#தலைமைப்பண்பு ஊடகங்களில் வாசகர் கடிதம்! P V நரசிம்மராவ்!

பள்ளி மாணவனாக செய்தித்தாட்களை வாசிக்கத் தொடங்கிய நாட்களிலிருந்தே செய்திகளோடு  தலையங்கம், ஆசிரியருக்கு வாசகர் கடிதம் பகுதிகளை ஒரு எழுத்து விடாமல் படிக்கிற பழக்கம் தொற்றிக் கொண்டு விட்டது. இன்றும் செய்திகளுக்கு வாசகர்கள் எழுதும் பின்னூட்டம் ஒன்று விடாமல் வாசிப்பதுண்டு தான்! இவையில்லாமல் செய்தியை முழுதாய் வாசித்த திருப்தி கிடைப்பதில்லை என்பது என்னுடைய அனுபவம்.


தினமலர் நாளிதழுக்கு ஏ.ஸ்ரீவாஸ், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதி, 57 ஆண்டுகளாய் செய்யாததை, அவரது மகனான முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசை, 'ஒன்றிய அரசு' என்றாக்கி புளகாங்கிதம் அடைந்துள்ளார்! என்ன தான் அரசியலமைப்பு சட்டத்தை மேற்கோள் காட்டி 'சப்பைக்கட்டு' கட்டினாலும், அதில் தி.மு.க.,வினரின் தீராத பிரிவினை மோகம் அப்பட்டமாய் தெரிகிறது. அதன் வெளிப்பாடு தான், சுதந்திரத்திற்கு துாண்டு கோலாய் இருந்த 'ஜெய்ஹிந்த்' என்ற வார்த்தையை மட்டம் தட்டும் முயற்சி. சட்டசபையிலேயே, தி.மு.க., கூட்டணி கட்சி தலைவரை அப்படி பேச செய்து, முதல்வர் ஸ்டாலின் ரசித்துள்ளார்.

கடந்த நுாற்றாண்டில் நடந்த போர், பிரிவினை ஆகியவற்றால், உலகம் சந்தித்த சொல்லொணாத் துயரங்கள், நம் கண் எதிரே உள்ளன. பாகிஸ்தான் இன்னும் பயங்கரவாத நாடுகள் பட்டியலிலிருந்து வெளிவர முடியாமல் திணறுகிறது. வங்கதேசத்தில் பழமைவாதிகளின் சேட்டைகளை ஒடுக்க முடியவில்லை. சீனாவின் பிடியில் சிக்கி, ஜனநாயகத்தை தொலைத்து விட்டது, நேபாளம். இலங்கை பற்றி சொல்லவே வேண்டாம்.

பிரிவினை தேடும் எந்த நாடும் முன்னேறியதில்லை. அங்கு சர்வாதிகாரமும், பயங்கரவாதமும் தான் இருக்கும். நம் மாநிலங்களிடையே பல்வேறு பிரச்னைகள் உள்ளன. அதை தீர்ப்பதற்கே, மத்திய அரசுக்கு நேரம் போதவில்லை. இதனிடையே, ஜல்லிக்கட்டு, இடஒதுக்கீடு, நெடுஞ்சாலை அமைத்தல், 'நீட்' என, அனைத்து விஷயத்திலும் தமிழகம், தேசிய நீரோட்டத்திலிருந்து விலகியே நிற்கிறது. இதனால் மாநிலத்தின் வளர்ச்சி தான் பாதிக்கப்படுகிறது. தற்போதைய நிலையில் பயங்கரவாதம், மாநில சுயாட்சி, மத வெறுப்பு, பிரிவினை எண்ணம் முதலியவற்றை ஊக்குவிக்காமல் இருப்பதே, தமிழகத்திற்கு நல்லது.என முடித்திருக்கிறார் 


முன்னாள் பிரதமர் P V நரசிம்மராவ் பிறந்த நூற்றாண்டு இது. இந்தியப்பிரதமர்களில் தகுதிக்கும் மீறி மிகவும் வியந்தோதப்பட்டவர் நேரு என்றால் தகுதிகள் நிறைய இருந்தும் மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்டவர் நரசிம்ம ராவ் என்பது சுதந்திர இந்தியாவின் சீரழிந்த அரசியலின் சாபக்கேடுதான் இல்லையா?

