எழுதி எழுதி ஏட்டைக் கெடுத்து...பாடிப் பாடிப் பாட்டையும் கெடுத்த கதை!


பரிணாமம் திரும்பும் விதம்...!
 

"Bloggers, Internet users and their intelligence என்ற தலைப்பில் தான் உளவியல் துறையில்  ஆய்வு மேற் கொண்டிருப்பதாகவும், அதற்கு உதவ விருப்பமிருந்தால், மின்னஞ்சலில் கேள்விப் படிவத்தை அனுப்புவதாகவும்  முன்பின் தெரியாத ஒரு பெண்மணியிடமிருந்து பின்னூட்டத்தில் ஒரு உப்புச் சப்பில்லாத வேண்டுகோள் ஒன்று இரண்டு நாளைக்கு முன்னால் வந்தது.

மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல, 'இணையத்தில் புழங்குவோர், வலைப் பதிவர்களும் அவர்களது அறிவுத் திறனும்' இப்படித் தலைப்பைப் பார்த்தபோதே, இது தேறாது என்று முடிவு செய்து, பின்னூட்டத்தை நிராகரித்து விட்டேன். தவிர உதவி கோரும் வார்த்தைகளுமே கூட, நம்மூர்ப் பல்கலைக் கழகங்களுக்கே உரிய ஏனோதானோ மனோபாவத்தில் இருந்த மாதிரித் தோன்றியதால், ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவுமில்லை.

ஆறுவருடங்களுக்கு மேலாக, இந்தப் பதிவுலகத்தில் குப்பை கொட்டிக் கொண்டிருப்பவனுக்கே, இதன் போக்கு சமயங்களில் பிடிபடுவது கடினமாக இருக்கும்போது மேலோட்டமாக ஒரு செட் கேள்விகளை வைத்துக் கொண்டு பதிவர்களை, அவர்கள் அறிவுத் திறனை எடைபோட்டு விட முடியுமா என்ன?


அடுத்த பெரிய விஷயம் என்ற தலைப்பில் ஆம்ஸ்டர்டாம் நகரில் இருக்கும் trendwatching.com என்ற ஒரு நிறுவனம், தன்னுடைய பெயருக்குத் தகுந்த மாதிரியே, என்னென்ன விஷயங்களில் எப்படிப் பட்ட போக்கு நிலவுகிறது என்பதை ஆராய்ந்து, அதில் சில  யூட்யூப் வீடியோக்களாக வெளி வந்திருப்பதை ஃபைனான்சியல் டைம்ஸ் பத்திரிகைப் பதிவு ஒன்றிலிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது. அதில் ஒன்று இங்கே! தகவல் தொழில்நுட்பம்  எப்படி நாம் சிந்திப்பதில், எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதில், வணிகத் தொடர்புகளில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது என்பதை நாலே நிமிடங்களில் எடுத்துக் காட்டிவிடுகிறது.



வலைப் பதிவுகள், இன்டர்நெட் பற்றி நியூ யார்க் நகரில் 2004 ஆம் ஆண்டு பலரிடம் கேள்வி கேட்கப் பட்டபோது, கணிசமானவர்கள் அப்படியென்றால் என்னவென்றே தெரியாது என்றே பதில் சொல்லியிருக்கிறார்கள்! 2008 இல் ட்விட்டர் உலகம் முழுக்கக் கலக்க ஆரம்பித்திருந்த தருணம், எவ்வளவு தடவை ட்விட்டரைப் பயன்படுத்துகிறீர்கள் என்று ஜனங்களிடம் கேட்ட போது ட்விட்டர் என்றால் என்ன என்று எதிர்க் கேள்வி கேட்பதையும் இந்த வீடியோவில் பார்க்கலாம். அடுத்து, ரிமோட் கண்ட்ரோல், எம்பி 3 ப்ளேயர் மாதிரித் தெரிகிற ஒன்றைக் காட்டி இது என்ன என்று கேட்டபோதும் கூட அதே மாதிரி பதில் தான்!

2012 இல் என்ன மாதிரி இருக்கும் என்பதை இதை வைத்து ஒரு கருத்தைச் சொல்கிறார்கள்! பயன்படுத்துபவர்கள் புதிதாக வருகிற ஒன்றை ஏற்றுக் கொள்ளாமல் (அல்லது அறிந்துகொள்ளாமல்) இருக்கலாம்! அதற்காகப் புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக் கொண்டு செயல்படுத்தவில்லை என்றால், நம்முடைய கதை கந்தல் தான் என்று முத்தாய்ப்பாகச் சொல்லி முடிக்கிறது!

