தினமணி தலையங்கம் :: தலைமைக்கான தேடல்...!
Last Updated : 31 Aug 2011 05:09:40 AM IST
அண்ணா ஹசாரேயின் உண்ணாவிரதமும் அதைச் சார்ந்து நாடு தழுவிய அளவில்
எழுந்த மக்கள் போராட்டமும்
அடங்கி விட்டிருக்கிறது. லோக்பால் மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு
அனுப்பப்பட்டு, பல்வேறு
ஆலோசனைகளும் பரிசீலிக்கப்பட்ட பிறகு சட்ட முன்வரைவு நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு வைக்கப்படும். இதனாலேயே
பிரச்னை முடிந்துவிட்டது என்றோ, லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டதாலேயே ஊழல் முற்றிலுமாக
ஒழிக்கப்பட்டுவிடும் என்றோ அர்த்தமில்லை.
"ஊழலை
ஒழிக்கவே முடியாது',
"அண்ணா
ஹசாரேயின் இயக்கம் வெறும்
தொலைக்காட்சிச் சேனல்களால் பெரிதுபடுத்தப்பட்ட இயக்கம்',
"இந்த மக்கள்
எழுச்சியின் பின்னால் கார்ப்பரேட் நிறுவனங்கள் இருந்தன',
"அண்ணா ஹசாரேயும்
குழுவினரும் பாரதிய ஜனதாக் கட்சியின் ஆதரவாளர்கள்',
"மக்கள் தெருவில்
இறங்கிப் போராடுவது என்பது மக்களாட்சித் தத்துவத்துக்கு எதிரானது, நாடாளுமன்றத்தைக் கொச்சைப்படுத்துவது”
இப்படி இன்னும் என்னென்னவோ விமர்சனங்கள்
முன்வைக்கப்பட்டன. அவரவர் பார்வை அவரவருக்கு. ஆனால், மக்கள் ஊழலுக்கு எதிராக ஒருமித்த குரலில் தங்கள் கண்டனத்தைத்
தெரிவிக்கத் தெருவில் இறங்கிப் போராடத் தயாராகி விட்டனர் என்பதுதான் யதார்த்த
உண்மை.
லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டு, லோக்பால் அமைப்பு ஏற்படுவதால் ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு
விடாது என்பது அனைவருக்கும் நன்றாகவே தெரியும். ஆனால், அப்படி ஓர் அமைப்பு ஏற்படுவதுகூட நமது அரசியல்வாதிகளுக்கு
ஏற்புடையதாக இல்லையே
என்பதுதான் மக்களின் ஆத்திரத்துக்குக் காரணம். காவல்நிலையங்கள் இருப்பதாலும், சிறைச்சாலைகள் உள்ளதாலும் குற்றங்கள் குறைந்து விடுகிறதா என்ன? அதற்காக, காவல் நிலையமோ, குற்றங்களைக் கண் காணிக்கவும்
தடுக்கவும் தண்டிக்கவும்
சட்டமே வேண்டாம் என்றால் எப்படி?
தொலைக்காட்சிச் சேனல்களின் முனைப்பினால்தான் இந்தப் போராட்டம் வலுப்பெற்றது
என்பது ஏற்புடைய
வாதமல்ல. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் இரண்டு சக்தி வாய்ந்த
தொலைக்காட்சிச் சேனல்கள் அன்றைய ஆளும்கட்சிக்குச் சாதகமாகப் பிரசாரத்தை முடுக்கி விட்டன.
மக்களை ஈர்க்க முடிந்ததா இல்லை ஏமாற்றத் தான் முடிந்ததா?
ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெருவலுத்து வரும் இந்தப் போராட்டத்துக்கு மேலும் வலு சேர்க்க வேண்டிய கட்டாயத்துக்கு
ஊடகங்கள் உந்தப் பட்டன.
ஊடகங்களின் ஆதரவு இல்லாமல் இருந்தாலும், இந்தப் போராட்டம் வலுப்பெற்றிருக்கும்.
