ரங்கராஜ் பாண்டே! ரஜனிகாந்த்! சாணக்யா முதலாம் ஆண்டு விழா!

மத்தியப் பிரதேச சட்டசபை நிகழ்வுகளை நேற்று கவனித்துக் கொண்டிருந்ததில், சபாநாயகர் பிரஜாபதி மிக சாமர்த்தியமாக கொரோனா வைரஸ் தொற்று பீதியைக் காரணம் காட்டி சபையை வருகிற 26 ஆம் தேதி வரை ஒத்திவைத்து விட்டார். போங்கடா நீங்களும் உங்கள் போங்காட்டமும் என்று சலித்துப் போனதில் சாண்டில்யனுடைய கதைகள் இரண்டு, மங்கலதேவி என்ற 4 சிறுகதைகளின் தொகுப்பு 84பக்கங்கள், அடுத்து மூங்கில்கோட்டை  256 பக்கங்கள் என்று ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டு, மறுபடி செய்திகளைப் பார்க்கையில் பிஜேபியின் சிவராஜ் சவுகான் உள்ளிட்ட சிலர் மத்தியப்பிரதேச விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டுக்கு கொண்டுபோனது  தெரிந்தது. மறுபடியும் இன்னொரு புத்தகம், இந்த முறை மாறுதலாக, தி. ஜானகிராமனின் செம்பருத்தி  490+ பக்கங்கள்! மூன்று புத்தகங்களுமே முன்னரே பலமுறை வாசித்ததுதான்!
ஆனாலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வாசிக்க எடுத்துக் கொண்டதில் புத்தகங்கள் உள்ளே இழுத்துக் கொண்டதான ஒரு அனுபவம்! வழக்கமாக இந்தப் பக்கங்களில் மண்டேன்னா ஒண்ணு! என்று எழுதக் கூட மறந்து போகிற அளவுக்கு!

வீடியோ 45 நிமிடம் 

ரங்கராஜ் பாண்டேவின் சாணக்யா தளம் ஓராண்டைக் கடந்து இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைப்பது ஒரு விழாவாக நேற்றைக்கு சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் அரங்கில் நடக்கிறது என்பது தெரியும். நேரலை கிடையாது என்ற அறிவிப்பையும் பார்த்ததில் பிறகு தேடிப்பிடித்து விடலாம் என்று கொஞ்சம் அசட்டையாக இருந்துவிட்டேன். ஆனால் CineNXT என்ற தளம் நேரலையில் ஒளிபரப்பிக் கொண்டிருந்ததைத் தாமதமாகத்தான் தெரிந்துகொண்டு பார்க்க ஆரம்பித்தேன். இந்தத் தளம் கூட சாணக்யாவின் இன்னொரு பிரிவுதான்! 

ரங்கராஜ் பாண்டே, நல்ல திறமையான ஊடகக்காரர் தான் என்பதை இந்தப்பக்கங்களிலேயே பலமுறை பார்த்திருக்கிறோம்! சமீப நாட்களில் ரஜனி வாய்சுக்கு பொழிப்புரை தருகிற அளவுக்கு உயர்ந்து விட்டார். ரஜினிகாந்தும் இவரைப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்துவிட்டாரோ? நேற்றைய சாணக்யா தள  முதலாம் ஆண்டுவிழாவில் ஒருவருக்கொருவர் கொடுத்துக் கொண்ட பில்டப் அப்படித்தான் நினைக்க வைத்தது. 

  வீடியோ 17 நிமிடம் 

இந்த 17 நிமிட வீடியோவில் ரங்கராஜ் பாண்டே தமிழக அரசியல் களத்தில் அதிமுக - திமுக இருகட்சிகளும் தங்களுடைய வலிமையைக் கூட்டிக் கொண்டு முண்டா தட்டிக் கொண்டிருக்கிற விதத்தைச் சொல்லிவிட்டு கடைசியாக ரஜனிகாந்த் பேசியதற்குப் பொழிப்புரை அதுவும் அவரை அரங்கில் வைத்துக்கொண்டே, என்பது தமிழருவி மணியன்கள் நினைத்துக் கூடப் பார்க்க முடியாததை ரங்கராஜ் பாண்டே சாதித்துவிட்டதைத் தான் காட்டுவதாக எனக்குத் தோன்றுகிறது.

தேசியம், எளிமை,நேர்மை என்ற மூன்று புள்ளிகளில் தமிழக அரசியலில் இல.கணேசன், குமரி அனந்தன். நல்லகண்ணு ஆகிய மூவருக்கு விருது ஒருலட்ச ரூபாயுடன் என்று அறிவித்ததில், நல்லகண்ணு ஒருவர் மட்டும் வரவில்லை. வராவிட்டாலும் கூட அறிவிக்கப் பட்ட விருது நல்லகண்ணுவுக்குத் தான் அதில் எந்த மாற்றமுமில்லை என்று ரங்கராஜ் பாண்டே அறிவித்ததிலும், மற்ற இருவரும் நேரில் வந்திருந்து ரஜனிகாந்த் கையால் விருதை பெற்றுக் கொண்டதும்  கூட மிகநேர்த்தியாகத்   திட்டமிடப்பட்ட  நிகழ்ச்சி இது என்று தான் இப்போதைக்குச் சொல்ல முடிகிறது. 

