கொஞ்சம் சிரிக்க! கொஞ்சம் கொறிக்க! கொஞ்சம் படிக்க!

விஜய் டிவி அந்தநாட்களில் இருந்தே தனது நிகழ்ச்சிகள் அனைத்தையும் சினிமா சார்ந்ததாகவே நடத்தி வந்தாலும் லொள்ளுசபா மாதிரி ஒரு நிகழ்ச்சியைப் போல பார்த்திருக்க முடியுமா என்பது சந்தேகமே! அதே போல சேனலை  எவ்வளவு லந்தடித்தாலும் அதையும் வெட்கமில்லாமல் ஒளிபரப்புகிற விசாலமான மனசு படைத்த வெட்கம் கெட்ட சேனல் அது என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதே இல்லை!

14 நிமிட நான் ஸ்டாப் காமெடி 
யாரை லந்தடிக்கிறார்கள் என்பது 
புரிகிறதா இல்லையா? 

மருத்துவ வசதிகளில் மிகச்சிறப்பான நாடுகளில் ஒன்றாக கருதப்படும் இத்தாலியில் வைரஸ் இறப்புகள் 9% என்பதாக இருக்கும் நிலையில்...
மக்கள் நெருக்கம் அதிகமுள்ள சீனாவில் ...இத்தனை மாதங்களில்... 3720 பேர் மட்டுமே என்று அந்நாடு கூறுவது..உலக நாடுகளிடையே பெரும் சந்தேகத்தை எழுப்பி இருந்தது.
சீனா ...அனைத்து செயல்பாடுகளையும் digitize செய்துவிட்ட நிலையில்...மிக அதிக மக்கள்.. மொபைல் மூலமே தங்கள் தேவைகள், கல்வி, இன்ன பிற செயல்பாடுகள் அனைத்தையும் செய்து கொள்கின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில் தான்..
சீனாவின் மொபைல் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையிலும், லேண்ட்லைன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையிலும் பெரும் வீழ்ச்சியை ...China Mobile, China Telecom உட்பட சீனாவின் 3 மொபைல் service providers நிறுவனங்களின் காலாண்டு அறிக்கைகளும் & சீன லேண்ட்லைன் நிறுவனத்தின் காலாண்டு அறிக்கையும் வெளிப்படுத்துவது... உலக நாடுகளின் கவனத்தை பெற்றிருக்கிறது.
இதன் படி...பயன்பாட்டில் இருந்த 2 கோடியே 10 லட்சம் மொபைல் எண்கள் .. ஜனவரி,பிப்ரவரி, மார்ச் ஆகிய மூன்று மாதங்களுக்குள்ளாக ..திடீரென்று...பயன்பாட்டில் இல்லாத எண்களாக மாறி இருக்கிறது.
சீனாவில்...ஒவ்வொருவரும்... 5 மொபைல் எண்கள் வரை பயன்பாட்டுக்கு வைத்துக் கொள்ளலாம் என்பது உட்பட அனைத்தையும் கருத்தில் கொண்டு..2 கோடியே 10 லட்சம் பயன்பாட்டிலிருந்து விலகிய எண்களில்... உரிய காரணம் உள்ளவற்றை தவிர்த்துவிட்ட பின்னரும் கூட .. பயன்பாட்டிலிருந்து விலகிய அல்லது காணாமல் போன 6 லட்சம் எண்களுக்கு உரிய விளக்கம் இல்லை.
சீனாவில் சீன வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் இருக்கலாம் என்பது உறுதியாகி இருக்கிறது...என்கிறார்கள்.
இது குறித்து ..இந்தியா உட்பட ...உலக நாடுகளின் பல ஊடகங்களும் செய்தி வெளியிட்டு வருகின்றன.

 

நா. பார்த்தசாரதி எழுதிய சரித்திரக்கதைகளில் மணிபல்லவம் மிகவும் பெரியது. 2014 இல் திருமகள் நிலையம் வெளியிட்ட இரண்டாவது பதிப்பு 768 பக்கங்கள். 2000ஆம் ஆண்டுவரை தமிழ் புத்தகாலயம் ஏழு பதிப்புக்களை வெளியிட்டிருக்கிறது 956 பக்கங்களில் என்பது கூடுதல் தகவல். மீள்வாசிப்புக்காக இந்தப் புத்தகத்தைக் கையில் எடுத்திருக்கிறேன். புத்தகத்துக்கு முன்னோட்டமாக எழுதியவன் கதை என்ற தலைப்பில் சில அடிப்படை விஷயங்களை நா. பார்த்தசாரதி கறாராகச் சொல்லி விடுகிறார். வரலாற்று ஆதாரங்கள் என்று நாம் நினைப்பதற்கும் மேலான வரலாற்று விழுமியங்கள் தான் கதைக்கு அடிப்படை என்பதைச் சொல்லியே ஆரம்பிக்கிறார். கொஞ்சம் பார்க்கலாமா?