தொங்கு நாடாளுமன்றம், ராஜீவ் காந்தி படுகொலை, பாதாளத்தில் கிடந்த பொருளாதாரம் போன்ற சிக்கல்களுக்கிடையில் பிரதமரானவர் பி.வி.நரசிம்ம ராவ். ஆயினும் அவர் பிரதமராக இருந்தபோது செய்த சாதனைகள் பல. அவற்றுள் முக்கியமானது, கிராம உள்ளாட்சி அமைப்புகளுக்கும் நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அரசமைப்புச் சட்டத்தில் இடம்தரும் வகையில் முறையே 73-வது, 74-வது அரசமைப்புச் சட்டத் திருத்தங்களைக் கொண்டுவந்ததாகும். நரசிம்ம ராவ் பிரதமரானபோது கிராம வளர்ச்சித் துறையின் கேபினட் அமைச்சர் பொறுப்பையும் அவர் வகித்தார். அவருக்கு முன்னரும் பின்னரும் பிரதமர் ஒருவர் கிராம வளர்ச்சித் துறையின் அமைச்சராகப் பொறுப்பு வகித்ததில்லை.

விடுதலை பெற்ற இந்தியாவினுடைய அரசமைப்பின் அடித்தளமாக, தன்னாட்சி பெற்ற வலுவான கிராமப் பஞ்சாயத்துகள் உருவாக்கப்பட வேண்டும் என காந்தி வலியுறுத்திவந்தார். அரசமைப்பு நிர்ணய சபையில் இது குறித்த ஒருங்கிணைந்த கருத்தை உருவாக்க முடியாததால், கிராமப் பஞ்சாயத்துகளுக்கு அரசமைப்புச் சட்டத்தில் உரிய இடம் இல்லாமலே போயிற்று. ராஜீவ் காந்தி கிராம உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசமைப்புச் சட்டத்தில் இடம் தரும் வகையில், நாடாளுமன்றத்தில் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டுவந்தார். மக்களவையில் நிறைவேறிய மசோதாவானது மாநிலங்களவையில் தோல்வியுற்றது. நரசிம்ம ராவ் பிரதமரானவுடன் கிராம வளர்ச்சித் துறையின் அதிகாரிகளை அழைத்து, பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அரசமைப்பு அந்தஸ்தைக் கொடுக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா ஒன்றைத் தயாரிக்கும்படி பணித்தார். அரசமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டுமானால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும். மேலும், மாநிலச் சட்டமன்றங்களில் பெரும்பான்மையான சட்டமன்றங்கள் இந்தச் சட்டத் திருத்தத்தை ஆதரித்துத் தீர்மானங்களை இயற்ற வேண்டும். நரசிம்ம ராவின் சிறுபான்மை அரசால் இதை எப்படிச் செய்ய முடியும் என்ற கேள்வி எழுந்தது. அனைத்துத் தரப்பினரின் பங்கேற்புடன் ஒருமித்த கருத்தை உருவாக்குவது ஒன்றே இதைச் செய்து முடிக்கும் ஒரே வழி என்பதில் பிரதமர் தெளிவாக இருந்தார் என்று ஆரம்பிக்கும் இந்தக்கட்டுரையை இந்து தமிழ்திசை தளத்தில் முழுமையாக வாசித்துப் பாருங்களேன்! தமிழ்நாட்டைச் சார்ந்த திமுக - அதிமுக பிரதிநிதிகள் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அதிகாரங்கள் தருவதைத் தாங்கள் வரவேற்றபோதும் வலுவான மாவட்டப் பஞ்சாயத்துகளை உருவாக்குவதைக் கொள்கைரீதியாக எதிர்ப்பதாகக் கூறினார்கள் என்பது போகிறபோக்கில் சொல்லப் பட்டது தானா?   

தலைமைப்பண்புக்கு உதாரணமாக நரசிம்ம ராவ் என்கிற ஆளுமையின் இன்னொரு பரிமாணத்தைக் காட்டுகிற விதமாக  இந்தக் கட்டுரையை எழுதிய காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் வ.ரகுபதி அவர்களுக்கு நன்றியுடன்! பிரசுரம் செய்த இந்து குழுமத்துக்கும் நன்றி.   

மீண்டும் சந்திப்போம். 

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!