சில நாட்களுக்கு முன்னால் பிராண்ட் என்றால் என்ன, பிராண்ட் இமேஜ் பற்றிய பதிவுகள் சில  இந்தப் பக்கங்களில் வந்தன.
 

மாதிரிக்கு ஒன்று! இன்னும் ஒன்று!


ஒரு பொருள் அல்லது தயாரிப்பு, தேவையின் நிமித்தம் தொழில் தெரிந்த எவராலோ உருவாகிறது. ஆரம்ப நிலையில், எந்த விதமான நகாசு, ஜிகினா வேலையும் இல்லாமல், எளிமையாகத் தான் அந்தப் பொருள், அல்லது தயாரிப்பு இருக்கிறது.

அடுத்து, கொஞ்சம் விவரமான ஒருவரிடம், அதே பொருள் வந்து சேரும்போது, நகாசு, ஜிகினா வேலைகள் எல்லாம் சேர்ந்து கொள்கிறது.

அப்புறம் கலை தெரிந்தவர்களிடம், சுருக்கமாகக் கலைஞர்களிடம், அந்தப் பொருள் வந்து சேருகிறது.

அவர்களிடம் இருந்து, எம்பிஏ  மாதிரி மேலாண்மையைப் பாடமாகப் படிப்பவர்கள் கையில் அகப்பட்டுக் கொள்கிறது.

அப்புறம் ஒரு அரசு,  நிர்வாகம் அல்லது ஒரு நிர்வாகியிடம் சிக்கிக் கொண்டு, படாத பாடுபட்டு, ஒன்றுக்குமே ஆகாததாகப் போய் விடுகிறது.

இந்த வரிசையில்,  முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்வதையும் சேர்த்துக் கொள்ளலாமோ?









 

7 comments:

  1. //ஆறுவருடங்களுக்கு மேலாக, இந்தப் பதிவுலகத்தில் குப்பை கொட்டிக் கொண்டிருப்பவனுக்கே, இதன் போக்கு சமயங்களில் பிடிபடுவது கடினமாக இருக்கும்போது//


    ஆறு வருடமாக நாம் எதையும் கழட்டவில்லை(மூடியை) என்பதற்காக மற்றவர்களும் அதே மாதிரி இருப்பார்கள் என்று நினைப்பது தன்னை போலவே பிறரின் மனநிலை, உளவியல்திறன், பக்குவம் மற்றும் அறிவு இருக்கும் என நினைக்கும் பொதுபுத்தியாக எனக்கு தெரிகிறது!

    வயதான காலத்தில் பாட்டில் மூடியை கழட்ட ஆறு வருடங்கள் கூட பத்தாது தான், நாங்கள் ஆறு நொடிகளீல் கழட்டி விடுவோம்!

    ReplyDelete
  2. //இந்த வரிசையில், முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்வதையும் சேர்த்துக் கொள்ளலாமோ?//

    எதுவா இருந்தா என்ன, நமக்கு தான் பதிவு போட ஒரு மேட்டர் கிடைச்சிருல்ல!

    ReplyDelete
  3. வால்ஸ்!

    ஆறு வினாடிகளில் பாட்டில் மூடியை கழற்றத் தெரிந்த சாதனைக்காக உலக மகா டாக்டர் பட்டம் கொடுக்கப் பரிந்துரை செய்து விடலாமா?

    அப்புறம், பதிவு எழுத நிறைய விஷயங்கள் இருக்கிறது. இந்தப் பின்னூட்டத்தை ஏற்கெனெவே ரிஜெக்ட் செய்தாகி விட்டது! பைனான்சியல் டைம்ஸ் பத்திரிக்கை ப்ளாக் ஒன்றில் ஒரு அருமையான, பிராண்டிங், தகவல் தொடர்பு, வணிக உத்திகளைக் குறித்த இந்த வீடியோவைப் பார்த்தேனா, அப்படியே சேர்த்துப் பதிவு போட்டாயிற்று!

    பதிவர்களுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன சம்பந்தம்? அப்படி ஒரு தலைப்பைப் பார்த்தால் வேறென்ன செய்வது, நீங்களே சொல்லுங்கள்!

    ReplyDelete
  4. தாத்தாவும்,பேராண்டியும் இப்படி கண்ணாமூச்சி ஆடுவது பார்க்க ரசமாய் தான் உள்ளது.
    உண்மைதான், பதிவர்களுக்கும் புத்திசாலி தனத்திற்கும் சம்பந்தம் இல்லைதான்.
    நானெல்லாம் கூட இங்கு வரமுடிகிறதே அதைச்சொன்னேன்.

    ReplyDelete
  5. இங்கு வருவதற்கு கூகிள் கணக்கு, அடையாளம் இருந்தால் போதும்! புத்திசாலித்தனம் எல்லாம் வேண்டாம் என்பது வரை சரிதான்!

