இட்லி வடை பொங்கல்! #83 கொம்பேறித்தாவும் குரங்கிடம் இருந்து பிறந்ததா அரசியல்?

இரண்டு மூன்று நாட்களாகவே செய்திகளில் பரபரப்பாக அடிபட்டுக்கொண்டிருந்த இரண்டு கட்சித்தாவல்கள் ஒருவழியாக நடந்தே விட்டன என்பதில் எந்தவிதமான அதிர்வலைகளையும் அரசியல்களத்தில் காண முடியவில்லை. முகுல் ராய் 2017 இல் திரிணாமுல் காங்கிரசிலிருந்து பிஜேபிக்குத் தாவியவர், மறுபடியும் மம்தா பானெர்ஜியிடமே சேர்ந்து விட்டார். சட்டசபைத் தேர்தல் வெற்றிக்குப்பிறகு மம்தாவின் வெறியாட்டம், பிஜேபிக்காரர்களுக்கு ரேஷன் இல்லை என ஆரம்பித்து  மேற்குவங்கத்தில் மம்தாவை எதிர்ப்பவர்களுக்கு உயிர் வாழ உரிமையே இல்லை என்ற அளவுக்கு விபரீதமாகிக் கொண்டிருப்பதில் முகுல் ராய் துணிந்து நின்றிருந்தால் மட்டுமே ஆச்சரியம்!


மஞ்சுள் வரைந்திருக்கிற இந்தக்கார்டூன்  நன்றாகத்தான் இருக்கிறது என்றாலும் கட்சிதாவியவர்கள் மிகவும் பிரயாசைப்பட்டுத்தான் தாவினமாதிரி சித்தரிப்பு சரி தானா என்ற வலுவான சந்தேகம் எனக்கிருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் சோனியா காங்கிரசிலிருந்து ஜிதின் ப்ரஸாதா வெளியேறி பிஜேபியில் ஐக்கியமாகி இருக்கிறார். கட்சிக்கு நிரந்தரத் தலைவர் வேண்டும் என்று சோனியாவுக்கு கடிதம் எழுதிய 23 பேர்களில் இவரும் ஒருவர் என்பது கொஞ்சம் சுவாரசியமான தகவல். கார்டூனிஸ்ட் சுரேந்திரா ஹிந்து நாளிதழுக்காக வரைந்த இந்த கார்டூன் இன்னும் பொருத்தமாக.


சோனியா பின் நிற்கிற கூட்டம் அப்படியே கரைந்து நரேந்திர மோடி அமித் ஷா பின்னால் அணிசேர்வதாகக் காட்டியிருப்பது கள யதார்த்தம். நரேந்திர மோடியின் இமேஜ் உயர உயர இதர கட்சிகளிலிருந்து பிஜேபிக்கு மாறியவர்கள் ஏராளம், பிஜேபி தலைமையும் அதை ஊக்குவித்தது என்பதையும் மறுக்க முடியாது. இப்போது திரிணாமுலுக்கு முகுல் ராய் திரும்ப வந்ததனால் மம்தா பானெர்ஜி  சாந்த சொரூபியாகிவிடப்போகிறாரா? எல்லோருக்கும் பொதுவான முதல்வராக இருந்துவிடத் தான் போகிறாரா? மோடிக்கு எதிராகத் தம்பட்டம் அடிக்க சிலநாள் இந்தச் செய்தி பயன்படுத்தப்படும் என்பதைத்தாண்டி வேறென்ன?


கம்யூனிஸ்ட் கட்சிகள் இங்கே எந்த அளவுக்குச் சீரழிந்து கிடக்கின்றன என்பதற்கு இந்தத்திருமண அழைப்பிதழே போதுமான சாட்சி. ஒருகாலத்தில் தங்களுடைய இலக்கு என்ன, இலக்கை அடைவதற்கான செயல்திட்டம் என்ன என்பதை தெளிவாக வரையறை செய்து வைத்திருந்த அரசியல் கட்சியாக கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றை மட்டுமே சொல்வது உண்டு. இலக்கையும் செயல்திட்டத்தையும் முதலில் தொலைத்தது CPI வலது கம்யூனிஸ்ட் கட்சி. சோஷலிசத்துக்கும் மம்தா பானெர்ஜிக்கும் முடிச்சுப் போடுகிற வித்தை தெரிந்தவர்கள் அவர்கள் மட்டுமே. 


