பழசு இன்றும் புதுசு!பழசே புதுசாகத்தொடர்வதால்...!

நேற்றைய பதிவுக்கு எழுத்தாளர் ஜீவி எழுப்பியிருந்த ஒரு பின்னூட்டக் கேள்விக்குக் கொஞ்சம் பழைய கதையைத் தூசுதட்டி எடுத்துப் போட வேண்டியிருக்கிறது. பழசா என்று அலுத்துக்கொள்ள வேண்டாம்! பழசில் இருக்கிற சுவாரசியம் ஒரிஜினாலிட்டி புதுசுக்குக் கிடையாது என்பதற்கு நான் டபுள் காரண்டீ!😉😉

நாளைய செய்தி இன்றைக்கே எழுதிப்பார்த்தால் தலைப்பு இப்படித்தான் இருக்குமோ?

பழசு இன்றும் புதுசு!பழசே புதுசாகத் தொடர்வதால்...!


நேற்றும் நமதே - 23: 4.5.88 ஜூனியர் விகடன் இதழில் இருந்து.....!


ஓர் ஆண்டுக்கு முன், பூதாகாரமாகக் கிளம்பிய போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல் விவகாரம், மத்திய அரசைக் கிடுகிடுக்க வைத்தது. பீரங்கி பேர ஊழல் குண்டுகள் 'மிஸ்டர் க்ளீன்’ என்று அது வரை வர்ணிக்கப்பட்ட பிரதமர் ராஜீவ் காந்தியின் இமேஜை உடைத்தது! 

போஃபர்ஸ், ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஆயுதத் தயாரிப்பு கம்பெனி. இந்திய ராணுவத்துக்கு 400 பீரங்கிகள் வாங்க, நமது பாதுகாப்பு அமைச்சகம், 1986 மார்ச் 24-ம் தேதி இந்த கம்பெனியுடன் 1,700 கோடி மதிப்புள்ள ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டது.

இந்த ஒப்பந்தம் பற்றி ஆரம்பத்தில் ஸ்வீடன் பிரதமர் பா(ல்)மே, நமது பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ''இந்த பேரத்தில் இடைத் தரகர்கள் யாருமே இருக்கக் கூடாது. இது இந்திய அரசின் கொள்கை!'' என்று திட்ட வட்டமாக அவரிடம் பிரதமர் ராஜீவ் காந்தி தெரிவித்தார். போஃபர்ஸும் இதை ஒப்புக்கொண்டது.

ஒப்பந்தம் 1986 மார்ச் மாதம்கையெழுத்தாவதற்கு முன்பு - பிப்ரவரி மாதம் ஸ்வீடன் பிரதமர் பா(ல்)மே நள்ளிரவில் கொலை செய்யப்பட்டார்! இந்தக் கொலையை விசாரித்த ஓர் அதிகாரியும் மர்மமான முறையில் இறந்தார். இந்தக் கொலைகளின் மர்மம் நீடிக்கிறது!

இந்திய ஒப்பந்தம் கிடைப்பதற்கு முன், போஃபர்ஸ் கம்பெனி நொடித்துப்போன நிலையில் இருந்தது. 1,000பேரை வேலை நீக்கம் செய்யவிருந்த அந்த கம்பெனி, ஒப்பந்தம் கிடைத்த மாத்திரத்தில், 3,000 பேரைப் புதிதாக வேலைக்கு எடுத்தது!

எல்லாம் 'நல்லபடியாக’ நடந்துகொண்டு இருந்தபோது, 1987-ம் வருடம் ஏப்ரல் மாதத்தில் ஸ்வீடன் ரேடியோ ஒரு வெடிகுண்டைத் தூக்கிப் போட்டது. இந்த (சுதந்திரமான!) ரேடியோ, ஏற்கெனவே போஃபர்ஸ் நிறுவனம் ஆயுத விற்பனை சம்பந்தமாகச் செய்து வந்த பல தில்லுமுல்லுகளை வெளியிட்டு வந்தது. இப்போது, 'இந்தியாவுடன் ஒப்பந்தம் நிறைவேற, போஃபர்ஸ் சில இடைத் தரர்களுக்குக் கோடிக்கணக்கில் பணம் கொடுத்தது. இந்தத் தரகர்கள், இந்திய அரசியல்வாதிகளாகக்கூட இருக்கலாம்’ என்றது.

