பாதுஷாக் கனவுகள்....!"மும்பையில் சிவசேனா எதிர்ப்புக்கு மத்தியில் அந்த தரப்பினருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ராகுல் அங்கு லோக்கல் ரயிலில் திடீர் பயணம் செய்தார். நான் ஒரு இந்தியன் என்று பெருமை பொங்கிட அவர்களுக்கு பதிலடி கொடுத்தார். மும்பையில் நுழைய விடமாட்டோம் என்று அச்சுறுத்திய சிவசேனாவின் மிரட்டல் ஒன்றும் எடுபடவில்லை.  முன்னதாக மும்பையில் ராகுல் பேசவிருந்த கூட்ட அரங்கில் நுழைய முயன்ற சிவசேனா தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். மராட்டியர்கள் மட்டுமே வாழ வேண்டும் என்ற கருத்துக்கு எதிர்த்து குரல் கொடுத்தன் மூலம் ராகுல் சிவசேனாவின் எதிர்ப்புகளை நேரிடையாக சந்தித்து வருகிறார்."

இந்தப் படமும் செய்தியும் தினமலர் நாளிதழில் இருந்து.

இன்றைய முக்கியச் செய்தியாக மட்டுமல்ல, வரவேற்கப்பட வேண்டிய செய்தியாகவும் இதைக் கருத வேண்டியிருக்கிறது!

ஒரு வலிமையான தலைமை இல்லாத நிலையில் அங்கங்கே தடி எடுத்தவனெல்லாம் தாண்டவராயனாகிவிடுகிற கொடுமையைப் பார்த்துக் கொண்டே இருக்கும் நிலைமையில், இந்த மாதிரிப் பேர்வழிகளின் உண்மையான மாஞ்சாச் சோறு என்ன என்பதைக் கேள்விக்குள்ளாக்குகிற எந்த ஒரு முயற்சியையுமே வரவேற்றுத் தானாக வேண்டிய நிலைமையில், அறுபதாண்டுக் குடியரசு தள்ளாடிக் கொண்டிருக்கிறது.

ராகுல் காண்டியின்  மும்பை விஜயத்திற்கு மிகக் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்த நிலையில், வீர வசனங்கள் வருவது என்ன பிரமாதமா என்று கேட்பவர்களுக்காக- இன்றைய காங்கிரஸ்காரனுக்கு வீரம், முதுகெலும்பு, சுய கௌரவம் இதெல்லாம்  இருந்ததே இல்லை வசனமும் கூட அடுத்தவன் தான் எழுதிக் கொடுக்க வேண்டும் என்ற யதார்த்தத்தைத் தெரிந்து வைத்திருந்தீர்களானால், ராகுல் செய்திருக்கும் அல்லது, உன்னை உள்ளே நுழைய விடமாட்டோம் என்று சவால் விட்டதற்குப் பதிலாக, உள்ளே வந்து, நான்கு மணிநேரம் மின் ரயிலில் சாதாரண ஜனங்களோடு பயணம், மாணவர்களோடு சந்திப்பு இப்படி சூட்டோடு  சூடாக  ஸ்டண்ட் அடிப்பதற்கே கூட தனி தைரியம், மாஞ்சாச் சோறு இருக்கவேண்டும்! 

ராகுல் காண்டி, ஒரு வித்தியாசமான அரசியல்வாதியாக வளர்ந்து கொண்டிருக்கிறார் என்பது நன்றாகவே வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.  இங்கே தமிழ்நாட்டுக்கு சில மாதங்களுக்கு
முன்னால் வந்தபோதே கூட, காங்கிரஸ் கட்சியின் சில வளைந்து கொடுக்கும் தன்மையை உடைத்து ஒரு அதிர்ச்சி வைத்தியம் செய்தது நினைவிருக்கலாம்! 

டில்லியில் இருந்து மட்டுமல்ல, எங்கிருந்து எந்தப் பிரபலம் வந்தாலும் சந்தித்து சால்வை போர்த்தி வணங்கி ஆசி பெற வேண்டிய அளவுக்கு உயர்ந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு நபரை அவர் சந்திக்கவே இல்லை. அதைப் பெரிய விஷயமாகவும் அவர் எடுத்துக் கொள்ளவில்லை.  சென்னைச் சங்கமம் தான் நடத்த லாயக்கு, சென்னைப் பாதுஷா எல்லாம் இல்லை என்பது வெளியே கசிந்து விடாமல் மறைக்கவும், ஈகோ பன்க்சராகிப் புகைந்ததும் பழைய வரலாறெல்லாம் இல்லை! இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒன்று தான்!

