சுற்றி வரும் ஆபத்தும் ஆளுகிறவர்கள் அலட்சியமும்!

தலையங்கம்: பேரபாயம் காத்திருக்கிறது...!

First Published : 09 Mar 2010 12:48:00 AM IST

Last Updated : 09 Mar 2010 02:48:57 PM IST
டிஸ்கி-- தினமணி தலையங்கத்தின் செய்தியை வாசகர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பது தினமணி தலையங்கத்தின் வாசகர் பின்னூட்டங்களில் இருந்தே தெரிந்துகொள்ள முடிகிறது.

இட ஒதுக்கீட்டுக்கு தினமணி எதிர்ப்பு என்ற அளவிலேயே, வாசகர்களுடைய விமரிசனம் குறுகிப் போய் விட்டது. தினமணி உண்மையில் எச்சரிக்க வந்தது, இட ஒதுக்கீட்டு ரகளைகளைப் பற்றியே அல்ல!

அமெரிக்க நிர்பந்தத்தின் கீழ் புஷ் பதிவிக் காலம் முடிவதற்கு முன்னால் மன்மோகன் சிங் கையெழுத்துப் போட்டு ஒப்புக் கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை, அதில் உள்ள விவரங்களை நாட்டு மக்களுக்கு விவரம் சொல்லியோ பாராளு மன்றத்தில் முறையான விவாதம் நடத்தவோ செய்யாமல், பத்தோடு பதினொன்றாக நிறைவேற்றப் போகிற கபடத்தைப் பற்றி, அதன் பின் மறைந்திருக்கும் பொருளாதாரச் சுமை, இந்திய அரசின் இறையாண்மையே கேள்விக்குள்ளாகி இருக்கும் சூழலைக் குறித்துத் தனது அச்சத்தை வெளிப்படுத்தும் தலையங்கம் இது.


அரசு மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைத் தாக்கல் செய்திருப்பது ஏதோ மகளிர் நலத்தின் மீதுள்ள அக்கறையால் என்று யாராவது நினைத்தால், அது தவறு. பிரச்னையைக் கிளப்பும் இந்த மசோதாவை இப்போது தாக்கல் செய்திருப்பது, ஒவ்வோர் இந்தியக் குடிமகளின் வருங்காலத்தையும் பாதிக்க இருக்கும் சர்ச்சைக்குரிய இன்னொரு மசோதா நாடு தழுவிய விவாதத்துக்கும், எதிர்ப்புக்கும் வழிகோலாமல் இருப்பதற்காக. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் முயற்சியாகப் பயன்படுத்த முற்பட்டிருக்கிறது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு என்பதுதான் உண்மை.

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தான பிறகும் அணுமின்சக்தி உற்பத்திக்கான முயற்சிகள் ஏன் தொடங்கவில்லை என்று தெரியுமா? இந்தியாவில் முதலீடு செய்து அணுமின்சக்தியை உற்பத்தி செய்யப் பன்னாட்டு நிறுவனங்கள் தயாராக இல்லை என்று ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு தான் நமது அணுசக்தித் துறைக்குத் தெரிய வந்திருக்கிறது. அதற்கு என்ன காரணமாம்?

அணு உலைகள் வெடித்துச் சிதறி அதனால் ஏற்படும் விபத்துகளுக்கு இழப்புத் தொகை  கொடுக்க வேண்டி வருமே என்கிற கவலையால்தான் அன்னிய நிறுவனங்கள் அணுமின்சக்தி நிலையங்களை நிறுவ முன்வரவில்லை என்பதுதான் காரணம். அதாவது, அன்னிய முதலீட்டாளர்கள் அணுமின்சக்தி நிலையங்களை நிறுவி, அதிக லாபத்துக்கு மின்சாரத்தை விற்று லாபம் சம்பாதிக்கத் தயார். ஆனால், விபத்துகள் ஏற்பட்டால் அதற்குப் பொறுப்பேற்கத் தயாராக இல்லை.

உடனே, நமது அரசு என்ன செய்ய முற்பட்டிருக்கிறது, தெரியுமா? இந்தியாவின் கடைசிக் குடிமகன்வரை, ஒவ்வொருவருடைய நன்மையையும், நல்வாழ்வையும் கருத்தில்கொண்டு செயல்படும் ஜனநாயக அரசு, தனது குடிமக்களைப் பற்றிய கவலையை விடுத்து, முதலீட்டாளர்களின் நன்மையைக் கருதி ஒரு சட்டத்தையே இயற்ற முன்வந்திருக்கிறது.

