தோழர் உ.ரா..வரதராஜன்....!


தோழர்.உ ரா வரதராஜன் ! கட்சி வட்டாரங்களில் WRV என்று இனிஷியலை வைத்து மரியாதையோடும், அன்போடும் அழைக்கப்பட்ட  தோழர்!

ரிசர்வ் வங்கியில் பணியாற்றிக் கொண்டிருந்த தருணங்களிலேயே, தன்னைத் தொழிற்சங்க, கட்சி வேலைகளுக்கு முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட தோழராக, தன்னுடன் பணிபுரிந்த சரஸ்வதி என்ற தலித் விதவையை மறுமணம் செய்து கொண்ட நல்லெண்ணம் படைத்த மனிதராக, எனக்கும் இன்னும் பலநூறு தொழிற்சங்க  முன்னணி  ஊழியர்களுக்கு ஆசானாகவும்  இருந்தவர்!

இந்தியத் தொழிற் தகராறுகள் சட்டத்தின் படி, வேலை நிறுத்தம் செய்வது சட்டபூர்வமான உரிமையாக அறிவிக்கப் பட்டிருந்தாலும், அதே சட்டத்தின் பல்வேறு நடைமுறைகள், பிரிவின்படி எந்த ஒரு வேலைநிறுத்தமும் சட்டபூர்வமாகச் செய்ய முடியாது என்பதை அழகாக  விளக்குவதில் ஆகட்டும், தேசாய் அவார்ட்  முதல், வங்கி ஊழியர்கள் சங்கம் வைத்துப் போராடிய வரலாறு, ஊதிய ஒப்பந்தங்களின் வரலாறு, கணக்கு என்று சொல்லிக் கொடுத்ததில் ஆகட்டும், கட்சியைத் தனது உயிருக்கும் மேலாக நேசித்த விதத்திலாகட்டும், எல்லாவிதங்களிலும் எங்களுக்கு ஆசானாக இருந்த தோழர்!

கம்யூனிஸ்ட் இயக்கங்களில் உள்ள மிகப் பெரிய கோளாறு, ஒரு உறுப்பினரைக் காலி செய்வது என்று முடிவு செய்துவிட்டு அதற்கப்புறமாகக் காரணங்களை அடுக்குவது!


சந்தேகநிழலில், லெனினுடன் சேர்ந்து போராடிய ட்ராட்ஸ்கி முதலான பெரிய தலைகளேஉருண்டிருக்கின்றன! அப்போதெல்லாம் தத்துவார்த்த ரீதியில் பிற்போக்குவாத முத்திரை, கருங்காலி முத்திரை குத்தப்படும்!  

இந்தியச் சூழ்நிலைகளில், ஈ எம் எஸ் நம்பூதிரிபாடுக்குப் பிறகு தத்துவார்த்த அடிப்படையில் லேபில்கள் குத்துகிற போக்கு குறைந்து விட்டது என்றே சொல்ல வேண்டும்!தமிழ் நாட்டைப் பொறுத்த வரையில், வேறு பெண்களோடு தொடர்பு, வட்டித் தொழில் செய்கிறார், இப்படி சில்லறைக் காரணங்களிலேயே  கட்டம் கட்டிவிடுவது சாதாரணமாக நடப்பது தான்!

தனக்கும் அப்படி ஒரு நிலை ஒரு நாள் வரும் என்பதை தோழர் வரதராஜனோ, கட்சி உறுப்பினர்களோ கற்பனை செய்துகூடப் பார்த்திருக்க முடியாது! 



கட்சி முடிவைத் தாங்கிக் கொள்ள முடியாமலும், பல்வேறு போராட்டங்களைச் சந்திக்கத் தெரிந்தவருக்கு, வீட்டில் நடந்த போராட்டம் எவ்வளவு வலியையும்,  வேதனையையும் தந்திருக்கிறது என்பதையும் இரண்டு கடிதங்களில் தோழர் எழுதி வைத்திருக்கிறார் என்றும் தகவல்கள் சொல்கின்றன.

