உயிர் காக்க மருந்தா? அல்லது உயிரைப் பறிக்கும் எமனா?
போலி மருந்துகள் விவகாரத்தில் அரசு,சுகாதாரத் துறை காட்டும் அலட்சியத்தைப் பற்றிய தினமணி தலையங்கத்தைத் தொட்டு சில நாட்களுக்கு முன்னால், ஒரு பதிவு இந்தப் பக்கங்களில் வெளியாகியிருந்தது. உபயோகிக்க வேண்டிய தேதி காலாவதியான மருந்துகளை மறுபடி, லேபில்கள், பாகிங், தேதி மாற்றுதல் முதலான மோசடிகளைச் செய்து புழக்கத்தில் விட்ட ஒரு கும்பலைக் கைது செய்த விவரம் அன்றைய தேதிக்குப் பரபரப்பாகப் பேசப் பட்ட போதிலும் கூட, ஜனங்களின் மறதி, கையாலாகாத் தனம் இவைகளின் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கும் நபர்களால் நன்றாகவே தொடர்ந்து பயன்படுத்தப் பட்டு வருகிற விவரத்தை மத்திய அரசுப் புலனாய்வுத் துறை இந்த மாதம் பன்னிரண்டாம் தேதி முதல் பத்தொன்பதாம் தேதிவரை ஹைதராபாத், விசாகப்பட்டினம், பெங்களுர் நகரங்களில் நடத்திய சோதனைகளில் கண்டு பிடித்திருக்கிறதாம்!
பரிசோதனைக்கு அனுப்பப் பட்டதில், சாதாரணமாகக் காய்ச்சல், தலைவலி, ஃப்ளூ, சளி, வயிற்றெரிச்சல் (அசிடிடி) இவைகளுக்காகக் கொடுக்கப் படும் மருந்துகளில் கலப்படம் செய்து போலியாகத் தயாரிக்கப் பட்டதாகத் தெரிய வந்துள்ளதாக சிபிஐ மேற்குப் பிராந்திய இணை இயக்குனர் ரிஷி ராஜ் தெரிவித்திருக்கிறார். இன்றைய ஹிந்து நாளிதழில், சென்னையிலும் இது மாதிரி சோதனை நடத்தப் பட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
போலிகள்! போலி லேபில் தயாரித்து நூறு எம் எல் மருந்து பத்தொன்பதாயிரம் ரூபாய்க்கு விற்பனை! லிங்கில் முழுச் செய்தியும் இருக்கிறது!
உள்ளூர்க் கலப்படக் கும்பல்கள் போதாதென்று இதிலும் சீனப் பூச்சாண்டி திரும்பின பக்கமெல்லாம் தெரிகிறது! இணையத்தில் விவரங்களைத் தேடியபோது சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப் படும் மருந்துகளின் தரம், நம்பகத் தன்மை எதுவும் தெரியாமலேயே இறக்குமதி செய்யப் பட்ட விதம் சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப் பட்ட விவரமும் தெரிய வந்தது!
இரண்டு மாதங்களுக்கு முந்தையதுதான் என்றாலும் தினமணி நாளிதழின் தலையங்கத்தின் இந்தப் பகுதிகள் இப்போதும் கூட பொருத்தமாக இருக்கின்றன. மாநில அரசின் அக்கறையின்மை அல்லது அலட்சியம்,தமிழகத்தின் சுகாதாரத் துறையைத் தொட்டு அந்தத் தலையங்கம் இருந்தாலும், இப்போது தெரிய வந்திருக்கும் விவரங்களின் அடிப்படையில் மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பற்ற தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக இருக்கிறது. மெட்குரு தளத்தில் வெளியாகி இருக்கும் செய்தி கொஞ்சம் விரிவாகவே, இப்படிக் காலாவதியான மருந்துகள்;, கலப்படம் செய்யப் பட்டுப் போலியாகத் தாரிக்கப் பட்ட மருந்துகள் மத்திய அரசின் சுகாதாரத் துறை நடத்தும் இருபது மருத்துவ மனைகள், மற்றும் அரசு மருத்துவ மனைகளில் புழக்கத்தில் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டதைச் சொல்கிறது.
இன்னொரு செய்தி சொல்வது இப்படி!
