திரு.ரத்தன் ஷாரதாவின் “ஆர்.எஸ்.எஸ் 360” என்கிற நூலில் இருந்து தொகுக்கப்பட்ட பகுதிகள்
சுதந்திர இந்திய வரலாற்று நிகழ்வுகளில் 1975-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25-ஆம் தேதி இந்திரா காந்தியால் திணிக்கப்பட்ட அவசர கால நெருக்கடி சட்டம் அரசியலில் ஒரு மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. ஆர்.எஸ்.எஸ் இயக்கம் எடுத்துக் கொண்ட உண்மையான இலட்சியப்பணிகள் எது என்பதை உலகுக்கு வரையறுத்துக் காட்டிய நிகழ்வு இது. காங்கிரசுக்கு எதிரான கட்சிகளையும், சிறையில் அடைக்கப்பட்ட வேறுபட்ட கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்ளவும், ஒருவருக்கொருவர் அறிந்து கொள்ளவும் அவர்கள் ஒரே அரசியல் மேடைக்கு வரவும் வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தது இந்த சந்தர்ப்பந்தான்.
இதன் விளைவு அவர்களுக்கிடையே இருந்த வேறுபாடுகளை மறந்து ஜனநாயக மாண்பை காக்கும் விதத்தில் ஜனதா என்கிற கட்சி பிறந்தது. ஆர்.எஸ்.எஸ் இந்திய வரலாற்றில் தன்னை மேலும் அடையாளப்படுத்திக் கொள்ள இந்த நெருக்கடிகால சம்பவங்கள் உதவின என்றும் கூறலாம். ஜனநாயகத்தின் மதிப்புகளை, மாண்பை மீட்டெடுத்து அதன் மூலம் இந்த சமுதாயத்துக்கு அரிய சேவை செய்வதற்கான ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பங்களிப்பை இந்த நாடும், உலகமும் கண்டது இப்போது தான்.1984-ஆம் ஆண்டு நடைபெற்ற சீக்கியர்களுக்கு எதிரான கலவரம், 2002-ஆம் ஆண்டு நடைபெற்ற கோத்ரா ரயில் பெட்டிகள் எரிப்பு கலவரம், அதே காலகட்டத்தில் குஜராத்தில் நடைபெற்ற கலவரம் ஆகியவை குறித்து இப்போதைய இளம் தலைமுறைக்கு தெரியாது. இந்த நிலையில் மேற்கண்ட சம்பவங்களுக்கு முந்தைய இந்திரா அறிவித்த நெருக்கடிகால அடக்குமுறைகள் குறித்து இவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. இவை எல்லாம் வரலாற்றில் மூடி மறைக்கப்பட்ட சம்பவங்களாக உள்ள நிலையில், உண்மையில் நவீன இந்திய வரலாற்றில் இவை மிக முக்கியமான அரசியல் நிகழ்வுகளாகும். நம் தேசம், தேசத்தை காத்த ஆர்.எஸ்.எஸ் சந்தித்த இந்த முக்கியமான கால கட்டத்திலிருந்து இந்த கட்டுரையை தொடங்குவது உகந்ததாக இருக்கும்.அன்றைய காலக்கட்டத்தில் பொது வாழ்க்கையில் தூய்மையை வலியுறுத்திய ஜே.பி என அனைவராலும் அறியப்பட்ட ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்களின் சம்பூர்ண கிரந்தி எனப்படும் இயக்கம் அரசியல் நடைமுறைகளில் இருந்த அழுக்குகளை அகற்றி ஒட்டுமொத்த மாற்றத்தைக் கொண்டு வர வலியுறுத்தியது. அந்த இயக்கத்தின் கொள்கைகள் அன்றைய இளைஞர்களிடையே அரசியல் மீது ஒரு தீவிரத்தை ஏற்படுத்தியது. ஏராளமான இளைஞர்கள் ஜே.பி-யின் சிந்தனைகளால் கவரப்பட்டு, ஜனநாயகத்தை மீட்க போராடி பல தியாகங்களை செய்திருந்தாலும், அந்த போராட்டங்களின் விளைவு லாலு பிரசாத் யாதவ் போன்ற அரசியல்வாதிகள் ஜாதீய அரசியல் செய்து சுய நலன்களை வளர்த்துக் கொள்ளவும் செய்து விட்டது. இதன் மூலம் ஜே.பி-யின் கொள்கைகள் மற்றும் இலட்சியங்கள் சிதைவுக்குள்ளாகின.
தேவர்கள் இணைந்து திருப்பாற்கடலை கடைந்து அமுதம் திரட்ட முற்பட்டபோது விஷத்தையும் கண்டு அதை தூக்கி எறிந்து போட்ட கதை இந்து புராணங்களில் கூறப்படுகிறது. அந்த கதை இங்கு எந்த அளவுக்கு உண்மையாகி விட்டது என்பதைப் புரிந்துக் கொள்ளலாம்.