கட்டிய மனைவியே, கணவனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக, கட்சியின் மாநிலக் குழுவுக்குப் புகார் செய்கிறார். தொடர்பு வைத்திருந்ததாகச் சொல்லப் படும் பெண்ணும் கூட, தன்னை ஏமாற்றிவிட்டதாகக் கட்சியிடம் புகார் தெரிவித்திருக்கிறாராம்!

மாநிலக் குழு விசாரித்துப் பரிந்துரை செய்ததன் பேரில், கட்சி, தோழர் வரதராஜனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து எல்லாப் பதவிகளிலும் நீக்கியிருக்கிறது. இதன் பின்னணியில் ஒரு பொலிட்பீரோ உறுப்பினரே இருந்திருக்கிறார் என்றும் செய்திகள் கசிகின்றன.

பதினோரு நாட்களாகக் கணவரைக் காணவில்லை என்று அவரது மனைவி காவல்துறையில் புகார் கொடுத்திருக்கிறார். கட்சியும் சென்ற வியாழக் கிழமை, இதே மாதிரிப் புகாரைக் காவல்துறையிடம் கொடுத்திருக்கிறது. இன்றைக்குப் போரூர் ஏரியில் கிடந்த பிணத்தை, தன்னுடைய கணவருடையதுதான் என்று திருமதி சரஸ்வதி அடையாளம் காட்டினாராம். இருந்தாலும் மரபணு சோதனைக்குப் பிறகு, முடிவு
சொல்லவிருப்பதாகக் காவல் துறைசெய்திகள் சொல்கின்றன.

செய்தி ஒன்று! செய்தி இரண்டு! இவைகளில் எனக்கு ஆர்வமில்லை. இதைப் பற்றி எழுதவேண்டாமே என்று தான் இதுவரை இருந்தேன்.

ஆனாலும்,ஒரு நல்ல தோழனை, ஆசிரியனை, இலட்சியவாதியை இழந்து விட்ட சோகத்தில் என் கண்கள் கசிகின்றன.

ஒரு கம்யூனிஸ்டாக இருப்பது என்பது, மனித நேயம் மிகுந்தவனாக இருப்பது என்று தான் எனக்குப் பொதுவுடைமைத் தத்துவத்தைப் போதித்த நல்ல தோழர்கள் சொல்லிக் கொடுத்தார்கள்.

இப்போதோ....?


Updated 22/02/2010


இன்றைய தினமணி நாளிதழில் வெளியாகி இருக்கும் செய்தி, மார்க்சிஸ்ட் கட்சிக்கோ, அதற்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட தோழர் வரதராஜனுக்கோ எந்தவிதத்திலும் பெருமை சேர்ப்பதாக இல்லை.

தொடரும் மர்மம்... இதுதவிர, மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீஸôரும், போரூர் போலீஸôரும் இணைந்து இந்த வழக்கு குறித்து குற்றவியல் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.கட்டுக்கோப்பான கட்சியின் மாநில தலைமைப் பொறுப்பில் இருந்த வரதராஜன் திடீரென மாயமானதும், மர்மமான முறையில் அவரது சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதும் கட்சியினரிடையே தேசிய அளவில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலையா?சதியா? அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது இந்தச் சம்பவத்தில் ஏதும் சதி உள்ளதா என்பது குறித்தும் தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.




9 comments:

  1. /ஒரு கம்யூனிஸ்டாக இருப்பது என்பது, மனித நேயம் மிகுந்தவனாக இருப்பது என்று தான் எனக்குப் பொதுவுடைமைத் தத்துவத்தைப் போதித்த நல்ல தோழர்கள் சொல்லிக் கொடுத்தார்கள்./

    இந்துவிலே, இணையத்திலே உலாவும் சிபிஐ(எம்) அடியார்களையும் அவர்களின் அடியாட்களையும் பார்த்தபிறகுமா இப்படியான எண்ணம்!!

