களாகி, பின்பு கருப்பு-வெள்ளை பேசும் படங்களாகி, தற்போது பலவண்ண டிஜிட்டல் திரைப்படங்களாகவும் நவீன வடிவம் பெற்று விட்டன.திரைப்படங்கள் மகிழ்ச்சிக்காகவும், பொழுது போக்கிற்காகவும் எடுக்கப்பட்ட வரையில் எவ்வித பிரச்சினைகளும் எழவில்லை.ஆனால், அந்தத் துறை தன்னுடைய சுய ஒழுக்கம், கட்டுப்பாடுகளிலிருந்து வெகு தூரம் விலகி, மக்களிடத்தில் ஒற்றுமையை உண்டாக்குவதற்குப் பதிலாக சாதி, மத, இன, மொழி ரீதியான வேற்றுமைகளையும்; அமைதியை உண்டாக்குவதற்குப் பதிலாக அருவாள், வன்முறைக் கலாச்சாரத்தையும்; நாட்டின் பண்பாடு, கலாச்சார உணர்வுகளைப் பேணி காப்பதற்குப் பதிலாக பாலிய உணர்வுகளைத் தூண்டக்கூடிய வகையிலும் முழுக்க முழுக்க எப்பொழுது திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டதோ, அதன் பின்புதான் சமூகத்தின் கோபத்திற்கு ஆளாகி நாடெங்கும் திரைப்படங்களுக்கு எதிராக மக்கள் அணிதிரண்டு போராடும் சூழல்கள் ஏற்பட்டன.
ஒரே மண்ணில் வாழும் மக்களிடத்தில் ஒரு பகுதியினரை உயர்ந்தவராகவும்; மற்றொருவரை தாழ்ந்தவராகவும், ஒரு குழுவைப் பெருமை உடையவராகவும், இன்னொரு குழுவை பெருமை குறைவானவராகவும், ஒரு குழுவை வீரம் செறிந்தவராகவும், ஆளத் தகுதியானவராகவும், 'ஆண்ட பரம்பரை' என்றும் திரைப்படங்கள் கொடுத்த முத்திரை பல்வேறு சமூகங்களுக்கிடையே பிணக்குகளை ஏற்படுத்தி சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைத்தது. இதனால் ஏறக்குறைய 30 ஆண்டுக்காலத்திற்கு மேலாகத் தமிழகம் கலவர பூமியாகவே இருந்ததை எவரும் மறந்து விட முடியாது.
திரைப்படங்கள் மூலம் ஜனநாயகம்; சமத்துவம்; சகோதரத்துவ உணர்வுகள், தேசப்பற்றுகள் வளர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,அதற்கு நேர்மாறாக இந்தியத் தேசத்திற்கு எதிரான சிந்தனைப் போக்குகளைப் போற்றி வளர்க்கக் கூடியதாகவும், கற்பழிப்பு, கொலை, கொள்ளை, திருட்டு ஆகியவற்றிற்குப் புத்தம் புதிய உத்திகளை கற்றுக் கொடுப்பதற்கான தளங்களாகவும் அண்மைக்கால திரைப்படங்கள் மாறிவிட்டன. தனி மனித பிம்பங்களைக் கட்டியமைத்து அதை அரசியலுக்குப் பயன்படுத்துவது, குறுகிய காலத்தில் கோடிகளைக் குவிப்பது, குறிப்பிட்ட சில சாதி, மதங்களைப் போற்றுவது என்பது மட்டுமே திரைத்துறையில் பெரும்பாலானோரின் குறுகிய சிந்தனைகளாக மாறி உள்ளன.மேலும்,தமிழகத்தில் நிலவக்கூடிய பல்வேறு விதமான அரசியல், பொருளாதார, சமூக சிக்கல்களுக்கும் திரைப்படங்களே முதற்காரணமாக விளங்குகின்றன.
