பதிவர் வட்டம்! சொன்னதும் புரிந்து கொண்டதும்....!

இதுவும்  சென்ற வருடம் எழுதியதன் மீள்பதிவுதான்! திரும்பத் திரும்ப சுயபுராணம், தன்னிலை விளக்கம், வால் பையன் அருண் போன்றவர்களுக்காக, நான் எழுதியதற்கு நானே கோனார் நோட்சும் கொடுக்க வேண்டும் என்று பின்னூட்டங்களில் கேள்வியாக அவர் எழுப்பும் ஒன்ஸ் மோர் ப்ளீஸ் ,  இப்படி சந்தித்த அதே விஷயங்கள் திரும்ப வரும்போது, மீள் பதிவுகள் தவிர்க்க முடியாதவை ஆகி விடுகின்றன! வால் பையனுக்குக் கூடப் புரிய வைத்து விட முடியும், காங்கிரஸ்காரன்  என்று சொல்லிக் கொள்கிற எதிலுமே சேர்த்தியில்லாத சில நபர்களுக்குப் புரிய வைக்க முடியும் என்ற நம்பிக்கை சுத்தமாக எனக்கில்லை!

தலைப்புச் செய்திகள்! கொஞ்சம் சிரிக்க, நிறையக் கொதிக்க என்று இரண்டு நாட்களுக்கு முன்னால் ஒரு பதிவை எழுதினேன். பதிவில் இன்று திங்கட்கிழமை, பாராளுமன்றத்தில், அமளி துமளி அதிகமாகி அடிக்கடி ஒத்தி வைக்கப் படாவிட்டால், அறிமுகம் செய்யப் படவிருக்கிற Nuclear Liability Bill இதைப் பற்றி சில கேள்விகளை முன்வைத்திருந்தேன். ஒரு காங்கிரஸ் அபிமானியிடமிருந்து வந்த தொடர் பின்னூட்டங்கள் தான் இந்த மீள்பதிவுக்கு ஒரே காரணம்! இந்த மீள்பதிவில் குறிப்பிடப் படும் வழக்கறிஞர், இப்போது உயிருடன் இல்லை, சமீபத்தில்தான் மறைந்தார், அவருக்கு என் அஞ்சலியாகக் கூட இதை வைத்துக் கொள்ளலாம்!

"அந்த நாட்களில், தி க ஆதரவாளரான ஒரு வழக்கறிஞர், அவருடைய இளவல்கள், எங்களைப்போல இடதுசாரிச் சிந்தனை உடையவர்களோடு, நன்கு பழகிக் கொண்டிருந்தார்கள், அல்லது அப்படிக் காட்டிக் கொண்டிருந்தார்கள் என்றும் கூட சொல்லலாம். வாரத்தில், இரண்டு அல்லது மூன்று நாட்கள் கூட, வழக்கறிஞருடைய வீட்டில், பேசப்போவோம். கருத்துப் பரிமாற்றம் என்ற பெயரில் நடந்த அந்தக் கூத்தை இன்றைக்கு நினைத்துப் பார்த்தாலும், கொஞ்சம் வேடிக்கையான அனுபவமாகவே இருக்கிறது.


மனிதன் சினிமாவில் வருகிற கோர்ட் சீனில் காண்பிப்பதுபோலவே, தன்னுடைய வாதத் திறமை இருப்பதாக எங்களை நம்பச் செய்யப் படாத பாடு படுவார். கருத்துப் பரிமாற்றம் என்று சொன்னேன் அல்லவா, அது வெறும் வார்த்தை தான்! அவர் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பார், எதிராளி என்ன தான் சொல்கிறார் என்று ஒரு பொழுதும் கவனித்ததில்லை. நாங்களும், அவரை மாதிரி என்று சொல்ல முடியாது, அவர் அந்தக் கலையில் சகல கலா டாக்டர் பட்டம் வாங்கியவர், எங்களுடைய கருத்தை எடுத்து வைத்து விட்டதாக ரெகார்ட் பண்ணி விட்டு ஜமா கலைந்து விடும், அடுத்த வாய்தா வருகிறவரை
 
இந்த வழக்கறிஞரோடு என்னுடைய உறவும் நட்பும் கொஞ்சம் அதிக நாள் நீடித்தது என்று சொன்னால், மேலே சொன்னது மாதிரி கருத்துக் களம், பரிமாற்றம் என்று சொன்னேனே, அந்த மாதிரி வார்த்தை அலம்பல்களினால் அல்ல. எனக்குப் புத்தகங்கள் படிப்பதில் ஒரு வெறித்தனமான காதலும், நேரமும் இருந்த நாட்கள் அவை. அவரிடம் நிறைய நூல்கள் இருந்தன. எந்தப் புத்தகம் கடைக்கு வந்தாலும், உடனே வாங்கி விடுவார்.பல்வேறு தலைப்புக்களில் அவரிடம் இருக்கும் நூல் சேகரம் கொஞ்சம் பெரிதுதான். இப்படி ஒரு புத்தகப் புதையல் இருக்கும் இடத்தை யாராவது தவற விடுவார்களா என்ன!