அணுசக்தி விபத்துக்கான நஷ்டஈடு சட்டத்தின் முன்வரைவு இப்போது நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படக் காத்திருக்கிறது.
 
இந்தச் சட்ட முன்வரைவின்படி, அணுஉலைகளில் ஏற்படும் எந்தவித விபத்துக்கும் அணுமின்சக்தி நிலையம் நடத்தும் நிறுவனம்தான் பொறுப்பு. அப்படி விபத்து ஏற்படும்பட்சத்தில், அதிகபட்ச இழப்புத் தொகை ரூ. 2,785 கோடி மட்டுமே. அதுமட்டுமல்ல, அணுமின் நிலையம் நடத்துபவரின் பங்கு இதில் வெறும் ரூ. 500 கோடிதான். அதற்கும் அதிகமான தொகையை, அதாவது துண்டு விழும் ரூ. 1,805 கோடியை அரசு நமது வரிப்பணத்திலிருந்து ஈடுகட்டும். எப்படி இருக்கிறது கதை?

 
இப்படி ஒரு சட்டம் இயற்றி, அணுமின் நிலைய நிறுவனம் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே, இந்தியாவுக்கு அணுமின்சக்தி நிலையம் தொடர்பான அணுஉலைகளையும் ஏனைய இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியையும் தங்களது நிறுவனங்கள் வழங்கும் என்று அமெரிக்க அரசு திட்டவட்டமாகக் கூறிவிட்டிருக்கிறது. இந்த நிபந்தனைகள் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு முன்பே விதிக்கப்பட்டதா, அதை இந்திய அரசு ஏற்றுக் கொண்டதா என்பது தெரியவில்லை.

இந்தச் சட்ட முன்வரைவைச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், நிதியமைச்சகமும் கடுமையாக எதிர்த்ததாகத் தெரிகிறது. அணுக் கசிவாலோ, விபத்தாலோ மனித இனத்துக்கும், விலங்குகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் அபாயம் என்பது ஏதோ வாகன விபத்தாலோ, இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் விபத்துகளாலோ ஏற்படுவதுபோல, அப்போது ஏற்பட்டு முடிவடைவதல்ல. இதன் பின்விளைவுகள் தலைமுறைகளைத் தாண்டி பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை.

சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு ஹிரோஷிமா-நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டுகளின் பாதிப்பு தலைமுறைகளைக் கடந்து இப்போதும் அந்தப் பகுதியில் பிறக்கும் குழந்தைகளைப் பாதித்துக் கொண்டிருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கும் உண்மை. போபால் விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள் இப்போதும் பின்விளைவுகளைச் சந்திக்கும் அவலம் தொடர்கிறது. செர்னோபில் அணுஉலை விபத்தின் கோரம் இப்போதும் தொடர்கிறது.

இந்தச் சட்ட முன்வரைவு பொத்தம் பொதுவாக இழப்புத் தொகை இவ்வளவு என்று வரையறுக்கிறதே தவிர, அணுஉலை நிறுவுபவரின் நலனைப் பாதுகாக்கிறதே தவிர, இதனால் பாதிக்கப்படும் தனி நபருக்கும், அவரது வாரிசுகளுக்கும், இயற்கைக்கும் சுற்றுச்சூழலுக்கும் என்ன இழப்புத் தொகை என்பதைச் சொல்ல மறுக்கிறதே, ஏன்? 


நிதியமைச்சகம் முன்வைத்த நியாயமான எதிர்ப்பு என்ன தெரியுமா? அரசு நிறுவனமோ, தனியார் நிறுவனமோ, எதுவாக இருந்தாலும் அந்த நிறுவனத்தின் கவனக் குறைவாலோ, தொழில்நுட்பத் தவறாலோ ஏற்படும் விபத்துக்கு சராசரி இந்தியக் குடிமகனின் வரிப்பணத்திலிருந்து இழப்புத்தொகை தரப்பட வேண்டிய அவசியம் என்ன என்பதுதான். அணு வியாபாரத்தில் ஈடுபட்டு லாபமடையத் துடிப்பவர்கள், அதனால் ஏற்படும் விபத்துக்கு முழுப் பொறுப்பேற்க மாட்டேன் என்று சொன்னால் எப்படி?

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், நிதியமைச்சகமும் முன்வைத்த எதிர்ப்புகளைப் புறம்தள்ளி பிரதமரின் நேரடித் தலையீடு இந்தச் சட்ட முன்வரைவை அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்ற வைத்துவிட்டது. 