.ஜனவரி 26, 1950 அன்று இந்திய அரசியல் சாசனம் அமலுக்கு வந்த போதே இந்தியாவில் சட்டரீதியாக தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது. ஆனால், 'அரிச்சந்திரா' என்ற திரைப்படத்தில் ”நான் ஆதியிலும் ……….. அல்ல, சாதியிலும் ……….. அல்ல, நீதியிலும் ……….. அல்லவே – நானே பாதியில் …………. ஆனேனே” என்று ஒரு சாதியைக் குறிப்பிட்டு டைட்டில் சாங் போடப்பட்டது.'அலிபாபாவும் 40 திருடர்களும்' என்ற திரைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியின் பெயர் மிகச் சாதாரணமாகப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் அப்படங்களில் அந்த வார்த்தைகள் பயன்படுத்தப்பட்ட போது சமூகங்கள் விழிப்பு பெறவில்லை.
திரைக்கதைகளின் நீரோட்டத்தாலும், அதில் நடித்த பெரும் திரை ஆளுமைகளாலும் அவைகள் பெரிதாகவும் வெளியே தெரியவில்லை. அந்த திரைப்படங்கள் எல்லாம் வெளிவந்த காலகட்டத்தில் நாம் பிறக்கவே இல்லை. ஆனால், அக்காலகட்டங்களில் தான் தமிழகத்தின் மேடைகளில் பெரிய அளவிற்கு 'சாதி ஒழிப்பு' பிரச்சாரங்கள் நடைபெற்ற போதும், திரைப்படங்கள் மூலமாக அதிக அளவில் சாதி தீ வளர்க்கப்பட்டதை சாதி மறுப்பாளர்கள் ஏன் எதிர்க்கவில்லை என தெரியவில்லை.
ஆனால்,1990களுக்குப் பிறகு, திரைப்படங்களின் பெயர்களிலும், பாடல்களிலும், வசனங்களிலும், காட்சிகளிலும் சாதிய அம்சங்கள் வலிந்து புகுத்தப்பட்டன. "போற்றி பாடடி பெண்ணே, …………. காலடி மண்ணே" - "எசமான் காலடி மண்ணெடுத்து"– " திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா" போன்ற பாடல்கள் தமிழகமெங்கும் தமிழ் சாதிகளுக்குள் நான் பெரியவனா? நீ பெரியவனா? என்று ஒருவருக்கொருவர் முட்டி மோதி இரத்தம் சிந்தும் நிலைக்குத் தள்ளியது.'மதயானை கூட்டம்' என்ற திரைப்படம் சாதி மாறி திருமணம் செய்த எண்ணற்ற இளைஞர்களையும், பெண்களையும் கௌரவக் கொலை செய்யக் காரணமாக அமைந்தது.'பாய்ஸ்' என்ற ஒரு திரைப்படத்தில் இளைஞர்கள் இடையே அபரிவிதமான பாலியல் உணர்வுகளைத் துண்டும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது.நமது எதிர்ப்பிற்கு பின் சில காட்சிகள் நீக்கப்பட்டு திரையிடப்பட்டது.
'சண்டியர்' என்று பெயரிடப்பட்ட படம் அரிவாள் கலாச்சாரத்திற்கும், கலவரங்களுக்கும் வித்திடும் என்பதால் நாம் கொடுத்த எதிர்ப்பின் காரணமாக அத்திரைப்பட பெயர் மாற்றப்பட்டது.நாம் நீதிமன்றம் வரை சென்றதால் 'கொம்பன்' திரைப்படத்தில் 72 வன்முறை காட்சிகள் நீக்கப்பட்டன. 'பாகுபலி' என்ற திரைப்படத்திலிருந்து நீதிமன்றம் மூலம் ஒரு சாதிய வார்த்தை நீக்கப்பட்டது. 'மண்டேலா' திரைப்படத்தில் ஒரு காட்சியை நீக்க ஒரு குறிப்பிட்ட பிரிவினர் போராடி வருகிறார்கள். 'தசாவதாரம்' படம் ஒரு குறிப்பிட்ட மதப்பிரிவினரின் எதிர்ப்பை சந்தித்தது. 'மருதநாயகம்' இன்னும் வெளியே வரவில்லை. கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வரலாற்றுத் திரைப்படத்தில் ஒரு முன்னணி நடிகர் நடிக்க அனுமதிக்கப் படவில்லை. இந்திய அளவில் 'பத்மாவதி' என்ற திரைப்படம் பல எதிர்ப்புகளுக்குப் பிறகு 'பத்மாவத்' என்று பெயர் மாற்றி வெளியிடப்பட்டது.
