கற்பனைக் கதை தான்! #உண்மை கற்பனையை விடக் கொடூரமானது!

கொரோனா வைரஸ் தொற்று என்பது தற்செயலாக உருவானதா அல்லது செயற்கையாக உருவாக்கப் பட்டுப் பரவ விடப்பட்டதா என்பதைக் குறித்து ஏகப்பட்ட செய்திகள், கான்ஸ்பிரசி தியரிகள் நிறையவே உலவுகின்றன. Truth is stranger than fiction என்பதை நீங்கள் எப்படிப் புரிந்துகொள்கிறீர்களோ அறியேன்! நான் எப்போதோ படித்த ஒரு கதைப் புத்தகம், இப்போது என் நினைவுக்கு வந்து Truth is stranger than fiction என்று சொல்லப்படுவது சத்தியம் தான் என்று உறுதி சொல்லிக் கொண்டிருக்கிறது.

 
கொரோனா ...
சீனா .. ' Thousand Talents Plan 'என்கிற திட்டத்தை உருவாக்கி 2008 முதல் அமல் படுத்தி வருகிறது. உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள துறை சார் விஞ்ஞானிகளை & திறமையாளர்களை... பெரும் பணத்தை சம்பளமாகவும், ஆராய்ச்சிக்கான உதவித்தொகையாகவும் கொடுத்து ...இத் திட்டத்தின் கீழ் பணியமர்த்திக் கொள்வது சீனாவின் நோக்கம்.
அமெரிக்கா போன்ற நாடுகளில் பெரும் பொருட்செலவுடன் நடந்து கொண்டிருக்கும் பல்துறை ஆராய்ச்சிகளுக்குள் புகுந்து குழப்பம் ஏற்படுத்துவதற்கும், விஞ்ஞானிகளை தங்கள் பக்கம் இழுப்பதன் மூலம் பெரும் அறிவுத்திருட்டுக்கும் திட்டமிடுகிறது சீனா என்று எச்சரித்தது அமெரிக்கா.
எச்சரித்தது போலவே சீன ஊடுருவல் நடக்கத்துவங்கியது. பல அமெரிக்க விஞ்ஞானிகள் சீனாவின் TTP ன் கீழ் இணைந்து பெரும் பணத்தை பெற்றுக் கொண்டு பணிபுரிந்தாலும், அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து அதை மறைத்தனர்.
கடந்த ஜனவரி மாதம்.. New Mexico ல் உள்ள Las Alomas National Laboratory ல் பணிபுரிந்த விஞ்ஞானி ஒருவர் விசாரணையின் போது ...தான்...சீனாவின் Thousands Talents Plan ன் கீழ் ரகசியமாக பணிபுரிவதாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.
அதே போல...ஃப்ளோரிடாவில் உள்ள Moffitt Cancer Centre ல் அதன் தலைமை நிர்வாகி உட்பட்ட 6 விஞ்ஞானிகள் & பணியாளர்கள் சீனாவின் TTP ன் கீழ் பணிபுரிவதாக அறியப்பட்டு ...வெளியேற்றப்பட்டனர்.
இவையெல்லாம் பெரிய அளவில் உலக கவனம் பெறாத நிலையில் தான்...ஜனவரியில் ஹார்வர்ட் பல்கலையின் வேதியியல் துறை பேராசிரியர், விஞ்ஞானி, மருத்துவம் மற்றும் உயிரியல் துறை nanotechnology யில் முன்னோடியானவர், அமெரிக்க பாதுகாப்புத்துறை உட்பட பல்வேறு அதிமுக்கிய துறைகளில் விஞ்ஞானியாக பணியாற்றியவர், உலகப்புகழ் பெற்ற உயிரியல், வேதியியல் துறை விஞ்ஞானி ...Charles Lieber ஐ கைது செய்தது FBI .