ஒரு வார இதழில் வெளிவந்திருக்கும்
கட்டுரையில் குறிப்பிட்டிருப்பது போல, "அண்ணா
ஹசாரே ஓர் எளிய மனிதர். அவர் ஒரு பெரிய சித்தாந்தவாதி அல்ல. அவர் ஒரு காந்தியும் அல்ல. நிச்சயம்
இன்னொரு ஜெயப்பிரகாஷ்
நாராயணனும் அல்ல''.
அந்தக் கட்டுரையாளர் குறிப்பிட்டிருப்பதுபோல, அண்ணா ஹசாரேவுக்கு ஆதரவுக் குரல் கொடுத்தவர்கள் சிறுபான்மைக்
கூட்டமாக இருக்கலாம். ஆனால், ஜனநாயகத்தில் அவர்களும் தவிர்க்க முடியாத
ஓர் அங்கம். ஒரு மகத்தான மாற்றத்துக்கான
அடித்தளத்தை இந்தப் போராட்டம் நிச்சயமாக உருவாக்கும். அதைத்தான் நாடாளு மன்றத் தீர்மானம் உறுதிப்படுத்தி இருக்கிறது.
மக்களாட்சித் தத்துவத்தின் அடிப்படை எதிர்பார்ப்பு, தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகள் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்க
வேண்டும் என்பது. இங்கே தேர்தல் நடக்கிறது, பிரதிநிதிகள் இருக்கிறார்கள், பெரும்பான்மை பலம் கொண்ட கட்சி அல்லது கூட்டணி ஆட்சி அமைக்கிறது.
அமைச்சரவையும் பிரதமரும் நிர்வாகத்தை நடத்துகிறார்கள். நாடாளுமன்றம்
கூடுகிறது, பேசுகிறது, கலைகிறது. ஆனால், இவர்கள் யாரும் மக்களின் உணர்வுகளைப் பிரதி பலிப்பதில்லை என்பதுதான் உண்மை நிலை. தேர்தல் நடப்பதால்
மக்களின் கோபம் வாக்குச் சாவடிகளில் பிரதிபலித்து, தேர்தலுக்குத் தேர்தல் ஆட்சி மாற்றத்தால் தணிந்து விடுகிறது.
அண்ணா ஹசாரே இயக்கத்துக்கு தில்லி, மும்பை, பெங்களூர், ஹைதராபாத், புவனேஸ்வரம் போன்ற நகரங்களில் இருந்த அளவுக்கு உத்வேகமும் உற்சாகமும் சமீபத்தில் சட்டப் பேரவைத்
தேர்தல் நடந்த கேரளம், தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாமில் இல்லாமல் போனதற்கு தேர்தலும் ஆட்சி மாற்றமும் அவர்களது
கோபத்தைச் சற்று தணித்திருந்தது தான் காரணம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒன்றன்பின் ஒன்றாக
வெளிவரும் மெகா ஊழல்களும், அந்த ஊழல்களை மறைப்பதற்கு மத்திய அரசு எடுத்துக் கொண்ட அக்கறையும் தான் மக்களை இந்த அளவுக்கு விரக்தியின் விளிம்புக்கே
அழைத்துச் சென்றிருக்கிறது.
ஒருவேளை அண்ணா ஹசாரேயின் உண்ணாவிரதமும்
லோக்பால் மசோதா பிரச்னையும் ஏற்படாமல் போயிருந்தால், இந்தியாவின் மூன்றில் ஒரு பங்கு மாவட்டங்களில்
தீவிரமடைந்திருக்கும் தீவிர வாதம்
மேலும் பல மாவட்டங்களுக்கும் பரவி இருக்கக்கூடும்.
அரசு அலுவலகங்களிலும், காவல்துறையிலும் காணப்படும் சிறு லஞ்சங்கள்தான் சராசரி குடிமகனை
அதிகமாக அலட்டுகிறது. ஆனால், 2ஜி-யிலும், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளிலும், கடந்த பாஜக தலைமையிலான ஆட்சியில் நடந்த யு.டி.ஐ.
முறைகேடு, சவப்பெட்டி ஊழல்
போன்றவைகளிலும் கொள்ளைபோன பல கோடிகள் அந்தக் கோபத்தைக் கொந்தளிப்பாக மாற்றிவிட்டது.