அவ்வளவுதான்! இந்திய நாடாளுமன்றத்திலும், பத்திரிகைகளிலும், மக்கள் மத்தியிலும் கொதிப்பு ஏற்பட்டது!

''இந்திய அரசியல் ஸ்திரத்தன்மையையே குலைக்கும் முயற்சி இது. இடைத்தரகர்கள் என இதில் யாரும்கிடையாது!'' என்று இந்திய அரசு மறுத்துப் பார்த்தது. போஃபர்ஸ் நிறுவன அதிகாரிகளும், ''யாருக்கும் கமிஷன் தரவில்லை!'' என்றார்கள்.

மத்திய அரசின் பாதுகாப்புத் துறை ராஜாங்க அமைச்சர் அருண்சிங், ''அப்படிப் பணம் தரப்பட்டு இருந்தால்... எதற்கு, எப்போது, எங்கு, யாருக்கு என்பதை நிச்சயம் கண்டுபிடித்தே தீருவோம்!'' என்று ராஜ்யசபையில் உறுதி அளித்தார். அமைச்சர் சூளுரைத்தது, ஏப்ரல் 21-ம் தேதி.  

என்ன நடந்ததோ - ஜூலை 18-ம் தேதி தனது பதவியை அவர் ராஜினாமா செய்தார். ''சொந்தக் காரணங்களுக்காக விலகுகிறேன்!'' என்று சொன்னார் அமைச்சர்.

இதற்கிடையில், ஜூன் 1-ம் தேதி ஸ்வீடன் தேசியத் தணிக்கைக்குழுவின் (ஆடிட் பீரோ), 'கமிஷனாகக் கொடுக்கப்படவில்லை. சிலர் செய்த சேவைக்காக, 34 கோடியில் இருந்து 50 கோடி வரை Winding Up Charge தரப்பட்டது’ என்ற அறிவிப்பு குறிப்பிடத்தக்கது.

ஸ்வீடனிலும் உண்மை வெளிவர, கூக்குரல்கள் கிளம்பின. 'சேவைக்காகப் பணம் செலுத்தப்பட்டதை’ ஒப்புக்கொண்ட போஃபர்ஸ், வியாபார ரகசியம் என்று காரணம் காட்டி. சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களை வெளியிட மறுத்துப் பிடிவாதம் பிடித்தது. பின்னர் பலத்த எதிர்ப்பின் காரணமாக, மூன்று கம்பெனிகளின் பெயர்களை வெளியிட்டது போஃபர்ஸ்!

இந்த மூன்று கம்பெனிகளுக்கும் சேர்த்து, சர்வீஸ் சார்ஜாக 64 கோடி ஸ்விஸ் வங்கியில் 'லோட்டஸ்’ என்கிற சங்கேதப் பெயரில் போடப்பட்டதாக ஆதாரங்கள் வந்தன. 'லோட்டஸ்’ (தாமரை) என்பது, ராஜீவ் காந்தியைக் குறிக்கும் என்று இங்கே குற்றச்சாட்டு எழும்பியது. 'ராஜீவ் என்ற சம்ஸ்கிருத வார்த்தைக்குத் தாமரை என அர்த்தம்’ என்று விளக்கம் சொன்னார்கள்.


1987 ஆகஸ்ட் மாதத்தில், இந்தக் குற்றச்சாட்டுகளை ஆராய, நாடாளு மன்ற கமிட்டி ஒன்று அமைத்தது இந்திய அரசு. இதில் பங்கு பெற எதிர்க் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்களோ, நிபந்தனை விதித்தனர். ''நாங்கள் சுதந்திரமாகச் செயல்பட தடை இருக்கக் கூடாது. ஸ்விஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்கள் சிலரை, தேவைப்பட்டால் விசாரணைக்கு அழைப்போம். அவசியம் ஏற்பட்டால், மத்திய அமைச்சர்கள்... ஏன் பிரதமரையேகூட விசாரணைக்கு அழைப்போம்!'' என்றன எதிர்க் கட்சிகள். 

இதை ஏற்க மறுத்தது இந்திய அரசு. ஆகவே, எதிர்க் கட்சிகள் கமிட்டியில் சேர மறுத்துவிட்டன.

ஆளும் கட்சியும், அதன் தோழமைக் கட்சிகளும் கொண்ட 30 லோக் சபா - ராஜ்ய சபா உறுப்பினர்கள் அடங்கிய கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. அன்று காங்கிரஸுக்குத் தோழமைக் கட்சியாக இருந்த அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரும் இதில் இடம் பெற்றனர்.