இப்போது, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவின் மீதான அமளி என்கிற சந்தடி சாக்கில் விவாதத்துக்கு  உள்படுத்தப்படாமலே நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றப்படும் அபாயம் காத்திருக்கிறது.

இந்தியக் குடிமகனின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பைத் தர வேண்டிய அரசு, அணுமின்சக்தி நிலையங்களின் நன்மைக்காகத் தனது கடமையைக் கைகழுவுகிறது. நமது மக்கள் பிரதிநிதிகளும், சமூக ஆர்வலர்களும், படித்த விவரம் அறிந்த பொறுப்புள்ள இந்தியக் குடிமக்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

நமது இடமே விலை பேசப்பட்டுவிடும் போலிருக்கிறது. நாம் இடஒதுக்கீடு பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். பேராபத்து காத்துக் கொண்டிருக்கிறது. நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தனிமனித உயிரின் மதிப்புத் தெரியாதவர்கள், தாய்நாட்டைப் பற்றிக் கவலைப்படாதவர்கள், அன்னிய ஏகாதிபத்தியத்தின் ஏவலாளிகள் என்றெல்லாம் நமது முன்னோர்கள் வர்ணித்த காலனி ஆட்சி போய், நம்மை நாமே ஆட்சி செய்யும் லட்சணம் இதுதானா? 

இது இன்றைய தினமணி இதழில் வெளியாகியிருக்கும் தலையங்கம்! ஒவ்வொரு இந்தியனும் நாட்டு நடப்பைக் குறித்து வெட்கித் தலை குனிய வேண்டிய தருணமாக மட்டும் அல்ல, பொங்கியெழ வேண்டிய தருணமாகவும் இருக்கிறது.

சுதந்திரம், உரிமைகள் என்பது எவரோ நமக்குக் கொடுத்து வருவது அல்ல. காந்தித் தாத்தாவும், நேரு மாமாவும் எங்கோ கடையில் போய் காசுக்கு எடு என்ற கணக்கில் வாங்கி வந்தது இல்லை சுதந்திரம்! சுதந்திரம் என்பதே கொஞ்சம் பொறுப்புக்களோடு, விழிப்பாக இருப்பதோடு கூடியது, வெறும் வார்த்தை அல்ல. ஆனால், நம்முடைய அரசியல்வாதிகள், ஜனங்களுடைய அறிவை மழுங்க அடிப்பதில் வல்லவர்கள்!

விழிப்போடு தன்னுடைய கடமைகளைச் செய்து, தன்னுடைய உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளத் தெரியாதவர்களுக்கு, இடைத்தேர்தல்கள் வரும் நேரத்தில் மட்டும் கொஞ்சம் பணமும் க்வார்டர், பிரியாணி கிடைக்கும். சுதந்திரம் எப்போதுமே கிடைக்காது. எல்லாவற்றையும் தொலைத்தபின், நெஞ்சில் அடித்துக் கொண்டு ஒப்பாரி வைத்து என்ன பயன்?

நித்யானந்தா ரஞ்சிதாவோடு சல்லாபம் செய்கிற காட்சியைக் கொஞ்சம் பொறாமையோடு  பார்க்க விரும்புகிறவனுக்கு சுதந்திரத்தின் அருமை எப்படிப் புரியும்? இவன் இங்கே பர்மா பஜாரில் ஐநூறு ரூபாய் கொடுத்தாவது வாங்க அலைந்தோ அல்லது இணையத்தில் யாராவது அந்தக் கிளுகிளுப்பான காட்சிகளா வலையேற்றம் செய்திருக்க மாட்டார்களா என்று தேடிக் கொண்டிருக்கும்போதே  காலடியில் உள்ள பூமி இவனிடமிருந்து களவாடப் படுவதை அறிவதே இல்லை. படித்தவர்கள் கூட்டம் இப்படி நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலைகிற அதே நேரம், பாமர மக்களுக்கு நாட்டு நடப்பு என்ன என்றே தெரிவதில்லை. அவர்களுக்கு அதைத் தெரிந்து ஒன்றும் ஆகப் போவதில்லை என்பதாக ஒரு சித்திரம் இங்கே நாட்டைச் சூறையாடும் சக்திகளுக்குப் பெருந்துணையாக இருக்கிறது.