மணிபல்லவம்

எழுதியவன் கதை

இது என்னுடைய இரண்டாவது சரித்திர நாவல். நான் முதலாவது என்று மனப்பூர்வமாக நினைக்கக் கூடிய இந்த நாவல் படைத்த முறைப்படி வருகிற எண்ணிக்கையில் இரண்டாவது வரிசையில் நிற்கிறது. இந்த நாவலை எழுதத் திட்டமிடுவதற்கு முன்பே சில கொள்கைகளைச் சிறப்பாகவும் சிரத்தையாகவும் வகுத்துக் கொண்டேன் என்பதை நான் இப்போது மீண்டும் நினைவு கூர்கிறேன். வரலாற்றையே முழு நிலைக்களனாக எடுத்துக் கொள்ளாமல் வரலாற்றுப் பின்னணியையும், சூழ்நிலைகளையும் அமைத்துக் கொண்டு அழகும் ஆழமும் மிகுந்த ஒரு கதையைப் புனைய வேண்டுமென்று நான் எண்ணியிருந்த எண்ணம் இந்த நாவலில் ஓரளவு நன்றாகவே நிறைவேறியிருக்கிறது.  

நமது இலக்கியங்களில் வரலாற்றுக் காலத்துப் பூம்புகார் நகரம் கம்பீரமான வருணனைகளால் போற்றிப் புகழப்பட்டிருப்பதைப் பலமுறை படித்திருக்கிறோம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இலண்டன் மாநகரத்தைக் காட்டிலும் நகர்ப் பரப்பினாலும் பிற பெருமைகளாலும் பூம்புகார் நகரம் சிறப்புற்றிருந்ததாகச் சொல்லுகிறார்கள். இலக்கியங்களிலும் காவியங்களிலும் படித்துப் படித்து மனக்கண்ணால் கண்டிருந்த பூம்புகார் நகரம் என்னை ஏற்கெனவே மயக்கியிருந்ததென்றுதான் சொல்ல வேண்டும். இந்தக் கதையை எழுதியதனால் அந்த மயக்கம் இன்னும் வளர்ந்ததே ஒழியக் குறையவில்லை.

போர்க்களங்களில் வில்லும் வேலும் வாளும் கேடயமும் ஏந்திச் செய்கிற போரைப் போலவே வரலாற்றுக் காலத்துப் பூம்புகாரின் சந்திகளிலும் சதுக்கங்களிலும் பல்வேறு சமயவாதிகள் அறிவுப் போர் நடத்திக் கொண்டிருந்ததாக நூல்களில் படித்திருக்கிறோம். புகழும் பெருமையும் மிக்க அந்த அறிவுப் போரில் இந்தக் கதாநாயகனும் ஈடுபடுகிறான். வெற்றி பெறுகிறான்.

இந்தக் கதாநாயகனின் வாழ்க்கை ஓர் அழகிய தத்துவம். சுரமஞ்சரியிலிருந்து முகுந்தபட்டர் வரை எல்லாரும் கதாநாயகனாகிய இளங்குமரனுக்குத் தோற்றுப் போவதாக அவனிடமே சொல்கிறார்கள். அவனோ யாரையுமே வென்றதாக ஒப்புக் கொள்ள மாட்டேனென்கிறான். இறுதிவரை பிடிவாதமாக அன்பு செய்து அவனை வென்றவளாகிய சுரமஞ்சரியும் கூட தான் வெற்றி பெற்றதை மறந்து அவனுக்குத் தோற்றதாகவே அவனிடம் சொல்கிறாள். உடம்பினாலும் தோற்றத்தாலும் மட்டுமல்லாமல் குணங்களாலும் மிக அழகியவன் இந்தக் கதாநாயகன். குணங்களாலும் அழகுடையவர்கள் காதலிக்கத் தகுந்தவர்கள். இந்தக் கதையில் எல்லாக் கதாபத்திரங்களுமே இளங்குமரனுடைய குண அழகை ஏதோ ஒரு வகையில் ரசிக்கிறார்கள். வீரத்தையே ஒரு தவமாகச் செய்யும் நீலநாகர், பிடிவாதமாக அன்பு செய்து தளரும் முல்லை, தீமைகளின் எல்லையில் போய் நிற்கும் பெருநிதிச் செல்வர் நகைவேழம்பர், இளங்குமரனுடைய முழு வாழ்க்கையையுமே தன்னையறியாமல் தற்செயலாக வரைந்து முடித்து விடுகிற ஓவியன் மணிமார்பன், நல்லவற்றுக்குப் பாதுகாப்பு அளிப்பதே ஒரு தவம் என்று எண்ணும் அருட்செல்வர் எல்லாரும் இதில் உயிர்க்களையோடு நன்கு உரம்பெற்று நடமாடுகிறார்கள்.

