Sunday, March 28, 2010

சண்டேன்னா மூணு! அதில் மூணு படம்! படம் சொல்லும் பாடம்!

பிரேமானந்தா, நித்யானந்தா விவகாரம்  மனித இயல்பாக ஆண் பெண் உறவு என்ற அளவில் தான் இருந்தது! ஏற்படுத்திவைத்திருந்த புனித பிம்பம், சிலருடைய சுயநலன்களுக்காக போட்டு உடைக்கப் பட்டது என்ற அளவில், அவனவன் செய்ததுக்கேற்ற பலனை அல்லது தண்டனையை அனுபவித்து விட்டுப் போகட்டும் என்று போக முடியும்! தப்பு செய்தவன், தண்டிக்கப் பட்டே ஆக வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்துமே இல்லை!

அதே நேரம்,  ஒரு கொலை வழக்கில், அப்ரூவர் உட்பட வரிசையாக இது வரை, 57 சாட்சிகள் தாங்கள் முன்னால் சொன்னதற்கு மாறாகப் பிறழ் சாட்சியம் அளித்து, அந்த வழக்கை ஒன்றுமே இல்லாமல் பிசுபிசுத்துப் போக வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால், அதற்குப் பின்புலம் என்ன,  அரசியல், பணபலம் இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டுமே, அதைப் பற்றி எந்த ஊடகமும், கழகமும் கண்டு கொள்ளவில்லை என்றால் அதற்கு என்ன அர்த்தம்?

இந்தப் பிறழ் கூத்து எல்லாம் இங்கே தான்!

அங்கே, வாடிகன் பொத்திப் பொத்திப் பாதுகாக்கும் விவகாரங்களெல்லாம், இப்போது பொத்தல் பெரிதாகிப் போனதால்  வெளியே வந்து நாறிக் கொண்டே இருக்கிறது! பாதிரிகளுக்கு செக்ஸ் சில்மிஷம் செய்வதற்கு சிறுவயதுப் பையன்கள் தான் வேண்டுமாம்! அப்படி, போப்பின் சுற்றுப் பரிவாரங்களுக்கு சிறு பையன்களை ஏற்பாடு செய்து தந்த ஒரு உள்வட்டப் பாதிரி சிக்கியதில் இருந்தே, இப்போதுள்ள போப் பெனெடிக்ட் மீது, பாலியல் சில்மிஷம், பாலியல் வக்கிரங்களால் பாதிக்கப் பட்டவர்கள் தொடர்ந்து புகார்கள், வழக்குகள் என்று தினசரி மேற்கத்திய ஊடகங்களில் பரபரப்பாக இருக்கிறது. 

வாடிகன், பாதிரிகள் மீதான சூடு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது, அவர்கள் செய்த சில்மிஷங்களைப் போல!

செய்தியின் முழு வடிவமும் இங்கே!

டொனால்ட் மார்ஷல் என்கிற 46 வயது மெக்கானிக், போப் பெனெடிக்ட் பாதுகாக்கும் பாலியல் வக்கிரப்  பாதிரி மர்பியால் பாதிக்கப் பட்டவர் சொல்கிறார்: "போப் ஆவதற்கு முன்னால், மர்பி என்ன செய்தாரென்று நன்றாகத் தெரிந்தும், அதைக் குறித்து ஒன்றுமே செய்யாமல்  இருந்த ஒரு நபரைப் பற்றித் தான் இப்போது பேசிக் கொண்டிருக்கிறோம்!"  இவர், 1977 ஆம் ஆண்டு, பதின்மூன்று வயதுச் சிறுவனாக இருந்தபோது, பாதிரி மர்பியால் பாலியல் வக்கிரத்துக்கு ஆளானவர். மேலும் சொல்வது, " இந்த போப் ஒரு மோசடிப் பேர்வழி, ஒரு வேஷதாரி!" 