1971 ஆம் ஆண்டு ஆரம்பத்தில்ஒரு நாள், ஸ்ரீ அரவிந்த அன்னை, உதார் பின்டோ என்கிற அடியவரிடம் சொல்கிறார்: "இந்தியாவைக் கருமேகங்கள் சூழ்வதைக் காண்கிறேன்" 

ஸ்ரீ உதார் பின்டோ அன்னையிடம், அவர் அதைக் குறித்து ஏதாவது செய்ய முடியாதா என்று கேட்க, ஸ்ரீ அன்னை, அதற்கான காலம் கடந்து விட்டதாகக் கூறுகிறார். ஸ்ரீ உதார் பின்டோ: "அப்படியானால், நாங்கள் பிரார்த்தனை செய்வதற்கு ஒரு மந்திரத்தை அருளுங்கள்!"

அன்னை சிறிது நேரம் சமாதி நிலையில் இருந்த பிறகு அருளிய இந்தப் பிரார்த்தனை, இன்றைக்கும் நம்மை பிரச்சினைகள் சூழும்போது, அவற்றை எதிர்கொள்ளும் வலிமையைத் தருவதாக இருக்கிறது.


இந்த உரையாடல் நடந்த சில மாதங்களிலேயே, பங்களாதேஷ் பிரச்சினை பூதாகாரமாக வெடித்தது, இந்திய-பாகிஸ்தான் யுத்தமாகவும் உருமாறியது.

பங்களாதேஷ் உருவானதை சகித்துக் கொள்ள முடியாத பாகிஸ்தான், தீவீரவாதிகளைத்  இந்தியாவுக்குள் அனுப்பி, தொடர்ந்து நாச வேலைகள், சேதத்தை விளைவித்து வருவதையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

என்ன செய்வது என்பதைத் தெளிவாக அறிய முடியாத சூழ்நிலையில், இந்தப் பிரார்த்தனை எவ்வளவு வலிமையைத் தந்திருக்கிறது என்பதை, பிரார்த்தனைகளை நம்புகிறவர்களாலேயே புரிந்து கொள்ள முடியும்.

“Supreme Lord, eternal Truth, let us obey Thee alone and live according to Truth.”

 
தேடியுனைச் சரணடைந்தேன்-தேச முத்துமாரி!
  கேடதனை நீக்கிடுவாய்! கேட்ட வரம் தருவாய்!
-மஹாகவி பாரதி


 

12 comments:

  1. மக்களுக்கு சேர வேண்டிய செய்தி

    ReplyDelete
  2. /*நமது மக்கள் பிரதிநிதிகளும், சமூக ஆர்வலர்களும், படித்த விவரம் அறிந்த பொறுப்புள்ள இந்தியக் குடிமக்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.*/

    வேடிக்கை பார்ப்பதுதானே ஒவ்வொரு இந்தியனின் தலையாய கடமை.
    பார்ப்போம்! பார்ப்போம்! பார்த்துக்கொண்டே இருப்போம்.

    ReplyDelete
  3. தினமணி தலையங்கத்தின் செய்தியை வாசகர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பது தினமணி தலையங்கத்தின் வாசகர் பின்னூட்டங்களில் இருந்தே தெரிந்துகொள்ள முடிகிறது.

    இட ஒதுக்கீட்டுக்கு தினமணி எதிர்ப்பு என்ற அளவிலேயே, வாசகர்களுடைய விமரிசனம் குறுகிப் போய் விட்டது. தினமணி உண்மையில் எச்சரிக்க வந்தது, இட ஒதுக்கீட்டு ரகளைகளைப் பற்றியே அல்ல!

    அமெரிக்க நிர்பந்தத்தின் கீழ் புஷ் பதிவிக் காலம் முடிவதற்கு முன்னால் மன்மோகன் சிங் கையெழுத்துப் போட்டு ஒப்புக் கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை, அதில் உள்ள விவரங்களை நாட்டு மக்களுக்கு விவரம் சொல்லியோ பாராளு மன்றத்தில் முறையான விவாதம் நடத்தவோ செய்யாமல், பத்தோடு பதினொன்றாக நிறைவேற்றப் போகிற கபடத்தைப் பற்றி, அதன் பின் மறைந்திருக்கும் பொருளாதாரச் சுமை, இந்திய அரசின் இறையாண்மையே கேள்விக்குள்ளாகி இருக்கும் சூழலைக் குறித்துத் தனது அச்சத்தை வெளிப்படுத்தும் தலையங்கம் இது.

    ReplyDelete
  4. but obama is not that much interest as compare to bush.

    but hillary wants india should give to american companies only or to be more. she confirmed in last visit .

    may be america wants to keep india under trouble- so that they can overtake india easily.

    - what the inside dealing -god only knows.

    ReplyDelete
  5. திரு.பாலு,

    தமிழிலேயே எழுத ஆரம்பியுங்களேன்! ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாறும், அப்புறம் பழகிப் போய்விடும்!

