பொழுதைப் போக்க.....பொழுதுபோக்கு நாத்திகம்....!

கடவுள் இருக்கிறாரா அல்லது உண்மையிலேயே இல்லையா?

கடவுள் என்பது சில சுய நலமிகளால் கற்பிக்கப் பட்ட கற்பிதமா அல்லது தவறாகப் புரிந்து கொண்ட கோட்பாடா?

கடவுள் என்பது கற்பிதம் செய்யப் பட்ட மாயையா அல்லது உண்மையா?

இப்படி நிறையக் கேள்விகள், விவாதங்கள், சூடுபறக்க இணையப்பக்கங்களில் அவ்வப்போது நடப்பது தான்.  



சிறு வயதில் பட்டம் விட ஒரு சீசன், அப்புறம் பம்பரம் விட, கோலி விளையாட, நாகரீகம் வளர வளரக் கிட்டிபுல்லாக விளையாடியது கிரிக்கெட்டாகப் பரிணாமம் அடைந்தது, அப்புறம் சீட்டுக் கட்டு ஜமா என்று பல சீசன்கள் வந்து போவது போலவே, தமிழ் வலைப்பதிவுகளிலும், சாரு-ஜெமோ சண்டை ஒரு சீசன்.

அப்புறம் அவர்களை மாதிரியே தங்களையும் கற்பனை செய்துகொண்டு பதிவர்களுக்கு உள்ளேயே நடக்கும் காட்டா குஸ்தி, நீயா-நானா என்று அடித்துக் கொள்வதையெல்லாம் அடித்துக் கொண்டு விட்டு,அப்புறம் 
நீயும்-நானும் நல்ல ஜோடிதான் ரேஞ்சுக்கு டூயெட் பாடுவது இப்படிப் பல சீசன்கள் மாறி மாறி வரும்! கடவுளைப் பற்றிக் கதைப்பதும் ஒரு சீசன் தான்!

இப்படித்தான் நம்ம வால்ஸ் ரொம்பக் காண்டு கஜேந்திரன் கணக்கா, கடவுளைப் பத்திக் கவிதை, செத்த கடவுள், ஆன்மீகப்பயணம், அதுக்கு எதிர் வினை பாகம் ஒண்ணு, ரெண்டுன்னுட்டு
தொடர்ந்து கலக்கிட்டு, இப்ப வேற சப்ஜெக்டுக்குத் தாவியாச்சு! பம்பரம் விடற சீசன் போயி, வேற வெளையாடற மூடு வந்தாச்சு! தருமி ஐயா கடவுள் என்றொரு மாயைன்னுட்டு, உள்ளூர் நாத்திகன் சொல்றதைச் சொன்னா எவன் கேப்பான்னு சந்தேகம் வந்துச்சோ என்னவோ, அதுனால, வெளி நாட்டுல இருந்து இறக்குமதி பண்ணுவோம்னுட்டு ரிச்சர்ட் டாகின்ஸ் எழுதி, இப்ப ஓஞ்சுபோன புத்தகம் The God Delusion அதுலேயிருந்து நான் கண்டெடுத்த முத்துக்கள்னு, ஏற்கெனெவே ஏழு இடுகையை பிட்டு பிட்டா எழுதியாச்சு, இப்ப எட்டாவது பிட் எழுதியிருக்கார்.

இறக்குமதி பண்ண நாத்திகத்துலயாவது கொஞ்சம் புது விஷயம் இருக்கான்னு தேடிப்பாத்தாக்க, அங்க ஒண்ணும் காணோம்

.
இந்தப் புத்தகத்தைப் படித்து மண்டையை உடைத்துக் கொள்வதற்கு முன்னால், தமிழிலேயே, எழுத்தாளர் சுஜாதா "கடவுள் இருக்கிறாரா" என்ற கேள்விக்குக் கொஞ்சம் அறிவியல் கலந்த விடைகளைத் தேடும் விதமாக ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். உண்டு அல்லது இல்லை என்று எந்த கட்சியையும் எடுத்துக் கொள்ளாமல், அறிவியல் பார்வையோடு எழுதப் பட்ட புத்தகம் அது. அதைப் படித்து விட்டு வாருங்கள், விவாதத்தைத் தொடரலாம் என்று முந்தைய பதிவு ஒன்றில் முடித்திருந்தேன்.

இப்போதும், ஒரு விஷயத்தைத் தீர்மானமாகப் பேசுவதற்கு முன்னால், அந்தப் புத்தகத்தை, தமிழில் தானே இருக்கிறது, ஒரு தரம் படித்துவிடும் படி மறுபடியும் சிபாரிசு செய்கிறேன்.

கடவுளைப் பற்றிய உண்மையை எடுத்த எடுப்பிலேயே சொல்லாமல், கொஞ்சம் கொஞ்சமாக, கேட்பவருக்குப் புரிய வேண்டுமே என்று குறைபாடுகள் நிறைய இருந்தாலுமே கூட , சின்னச் சின்ன கதைகளாக, உதாரணங்கள் வழியாகக் , கடவுளைப் பற்றி சொல்வதால், கடவுளை இல்லையென்று சொல்பவர்கள் உணர்ச்சி வசப்பட்டுப் பொங்குகிறார்கள், குமுறுகிறார்கள், கோபப்படுகிறார்கள்.

இல்லை, இல்லவே இல்லை என்று மறுக்கிறார்கள். ஆத்திரம், கண்ணையும் அறிவையும் மறைக்கிறது! கதை வழியாச் சொன்னாக்க ஈசியாப் புரியுமேன்னு பாத்தாக்க, இவங்க கதை வழியா என்ன சொல்றாங்கன்றதையே பாக்காம, கதையில அது ஓட்டை, இது உடசல்னு கதையில மட்டுமே நின்னுடறாங்க!

ஆனா, ஆவன்னா என்று ஒவ்வொரு எழுத்தாகச் சொல்லிக் கொடுப்பது, இவர்களுக்குக் கேலிக்குரியதாக இருக்கிறது. எழுத்துக் கூட்டிப் படிக்கக் கற்றுக்கொண்ட பிறகு, ஆனா, இம்மன்னா மானா=அம்மா என்று படிக்கவேண்டியது இல்லை தான்! அதற்காக, ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு, ஒவ்வொரு எழுத்தாக எழுத்தைக் கூட்டிப் படிக்கச் சொல்லிக் கொடுக்கிற ஆசிரியர் மீது கோபம் கொண்டால் அது சரியாக இருக்குமா? எடுத்த எடுப்பிலேயே ஆசிரியர், முழுதாகச் சொல்லவில்லை என்பதற்காக, அவருக்கு ஒன்றுமே தெரியாது என்றோ, அவர் சொல்லிக் கொடுப்பதே வீண் என்றோ முடிவு செய்தால் அது சரியாக இருக்குமா?

ஒவ்வொருவருடைய புரிந்துகொள்கிற படித்தரத்திற்குத் தகுந்த ஆசிரியனாக, இறைவனே வந்து அனுபவங்கள் வாயிலாகக் கற்றுக் கொடுக்கிறான் என்று இந்தியத் தத்துவ தரிசனம் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறது. நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் சூழ்நிலைகள் ஒவ்வொன்றுமே நம்முடைய உணர்வின் புரிந்து கொள்ளும் படித்தரத்தைப் பொறுத்தது தான். உணர்வு விரிந்து விழிப்படைய, விழிப்படைய, புரிந்து கொள்வதும்,விரிவடைகிறது.

ஐன்ஸ்டீனுடைய சக்தியைப் பற்றிய சமன்பாட்டை நான்காம் வகுப்பில் இருந்துகொண்டு எனக்குப் புரியவில்லை, என்னுடைய வாத்தியான் ரொம்ப மோசம், வாத்தியானுக்கு ஒன்றுமே தெரியாது என்று சொல்லிக் கொண்டிருந்தால் எப்படி? சில கேள்விகள், பாடம் நடத்துகிற வாத்திகளுக்கே புரிவதில்லை, அப்படிச் சிலபேரும் வாத்தித் தொழிலில் இருக்கிறார்கள். கொடுமை என்னவென்றால், பாடம் படிக்கும் பசங்களோடு சேர்ந்து கொண்டு, சிலபஸ் மோசம்! இதைப் போய்ச் சேர்த்தானே, அவன் இதை விட மோசம் என்று இவர்களுமே கூச்சல் போடுகிறார்கள்!