சீனாவின் TTP 'ன் கீழ் பணியமர்த்தப்பட்டு ...சீனாவின் Wuhan மாகாணத்தில் உள்ள Wuhan University of Technology -ல் ஒரு பரிசோதனைக்கூடம் ஏற்படுத்தவும், வருடத்தில் 9 மாதங்கள் WUT க்காக பணி செய்வதற்கும், சீனாவில் இருந்து ஆராய்ச்சி மாணவர்கள் / விஞ்ஞானிகளை ஹார்வர்டில் உள்ள தன்னுடைய ஆராய்ச்சி கூடத்தில் வருடத்தில் இரண்டு மாதங்கள் தங்கி இருந்து ஆராய்ச்சிகளை கவனிப்பதற்கு ..தன்னுடைய பொறுப்பில் அழைப்பதற்கும்...Charles Lieber -க்கு வருடத்திற்கு $ 150,000 தனிப்பட்ட செலவுக்கும், மாதம் $50,000 சம்பளமும் பெற்றதாகவும், இத் தகவல்களை அமெரிக்க அரசிடமிருந்து மறைத்ததாகவும் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். அடுத்த இரண்டு நாட்களிலேயே..அவர் ஜாமீனில் வெளிவந்துவிட்டார் என்பது வேறு விஷயம்.
இப்போது..ஹார்வர்ட் பல்கலை இவரை கட்டாய விடுப்பில் வைத்துள்ளது. பல்கலையில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இவருடைய ஆராய்ச்சிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவரின் கீழ் பணிபுரிந்த 12 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மாணவர்கள் கண்காணிப்பின் கீழ் உள்ளனர்.
பல விருதுகளை பெற்ற புகழ் பெற்ற வேதியியல் விஞ்ஞானியின் Wuhan ஆராய்ச்சி கூட தொடர்பு ..உலக அரங்கில் பெரும் விவாதப் பொருளாகி இருக்கிறது.
இதையடுத்து உலக நாடுகளின் சந்தேகப்பார்வை சீனா மீது அழுத்தமாக பதிந்திருக்கிறது.
இதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில்..கடந்த 2019 அக்டோபர் ல் WHO தலைவர் உட்பட கலந்து கொண்ட..John Hopkins Health Security, Melinda Gates Foundation, World Economic Forum இணைந்து நடத்திய நிகழ்வில் உலகை அச்சுறுத்தும் வைரஸாக global pandemic ஆக கொரோனா மாறக்கூடிய வாய்ப்புகள் , அதை எதிர்கொள்ள தேவையான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டிருக்கிறது. இதில் Charles Lieber ம் கலந்து கொண்டார் என்று சொல்லப்படுகிறது.
என மூன்று இணைப்புகளையும் இதற்கு ஆதாரமாகக் கொடுத்திருக்கிறார். நண்பர் திருப்பூர் ஜோதிஜி, சில நாட்களுக்கு முன்னால், இந்த கொரோனா வைரஸ் சீன ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டதுதானா என்பதைப் பற்றிக் கொஞ்சம் எழுதலாமே என்று கேட்டிருந்தார். அந்த ஊகம் ஏற்கெனெவே பல ஊடகங்களிலும் செய்தியாக வந்து, அது மறந்தும் போய்விட்டபடியால் புதிதாக என்ன எழுதுவது என்று யோசித்துக் கொண்டு இருந்த சமயத்தில் தான் ராபர்ட் லட்லம் இன்னொரு எழுத்தாளருடன் சேர்ந்து எழுதிய The Hades Factor கதை கான்ஸ்பிரசி தியரிகளில் மிகவும் நம்பகத்தன்மை உள்ள ஒரு விஷயத்தை எனக்கு ஞாபகப்படுத்தியது.
ராபர்ட் லட்லமின் The Hades Factor கதை, மூன்று ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாத, வெவ்வேறு இடங்களில் நடந்த மரணங்கள், அதைத் தொடர்ந்து எழும் கேள்விகளில் இருந்து தொடங்குகிறது.