எனக்குத் தேவைப்படுகிற புத்தகங்களை, நான் தேடிப்போக வேண்டிய அவசியம் கூட இல்லாமல், அனுப்பி வைப்பார். அவரிடம் இல்லை என்றால், உடனே வாங்கியும் வைத்து விடுவார். பெரியாரைப் பற்றி, இவரிடமிருந்து தான், கொஞ்சம் ஆதாரங்களோடு கூடிய நூல்களை வாங்கிப் படித்திருக்கிறேன். அதே மாதிரி, மார்க்சீயச் சிந்தனைகள், மதக் கோட்பாடுகள் குறித்த ஆய்வுகள் என்று நூற்றுக்கணக்கான புத்தகங்களை எனக்குப் படிக்கக் கொடுத்திருக்கிறார். எங்கே தகராறு வருமென்றால், திடீரென்று சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ, ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு, இதோ பாருங்கள் லெனின் இப்படிச் சொல்லியிருக்கிறார் என்று சில பத்திகளை அடிக்கோடிட்டு வைத்துக் காண்பிப்பார். அதை ஆதாரமாக வைத்துக் கொண்டே தான் பேசுவதையும் ஒருமாதிரி முடிச்சுப் போட்டுத் தன்னுடைய கருத்துப் "பரிமாற்றத்தை" வலுவாக ஊன்றி வைப்பார்!

இப்படி அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று வழக்கறிஞர், புத்தகத்தையே அடிக்கோடிட்டுக் காட்டும் போது எங்களுக்கு முதலில் கொஞ்சம் மயக்கம் வந்ததென்னவோ உண்மை! அப்புறம் கழுதைக்கு வெள்ளி மூக்கு முளைத்தது, குதிரையல்ல கழுதைதான் என்று தெரிந்தது என்று ஒரு கதை சொல்வார்கள் இல்லையா, அதே மாதிரி, வழக்கறிஞரும் மேற்கோளில் எப்படிப் புரட்டுகிறார் என்பது சீக்கிரமாகவே தெரிந்துபோய் விட்டது. எனென்றால், அந்தப் புத்தகத்தையே, எனக்குப் படிப்பதற்காகக் கொடுத்து அனுப்புவார் என்று சொன்னேன் இல்லையா, புத்தகத்தை முழுமையாகப் படிக்கும் போதே குட்டு உடைந்த தருணங்கள் வந்தது.

உதாரணத்திற்கு லெனின் எழுதிய புத்தகங்கள் பெரும்பாலானவை, அந்த காலகட்டத்தில் பரவலாக இருந்த அல்லது பரப்பப்பட்டு வந்த கருத்துக்களின் மீதான விமரிசனங்களாகவே எழுதப்பட்டவை. லெனினுக்கு ஒரு பழக்கம், தன்னுடைய எதிராளி சொல்லும் ஒவ்வொரு கருத்தையும், முழுதாக எடுத்துச் சொல்லி, அதற்கு அப்புறம் எதிராளி எப்படி அதைத் தப்பாக விளங்கிக் கொண்டிருக்கிறார், தப்பாக வாதங்களைஎப்படி எடுத்து வைக்கிறார் என்பதை, ஒவ்வொன்றாக, ஆணித்தரமாக மறுக்கும் வகையிலேயே எழுதுவது. ஆக, லெனின் எழுதிய ஒரு நூலை நீங்கள் வாசிக்கப் புகும் போது, எதிர்க்கருத்தாக எவர் என்ன சொல்லியிருக்கிறார் என்பதையும் தெரிந்து கொண்டு விட முடியும்.  
நம்முடைய பகுத்தறிவு வழக்கறிஞர், அப்படி லெனின் எடுத்து வைக்கிற எதிராளியின் கருத்தை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டு, பாருங்கள் லெனின் இங்கே இப்படிச் சொல்லியிருக்கிறார் என்று வாதம் செய்வது தொடரும்போது, நாங்கள் ஐயா, அதற்கு அப்புறம் லெனின் இதை எப்படி மறுத்திருக்கிறார் என்பதையும் பாருங்கள், தொடர்ந்து தவறாகவே லெனினை மேற்கோள் காட்டிக் கொண்டிருக்கிறீர்கள் என்று சொன்னபிறகும் கூட, அவர் தன்னுடைய வாதத் திறமையை, பாணியைக் கொஞ்சமும் மாற்றிக் கொள்ளவே இல்லை.