ஆக, ரஜினிகாந்துக்கு மிகவும் அனுசரணையான ஒரு அரசியல்தளம் வெகு திறமையாகக் கட்டமைக்கப் படுவதையும், சேர்த்தே புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் வாக்காளர்கள் என்ன முடிவு செய்வார்கள் என்பதை முன்கூட்டியே அறிந்துகொள்கிற வாய்ப்பு, வசதி ரங்கராஜ் பாண்டே மாதிரியான திறமைசாலிகளுக்கும் கூட இருக்கிற மாதிரித் தெரியவில்லையே!     

மீண்டும் சந்திப்போம்.          

8 comments:

 1. நீங்கள் சொல்வதே உண்மை. ரங்கராஜ் பாண்டே,
  மிக நல்ல பேச்சாளர்.

  இருவரும் சேர்ந்து நல்ல ஆரம்பத்தைக் கொண்டு வந்தால்
  நன்மையே.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் அம்மா!

   கோளாறுகளுக்கு விடிவுகாலம் ரஜனிகாந்த் என்ற நடிகரிடம் இருந்து கிடைக்கும் என்பதில் எனக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை அம்மா! தவிர அவரது குடும்பம் மனைவி, மகள்கள் மாப்பிள்ளைகளை மீறி கைசுத்தமாகச் செயல்படமுடியாது என்பதுதான் என்னுடைய மதிப்பீடாக இருக்கிறது. என்னுடைய இந்தக் கருத்து தெளிவாகவே இங்கேயும் இதற்கு முந்தைய பகிர்வுகளிலும் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது என்றே நினைத்துக் கொண்டிருந்தேனே!

   இன்னும் தெளிவாக உடைத்துச் சொல்லியிருக்க வேண்டுமோ?

   Delete
 2. ரஜினியும் இல்லை.  தமிழகத்தை உய்ய வருவார்தான் யார்?

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் ஸ்ரீராம்!

   உய்விப்பதற்காக யாரோ வந்துதானாக வேண்டுமா? அது ரஜனிகாந்தாகத்தான் இருந்தாக வேண்டுமா? நம் ஒவ்வொருவருக்கும் சூடு சுரணை இல்லாமலேயே போய்விட்டதா?

   முதல் வீடியோவில் ரங்கராஜ் பாண்டே கேள்விகளுக்குப் பதில் சொல்கிற பகுதியைக் கொஞ்சம் கவனமாகப் பாருங்கள்! நமக்கு நாமே என நாம் ஒவ்வொருவரும் செய்யவேண்டியது கொஞ்சம் இருக்கிறது. அதைச் செய்யாமல் வெளியிலிருந்து ரட்சகர்களைத் தேடுவது, இன்னும் புதிய சிக்கல்களுக்கு மட்டுமே வழிவகுக்கும்.

   Delete
 3. //ஆனால் வாக்காளர்கள் என்ன முடிவு செய்வார்கள் என்பதை முன்கூட்டியே அறிந்துகொள்கிற வாய்ப்பு, வசதி ரங்கராஜ் பாண்டே மாதிரியான திறமைசாலிகளுக்கும் கூட இருக்கிற மாதிரித் தெரியவில்லையே!// அக்ஷர லக்ஷம் பெரும் வார்த்தைகள்.       

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் அம்மா!

   இப்போது மேலே இரண்டாவது 17 நிமிட வீடியோவில் முதல் மூன்று நிமிடங்கள் வரை கொஞ்சம் கவனமாகக் கேளுங்கள். மறுபடியும் கேளுங்கள். மூன்றாவதாக அடுத்தமாதமே ரஜனிகாந்த் கட்சி ஆரம்பித்துக் களத்தில் இறங்குவதாகாவே வைத்துக் கொள்ளுங்கள்! கறுப்பு ஆடா அல்லது குதிரையா? ரேசில் எந்த அளவுக்குத் தெம்போடு ஓடும், எத்தனை சதவீத வாக்குகளை இரு அணிகளிலிருந்தும் பிரிக்கும் என்பதை யாராலுமே ஊகிக்க முடியாது என்பது மட்டும் நிச்சயம். இரு வலுவான அணிகளில் ஏதோ ஒன்றைப் பலவீனப்படுத்தும் என்பது வேண்டுமானால் உண்மையாகலாம். ஆனால் இரு அணிகளையும் மீறித் தனித்து ஜெயிக்கும் என்பதற்கான அடையாளமே இப்போது இல்லை.

   அதிருப்தி வாக்குகளை நம்பிமட்டுமே எந்த ஒருகட்சியும் இதுவரை ஜெயித்ததில்லை. அதற்கென்று சொந்த வாக்குவங்கி இருக்கும் பட்சத்தில் மட்டுமே அதிருப்தி வாக்குகள், இதுவரை வாக்களிக்க வராதவர்கள் கூட வலிய வந்து வாக்களிப்பது எல்லாம் சேர்ந்தால் தான் ரஜனிகாந்த் பேசுகிறாரே #சுனாமி அது காரிய சாத்தியமாகும்! இப்போது கேள்வி ரஜனிகாந்தால் அதை சாத்தியப்படுத்த முடியுமா? முடியாது என்பதுதான் என்னுடைய பதில்.

   Delete
 4. சன் சகோதரர்களை சென்ற தடவை காப்பாற்றியதில் நீங்க குறிப்பிட்டுள்ள ஒருவர் முக்கியமானவர்,

  ReplyDelete
  Replies
  1. ஜோதிஜி!

   ஊரறிந்த விஷயத்தையும் கூடவா கிசுகிசு பாணியில் சொல்வது? :- )))

   Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!