    இந்திய அமெரிக்க உறவுகளைக் கொஞ்சம் கவனித்து வந்தால், ஒரு விஷயம் தெளிவாகப் புலப் படும்.

    அமேரிக்கா எப்போதுமே இந்தியாவைப் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. அவர்கள் பாகிஸ்தானை நம்புகிற அளவுக்கு, இந்தப் பிராந்தியத்தில் வேறு கூட்டாளி எவரும் இல்லை. ஆட்சி மாறினாலும் மாறாத காட்சி இது.

    அடுத்ததாக, கழுதைக் கட்சி (ரிபப்ளிகன்) இந்தியாவின் உல் விவகாரங்களில் கொஞ்சம் கண்ணியமான இடைவெளியை வைத்துக் கொண்டிருக்கும். அளவுக்கு மேல் சீண்டுவதில்லை. ஆனால், யானைக் கட்சி (டெமாக்ரட்ஸ் ) இந்தியா மீது ஒரு அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருக்கும்.

    புஷ் தன்னுடைய பதவி முடிகிற கடைசிக் கட்டத்தில் அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் இந்தியாவைக் கையெழுத்திட வைத்து விட வேண்டும் என்று நிர்பந்தம் கொடுத்ததும், எதிர்த்துநிற்கத் திராணியற்ற காங்கிரஸ் அரசு கையெழுத்திட்டதும் தெரிந்த கதை.

    ஒப்பந்தத்தில் என்ன இருந்தது என்பது, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே கூடத் தெரியாது என்பதும், பெரும்பாலான உறுப்பினர்கள் எதிரான மன நிலையில் தான் இருந்தனர் என்பதும் தெரிந்த கதை.

    இடதுசாரிகள் தங்கள் ஆதரவை விளக்கிக் கொண்டதும், விட்டது சனி என்று காங்கிரஸ் அவசர அவசரமாக செயல்பட்டது. அன்றைக்கு மாயாவதியை எதிர்த்துத் தாக்குப் பிடிக்க முடியாமல், சிபிஐ வழக்குகளில் இருந்து விடுபடுவதற்காக முலாயம் சிங் யாதவ் காங்கிரசுக்கு ஆதரவு கொடுத்துக் காப்பாற்றின கதையும், சென்ற தேர்தலில் முலாயம் சிங் நடுத்தெருவில் நிற்க வைக்கப் பட்டதும் கூட சுவாரசியமானது தான்.

    ஆனால், நாட்டு மக்களுக்கு எதிரான ஒரு மசோதா, விவாதம் எதுவுமில்லாமலேயே, வேறு ரகளைகளில் கவனத்தைத் திசை திருப்பி, நிறைவேற்றப் பட இருக்கிறது என்பது தான், தினமணி தலையங்கத்தின் முக்கியமான குற்றச்சாட்டு!

    ஜனங்களுக்கு விழிப்பும், பொறுப்புணர்வும் வராமல் இருக்கும் தருணத்தில், தெய்வம் தான் இந்த தேசத்தைக் காக்க வேண்டும் என்பது என் போன்றவர்களின் பிரார்த்தனை!

    ReplyDelete
  6. என்னங்க நீங்க, இன்னமும் 1990 லேயே இருக்கீங்க, நம்ம மக்கள் எல்லாம் கடைசி நேரத்தில் பிரச்சனைகள் வரும் போதுதான் முழிப்பாங்க. தினமணி சொன்னது மட்டும் இல்லை. சொல்லாதததும், பலதும் நடக்கின்றது. அமெரிக்காவின் அனுக்கழிவுகளை கொட்டும் நாடாகவும் இந்தியா மாறப் போகின்றது. இது எல்லாம் விளக்கமா சொன்னா ஒரு பையன் கேக்க மாட்டான். உலகில் அனுக்கதிர் வீச்சுக்களை அதிகமாக கொட்டும் என்ற காரணத்தினால் ஹெவி வாட்டர் ரீயாக்டர்ஸ் என்னும் கன நீரைப் பயன்படுத்தும் அனுமின் நிலையங்களை பிரான்ஸிம்,அமெரிக்காவும் மூடிவிட்டது, ஆனால் இந்தியாவில் மட்டும் இன்னமும் பயன்படுத்துவது அல்லாமல் அவர்களின் கழிவுகளை வாங்கி பயன்படுத்தவும் தயார் நிலையில் உள்ளது. ஹைட்ரஜன் பயன்பாடு உள்ள எல்லா ரீயாக்டர்களிலும் ரோடியசன் டோசேஜ் மிக அதிகமாக இருக்கும். என்ன பண்ணுவது எல்லாம் நம்ம தலைஎழுத்து.
    இது மட்டும் இல்லாமல் மற்ற நாடுகள் எல்லாம் அனுக்கழிவுகளை கடலுக்கு அடியில் ஸ்டோர் செய்தால்,நம் நாட்டில் மட்டும் பூமிக்கு அடியில் காங்கிரிட் தளம் அமைத்து புதைக்கின்றார்கள். இதை காங்கீரிட் சுடுகாடுகள் என்பார்கள். தப்பித்தவறி இதைப் புதைக்கும் பகுதியில் நில நடுக்கங்கள் வந்தால் பாதிப்பு அதிகமாக இருக்கும்.
    திராவிடம்,தமிழ்,பகுத்தறிவு, இனம் என்று சொல்லி கும்மியடிப்பது தான் வழக்கமாக போய்விட்டது. நன்றி.

