காலம் செய்த கோமாளித்தனத்தில்! இந்திய அரசியல்

நண்பர் அசோக்குமார் தினசரி காலண்டர் படம் ஒன்றைத் தனது கூகிள் ப்ளஸ் பகிர்வில் போடுவார். இன்றைக்கு இப்படி சேதிசொல்வதாக!


இதைப்பார்த்தவுடன்  படித்தால் மட்டும் போதுமா திரைப்படத்தில் வரும் இந்தப்பாடல் தான் நினைவுக்கு வந்தது.

   
அறிவற்ற கூட்டம் அருகில் இருந்தால் அறிஞனும் கோமாளி ! படித்ததை எல்லாம் பயன் படுத்ததாவன் முதல்தர கோமாளி ! ரொம்ப படித்தவன் போல் நடிப்பவன் உலகில் எந்நாளும் கோமாளி

இன்றைக்கு விவசாயிகள் தினம்! சரண்சிங் பிறந்த தினம்! என்றவரிகளை மிகச் சாதாரணமாகக் கடந்து போய்விட முடிகிறதா என்ன? விவசாயிகள் தினமாக அறிவிக்கப்பட்டது 1990 இல்! அதுவும் சவுத்ரி சரண்சிங் பிறந்த தினத்தைத்தான் விவசாயிகள் தினமாகக் கொண்டாடுகிறார்கள் என்றால் யார் அந்த சரண்சிங் என்பதைக்கொஞ்சமாவது தெரிந்து வைத்திருக்கிறோமா?

இந்த நாட்டின் ஐந்தாவது பிரதமர்! காங்கிரஸ் அல்லாத இரண்டாவது பிரதமர்! இந்திராகாந்தியின் அரசியல் சூதுகளில் ஆறே மாதத்தில் பதவி இழந்தவர் என்று மட்டும் சவுத்ரி சரண்சிங்கின் சரித்திரத்தைக் குறுக்கிவிட முடியாது.

ஆரிய சமாஜத்திலும், பிறகு ஒரிஜினல் காந்தி காலத்து காங்கிரசில் சுதந்திரப்போராட்ட வீரராகவும் நேரு காலத்தில் உத்தரப்பிரதேசத்தில் முக்கியமான மூன்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராகவும் இருந்தவர் சவுத்ரி சரண்சிங்! 1959 இல் காங்கிரஸ் மாநாட்டில் நேருவின் கற்பனாவாத சோஷலிசத்தை எதிர்த்துக் குரல் கொடுத்ததில் இந்தியா முழுக்க அறியப்பட்டவராகவும் ஆனார்! ரஷ்யபாணி பொருளாதாரக் கொள்கை எல்லாம் இந்தியாவில் எடுபடாது என்று சரண்சிங் எதிர்த்தார். உள்ளூர் விவசாயிகளின் குரலாக அவருடைய குரல் ஒலித்தது. எதிர்க்கருத்துக்களை நேரு புறக்கணித்ததன் விளைவாக அங்கங்கே மாநிலக் கட்சிகள் உருவாகி வலிமைபெறத் தொடங்கிய காலம் அது. காங்கிரசில் இருந்து வெளியேறி 1967 இல் பாரதீய கிரந்தி தளம் என்ற கட்சியைத் தொடங்கிய சூட்டிலேயே ராஜ்நாராயண், ராம் மனோகர் லோஹியா ஆதரவோடு உத்தரப்பிரதேசத்தின் காங்கிரசல்லாத முதல் முதலமைச்சராகவும் ஆனவர்! அப்போது ஒரு வருடம் மட்டுமே நீடிக்க முடிந்ததென்றாலும் மறுபடி 1970 இல் முதல்வரானவர்! 1975 இல் இந்திரா காந்தி கொண்டு வந்த எமெர்ஜென்சி காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்திராவின் எமெர்ஜென்சி காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஜனதா தளம் என்று ஒரே அமைப்பாக ஒருங்கிணைத்தது. சரண்சிங்கின் கட்சியும் அதிலிருந்தது. 1977 தேர்தலில் இந்திராகாங்கிரஸ் மண்ணைக்கவ்வியது. ஜனதா தளத்தின் பிரதமராக மொரார்ஜி தேசாய் தான் இருக்க வேண்டும் என்று ஜெயப்ரகாஷ் நாராயண் விரும்பினார். பிரதமராகவேண்டுமென்கிற ஆசையில் இருந்த சரண்சிங் அதிருப்தியுடனேயே அமைச்சரவையில் துணைப் பிரதமராக இருந்தார், உள்துறை, நிதி இரண்டு துறைகளைக் கையாள்கிறவராகவும்!

மிக அற்பமான காரணங்களால் ஜனதாதளம் என்கிற அற்புதமான மாற்று அரசியல் முயற்சி 1979 இல் கவிழ்க்கப்பட்டது. ஜனதா தளத்தில் இணைந்திருந்த ஜனசங்கம் வெளியேறியது. ஜனதா தளம் (செகுலர்) என்ற புதுப் பெயருடனான மீதமிருந்த கட்சிகளுடைய ஆதரவுபோக இந்திரா காங்கிரசின் ஆதரவையும் சேர்த்துக் கொண்டு சவுத்ரி சரண்சிங் இந்தியாவின் ஐந்தாவது பிரதமராக 1979 ஜூலையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஒருமுகமாகத் திரண்டஎதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை இந்திராகாந்தி பெரும் சூதினால் உடைத்து ஆறேமாதத்தில் சரண்சிங் ஆட்சியைக் கவிழ்த்தார். மறுபடியும் ஆட்சியைப் பிடித்தார் என்பது காலம் செய்த கோமாளித்தனமா? வாக்காளர்களுடைய ஏமாளித்தனமா?

சவுத்ரி சரண்சிங் மிக வெள்ளந்தியான மனிதர். நேரு, வாரிசுகளுடைய சூதுவாதெல்லாம் அறியாத அரசியல் அவருடையது. விவசாயிகளுடைய குரலாக முதன் முதலில் ஒலித்ததும் சரண்சிங்குடைய குரல்தான்!

நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய பழங்கதை இது! இங்கே இணையத்தில் அவரது நினைவகளாக

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!