வெள்ளைக்கார ஆட்சியில் இருந்து விடுதலை
கிடைத்தது போல இன்றைய அரசியல் வாதிகளின்
கொள்ளைக்கார ஆட்சியிலிருந்தும்
விடுதலை கிடைக்க வேண்டும் என்று சராசரி இந்தியர் ஆசைப் படுகிறார்
என்பது தெரிகிறது.
ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருப்பது நமது
நிர்வாக இயந்திரம். ஒழுக்கமற்ற அரசியல் தலைமை. ஊழல் உருவாவதற்கான காரணம் நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை இல்லாமல் இருப்பது.
இதற்கு முதலில் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். லோக்பால் எந்த அளவுக்கு
முக்கியமோ அதைவிட
முக்கியம் நிர்வாக சீர்திருத்தம், நீதித் துறை
சீர்திருத்தம்.
அண்ணா ஹசாரேயின் உண்ணாவிரதம் முடிந்திருக்கிறதே தவிர, சராசரி இந்தியரின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் தலைமைக்கான தேடல் இப்போது தான் தொடங்கி இருக்கிறது.
பொது வாழ்க்கையில் நேர்மையும் தனிமனித
வாழ்க்கையில் தூய்மையும் உள்ள ஒரு தலைமைக்கான தேடல் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு
இப்போது ஏற்பட்டிருக்கிறது.
அதுதான் சராசரி இந்தியனின் பிரச்னைக்கும், வருங்கால இந்தியாவின் வலிமைக்கும் தீர்வாக இருக்க முடியும்!
------------------------------------------------------------------------------------------------------------------------------------
தினமணி தலையங்கம்
பிரச்சினையின் ஆணிவேரைத் தொட்டு எழுதப் பட்டிருப்பதை, இதில் பெயர்களைத்
தவிர்த்து விட்டுப் பார்த்தாலே புரிந்துகொள்ளக் கூடியதுதான்!
நேரு காலத்தில்
இருந்தே பொதுவாழ்க்கையில் நேர்மையான, தனிமனித ஒழுக்கமுள்ள, பொறுப்பாக
செயல் படத்தெரிந்த ஒரு தலைமைக்காக இந்த தேசம் தவமாய்த் தவமிருக்க
ஆரம்பித்து விட்டது.
நேருவிடமிருந்த வசீகரம்,அவரைத் தகுதியுள்ள தலைவராக
மாறக் கொஞ்சம் கூட உதவவில்லை! சமாதானப் புறாவாகக் காட்டிக் கொண்டு
சர்வதேசப் புகழுக்காக ஏங்கிய நேருவின் போக்கு, தேசத்தை இன்றைய தேதி வரை பல
பிரச்சினைகளில் தள்ளி விட்டிருக்கிறது.
காஷ்மீர் பிரச்சினை நேருவின்
தனிநபரின் அகந்தை, இந்த தேசத்துக்கு விட்டுச் சென்றிருக்கிற சீ(ழ்)தனம்!
அவருக்குப் பின் பதவியேற்ற அவருடைய மகள் இந்திரா,மிரண்ட மாடு
எல்லாவற்றையும் முட்டிச் சாய்க்கிற மாதிரியே,தன்னுடைய பாதுகாப்பாற்ற
உணர்வினால் எல்லாவற்றையும் சந்தேகப்பட்டு, எல்லாவற்றையுமே நாசப்படுத்திய
நபராகிப் போனார்.
அவரைத்தொடர்ந்து அரியணை ஏறிய ராஜீவ் காண்டி, கொஞ்சம்
நம்பிக்கை ஊட்டியதென்னவோ உண்மை!ஆனால் அவரைச் சுற்றியிருந்த ஆலோசகர்கள்,
துதிபாடிகள் கூட்டம், ராஜீவை செயல்பட முடியாதவராக்கி வைத்தது. அவருடைய
இத்தாலிய மனைவியின் உறவினர்கள் ஊழலில் ஈடுபட்டதைத்தடுக்க அவர் ஒன்றுமே
செய்யவில்லை அல்லது முடியவில்லை.