ராஜீவ் காந்திக்கு மிகவும் விசுவாசமானவர், கர்நாடகத்தைச் சேர்ந்த சங்கரானந்த். இவர் அப்போது மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சராக இருந்தார். தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்த கமிட்டிக்குத் தலைவரானார்.

இந்த கமிட்டிதான், ஏப்ரல் 26-ம் தேதி நாடாளுமன்றத்தில் தனது 400 பக்க அறிக்கையைத் தாக்கல் செய்தது. 'பீரங்கி பேரத்தில் இடைத் தரகர்களே கிடையாது. எந்த இந்தியருக்கும் - இந்திய நிறுவனத்துக்கும் பணம் கொடுக்கப் படவில்லை. இதில், ஊழல் என்பதே இல்லை. போஃபர்ஸ் கூறியதுபோல, வைண்டிங்-அப் சார்ஜ்தான் தரப்பட்டு இருக்கிறது’ என்று ஞான ஸ்நானம் செய்து, ஆளும் கட்சியின் பாவக் கறைகளைத் துடைத்தது இந்த கமிட்டி!
எதிர்க் கட்சிகள், 'இந்த கமிட்டி அறிக்கை வெறும் கண்துடைப்பு’ என்று கருத்துத் தெரிவித்தன.

எதிர்பாராத ஒரு திருப்பம் நிகழ்ந்தது. இந்த கமிட்டியின் உறுப்பினரும் - அ.தி.மு.க-வின் ஜானகி அணியைச் சேர்ந்தவருமான ஆலடி அருணா பரபரப்பு ஏற்படுத்தினார். ''கமிட்டியின் கருத்துகளுடன் நான் உடன் படவில்லை. என் ஆட்சேபனைகளையும் கமிட்டி தன் அறிக்கையுடன் வெளியிட வேண்டும்!'' என்று கமிட்டியிலேயே போர்க் குரல் எழுப்பினார். ''அது முடியாது!'' என்று மறுத்தார் சங்கரானந்த்!

ஆனால், நாடாளுமன்றத் தலைவர் பல்ராம் ஜாக்கர், ஆட்சேபனைகளைத் தெரிவிக்கலாம் என்று அனுமதி கொடுத்தார்.''கமிட்டி நேர்மையான முறையில் செயல்படவில்லை!'' என்று ஆலடி அருணா 38 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இந்த கமிட்டி விசாரணை செய்த விதங்கள் தமாஷானவை! உண்மைகளைத் தயவுதாட்சண்யம் இன்றிக் கண்டுபிடிக்கும் நோக்கம் அதற்கு இருந்ததா என்பதே கேள்விக்குறியாகிவிட்டது.

கமிட்டி உறுப்பினர்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சுதந்திரமாகச் செயல்பட முடியாத அளவுக்குத் தடைகள்.

போஃபர்ஸ் கம்பெனியிடம் இருந்து வைண்டிங்-அப் சார்ஜாகப் பணம் பெற்ற மூன்று நிறுவனங்களை ஆராய சி.பி.ஐ., புலனாய்வுத் துறை அதிகாரிகள், 1987-ம் ஆண்டு இறுதியில் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் சென்றபோது சுவாரஸ்யமான செய்திகள் கிடைத்தன.

மூன்று கம்பெனிகளில் ஒன்று முழுமையாகப் பெண்களால் நிர்வகிக்கப்படும் கம்பெனி. கடந்த இரண்டு வருடங்களாக அந்த நிறுவனத்துக்கும் போஃபர்ஸுக்கும் எந்த விதத் தொடர்பும் இல்லை.

மற்றொரு கம்பெனியான Moineau - வின் பின்னணிக் கதை இன்னும் சுவாரஸ்யமானது. அது உண்மையான கம்பெனியே அல்ல! Moresco என்ற கம்பெனிக்காக, தன் பெயரை இரவல் கொடுத்திருக்கும் ஒரு பொய் நிறுவனம். இந்த 'மொரெஸ்கோ’ நிறுவனத்துக்கு இன்னொரு பெயரும் உண்டு. அது Pitco. ஆனால், இதில் வேடிக்கை என்ன என்றால், அந்த கம்பெனிகள் எதுவுமே ஸ்விட்சர்லாந்தில் குறிப்பிட்ட அந்த விலாசத்தில் செயல்படவே இல்லை!