இப்படிக் கூச்சல் போடும்போது, குறைகள் இருந்தாலும், சொல்லப் படுகிற விஷயத்தை நன்றாக உள்வாங்கிக் கொண்டு, அதில் எந்த அளவுக்கு எடுத்துக் கொள்ளலாம், அதில் இருந்து அடுத்த கட்டத்திற்கு எப்படி உயரலாம் என்வதை மறந்து விடுகிறார்கள்.


குறைகளை அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பதில்லை, அப்படி ஒரு கட்டாயமுமில்லை என்பதைப் பார்க்கத் தவறும்போது, மறுபடியும் ஆரம்பித்த இடத்தில் இருந்து தொடங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுவதை இவர்கள்உணர்வதில்லை.

Don't re-invent the wheel” என்று சொல்வார்கள். திரும்பத் திரும்ப ஆரம்பித்த இடத்திலேயிருந்து ஆரம்பிக்க வேண்டிய நிலைக்குத்தள்ளப்படுகிரவர்களுமே கூட, இப்படி கால விரயம் செய்கிறவர்கள் தான்! வ்வொரு முறை இப்படிக் கால விரயம் செய்யும் போதும், அடுத்த எட்டு என்பது எவ்வளவு நீண்டதாக, பல பிறவிகளுக்கும் அப்பால் என்று தள்ளி வைத்துவிடுகிறது என்பதை மட்டும் இவர்கள் உணரக் கூடுமானால்.......!

நமக்கு முன்னவர்கள் சொல்லி வைத்தது கொஞ்சம் அல்லது நிறையவே குறைகளோடுதான் இருக்கிறது என்று வைத்துக் கொண்டாலும்கூட , எந்த அளவுக்கு அதிலிருந்து பாடம் படிக்க முடியுமோ அந்த அளவுக்குக் கற்றுக் கொள்ள முடிந்தால், அடுத்த எட்டு எடுத்து வைப்பது, அடுத்த கட்ட வளர்ச்சி, மேலே மேலே உயர்வது என்பது இயல்பானதாகிவிடும். அது தான் பரிணாமத்தின் இயல்பான படிக்கட்டுமே கூட!

"பழைய கட்டுமானங்களை உடைப்பதற்கு முன்னால், அதனுடைய சாரம், படிப்பினைகளைக் கற்றுக் கொண்ட பிறகு செய்!" இப்படி ஸ்ரீ அரவிந்தர் சொன்னதை ஏற்கெனெவே ஒரு பதிவில் பார்த்திருக்கிறோம்.

நாத்திகம் பேசுவதில் மட்டுமே குறியாக இருக்கும் நண்பர்கள், அடிப்படையான ஒரு விஷயத்தையே மறந்து விட்டு, கூச்சல் போடுவதில் மட்டுமே அக்கறை காட்டுகிறார்கள் என்பதை, நிறையவே பார்த்தாயிற்று! இன்னமும் இப்படி வெற்றுக் கூச்சல் போட, ஆட்கள் வந்து கொண்டே தான் இருப்பார்கள்.
ஸ்ரீ அரவிந்தர், சுருக்கமாக, நான்கே வரிகளில் சொல்கிற இந்த விஷயத்தைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்! போகும் திசை மறந்து போகாது! போய்க்கொண்டிருக்கிற வேகமும் குறையாது!

Because thou wert given at first imperfect conceptions about God, now thou ragest and deniest Him. Man, dost thou doubt thy teacher because he gave not thee the whole of knowledge at the beginning? Study rather that imperfect truth and put it in its place, so that thou mayst pass on safely to the wider knowledge that is now opening before thee.”

Sri Aurobindo
Thoughts and Aphorisms, Aphorism 470

"One of the greatest comforts of religion is that you can get hold of God sometimes and give him a satisfactory beating. People mock at the folly of savages who beat their gods when their prayers are not answered; but it is the mockers who are the fools and the savages". 


Sri Aurobindo

Thoughts and Aphorisms - 60

இறைவன் இருக்கின்றானா? மனிதன் கேட்கிறான்! அவன் இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்?

என்றும் 

 
கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் என்றும் கண்ணதாசனால் பாடத் தான் முடிந்தது.

தன்னைக் கஷ்டப்படும்படி பிறப்பித்த கள்வனைக் கட்டி வைத்து உதைக்க வேண்டும் என்று கறுவின ஒருவனிடத்தில் கண்ணனே முன்வந்து, இதோ வந்து விட்டேன்! உன் ஆசைப்படி என்ன வேண்டுமானாலும் செய்து கொள் என்று ஒப்புக் கொடுத்த கதையை -->

 
இரண்டு பகுதிகளாக -- ஒன்று மற்றும் இரண்டு படித்துத் தான் பாருங்களேன்!
அப்படியே உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்பதையும் கொஞ்சம் காதோடு வந்து சொல்லிவிடுங்கள்! தெரிந்து கொள்ள மிகவும் ஆவலோடு காத்திருக்கிறேன்!

என்னத்த எழுதி, என்னத்தப் படிச்சி...என்னமோ போங்க!




இரண்டு நாட்களாக ஒரு சலிப்பு!
எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான் படிச்சவன் பாட்டைக் கெடுத்தான்னு சொல்வோமில்லையா? அந்த மாதிரி, நாமெல்லாம் என்ன எழுதுகிறோம், எதுக்கு எழுதுகிறோம்னு கொஞ்சம் அலுப்பு, கூடவே சலிப்பு!

என்னவோ பதிமூணுலட்சத்துக்கும் அதிகமா ஹிட்ஸ் கொடுத்த ஒரு தனிநபர் வலைத்தளத்தை மேய்ந்து கொண்டு இருக்காப்போல எதுக்கு இந்த புல்டப்பு, யாரோ உன்னைய எழுதச் சொல்லி கெஞ்சுற மாதிரியும், என்ன பாட்டுப் பாட, அட என்ன தாளம் போடன்னு நீ தடுமார்ற மாதிரியும் என்னாத்துக்கு இந்த தேவையில்லாத வேலைஎல்லாம்னு கூட இருந்து குடைய நமக்கு ஒரு முரளி மனோகர் அட்லீஸ்ட் ஒரு ஜஸ்வந்த் சிங் கூட இல்லையேன்னு முன்னாலேயே ஏங்கினத்தையும் ஒளிவு மறைவில்லாமச் சொல்லி இருக்கிறேனா இல்லையா?

நாம எழுதலேன்னு இங்கே யாரும்  தவிக்கலேன்னு தெரியும். எழுதறதையும் தொடர்ந்து படிக்க வர்றது ஒண்ணோ, ரெண்டோ பேர் தான்னும் தெரியும். அவங்களும் கூட, அடையாளம் காட்டிக்காம ரீடர்ல வாசிச்சுட்டுப் போயிடறாங்கன்னும் தெரியும். பின்னூட்டப் புயல்கள் எதுவும் இங்க வர்றதில்ல. வந்தா வேலைக்கு ஆகறதில்லேன்னும் அவங்களுக்குத் தெரியும்!
இப்படி எல்லாம் தெரிஞ்சதுக்கப்புறமும் எதுக்கு இந்த அலட்டல், எதுக்கு இந்த நீட்டி முழங்கிப் புலம்பறதுன்னு நீங்க கேக்காட்டி கூட, சொல்றதுக்குத்தான், இந்த ஆரம்பம்!
அடிப்படையில், நான் ஒரு வாசகன். வாசகனாக இருக்க மட்டுமே விருப்பம்.எழுத்தாளர் மாலன் சொல்லிக்கிற மாதிரி அறியப்பட்ட வாசகன்லாம் கெடையாது. கையில என்ன புத்தகம், எவர் எழுதினதா இருந்தாலும், எதைப் பத்தினதா இருந்தாலும், உடனே வாசிச்சுடணும்னு ஒரு வெறியோடு கூடின தவம் சின்ன வயசில இருந்து ஆரம்பிச்சது.
வெறியோடு வாசிக்க வாசிக்க, ஒரு நிதானம் வந்தது, எது நல்ல எழுத்து, எது நம்மை ஆளுகிற எழுத்து, எது நமக்கு நல்லது சொல்கிற எழுத்து, இப்படியெல்லாம் பகுத்துப் பார்த்துப் படிக்கிற பழக்கம் வந்தது. அப்போது கூட, எதிரெதிர் தரப்பு விஷயங்களைக் கூர்ந்து கவனித்துப் படிக்க ஆரம்பித்தபோது, மறைந்திருந்த அல்லது மறைத்து வைக்கப்பட்ட விஷயங்கள் தானாகவே புரிய ஆரம்பித்த அதிசயமும் நிகழ்ந்தது.  