    சந்தடிசாக்கில் என்னைத் தாத்தாவாக்கினது கூட எனக்கு வருத்தமாயில்லை! வால்சை எனக்குப் பேராண்டியாக்கி விட்டீர்களே!

    வால் பையன் அருணுடைய பெண் என்னைத் தாத்தா என்று அழைத்தால் எனக்கு ஆட்சேபமே இல்லை!

    நிலாப்பெண்கள் தாத்தா என்று கூப்பிட்டால் யார்தான் வேண்டாம் என்று சொல்வார்கள்?

    ReplyDelete
  6. வால்ஸ்! தமிழ்ப் பதிவுகளில் அடிக்கடி என்ன அர்த்தம் என்று புரிந்து கொள்ளாமலேயே உபயோகிக்கப் படும் ஒரு வார்த்தை பொது புத்தி!

    ஆறு வருடங்களாகக் குப்பை கொட்டிக் கொண்டிருப்பதால், எனக்கு எல்லாமே தெரியும் என்ற அர்த்தத்தில் நான் சொல்லவில்லை. எனக்குத் தெரிந்தது தான் உலகம் என்று சொல்கிற கிணற்றுத் தவளை மாதிரியா இருக்கிறேன்?

    மறுபடி மறுபடி, பதிவை முழுமையாகப் படிக்காமலேயே, சில வரிகளை மட்டும் எடுத்துக் கொண்டு, அதன் பேரில் உருவாக்கிக் கொள்ளும் அபிப்பிராயங்கள், பின்னூட்டங்கள் என்று இருக்கிற பதிவர்களுடைய பொதுவான குணாதிசயத்தை வைத்துக் கூட, பதிவர்களுடைய புத்திசாலித்தனத்தை அளந்துவிட முடியாது!

    உதாரணமாக, உங்களுடைய பின்னூட்டங்களை வைத்து, நீங்கள் எப்படி ஒரு பதிவில் உங்களுக்கு சௌகரியப் படுகிற வார்த்தை அல்லது வரியை மட்டுமே உருவிஎடுத்துப் பின்னூட்டமிடுகிறீர்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியும், நிரூபிக்க முடியும்.

    ஆனால் வால் பையன் அருணுடைய புத்திசாலித்தனம் இவ்வளவுதான் என்பதை அதை வைத்து நிர்ணயிக்க முடியாது என்பதைத் தானே சொன்னேன்! இப்போது உங்களுடைய பின்னூட்டம் நான் எழுப்பிய கேள்விக்குப் பொருத்தமாக இருக்கிறதா, இல்லையா என்பதை நீங்களே சொல்லுங்கள்!

    அந்த வீடியோவைக் கொஞ்சம் பாருங்கள்! நாலே நிமிஷம் தான்! புதிய விஷயங்கள் பரவலாகப் புழக்கத்தில் வந்த பிறகும் கூட, ஜனங்களில் ஒரு பகுதிக்கு அதைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் இருக்கத் தான் செய்கிறது. அப்படித் தெரியாமல் இருப்பதனால் மட்டுமே, சமூகத்தின் அந்தப் பகுதி புத்தியில்லாதது அல்லது புத்திக் குறைவானது என்று சொல்லிவிட முடியுமா?

    உளவியல் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தலைப்பு, இப்படி விபரீதமான முடிவுகளை முன்கூட்டியே எடுத்துக் கொண்ட மாதிரி இருக்கிறது என்பதைத் தான் மறுபடி வலியுறுத்திச் சொல்கிறேன்!

    ReplyDelete
  7. //மறுபடி மறுபடி, பதிவை முழுமையாகப் படிக்காமலேயே, சில வரிகளை மட்டும் எடுத்துக் கொண்டு,//

    எனக்கு தேவையானதை தான் நான் எடுத்து கொள்ளமுடியும்!

    நீங்க சூயிங்கம் மாதிரி சவ்வு இழு இழுத்துருப்பிங்க, படிக்கிறவங்க பாவம் இல்லையா!


    //புதிய விஷயங்கள் பரவலாகப் புழக்கத்தில் வந்த பிறகும் கூட, ஜனங்களில் ஒரு பகுதிக்கு அதைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் இருக்கத் தான் செய்கிறது. அப்படித் தெரியாமல் இருப்பதனால் மட்டுமே, சமூகத்தின் அந்தப் பகுதி புத்தியில்லாதது அல்லது புத்திக் குறைவானது என்று சொல்லிவிட முடியுமா?//


    தேவைக்கு தான் புதிய விசயங்கள், தேவையற்ற போது அதை பற்றி நாம் ஏன் மண்டையை உடைத்து கொள்ள வேண்டும்!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!