மூன்றாவதாக, A & E Services Ltd. 1985 ஆண்டு முதல்தான் போஃபர்ஸின் ஏஜென்டாகப் பணிபுரிய ஆரம்பித்தது. இது போஃபர்ஸுக்காக, இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் பேச்சுவார்த்தை நடத்தும். இந்திய அரசு 'இடைத் தரகர்கள் கூடாது’ என்றவுடன், இந்த கம்பெனியுடன் போஃபர்ஸ் செய்துகொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்தது.

இதைத் தவிர, போஃபர்ஸ் குறிப்பிட்ட இன்னொரு நிறுவனம் அனட்ரானிக் ஜெனரல் கார்ப்பரேஷன். இதன் உரிமையாளர் வின்சத்தா. இவர் போஃபர்ஸின் இந்திய ஏஜென்ட். 

இந்த ஒப்பந்தத்துக்கு முன்பாகவே, இந்தியாவில் போஃபர்ஸுக்காக செய்த சில சின்ன வேலைகளுக்காக போஃபர்ஸ் இவருக்குப் பணம் கொடுத்திருக்கிறது. பிரச்னைகள் பூதாகார வடிவம் எடுத்தவுடன், இவர் அமெரிக்காவுக்கு ஓடி விட்டார். இவரைத் தேடிப் போனது புலனாய்வுத் துறை!

மற்ற மூன்று நிறுவனங்களைக் கண்டுபிடிக்கும் வேலையைவிட, வின் சத்தாவை இந்தியாவுக்குக் கொண்டுவரும் வேலைதான் அதிகாரிகளுக்குப் பெரும்பாடாக இருந்தது. ஏராளமான நிபந்தனைகளுடன் இந்தியாவுக்கு வர ஒப்புக்கொண்டார் வின்சத்தா. சந்தேகத்துக்குரிய இவரின் நிபந்தனைகளுக்கு எல்லாம் அடிபணிந்தது அரசு.

வின்சத்தாவும் கமிஷன் முன்பு சாட்சி சொன்னார். அதுவும் கண்துடைப்பாகவே போயிற்று. கமிட்டி தனது அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு 'இந்து’ பத்திரிகை எரி ஈட்டியை வீசிற்று.

'இந்த விவகாரத்தில் அடிபட்ட கம்பெனிகளாக மொரெஸ்கோ - பிட்கோ எல்லாமே போலிப் பெயர்கள். இவற்றுக்குப் பின்னால் செயல்பட்டது - 'இந்துஜா’க்களின் 'சங்கம் லிமிடெட் கம்பெனி’தான். 64 கோடி கமிஷனில் ஒரு பகுதி, இவர்களுக்குத்தான் சென்றிருக்கிறது’ என்று ஆதாரத்துடன் வெளியிட்டது 'இந்து’ பத்திரிகை.

ஆரம்பத்திலேயே 'இந்துஜா’வின் பெயர் இதோடு சம்பந்தப்படுத்தப்பட்டு - பிறகு அவர்களால் மறுக்கப்பட்டது. 'இந்துஜா’க்கள். இந்தியாவிலேயே பணக்காரக் குடும்பத்தினர்.

பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக பிரதமரும், ஆளும் கட்சியினரும் கருதுகின்றனர். ஆனால், கமிட்டி விசாரணை போதுமானது என்று மக்கள் கருதவில்லை. கமிட்டி நடந்த விதத்தை அறிந்த பிறகு, 'ஊழலே இல்லை’ என்று மக்களால் கருத முடியவில்லை!

இந்த கமிட்டியின் துணைத் தலைவர் ஆண்டர்ஸ் ஜோர்க், ''எனக்குக் கிடைத்த ரகசிய தஸ்தாவேஜுகளை வைத்துப்பார்க்கும்போது, போஃபர்ஸ் கம்பெனிக்கும் ராஜீவ் காந்தி குடும்பத்துக்கும் நேரடியாகவோ, மறை முகமாகவோ தொடர்பு இருப்பதாகத்தான் தெரிகிறது!'' என்று கூறி இருக்கிறார். 

ஆனால், போஃபர்ஸும் இந்திய அரசும் இதற்கு மறுப்பு கூறுகிறது. ஊஹும்... பிரச்னை முடிந்துவிடவில்லை!