இப்போது எமெர்ஜென்சி பிறப்பிக்கப்பட்டதற்கு முந்தைய கால கட்டமான 1971-ஆம் ஆண்டுக்கு செல்லலாம். அப்போது நடைபெற்ற இந்திய பாகிஸ்தான் போரில் இந்தியா வென்றதுடன் பங்களாதேஷ் என்கிற நாட்டையும் உருவாக்கியதன் பேரில் இந்திராவும் அவரது ஆதரவாளர்களும் வெற்றிப் புளகாங்கிதத்தில் மிதந்து கொண்டிருந்த கால கட்டம் அது. நாம் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற அராஜக மனோபாவத்தை அவர்களுக்குத் தந்தது. இந்திராவின் நிழலில் இருந்தபடி எல்லை தாண்டிய அதிகாரத்தை அவரது ஆதரவாளர்கள் ருசி பார்த்துக்கொண்டிருந்த நேரம் அது.
அப்போதைய காங்கிரஸ் தலைவர் கந்த பரூவா இந்தியா என்றால் இந்திரா, இந்திரா என்றால் இந்தியா என்ற கோஷத்தை முன்வைத்தார். இந்தியா முழுவதும் இது ஒரு மந்திரம் போல காங்கிரசாராலும், அரசு இயந்திரங்களாலும் கூட நாட்டின் மூலை முடுக்கெல்லாம் ஒலிக்கப்பட்டது. இந்த அராஜகம் எதிர்கட்சிகளின் எதிர்ப்புகளை அடக்க முற்பட்டது, அதிகார வர்க்கத்தினரிடம் அதிக அதிகாரங்கள் குவிந்ததால் எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்றாயின.
இதை எதிர்த்து படிப்படியாக நாடு முழுவதும் இந்திரா காந்திக்கு எதிராக போராட்டங்கள் துளிர் விட ஆரம்பித்தன. முதலில் குஜராத்தில் நவநிர்மாண் அந்தோலன் என்கிற இயக்கத்தை சேர்ந்த மாணவர்கள் அந்த மாநிலத்தில் ஊழல் ஆட்சி செய்து கொண்டிருந்த சிமன்பாய் படேலுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கினர். இந்த போராட்டத்துக்கு ஆர்.எஸ்.எஸ், ஏ.பி.வி.பி துணை நின்றதுடன், ஜன சங்கமும், மற்ற எதிர் கட்சியினரும் ஆதரித்தனர். மாணவர்களின் இந்த தொடர் போராட்டம் மாநிலம் முழுவதும் பரவி மக்களின் செல்வாக்கைப் பெற்றதுடன் அந்த அரசை ஆட்சியிலிருந்து அகற்றியது. பாபுபாய் படேல் தலைமையில் காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைந்தது. மாணவர்களின் எழுச்சி மிக்க இந்த போராட்டம் பீகார் மாநிலத்திலும் பரவியது. ஜெயப்பிரகாஷ் நாராயணனின் சிந்தனைகள் அவருடைய பேச்சுக்கள் மாணவர்களையும், சிந்தனையாளர்களையும் கிளர்ந்தெழச் செய்தன. லோக்ஜன் கார்ஷ் சமிதி எனப்படும் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டு, நானாஜி தேஷ்முக் அதன் பொதுச் செயலாளராக இருந்து வழிகாட்டினார். அரசியல் மற்றும் அரசியல் அல்லாத சேவை அமைப்புகள், மாணவர்கள் என ஏராளமானோர் இந்த அமைப்பில் சேர்ந்தனர். அப்போது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மற்றும் ஜன சங்கத்துடன் ஜெயப்பிரகாஷ் நாராயணனுக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. இரு தரப்பும் போராட்டக்களத்தில் இணைந்து தீயாக வேலை செய்தனர். இவர்களின் போராட்டத்தால் மக்கள் நாடெங்கும் ஈர்க்கப்பட்டதால் காங்கிரசாரும், இந்திராவும் கடும் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில் அலகாபாத் கோர்ட் நீதிபதி ஜக்மோகன்லால் சின்ஹா இடைத்தேர்தலில் இந்திரா காந்தி பெற்ற வெற்றி செல்லாது என தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு இந்திய அரசியலில் மாபெரும் அரசியல் விளைவுகள் ஏற்பட வழி வழிவகுத்தது.