இந்த வாசிப்பு அனுபவம் இருக்கிறதே, ஒரு தனி சுகம், எத்தனை விஷயங்களைச் சொல்லிக் கொடுத்திருக்கிறது!
அப்படித் தேடித் தேடித் படித்த நிறைய விஷயங்களில், சிலவற்றை பகிர்ந்து கொள்ளவும் ஆசை. வெறும் வாதங்கள், பட்டி மன்றங்கள், அல்லது தூய தமிழில் 'மொக்கை'யாக நின்றுவிடுவதில் எனக்குப் பழக்கம் இல்லை.


இனி நேரடியாகப் படித்த சில விஷயங்களில் இருந்து...!
நாளை ஞாயிறு மதியம் சென்னை மயிலை கற்பகாம்பாள் நகரில், தமிழ் மரபு அறக் கட்டளையின் எட்டாவது ஆண்டு நிறைவு விழா நடக்கும் செய்தியை முந்தைய பதிவில் சொல்லியிருந்தேன். தமிழ் மரபு அறக்கட்டளையின் அங்கமாக, கூகிள் வலைக் குழுமத்தில் மின்தமிழ் என்ற பெயரில் நடத்தி வருவதையும் சொல்லியிருந்தேன்.

ஒன்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் அங்கத்தவர் அத்தனை பேருக்கும் வணக்கத்தையும், வாழ்த்தையும் சொல்லுகிற விதமாக......

எழுத்து என்றால் இதுவல்லவா எழுத்து! நாமும் என்னமோ எழுதிக் கொண்டிருக்கிறோமே என்று என்னையே கேள்வி கேட்டுக் கொள்ளவும்....ஒரு வாசகனாய் என்னுள் நிகழ்ந்த அற்புதமான அனுபவத்தையும் தந்த ஒரு சிறு பகுதியை மின்தமிழ் வலைக்குழுவில் வெளியான எழுத்து என்றால் இப்படியல்லவோ இருக்கவேண்டும் என்ற ஏக்கத்தை என்னுள் விதைத்த பகுதியை, அப்படியே தருகிறேன்.
 
நான் பதில் சொல்லப் போவதில்லை!
எனக்குத் தெரியாது. ஆனால் ஒரு சுருக்கு வழி மட்டும் தெரியும். நீங்கள் ஒரு மண்டலம் விரதம் இருந்து என் மனம் கோணாமல் நடந்து கொண்டால் ஒரு வேளை நான் சொல்லக்கூடும், ரகசியமாக உங்களுக்கு மட்டும்!

சரி போகிறது! மின்தமிழ் அனபர்களுக்கு விதிவிலக்கு.

பக்தி என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேறு எங்கும் அலையாதீர்கள்.

ஸ்ரீவைஷ்ணவ வியாக்கியானங்களைப் பரிச்சயப் படுத்திக்கொண்டு, கொஞ்சம் இதனால் என்ன லாபம் அதனால் என்ன லாபம் என்ற உங்கள் வியாபார புத்தியையெல்லாம் மூட்டைகட்டி வைத்துவிட்டு, பொய்யாய்ப் பழங்கதையாய் மெல்லப் போகும் நாட்களுக்கு நெஞ்சம் மிக நாணி, 'நான் பண்ணாத ஆகாத்தியமெல்லாம் பண்ணி பார்த்துவிட்டேனடா சாமி! இனி என் கையில் எதுவும் இல்லை. எதுவானாலும் உனக்கே பாரம்' என்று இருகையும் விட்டு திண்ணையில் ஒரு ஓரமாக அமர்ந்து ஸ்ரீவைஷ்ணவ வியாக்கியானம் ஒன்றைத் திறந்து படித்துப் பார்த்திருக்கிறீர்களா?
அங்கே கடவுள் பிரத்யக்ஷமாகப் பேசும். கடவுள் தனக்கு மிகவும்
பிடித்த இடமாக அதைக் கொண்டதால்தான் அந்த நூல்களுக்கே 'பகவத்
விஷயம்' என்று பெயர் வந்தது. பகவானை விஷயமாகக் கொண்டதால் பகவத்
விஷயம், பகவான் தனக்கு இஷ்டமான ராஜ்யமாக, விஷயமாகக் கொண்டதால் பகவத் விஷயம் என்றபடி. பக்திக்கு ஸ்ரீவைஷ்ணவம், பயபக்திக்கு வேறு எதை வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளுங்கள்.

சரி பக்தி என்றால் என்ன என்று ஒரு குறிப்பு வேண்டுமா?

ஸ்ரீராமகிருஷ்ணரிடம் போவோம் வாருங்கள். 'ஞானம் பிரம்மத்தின் வாசல் திண்ணை வரை போகும். ஆனால் பக்தி பிரம்மத்தின் அந்தப்புரத்திற்குள் போய் வளையவரும்' எப்படி இருக்கிறது கதை?
சரி அப்படியே ஒரு நடை ஆண்டாளிடம் போனால் 'எற்றைக்கும் ஏழ் ஏழ்
பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆள்
செய்வோம்.--- மற்றை நம் காமங்கள் மாற்று' 'உன்தன்னோடு உறவேல்
நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது' அது என்ன மற்றை நம் காமங்கள்?
காசு பணமா? உலக ஆசைகளா? ச்சே ச்சே .... அந்த பிசுநாரியெல்லாம்
கழண்டுபோய் மாமாங்கமாயிடுத்து. இப்ப அது இல்லை பிரச்சனை. பின் என்ன
காமங்கள்? ஒன்றுமில்லை. இந்த முக்தின்னு சொல்றாளே, அதுவும் அங்க
போயி வைச்ச கண்ணு மாத்தாம முழிச்சுப் பார்த்துண்ட்ருப்பான்னு
சொல்றாளே, அதுக்காக அப்படியே யோகத்துல உட்கார்ந்து
அந்தர்யாமி தர்சனம்னு சொல்றாளே, அந்தமில் இன்பத்து நாட்டத்துல
அவன்கிட்ட மோக்ஷம் தா மோக்ஷம் தான்னு தவம் கிடக்கிறாளே, அவன்
முக விலாசம் என்னன்னு பாக்காம கேட்டது கிடைச்சா போதும்னு தனக்காக முக்தி, தனக்காக ப்ரம்ம பிராப்தின்னு முனிவரர் யோகிகள் தவசிகள் கணக்கா விடுவிடுன்னு இருக்காளே இந்தக் காமம் எல்லாம் வேண்டாம்பா. 'உன்தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்று' 'பெறினும் வேண்டேன்' என்று சொன்னவர் வழிவந்தவா நாங்க இல்லையா?
ஒரு வைஷ்ணவர் சொன்னாராம், 'நான் பண்ணின பாபத்துக்கு'

'இரும் நீர் என்ன பாபம் பண்ணினீர்?'

'அவனோட சொத்து இந்த ஆத்மா. இதை என்னுடையதுன்னு ஆத்ம அபஹாரம் பண்ணேனே, ஆத்ம திருட்டு பண்ணினேனே, இப்பேர்பட்ட எனக்கு இருக்கற நரகம் பத்தாது. இனிமே புதுசா சிருஷ்டி பண்ணனும்.

ஓஹோ!

ஆனா! அவனுடைய பரம கருணை ஸ்வபாவத்தை ஆழ்ந்து நாம் புரிந்து
கொள்ள புரிந்து கொள்ள, அவனிடம் ஏற்கனவே இருக்கற நித்ய விபூதி
பத்தாது எனக்குத் தருவதற்கு. புதிதாக ஒரு நித்ய விபூதி அவன் ஏற்படுத்தணும். என்னை நோக்கினால் இருக்கும் நரகம் பத்தாது. அவனை நோக்கினால் இருக்கும் நித்ய விபூதி பத்தாது. என்ன பக்தின்னா புரியறதா? இன்னும் புரியாது. ஏன் என்றால் நமக்கு அந்த வலி தெரியாது. பிள்ளை பெற்றவளுக்குத்தான் பேற்று வலி தெரியும்.

