காங்கிரசும் வரலாறும்! Headless Chicken Syndrome!

இப்போது காங்கிரசுக்கு போதாதகாலம் என்றால் ராகுல் காண்டி ஒருவரே அதற்கு முழுமுதல் காரணம் என்ற அளவுக்கு நிலைமை அவ்வளவு கேவலமாகப் போய்க்கொண்டிருக்கிறது. 1998 முதல் 2013 வரை டில்லியை தொடர்ச்சியாக மூன்று முறை ஜெயித்த காலம் போய், இருந்தார்கள் போட்டியிட்ட அத்தனை இடங்களிலும் தோல்வி என்பதையும் தாண்டி மூன்றே  மூன்று தொகுதிகளில் மட்டும் டெபாசிட் கிடைக்கிற அளவுக்குக் கீழேபோய்விட்டது. டில்லி காங்கிரசுக்குப் பொறுப்பாளராக இருந்த P C சாக்கோ, ஆம் ஆத்மி கட்சிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் இருக்கிறார்; எங்களுக்கு யார் இருக்கிறார்கள் என்று தேம்பியது சிலநாட்களுக்கு முன்புதான்!

  
மான்டெக் சிங் அலுவாலியா! IMF இல் பணியாற்றி வந்தவர், அதை ராஜினாமா செய்துவிட்டு  2004 இல் ஐமுகூ அரசின் அழைப்பை ஏற்று பிளானிங் கமிஷன் துணைத் தலைவராக இருந்தவர். அன்றைக்கு பிரதமராக இருந்த மன்மோகன் சிங் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். இருநாட்களுக்கு முன் ஒரு அதிர்ச்சி தரும் தகவலைச் சொன்னார் 2013 இல் காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ அரசு, உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒன்றை மிஞ்சுகிற மாதிரி ஒரு அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தது. கிரிமினல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்ட எம்பிக்களைப் பாதுகாப்பதாக அந்த அவசரச்சட்டம் இருந்தது. அன்றைக்கு எம்பியாகவும் காங்கிரசின் இளவரசராகவும் வலம்வந்துகொண்டிருந்த ராகுல் காண்டி அந்த அவசரச் சட்டத்தை முட்டாள்தனமானது, கிழித்தெறிந்து தூர எறிந்துவிடவேண்டியது என்று பேசியதை மேலே வீடியோவில் பார்த்தீர்கள் இல்லையா? செய்தியாகப் படிக்க இங்கே.  

மான்டெக் அலுவாலியா இப்போது சொல்கிற தகவல் இதுதான்: ராகுல் காண்டி இப்படி அரசை அவமதித்த பிறகு தான் பதவியில் நீடிக்க வேண்டுமா? ராஜினாமா செய்து விடலாமா என்று தன்னிடம் ஆலோசனை கேட்டதாக! ஆனால் இந்த விவகாரம் வெடித்தபோதே நாடாளுமன்றத்தில் பிஜேபியின் அருண் ஜெயிட்லி பிரதமர் இந்த அவமதிப்புக்கு ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொன்னதைப்பற்றி மன்மோகன் சிங் அலட்டிக்கொண்ட மாதிரித் தெரியவில்லை! பழைய விவகாரம் தான்! காங்கிரசுக்கு இப்போது குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கிறது. காங்கிரசுக்கு பழைய சங்கதிகள் வரலாறு என்றாலே ஏகத்துக்கும் அலெர்ஜி என்பதை இந்தப்பக்கங்களில் பலமுறை பார்த்து வந்திருக்கிறோம்! ராகுல் காண்டிக்கும்  நேற்று நடந்த வரலாறு கூடத் தெரியாது என்பதை அடிக்கடி நிரூபித்துக் கொண்டிருப்பது காங்கிரசின் நிகழ்கால சோகம், தலைவிதி!

ராகுல் காண்டிக்கு, அவர் ட்வீட்டிய செய்தியில் இருந்த முட்டாள்தனத்தை, பெண்களுக்கு அவமதிப்பைச் செய்து டில்லி உயர்நீதி மன்றத்தில் வாதிட்டதும் 2010 இல் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்தான் என்பதை பிஜேபியின் MP மீனாட்சி லேகி வந்துதான் ஞாபகப் படுத்த வேண்டியிருக்கிறது! ராணுவத்தில் பெண்களுக்கும் நிரந்தர கமிஷன் அளிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததில், பெண் அதிகாரிகளுக்காக உச்சநீதிமன்றத்தில் வாதாடியவர் மீனாட்சி லேகி என்பது இந்தச் செய்தியின் கூடுதல் விசேஷம்! ராகுல் காண்டிக்கு என்னவிவரம் என்று தெரிந்துகொள்ளாமலேயே உளறுவதென்பது தொடர்கதையாக இருப்பது காங்கிரசின் சாபக்கேடு! அந்த ராஜா காது கழுதைக்காதுதான்! அதை ஒப்புக் கொள்கிற தைரியம், ஒதுக்கிவைக்கிற சாமர்த்தியம் காங்கிரஸ்காரர்களுக்கு இல்லை! காணாமலே போய் விடுவதற்கு இதைவிட வேறென்ன வேண்டும்?

    
சேகர் குப்தா, கழுத்து திருகப்பட்ட கோழிக்குஞ்சு சுற்றிச் சுற்றி தடுமாறுவது போல, காணாமல் போவதற்கு முன் காங்கிரஸ் கட்சியும் தடுமாறிக் கொண்டிருப்பது பற்றி இந்த 22 நிமிட வீடியோவில் கொஞ்சம் பேசுகிறார். காரணம் காங்கிரஸ் கட்சியில் சமீபத்தில் வெடித்துவரும் மோதல்கள்! மத்தியப் பிரதேசத்தில் கமல் நாத்துக்கும் ஜ்யோதிராதித்ய சிந்தியாவுக்கும்  மஹாராஷ்டிராவில் மிலிந்த் தியோராவுக்கும் அஜய் மாக்கனுக்கும், ராஜஸ்தானில் அசோக் கெலாட்டுக்கும் சச்சின் பைலட்டுக்கும் என ஒவ்வொரு மாநிலத்திலும் உரசல்கள் பெரிதாகிக் கொண்டே வருகின்றன. உட்கட்சிப் பிரச்சினையாக, அதாவது  உட்கட்சி ஜனநாயகத்தில் இயல்பாக எழுகிற கருத்துவித்தியாசங்களின் வெளிப்பாடு என்று இதைச் சொல்ல முடியுமா? அல்லது கட்சி, ஒரு உறுதியான தலைமையின் கீழ் ஒன்றுபட்டு நிற்பதற்கு பதிலாக, அப்படி ஒரு தலைமை இப்போது இல்லை என்பதால் உடைந்து உருக்குலைந்துபோவதன் அடையாளமா?

காங்கிரசில் உட்கட்சி ஜனநாயகம் என்பது இதுவரை யாரும் கேள்விப்படாத விஷயம்! அப்படியானால்? காங்கிரசும்  ஒரு கழுத்து திருகப்பட்ட கோழிதானா?  

மீண்டும் சந்திப்போம். 

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!