இந்த நிலையில், அரசியல் சூழ்நிலைகள் தனக்கு பாதுகாப்பாக இல்லை என உணர்ந்த இந்திரா காந்தி எதிர்கட்சிகளை அடக்கவும், அவர்களின் நடவடிக்கைகளை நசுக்கவும் முற்பட்டார். உள் நாட்டு பாதுகாப்பை மேற்கொள்வதாகக் கூறி 1975-ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி நள்ளிரவு நெருக்கடி நிலையை அறிவித்தார். நாட்டின் பாதுகாப்பை சுட்டிக் காட்டி நெருக்கடி நிலையை அறிவித்தது இந்தியாவில் அதுதான் முதன் முறை. கடுமையான இந்த சட்டம் மிசா என்ற பெயரில் எதிர்கட்சிகளையும், எதிர்ப்போரையும் எந்தவித விசாரணையும் இல்லாமல் 2 ஆண்டுகளுக்கு சிறையில் தள்ள வழிவகுத்தது. நாட்டின் முக்கியத் தலைவர்கள் எல்லாம் சிறையில் அடைக்கப்பட்டார்கள், ஆர்.எஸ்.எஸ் இயக்கம் இரண்டாம் முறையாக தடை செய்யப்பட்டது. ஆனந்த் மார்க் மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி போன்ற இயக்கங்களும் எந்த வித காரணங்களும் கூறப்படாமல் தடை செய்யப்பட்டன.
ஜனநாயகத்தை மீட்பதற்கான மாபெரும் யுத்தத்தில் அன்று ஆர்.எஸ்.எஸ் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டது. இந்த காலக்கட்டத்தில் நாடு முழுவதும் கைது செய்யப்பட்ட ஒரு இலட்சத்து முப்பதாயிரம் பேரில் கிட்டத்தட்ட ஒரு இலட்சம் பேர் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் ஆவர். கொடுமையான மிசா சட்டத்தில் நாடு முழுவதும் 30,000 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் மிகவும் கொடுமையான மகாராஷ்டிரா பயங்கரவாத கட்டுப்பாட்டு சட்டத்தின்( IMCOCAI) கீழ் மட்டும் கிட்டத்தட்ட 25,௦௦௦ ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் சிறையில் வைக்கப்பட்டு கொடுமையான முறையில் நடத்தப்பட்டனர். பல்வேறு சோஷியலிச கட்சி தலைவர்களும் தொண்டர்களைக் காட்டிலும் அதிக அளவில் சிறையில் அடைக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 18 மாதங்கள் வரை சிறையில் அடைத்து வைக்கப்பட்டனர். சத்யாகிரக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூட 6 மாதங்கள் வரை ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இந்த நேரத்தில் நாக்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி லலித் அளித்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு குறிப்பிடத்தக்கது. அடிப்படை உரிமைகளுக்காக போராட்டம் நடத்தியவர்களை மிசா சட்டத்தால் கைது செய்யக் கூடாது என அளித்த அவரது தீர்ப்பால் பலர் ஒரு மாத சிறை வாசத்துடன் வெளியே வந்தனர். இந்த தைரியமான தீர்ப்பை வழங்கிய நீதிபதி லலித் அவர்களின் பெயர் கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டதுடன், அவருக்கு பதவி உயர்வும் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்திராவுக்கே தங்களை அர்ப்பணித்துக் கொண்ட வகையில் அவருக்கு ஆதரவாக ஒரு நீதிபதிகள் குழுவும் செயல்பட்டது. இந்த விஷயத்தில் இந்திராவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உதவிகரமாக இருந்தது.
இதே கம்யூனிஸ்டுகள்தான் 1942-ஆம் ஆண்டு நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போதும் இரு வேடங்கள் போட்டு நடித்தனர். இந்தியாவை 16 இறையாண்மை உள்ள தேசங்களாக பிரிக்க வேண்டும் எனவும் கேபினட் கமிஷனிடம் மனு அளித்தனர். 1962-ஆம் ஆண்டு இந்தியாவின் மீது நடைபெற்ற சீன தாக்குதல் சரியானது தான் எனவும் வாதிட்டனர். கம்யூனிஸ்டுகளில் இருக்கும் சீன ஆதரவு பிரிவினர் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற போக்குவரத்து போராட்டத்தையும் உருவாக்கி மறைமுகமாக அப்போராட்டத்துக்கு ஆதரவு தந்தனர். அப்போது மறைந்த கம்யூனிஸ்டு தலைவர் ஜோதி பாசு கூட சில காலம் சிறையில் வைக்கப்பட்டார். சீனாவுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்து இந்தியாவின் நலனுக்கு எதிராக நடந்துக் கொண்ட இந்த பிரிவினர்தான் பின்னாளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் கட்சியில் இருந்து விலகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தோற்றுவித்தனர்.