உள்ளூரில் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் அ'லெக்சாண்டர்களுக்கு, ராகுல் காண்டி கொஞ்சம் புகைச்சலாகத் தெரிவதில் வியப்பு இல்லை.

தாக்கரேக்கள், மிரட்டல் வெற்று உதாராகிப் போனதில் நிறையவே உளற ஆரம்பித்திருக்கிறார்கள். கல்யாண வயது தாண்டியும் கட்டைப் பிரமச்சாரியாக ராகுல் இருப்பது பற்றியெல்லாம் உளற ஆரம்பித்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

இதில் பெரிய கொடுமை என்னவென்றால், மும்பையில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி முதல் அமைச்சர், தாக்கரே பேசுவதை விட, மும்பை மராத்தி மக்களுக்கே முதலில் சொந்தம், டாக்சி ஓட்ட மராத்தி தெரிந்திருக்க வேண்டுமென்றெல்லாம் அதிகமாகப் பேசியதை எதிர்த்து  ராகுல் கருத்து எதுவுமே சொல்லவில்லை.

இதில், சிவசேனாவுடன் கூட்டணியை முறிக்கத் தயாரா என்று பிஜேபிக்கு சவால் வேறு! சேனாவுடனான உறவை மறு பரிசீலனை செய்ய வேண்டிய தருணம் இது என்று பிஜேபி வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறது.

சவடால் பேச்சு மட்டுமே பெரிய சாமர்த்தியம் என்று தெனாவட்டாகத்  திரிந்த லொள்ளு யாதவ், முலாயம் சிங், கொஞ்சம் ஆட்டம் காண்பித்த மாயாவதி, ஆந்திராவில் ராஜசேகர ரெட்டி மகன் ஜகன் மோகன ரெட்டி இப்படிக் கிழடுதட்டிப் போனவர்களுக்கும், வாரிசுகளுக்கும் கூட செம ஆப்பு இந்த இளைஞரிடத்தில் இருந்து தான் ஆரம்பித்திருக்கிறது!  இளைஞர்கள் கவனத்தை, ராகுல் அளவுக்கு வேறெந்த அரசியல் கட்சியுமே கூட, மாநில அளவில், மாவட்ட அளவில் கூட ஈர்க்க முடியவில்லை என்பதையும் சேர்த்துப்பாருங்கள்.

ஆப்போ, ஆப்பமோ தமிழ்நாட்டுக்கும் வருமா? ஒண்ணுமே வெளங்கலையே, ராசா! ஆ...ராசா!

தமிழ்நாட்டுக்கும் விடிவுகாலம் பிறக்கட்டும்!22 comments:

 1. அவர் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது...

  ReplyDelete
 2. எவர்?

  பாதுஷாவாகவே உலா வருகிறவரா?

  பாதுஷாவாகிவிட்டதாகக் கனவு கண்டு கொண்டிருப்பவரா?

  பாதுஷாக்களின் கதையில் வருவது போல, மகனே அப்பனைக் கீழே தள்ளிவிட்டு தான் அரியணையில் ஏறி உட்கார்ந்து கொள்ளத் தவிப்பவரா?

  அவர்கள் எவராக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும்! நாம் எப்போது, விழிப்போடு இருக்கக் கற்றுக் கொள்ளப் போகிறோம்?

  ReplyDelete
 3. \\ராகுல் செய்திருக்கும் அல்லது, உன்னை உள்ளே நுழைய விடமாட்டோம் என்று சவால் விட்டதற்குப் பதிலாக, உள்ளே வந்து, நான்கு மணிநேரம் மின் ரயிலில் சாதாரண ஜனங்களோடு பயணம், மாணவர்களோடு சந்திப்பு இப்படி சூட்டோடு சூடாக ஸ்டண்ட் அடிப்பதற்கே கூட தனி தைரியம், மாஞ்சாச் சோறு இருக்கவேண்டும்! \\

  இதுவும் ஒரு தலைமைக்குரிய பண்பாக காண்கிறேன், வரவேற்கிறேன்

  ReplyDelete
 4. இது தலைமைக்குரிய பண்பாகச் சொல்ல முடியாது! ஆனாலும், உதார் விட்டே நாட்டை ஒரு வழி பண்ணிக் கொண்டிருந்தே சிலருடைய கொட்டத்தை, அடக்க முடிந்தது ராகுல் எடுத்த கறாரான நிலைப்பாட்டால் தான்!