- நமது அரசியல் நிருபர்

******


இந்த இருபத்துமூன்றுவருடங்களில் நம்முடைய அரசியல்வியாதிகள் "கற்றுக் குட்டி" பயத்தையெல்லாம் உதிர்த்துவிட்டு எவ்வளவு தெனா வெட்டாக ஊழலை செய்கிறார்கள், ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை எப்படி எதிர் கொள்கிறார்கள் என்பது, ஜூவியில் வெளியான இந்தப் பழைய கட்டுரையைப் படித்தாலேயே புரிந்துகொள்ளக் கூடியதுதான்! 

இன்னொன்றும் இருக்கிறது! எங்கேயோ மழை பெய்கிறது என்றிருக்கும் நம் ஜனங்களுடைய அலட்சிய மனோபாவம்! 

அதுதான், தட்டிக் கேட்க ஆளில்லாத தம்பிகள், அண்ணாத்தைகளுடன் கூட்டுச் சேர்ந்து, இன்றைக்கு லட்சக் கணக்கான கோடிகளில் ஊழலை செய்துவிட்டு, கனிமொழி பேட்டி கொடுத்த மாதிரி, நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம் என்று துணிச்சலாகச் சொல்ல முடிகிறது!




இந்த செய்திக் கட்டுரையைப் படிக்கும் இன்றைய இளைய தலைமுறைக்கு, வெறும் அறுபத்து நாலு கோடிக்கே இந்த ஆர்ப்பாட்டமா, ராஜீவ் காந்தி தன்னுடைய மிஸ்டர் பரிசுத்தம் இமேஜ் டாமேஜ் ஆவதைக் கண்டு இத்தனை பயந்தாரா என்று  தான் கேட்கத் தோன்றும்!(ஆனால், தன்னுடைய வீட்டைச் சேர்ந்தவர்கள் எவரும் ஊழலில் ஈடுபடாமல் தடுக்க ராஜீவ் என்ன செய்தார் என்று எவருமே கேள்வி கேட்டதில்லை!சோனியாவின் உறவினர்கள் ஆதாயம் அடைந்தார்கள், அதைத் தடுக்க ராஜீவ் காந்தி ஒருபோதும் முயற்சித்ததில்லை!) அந்த அளவுக்கு ஊழலும் இந்திய அரசியலும் (வாரிசு, குடும்ப அரசியலும் என்று பொருள் கொள்ளவும்) பின்னிப் பிணைந்து, ஒரு  வலுவான கூட்டணி தர்மத்தை உருவாக்கியிருக்கின்றன! 

இளிச்சவாயர்களாக இந்தியத் திருநாட்டின் மாண்புமிகு பொதுஜனம் தானே தன் தலையில் மிளகாய், மசாலா இப்படி எதைவேண்டுமானாலும் அரைத்துக் கொள்ள அனுமதித்திருப்பது அவர்களுக்கே தெரியவில்லை!லேசுபாசாகத் தெரிந்தாலும்,அதைக் குறித்துத் தான் செய்வதற்கு ஒன்றும் இல்லை என்ற மாதிரியாக, ஒருவித செயலற்றதன்மை வளர்ந்து கொண்டிருப்பதோ, தங்களுடைய வாழ்வு, சுதந்திரம் பாதிக்கப்படும் என்பதோ ஜனங்களுக்கு இன்னமும் முழுமையாகப் புரியவில்லை.




புரிந்திருக்குமானால், கண்ணாடியைக் கழற்றிவிட்டு கருணாநிதி கண்ணீர் விட்டார், ஸ்டாலினைப்  பார்த்ததும் கனிமொழி கதறி அழுதார், கனிமொழி சிறையில் வாடுகிறார், மெழுகுவர்த்தி செய்யக் கற்றுக் கொள்கிறார் என்ற மாதிரியான ஊடகச் செய்திகளைப் பார்த்து உண்மையிலேயே கொதித்திருக்க வேண்டும். ஊடகங்களின் பசப்புத் தன்மையை இனம் கண்டுகொண்டிருக்க வேண்டும். சிறைகளிலும் ஊழலுக்குத் தனி மரியாதை உண்டு!  

தெஹெல்கா செய்தி ஒன்று இங்கே  

ஆனால், ஊடகங்களின் உள்நோக்கங்களை சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறோமா? 