    ReplyDelete
  7. நான் 2010 இல் வலுவாகக் காலை ஊன்றிக் கொண்டு தான் பதிவை எழுதினேன், நீங்கள் நினைப்பது போல 1990 களிலேயே தேங்கிப் போய்விடவில்லை!

    ஒன்பதாம் தேதி வெளியான தினமணி தலையங்கம், அதற்கு முந்தின நாள் வெளியான ஹிந்து நாளிதழில் சித்தார்த் வரதராஜன் எழுதிய கட்டுரை ஆக இந்த இரண்டுமே, நடப்பு மக்களவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்படக் காத்திருக்கும் இன்னொரு மசோதாவைப் பற்றிய எச்சரிக்கை தான்!

    இங்கே அணு உலைகளைப் பற்றிய விவாதம் இல்லை, என்ன மாதிரியான தொழில்நுட்பம் என்பது பற்றியும் கூட இல்லை, அமேரிக்கா காட்டின இடங்களில் எல்லாம் தலையை ஆட்டிக் கொண்டு கையெழுத்துப் போட்டு வந்த பிறகும், அமெரிக்க நிறுவனங்கள் எதுவும், இந்தியாவில் அணு உலைகளை நிறுவ முன்வரவில்லை. காரணம், தற்போதுள்ள உலக நடைமுறையில், ஏதாவது கோளாறு ஏற்பட்டால், அந்த நிறுவனங்கள் நஷ்ட ஈடு அதிகமாகக் கொடுக்க வேண்டியிருக்கும்.

    அதையும் இந்திய மக்கள் வரிப்பணத்தில் இருந்து கொடுக்க வகை செய்யும், அமெரிக்க நிறுவனங்களைப் பொறுப்புக்கு உள்ளாக்குவதில் இருந்து விடுவிக்கும் சட்ட முன்வரைவு, மசோதாவாக, நடப்புக் கூட்டத்தில் முன்வைக்கப் பட்டிருக்கிறது.

    தினமணி தலையங்கம் அதைத் தான் எடுத்துச் சொல்லி எச்சரிக்கிறது. மறுபடி தலையங்கப் பகுதியை நன்றாகப் படித்துப் பாருங்கள். பதினொன்றாம் தேதி இடுகையில், ஹிந்துவில் வெளியான செய்தியின் இணைப்பும் இருக்கிறது.

    ReplyDelete
  8. அய்யா, நான் என்ன நினைத்து எழுதினேன் என்பதனை சரியாக விளக்கவில்லை, தவறு என்னுடையதுதான். 1990ல் இருக்கின்றீர்கள் என்று குறிப்பிட்டது. நான் உங்கள் பதிவைப் படிக்கும் முன்னரே, ஒரு மூத்த திராவிடப் பதிவரின் இது தொடர்பான பதிவைப் படித்து விட்டேன். அவர் என்னமே இந்த இடஒதுக்கீடு என்றாலே பார்ப்பன பத்திரிக்கை திசை திருப்புகிறது. இத்தனை நாள் இல்லாத கவலை இப்ப எதுக்கு என்ற மாதிரி எழுதியிருந்தார். இதைப் படித்துவிட்டு வந்த நான், பகுத்தறிவு, திராவிடம்,தமிழ் என்று சொன்னால் மட்டும் பதிவுக்கடை போணியாகின்றது. இன்னமும் இந்த மாதிரி சிந்தனைக்குரிய விஷயங்களைப் பதிவாகப் போடுகின்றீர்கள் என்பது.