தன்னுடைய மோசமான அந்தத் தருணங்களை டொனால்ட் இப்படி நினைவுபடுத்திச்  சொல்கிறார்! அவருடைய அறைக்குப் பாதிரி மர்பி வந்தார், பக்கத்தில் அமர்ந்தார். பைபிளை வாசிக்க ஆரம்பித்தார். "அப்புறம் என்னுடைய முழங்காலில் கையை வைத்தார், முத்தமிட ஆரம்பித்தார், அப்புறம் அவருடைய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள ஆரம்பித்தார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது, அப்போது எனக்குப் பதின்மூன்று வயது தான்.".


பாலியல் வக்கிரங்களை அரங்கேற்றம் செய்வதற்கு, பைபிள் வாசிப்பது ஒரு வழி! என்ன ஒரு கொடுமை?

பாதிரியார்களால் கெடுக்கப் பட்டவர்களுக்கான நிவாரண அமைப்பு 
(Survivors Network of Those Abused by Priests) ஒன்றின் இயக்குனர்  பீடர் ஐஸ்லி,  "பெனெடிக்ட்  இது சம்பந்தமாக அனைத்துத் தகவல்களையும் தரவேண்டும், இங்கே சிறுவர்கள் மீதான பாலியல் வன்முறையை  மூடி மறைப்பதற்கு, மேலே இருப்பவர்கள் செய்த சதியை பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம்!" என்று சொல்கிறார்!

நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான செய்தி இங்கே

இதை எழுதிய பிரான்க் ப்ரூனி ஏனோதானோவென்று எழுதியவர் அல்ல! வாடிகனில் பல வருடங்களாக செய்தியாளராக இருந்திருக்கிறார்.1993 இல்  “A Gospel of Shame: Children, Sexual Abuse and the Catholic Church,” என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார்..  2002 இல் இதன் திருத்தப்பட்ட பதிப்புக் கூட வந்திருக்கிறது. 


 

வீடியோவைப் பார்ப்போம். நமக்குத் தெரிந்ததெல்லாம், அது ஒன்று தானே!
oooOooo 
தனிமனித சுதந்திரம் பற்றிப் பேசுவதில், பீற்றிக் கொள்வதில் அமெரிக்காவுக்கு நிகர் அமெரிக்கா மட்டும் தான்! 
ஸ்டாப், ஸ்டாப், நான் கூகிள் பிரச்சினையைப் பேச வரவில்லை! 

அமெரிக்காவில் நியூ ஜெர்சி மாநிலத்தில்,  பிஸ்கடாவே என்ற நகரம்! போன வருடம் மட்டும், நானூறுக்கும் மேற்பட்ட புகார்கள், நாய்கள் அதிக சத்தம் போட்டுக் குரைப்பது தொந்தரவாக இருக்கிறதென்று! 

நம்மூராக இருந்தால் என்ன செய்திருப்பார்கள் என்பது தெரிந்த விஷயம் தான்! 

ஆனால் அங்கே, நாய்கள் குரைப்பது ஒரு எல்லைக்கு மேல் அதிகமாக இருந்தால், நாயின் உரிமையாளருக்கு அறுநூறு டாலர்கள் வரை அபராதம் விதிக்க வகை செய்யும் சட்டத்தைக் கொண்டு வந்து விட்டார்கள்!யூட்யூபில் இந்த செய்தியை  முதலில் பார்த்தது ஐடிஎன்  செய்திகளில் தான்! அங்கே பார்த்த சுவாரசியமான இரண்டு பின்னூட்டங்கள்.


--அடுத்தாற்போல அவர்கள் அழகாயில்லை என்பதற்காக அபராதம் விதிப்பார்களோ?


-- நாய் என்றால் குரைக்க வேண்டும், இல்லையா?
அமெரிக்கா! ஓ,  அமெரிக்கா!
 
oooOooo 


படம் பாத்தீங்க இல்லையா! நீங்களே பதவுரை, பொழிப்புரை எல்லாம் எழுதிக்குங்க! அப்படியே, இப்படிப்பட்ட ஆசாமிகளிடம்  நம்முடைய பிரதமர் எதுக்கு மண்டியிட்டு, ஒரு மசோதாவைக் கொண்டு வந்தார்னு முடிஞ்சா பின்னூட்டத்தில் வந்து சொல்லுங்க!
oooOooo
 
நம்மூரில் கல்யாணம்,  கருமாதி, தேர்தல் இப்படி என்ன வந்தாலும் ஒருகாலத்தில் கூம்பு வடிவ ஸ்பீக்கர்கள் எட்டு மைல் சுற்றளவுக்குக் கதிகலங்க அடித்துக் கொண்டிருக்கும். 