ஒரு சம்பவம் சொல்கிறேன் அப்பொழுது புரியும்.
.
சொல்கிறேன் என்றவுடனேயே என் கண்கள் அழுகின்றன. ச்சே ச்சே நான் அழுவேன்னு நினைக்கிறீங்களா? அதெல்லாம் கல்லுளி மங்கன். இந்தக் கண்கள் ஒரு விவஸ்தை கெட்டது. திடமா இருக்கத் தெரியவில்லை.

பிள்ளைத் திருநறையூர் அரையரும் அவருடைய சிறு பிள்ளையும் துருக்கப் படையெடுப்பின் போது கர்ப்பகிரகத்தில் பெருமாள் திருமேனிக்குக் சூழும் தீயின் வெப்பம் உறைக்காமல் இருக்கக் கட்டிக் கொண்டு கிடக்கிறார்கள். இவர்களை சூறையாடுகிறது நெருப்பு. வேகிறது உடல்.
 அரையருக்கு அந்தச் சிந்தனை எல்லாம் இல்லை. பெருமாளின் திருமேனிக்கு நோகுமே! சிறுவன் என்ன செய்வான் பாவம்!
'நாயன்! உடல் நோகிறதே! தாங்கமுடியவில்லையே' என்றானாம்.  
அரையர், 'குழந்தாய்,சற்றுப் பொறுத்துக் கொள்ளடா! இதோ விரஜா நதிக்கு
சமீபத்தில் வந்துவிட்டோம். ஆற்றைத் தாண்டினால் வைகுந்தம்'

.......அடப்போய்யா..... இதல்லாம் எழுத முடியாது........
இருந்தா பக்தி இருக்கணும் ...... சும்மா
வெத்துக்கு எழுதிண்டு.......
ஹரி ஹரி ஹரி
( ' தேவர்' கட்டளை கடத்தற் கரிதே )

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் எழுதிய "எது பக்தி" என்ற விவாத இழையைப் படித்த பிறகு, அப்படியே உறைந்துபோய், அகம் கரைந்துபோய் அனுபவித்த அந்தத் தருணம்!
நானும் எழுதுகிறேனே! எழுத்து என்றால் இதுவல்லவா எழுத்து!
ஏதோ அத்தி பூத்தது மாதிரி அல்ல, எப்போதுமே மிக அரிய விஷயங்களைக் கொண்டு மின்தமிழ் தமிழன்னைக்கு மின்னெழுத்துக்களால், புதுப்புது மாலைகளாகத் தொடுத்துக் கொண்டிருக்கிறது. கூடவே, தமிழ் மரபை, பேணிக் காப்பதற்கு, ஆவணப் படுத்தும் முயற்சிகளையும் செய்துகொண்டிருக்கிறது.
தமிழ் வாழ்கவென்று கோஷமிடுவது மட்டுமே தமிழை வளர்க்கிற வழியாக நினைக்காமல், வாய்ச் சொல் வீரர்களாக மட்டுமே குறுகி விடாமல், தன்னார்வலர்கள் தமிழ் மரபு அறக்கட்டளையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் ஒன்பதாவது பிறந்த தினத்தைப் பெருமிதத்தோடு வாழ்த்துகிறேன்! மரபுச் செல்வர்களாக மகுடம் சூடும் மூவரை வணங்குகிறேன்!

தமிழ் மணமும், தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபுப் பெருநாளும்!

 படங்களின் மீது சொடுக்கினால் எளிதாகப் படிக்கலாம்!
இரண்டு முக்கியமான தருணங்களின் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்கள், இணையத்தில் வெகு ஜோராக நடந்து கொண்டிருக்கின்றன. ஒன்று தமிழின் முதல் வலைப்பதிவுத் திரட்டியான, "தமிழ்மணம்" ஐந்தாண்டுகளை சென்றஇருபத்துமூன்றாம் தேதி நிறைவு செய்து, ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.

திரட்டி வகைகளில், தமிழில் முதல் முயற்சி என்பதோடு, இன்றைக்கும் நீடிக்கும் முயற்சி என்பதால் தமிழ் மணம் குழுவை, இந்தத் திரட்டியோடு எந்த வகையிலும் சம்பந்தப்படாதவன் என்றாலும், அன்புடன் வாழ்த்துகிறேன்!

தமிழ்மணத்தின் இன்றைய நிர்வாகக் குழுவில் எனக்குத் தெரிந்த ஒரே பெயர் முனைவர் நா.கணேசன் அவர்கள், என்னை அவர் அறியார். ஒரு வலைக்குழுமத்தில் தமிழார்வத்தோடு பங்கு கொண்ட நாட்களில் இவரது எழுத்துக்களையும், பகிர்ந்துகொண்ட விஷயங்களையும் படித்திருக்கிறேன். அவ்வளவுதான் நான் அவரை அறிந்தது. தமிழ்மணத்தை அறிந்த, அதன் நிர்வாகிகளுள் ஒருவரான முனைவர் நா. கணேசன் எழுதுகிறார்:

"‘தமிழ்மணம்’ திரு. காசி ஆறுமுகத்தால் உருவாக்கப் பட்டு இன்றுடன்
ஐந்தாண்டுகள் நிறைவாகி்ன்றன. இணைய மென்பொருள் தொழில் நுட்ப ரீதியில் தமிழ்மணம் தமிழுக்கு மட்டுமல்லாமல் வலைப்பதிவுலகிற்கே ஐந்தாண்டுகளுக்கு முன்பு ஒரு முக்கிய பங்களிப்பு. வலைப்பதிவுகளையும், மறுமொழிகளையும் திரட்டி வகைப்படுத்தி வாசகர்களுக்கு அளிப்பதில் தமிழ்மணம் தன்னால் இயன்றவரை முயற்சி செய்கிறது.

வரும் தமிழ் மீடியா இண்டர்நேசனல் குழுவினரும் இதை தன்னார்வத்தொண்டாகக் கருதி நேரத்தையும் பொருளையும் செலவழித்து வருகிறோம். ஏற்கனவே நாங்கள் சொல்லி வந்துள்ளது போல் தமிழ்ச்சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் தங்களுக்குள்ளே மாறுபட்ட கொள்கைகளும், நோக்கங்களும், செயல்பாடுகளூம் உடையவர்களாக இருந்தாலும் தங்களுடைய கருத்துக்களை சுதந்திரமாகப் பரிமாறிக்கொள்ளக் கூடிய தளமாக இருக்க வேண்டும் என்று தமிழ்மணம் கருதுகிறது. இந்த நோக்கத்தில் உறுதியாக இருந்து தொடர்ந்து செயல்படுவோம் என்று மீண்டும் உறுதியளிக்கிறோம். தொடர்ந்து புரிந்துணர்வுடன் எங்களுடன் ஒத்துழைத்து தமிழ் வலைப்பதிவுலகினைச் செழுமைப்படுத்தி வரும் லைப்பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி."

--தமிழ்மணம் நிர்வாகம் 



தொடர்ந்து எழுதியது தான், வெள்ளத்தில் பிள்ளையார் செய்து, அதன் வயிற்றைக் கிள்ளியே நிவேதனம் செய்த கதையாக, கொஞ்சம் விசித்திரமாகவும் இருக்கிறது.
"இந்த திரட்டிச் சிட்டத்தை அமைத்த‌ பொள்ளாச்சி காசி ஆறுமுகம் இந்த வார விண்மீன்!"
தமிழ்மணம் திரட்டியைத் தனியொரு நபராக, நிரலெழுதி, முதல் இரண்டாண்டுகள் நிர்வகித்தவரை கௌரவிக்கிற முறை இன்னமும் கௌரவமாக இருந்திருக்கலாம்! இப்படி, தமிழ்நாடு அரசு வழங்குகிற விருது மாதிரி, எல்லோருமே "கலை மாமணி" தான் என்றமாதிரி இருந்திருக்க வேண்டாமே என்ற எண்ணம் எழுந்தது.
இணையத்தில் தமிழ்மணம் அளவுக்கு ஆரவாரம், தொடர்பதிவுகள் என்று இல்லாவிட்டாலும் , தமிழ் நாட்டில், சென்னையில் இன்று இருபத்தேழாம் தேதி தொடங்கி, வருகிற ஞாயிறு வரை தமிழ் மரபுப் பெருநாளாகக் கொண்டாடும் நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன.