இந்திய உள்நாட்டு பாதுகாப்பு என்ற பெயரில் இந்திரா காந்தியும் காங்கிரஸ்காரர்களும் அவிழ்த்து விட்ட வன்முறைகள், எதிர்கட்சிகள் மீது அடக்குமுறை ஆகியவற்றைப் பற்றி மக்கள் தெரிந்துக் கொள்ளும் வகையில் நாடு முழுவதும் சத்தியாகிரக போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆர்.எஸ்.எஸ் மற்றும் தொடர்புடைய இயக்கங்கள் மற்ற ஒத்த கருத்துடைய கட்சிகளுடன், இயக்கங்களுடன் சேர்ந்து ஜனநாயகத்தை மீட்க மேற்கண்ட போராட்டங்களை நடத்தியது. உண்மையில் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் போராட்டங்களில் பங்கேற்றதும் இல்லாமல் பின்னணியில் இருந்து கொண்டு நாடு முழுவதும் இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைந்து நடத்தியது. மிக உயர்ந்த பாதுகாப்புக்கிடையிலும் பொது நிகழ்ச்சிகளில் கூட இந்த சத்தியாகிரக போராட்டங்கள் நடைபெற்றன. இந்த எதிர்ப்பு போராட்டங்களை பன்னாட்டு ஊடகங்கள் அப்போது வெளியிட்டன.
சிறையில் அடைக்கப்பட்டிருந்த கற்றவர்கள், செல்வந்தர்கள் ஆகியோர் சிறைக்கு உள்ளேயும், வெளியேயும் தாங்கள் பாதிக்கப்பட்டதை பல வகையில் எழுதிக் கொடுத்து வெளி உலகுக்கு தெரியப்படுத்தினர். இந்திய நவீன வரலாற்று ஜாம்பவான்களான ராமச்சந்திர குஹா இந்த வகையில்தான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பங்களிப்பு குறித்து பல தகவல்களை சேகரித்து வெளியிட்டார்.
மற்றபடி குற்றப் புலனாய்வு துறையினர் யாரும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் மீது எந்த குறைகளையும் சொல்ல முடியவில்லை. அந்த அளவுக்கு ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் தாங்கள் எடுத்துக் கொண்ட போராட்டத்தை தவிர வேறு எந்த தப்பையும் செய்ததாக அவர்களின் ஆவணங்களில் எந்த குறிப்புகளும் கிடையாது.
மும்பையை பொறுத்தவரை போலீஸ் அதிகாரிகள் இந்த அவசர நிலையில் சற்று நாகரீகமாகவே நடந்து கொண்டுள்ளனர். அதே சமயம், காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வந்த பஞ்சாப், கர்நாடகா, மத்திய பிரதேஷ் மற்றும் கேரளா ஆகிய இடங்களில் போலீசார் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த போராட்டக்காரர்களுக்கு சிறையில் தொந்தரவு கொடுத்தனர். அந்த டார்ச்சர் அமெரிக்க ராணுவத்தால் குவான்டன்மோ முகாமில் வைக்கப்பட்ட தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு அளிக்கப்பட்டது போல அப்போது வர்ணிக்கப்பட்டது. ஒரு ஆட்சியாளர்களிடம் எல்லை மீறிய அதிகாரங்கள் இருந்தால் அவர்கள் எப்படியெல்லாம் நடந்து கொள்வார்கள் என்பதற்கு பெண் போராட்டக்காரர்களையும் சேர்த்து அவர்களுக்கு அரசு கொடுத்த டார்ச்சர்களில் இருந்து தெரிந்துக் கொள்ளலாம். பல இடங்களில் போராட்டக்காரர்கள் மோசமான குற்றவாளிகள் இல்லை என்பது தெரிந்தும் அவர்களை குழுவினராக நிற்க வைத்து நிர்வாணமாக்குவது, அவர்களை அந்த நிலையிலேயே நீண்ட நாள் வைத்திருத்தல், சிகரட்டால் சுடுவது, பலர் முன்னிலையில் போலீசார் இயற்கைக்கு மாறாக ஓரினசேர்க்கை உறவு கொள்ள வைப்பது, கைதிகள் ஒருவர் வாயில் ஒருவர் சிறுநீர் கழிக்க செய்வது, கூர்மையான ராடுகளால் அழுத்துவது, தண்ணீர் கொடுக்காமல் பல நாட்களுக்கு தவிக்க விடுவது, பின்பக்கம் கைகளை கட்டி வைத்து சில மணி நேரங்களுக்கு ஏரோப்ளேன் தண்டனை என்ற பெயரில் தொங்க விடுவது, நகங்களை பிடுங்குவது போன்ற மிக கொடூரமான டார்ச்சர்கள் மிசா சட்டத்தை எதிர்த்து சிறைக்கு சென்ற போராட்டக்காரர்களுக்கு வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பல பேர் இதை பதிவு செய்து வைத்திருந்து ஜனதா கட்சி ஆட்சியின் போது இந்த சம்பவங்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஷா கமிஷனிடம் இவற்றை தெரிவித்தனர்.
