சின்னச் சின்னதாய்க் கொஞ்சம் செய்திகள்!

காங்கிரஸ் கட்சி இன்னமும் பிழைத்திருப்பதற்குக் கொஞ்சமும் தகுதியில்லாதது என்பதை இந்தப் பக்கங்களில் அரசியல் பற்றி எழுத ஆரம்பித்த நாட்களில் இருந்தே சொல்லிவருகிறேன். இன்றைக்கு ராஜ்ய சபாவில் நியமன உறுப்பினராக ரஞ்சன் கோகொய் பதவிப்பிரமாணம் செய்து கொண்ட போது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்த்துக் கோஷம் போட்டதும் வெளிநடப்புச் செய்ததுமான மட்டரகமான அரசியல் கூத்தை அரங்கேற்றி இருப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லாத ஒரு கும்பல் தலைவிரித்தாடிக் கொண்டிருப்பதைக் காட்டுவதாகவே பார்க்க முடிகிறது.


மத்தியப்பிரதேச அரசியலில் காங்கிரஸ்கட்சி தன்னுடைய ஆட்சியை, இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளும் முயற்சியில் தோற்றுவிட்டது. நாளை மாலை 5 மணிக்கு சட்டசபையைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று உச்சநீதி மன்றம் இன்று மாலை உத்தரவிட்டிருக்கிறது. 16 MLA க்கள் ராஜினாமா விவகாரம் அப்படியே அந்தரத்தில் தொங்குகிறது. நாளை நம்பிக்கை வாக்கெடுப்பில் அந்த 16 பேரும் வாக்களிக்க விரும்பினால் போதுமான பாதுகாப்பை அளிக்கவேண்டும் என்று மட்டும் அந்த உத்தரவில் சொல்லப்பட்டிருக்கிறது. வேண்டுமானால் பிஜேபி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர வேண்டியதுதானே என்பது காங்கிரஸ் வழக்கறிஞர்கள் சொல்லிக் கொடுத்த யோசனை! உள்வயணம் என்ன என்று பிஜேபி தரப்புக்குத் தெரியாதா? ஆக நாளை அந்தி மயங்கும் நேரத்தில் கமல்நாத்துடைய ஆட்சி கவிழ்கிறது என்று தனியாகச் சொல்ல வேண்டியதே இல்லை. #வழக்கறிஞர்அணி யை நம்பிக் கெட்டதிலும் காங்கிரசுக்குத் தான் முதலிடம்! கபில் சிபலும் அபிஷேக் மனு சிங்வியும் இருந்த இருப்பென்ன? இப்படி அடுத்தடுத்து காங்கிரசைத் தொடர்சரிவுக்குக் கொண்டு போனதும் என்ன?  அடுத்த இடத்தைப் பிடிக்க தமிழகத்தில் திமுக தயாராக வேண்டுமோ? காங்கிரஸ், கழகம் இந்த இரண்டு கட்சிகளைத் தவிர வேறெந்த அரசியல் கட்சியும் வழக்கறிஞர் அணியை  இத்தனை அதிகமாக நம்பி இருந்ததில்லை!


கடந்த திங்களன்று மாநிலங்களவையில் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி பேசிய இந்த 15 நிமிட வீடியோவின் சுருக்கப்பட்ட வெர்ஷனை இரண்டுமூன்று நாட்களாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்! சம்ஸ்க்ருத எதிர்ப்பு, ஹிந்தி எதிர்ப்பு என்ற போர்வையில் திராவிடங்கள் செய்துவருகிற வெறுப்பு அரசியலை, அதிலுள்ள போலித்தனத்தை சாடுகிறார். வைகோ பற்றி டாக்டர் சுப்ரமணியன் சுவாமி நக்கல் அடித்ததை கோபால்சாமியே குலுங்கிக்குலுங்கிச் சிரித்து ரசித்தது இந்த வீடியோவின் சிறப்பு. சபையும்  சேர்ந்து சிரிப்பதில்  வியப்பென்ன! 

மீண்டும் சந்திப்போம்.    
        

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!