டில்லி சட்டசபைத்தேர்தல் முடிவு! அவரவர் பார்வை அவரவருக்கு!

டில்லி சட்டசபைத் தேர்தல் முடிவுகளைக்குறித்துப் பல விதமான கருத்துக்களும், புள்ளிவிவர ஆராய்ச்சிகளும் வந்துகொண்டே இருக்கின்றன. ஊடகங்கள் மட்டுமல்ல ஜனங்களுக்கும் பொழுது போக வேண்டாமா? இன்னும் கொஞ்ச நாட்களுக்கு துடைப்பக்கட்டை, அரவிந்த் கேஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி எல்லாமே ஊடகங்களில் விவாதப்பொருளாகக் கொண்டாடப்படும் என்பது நம்மூர் நி(க)லவரம்.


முன்னாள் டில்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித்தின் மகன் சந்தீப் தீட்சித், இவரும் காங்கிரஸ்தான், அரவிந்த் கேஜ்ரிவால் சந்தேகமே இல்லாத பெருங்கேடு என்று பகிரங்கமாக நேற்றே சொன்னார்  ஆனால் பானாசீனா மாதிரி ராஜபரம்பரைக் காங்கிரஸ்காரர்களுக்கு வேறு விதமான அபிப்பிராயம் இருந்ததாம்!

ஷர்மிஸ்தா, பிரணாப் குமார் முகர்ஜியின் மகள்! டில்லி மகளிர் காங்கிரஸ் தலைவியும் கூட!  ஆஹா! காங்கிரஸ் காரர்களே இப்படிச் சொல்லிவிட்டார்களே என்று சந்தோஷப்பட்டுக் கொள்ள எதுவுமில்லை என்கிறார் நம்முடைய சேட்டைக்காரன் பதிவர். எந்த ஷீலா தீட்சித் மீது ஊழல்குற்றச்சாட்டுக்களைச் சொல்லி அவரைத் தோற்கடித்தாரோ, அந்தக் குற்றச் சாட்டுக்களைப் பற்றி முதல்முறையாக காங்கிரஸ் தயவுடன் முதல்வர் பதவிக்கு வந்த கேஜ்ரிவால், மிகவும் சௌகரியமாக மறந்தும் போய்விட்டார்! ஷர்மிஸ்தா பிரணாபின் மகள், பானாசீனாவுக்கும் பிரணாபுக்கும் யார் நம்பர் 2 என்பதில் அந்தநாட்களில் சண்டை, அதனால் தான் அப்படிச் சொல்கிறார் என்பதெல்லாம் தேவையே இல்லாத ஆணி! 


துடைப்பத்தால் கேஜ்ரிவால் பிஜேபியை கூட்டிப் பெருக்கித் தள்ளிவிட்டார் என்று பெருமிதப்படுகிறார் கார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யா! பானாசீனா மகிழ்ச்சிக்கும் இவருடைய மகிழ்ச்சிக்கும் வேறுபாடு ஏதாவது இருக்கிறதா? ஹிந்து ஆங்கில நாளிதழில் சுரேந்திரா வரைந்த கார்டூனும் அதே ரகம்தான்!


WIN News தொலைக்காட்சியில் மதன் ரவிச்சந்திரன் இந்தத் தேர்தல் முடிவுகளோடு 2021 தமிழ்நாடு தேர்தலையும் முடிச்சுப்போட்டு ஒரு 55 நிமிட விவாதம் நடத்தியிருக்கிறார். ஆம் ஆத்மி கட்சி சார்பாகவும் பேச தமிழ்நாட்டில் ஆளிருக்கிறது! ஸ்டெல்லா மேரி என்கிற ஆம் ஆத்மி குல்லாய் போட்ட பெண்மணி ஒரேயடியாக இந்திய சரித்திரத்திலேயே AAP  67/70 என்ற சாதனையை நிகழ்த்தியதாகச் சொன்னது வரலாற்றைப் பேசுதல் என்பது எவ்வளவு கேலிக்குரிய விஷயமாக ஆகிவிட்டது என்பதைக் காட்டியது. இதற்கு முன்னால் ஜம்மு காஷ்மீரில் ஷேக் அப்துல்லா, எல்லாத் தொகுதிகளிலும் வெற்றிபெற்ற 75/75 சாதனையை உலகத்திலேயே வேறு எவரும் முறியடித்தது இல்லை! அந்தத் தேர்தலில் ஷேக் அப்துல்லா கட்சி வேட்பாளர் தவிர வேறு எவரும் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கப் படவில்லை என்பதையும் சேர்த்துப் பார்த்தால் யாரும் முடியடிக்கமுடியாத உலகசாதனை என்பதை யார் இப்போது நினைவ வைத்திருக்கப் போகிறார்கள்? ச்சும்மா அடிச்சு உடு தாயி!