  அதே கறாரான நிலைப் பாட்டை ஏன் தமிழ்நாட்டிலும் எடுக்க முடியவில்லை?
  அப்படியென்ன கொடுக்கல் வாங்கல் என்ற கேள்விகளுக்குச் சரியான விடை தெரியவில்லை.

  எல்லாம் போகட்டும்! ராகுல்காண்டி ஏகப்பாட்ட பாதுகாப்பு வளையத்தோடு, சிவசேனா எதிர்ப்பை முறியடித்திருக்கிறார்! அந்த அளவோடு நிறுத்திக் கொள்வோம்!

  தேசப் பிரிவினையின் போது, நேரு வகையறாக்கள், பதவியேற்பு முதலான விஷயங்களில் கவனமாக இருந்தபோது, ஒரிஜினல் காந்தி, தன்னந்தனியாக, இந்து முஸ்லீம் கலவரப் பகுதிகளுக்குப் போனாரே, எல்லோருடைய கொடுஞ்சொல்லையும், ஏச்சையும் தாங்கிக் கொண்டு, கண்ணீருடன் ஒற்றுமையை யாசித்தாரே! திட்டிய ஜனங்களும் பாபுவின் வருகையில் தங்கள் சோகத்தைப் பகிர்ந்து கொண்டார்களே தவிர வேறு அத்துமீறலோ அச்சுறுத்தலோ இல்லையே?

  அது தான் தலைமைப் பண்பு! மக்களுடைய எதிர்பார்ப்புக்களைத் தன்னால் நிறைவேற்ற முடியவில்லை என்ற வருத்தமே, கோட்சே சுடுவதற்கு முன்னால் அவரைக் கொன்று விட்டது என்று எங்கோ படித்தது நினைவு வருகிறது.

  ஒரிஜினலுக்கு எப்போதுமே தனி மரியாதையும், கௌரவமும் இருக்கத்தான் செய்கிறது!

  ReplyDelete
 5. பதிவின் கருத்தோடு முழுவதும் ஒத்து கொள்கிறேன் சார் ... இந்த செயலை வரவேற்க வேண்டும் என்பதே என்னுடைய நிலைபாடும்...அரசியல் ரீதியா குறை மட்டுமே சொல்லி ஒரு பத்து பதிவு வரும் பாருங்க.

  நாளைக்கு 'சாம்னா' பாருங்க , இன்னும் தாக்குதல் இருக்கும்....இத்தாலியர் பிரச்சினை எடுத்ததை பத்தி சொல்லலை நீங்க ? வாஜ்பாய், அப்துல் கலாம் கூட பிரமச்சாரி தான்.

  ReplyDelete
 6. சோனியாவின் இத்தாலிய முகத்தைப் பற்றி அதிகமாகப் பேசியதைக் கடந்த தேர்தலில் மக்கள் நிராகரித்திருக்கிறார்கள். அதில் இருந்து இன்னமும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்றால், அது எதிர்க்கட்சிகளின் அறிவீனம்!

  அதே மாதிரி, முந்தின முறை தேர்தலில் ஜெயித்தபோது, இத்தாலிக் கார அம்மா, வெகு சாமர்த்தியமாகப் போட்டியில் இருந்து ஒதுங்கிக் கொண்டு, மன்மோகன் சிங் மாதிரி ஒரு டம்மிப் பீஸைப் பிரதமராக்கி, தான் தியாக சிகரமாகி விட்டது போலவே ஒரு ஸ்டண்ட் நடந்தது.

  ஆனால் இங்கே பிரச்சினையே வேறு! ராகுல் கொஞ்சம் சுயமாகச் சிந்திக்கிறார் என்பதையே, இது மாதிரி சம்பவங்கள் தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.