ஆனாலும் இந்தக் கதையில் படிப்பவர்கள் எல்லாரையும் ஒருங்கே கவர்கிற கதாபாத்திரம் சுரமஞ்சரியாகத்தான் இருப்பாள். இளங்குமரனுக்காக ஏங்கி ஏங்கி உருகி அவள் எல்லாவற்றையும் இழந்து விட்டுக் கடைசியாக அவனைப் பற்றிய விருப்பத்தை மட்டும் இழக்க இயலாமல் அவன் பாதங்களில் வீழ்ந்து கண்ணீர் பெருக்கி - "இந்தப் பாதங்களைத் தொழுவதைத் தவிர எனக்கு வேறு செல்வங்கள் வேண்டியதில்லை" - என்று அவனோடு கீழிறங்கி நடக்கும் இடம் மெய்சிலிர்க்கச் செய்வது இந்தக் கதைக்கும் கதாநாயகனுக்கும் சுரமஞ்சரி என்ற கதாபாத்திரம் இத்தனை முழுமையாகக் கனிந்த நிலையில் கிடைத்ததற்காக வாசகர்களும், எழுதியவனும் நிச்சயமாகப் பெருமைப்பட முடியும். அவளுடைய பரிசுத்தமான மனச்சாட்சியை மதிப்பதற்கு மண்ணுலகத்து மதிப்பீடுகள் போதாதென்றாலும் முடிந்தவரை மதித்தாக வேண்டிய கடமை நமக்கு உண்டு. "பிறருக்காக நம்மை இழந்து விடுவதில் ஒரு சுகம் இருக்கிறது" என்று இளங்குமரன் தன் கல்வி, தவம் எல்லாவற்றையும் பொருட்படுத்தாது சுரமஞ்சரிக்குத் தன்னைக் கொடுக்கிறான். இவ்வளவு நல்ல கதாபாத்திரமாக வாய்த்ததற்காக இந்தக் கதாசிரியனும் அவளுக்கு ஏதோ ஒரு விதத்தில் நன்றி செலுத்தியாக வேண்டும். இந்த நாவலை அந்த அழகிய கதாபாத்திரத்திற்குச் சமர்ப்பணம் செய்வதைத் தவிர வேறெந்த வகையிலும் அந்த நன்றியைச் செலுத்த முடியாது என்பதால் இந்த நாவலைச் சுரமஞ்சரி என்ற கதாபாத்திரமே அடைவதாகப் பாவித்துக் கொள்கிறேன். கல்கியில் படிக்கும்போது, பல்லாயிரக்கணக்கான வாசகர்களும் இதையே வரவேற்றார்கள். புத்தகமாகப் படிக்கும் பேறு பெற்றவர்களும் இப்படியே வரவேற்பார்கள் என்று நினைக்கிறேன்; நம்புகிறேன்.

இதைத் தொடர்கதையாக வெளியிடுவதில் பலவிதத்திலும் அன்புடன் ஒத்துழைத்த கல்கி அதிபர். திரு. சதாசிவம் அவர்களுக்கும், காரியாலயப் பெருமக்களுக்கும் என் அன்பையும், நன்றியையும் தெரிவிக்கிறேன். கடைசியாக ஒரு வார்த்தை. இந்த நாவல் பொழுது போக்கிற்கு மட்டுமன்று, சிந்தனைக்கும் சேர்த்துத்தான். இதில் அழகு எவ்வளவு உண்டோ அவ்வளவிற்கு ஆழமும் உண்டு. படிப்பவர்கள் அந்த நோக்குடன் இதைப் படிக்க வேண்டும்.

அன்புடன்
நா. பார்த்தசாரதி
சென்னை
1-6-1970

நாட்டுடைமையாக்கப் பட்ட நூல்வரிசையில் இந்தப் புத்தகமும் இலவசமாகத் தரவிறக்கம் செய்துகொள்ளக் கிடைக்கிறது. கணினியில் படிப்பதற்கு சிரமமே இல்லாத PDF வடிவம் என்பதால் தரவிறக்கம் செய்யவோ படிப்பதோ தயக்கம் வேண்டியதே இல்லை.

நீண்டவருடங்களுக்குப் பிறகு மீள்வாசிப்புக்காக இதை எடுத்துக் கொண்டிருப்பதில், புதிதாக வாசிக்க எடுத்துக் கொண்டது போலவே உணர்கிறேன். 

மீண்டும் சந்திப்போம்.   

2 comments:

  1. எழுதியவன் கதை கவர்கிறது.  நீங்கள் கொடுத்துள்ள லிங்க்கில் சென்று பார்த்தால் மணிபல்லவத்தை  இறக்க முடியாது என்று தோன்றுகிறது.  அங்கே இலவசமாக படிக்க முடியும்.

    ReplyDelete
    Replies
    1. தமிழ் இணைய நூலகத்தில் இலவசமாகத் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும் ஸ்ரீராம்! அங்கே கொஞ்சம் தரமான pdf கிடைக்கிறது. அதுபோக கூகிளில் தேடினால் வேறுசில இடஙகிளிலும் கிடைக்கிறது. இப்போது பார்த்ததில் இந்து பப்ளிகேஷன்ஸ் மலிவுவிலைப் பதிப்பாக வெளியிட்டது வேறொரு தளத்தில் கிடைப்பதையும் பார்த்தேன்.

      21.நாள் ஊரடங்குக்குக் கட்டுப்பட்டு, பொழுதைப் பயனுள்ளதாகக் கழிக்க புத்தகங்களை விட சிறந்த சாதனங்கள் வேறென்ன இருக்க முடியும்?

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!