தலித் உரிமைக்கான இயக்கமாகச் சொல்லிக்கொள்ளும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, முழுநேரத் தொழிலாக எதை வைத்துக்கொண்டிருக்கிறார்கள்? எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்! இந்த மாதிரி உருட்டல் மிரட்டல், கட்டப்பஞ்சாயத்து, வசூல் வேட்டைகளை அடிக்கடி நடத்தி ஜனங்களுக்கு நினைவு படுத்துகிறார்களாம்!  


எதிர்க்கட்சியாக இருந்தபோது ஊரடங்கு நேரத்தில் மதுக் கடைகள் எதற்கு? ஆளும் கட்சியாக வந்தால் டாஸ்மாக் கடைகள் திறப்பு என்பது #DravidianStock திராவிட அவலம் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் Dr P கிருஷ்ணசாமி இன்றைக்கு இது விஷயமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


டாஸ்மாக் கடைகளை மூடிட, கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற தவறுவது ஏன்?

குடி குடிப்போரை மட்டுமல்ல, குடிப்போரின் வீட்டையும், நாட்டையும் கெடுக்க வல்லது. குடிப்பழக்கத்திற்கு ஆளானவர்களின் குடும்பங்கள் பொருளாதாரத்தால் பாதிக்கப்படுவது ஒன்று; உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் என்பது மற்றொன்று. பெருந்தொற்று காலகட்டங்களில் குடிப்பழக்கம் அறவே நிறுத்தப்பட வேண்டும். ஏனெனில் மது பல வழிகளிலும் கரோனாவை அதிகரிக்கக்கூடியது. மதுக்கடைகளில் முக கவசம் மற்றும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் இருப்பதால் மதுபிரியர்கள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதாக நோய் தொற்றிக் கொள்ளும் அபாயம் உள்ளது.
மது ஒவ்வொருவர் உடலிலும் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியை வெகுவாக குறைப்பதால் கரோனா போன்ற பெரும் தொற்றுகள் குடிப்பழக்கத்திற்கு ஆளானோரிடம் எளிதாக தொற்றிக் கொள்வது மட்டுமின்றி, மற்றவர்களுக்கும் பரவுகிறது. மேலும் ஆரம்பக்கட்ட கரோனா அறிகுறிகளைக் குடிப்பழக்கம் மறைத்து விடுகிறது. இதனால் மது பழக்கத்திற்கு ஆளானோர் சிகிச்சை அளித்தாலும் பலன் அளிக்காத நிலையிலேயே மருத்துவ மனைகளில் சேர்க்கப்பட்டு, பெரும்பாலானோர் உயிரிழப்புகளுக்கு ஆளாகின்றனர். டாஸ்மாக் கடைகள் மூலமாக கரோனா தொற்று வேகமாகப் பரவியுள்ளது என்பது கடந்த கால அனுபவங்களாகும்.
கடந்த ஒரு மாத காலமாக டாஸ்மாக் கடைகள் முற்றாக மூடப்பட்டிருந்த நிலையில் கரோனாவின் தாக்கம் ஓரளவிற்குக் குறைந்து வருகிறது. ஆனால் மரணங்களின் எண்ணிக்கை இன்னும் குறையாமல் இருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நேற்று (11.06.2021) தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட தளர்வுகளில் கிராமப்புற மற்றும் தேநீர் கடைகளையும்; தொழில், வணிக நிறுவனங்களையும் கூட திறக்க அனுமதி இல்லாத நிலையில் டாஸ்மாக் கடைகளை மட்டும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதித்திருப்பது எவ்விதத்தில் நியாயம்.?
தேர்தலுக்கு முன் திமுகவால் கொடுக்கப்பட்ட மிக முக்கிய வாக்குறுதிகளில் மதுக்கடைகளைத் திறக்க மாட்டோம் என்பது ஒன்று. அது மட்டுமின்றி கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கின் போது மது கடைகளைத் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டாலின் உட்பட திமுகவினர் தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். கொடுத்த வாக்குறுதியையும், இப்போது ஆட்சிக்கு வந்ததையும் மறந்துவிட்டு தாராளமாகக் குடிக்க ஏதுவாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவது தமிழக மக்களுக்குத் தெரிந்தே தீங்கு செய்வது ஆகாதா?
ஏற்கனவே வருமானம் இல்லாததால், வாங்கிய சிறு சிறு கடன்களைக் கூட கட்ட முடியாமல், கந்துவட்டி கும்பல்களிடம் சிக்கி பல குடும்பங்கள் தத்தளிக்கின்றன. வரும் 14 ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதிலும், மறுநாளான 15 ஆம் தேதி முதல் இரண்டாவது தவணையாக ரூ 2,000 கொடுப்பதிலும் உள்ள மர்மம் என்ன? தொடர்பு என்ன? கடந்த ஒரு மாதமாகத்தான் அடி தடி சண்டை சச்சரவுகள் இல்லாமல் பெண்கள் வீடுகளில் நிம்மதியாக இருக்கிறார்கள்; காவல்துறையும் நிம்மதியாக இருக்கிறது. தாய்மார்களின் நிம்மதியைக் காட்டிலும், கிராம மற்றும் நகர்புற தெருக்களில் நிலவும் அமைதியைக் காட்டிலும், மதுக்கடைகளால் வரும் லாபம் மட்டும் தான் முக்கியமா? தினமும் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டும் கழக கண்மணிகளின் சாராய ஆலைகளின் லாபம் தான் உங்களுக்கு முக்கியமா?
தடுப்பூசிகள் தான் கரோனாவை தடுக்கும் மாமருந்து என்ற அடிப்படையில் தமிழகத்தில் தடுப்பூசிக்கு எதிரான தயக்கம் மெல்ல மெல்ல நீங்கி, மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வரும் நேரத்தில் தடுப்பூசி போடுவதற்கும், போட்டபின்னும் குடிக்க கூடாது என்ற மருத்துவரின் ஆலோசனைகளைக் குடிப்பழக்கத்துக்கு ஆளானோரிடம் எப்படி அமலாக்குவீர்கள்? எனவே, மதுக்கடைகளைத் திறப்பதில் பல்வேறு விதமான உடல், பொருளாதார ரீதியான பாதிப்புகள் மற்றும் சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் காரணிகள் இருப்பதால் டாஸ்மாக் கடைகளை எக்காரணம் கொண்டும் திறக்கக் கூடாது என புதிய தமிழகம் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.
மக்களின் உடல்நிலை, பொருளாதார நிலை, கரோனா பெருந்தொற்று பரவும் அபாயம் பற்றி கவலை கொள்ளாமல், திமுக கழக கண்மணிகளின் சாராய ஆலைகளின் பெரும் லாபத்தை மட்டுமே கணக்கில் கொண்டு டாஸ்மாக் கடைகளைத் திறக்கும் செயலை கண்டித்தும், அனைத்து டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட கோரியும் தமிழகமெங்கும் புதிய தமிழகம் கட்சி சார்பாக டாஸ்மாக் கடைகள் முன்பு போராட்டம் நடத்தப்படும், தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,
நிறுவனர் & தலைவர். புதிய தமிழகம் கட்சி.12.06.2021 