ஆனால் இதனிடையே 1980-ஆம் ஆண்டு மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும் ஷா கமிஷனின் அறிக்கைகளை அழித்து விட்டது. ஆனால் இந்த அறிக்கையின் நகல் காப்பி அமேசான் வலைதளம் மூலம் கிடைத்தது. இதை அப்போதைய திராவிட முன்னேற்ற கழக தலைவர்களில் ஒருவராக இருந்து, பின் நாளில் ஜனதா கட்சியில் இணைந்து பணியாற்றிய இரா.செழியன் எடிட் செய்திருந்தார். ஆனால் இப்போது அது தீர்ந்து விட்டது , கிடைக்கவில்லை. கமிஷனால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த சஞ்சய் காந்தி நிறைய இடையூறுகளை கொடுத்தார். தற்போதைய மாணவர்கள், இளைஞர்கள் அவற்றை தெரிந்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் வன்முறைக்காரர்கள் என்று காங்கிரஸ் தலைவர்கள் சொல்லும் பொய்யை உடைக்க முடியும்.
ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்களின் துயரங்களை பற்றி குறிப்பிடாமல் இது முழுமை அடையாது. தேசத்துக்கு எதிராக அவரும் அவரது சகோதரர் லாரன்சும் வெடிகுண்டுகள் வைத்து பயங்கரவாதம் செய்ததாக “பரோடா சதி வழக்கு” என்ற வழக்கு போடப்பட்டு அவர்களை சிறையில் வைத்து கொடுமைப் படுத்தினார்கள். இந்த வழக்கு அப்போது பிரபலமாக பேசப்பட்டது. சிறையில் லாரன்சுக்கு உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் பல துன்பங்கள், கொடுமைகள் செய்யப்பட்டன. ஜெயிலில் இருந்து ஒரு நோயாளியாக வெளியே வந்த அவர் கடைசி வரை நோயாளியாகவே வாழ்ந்து, 2005-ஆம் ஆண்டு மரணம் அடைந்தார். ஆனால் இடையில் 1977-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜனதா அரசு இருவர் மீதும் போடப்பட்டிருந்த வழக்குகளை வாபஸ் பெற்றது. இந்த வழக்கில் தொழில் அதிபர் வீரேன் ஷாவின் பெயரும் சேர்க்கப்பட்டு பல கொடுமைகளை அனுபவித்தார்.
இந்திரா அமல்படுத்திய அந்த நெருக்கடி காலக்கட்டத்தில் பத்திரிகைகள் அரசுக்கு அடி பணிந்து சென்ற போதிலும், கோயங்கா, வர்கீஸ் போன்ற துணிச்சல்மிக்க பத்திரிக்கையாளர்கள் அரசை எதிர்த்து தைரியமாக எழுதினார்கள். அப்போது பத்திரிகைகள் அனைத்தும் அரசால் தணிக்கை செய்யப்பட்டப் பிறகே வெளியிட அனுமதிக்கப்பட்டன. சென்சார் கமிட்டியால் அனுமதிக்கப்பட்ட பிறகே செய்தித்தாள்களில் செய்திகள் அச்சிட அனுமதிக்கப்பட்டன. அச்சிடுவதற்கான காகிதங்களுக்கு அரசிடம் கெஞ்சி பிச்சை வாங்கும் சூழல் ஏற்படுத்தப்பட்டது. அந்த மிக மோசமான சூழ்நிலையை பா.ஜ.க மூத்த தலைவர் எல்.கே.அத்வானி குறிப்பிடுகையில் “வளைந்து கொடு என கேட்டுக் கொள்ளப்பட்ட போதிலும் பத்திரிகைகள் கீழே விழுந்து ஊர்ந்து செல்லும் நிலை இருந்தது” என்றார். அப்போது கோயங்கா தனது பத்திரிக்கையில் தலையங்கப் பகுதியில் எதையும் எழுதாமல் வெற்றிடமாக விட்டு விடுவார். இது தெரிந்த அரசு தலையங்கப்பகுதியை வெற்றிடமாக விடக்கூடாது என அச்சுறுத்தி ஆணை பிறப்பித்தது. ஆனால் கோயங்காவின் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை எதற்கும் அஞ்சாமல் தொடர்ந்து அரசுக்கு பணியாமலே அவசரகாலம் முழுவதும் செயல்பட்டது. அரசு ஏற்படுத்திய அத்தனை தடைகளையும் சமாளித்து நின்றதால் கோயங்காவின் மீது பல வழக்குகளை தொடுத்து பல தொல்லைகளை அளித்தனர். அப்போது டைம்ஸ் ஆப் இந்தியாவில் ஜனநாயக படுகொலைகள் என்கிற தலைப்பில் வெளி வந்த செய்தி மிகவும் பிரபலமாக இருந்தது. இதை அடுத்து, செய்திகள் மிகவும் கண்காணிக்கப்பட்டதால் செய்திகள் ரகசிய கூட்டங்கள், வதந்திகள், தொலைபேசிகள் மூலம் மட்டுமே வெளியே சென்றன. இந்த நிலையில் தொலைபேசிகள் வேவு பார்க்கப்பட்டன, ஒட்டுக்கேட்கப்பட்டன. அப்போது, போராட்டக்காரர்கள் சிறிய துண்டுச்சீட்டுக்களில் செய்திகளை அச்சடித்து அரசின் அடக்குமுறைகளை கண்டித்து ஆயிரக்கணக்கான மக்களிடம் ரகசியமாக விநியோகித்தனர். அந்த சமயங்களில் அரசுக்கு ஜால்ரா அடித்த பத்திரிகைகள் சிலவும் உண்டு. அதில் முக்கியமானது குஷ்வந்த் சிங் எழுதிய கட்டுரைகள். அந்த கட்டுரைகள் இந்திராவின், அவர் மகன் சஞ்சய் காந்தியின் நடவடிக்கைகளை பாராட்டியது. மேலும் எமர்ஜென்சியால் நாட்டில் பல வளர்ச்சிக்கான மாற்றங்கள் ஏற்பட்டதாக புகழ்ந்து தள்ளினார்.