சவப் பரிசோதனையில், அதுவரை அடையாளம் காணப் படாத ஒரு வைரசின் தாக்குதல் இருப்பதாகத் தெரிய வரவும், பிரச்சினை என்ன என்பதை ஆராய்வதற்காக  The U.S. Medical Research  Institute for Infectious Diseases(USAMRIID) மற்றும் Center for Disease Control(CDC)  என்ற இரண்டு அமைப்புக்களுக்கும் இறந்தவர்களுடைய உடலில் இருந்து எடுக்கப் பட்ட சாம்பிள் அனுப்பிவைக்கப் படுகிறது.

அமெரிக்க ராணுவத்தின் தொற்று நோய் ஆராய்ச்சிப் பிரிவில் (USAMRIID) பணியாற்றும் லெப்டினன்ட் கர்னல்  டாக்டர் ஜோனாதன் ஸ்மித் லண்டனில் ஒரு மருத்துவ மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு, நாடு திரும்பி தன்னுடன் பணிபுரியும், தன்னுடன் காதலி சோபியா ரஸ்ஸலைச் சந்திப்பதை ஆவலோடு எதிர்நோக்கியிருக்கும் தருணத்தில், ஜோனாதன் ஸ்மித்தின் பால்ய  நண்பன் பில்லிடமிருந்து. லண்டனின்  ஒரு ஒதுக்குப் புறமான இடத்தில் சந்திக்க வருமாறு சங்கேதச் செய்தி வருகிறது. சந்திக்கும்போது, ஸ்மித், மற்றும் சோபியாவின் உயிருக்குப் பெரும்  ஆபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாகவும், உடனடியாக அமெரிக்கா திரும்பி, சோபியாவையும் காப்பாற்றிக் கொள்ளுமாறு அந்த நண்பன் சொல்லிவிட்டு ஸ்மித் என்ன ஏது என்று கேட்கும் முன்னரே, தன்னுடன் அழைத்து வந்திருந்த நாயுடன் மறைந்து விடுகிறார்.
என்ன ஏது என்று புரியாமல் ஸ்மித் தான் தங்கியிருந்த ஹோட்டலுக்குத் திரும்புகிற வழியில் அவரைத் தீர்த்துக் கட்ட ஒரு முயற்சி நடக்கிறது.  அவரைக் கொல்ல முயற்சி செய்தவர்களில் ஒருவனைக் கொன்றுவிட்டு ஸ்மித் தப்பித்துவிடுகிறார், ஃபோர்ட் டெட்ரிக்கில் இருக்கும் USAMRIID ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றும் தனது காதலியைக் காப்பாற்ற ஸ்மித் விரைகிறார்.

இங்கே லண்டனில் ஸ்மித்தைக் கொலை செய்ய ஏற்பாடு நடந்து கொண்டிருக்கும் அதே நேரம், அங்கே ஆராய்ச்சி மையத்தில் டாக்டர் சோபியா ரஸ்ஸல், அந்த இனம் தெரியாத வைரசை அடையாளம் காணும் முயற்சியில் தீவீரமாக இருக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன்னால், சோபியாவும் இன்னும் சில மருத்துவர்களும் பெரு நாட்டுக்குச் சென்றிருந்த தருணத்தில், அதே மாதிரி சிம்ப்டங்களுடன் பாதிக்கப் பட்ட உள்ளூர் மக்கள், ஒரு வகைக் குரங்கின் ரத்தத்தை மருந்தாக எடுத்துக் கொண்ட போது நோயில் இருந்து விடுபட்டதாகக் கேள்விப்பட்டது திடீரென நினைவுக்கு வருகிறது. அப்போது, அதைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த டாக்டர் விக்டர் ட்ரேமான்ட்  என்ற விஞ்ஞானியைச் சந்தித்ததும், குரங்கு ரத்தத்தில் இருந்த ஒருவகை ஆண்டி பாடீஸ் தான் அதற்கு மருந்தாக இருக்க வேண்டுமென்றும் பேசியது நினைவு வரவே,அவரைத் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறாள். அந்த முயற்சியே, அவளது உயிரைக் கொள்ளை கொண்டுபோகும் என்பதையோ, காதலன் ஜோனாதன் ஸ்மித்துடைய உயிருக்கும் ஆபத்து விளைவிக்கும் என்பதை அறியாதவளாக!

ப்ளாஞ்சார்ட் கெமிகல்ஸ் என்ற புகழ் பெற்ற மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உபதலைவராக  இருக்கும் விக்டர்  ட்ரேமான்ட், சோபியாவுடன் பேசுகையில் தனக்கு எதுவும் நினைவு இல்லை என்று மறுத்தாலும், டாக்டர் சோபியாவின் ஞாபக சக்தியைக் கண்டு கலக்கமுறுகிறார். தீர்த்துக் கட்டுவதைத் தவிர வேறு வழியே இல்லை! நாடல் ஹசன் என்ற தேர்ந்த கொலையாளியிடம் சோபியாவையும், ஸ்மித்தையும் கொள்ளும் பொறுப்பு ஒப்படைக்கப் படுகிறது.