ராஜீவின் கொடூரமான மரணத்தைத்தொடர்ந்து, இத்தாலிய மருமகள், தியாக சிகரமாகத் தன்னைக் காட்டிக் கொள்ள நடத்திய நாடகங்கள் இன்றைக்கு ஒவ்வொன்றாக சந்திக்கு வந்து சிரித்துக் கொண்டு இருக்கின்றன.அவரை ஒதுக்கிவிட்டு, தன்னுடைய முகத்தைக் காட்டி ஒட்டுக் கேட்டால், பத்து ஓட்டுக் கூடத்தேறாது என்பதைப் புரிந்து கொண்ட துதிபாடிகள் மட்டுமே இன்றைக்குக் காங்கிரசில் நிரம்பி இருக்கின்றனர்!
இந்தப்பக்கங்களில், இந்தியா இன்றைக்கு சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சினை அத்தனைக்கும் காரணம், ஒரு வலிமையான தெளிவாக முடிவெடுக்கத் தெரிந்த அரசியல் தலைமை இல்லாமல் இருப்பது தான் என்பதை பல முறை பேசியிருக்கிறோம்.அதற்கும் மூல காரணம், எங்கே எது நடந்தால் எனக்கென்ன என்ற நம்முடைய அலட்சியமான மனோபாவம் தான் என்பதையும் பேசியிருக்கிறோம்.
தலைவர்களாக இருப்பவர்கள் பொறுப்பில்லாமல் நடந்துகொள்ளும் தருணங்களில்,அடுத்த வரிசையில் இருப்பவர்கள் சரியாக இருந்தால் சமாளித்துக் கொள்ளலாம். ஒட்டு மொத்தமுமே ஒட்டுண்ணிகளாக இருக்கும்போது,வேரோடு வெட்டிச் சாய்த்து விடுவதைத் தவிர வேறு வழி உதவாது.
காளிமுத்து சொன்னது மாதிரி கருவாடு மீனாகாது!
ராஜீவின் கொடூரமான மரணத்தைத்தொடர்ந்து, இத்தாலிய மருமகள், தியாக சிகரமாகத் தன்னைக் காட்டிக் கொள்ள நடத்திய நாடகங்கள் இன்றைக்கு ஒவ்வொன்றாக சந்திக்கு வந்து சிரித்துக் கொண்டு இருக்கின்றன.அவரை ஒதுக்கிவிட்டு, தன்னுடைய முகத்தைக் காட்டி ஒட்டுக் கேட்டால், பத்து ஓட்டுக் கூடத்தேறாது என்பதைப் புரிந்து கொண்ட துதிபாடிகள் மட்டுமே இன்றைக்குக் காங்கிரசில் நிரம்பி இருக்கின்றனர்!
இந்தப்பக்கங்களில், இந்தியா இன்றைக்கு சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சினை அத்தனைக்கும் காரணம், ஒரு வலிமையான தெளிவாக முடிவெடுக்கத் தெரிந்த அரசியல் தலைமை இல்லாமல் இருப்பது தான் என்பதை பல முறை பேசியிருக்கிறோம்.அதற்கும் மூல காரணம், எங்கே எது நடந்தால் எனக்கென்ன என்ற நம்முடைய அலட்சியமான மனோபாவம் தான் என்பதையும் பேசியிருக்கிறோம்.
தலைவர்களாக இருப்பவர்கள் பொறுப்பில்லாமல் நடந்துகொள்ளும் தருணங்களில்,அடுத்த வரிசையில் இருப்பவர்கள் சரியாக இருந்தால் சமாளித்துக் கொள்ளலாம். ஒட்டு மொத்தமுமே ஒட்டுண்ணிகளாக இருக்கும்போது,வேரோடு வெட்டிச் சாய்த்து விடுவதைத் தவிர வேறு வழி உதவாது.
காளிமுத்து சொன்னது மாதிரி கருவாடு மீனாகாது!
அல்லது
கருணாநிதி சொன்னது மாதிரி, காகிதப்பூ மணக்காது!
அவ்வளவுதான்!