அவர் மட்டுமல்ல
, பகுத்தறிவு வாதம் பேசுகிற நிறையப்பேரும் அதே பாணியைக் கடைபிடித்து வருவதும் புரிந்தது.பகுத்தறிவை அவர்கள் புரிந்துகொண்டிருக்கும் விதமும் புரிந்தது!

கொஞ்சம் ஒன்றைக் கவனித்துப் பாருங்கள், பெரியாரை மேற்கோள் காட்டுகிறவர்களாகட்டும், அல்லது இறக்குமதி செய்யப்பட்ட நாத்திகம் பேசுபவர்கள் ஆகட்டும், தாங்கள் மேற்கோள் காட்டும் விஷயம் உண்மைதானா, அதில் சொல்லப் பட்டிருப்பவை, இங்கே இப்படி அங்கே அப்படிச் சொல்லியிருக்கிறது என்று எடுத்துக் காட்டப் படும் இடங்களைத் தாங்களே ஒருதரம் சோதித்துப் பார்த்து, அங்கே அப்படித்தான் சொல்லியிருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்வதில்லை. யாரோ சொல்லிவைத்துப் போனதைக் கிளிப் பிள்ளைகள் மாதிரி, இவர்களும் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள் என்கிற போது, இவர்கள் பேசும் 'பகுத்தறிவு' ஆரம்பத்திலேயே கழன்று கொள்கிறது!

இவர்கள் மட்டுமல்ல, ஒரு குறிப்பிட்ட மத நம்பிக்கையின் மீது 'ஆன்மிகம்' பேசுபவர்களுமே கூட இந்தத் தவறைத் தான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். தங்களுடைய சொந்த அனுபவத்தில், பேசுகிற நம்பிக்கையை உரசிப்பார்த்து, நிஜமான தங்கம் தானா இல்லை காக்கைப் பொன்னா என்று கண்டுபிடித்துவிட முடியும் என்றாலும் எவருமே முயற்சிப்பதில்லை என்பது தான் பெரும் சோகமே.

 

இந்தப் பக்கங்களில், அரசியல், பொருளாதாரம், மேலாண்மை, நிர்வாகம், தலைமைப் பண்பு என்று நிறைய விஷயங்களைத் தொட்டுப் பேசி ருக்கிறேன். எதையும் உரசிப் பார்த்து, சோதிக்காமல் ஏற்றுக் கொண்டதும் இல்லை, யோசிக்காமல் எதையும் எழுதியதுமில்லை.ஒரு குறிப்பிட்ட சார்புநிலை எடுத்துக் கொண்டு அதற்குத் தகுந்த மாதிரி என்னுடைய முடிவுகளை இங்கே சொன்னதுமில்லை, படிக்க வருகிறவர்கள் அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று ஒருபோதும் எதிர்பார்த்ததுமில்லை.


நான் ஒரு  மதவாதியும் இல்லை. சொல்லப் போனால், என்னுடைய பலபதிவுகள் மதங்களின் தேவை, உபயோகம் முடிந்துவிட்டது என்று சொல்வதற்காகவே  எழுதப் பட்டவை. ஆன்மிகம் ஒன்றே மனிதனுக்குச் சரியான வழிகாட்டும் என்பதையும், ஆன்மிகம் என்பதுமே கூட வெளிச்சம் தனக்குள்ளே கண்டு கொள்வது, வெளியில் இருந்து அல்ல என்பதையுமே
தங்களுடைய சொந்த அனுபவத்தில், பேசுகிற நம்பிக்கையை உரசிப்பார்த்து, நிஜமான தங்கம் தானா இல்லை காக்கைப் பொன்னா என்று கண்டுபிடித்துவிட முடியும் என்றாலும் எவருமே முயற்சிப்பதில்லை என்பது தான் பெரும் சோகமே என்ற வார்த்தைகளிலேயே ஏற்கெனவே இங்கே சொன்னது தான். "



அ.மு.செய்யது$, சஞ்சய் காந்தி போன்ற பதிவர்கள் இங்கே ஏதோ ஒரு பகுதியை படித்துவிட்டு, உடனேயே கலகக் குரல் எழுப்ப ஆரம்பித்து விடுவதைப் பார்க்கும்போது கொஞ்சம் சங்கடமாக இருக்கிறது. நிச்சயமாக அவர்கள் செய்கிற விமரிசனத்தைப் பார்த்து அல்ல!  மாற்றுக் கருத்தோ, விமரிசனங்களோ என்னைப் பாதிப்பது இல்லை. இங்கே எழுதுவதே, மாறுபட்ட கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதற்காகத் தான் என்கிறபோது விமரிசனங்கள் அல்லது மொக்கைக் கும்மிகள் என்ன செய்து விட முடியும்?