அமெரிக்க ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஃபோர்ட் டெட்ரிக்கின் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி, சோபியாவுக்கு ஆராய்ச்சிக் கூடத்திலேயே, அந்த கொடும் வைரஸ் ஊசி வழியாகச் செலுத்தப் பட்டு ஒரு விபத்து மாதிரி செட்டப் செய்யப் படுகிறது. சோபியாவின் தொலைபேசி உரையாடல்கள், ஆராய்ச்சிக் குறிப்புக்கள் எல்லாமே சுத்தமாக அழிக்கப் படுகிறது.

நோயின் தாக்கத்தோடு வீடு திரும்பும் ஜோனாதன் ஸ்மித் மருத்துவ மனையில் சேர்த்தும், அந்த இனம் தெரியாத வைரஸ் அவளது உயிரைக் கொள்ளை கொள்கிறது. காதலியை  இழந்த சோகத்தில், திசை தெரியாமல் தடுமாறும் ஸ்மித்துக்கு, சவப்பரிசோதனையில், சோபியாவின் உடலில் ஊசி போடப்பட்ட இடம் அது கொலை தான் என்று காட்டிக் கொடுத்துவிடுகிறது. தன்னுடைய மேலதிகாரி ஜெனரல் கீல்பர்கரிடம், தனக்குத் தெரிந்த அத்தனை விவரங்களையும் சொல்லி, ஸ்மித் சோபியாவின் மரணத்துக்குப் பழிவாங்கியே தீரவேண்டும் என்று அனுமதி கோருகிறார். ஆனால், அனுமதி கொடுப்பதற்கு முன்னாலேயே கீல்பர்கரும், அந்த வைரசுக்குப் பலியாகிறார். அது கொலை தானென்றும், அதை செய்தது ஸ்மித் தானென்றும் வேட்டையாடப் படுகிற நிலைக்கு ஸ்மித் தள்ளப் படுகிறார்.   

பீட்டர் ஹோவெல், மார்டிஜெல்லர் பாக் என்ற இரண்டு நண்பர்களுடைய உதவியோடு ஜோனாதன் ஸ்மித், இந்த வைரஸ் கோளாறு ஈராக்கில் பரிசோதிக்கப் பட்டதென்பதை அறிகிறார். ரகசியமாக ஈராக்கிற்குப் பயணமாகிறார். சி ஐ ஏ அதிகாரியாக பணியாற்றும் சோபியாவின் சகோதரி ராண்டி ரஸ்ஸலை எதிர்பாராத விதமாக அங்கே சந்திக்க நேரிடுகிறது. சோபியாவின் மரணத்தைப் பற்றி தெரிந்துகொள்ளும் ராண்டி கோபப்படுகிறாள். பிறகு சேர்ந்து செயல்படுகிறாள். தேவையான விவரங்களைத் தெரிந்து கொண்டு ஸ்மித் அமெரிக்காவுக்குத் திரும்புவதற்குள், உலகின் பல பகுதிகளிலும் ஒரு இனம் தெரியாத வைரஸ் தாக்குதலுக்கு லட்சக்கணக்கான மக்கள் பலியாகிறார்கள்.

அமெரிக்காவிலும் இந்த வைரஸ் தாக்குதல் ஆரம்பிக்கலாம் என்ற நிலையில், இதற்கான மருந்தை ப்ளாஞ்சார்ட் கெமிகல்ஸ் வேறு ஒரு ஆராய்ச்சியைச் செய்து கொண்டிருந்தபோது தற்செயலாக இந்த வைரஸ் தாக்குதலுக்கும்நிவாரணமாக  இருப்பதைக் கண்டறிந்ததாகவும், அமெரிக்க அரசு ஆர்டர் கொடுத்தால் லட்சக் கணக்கான தடுப்பு ஊசி  மருந்தைத் தயாரிக்கும் தயார் நிலையில் இருப்பதாகவும் செய்தி வருகிறது. அமெரிக்க மக்களைக் காப்பதற்காக, கோடிக்கணக்கான டாலர்களைக் கொடுத்து அமெரிக்க அரசு இந்த மருந்துகளை வாங்க ஆர்டர் கொடுக்கிறது. அத்தோடு விடாமல், இந்த மருந்தைக் கண்டுபிடித்ததற்காக, டாக்டர் விக்டர் ட்ரேமான்ட்டிற்கு, அமெரிக்க அதிபரே நேரடியாக சுதந்திரத்திற்கான பதக்கம் என்ற உயர்ந்த விருதை வழங்கி கௌரவப் படுத்துவதற்கும்  ஏற்பாடாகிறது.