    மார்க்ஸியத்தை வழிநடைக்கு உதவும் கட்டுச்சோறாகக் கொண்டு உலாவும் கூட்டம்.

    இவர்களுக்கும் ஸாமி பேரிலே ஏமாற்றும், ஜாதி கீர்த்தி காட்டும் மூர்த்திகளும் எவ்வித பேதமுமில்லை

    ReplyDelete
  2. பெயரிலி!

    உங்களுடைய வலைப்பதிவுகளைப் பார்த்தேன்! தீராதபக்கங்கள் மாதவராஜ் மீது விஷத்தைக் கக்கி எழுதிய உங்களிடமிருந்து, இப்படிப்பட்ட தீர்மானிக்கப் பட்ட முடிவுகள் வருவதில் வியப்பொன்றுமில்லை தான்!

    உங்களுக்குச் சாதகமாக இல்லாத எவரையும் உங்களால் இப்படித் தான் நினைக்க முடியும் என்பது, சிறிய கோளாறு அல்ல, பெரிய வியாதி!

    மனிதநேயமே கம்யூனிசத்தின் சாரம் என்பதை வாழ்ந்துகாட்டிய சில நல்ல மனிதர்களை நான் அறிவேன். அதே மாதிரி, சாமியைச் சொல்லி, ஜாதியைச் சொல்லி ஏமாற்றாத நல்ல மனிதர்களையும் என் வாழ்க்கையில் சந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

    என்னுடைய கருத்தை, என்னுடைய அனுபவங்களே தீர்மானிக்கின்றன!

    ReplyDelete
  3. உங்களை பாதித்த செய்தி என்று தெரிகிறது....வருத்தங்கள் சார்.

    ReplyDelete
  4. உயிரை விட மானம் பெரிது, தான் நேசிக்கும் கட்சி பெரிது, கொண்ட லட்சியம் பெரிது என்று வாழ்ந்த ஒரு மனிதன்! ஒரு காலகட்டத்தில், எனக்கு தொழிற்சங்க ஆசிரியனாகவும் இருந்த நல்ல மனிதன்! தொடர்பு விட்டுப்போய் இருபது வருடங்களுக்கு மேலாகிப் போனாலும், ஆசிரியன், ஆதர்சம் என்ற நிலையில் மாற்றமில்லையே!

    மரணச்செய்தி கூட என்னைப் பாதிக்கவில்லை! மரணத்திற்கு முன் அந்த நல்ல மனிதன், எத்தனையோ போராட்டங்களில் வற்றி பெற்றேன், உட்கட்சிப் போராட்டங்களைக் கூடத் தாக்குப் பிடித்தேன் ஆனால் வீட்டுப் பிரச்சினையில்... என்று கலங்கி எழுதியிருந்ததாகச் சொல்லப் படும் கடிதம்.

    எந்தக் கட்சியை வளர்ப்பதற்காகத் தன்னுடைய எல்லாவற்றையும் அர்ப்பணித்தாரோ,அதே கட்சி மிக அற்பமான குற்றச்சாட்டை வைத்துத் தூக்கி எறிந்த நிலையில் மனமுடைந்துபோன அந்தத் தருணம்..

    என்னை இன்னமும் உலுக்கிக் கொண்டே இருக்கிறது மௌலி!