    இரண்டு நான் அனு உலைகளை பற்றிக் குறிப்பிட்டது, வெளியில் சொல்ல முடியாத ஒன்று. இருந்தாலும் இடங்களை பற்றிக் குறிப்பிடாமல் சொல்கின்றேன். ஹெவி வாட்டர் ரீயாக்ட்டர்ஸ்ஸில் நம்மிடம் ஹெவி வாட்டர் இல்லை. தூத்துக்குடியில் தயாரிக்கும் வாட்டர் போதுமானதாகவும் இல்லை. ஆதலால் நாம் இந்த ஹெவி வாட்டர் மற்றும் தற்போது கட்டும் பாஸ்ட் ஃப்ரீடர் ரீயாக்டர்ஸ்க்கு தேவையான சில உபகரணங்கள் தேவை. ஹெவி வாட்டர் பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவிடம் மட்டும்தான் கிடைக்கும். ஆபத்பாந்தவனான இரஷ்யாவிடம் இல்லை. வேறு வழியில்லாமல் கையெழுத்துப் போட்டார்கள். போட்டவுடன் சார்கோஸி வந்தார். அடுத்த அறுபது ஆண்டுகளுக்கு ஹெவி வாட்டர் பிரச்சனை இல்லை. அது போல பாஸ்ட் ஃப்ரீடர் ரீயாக்டரும், மாதிரி அமைக்கப் பட்டு, பிரதமரால் திறக்கப் பட்டது. இதுக்குத் தான் கையொப்பம் போட்டார்கள். அனுமின் நிலையங்களில் முதலீடு செய்ய அல்ல.

    மூன்று, முதலீடு என்றால் தனியார் பங்களிப்பு முழுக்க முழுக்க இருக்காது. 51 சதவீதம் என்.பி.சி.எல் (அரசு பொதுத் துறை)தான், மேலான்மை முழுக்க இவர்களிடம்தான் இருக்கும். 49 சதவீதம் தான் தனியாருக்கு. இதில் நஷ்டம் என்றால் அது விபத்தின் காரணமாகத்தான் இருக்கும். ஆதலால் அது போல வந்தால் தனியாரின் பங்களிப்பை உறுதி செய்யத்தான் இந்த சட்டம் அமலாக்கப் படுகின்றது. நன்றி.

    ReplyDelete
  9. நீங்கள், பதிவின் சாரத்தை இன்னமும் புரிந்துகொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.

    அணு மின் நிலையங்கள் இயங்கத் தொடங்கி, உற்பத்தி தொடங்கினாளுய்ம் கூட, அது மொத்த மின் உற்பத்தியில் ஏழு சதவீதமாகத் தான் இருக்கும் என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. தற்போது அது மூன்று சதவீதமாகத் தான் இருக்கிறது.

    ஆக, இந்த ஒப்பந்தம், சட்ட முன்வரைவுகளால் மின்சாரத் தட்டுப் பாடு நீங்கிவிடப் போகிறது என்பதே தவறான செய்தி.

    ReplyDelete
  10. தனியார் பங்களிப்பை உறுதி செய்வதெல்லாம் இருக்கட்டும்! அதற்கு என்ன விலை கொடுக்கப் போகிறோம் என்பது முக்கியம் இல்லையா? ஒரு போபால் விஷவாயுக் கசிவு அனுபவமே போதாதா? கொடைக்கானலில் ஹிந்துஸ்தான் லீவர் கொண்டுவந்து கொட்டிய பாதரசக் கழிவுகளை அகற்றுவதன் முழுப் பொறுப்பில் இருந்தும் அந்த நிறுவனத்தை வ௯இடுவித்து சத்தமே இல்லாமல் இங்கே நடந்து கொண்டிருக்கும் சுற்றுப் புறச் சூழலில் காட்டும் அலட்சியம் தெரியுமா?

    இன்னொரு செர்னோபில் இங்கே திட்டமிட்டே நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்? அப்படி நடந்தால், அந்த நிறுவனங்கள் பொறுப்பு ஏற்றுக் கொள்ளாதாம்! இது என்ன வேடிக்கையான விஷப் பரீட்சை?

    ReplyDelete
  11. இது போன்ற புள்ளிவிவரங்கள் தெரிவிப்பது இருக்கட்டும். அனுமின் நிலையங்களை வீட அனல் மின் நிலையங்கள் ஆபத்தானது. நிலக்கரி கூட போதுமான இருப்பு இல்லை. இனி புதிதாக சுரங்கள் தோண்டினால் தான். அதுக்கும் கனிம வள ரிசர்வ் இல்லை.