கதையின் முடிச்சுக்கள் ஒவ்வொன்றாக அவிழும் தருணங்கள் மிக சுவாரசியமாகக் கையாளப் பட்டிருக்கின்றன.

பெருவில் ஏற்படும் ஒருவிதமான காய்ச்சலுக்கு, மருந்தாக ஒருவகைக் குரங்கின் ரத்தத்தில் இருக்கும் ஆண்டிபாடீஸ் பயன்படுவதைக் கண்டறியும் டாக்டர் ட்ரேமான்ட், நோயை உண்டாக்கும் காரணியையும், நோயைக் குணப்படுத்து
ம் ஆண்டி பாடீசையும் தயாரித்து, நோயை பரப்பி அதற்குப் பிறகு அதற்கு மருந்தையும் கண்டுபிடித்துக் கோடிக்கணக்கில் காசாக்குகிற சதியை ஹேட்ஸ் ப்ராஜக்ட் என்ற பெயரில், அமெரிக்க அரசின் மிகப் பெரிய பதவியில் இருப்பவர்களுடைய கூட்டணியோடு உருவாக்குகிறார். ப்ளாஞ்சார்ட் கெமிகல்ஸ் என்ற பழமையான நிறுவனத்தின் உரிமையாளருக்குத் தெரியாமலேயே, மிக நவீனமான ஆய்வுக் கூடம், மருந்து தயாரிப்பு எல்லாம் நடக்கின்றன.

நோயை உருவாக்கும் வைரஸ்,  குறிப்பிட்ட சிலருக்கு மருத்துவ உதவி என்ற பெயரில் செலுத்தப் படுகிறது. மாற்று மருந்து ஒரு சிலருக்கு மட்டும் கொடுக்கப் பட்டு, மருந்து சரியாக வேலை செய்கிறது என்பது உறுதிப் படுத்தப் படுகிறது. மற்றவர்கள், பெரும் அவஸ்தையுடன், இன்னதென்று நிர்ணயிக்கமுடியாத காரணத்தால் சாக விடப் படுகிறார்கள். நோயை உருவாக்குவதற்காக  ஆண்டிபயாடிக்ஸ் மருந்து என்ற போர்வையில், நோயைப் பரப்பும் மருந்துகள் ஏராளமாக சந்தையில் விடப் படுவதும், சரியான விலை கிடைத்ததும் மாற்று மருந்தும் கிடைக்கச் செய்வதுமான மருந்துத் தயாரிப்பு  நிறுவனத்தின் சதி மோசடி இப்படியாக அம்பலமேறுகிறது.

கதாநாயகன் ஜோனாதன் ஸ்மித், ஈராக்கில் இருந்து திரும்புகிற சமயம், அவரது நண்பர்களில் ஒருவரான மார்டி எதிரிகளிடம் சிக்கிவிடுகிறார். ஆரம்பத்தில் அவரை எச்சரித்த பால்ய நண்பர் பில், இந்த சதிகாரர்களுடைய கூட்டத்தில் ஒருவர் என்பதும், தன்னுடைய நண்பனைக் காப்பாற்ற முயற்சிப்பது தெரிந்த நிலையில் அவரை வைத்தே ஸ்மித்தை வலையில் சிக்க வைக்கிற முயற்சியும் நடக்கிறது. நண்பனைக் காப்பாற்றுகிற முயற்சியில் பில் தன்னுடைய உயிரைக் கொடுக்கிறார். அதற்குப் பிறகு, ஜோனாதன் ஸ்மித் எதிரிகளை எப்படி சமாளிக்கிறார் என்பது விறுவிறுப்பான க்ளைமாக்சில் வந்து முடிகிறது.

ராபர்ட் லட்லம் 

இங்கே நிஜத்தில் வல்லரசுகளை விட வலிமையான அமைப்புக்களாக  மருந்து தயாரிக்கும் பெரு நிறுவனங்கள், உயிர்காக்கும் மருந்துகளை எப்படிக் கொள்ளை விலைக்கு விற்று ஆதாயம் தேடுபவையாக இருப்பதை மறந்துவிட்டு, காரணங்களை வேறெங்கோ தேடுகிறோமோ? சீனா இன்றைக்கு மிகவும் மலிவாக மருந்துகள், மருத்துவ சாதனங்களைத் தயாரிப்பதில் முன்னணியில் இருக்கிறது, சர்வதேச சந்தையில் சீனத்தயாரிப்பு மருந்துகள் முழு ஆதிக்கம் செலுத்துவதை அறிந்திருக்கிறோமா? 