  பிரம்மச்சாரி பிரச்சினை திடீரெனக் கிளம்பியதற்கு, ஏதாவது காரணம், கிசு கிசுக்கள் தலைநகரில் இருப்பவர்களுக்குத் தெரிந்திருக்கலாம்.

  எனக்கு அவற்றைத் தெரிந்துகொள்வதில் ஆர்வமில்லை.

  ReplyDelete
 7. இந்த விஷயத்தில் மட்டும் ராகுல்காந்தி செயலை வரவேற்கிறேன் . தாக்கரே கும்பலுக்கும் ஆப்பு வைக்கிற ஒருத்தர் வேணும்.ஆனால் ஏழைகளின் குடிசையில் ஒருநாள் தங்குவது,சாலையில் சாதரணமாக சைக்கிள்ஓட்டுவது போன்றவற்றை பப்ளிக் ஸ்டண்ட் ஆக செய்கிறாரே தவிர மக்களை கடுமையாக பாதிக்கும் விலைவாசி உயர்வு போன்ற நீண்டகால நோக்கில் தீர்க்கவேண்டிய பிரச்சனைகளை கண்டு கொள்வதில்லை.இவர் பிரதமரானாலும் எதுவும் மாறப்போவதில்லை.

  ReplyDelete
 8. சிற்சில கவரும் பண்புகள் வந்திருக்கும்போது பாராட்டுவதில் தவறில்லை. ராகுல் செயல்களில் சில வித்யாசங்கள் தெரிகின்றன. கொஞ்சம் சிந்திக்கிற மாதிரி தெரிகிறது. காலப் போக்கில் இதுவும் அரசியல் ஸ்டான்ட்டாக மாறலாம். உள்புகும் ஆரம்ப கவன ஈர்ப்பாக இருக்கலாம். ராவணன் ராமனாக மாறும்போது ராமனின் பண்புகள் அவனுள்ளும் புகுந்து தவறு செய்ய விடாமல் செய்தது என்று சொல்வார்கள். அது போல இவை நிரந்தரமானால் சந்தோஷம்தான். இதெல்லாம் அல்ல, இந்த மாதிரி ஒரு கவன ஈர்ப்பு மக்களிடம் ஏற்பட்ட தலைவராக, அதுவும் இளம் வயதில், உருவெடுத்தால் சில ஆபத்துக்கள் வந்து சேரலாம்.அதைச் சொன்னேன்.

  நாம் கவனமாக இருக்க வேண்டியதுதான். கவனமாக இருப்பதாகதான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். நம் ஜனநாயக கேலிக் கூத்தில் அதிகபட்ச எதிர்ப்பைப் பெற்றிருப்பவர், விழுந்த குறைந்த பட்ச வாக்குகளில் மெஜாரிட்டி பெற்று ஆட்சி செய்வதையோ, கூட்டணி என்ற பெயரில் நடக்கும் கூத்துகளையோ நம் கவனத்தால் ஒன்றும் செய்ய முடிவதில்லை. பெருமுயற்சி செய்து கிடைக்காததால் வேண்டாம் என்று ஒதுக்கி தியாக பட்டம் வாங்குவதையும் வேடிக்கை பார்க்க மட்டுமே முடியும். நம் விருப்பத்தை மீறி நடக்கும் இந்த மாதிரி விஷயங்களில் கொஞ்சமாவது நம்பிக்கை வைக்கக் கூடியவராக ஒருவர் கிடைக்க மாட்டாரா என்ற ஆதங்கம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

  ReplyDelete
 9. வாருங்கள் கைலாஷ்! ஸ்ரீராம்!

  ராகுல் தாக்கரே விடுத்த வெற்று உதாரை அலட்சியம் செய்ததைப் பாராட்டித் தான் எழுதியிருக்கிறேன்!

  அதே நேரம், அங்கே அவருடைய கட்சி முதல் அமைச்சர் தாக்கரே பாணியில் சமீப காலமாகப் பேசியது, அறிக்கை விட்டதையுமே கண்டித்து ஏதாவது செய்திருந்தால், அப்போது ராகுல் நிச்சயமாக இன்னமும் என் மதிப்பில் உயர்ந்திருப்பார்.

  இந்த நேரு குடும்பத்து வாரிசு, கொஞ்சம் வித்தியாசமான ஆசாமிதான் என்பதில் எனக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை.