இப்போது நாகரீகமாக பத்தடி உயரத்திற்கு பாக்ஸ் ஸ்பீக்கர்களை வைத்து உயிரை வாங்குகிறார்கள்.  

பரீட்சை  நேரம், வானொலியின் ஒலி அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள், படிக்கிற மாணவர்களுக்கு இடைஞ்சல் செய்யாதீர்கள் என்ற நளினமான அறிவிப்புக்கள், கேட்டுக் கொண்டிருந்ததெல்லாம் முன்னொரு காலம்! கனவில் தான் மறுபடி பார்க்க முடியும் போல இருக்கிறது!

என் பக்கத்து வீட்டுக்காரிக்கு இரண்டு பிள்ளைகள்! பெண் இப்போது தான் +2 பரீட்சை முடிந்தது! அடுத்து ஒரு பையன், பத்தாவது வகுப்பு பப்ளிக் எக்ஸாம் எழுதிக் கொண்டிருக்கிறான்! அம்மாக்காரி, வீட்டில் டீவீயைப் பெரிதாக அலற விட்டுக் கொண்டு, படம் பார்த்துக் கொண்டிருக்கிறாள்! அல்லது  பெரிதாக சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறாள்! பிள்ளைகளிடம் வம்பு அல்லது செல் போனில் உறவுக்காரர்கள் எவரிடமாவது வம்பு, எல்லாம் எட்டுத் தெருவுக்கு கேட்கிற  மாதிரித் தான்! 

பிஸ்கடாவே சட்டம் இங்கும் வந்தால் எப்படி இருக்கும்?
 

2 comments:

 1. எந்த நாடானாலும், எந்த மதமானாலும் பூசாரிகள் தங்கள் தேவையையும், பணத்தையும் பெற்றுக்கொண்டு சுகபோக வாழ்வு வாழ்கிறாகள் என்பதை எல்லோரும் உணர்த்தால் நலம்.
  இந்து மதமும் விதிவிலக்கல்ல. எந்த மதமும் விதிவிலக்கல்ல.

  ReplyDelete
 2. ஆசிரமம், காணிக்கை சுகபோகம் என்பதெல்லாம், இந்தியாவுக்குப் புதுசு! இங்கே பூசாரிகள், தசம பாகம் கேட்பதில்லை. துறவிகள், தங்களுக்குத் தெரிந்ததை, நாலுபேருக்குப் பயன் படட்டுமே என்ற கருணையில் உபதேசித்து வருகிற ஞான மரபாக மட்டுமே இருந்தது.

  கிறித்தவம் போல ஆரம்பத்தில் இருந்தே காசு பண ஆசை, அரசியல், ஆதிக்கம் என்றிருந்தது இங்கே சமீப காலம் வரை இருந்ததில்லை.

  இன்னும் சொல்ல வேண்டுமானால், இந்த மாதிரிப் போலிகளுக்கு, கிறித்தவ ஜெப ஊழியக் காரர்கள் எப்படி சம்பாதிக்கிறார்கள் என்பதே கூட முன்மாதிரியாக இருக்கக் கூடும்.

  இப்போது, அரசியல்வாதிகள், பெரும் புள்ளிகள் பின்னணியில் இருந்து, நோகாமல் சம்பாதித்த தங்களுடைய கறுப்புப் பணத்தை வெளுப்பாக மாற்ற உதவுகிற சாதனங்களாக, அறக் கட்டளைகள், ஆன்மீக குருமார்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

  இங்கே தமிழகத்தில் நடக்கிற கூத்தே தனி ரகம்!

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்?அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்! அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!

இங்கேயும் பார்க்கலாமே....! Related Posts with Thumbnails