முகநூலில் படித்ததும் பிடித்ததுமாக 

தில்லி தேர்தல் ஒரு வழியாக முடிந்துவிட்டது. ஆளாளுக்குக் கருத்துக்களை அள்ளி வீசும்போது நான் மட்டும் சும்மா இருப்பேனா என்ன? எனக்குத் தெரிந்த நாலு கருத்துக்களையும் அள்ளி வீசுகிறேன். பிடித்துக் கொள்ளுங்கள்.
அரவிந்த் கேஜ்ரிவாலைப் போன்றதொரு உலக மகா ஃப்ராடினை வேறெந்த ஜனநாயக நாட்டிலும் காண்பது ஏறக்குறைய அரிதானதொரு விஷயம். அப்படியே ஒருதடவை ஏமாந்தாலும் இரண்டாவது தடவை அந்தமாதிரியான ஆசாமிகளைக் காணாமலடித்து விடுவார்கள். ஆனால் இந்திய ஜனநாயகம் விசித்திரமானது. இதன் தலைவிதியை பெரும்பாலும் திருடர்களும், அயோக்கியர்களும் மட்டுமே தீர்மானிக்கிறார்கள்.
மத அடிப்படையில் கும்பலாக ஓட்டுப் போடுவது ஜனநாயக நடைமுறைகளுக்கே எதிரானது என்கிற அறிவு அறவே இல்லாத கூட்டம் ஒருபுறம். எவன் எப்படிப் போனால் எனக்கென்ன? எனக்கு ஓசியில வரவேண்டியது வந்தால் சரி என்கிற மூடக்கூட்டம் மறுபுறம். இன்னொரு கூட்டம் வாய்கிழிய பேசுவதுடன் சரி. வாக்குச் சாவடிப்பக்கமே எட்டிப்பார்க்காது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நடக்கும் தேர்தல்கள் தமாஷானவை மட்டுமே. அதனை எட்டி நின்று வேடிக்கை பார்த்துச் சிரிக்கக் கற்றுக் கொள்ளாதவர்களுக்கு ரத்தக் கொதிப்பு இலவச இணைப்பாக வரும் என்பதில் சந்தேகமில்லை.
கடந்த தேர்தலுக்கு முன்னால் அர்விந்த் கேஜ்ரிவால் என்பர் ஒரு அட்ரஸ் இல்லாத ஆசாமி. அன்னா ஹசாரே என்கிற பெருசுடன் ஒட்டிக் கொண்டு திரிந்த ஒரு ஆள். அவருக்கு முன்பாக அதே அன்னா ஹசாரேயுடன் நாட்டுப் பற்று மிக்க, கிரண் பேடி போன்ற ஊரறிந்த பலரும் இருந்தார்கள். ஆனால் கேஜ்ரியும் அவது கும்பலும் அன்னா ஹசாரேயுடன் நெருங்கியவுடன் அவரைச் சுற்றியிருந்த நாட்டுப்பற்று மிக்கவர்கள் காணாமல் போனார்கள். தேசவிரோத எண்ணமுடைய பிரஷாந்த் பூஷன் போன்றவர்கள் அன்னாவை சுற்றி வளைத்தார்கள். அந்த வெளிச்சத்தில் “ஆம் ஆத்மி” என்கிற துடைப்பக்கட்டை கட்சி துவங்கப்பட்டது. இத்தனைக்கும் காரணமான அன்னா ஹசாரேவும் ஒரு கட்டத்தில் தூக்கிக் கடாசப்பட்டு இன்றைக்கு அட்ரஸ் இல்லாத ஆசாமியாக மாறிவிட்டார்.
அதற்குப் பிறகு மிகத் திறமையாக காய்கள் நகர்த்தப்பட்டன. பாகிஸ்தானிய உளவு நிறுவனங்களும், காலிஸ்தானி தீவிரவாதிகளும், ஃபோர்ட் ஃபவுண்டேஷன் போன்ற அமைப்புகளும் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கும் அவரைச் சுற்றி இருந்தவர்களுக்கும் பணத்தை வாறி இறைக்க ஆரம்பித்தார்கள். அந்தப் பின்புலத்தில் “ஆம் ஆத்மி” கட்சி தேர்தலில் போட்டியிட்டது. அர்வித்ந்த் கேஜ்ரிவால் தன்னை  ஒரு உத்தமபுத்திரனாகக் காட்ட ஆரம்பித்தார். ஒருகட்டத்தில் மகாத்மா காந்தியின் மறுபிறப்பே கேஜ்ரிவால்தான் என்கிற எண்ணம் நாடெங்கும் உருவாகியது. முதல் தேர்தலில் இழுபறியாகி இரண்டாம் தேர்தலில் கேஜ்ரிவாலின் கட்சி தில்லியை முழுமையாகக் கைப்பற்றிச் சரித்திரம் படைத்தது.