இப்படி இந்தப்பக்கங்களிலேயே எழுதியது 2011 ஜூலையில் தான்! ராஜீவ் காண்டி அரசியலுக்கு வர விரும்பியதில்லை. ஆனால் விதி அவரை இழுத்துவந்ததா? இதற்கு சஞ்சய் காண்டியின் மரணத்துக்குப் பின்னால் சதியெதுவும் இருந்ததா என்பது தெரியவேண்டுமே! ஆனால் மிஸ்டர் க்ளீன் காண்டி clean bowled ஆனதற்குப் பின்னால் அவரது இத்தாலிய மனைவியும் அவரது உறவினர்களும் இருந்தார்கள் என்பது அந்தநாட்களிலேயே சிதம்பர ரகசியம். அப்படி இருந்துமே கூட ராஜீவ் காண்டி என்ற இளைஞனுக்கு இந்த தேசத்தைக் குறித்து  சில கனவுகள் இருந்தது, என்றே நான் இன்றும் கூட நம்புகிறேன். புதிய கல்விக்கொள்கை, தொலைத்தொடர்புக் கட்டமைப்பு, பாகிஸ்தானுடன் கொஞ்சம் சுமுகமான உறவு, பழசையெல்லாம் தூக்கியெறிந்து  விட்டுச் சீனாவுக்கும் போய் உறவுகளை சீரமைக்க முயன்றது இப்படி பாசிட்டிவான விஷயங்களையெல்லாம் மறக்கடிக்க bofors ஊழல் ஒன்று  போதுமானதாக அந்தநாட்களில் இருந்தது என்பதே இப்போது திரும்பிப்பார்க்கையில் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.

அதேமாதிரித்தான் ராகுல் காண்டியும்! கட்சியை சர்வாதிகாரி போலச் சீரமைக்க முடியவில்லை என்றாலும் கூட, பழைய முகங்களுக்குச் சமமாக இளைஞர்களுக்கும் வாய்ப்புத்தர வேண்டுமென்கிற விருப்பம் இங்கே கரூரில் ஜோதிமணிக்கு சீட் கேரளாவில் ஒரு ஏழைப்பழங்குடிப் பெண்ணுக்கு சீட் என்றெல்லாம் வெளிப்பட்டதை உதாசீனப்படுத்திவிட முடியாது.

கடந்த டிசம்பரில் மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் ஜெயித்ததும் பழம்பெருச்சாளிகள் என்ன செய்தார்கள்? மத்தியப்பிரதேசத்தில் ஓடியோடி உழைத்த ஜோதிராதித்ய சிந்தியாவை ஓரங்கட்டிவிட்டு கமல்நாத் வந்து உட்கார்ந்து கொண்டார். ராஜஸ்தானில் இன்னொரு பெருச்சாளி அசோக் கெலாட் சச்சின் பைலட்டை முந்திக்கொண்டு முதல்வரானார் என்பதில் ராகுல் காண்டி விருப்பப்படி கட்சியை சீரமைக்க முடியவில்லை என்பதுதான் வெளிப்பட்டதாக நினைக்கிறேன். தேர்தல் தோல்விக்குப் பின்னால் காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் காண்டி இந்த இருவரோடு பானாசீனா அடம் பிடித்ததையும் எரிச்சலோடு சொல்லிக் காட்டியதும் அதனால் தான் என்று கூடத்தோன்றுகிறது.

1965 ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் மாணவனாக இருந்த என்னை அரசியல் பக்கம் ஈர்த்தது. அந்த நாட்கள் முதலாகவே நான் காங்கிரஸ் எதிர்ப்பில் இன்றுவரை மாறாமல் இருப்பது போலவே, திமு கழகத்தை எதிர்ப்பதென்பதில்  உதயகுமார் மற்றும் திருச்சி கிளைவ் ஹாஸ்டல் மாணவர்கள் மரணம் முதலான நிறையக்காரணங்கள் இருக்கின்றன.

ஏதிர்க்கிறேன் என்பதால் கண்ணை மூடிக் கொண்டு எதிர்ப்பது என்றா அர்த்தம்? நல்ல விஷயங்கள் இருந்தால் அதையும் எடுத்துக் கொள்ளத்.தவறியதும் இல்லை.

மிகை நாடி மிக்க கொளல்! அவ்வளவுதான்!

மீண்டும் சந்திப்போம்.
      
                 

10 comments:

  1. வாசித்து விட்டேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாசித்தது சரி ஜீவி சார்! உங்கள் பதிலுக்கு பதில் கேள்விகளுக்கு சரியாக விடை சொன்னேனா இல்லையா என்பதைப் பற்றி எதையும் காணோமே!