சஞ்சய் காந்தியை மிகச்சிறந்த நவீன முன்னோடியாக புகழ்ந்து தள்ளினார். அவர் வைத்திருந்த டின் பாக்ஸ் காரை வைத்து அவர் ஒரு சிறந்த மெக்கானிக்கல் எஞ்சினியர் எனவும் புகழ்ந்து தள்ளினார். இவ்வாறு அவர் இந்திரா குடும்பத்துக்கும், எமர்ஜென்சி நடவடிக்கைகளுக்கும் ஆதரவாக இருந்ததால் அவருக்கு அதிக பரிசுகள், விருதுகள் கிடைத்தன. பதவிகள் தரப்பட்டன. அந்த கால கட்டத்தில் காங்கிரசுக்கு அனுகூலமாக இருந்த பத்திரிகைகள் நல்ல சன்மானங்களை பெற்றன.
அந்த காலக்கட்டத்தில் டைம்ஸ் ஆப் இந்தியா உட்பட பல பத்திரிக்கைகள் குறிப்பாக பிரபல பெண் எழுத்தாளர் போரிபந்தர் ஆகியோர் அவசர சட்டத்தால் வேலை செய்யும் கலாச்சாரம் அனைத்து துறைகளிலும் நல்ல முன்னேற்றத்துடன் மாறியதாகவும், நாட்டு மக்கள் இடையே இது சிறந்த ஒழுக்கமான தலைமுறையை உருவாக்குகிறது என புகழ்வதாகவும் மக்கள் இந்திரா சர்வ வல்லமை உள்ள பெண்மணி என புகழ்வதாகவும் கூறி சரமாரியாக புகழ் கட்டுரைகளை எழுதி தள்ளினார். இந்தப் பிரச்சாரங்கள் இரஷ்யாவில் சர்வாதிகார அரசுகளுக்கு ஆதரவாக செய்யப்படுவது போல இருந்தன. அரசு எந்த நடவடிக்கை எடுத்தாலும் இந்தப் பத்திரிகைகள் அதைப் புகழ்ந்து போராட்டக்கரர்களுக்கு எதிரான பதிலடியை தந்தன. ஆனால் இந்திரா கொண்டு வந்த அனைத்து சட்டங்களும் மக்களின் உரிமையை நசுக்குவதற்காகவே கொண்டு வரப்பட்டன
ஒரு வழியாக 1977-ஆம் ஆண்டு எமர்ஜென்சி முடிவுக்கு வந்தது. நாடு முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசியல் தொண்டர்கள் கைது செய்யப்பட்டு சிறைக் கூடங்கள் நிரம்பி வழிந்தன. நாடு முழுவதும் நடைபெற்ற சத்யாகிரகப் போராட்டங்கள் மக்களை உசுப்பி விட்டன. இதனால் இந்திராவுக்கு அழுத்தங்கள் அதிகரித்தன. FISI இயக்கத்தினர் இந்தியாவில் நடைபெறும் சம்பவங்களை உலக நாடுகளுக்கு தெரியப்படுத்தியதன் மூலம் பல நாடுகள் இந்தியாவுக்கு அழுத்தத்தை தந்தன. இந்த நிலையில் தேர்தல் நெருங்கியது. தேர்தலை சந்திக்க வேண்டி இந்திரா தனது கெடுபிடிகளை குறைத்தார். அவரது ஆதரவாளர்கள் தேர்தலில் நாம்தான் வெற்றி பெறுவோம் என்கிற போதையை ஏற்றி இந்திராவை உசுப்பேற்றினர். அப்போது கூட இந்திரா என்றால் இந்தியா… இந்திய என்றால் இந்திரா என்ற கோஷத்தை அவர்கள் விடவில்லை. ஆனால் அவர்கள் படிக்காத பாடத்தை இந்திய மக்கள் தேர்தலில் வாக்களித்து அவர்களை தோற்கடித்து படிக்க வைத்தனர். தங்கள் வலிமையையும், ஜனநாயகத்தின் வலிமையையும் தங்கள் வாக்குரிமை மூலம் நிரூபித்துக் காட்டினர்.