அவ்வை துரைசாமிப் பிள்ளையவர்களது பெயரன், முனைவர் அவ்வை கண்ணன் நடராசன், சத்தமே இல்லாமல், தமிழ்ப்பணியாற்றிவரும் தமிழ் மரபு அறக்கட்டளையின் எட்டாவது ஆண்டு நிறைந்து ஒன்பதாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தருணத்தைத் தமிழ் மரபுப் பெருநாளாகக் கொண்டாடலாமே என்ற தன் ஆசையை, மின்தமிழ் குழுமத்தில் சில நாட்களுக்கு முன்னாள் வெளியிட்டிருந்தார். 

கிட்டத்தட்ட எண்ணூறு உறுப்பினர்களைக் கொண்ட மின்தமிழ் வலைக் குழுமம், ஒருமித்த குரலோடு ஆசைகளுக்குச் செயல் வடிவம் கொடுக்கும் வேலையில் மும்முரமாக இயங்கி, இன்று தொடங்கி வருகிற ஞாயிறு வரையில் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறது.

தமிழ் மரபு அறக்கட்டளையின் ஆண்டுவிழா குறித்த செய்திகளை


இங்கேமற்றும் இங்கே விரிவாகப் படிக்கலாம்!

தமிழ் மரபுக்கட்டளையின் நிறுவனர்களில் ஒருவரும், வலைத்தள நிர்வாகியுமான திருமதி சுபாஷினி தமிழ்மரபு அறக்கட்டளையைப் பற்றிச் சொல்வதை இங்கே சொடுக்கிக் கேட்கலாம். 


தமிழ் மணம் என்று ஒன்று உருவானதற்கு முன்னமேயே தமிழ் வலைக் குழுமங்கள், தமிழ் நெஞ்சங்களை ஒன்றிணைக்கும் பணியில், திரட்டுகிற உந்துசக்தியாக இன்றைக்கும் வலைக் குழுமங்கள் பங்காற்றிவருகின்றன.  

திரட்டிகளின் பணியை விட, மரபைப் பேணுகிற, பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்கிற பணியை, ஆரவாரமேதும் இல்லாமலேயே, மூன்று தனி நபர்கள் முன்கையெடுத்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். திருமதி சுபாஷினி, முனைவர் நா.கண்ணன், முனைவர் கல்யாணசுந்தரம் மூவரும் தங்களது நேரத்தையும், பொருளையும் செலவிட்டுக் கொண்டு அரும்பணி செய்து கொண்டிருக்கிறார்கள். அதிக விவரங்களை இங்கே பெறலாம்.
மூவருடன் வேறு பல நல்ல உள்ளங்களும் இணைந்தன.. 
நூறு ஆயிரம் என்று நினைத்து விடாதீர்கள்! இன்னமும் பத்துப் பன்னிரண்டு பேர்களைத் தாண்டவில்லை!  
அதனால் என்ன? ஆர்வம் இருந்தால் தனி நபர்களே இங்கே சரித்திரம் படைத்து விட முடியுமே!
தமிழில் கிடைக்கும் பழைய அறிவுச் செல்வங்களை, டிஜிடைசெஷன் என்ற கணினிமயமாக்கிச் சேமித்து வைக்கும் பணியை எந்த பாராட்டு, புகழ், எதையுமே எதிர்பாராமல், செய்துகொண்டிருக்கும் நல்ல உள்ளங்கள் எண்ணிக்கை, இன்னமும் கூடவேண்டும், மற்றைய குழுமங்களில் இருந்து கொஞ்சம் வித்தியாசமாக, இந்த மண் பயனுறவேண்டும் மரபுகள் பேணிக் காக்கப் படவேண்டும் என்ற ஒரே சிந்தையோடு செயல்படும் தமிழ் மரபு அறக்கட்டளைக்கு ஆண்டுவிழா!
30/08/2009, வருகிற ஞாயிறன்று, ஆண்டுவிழாவில், தமிழுக்குத் தொண்டாற்றி வரும் மூவருக்கு "மரபுச் செல்வர்" என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பிக்க இருக்கிறார்கள்.

முதலாவதாக, எழுத்தாளர் கே ஆர் நரசையா 
 
அடுத்து, முனைவர் நா.கணேசன், அவர்கள் 
 
அடுத்து எழுத்தாளர் வி.திவாகர் அவர்கள் 
 
மரபுக்குப்பெருமை சேர்க்கும் விழாவை நடத்துகின்ற நல்ல உள்ளங்களை, வணங்குகிறேன்! மரபுச் செல்வர்களாக ஏற்கெனெவே இருந்தபோதிலும் கூட,விழா எடுத்து அடையாளம் காட்டப்படும் மூவருக்குமே மனமுவந்த வாழ்த்துக்களையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மரபை மதிக்கும் ஒவ்வொரு தமிழனும், தமிழை நேசிப்பவருமே செய்ய வேண்டியது மரபைப் பேணுவதுதான், இல்லையா!
தமிழ் வாழ்க! தமிழ் மரபு வாழ்க!  
அறக்கட்டளையின் முன்னோடிகள் வாழ்க!
மரபுச் செல்வர்களாக மகுடம் சூடும் நல்ல இதயங்கள் வாழ்க! வாழ்க!!

ஆறு மனமே ஆறு! கேள்விக்கும் கதையுண்டு ஆறு!


 சமயத்துல நம்மைப்பத்தி நாம நெனச்சிட்டிருக்கிறதே (நாம தான் எல்லாங்கிற மாதிரி),பிரச்சினையாப் போய்விடுவதும் உண்டுங்க!

பீர்பால் கதைகள், நம்ம ஊர் தெனாலி ராமன் கதைகள், மரியாதை ராமன் கதைகள் மாதிரியே, கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் வாழ்வியல் உண்மைகள் என்று கலந்து கூட்டாஞ்சோறு மாதிரியே, படிக்க சுவையாக இருக்கும்! கேட்டிருக்கிறீர்களா?

இணையத்துப் பக்கம் வந்தோமா, ஏதோ பத்து மொக்கையைப் படிச்சோமா, கை பர பரன்னதும், நாலு மொக்கையைப் பின்னூட்டமாகப் போட்டோமான்னே பொழுது சரியாப் போயிடுது, இதுல எங்க சாமி அதுக்கெல்லாம் நேரம் அப்படீன்னு வருத்தப் படற, படாத வாலிப,வயோதிகப் பதிவர்களுக்காக, ஒரு சின்னக் கதை
 
தமிழ்மணம் கமழும் கதை! வாசனை தூக்கல், மணம் கமழும் பதிவு, இப்படி நாமே சொல்லிக்கலைன்னா எப்படி
 
யாரோ ஒரு கணேசனோ, முருகனோ வந்து, பக்தா உன் பொறுமையை 'மொக்கினோம்', இந்தவார நட்சத்திர மொக்கை நீ தான்னா சொல்லப் போறாங்க? இல்லேன்னா உங்க பதிவை 4000, 4500, 5000,5500, 6000, 6500 ன்னு ரவுண்டு கட்டி, இந்தப்பக்கம் பள்ளப்பட்டி முசல்மான்கள் நடத்துற கடைகள் வாசல்ல சின்னப்பசங்க ஒக்காந்து "வாங்க சார் வாங்க! வாங்க அம்மா வாங்க"ன்னு கூவிக் கூவி அழைச்சுக் கையப்பிடிச்சு கடைக்கு உள்ளார இழுத்துக்கிட்டுப்போற மாதிரி, அவங்களே ஜோதியில கலக்கச் செய்யவா போறாங்க?! செய்யறாங்க! எப்படிச் செய்யறாங்கன்றதுல தான் சூட்சுமமே!

திரட்டும் புரட்டும் பத்தி அப்புறமாப் பாத்துக்கலாம்! மொதல்ல, இப்பக் கதை!

அக்பருக்குத் தன்னோட ஆட்சியில மக்களெல்லாம் எப்படி இருக்காங்கன்னு தெரிஞ்சுக்க ஒரு நாள் ஆசை வந்துச்சாம். தினசரி தனக்கு சவரம் செய்கிற ஒத்தன்கிட்ட கேட்டாரு.ராஜாவுக்கு சவரம் செய்கிறவனுக்குத் தங்கக் காசுல்ல கிடைக்கும்! உடனே அவன் சொன்னானாம்: "ராஜா, ராஜா! உங்க ஆட்சியில சமத்துவம் மலருது! வேற என்னென்னவோ எப்படி எப்படியோ வளருது!மக்களெல்லாம் நீங்க ஊட்டி விட்ட இலவசங்களில் அப்படியே மெய் மறந்து, வாயப் பொளந்து, மூடக் கூட முடியாம அவ்வளவு சந்தோஷமா இருக்காங்க! ஒரு கொறையுமில்லே! என் தருமநிதியே !தயாநிதியே! துரைநிதியே!"