அவரின் வெற்றியை நாடே கொண்டாடியது என்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால் காங்கிரஸ் கட்சியின் மெகா ஊழல்களிலும், செயல்பாடற்ற தன்மையிலும் மொத்த இந்தியாவும் அதிருப்தியில் இருந்த காலம் அது. அதற்கேற்றாற் போல கேஜ்ரிவால் செயல் திட்டங்களை அள்ளி வீசினார். அதில் மிக முக்கியமானது மாநில அரசுகளின் ஊழலை விசாரிக்கும் “லோக் ஆயுக்தாக்கள்” (அல்லது அதுமாதிரியான ஒரு பெயர்). பெயர் முக்கியமில்லை. அந்த அமைப்பின் செயல்பாடுகள்தான் மிக முக்கியமானவை. தில்லியில் காமன்வெல்த் போட்டியில் ஊழல் செய்த ஷீலா திட்சித்தை உண்டு இல்லாமல் செய்யப்போவதாக கேஜ்ரி முழங்கினார்.
ஒரு உத்தமர்  உதித்துவிட்டதாக நாடே மகிழ்ந்தது. ஒரு முதலமைச்சரையே விசாரிக்கும் அதிகாரம் படைத்த லோக் ஆயுக்தாக்கள் எல்லா மாநிலங்களிலும் வர சாத்தியம் குறைவாக இருந்தாலும் தில்லியில் அதற்கான சாத்தியங்கள் முற்றிலும் இருந்தன. ஏனென்றால் ஏறக்குறைய தில்லியின் அத்தனை தொகுதிகளும் ஆம் ஆத்மி கட்சியின் கையில் இருந்தது. ஆட்சியேற்றவுடன் கேஜ்ரிவால் அதைச் செய்து ஷீலா திட்சித்தை சிறையில் தள்ளப் போகும் நாட்களை எண்ணி இநதியா  புளகாங்கிதமடைந்து கொண்டிருந்தது. அதற்கும் மேலாக தில்லியின் தெருவுக்குத்தெரு சி.சி.டி.வி.களை அமைக்கப் போவதாகவும், இண்டர்னெட் இலவசம் என்றும், உயர்தர இலகவசக் கல்வி, இன்னபிற என்று அள்ளிவிட்டார் கேஜ்ரிவால்.
ஆம் ஆத்மி கட்சி பதவியேற்ற ஒருவருடத்திற்குள் கேஜ்ரிவாலின் சாயம் வெளுத்துப் போனது. உலக மகா ஊழல் ஆசாமி மட்டுமில்லை, நிர்வாகம் என்றால் என்னவென்றே அறியாத ஆசாமியாக இருந்த கேஜ்ரிவாலைப் பார்த்து தில்லிவாசிகள் அதிர்ந்து போனார்கள். இன்னும் என்னவெல்லாமோ நடந்தன. அதையெல்லாம் எழுத இது இடமில்லை. நான்கரை வருடங்கள் தில்லியைச் சீரழித்த கேஜ்ரிவால் தேர்தல் நடக்க ஆறுமாதங்கள் இருக்கையில் திடீரெனெ விழித்தெழுந்து இலவசங்களின் மேல் இலவசங்களை அள்ளி வீசினார். அதெல்லாம் நீங்கள் அறியாததல்ல.
எனவே, தேர்தல் ரிசல்ட்டுக்கு வருவோம்.
ஒன்று, இந்தத் தேர்தலில் பா.ஜ.க. தனது மெத்தனத்தால் மட்டுமே தோற்றது என்பது பொதுக்கருத்து. அதனை நான் ஆமோதிக்கிறேன். பா.ஜ.க.வின் தேர்தல் பிரச்சாரம் மிக மெதுவாக, கடைசிகட்ட காலத்தில் மட்டுமே துவங்கியது.
இரண்டு, பா.ஜ.க.வில் மக்களுக்கு அறிமுகமான, திறமையான தலைவர்கள் தில்லியில் இல்லாதது. அப்படி இருந்தாலும் அவர்களை முன்னிலைப் படுத்தாமல் இருந்தது.
மூன்று, ஷாகின்பாக் போன்றவற்றின் மூலமாக கேஜ்ரிவால் முஸ்லிம்களின் ஓட்டுக்களை கைப்பற்றிக் கொண்டிருந்ததை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. அதற்கு எதிராக ஹிந்துக்களின் ஓட்டுக்களை ஒன்றிணைக்கத் தவறியது எனப் பல காரணங்கள்….