      Delete
  2. சொல்லவில்லை சார். எல்லா கட்சிகளிலும் தனித் தலைமைக்கு முக்கியத்துவம் கொடுத்து அந்தந்த கட்சிகளாய் உய்விக்க வந்த மாமனிதர் அவரே என்று போற்றுவது வழக்கமாக இருக்கிறது. மார்க்ஸ் அவர்கள் தனி நபர் வழிபாடு என்னன்ன கேடுகளை விளைவிக்கும் என்று ஏகப்பட்ட ஆண்டுகளுக்கு முன்பே தீர்க்கமாக கணித்திருக்கிறார். அதைப் பற்றித் தான் நான் சொல்லியிருந்தேன்.

    ReplyDelete
  3. * அந்தந்த கட்சிகளை உய்விக்க வந்த

    ReplyDelete
    Replies
    1. இதுவரை தனிநபர்களைச் சுற்றியே அரசியல் முதற்கொண்டு எல்லாத்துறைகளுமே இயங்கிவந்ததாகத்தான் வரலாறு காண்பிக்கிறது சார்! மார்க்சீயவாதிகளும் அதற்கு விதிவிலக்கல்ல ஜீவி சார்!

      Delete
  4. பொத்தாம் போக்கில் அப்படி எண்ணாமல் அது பற்றிய தெளிவு எனக்குண்டு சார்.
    மார்க்சீயம் என்பது ஒரு தத்துவம். அந்த தத்துவத்தை நடைமுறைப் படுத்த முயற்சிப்பவர்களின் தவறுகள் அந்தத் தத்துவத்தின் தவறாகாது. தனிநபர்களின் தவறுகளைத் தாண்டி அந்தத் தத்துவம் ஜீவிக்கும். உலகத்தின் ஏதாவது ஒரு மூலையில் கூட அதற்கான உயிர்ப்பு இருந்து கொண்டே இருக்கும்.

    தனி நபர்கள் அடையாளச் சின்னங்கள். காலத்தின் தேவை சில தனி நபர்களை உபயோகப்படுத்திக் கொள்கிறது. தனி நபர்களைச் சுற்றியே எல்லாம் நிகழ்வதாக நாம் கற்பிதம் கொள்ளக் கூடாது. தனி நபர்களின் உபயோகம் அடுத்த தேவைக்காக உபயோகப்படாமல் போகும் பொழுது அவர் கழற்றி விடப்பட்டு, இன்னொருவர் உபயோகப்படுத்திக் கொள்ளப் படுகிறார். இது தான் வரலாறு.

    வரலாறு அடுத்து அடுத்து நிகழ வேண்டியவைகளுக்காக மலர்ந்து கொண்டே இருக்கிறது. இது தான் விஞ்ஞானபூர்வமான உண்மை.




    ReplyDelete
    Replies
    1. https://suvasikkapporenga.blogspot.com/2010/12/leading-change-6.html இந்தப்பதிவில் நீங்களும் நானும் இதே விஷயத்தைக் குறித்துப் பின்னூட்டங்களில் பேசியிருக்கிறோம். பதிவு, மாற்றம் எப்படி ஒரு தனிநபரிடமிருந்தே ஆரம்பிக்கிறது என்பதை பேசுகிறது.

      Delete
  5. அப்படியா?.. இப்போதைக்கு இது போதும். இன்னொரு சந்தர்ப்பத்தில் அன்றைய நம் வளர்ச்சிக் கேற்ப இதே விஷயத்தைக் குறித்து பேசுவோம். சரியா?..

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கே போதும் போதும் என்றாகிவிட்டதா ஜீவி சார்? !! :-)))

      Delete
  6. எத்தனை தடவை தான் பின்னோக்கி பின்னோக்கி வந்து பின்னூட்டம் போடுவேன்?.. தனி நபர் வழிபாட்டின் வேதனையை நிதர்சனமாக அனுபவித்துக் கொண்டிருக்கும் தற்காலத்தில் அதற்கு துதி பாட முடியாத யதார்த்த உணர்வுகள் நிறைய எழுதச் சொல்கின்றன. இருந்தும் கொஞ்சம் ஊறப் போட்டு அலசினால் இன்னும் அனுபவம் கூடும் என்பதினால் தான்.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!