    நீர்மின் நிலையங்களுக்குப் போதுமான நீர் ஆதரங்கள் குறைந்து வருகின்றது. இன்னமும் 100 அண்டுகளில் கங்கைக்கும் காவிரி நிலைதான். இமயத்தில் பனி உருக ஆரம்பித்து விட்டது.

    நம் நாட்டின் மின் தேவை இரண்டு முதல் மூன்று மடங்கு உயரும் போது ஆதரங்கள் குறைகின்றது.

    ஆனால் அள்ள அள்ளக் குறையாமல் கோவளம், கேரளக் கடற்கரைகளில் தோரியத்தை வைத்துக் கொண்டு, அனு ஆதாரங்களைப் பயன்படுத்தாமல் இருப்பது வீண். நம் விஞ்ஞானிகள் இரவு பகலாக ஆராய்ந்து தோரியத்தைப் புளுட்டோனியமாக மாற்ற முயன்று அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளார்கள். ஆனால் அதுக்கு தொழில் நுட்பம் நாம் இரவல் வாங்கவேண்டியுள்ளது.

    அனுக்கதிர் வீச்சு எதில் தான் இல்லை, சொல்லப்போனால் நல்ல வெய்யிலில் தார் ரோட்டில் நடந்தால் கூட ரோடியேசன் டோசோஜ் கிடைக்கும். தண்ணீர் நிறைய குடிக்கும் போது குறைந்து விடும். இதுக்காக மின் திட்டங்களை குறை சொல்வது முன்னேற்றத்தின் தடைகல். பாதுகாப்பான மின் திட்டங்கள் நல்லது. இதில் நம் விஞ்ஞானிகளின் உழைப்பு பாராட்டத்தக்கது, உலகின் எந்த மூலையில் விபத்து நடந்தாலும் அதை நம் யூனிட்டில் நடப்பது போல பாதுகாப்பு ஏற்ப்பாடுகள் செய்து இதுவரை எந்த விபத்தும் இல்லாமல் நடந்து வருகின்றது. இதை நாம் பாராட்டாவிட்டாலும் குறை சொல்வது வீண்.

    ReplyDelete
  12. நண்பரே,

    தலையைத் தலையாகவும், காலைக் காலாகவும் புரிந்து கொண்டு விவாதத்தைத் தொடருவோம்.

    இந்தப் பதிவில் அணு மின் நிலையங்களை வேண்டுமென்றோ, அல்லது வேண்டாமென்றோ எங்கும் பேச முற்படவில்லை. அடுத்து, நம்முடைய விஞ்ஞானிகளை பற்றி எங்குமே பேசவுமில்லை.

    ஆகப் பாராட்டுவது அல்லது குறை சொல்வது எதைப் பற்றி என்று நீங்கள் புரிந்துகொண்டிருக்கிறீர்கள்?

    அணுமின் நிலையங்கள் தேவையானவை தானா அல்லது வீணா என்ற கேள்வி இங்கே எழுப்பப்பட்ட மாதிரிப் பதில் திரும்பவும் சொல்லும்போதுதான் பேசியதையே மறுபடி பேச வேண்டியிருக்கிறதே என்ற அயர்ச்சி வருகிறது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் என்ரான் அமெரிக்க நிறுவனம் தாபோல் ப்ராஜெக்ட் என்று ஆரம்பித்து, மின் உற்பத்தி எதுவும் நடக்கவில்லை,ஆனாலும் ஒப்பந்தத்தில் இருந்த ஓட்டைகளை வைத்துக் கொண்டு சரக்கு பரிமாற்றம் இல்லாத நிலையிலேயே,அந்த நிறுவனத்திற்கு மகாராஷ்டிரா மாநில மின்வாரியம் ஆயிரக்கணக்கான கோடிகளை அழுத கதை, மின்வாரியம் திவாலான கதை கொஞ்சம் நினைவிருக்கிறதா?

    என்ரான் பின்னாட்களில் உலக மகா பிராட் என்று தெரியவந்து திவாலானது தனிக் கதை!

    அமெரிக்கர்களிடம் தொழில் நுட்பம் மட்டும் இருந்தால் பரவாயில்லை! சற்று ஏறக்குறைய இருந்தாலும் பொறுத்துக் கொள்ளலாம்!

    அமெரிக்க நிறுவனங்களின் பேராசை, அவர்கள் காலடி வைத்த இடத்தை எல்லாம் நாசமாக்கிவிட்டுப் போனதை, இங்கே வங்கிகள், பொருளாதாரம் தொட்டுப் பேசிய பதிவுகளில் கொஞ்சம் விரிவாகவே பார்க்க முடியும்.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!