இருந்தாலும் தனிப்பட்ட என்னுடைய கருத்தின்படி பா.ஜ.க. இந்தத் தேர்தலில் தோற்கவில்லை அல்லது தோற்றது பெரிய விஷயமில்லை. ஏனென்றால் தில்லியில் பா.ஜ.க.வின் வாக்கு வங்கி அதிகரித்திருக்கிறது. எதிர்காலத்திற்கு இது மிகவும் முக்கியமான ஒன்று.
பா.ஜ.க. தந்திரமாக காங்கிரஸ் மற்றும் அர்விந்த் கேஜ்ரிவால் ரகசியக் கூட்டணியால் தோற்கடிக்கப் பட்டிருக்கிறது. மதியம்வரை பதிந்த குறைந்த வாக்குகளைக் கண்டு பயந்த ஆம் ஆத்மி கட்சித்தலைமை ஷரத் பவாரை நேரில் சந்தித்துக் கெஞ்சிய பிறகு அண்டோனியோ மொய்னோ காங்கிரஸ் கட்சி ஓட்டுக்களை ஆம் ஆத்மிக் கட்சிக்கு விழ வைத்திருக்கிறார். ஏறக்குறைய 15% வாக்கு வங்கி உடைய காங்கிரஸ் ஓட்டுக்கள் சரேலன நான்கு சதவீதமாகக் குறைந்ததற்குக் காரணம் இதுதான். காங்கிரஸ் கட்சி தன்னை அழித்து ஆம் ஆத்மி கட்சியை ஜெயிக்க வைத்திருக்கிறது. பா.ஜ.க. வெறுப்பரசியல் மட்டுமே இதற்குக் காரணம் என்பதில் சந்தேகமில்லை.
பா.ஜ.க. ஏறக்குறைய 44 தொகுதிகளில் வெறும் ஆயிரத்திற்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே தோற்றிருக்கிறது. அந்த வாக்கு வித்தியாசம் காங்கிரஸ் ஓட்டுக்களால் ஆனது. எனவே அர்விந்த் கேஜ்ரிவால் ஜெயிக்கவில்லை. ஜெயிக்க வைக்கப்பட்டிருக்கிறார்.
பா.ஜ.க. வருந்துவதற்கு இதில் ஒன்றுமில்லை. அடுத்த தேர்தல் இதற்கு முற்றிலும் எதிரானதொரு கதையைச் சொல்லும். ஏனென்றால் தில்லியில் இன்றைக்கு வழங்கப்படும் இலவசங்களைத் தொடர்ந்து வழங்கும் நிலையில் தில்லியின் பொருளாதாரம் இல்லை. கேஜ்ரிவால் அதனை ஒருகட்டத்தில் நிறுத்தியே ஆகவேண்டிய நிலைவரும் என்பதில் சந்தேகமில்லை. எது நடந்தாலும் மத்திய அரசாங்கம் தில்லி அரசைக் கைவிடுவது இயலாத காரியம். ஏனென்றால் தில்லி நாட்டின் தலைநகரம். அதனைச் சரியாக இயங்க வைத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் மத்திய அரசு கேஜ்ரிவாலுக்கு உதவும். வேறுவழி?
எந்தவிதத்தில் பார்த்தாலும் அர்விந்த் கேஜ்ரிவால் ஒரு அதிர்‌ஷ்டக்கார ஃப்ராடு என்பதில் சந்தேகமேயில்லை.
       
நரேந்திரன் இங்கே எழுதியிருப்பதற்கும் மேலதிகத் தகவல்களை கூகிள் பஸ் / பிளஸ்சில் அன்னா ஹசாரே ஒரு இயக்கமாக #IndiaAgainstCorruption என்றாகிக் கொண்டிருந்த நாட்களில் இருந்தே கவனித்துக் கொண்டு விமரிசனக் குறிப்புக்களை இணையத்தில் எழுதிக் கொண்டிருந்தவன் என்ற வகையில் அரவிந்த் கேஜ்ரிவால் ஒரு ஏமாற்றுப்பேர்வழி என்பதை அறிந்தவனும் கூட! அத்தனை குறிப்புகளும் backup இல் இருக்கிறது. தேவைப்பட்டால், எடுத்துப்போடவும் முடியும்! ஆனால் இங்கே அரவிந்த் கேஜ்ரிவால் மையப் பொருள் அல்ல என்பதை நினைவில் வைத்துக் கொண்டு ......

மீண்டும் சந்திப்போம். 

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!