தன்னுடைய ஆட்சியில் கூட  மக்கள் இவ்வளவு சவுக்கியமா இருக்காங்களான்னுட்டு, ராஜாவுக்கோ பெருமை தாங்கவில்லை! சவரம் செய்ததற்கு கூலி போக, இப்படி விவரம் சொன்னதுக்காகவும் கூடுதலாத் தங்கக் காசை அள்ளி அள்ளி வீசினாராம்! தங்கக் காசு கூடக் கெடச்சா, என்ன வரும்? அப்படி வர்றதுக்கு, இன்னிக்குப் பேர் இலவசம்! நாகரீகமாச் சொன்னாப் புள்ளிவிவரம்!
உண்மையை உடைச்சுச் சொன்னாக் கலவரம்!

ராஜாவுக்குப் பெருமை தாங்க முடியாம, பீர்பால் கிட்ட சொன்னாராம்: "பீர்பால் நீயும் இருக்கியே, எப்பப் பாத்தாலும் அது இருந்தா இது இல்ல, இது இருந்தா அது இல்லைன்னுட்டு! பாரு, எனக்கு சவரம் செய்கிற நாவிதனுக்குத் தெரிந்தது கூட உனக்குத் தெரியலையே?அய்யகோ என் தாழ்ந்த தங்கத் திருநாடே!"


நம்ம பீர் பால் இருக்காரே அந்த ஆள் மகா குசும்பு, லொள்ளு, கூடவே புத்தியும் இருக்கறவர். ராஜா கிட்ட உடனே சொன்னா ஏறாதுன்னு, "எனக்கு ஒரு வாரம் அவகாசம் கொடுங்க, நான் தீர விசாரிச்சுட்டுச் சொல்றேன்" அப்படீன்னு சொன்னாராம்.


அக்பருக்கு இந்த மட்டிலாவது பீர்பால் எதுத்து விவரம் சொல்லாம, எதிர்க்கேள்வி கேக்காம ஒப்புத்துக்கிட்டாரேன்னு சந்தோஷம்! சரின்னுட்டு, டைம் கொடுத்தார்.


உடனே, பீர்பாலும் அந்த நாவிதனை ஆளை விட்டு என்ன செய்கிறான்ன்னு கண்காணிக்க ஏற்பாடு செஞ்சார். ராஜாவுக்கு மனம் குளிர்ற மாதிரியே, எடுப்புத் தொடுப்பாகச் சொல்லியே நெறையத் தங்கக் காசு சேர்ந்துபோச்சு. காசை வச்சு என்ன பண்றதுன்னு கூடத் தெரியலை! தினசரி, ராத்திரி எல்லாரும் தூங்கினப்புறம், தங்கக் காசுகளை எடுத்து எண்ணுறதும், அடுக்கி வச்சு விளையாடுறதுமாகவே பொழுது போக்கினதையும் தெரிஞ்சுகிட்டார். ஆறாம் நாள், நாவிதன் சேத்துவச்சு, பாத்துபாத்துப் பூரிச்சுகிட்டிருந்த தங்கக் காசை ஆளைவைத்து லபக்கிட்டு வரச் செய்தாராம்.


ஏழாம் நாள், அக்பர் சவரம் செய்து கொள்வதற்கு முன்னாலேயே பீர்பால் போயி, "ராசா ராசா! இன்னிக்கு உங்க நாவிதரு என்ன சொல்றாருன்னு கேளுங்க"ன்னு சொன்னாராம்.


அதேபடிக்கு, அக்பரும் நாவிதன்கிட்ட "நம்ம ஊர் நிலவரம் எப்படி? மாதம் மும்மாரி பெய்கிறதா? காத்தடிச்சு காத்தடிச்சு ஏத்தி வச்ச தீபங்களில் இருட்டு இல்லாம [இன்னிக்கு பவர்கட்னு ஏதோ சொல்லிக்கிறோமே அந்த மாதிரி] இருக்கா?" அப்படீன்னு வரிசையா, நம்ம வால்பையன் மாதிரித் தொடர் கேள்விகளாக க் கேட்டாரு.


தமிழ் வலைப் பதிவர்கள் மாதிரி, வேறென்ன போனாலும் கவலையில்லே, ஆஹா! வடை போச்சேன்னு மட்டும் இருக்க அந்த அப்பாவி நாவிதனுக்குத் தெரியல. சேத்து வச்ச தங்கக் காசெல்லாம் போச்சேன்னு வருத்தம், கோபம், சோகம், ஏமாற்றம் இப்படி எல்லாம் சேர்ந்து புலம்பினான்:


"என்ன ஆட்சி நடக்குது? ஏழை எளியவர்களுக்குக் கொஞ்சம் கூடப் பாதுகாப்பே இல்லை.


சமத்துவம் பேசி இருக்கறதையும் பிடுங்கிக் கொள்கிற ஆட்சியெல்லாம் ஆட்சியா? பாதுஷான்னு இங்க ஒருத்தர் இருக்காரா? பாத்துகிட்டு சும்மா இருக்காரா?மானாடும், மயிலாடும்னாங்க! நரியும் எலியும் தான் ஆடுதா இந்த ஆட்சியில, நா சொல்லலே, சனங்க பேசிக்கறாங்க! ஊரெல்லாம் ஒரே ஏச்சு! ஒரே அழுகை!" ன்னு கண்ணீரோட கதறினானாம்.

அக்பருக்கு ஒண்ணும் வெளங்கலை. நேத்து வரைக்கும் இந்த ஆட்சியில மானாட, மயிலாடன்னு சிங்கமும் நரியும் கூடி எலிகளும் பூனைகளும் கூட சமத்துவமா இருக்கறதாச் சொன்னவன், இன்னைக்கு இப்படிக் கேக்கறானேன்னு அதிர்ச்சி. என்ன ஆச்சுன்னும் தெரியல, எப்படிப் பதில் சொல்றதும்னும் புரியல. வழக்கம் போல சவரம் பண்ணி முடிச்சதும் ரெண்டு தங்கக் காசை வீசிவிட்டு, நீ போ, நான் பாத்துக்கறேன்னு சொல்லிட்டு, பீர்பாலைக் கூப்பிட்டு அனுப்பிச்சாராம்.


பீர்பால் வந்தாருங்க! அக்பருக்கு அடக்க முடியவில்லை, புலம்ப ஆரம்பிச்சிட்டார்:



"நேத்து வரை உங்க ஆட்சி மாதிரி வருமான்னான். சாதனைத் திலகம், சமத்துவ நாயகன்னு சொன்னான். உங்க ஆட்சியில் மட்டும் தான் ஏழ்மையின் சிரிப்பில் இறைவனைக் காண முடிஞ்சதுன்னு வேற சொன்னான். இப்ப எல்லாத்தையுமே மாத்திச் சொல்றான்."


"பீர்பால், பைத்தியம் பிடிச்சது அவனுக்கா, எனக்கான்னே தெரியலையே! உனக்காச்சும் தெரியுதா சொல்லு."


பீர்பால் இடையில் நடந்த கதையைச் சொல்லி விட்டு, ஒவ்வொருவனும் தன்னை வைத்தே உலகத்தை எடை போடுகிறான். இந்த நாவிதனும் தான் சௌகரியமாக இருந்ததாக நினைத்தபோது எல்லோருமே அப்படி இருந்ததாகவும், தன்னுடையது களவு போனதும், ஊரே திருடர்களால் நிறைந்து போனமாதிரியும் சொன்னான் என்பதைச் சொன்னார்.


அக்பருக்கு அப்பவும் நம்பிக்கை வரலே. பாத்தார் பீர்பால்.