The arrests were made following searches conducted by the CBI at various pharmaceutical companies and hospitals in Mumbai, Delhi, Chennai, Nagpur, Pune and Bhopal from where samples of drugs were taken and sent for analysis. The CBI has also registered four cases in Delhi and Chennai against suppliers of spurious medicines.
CBI sleuths nabbed Gurbachan Singh and Navin Gadekar, proprietors of JP Herbal Pharmacy and Nalini Ayurvedic Company, respectively. “When we tested the drugs, it was found that the medicines were adulterated and spurious,” said Rishiraj Singh, CBI joint director (western region). “The medicines collected are ones prescribed for common flu, cold, fever, headache and acidity,” he added.
Samples of 23 different types of medicines from 14 manufacturing companies have been collected and sent to the laboratory for further chemical analysis. Searches were also conducted at the office of the Central Government Health Scheme (CGHS) at Sion. CGHS is the central distribution point for all 28 central government dispensaries across the city.
CBI sleuths have smelt the presence of a large-scale syndicate in the business of producing sub-standard drugs. “This needs to be probed by multiple agencies as we have raided only central government hospitals and chemists. We suspect this is a larger racket,” said Singh.
இப்போதுதான் மோப்பம் பிடித்திருக்கிறார்களாம்!
இப்போது தினமணி நாளிதழில் இரண்டு மாதங்களுக்கு முன்னாலேயே எழுதிய இந்தத் தலையங்கம் சொல்வதைக் கொஞ்சம் கவனமாகப் படியுங்கள்! தமிழக அரசு, சுகாதாரத்துறை என்று வரும் இடங்களில்தமிழகம் மட்டுமே அல்லாமல், மத்திய, மாநில அரசுகள், கூட்டணிகள், அரசு இயந்திரத்தின் பொறுப்பற்றதன்மை, கையாலாகாத் தனம் அல்லது சாதாரண மக்களின் மீது காட்டும் அலட்சியம் என்று மாற்றிப் படித்துப் பாருங்கள்! அப்படியே கச்சிதமாகப் பொருந்துகிறதா?
மருந்துகளின் மொத்தக் கொள்முதல் நிறுவனங்கள் அல்லது மாநில விநியோகஸ்தர்களின் கிடங்குகளில் தொடர்ந்து ஆய்வு நடத்துவதும், அங்கே திரும்பப் பெறப்பட்ட, காலாவதியான மாத்திரை மருந்துகளின் அளவைக் கணிப்பதும், அதை அவர்கள் மருந்து தயாரித்த நிறுவனத்துக்கு அனுப்புகிறார்களா அல்லது என்ன செய்கிறார்கள் என்பதைக் கண்காணிப்பதும் சுகாதாரத் துறையும் மருந்துக் கட்டுப்பாட்டு பிரிவும் செய்ய வேண்டிய வேலை.
மருந்துக்கடைகளிலும் அரசு அதிகாரிகள் ஆய்வு நடத்தி, வாங்கப்பட்ட விற்கப்பட்ட மாத்திரைகளின் எண்ணிக்கையை வைத்தே அந்த மருந்து மாத்திரையின் சந்தை வரவேற்பைக் கணிக்கவும், அதற்கேற்ப சந்தை வரவேற்பின்றி காலாவதியாகும் மருந்துகளின் பெயர்களை வகைப்படுத்தவும் முடியும். இன்றைய கணினி முறையில் இவை யாவுமே சாத்தியம். ஆனால், இதைச் செய்யத்தான் அரசு அதிகாரிகளுக்கு மனமில்லை, ஏன்?
நோவால்ஜின் என்ற உண்மை மருந்துக்கு இணையாக நோவா-ஜின் என்ற, பெயர் ஒலிப்பு முறையில் மட்டும் இசைவாக இருக்கும் மாத்திரைகளை தமிழக அரசு அதிகாரிகள் எப்படி அனுமதிக்கிறார்கள்? அவை எப்படி மருந்துக்கடைகளுக்கு விற்பனைக்கு வருகின்றன?
பல மருந்துகளுக்கு ஒரு "எழுத்துப்பிழை பிராண்டு' இருக்குமென்றால், அது தமிழக சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்காததால் வந்த பிழைதானே? இது தெரிந்தே நடக்கும் தவறுதானே?