நடிகை சர்மிளா தாகூர் விளிம்பு நிலை மக்களைத் தவறாகச் சித்தரித்ததால் இந்தியப் பட்டியலின துறையால் அழைத்து விசாரிக்கப்பட்டார். புகழேந்தி தங்கராஜின் 'காற்றுக்கென்ன வேலி' படம் நீதிமன்றம் சென்ற பிறகே வெளியானது. 'பரியேறும் பெருமாள் – அசுரன்' போன்ற திரைப்படங்களில் 'ஆண்ட பரம்பரை' என்ற சொல் சிலரின் எதிர்ப்புக்குப் பின் நீக்கப்பட்டது. 'தெய்வத்திரு மகன்' என்ற திரைப்படம் 'தெய்வத்திரு மகள்' ஆனது.'ஃபேமிலி மேன் 2' என்ற இணையத்தொடர் ஈழப்போராளிகளை இழிவு படுத்துவதாகவும்; கொச்சைப்படுத்துவதாகவும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இது போன்று மக்கள் சென்சார்களை சந்தித்த படங்கள் இன்னும் எவ்வளவோ உண்டு.
சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களைச் சிறிதும் கணக்கிலே கொள்ளாமல் நாங்கள் பெரிய முதலீடு போட்டு விட்டோம் அதைப் பன்மடங்கு ஆக்குவதற்கு நாங்கள் எப்படிப்பட்ட திரைப்படத்தை வேண்டுமானாலும் எடுப்போம் என படைப்பாளிகள் மனம் போன போக்கில் செயல்படக்கூடாது என்பதற்கு மேற்குறிப்பிட்ட ஒரு சில நிகழ்வுகளே சாட்சிகள். ஒரு திரைப்படத்தைத் தயாரிப்பது என்பது எளிதான காரியம் அல்ல எனவே,அந்த திரைப்படம் தயாரிக்கும் போதே அது ஏற்படுத்தும் தீய விளைவுகளைப் பற்றி கவனத்தில் கொண்டு கதைகள், காட்சிகள், வசனங்கள், பாடல்கள் இடம் பெற வேண்டும் என்பதே ஒட்டுமொத்த சமூகத்தின் எதிர்பார்ப்பு ஆகும்.
எனவே,சாதி, மத, பாலியல்; வன்முறைகள், தேசிய நீரோட்டத்திற்கு எதிரான சிந்தனைகளைத் தூண்டும் திரைப்படங்களை மறு தணிக்கை என்ற சட்டத்தால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். ஒரு படம் திரைக்கு வந்த பிறகு அதைத் தடுப்பது கடினம்.இப்போது உள்ள சட்டத்தைக் கொண்டு எதுவும் செய்ய முடியாத நிலை இருப்பதால்,ஒரு திரைப்படத்தை மறு தணிக்கைக்கு மத்திய அரசு உத்தரவிடக் கூடிய இந்த அதிகார சட்டத் திருத்தம் இன்றைய காலகட்டத்தில் மிக மிக அவசியமானதாகும்.
.தரமான திரைப்படங்களை எடுக்கவும், அது குழந்தைகளைப் பாதிக்காத; ஆபாசம் இல்லாத; அருவருப்பில்லாத; கலாச்சார சீரழிவையும், சாதி, மத பேதத்தையும் உண்டாக்காத; தேசப்பற்றை வளர்க்கும் படங்கள் நிச்சயமாக எதிர்காலத்தில் வெளிவர இந்த 2021 திரைத்துறை திருத்தச் சட்டம் உந்துதலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.2021 திரைத்துறைத் திருத்தச் சட்டம்,திரைப்படத் துறையினரைத் திருத்தும் சட்டமாகவே இருக்கும் !
திரைப்படப் படைப்பாளிகளே! திரைக்கருவில் பிழை இல்லையேல், மறுதணிக்கைக்கு அஞ்ச தேவையில்லை!
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,நிறுவனர் & தலைவர்,புதிய தமிழகம் கட்சி.05.07.2021
மீண்டும் சந்திப்போம்.