ஆரம்பத்தில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத அந்த சூழ்நிலையில் மக்கள் ஜனதா கட்சி அலுவலகத்திற்கு வந்து வெளிப்படையாக ஆதரிக்க பயந்தனர். என்றாலும், தேர்தல் வாக்குச்சாவடி பணிகள் திட்டமிடப்பட்டன. மூத்த தலைவர்கள், இரண்டாம் கட்ட தலைவர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்படாத நிலையில் ஒரு சாதாரண அரசியல் அறிவைக் கொண்டு தேர்தல் பணிகளில் களம் இறங்கினர்.
காங்கிரசை தோற்கடித்து ஜனதா கட்சி ஆட்சி அமைத்து அந்த ஆட்சி நல்ல முறையில் நடந்து கொண்டிருந்த போது ஜனதா கட்சிக்குள் இருந்த சோஷலிச குழுவினர் மிகவும் மோசமான அரசியலை முன்னெடுத்தனர். வேண்டுமென்றே குழப்பம் ஏற்படுத்தும் வகையில் ஜனதா கட்சிக்குள் ஏற்கனவே இணைந்திருந்த முன்னாள் ஜன சங்க தலைவர்கள் இரட்டை உறுப்பினர் கொள்கையை கடைபிடிப்பதாகக் கூறி கட்சியை உடைக்கும் விதத்தில் தகராறு செய்தனர். ஆனால் இந்த விசுவாசம் அவர்களுக்கு ஜனதா கட்சியை தோற்றுவிக்கும் போதே இருந்திருக்க வேண்டும். ஆரம்பத்தில் அவர்கள் ஜனநாயகத்தை மீட்க ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் நடத்திய போராட்டங்கள் மற்றும் அவர்களின் ஒழுங்கு, கட்டுப்பாடு குறித்து போற்றிப் புகழ்ந்தனர் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. மேலும் அவர்கள் ஆர்.எஸ்.எஸ் குறித்து கடந்த பல ஆண்டுகளாக கொண்டிருந்த தவறான புரிதல் குறித்து அவர்கள் வருத்தம் தெரிவித்ததற்கும் சான்றுகள் உள்ளன. அவர்கள் ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஜனசங்க தலைவர்களுடன் நெருங்கிப் பழகுகிய போதுதான் தங்கள் கண்கள் திறக்கப்பட்டதாக அவர்களே ஒப்புக்கொண்டிருப்பதற்கும் சான்றுகளும் உள்ளன. இதில் ஒரு உண்மை என்னவென்றால் ஜன சங்கமும், கம்யூனிஸ்டு கட்சி மட்டுமே அமைப்பு ரீதியான கட்சிகளாக இருந்தன. மற்ற கட்சிகள் அவ்வாறு இல்லாததால் ஜனதா கட்சியின் அதிகாரத்தை அவர்கள் தங்கள் இஷ்டம்போல வளைக்க ஆரம்பித்தனர். இடைத்தேர்தல் வந்தால் அப்போது நம்முடைய தனிப்பட்ட செல்வாக்கை அதிகாரத்தில் இருக்கும் போதே வெளிக் காட்ட வேண்டும். அதன்பிறகு கட்சியை தாங்களே கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கமும் அவர்களுக்கு இருந்தது. இதற்காக ஜன சங்கத்துக்கு முந்தைய உறுப்பினர்களாக இருந்த குறிப்பிட்ட அளவிலான எம்.பி-க்கள் சிலரையும் அவர்கள் குறிப்பெடுத்து வைத்திருந்தனர். இது போன்ற முதுகில் குத்தும் வேலைகளை திரை மறைவில் இருந்து செய்து கொண்டிருந்த அவர்கள் கடைசியில் ஜனதா கட்சியை உடைத்தே விட்டார்கள். இதனால் ஆட்சி கவிழ்ந்தது, இந்திரா காந்தியே மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி திரும்பி பிரதமராக வரும் நிலை ஏற்பட்டது.
இந்த கசப்பான அரசியல் சம்பவங்களை அடுத்து, ஆர்.எஸ்.எஸ் நாட்டின் அரசியலில் ஒழுக்க பூர்வமான மாற்றங்களை ஏற்படுத்த புதியதோர் சகாப்தத்தை உருவாக்கும் வகையில் திட்டங்களை தீட்டி செயல்பட்டது. அதன் விளைவாக தனது அமைப்பின் செயல்பாடுகளை விஸ்தரிக்கும் வகையில் அகில பாரதிய வித்யாதி பரிஷத், விஸ்வ ஹிந்து பரிஷத், பாரதீய மஸ்தூர் சங் உட்பட பல துணை அமைப்புகளை ஏற்படுத்தியது. மேலும் பல புதிய இடங்களில் தங்கள் செயல்பாடுகளைத் தொடங்கி சங்கப் பணிகளை விரிவு படுத்தியது. ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்கள் மூடப்பட்ட அந்த காலக் கட்டத்தில் தொண்டர்கள் சமூகப் பணிகள் புரிவதற்காக பல திட்டங்களை தீட்டுவதற்கான அழுத்தங்களை தந்ததும் அந்த சூழ்நிலைதான். மேலும் ஜனநாயக கட்டமைப்புகள் உயிருடன் செயல்பட விரும்புவோருக்கு ஆர்.எஸ்.எஸ் தான் யார் என்பதை மெய்ப்பித்துக் காட்டியது.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தொண்டர்களும், அதன் தொடர்புடைய அமைப்பின் சேவகர்களும் சொல்ல முடியாத துயரங்களுக்கு ஆளான இந்த காலக் கட்டத்தில் சங்கத்தின் சகிப்புத்தன்மை புதிய அளவுகளை எட்டியது. அதன்பிறகு பரவலான, வேகமான ஒரு வளர்ச்சியை அடைந்தது.