  அரசியலில் எத்தனை குறைகளைச் சொல்ல முடிந்தாலும், நேரு குடும்பத்து வாரிசுகள், இந்த தேசத்தை நேசிப்பவர்கள் அந்த வகையில் அப்பனுக்குத் தப்பாமல் பிறந்த பிள்ளைகள் என்பதை தைரியமாக டெமான்ஸ்ட்ரேட் செய்து காட்டியிருக்கிறார் என்பதற்காகத் தான் இந்தப் பதிவே!

  ReplyDelete
 10. We all have an idealistic image about practically everything and any deviation from our own images gives us extreme dissatisfaction.

  ReplyDelete
 11. // இன்றைய முக்கியச் செய்தியாக மட்டுமல்ல, வரவேற்கப்பட வேண்டிய செய்தியாகவும் இதைக் கருத வேண்டியிருக்கிறது!//
  நான் அதை ஆமோதிக்கிறேன்.

  ReplyDelete
 12. கௌதமன் சார் ஆமோதித்ததை நான் மீண்டும் பாராட்டி ஆமோதிக்கிறேன்!

  ராமன் சார்,

  தமிழிலேயே பேசுவோம்!
  நீங்கள் சொல்வது ஒரு விதத்தில் சரி தான்! அதிருப்தி என்று என்று ஒன்றில்லாவிட்டால் வளர்ச்சிக்கே இடமிருந்திருக்காது என்பது உண்மைதான். அதற்கான சந்தர்ப்பங்களே வேறு!

  இங்கே அரசியலில் நீங்கள் சொல்வது பொருந்தவில்லையே!

  குறைந்தபட்ச அரசியல் நாணயம், நேர்மை இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த விதத்தில் லட்சிய வாதமாகவும், கிடைக்காத போது அதிருப்தி என்றும் ஆக முடியும்?

  செய்ய வேண்டிய கடமையை ஒழுங்காகச் செய்யவில்லை என்று சொல்லக் கூடாது என்கிறீர்களா?

  ReplyDelete
 13. கிருஷ் சார் - வளர்ச்சிக்குத் தேவை அதிருப்தி இல்லை, ஆனால் - உணர்ச்சிவசப்படாத எதிர்க் கருத்துக்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. அதிருப்தி ஏற்படும்பொழுது கட்சிப் பிளவும், தீவிரவாத எண்ணங்களும்தான் அதிகம் பயிராகின்றன. இதற்கு சரித்திரச் சான்றுகள் ஏராளமாய் உள்ளன.

  ReplyDelete
 14. அதிருப்தி என்ற வார்த்தைக்கு, குற்றம் சொல்வதாக மட்டுமே அர்த்தம் என்று எடுத்துக் கொண்டால் நீங்கள் சொல்வது சரிதான்.

  அந்த வார்த்தைக்குப் போதாது, இன்னமும் வேண்டும் என்கிற அர்த்தம் தான் சரியானது.

  பனைஓலை வேய்ந்த குடிசையே போதுமென்று முன்னோர்கள் வாழ்ந்திருந்தால், வளர்ச்சி, வரலாறு இப்படி எதுவுமே இருந்திருக்காது இல்லையா?

  அதிருப்தி அல்லது இன்னும் அதிகம் வேண்டும் என்பது வளர்ச்சியைத் தூண்டுகிற முரண்பாடுகளில் ஒன்று!

  ReplyDelete
 15. கட்சிப் பிளவு, தீவீரவாத எண்ணங்கள் எல்லாமே இந்த முரணியல் விதிகளுக்கு உட்பட்டவைதான். அடக்கி வைக்க முயலும் பொது வெடித்துச் சிதறுவது இயற்கை தானே!

  ReplyDelete
 16. அதிருப்தி என்பது - தன செயல்களின் மீதே தனக்கு வரும்பொழுது - அது மேற்கொண்டு வளர்ச்சிக்கு வித்திடும். ஆனால் மற்றவர்களின் செயல்கள் மீது வந்தால் - குறிப்பாக செயல் படுகின்ற பொறுப்புகளுடன் கூடிய ஸ்தாபக / அமர்த்தப்பட்ட தலைவர்கள் (திரும்ப சொல்லமுடியாது !!) செயல்களில் - ஒருவருக்கு அதிருப்தி ஏற்பட்டால் - அதனால் வளர்ச்சி எதுவும் வர வாய்ப்பில்லை. மாறாக - பிளவுதான், மனஸ்தாபம்தான், அடி தடிதான்! (கருத்து உதவி - திருமதி கௌதமன்)

  ReplyDelete
 17. திருமதி கௌதமன் உதவியோடு நீங்கள் சொல்லியிருக்கும் கருத்து எனக்கு மிகவும் விந்தையாக இருக்கிறது கௌதமன் சார்!