ஓர் அட்டையில் 10 மாத்திரைகள் இருக்குமென்றால், அதன் ஓரத்தில் கத்தரிக்கோலுக்கு வெட்டுப்படும் இடத்தில் தயாரித்த தேதி, காலாவதியாகும் தேதியை ரப்பர் ஸ்டாம்ப் மூலம் பதிவு செய்யும் நடைமுறையை இன்னமும் வைத்திருக்கும் சுகாதாரத் துறையைக் குற்றம் சொல்லாமல் வேறு யாரைக் குற்றம் சொல்வது?
எல்லாரும் 10 அல்லது 12 மாத்திரைகள் கொண்ட முழுஅட்டையை வாங்குவதில்லை. இதனால் மாத்திரை தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதியாகும் தேதியை அறியாமல்தான் வெறும் நம்பிக்கையின் பேரில், நோயாளிகள் மாத்திரையை வாங்கி உட்கொள்கிறார்கள்.
மருந்து, மாத்திரையில் உள்ள மூலப்பொருள்கள் விவரத்தைக்கூட வெறும் கண்களால் படிக்கும் விதத்தில் எந்த லேபிளும் தயாரிக்கப் படுவதில்லை. பூதக் கண்ணாடி வைத்துப் படித்தால்தான் உண்டு. மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு மட்டுமே சாதகமாகவும், பெரிய விநியோகஸ்தர்களுக்கு மட்டுமே ஆதரவாகவும், எந்த நாளிலும் நோயாளிகள் மீது அக்கறை இல்லாமலும் இருக்கும் அரசுதான் இதற்கெல்லாம் முதல் குற்றவாளி.
பூனை கண்ணை மூடினால் உலகம் இருளாது. ஆனால், சுகாதாரத் துறை கண்ணை மூடினால் போலி மருந்துகள் உலவத்தான் செய்யும். குற்றவாளிகளைவிட குற்றவாளிகளுக்குக் குற்றேவல் புரிவதும், குற்றத்துக்கு உடந்தையாகச் செயல்படுவதும்தானே அதிக தண்டனைக்குரிய குற்றம்?
42,000 மருந்துக்கடைகளைச் சோதனையிடுவதற்குப் பதில் 420 மொத்த விற்பனையாளர்களையும் தயாரிப்பு நிறுவனங்களையும் சோதனையிடலாமே? அதற்கு ஏன் தயங்குகிறது நமது சுகாதாரத் துறை?"
.............
இங்கே நடக்கும் பெரும்பாலான கோளாறுகளின், ஊழலின் ஊற்றுக் கண்ணாக எது இருக்கிறது என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், பெரும்பான்மை ஜனங்கள் ஊமைச் சனங்களாகவே குறுகி நின்று விடுவதில் தான் எல்லாமே ஆரம்பிக்கிறது என்பது புரிய வரும்!
ஒரு தவறு நடக்கும்போது அதைக் கண்டிக்காமல் வாய் மூடி ஊமைகளாக நின்றுவிடுகிறவர்களுக்கு நியாயம் எப்படிக் கிடைக்கும்? பேயரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பதெல்லாம் சரி! அந்தப் பேயை விரட்டியடிக்க வேண்டாமா?
சுதந்திரம் என்பது யாரோ ஒரு காந்தித் தாத்தாவும், மாமா நேருவும் ஏதோ பெட்டி கடைக்குப் போய் வாங்கிக் கொடுத்த பஞ்சு அல்லது சவ்வு மிட்டாய் அல்ல! முற்போக்குவாதிகள் வகுத்த பாடத் திட்டங்கள், பாடப் புத்தகங்களில் அப்படித்தானே சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்!
சுதந்திரம், உரிமைகள் என்பன அவற்றின் அருமையை உணர்ந்து பாதுகாத்துக் கொள்ளத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே நிலைக்கக் கூடியது.
அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும்
உச்சத்திற் கொண்டவருக்குச் சுதந்திரம் என்றுமில்லை!
ஊமைச் சனங்களாகவே இருந்துவிடப் போகிறோமா அல்லது விழித்துக் கொள்ளப் போகிறோமா?
கொஞ்சம் சொல்லுங்களேன்!