"கேப்பையிலே சுவை மணம் காரம் நெறைஞ்ச நெய் வடியுதுன்னு சொன்னாக்க, கேக்கறவனுக்கு எங்க போச்சு புத்தி? கேக்கறவன் கேணையனா இருந்தாக்க, கேப்பையில் மட்டுமில்ல, பாக்கறது எல்லாத்துலயுமே நெய் வடியும்!"அப்படீன்னு பீர்பால் சுருக்குன்னு சொன்னதும் தான், இதுக்கு மேலயும் கேள்வி கேட்டா தனக்கு மண்டையில ஒண்ணும் இல்லேங்கிற அரசாங்க ரகசியம் வெளியாயிடும்னு ராசா கப்சிப்னு ஆயிட்டாராம்!

கதை முடிஞ்சது, கத்தரிக்காய் காச்சுது, முத்திச் சந்திக்கும் வந்தாச்சு!

எதுக்கு இந்தக் கதை, என்ன கத்தரிக்காய், காய்ச்சு, முத்தி, சந்தைக்கு வந்ததுன்றீங்களா?
கோவிகண்ணன்அங்க பாத்துட்டு  நச்சுன்னு ஒரு பதிவு இங்க போட்டாருங்களா?

நாமளும் அங்கபோய் சும்மா இருக்காம, கருத்து கந்தசாமியா கடமையை  செய்துவிட்டு வந்தோமுங்க. சொன்னதே சிலது தான்! பலதில்  உடன்பட முடியவில்லைன்னு சொல்லிட்டாருங்கோ!  


கிருஷ்ணமூர்த்தி சொன்னது…
/பல கருத்துக்களோடு ஒத்துப்போக முடியவில்லை/ எனக்கும் தான்! மொக்கை போடுவதிலும், வெறுப்பை வளர்ப்பதிலுமே இது வரை பெரும்பாலான தமிழ் வலைப்பதிவுகள், அவைகளையே முக்கியப்படுத்தி, பிரபலப்படுத்திய திரட்டிகளைக் கவனித்துக் கொண்டு இருப்பவன் என்ற வகையில், எனக்கு நிறைய கருத்துக்கள் உண்டு. இணையத்தைப் பயிற்றுவிக்கப் போகிறேன் என்று கிளம்பியிருப்பவர்களையும், அவர்களது செயல்பாடுகளையுமே கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஒரு குறிப்பிட்ட திரட்டியில் இணைவது அல்லது இணையாமல் இருப்பது என்பது என்னுடைய சொந்த விருப்பத்தை மட்டுமல்ல, அந்தத் திரட்டி நிர்வாகம் எப்படி நடந்துகொள்கிறது என்பதையுமே பொறுத்துத் தீர்மானிக்கப்படுகிறது! உங்களுடைய சேவை மாஜிக் மிகவும் நன்றாக இருக்கிறது!//


நியூடன் விதிப்படி அதுக்கு ஒரு எதிர்வினை இல்லாமப் போச்சுன்னா நியூடன் ஐயா புகழ் என்னாகிறது?

அதுதாங்க இது.....பேச்சுப் பேச்சாத் தான் இருக்கோணும் மக்களே! மேல விழுந்து பிராண்டப்படாது!

நயன் தாரா 'பட்டம் பற பற..கோழி பற பற'

அவசரத்துல அம்மிணி பட்டம் பற பறன்னு வுடுற படம் கிடைக்கலே! முடி பறக்கிற படம் தான் கெடச்சுது! கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க!

சந்திரமுகி படத்தில் நயன் தாரா 'பட்டம் பற பற..கோழி பற பற' என்று ஒரு காட்சியில் பட்டம் விட்டுக் கொண்டே பாடுவார். கதாநாயகன், கதாநாயகியின் பட்டத்தை அறுத்து விட்டு, ஆட்டத்தை அடக்கின பெருமிதத்தோடு தொடர்ந்து பாடுவார். அறுந்த பட்டம் மாதிரி நயன்தாரா பட்டம் காற்றில் அலைவதை ரசித்த நினைவு இருக்கிறதா? அறுந்தபட்டமாக, நயன்தாரா முகம் வாடின காட்சி நினைவிருக்கிறதா?

அருண் ஷூரி பாரதீய ஜனதா கட்சியை, அப்படி "அறுந்த பட்டம்" என்று தான் நேற்று என் டி டி வீக்கு அளித்த பேட்டியில் வர்ணித்திருக்கிறார். வென்றவனுக்கு ஊரே சொந்தம் தோற்றவனுக்குத் தானே பகை என்று சொல்வார்களே, அது இதுதான்! இரண்டு தடவை தோற்றவுடனேயே, இந்தமாதிரி, பூனை இளைத்தபோது, எலி எங்கெங்கோ தட்டி 'ஆட்டைக்கு வர்றியா' என்று கேட்கிற கதைதான்!

ஏன் தோற்றோம் என்று காரணம் தேடக் கூட்டம் நடத்தியவர்கள் ஒருவழியாகக் காரணத்தையும் கண்டுபிடித்துவிட்டார்கள்! நரேந்த்ர மோடி, அருண் ஜெயிட்லி, வருண் காந்தி இவர்கள் தேர்தல் சமயத்தில் பொறுப்பற்ற விதத்தில் பேசியது தான் தோல்விக்குக் காரணம் என்று, ஒருவழியாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள்! ஆனால், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதைப் பற்றிப் பேசினதாகக் காணோம்! ஜஸ்வந்த் சிங் புத்தகம் எழுதியிருக்கிறார், ஜின்னாவைத் தவறாகச் சித்தரிக்கப் பட்டதைப் பற்றிப் புத்தகத்தில் எழுதியிருக்கிறார் என்ற காரணத்திற்காக, கட்சியை விட்டே நீக்கியாயிற்று!

வரலாற்றைச் சரியாகப் புரிந்துகொள்வது, தவறுகளைத் திருத்திக் கொள்வது என்பதெல்லாம், பாரதீய ஜனதா மட்டுமல்ல, காங்கிரசுமே கூட அறியாத ஒன்று தான்!ஆனாலும், பாரதீய ஜனதாவில் இப்போது நடந்து வரும் குழப்பங்களைப் பற்றி காங்கிரஸ் விமரிசிப்பது "ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை" என்ற கணக்கில் தான் இருக்கிறது.

பெரியகட்சிகள் கதை தான் இப்படி என்றால், "உலகுக்கே நாங்கள் உபதேசம் செய்யப் பிறந்தவர்கள்" என்ற ரீதியில் கருத்து கந்தசாமிகளாக, எல்லாவற்றிலும் புகுந்து குட்டையைக் குழப்பிக் கொண்டிருக்கும் இடது சாரிகள், தாங்கள் தலைகுப்புற விழுந்து கிடப்பது கூடத் தெரியாமல், 'பாரதீய ஜனதா அவ்வளவு தான்' என்று சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்! போகட்டும், அப்படியாவது தாங்களும் தலைகுப்புற விழுந்துகிடப்பது, வலியெல்லாம் மறந்துவிடும் என்றால், இருந்துவிட்டுப் போகட்டுமே!

ஜஸ்வந்த் சிங் கட்சியிலிருந்து நீக்கப் பட்டதற்காவது வேறு காரணங்களையும் சொல்ல முடியும். அவருக்கும், ராஜஸ்தான் முதலமைச்சராக இருந்த வசுந்தரா ராஜேவுக்கும் ஆகாது. இருவரும், நீயா நானா என்று முட்டிக் கொண்டிருந்தபோது, சத்தமே இல்லாமல், நோஞ்சான் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்து விட்டது! அம்மிணியைப் பகைத்துக் கொண்டு ராஜஸ்தானில் எந்த இடத்திலும் போட்டியிட்டாலும் அம்பேல் என்பதைப் புரிந்து கொண்டதால் தான், ஜஸ்வந்த் சிங் பாதுகாப்பான டார்ஜீலிங் தொகுதிக்கு ஓடி வந்து பாராளுமன்ற உறுப்பினராக முடிந்தது. இந்த நீக்கத்தின் மூலம், சண்டைக் கோழியாகக் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கும் வசுந்தராவை சமாதானப் படுத்தும் முயற்சிக்கு அச்சாரம் போடப்பட்டதாகக் கூட சொல்ல முடியும்!

அருண் ஷூரி..? வலிந்து, 'என்னைக் கட்சியில் இருந்து நீக்குங்கள், நான் ஒரு தியாகியாக, வெளியேறுகிறேன்' என்ற ரீதியில் சவால் விட்டிருப்பதாகவே, அவருடைய பேட்டி இருக்கிறது.