ஓமந்தூரார் மருத்துவமனையை இடம் மாற்றுவதற்கு தன்னுடைய எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு பகிர்வை முகநூலில் எழுதியிருக்கிறார். இங்கே

மீண்டும் சந்திப்போம்.

6 comments:

 1. இன்றைய பதிவில், படிக்க, ரசிக்க நிறைய விஷயங்கள்! 

  ReplyDelete
  Replies
  1. குறைவோ நிறையவோ சொல்லப்பட்ட விஷயங்களின் மீது நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதைச் சொல்லவே இல்லையே ஸ்ரீராம்!

   Delete
  2. உங்கள் இந்த பதிலை எதிர்பார்த்தேன்!

   Delete
  3. எல்லாவற்றையும் கேட்டுத்தான் வாங்கவேண்டி இருக்கிறதே ஸ்ரீராம்!

   Delete
 2. பழைய பாடல் தான்... இன்றைக்கும் அது ஒத்துப் போவது ஆச்சர்யம்...

  JP சந்திரபாபு பாடியிருப்பார்..

  மேடையேறிப் பேசும் போது
  ஆறு போலப் பேச்சு...
  கீழிறங்கிப் போகும் போது
  சொன்னதெல்லாம் போச்சு..

  காசை எடுத்து நீட்டு
  கழுதை பாடும் பாட்டு..
  ஆசை வார்த்தை காட்டு
  உனக்கும் கிடைக்கும் ஓட்டு!..

  கவியரசரின் கை வண்ணம் அது..

  ReplyDelete
  Replies
  1. கண்ணதாசன் கூடவே இருந்து பார்த்தவராயிற்றே துரை செல்வராஜு சார்! இன்றைய அவலங்களுக்குப் பொருத்தமாக நிறையப்பாடல்கள் மட்டுமல்ல வசனகர்த்தா தீட்டிய வசனங்களுமே இருக்கின்றன.

   Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!