சங்கடப்படுவது, இவர்களுக்கும் புரிகிறமாதிரி எழுதுகிற வித்தை இன்னும் கைகூடவில்லையே என்பதற்காக!

நீ என்ன சொன்னாலும் சரி, எத்தனை ஆதாரங்களைக் காட்டினாலும் சரி புரிந்து கொள்ள மாட்டோம், ஒப்புக் கொள்ளவும் மாட்டோம் என்று தீர்மானமாகச் செயல்படுகிறவர்களிடம் பதிவுகளில் சொல்லப் பட்டதைப் புரிந்துகொள்வது எப்படி என்று பயிற்சிப் பட்டறையா நடத்திச் சொல்லித் தர முடியும்?

இவையும், இவர்களையும் கடந்து போகத் தானே வேண்டும்! என்ன சொல்கிறீர்கள்! 





7 comments:

  1. நல்ல பதிவு நண்பரே , உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. leave it.

    i worried that day - why you taking so much pain to prove that type of visiters ?

    may be they want distrub by means of mind level.

    again today you wasting your time and diverted real issue,

    2, i happy today that bill not submitted in house.

    ReplyDelete
  3. வாருங்கள் சசி, பாலு!

    சஞ்சய் மாதிரி வாசகர்களைக் குறித்து எனக்கு எந்தவிதமான வருத்தமுமே இல்லை! தவிர, இவர்களிடம் என்னை நிரூபித்தாக வேண்டிய அவசியமும் இல்லை என்பதைத் தான் இந்தப் பதிவில் சொல்லியிருக்கிறேன்.

    ஆனால், இளைய தலைமுறை அக்கறை எடுத்துக் கொள்ளவேண்டிய விஷயங்களைப் பற்றிக் கொஞ்சமும் தெரிந்துகொள்ள முயற்சிக்காமலேயே இருக்கிறதே என்ற வருத்தம் தான் மேலிடுகிறது.

    சீனர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியது என்று நான் சொல்வது இதைத் தான்! தங்களுடைய நாட்டு நலன்களை விட்டுக் கொடுக்காமல் இருப்பது ஒன்று! அமெரிக்க நிர்பந்தத்திற்கு அடிபணியாமல் நிமிர்ந்து நிற்பது!

    சீனப் பெருமிதம், தலைமைப் பண்பு, மேலாண்மை என்ற தலைப்புக்களில் கொஞ்சம் அரசியல் விமரிசனத்தையும் சேர்த்து எழுதிய தருணங்களில், இந்த ஒரு அம்சத்தை வலியுறுத்தவே எழுதினேன். இந்திய அரசியல்வாதிகளில் லால் பஹதூர் சாஸ்திரி ஒருவருக்கு மட்டுமே அந்த தைரியமும், தெம்பும் இருந்தது.

    மசோதாவை இன்றைக்கு வைக்கவில்லை என்று சந்தோஷப் பட முடியாது. தவிர, என்னதான் கூச்சல், ரகளை செய்தாலும், நம்முடைய அரசியல்வாதிகள் விலைபோகத் தயாராக இருப்பவர்கள் என்ற ஒன்று உறுத்திக் கொண்டே இருக்கிறது.

    ReplyDelete
  4. This is the curse among Tamils or Indians I guess

    1. If I belong to a party, i should defend all the actions by the party blindly
    2. If I cannot argue on substance, try to defame the other (anti-brahminism etc.,)
    3. Follow the (in)famous Bush quote : If you are not with us, you are against us
    4. Very very short memory

    I am only consoled by the everliving truth. "This too will Pass"

    ReplyDelete
  5. //வால் பையனுக்குக் கூடப் புரிய வைத்து விட முடியும்,//

    இதிலென்ன சந்தேகம்!
    காலியாக இருக்கும் இடத்தில் எதை போட்டாலும் ஏற்று கொள்ளுமே! என் மண்டை காலியா தனே இருக்கு!

    :)

    காங்கிரஸ்காரர்கள் நிறைகுடங்கள் சார், தண்ணீர் ஊற்றினால் கிழே தான் வழியும்!

    ReplyDelete
  6. வால்ஸ்!

    காங்கிரஸ்காரர்கள் ஓட்டைக் குடங்கள்! எவ்வளவு முயற்சித்தாலும் நிரப்ப முடியாது!

    ReplyDelete
  7. வாருங்கள் ரவி!

    இது தமிழனின் தலைவிதி!

    ஆனால் இதுவும் கடந்து போகும்!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!