  முதலில் திருப்தி என்பது ஒரு பண்பு, தன்மையின் அளவீடாகச் சொல்லப் படும் சொல்! ஒரு நபர், அல்லது கூட்டம் எல்லாவற்றிற்கும் பொருந்தக் கூடியது.

  உதாரணமாக, காலைச் சிற்றுண்டிக்கு எத்தனை இட்லி சாப்பிட முடியும் என்று கேட்டால், ஒருவருக்கு அது நான்கு, இன்னொருவருக்கோ ஆறு அல்லது ஏழு. ஒரு அளவு வந்ததும், அங்கே போதும் என்ற நிலை வந்துவிடுகிறது பாருங்கள், அது திருப்தி! அதற்கு நேர் எதிர் நிலை அதிருப்தி!

  உணவு, இன்னும் சில விஷயங்களில் இந்த திருப்தி சீக்கிரம் வந்து விடுகிறது. வேறு சில விஷயங்களிலோ, வரவே மாட்டேன் என்கிறது!

  காமம்! பதவிப் பித்து! பணத்தின் மீது ஆசை! இப்படி திருப்தி ஏற்படவே மாட்டேன் என்று அடம் பிடிக்கிற பட்டியல் கொஞ்சம் பெரிசு!

  இந்தப் பட்டியலைக் கொஞ்சம் விரிவாக ஆராய்ந்தால்,ஆன்மீகமும் பேசலாம், அரசியலும் பேசலாம், மனோ தத்துவமென்று விஞ்ஞானமாகவும் சொல்லிக் கொள்ளலாம்! இந்த இயல்பு ஒன்று தான் இப்போது காணும் வளர்ச்சிக்கும், பிரச்சினைகளுக்கும் அடிப்படைக் காரணமாக இருக்கிறது!

  அடுத்து, வாரிசு, நியமனத் தலைகள் பற்றி! நீங்கள் திரும்பச் சொல்லவே வேண்டாம்! ஒரு விதத்தில் பாவப்பட்ட கேஸ்கள் என்றே சொல்லுவேன்!

  இவர்களைச் சுற்றி ஒரு ஒட்டுண்ணிக் கூட்டம் சூழ்ந்து கொள்கிறது. இவர்களால், அந்த ஒட்டுன்னிகளுக்குப் பதவி, பணம், இன்ன பிற சௌக்கியங்கள் குறைவில்லாமல் கிடைக்கும் வரைதான், இந்த ஒட்டுவாரொட்டிகள் ஒட்டிக் கொண்டிருக்கும்!

  உதாரணத்துக்கு, மூப்பனாரோடு போனால் பதவி நிச்சயம் என்பதைக் கணித்த பானா சீனா ஒட்டிக் கொண்டதும், தற்சமயம் மூப்பனார் மகனோடு வெட்டிக் கொள்வதுமான சுயநல அரசியல்!

  நான் ஒரு தரம் சொன்னால் நூறு தரம் சொன்ன மாதிரி என்று பஞ்ச டயலாக் பெசினவரைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, பஞ்சர் ஆனதும் கழற்றி விட்ட மாதிரி!

  எதிர்பார்த்து ஒட்டிக் கொள்பவர்களால் எப்போதுமே அடிதடி, பிளவு, கோஷ்டிகள் விபரீதமான எண்ணிக்கையில் வளர்வது இதெல்லாம், முரண்பாடுகளின் இயக்கத்தில் ஏற்படும் விளைவுகள் தானே தவிர, காரணமல்ல!

  ReplyDelete
 18. Let me give chance for other prominent and usual people for their comments and views on the blog subject and re-visit later.!!!