ஆர் எஸ் எஸ் கட்சியை ஏற்று நடத்த வேண்டும். இப்போது யார் நடத்துறாங்கண்ணா?

தலைமையை மாற்ற வேண்டும். ராஜ்நாத் சிங்குக்கு ஆப்பு?

வாஜ்பாய் , 2002 கோத்ரா கலவரங்களுக்குப் பிறகு மோடியைப் பதவியில் இருந்து விலக்க வேண்டுமென்று ஒப்புக்கொண்டதாகவும், அத்வானி அதை தடுத்து விட்டதாகவும், அத்வானியும், ராஜ்நாத் சிங்கும், குறிப்பிட்ட ஆறு பத்திரிகையாளர்கள் வழியாக உட்கட்சி விவரங்களைக் கசிய விட்டுக் கொண்டிருப்பதாகவும், அதே நேரம், தன்மீதும் வேறு சிலர் மீதும் ஒழுங்கு நடவடிக்கைகள் தொடர்வதாகவும் அருண் ஷூரி தொடர்ந்து அம்புகள் வீசியிருக்கிறார்!

தேர்தல் வேலைகளை மிக மோசமாக நிர்வகித்ததற்குப் பரிசாக,மாநிலங்களவையில் ஜெயிட்லிக்குப் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அளித்திருப்பது, ஷூரிக்கு, இன்னும் சிலருக்கும் பிடிக்கவில்லை, அதன் தொடர்ச்சியே, இந்தத் தாக்குதல்கள் என்பது அரசியலைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நன்றாகவே தெரிகிறது. தவிர, ஷூரியின்மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் சீக்கிரமே முடியப்போகிறது. அடுத்த வாய்ப்பு கிடைக்காது என்ற நிலையில், இந்த மாதிரி வம்பைக் கிளப்பி வெளியேற்றப்பட்டால் "தியாகி" ஆகிவிடலாமே!

காங்கிரஸ் கலாசாரம், இந்த நாட்டை மட்டுமல்ல, பதவியைக் கொஞ்சமாவது அனுபவித்துப் பார்த்திருக்கிற அத்தனை பேரையுமே சீரழித்திருக்கிறது. ஒரு தனி நபரின் ஆளுமையை மட்டுமே நம்பிச் செயல் படுகிற அரசியல் கட்சிகள், தாங்கள் சீரழிந்ததுடன், இந்த நாட்டையுமே சீரழித்துக் கொண்டிருக்கின்றன.

காங்கிரசுக்கு, நேரு குடும்பத்தை விட்டால், வேறு தனியான முகம், அடையாளம், பலம் என்பது கிடையாது. நேரு என்ற தனிநபரை மட்டுமே நம்பினதால், கட்சி மட்டுமல்ல, இந்த தேசமும் அனுபவித்து வருகிற பிரச்சினைகள் எப்போதுமே அவர்களுக்குப் புரியாது. முதுகெலும்பு, சுய சிந்தனை, எதுவுமே இல்லாமல், நேரு குடும்பம் பதவி வாங்கிக் கொடுக்கும் வரை மட்டுமே, ஒட்டிக் கொண்டிருக்கும் நபர்களால் ஆனது காங்கிரஸ்.

மாற்றாக ஒன்று வளரவில்லை என்பதாலேயே, இன்னமும்உயிரோடிருக்கும் கட்சி அது.


காங்கிரசுக்கு மாற்று என்று சொன்ன பாரதீய ஜனதா கூட, வாஜ்பாய் என்ற தனிநபரின் மீதிருந்த நம்பிக்கையினால் மட்டுமே ஆட்சிக்கு வர முடிந்தது. முதல் தரம் பதின்மூன்றே நாட்களில் ஆட்சி கவிழ்க்கப் பட்டாலும், அடுத்தமுறை, ஐந்தாண்டுகள் முழுமையாகப் பதவியில் இருக்க முடிந்தது.

ஆர் எஸ் எஸ் வாத்திமார்கள், இதெல்லாம், தங்களுடைய சாதனை என்று நினைத்துக் கொண்டு, அத்வானிகள் அடுத்த பிரதமர் பதவி கனவு கண்டு கொண்டிருந்த போது, ஜனங்கள் தெளிவாகவே, அப்படி இல்லை ஐயா என்று பாடம் சொன்னார்கள்!

இங்கே கருணாநிதி, தன்னுடைய மைனாரிடி நிலைமையைச் சுட்டிக் காட்டிய ஜெயலலிதாவை அவர் எங்களை மைனாரிடி என்று அழைக்கும் வரை அவரைத் திருமதி என்று தான் அழைப்பேன் என்று அபத்தமாகப் பேசியும் கூட ஆட்சியில் இருப்பது, எப்படி?

ஒரு சின்னக் கணக்குப் பாடம்:

தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 234. அதில் பாதியாவது இருந்தால் தான் மெஜாரிடி என்று சொல்வது..அதாகப்பட்டது மெஜாரிடியாக இருக்க 117 அல்லது அதற்கு மேல் உறுப்பினர் வேண்டும். தி.மு.. இப்போது இடைத்தேர்தல்களிலும் பெற்ற 'மோக வெற்றிக்குப் பின்னால் கூட வெறும் 99 தான்! ஒத்து ஊதுகிற காங்கிரஸ் 37 ஒத்து இல்லை என்றால் என்ன ஆகும்? இது தான் கணக்கு.

நீங்கள் கணக்குப்பார்த்து என்ன விடை சொன்னாலும், அது தப்பாகத் தான் இருக்கும். ஏனென்றால் இங்கே கூட்டணி தர்மங்கள் என்பது பங்குபிரித்துக் கொள்வதில் இருக்கும் சாமர்த்தியம், கொள்ளையடிப்பதிலும் ஒரு நேர்மை இதைப் பொறுத்து மட்டுமே இருப்பது இந்த நாட்டைப் பீடித்திருக்கும் பெரிய சாபக்கேடு!

தான் என்ற மமதை, கருணாநிதி இதில் எள்ளளவும் குறைந்தவரல்ல என்றாலும், ஜெயலலிதாவின் கண்களை மறக்கிறது. இந்த மமதைதான் சோனியாவைப் பகைத்துக் கொள்ளச் செய்தது. எம்ஜியார் ஒரே ஒருதடவை, மத்தியில் உள்ளவர்களைப் பகைத்துக் கொண்டதன் விளைவைப் பார்த்துப் பாடம் கற்றுக் கொண்டவர். ஜெயலலிதாவுக்கு அந்தப் பாடம், இன்னமும் புரியமாட்டேன் என்கிறது. போகட்டும், சோனியா இல்லை என்றால் இன்னொரு சானியா, மற்றவர்களையாவது அரவணைத்துப் போயிருந்தால்,அப்போதாவது ஒரு பலன் இருந்திருக்கும்!

பாருங்கள், ஆலையில்லா ஊரிலே இலுப்பைப்பூ சக்கரை என்பது மாதிரி, கொஞ்சம் ஓட்டுக்கள் கூட விழுந்தவுடனே, விசயகாந்து என்னமா டயலாக் பேச முடிகிறது?

ஜனங்களுக்கும் அது தெரிகிறது!


இதில் எலிகளுடைய வீரப் பிரதாபம் ஒன்றும் இல்லை!
பூனை இளைத்துப்போய் விட்டது!!! அவ்ளோதான்!

டிஸ்கி ஒண்ணு:

போகும் திசை மறந்து போச்சுன்னு போன பதிவுல எளுதினது, மெய்யாலுமே ஆயிப் பூடுச்சான்னு சந்தேகப் படறவங்களுக்கு: அதெல்லாம் இல்ல!போகும் திசையில தெளிவாத்தான் இருக்கேன்! பயப்பட வேணாம்!

டிஸ்கி ரெண்டு:

யாரு பெத்த பொண்ணோ, மவராசி உன்பேரப் பாத்ததுமே, ஓடிவந்து படிக்கறாங்க பாரு, டயானா என்கிற நயன்தாரா! உனக்கு நன்றி!

டயானா என்று பெயர் இருந்தாலே, இப்படி அறுந்த பட்டம் மாதிரித்தான் ஆயிடுமோ?
அந்த டயானா தான் அப்படின்னா, இந்த டயானாவும் அப்படி ஆக வேண்டாம் தாயீ, நல்லாயிரு!