    ReplyDelete
  5. உ.ரா வை அருகிருந்து பார்க்கும் வாய்ப்பு எனக்கு இருந்தது.மனம் ஆரவில்லை.தோழருக்கு வீரவணக்கம் செலுத்துவது தவிர வேறு என்ன செய்துவிட முடியும்.இது கட்சியின் அதிகார பயங்கர வாதம்.ராகவன்,இ.எம்.எஸ்,நிருபன் சக்ரவர்த்தி,என யாரையும் இவர்கள் விட்டு வைக்கவில்லை.ஜோதிபாசு பிரதமர் அவதை தடுத்தது உள்பட.இதில் என்ன விந்தை என்றால் உ.ரா. இன்று இருந்து வேறு ஒரு தோழருக்கு இது போல நேர்ந்திருந்தால் உ.ரா வும் கட்சிக்காரராகத் தான் நடந்து கொண்டிருப்பார்.இது தான் வியக்க வைக்கும் மார்க்ஸிட் கட்சி கட்டுப்பாடு. தோழருக்கு வீரவணக்கம் செலுத்துவோம்.

    ReplyDelete
  6. அதிகார பயங்கர வாதம்! இந்த மாதிரிக் கொடூரமான வார்த்தைப் பிரயோகங்களை எல்லாம் மறந்து நீண்ட நாட்களாகிவிட்டது!

    ஆனாலும், அதன் பின்னாலுள்ள உண்மை சுடத் தான் செய்கிறது!

    அரசாக இருக்கட்டும், கட்சியாக இருக்கட்டும், அல்லது வேறு எதுவாகவோ இருந்துவிட்டுப்போகட்டும்!

    ஒரு ஸ்தாபனம் என்பது மனிதனுக்குக் கவசம் மாதிரி இருக்கவேண்டியது, அதுவே அவன் மீது விழுந்து நசுக்குவதென்றால்....?

    மறுபடி மறுபடி தொடர் நிகழ்வுகளாகிக் கொண்டிருக்கிறதென்றால்..........?

    யோசிக்க வேண்டாமா?

    ReplyDelete
  7. ..அப்புறம் கட்டுப்பாடுகள், மனிதனைக் காப்பாற்றுவதற்காக, அவனை உயர்த்துவதற்காக இருந்தால் அதில் ஒரு அர்த்தம், அவசியம் இருக்கும்!

    நீங்கள் சொல்கிற வியக்க வைக்கிற அளவு கட்டுப்பாடு இப்போது இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

    கட்டுப்பாடுகள்! யாருக்காக? யாரைக் காப்பற்றுவதற்காக?

    ReplyDelete
  8. எங்க அப்பாவின் நண்பர் தோழர் வரதராஜன் ஒரு அருமையான ஆளுமை.
    அவரின் மறைவு உண்மையிலேயே கட்சிக்குதான் பெரிய இழப்பு. இந்த கேடுகெட்ட சமூகமே தோழரின் மறைவுக்கு முழு காரணம்.நானும் விரைவில் பதிவு செய்கிறேன்.நன்றி.

    ReplyDelete
  9. தோழர் WRV யை அறிந்தவர் என்பது வரை சரி.

    இதே வார்த்தைகளைக் கொஞ்சம் கூட எழுது மாறாமல், புதுகை எம் எம் அப்துல்லாவின் பதிவில் கூட சிறிது நேரத்துக்கு முன் பார்த்தேனே!

    சமூகம் இதில் எங்கே வந்தது? சொல்லுங்கள்!

    பத்திரிகைச் செய்திகளிலேயே, சம்பந்தப்பட்டவர்கள் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று பேட்டியோ, அல்லது பேட்டி கொடுக்க மறுத்தோ சொன்னதிலேயே தெரிய வந்திருக்கிறதே!

    தவிர உட்கட்சி ஜனநாயகம், விமரிசன-சுயவிமரிசனம் என்பது கட்சி சீராக இயங்க உதவுகிற கருவிகளாக இல்லாமல், கருவறுப்பது போன்ற தனிப்பட்ட ஈகோ சண்டைகளாகிக் கொண்டிருப்பது வெளியே நார ஆரம்பித்திருக்கிறதே, அப்புறமும் எதற்காக சம்பந்தமே இல்லாமல் சமூகத்தைக் குறை சொல்ல வேண்டும்?

    எனக்குப் புரியவில்லை!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!