சீனாவுக்கு இருக்கிற மிகப்பெரிய சௌகரியம், ஆராய்ச்சிக்கு பைசா செலவு செய்யாமல் அடுத்த நாடுகளின் கண்டுபிடிப்புக்களைக் காப்பியடித்து, மிகக்குறைந்த கூலியில் கிடைக்கும் உள்ளூர் மனித உழைப்பை வைத்து மிகமலிவாக மருந்துகள் உட்பட எதைவேண்டுமானாலும் தயாரிக்க முடிவது! Reverse Engineering இல் சீனர்கள் மிகவும் திறமைசாலிகள்! 

The Hades Factor தொலைக்காட்சிக்காகத் தயாரிக்கப் பட்ட படமாகவும் 2006 இல் வெளிவந்தது. DVDயாகவும் கிடைக்கிறது. முடிந்தால் நாவலை வாசித்துப் பார்த்து நடப்பு  நிலவரங்களோடு ஒப்பிட்டும் பாருங்களேன்! சீனாவோடு நாம் போட்டிபோட முடியாத துறைகளில் மருந்து உற்பத்தித்துறையும் ஒன்று என்பதை நினைவு வைத்துக்கொள்ளலாம் தான்! நினைவு வைத்து ........?

மீண்டும் சந்திப்போம்.

7 comments:

  1. இந்தக் கட்டுரையை கூகுள் அழிக்கும் முன் இதைப் படியுங்கள் என்று கொரானா அன்மாஸ்க்ட் என்கிற லிங்க் பயமுறுத்துகிறது.  உங்களுக்கு வாட்ஸாப்பில் அனுப்புகிறேன்.  ஒருவேளை நீங்கள் ஏற்கெனவே பார்த்திருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. அப்படிப் பயமுறுத்தியாவது படிக்க வைக்கிற உத்தியாக இருக்குமோ ஸ்ரீராம்? :-)))) அப்படித்தான் இந்தக் கதையைக் கூடப் படிக்க வைக்க வேண்டியிருக்கும் போல!

      எதற்கும் லிங்கை மெயில் ஐடிக்கு அனுப்பிவைப்பது உடனே சௌகரியமாகப் படிப்பதற்கு உதவியாக இருக்கும்!

      Delete
    2. மெயிலுக்கும் அனுப்பி இருக்கிறேன். கதைகளில் நாயகர்கள் ஜெயித்து தீர்வு கண்டு விடுகிறார்கள்.  நிஜத்தில்?

      Delete
    3. கதைகளில் ஹீரோ, உண்மையைக் கண்டுபிடித்த பிறகுதான் ஜெயிக்கிறார்கள்! அதுபோல உண்மையைக் கண்டுபிடிக்கிற எவரும் ஜெயிக்கலாமே ஸ்ரீராம்!

      நேற்றிரவே வாட்சப் லிங்கில் கட்டுரையைப் படித்துவிட்டேன் ஸ்ரீராம்! இதுவரை படித்திராத விஷயம்தான்! கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்ட செய்தி மாதிரித்தான் தோன்றியது. இப்போதாவது இந்தப்பதிவில் கதைச் சுருக்கத்தை வாசித்தீர்களா?

      Delete
    4. வாசிக்காமல் இருப்பேனா? நிறைய கதைகள் நிஜங்களிலிருந்தே படைக்கப் படுகின்றன.

      Delete
    5. இந்தக் கதைக்கும் வாட்சப்பில் நீங்கள் அனுப்பியிருந்த கட்டுரையில் சொல்லப்பட்ட செய்திக்கும் கொஞ்சம் பொருத்தம் இருக்கிறமாதிரித் தெரிந்ததா? காங்கிரசின் மனீஷ் திவாரி ட்வீட்டரில் சிலவாரங்களுக்கு முன்னால் சில வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்ட ஒரு புத்தகத்தைச் சுட்டிக்காட்டி கொரோனா மாதிரியே வைரஸ் பரப்பப்படுவதை அதில் சொல்லியிருந்ததாக புத்தக அட்டைப்படத்துடன் செய்தி போட்டிருந்தார் என்பதையும் மறக்காமல் இங்கே சொல்லவேண்டும்.

      Delete
  2. நன்றி நன்றி நன்றி.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!