  ReplyDelete
 19. ராகுல் காந்தி செய்தது மிகச்சரி. சிவசேனாவுக்கு மட்டுமல்ல, இதே கொள்கையுடைய பலருக்கும் (பல மாநிலத்தவருக்கும்)இது முகத்தில் அறைந்தார்போல்தான் இருந்தது.

  ReplyDelete
 20. இன்னும் கொஞ்சம் விவரமாகச் சொல்ல அனுமதியுங்கள். , அரசியல் வாதி இப்படி இருக்க வேண்டும் என்று எண்ணுகிறோம். அப்படி இல்லை எனும்போது கடுமையாக அல்லது மேம்போக்காக விமர்சிக்கிறோம். அப்படி இருப்பது போல் நடித்து ஏமாற்றுபவர்களிடம் ஏமாறுகிறோம். அவர்களது சுயரூபம் தெரியும்போது துயரப்படுகிறோம். இதுதான் அன்றாட நடவடிக்கை. அப்படியானால் சும்மா இருப்பதே சுகமா என்ற கேள்வி எழுகிறது. நிச்சயமாக இல்லை. கவனிக்கப் பட வேண்டிய விஷயம், ஒரு குடிமகன் ஒரு நல்ல குடிமகனாக இல்லை, ஆசிரியர் நல்ல ஆசிரியராக இல்லை என்றால், அரசியல்வாதி மட்டும் எப்படி நல்ல வராக இருக்க முடியும்? வியாபாரிகள் நல்ல வியாபாரிகளாக இருப்பர். காரணம் அப்போதுதான் வியாபாரம் செழிக்கும். இல்லையேல் பைநான்ஸ் கம்பெனிக் காரர் மாதிரி ஏமாற்றிவிட்டு ஓட்டம் பிடிக்க வேண்டியதுதான். தர்ம அடி கிடைக்கும் போது செமை உதை கிடைக்கும் லாபம் கருதி வேஷம் போடுவது எங்கு இல்லை? எப்பொருளிலும் மெய்ப்பொருள் தேடினால், கிடைப்பது இதுவாகத் தான் இருக்கிறது. அதற்காக வாயை மூடிக்கொண்டு சும்மா இருக்க முடியுமா? விமர்சனம் உங்கள் உள்ளக் கிடக்கை, புலம்பல் என் மனத்தின் தாபம். அவ்வளவுதான். நாம் வழக்கம் போலத் தொடருவோம். இதில் நன்மை விளையுமோ என்னவோ, கெடுதல் முளைக்காது. குறைந்த பட்சம், சுவாரசியமாகப் பொழுது போகிறது. அதுவும் ஒரு விரும்பத் தக்க வாழ்வு அம்சம்தானே.

  ReplyDelete
 21. //ராகுல் காண்டியின் மும்பை விஜயத்திற்கு மிகக் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்த நிலையில், //

  காண்டி - காண்டு !

  உங்களுக்கு அவர் மேல செம காண்டு !

  சட்டையில் அழுக்குப் படாமல் மண் கூட சுமந்த சாதனையாளர் அவர்.

  :)

  ReplyDelete
 22. ராகுல் என்ற இளைஞனின் மேல் எனக்கு எந்தக் காண்டும், கடுப்பும் இல்லை!

  இந்திரா தன்னுடைய தந்தையின் விருப்பத்தை மீறித் திருமணம் செய்து கொண்ட Feroze Gandhe உண்மையில் ஒரு ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முஸ்லிம். யாரோ ஒரு பாட்டி பார்சி என்பதை வைத்து, அவரைப் பார்சி என்று மட்டும் வெளியில் சொன்னார்கள். இந்திரா முஸ்லிமாக மாறித் திருமணம் செய்து கொண்டதும் நிறையப்பேர் அறியாத விஷயங்கள்!

  பெரோஸ் காந்தே அல்ல, காண்டி என்பது தான் சரியான உச்சரிப்பு. நேருவின் செயலாளராக ஒட்டிக் கொண்ட ஒரு மலையாளி, எம் ஒ மத்தாய் எழுதிய புத்தகத்தில் இன்னும் விவகாரமான அந்தரங்கங்கள் வெளியாகியிருக்கின்றன.

  காண்டி என்பது தான் உண்மையான பின் பெயர் என்பதால் அதை உபயோகிக்கிறேன்!

  ஒரிஜினல் காந்தி பாவம்!

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!