புதிய சேவகர்களுக்கு இது நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு 1948-ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட போது அமைப்பின் முன்னோடிகள் கண்ட அனுபவங்களை எமெர்ஜென்சி இரண்டாம் தலைமுறையினருக்கு கற்றுக் கொடுத்தது. ஆட்சியாளர்களின் அச்சுறுத்தல்களை அடுத்து இரகசிய பணிகள் செய்தல், சிறை வைக்கப்பட்ட இடத்தில் ஆட்சியாளர்களின் அடக்கு முறைகளை எதிர்த்து சத்யாகிரக போராட்ட முறையில் எதிர்ப்பு தெரிவித்தல் ஆகியவை சங்கத்தின் இளைய தலைமுறையினருக்கு பயிற்சிக் களங்களாக அமைந்தன. அவற்றை ஒருவருக்கொருவர் கற்றுக் கொண்ட அதே சமயம் சங்கத்தின் குடையாய் வெளியே விரிந்து நின்ற பலரிடம் இருந்தும் பலவித அனுபவங்களை கற்றுக் கொண்டனர். அரசியல் சிந்தனைகள் மற்றும் தேர்தல் அரசியலில் நல்ல விழிப்புணர்வை பெற மற்றவர்களின் கருத்துக்களையும், குறிப்பாக மற்ற அரசியல் கட்சிகளின் மதிப்புடைய கருத்துக்களைப் பெறவும் அப்போது நல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. முன்னதாக நம் எதிர்ப்பாளர்கள் நம்மை வேடிக்கையாக பார்த்தனர், ஆனால் எமர்ஜென்சிக்குப் பிறகு அவர்கள் ஆச்சரியப்படும் வகையில் அரசியல் சமூக விவகாரங்களில் ஆர்.எஸ்.எஸ் மரியாதைக்குரிய இயக்கமாக பார்க்கப்பட்டது. இது ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு பல திருப்புமுனைகளை ஏற்படுத்தித் தந்தது.
ஜனநாயகத்தை மீட்டதில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் போராட்டங்கள் குறித்து தெரியப்படுத்தும் ஆவணமாக தமிழில் பல நூல்கள் இல்லை.
அரசியல் என்பது கறை படிந்த, பழி வாங்கும் போக்கு கொண்டதாக மாறி இருந்த அந்த நாட்களில் அப்போதைய ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஸ்ரீ பாலாசாகேப் தியோராஸ் 1977-ஆம் ஆண்டுக்குப் பிறகு வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த ஜனதா கட்சியினரை சரியான முறையில் வழிகாட்டி உற்சாகப்படுத்தினார் என்பது இன்றளவும் நம் நினைவில் நிற்கிறது. இந்திரா காந்தி உள்ளிட்ட அரசியல் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக அவர் ஆலோசனை வழங்கியிருந்தார். இது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பொதுவான குணமாகும். ஏனெனில் இது நாட்டின் அனைத்துச் சுற்று வளர்ச்சியிலும், யாருக்கு எதிராகவும் எந்த விரோதமும் இன்றி அனைவர் நல்வாழ்க்கைக்கும் பயனளிக்கும் வழிகாட்டியாக உள்ளது.
பின்குறிப்பு – இந்த கட்டுரை திரு.ரத்தன் ஷாரதாவின் “ஆர்.எஸ்.எஸ் 360” என்கிற நூலில் இருந்து தொகுப்பட்ட பகுதிகள்.
S G சூர்யாவின் தளத்தில் இருந்து நன்றியுடன் எடுக்கப்பட்டது எமெர்ஜென்சி காலத்தைப்பற்றி இந்தப் பக்கங்களில் சில பதிவுகள் உண்டு. ஆனால் RSS இந்த இரண்டாவது விடுதலைப்போரில் எப்படிப்பட்ட பங்கு வகித்தது என்பதை எமெர்ஜென்சி நாட்களில் மெல்ல மெல்ல இடதுசாரியாக மாறிக்கொண்டிருந்த எனக்கு முழுமையாக அறிந்து கொள்ள வாய்ப்பிருந்ததில்லை.