சண்டேன்னா மூணு! சாணக்யா! ஒரு சினிமா! H ராஜா!

சண்டே கொஞ்சம் relaxed ஆகப்பார்ப்பதற்கு 3 வீடியோ! அரசியல் கன்டென்ட் இல்லாமலா? மூன்றுமே உள்ளூர் அரசியலைத் தொட்டுத்தான் என்பது எப்போதும் போல இந்தப்பக்கங்களில் உள்ள விசேஷம்தான்! முதலில், சாணக்யா தளத்தில் இருந்து சுடச்சுட ஒரு கன்டென்ட். அவர்கள் வெளியிட்ட ஒருமணி நேரத்திலேயே இங்கும்!


கோலாகல ஸ்ரீனிவாஸ்! பத்திரிகையாளர், அரசியல் விமரிசகராகவும் தொலைக்காட்சி விவாதங்களில் அடிக்கடி பார்க்க முடிகிற முகம். பிரசாந்த் கிஷோர் திமுகவுடன் ஒப்பந்தம் போட்டு, தேர்தல் வேலைகளை ஆரம்பித்திருப்பது 2021 தமிழக தேர்தல் களத்தில் என்னமாதிரியான மாற்றங்களைக் கொண்டுவரும்  என்கிற கேள்வி எனக்குள் ஆரம்பத்தில் இருந்தே இருக்கிறது. டில்லி சட்டசபைத் தேர்தல்களில் அரவிந்த் கேஜ்ரிவாலுக்காக வேலை செய்த பிரசாந்த் கிஷோர் & டீம் இப்போது இசுடாலினுக்காக வேலை செய்கிறது என்பது என்ன மாதிரி இருக்கும்?  இந்த 34 நிமிட வீடியோவில் கோலாகல ஸ்ரீனிவாஸ், டில்லி சட்ட சபைத் தேர்தல் முடிவுகளை வைத்துக் கொண்டு, வரவிருக்கும் தேர்தல்களிலும் கூட soft hindutvaவை  முன்னெடுக்காமல் ஜெயிப்பது மிகவும் கடினம் என்று சொல்கிறார். தமிழ்நாட்டுக்கு ஏதாவது செய்தி இருக்கிறதா? இசுடாலினும் அதேபாதையில் போவதற்கான வாய்ப்பு அதிகம் என்கிறார்! திமுக அப்படி அதிரடி மாற்றங்களுக்குத் தயாராக இருக்கிற கட்சி இல்லை என்று தான் இப்போதைய இமேஜ். அதை பிரசாந்த் கிஷோர் வருகிற 14 மாதங்களுக்குள் மாற்றி விடுவாரா? கொஞ்சம் சுவாரசியமான கேள்விதான்! விடை என்னமோ elusive ஆகவே இருக்கிறது!

    
நேற்றைக்குத்தான் வானம் கொட்டட்டும் திரைப்படம் பார்த்தேன். வழக்கமான மணிரத்னம் படம் போல இல்லை. ராதிகா, சரத்குமார் போன்ற திறமையான நடிகர்கள் இருந்துமே ரொம்பவும் சிலாகித்துச் சொல்வதற்கு அதிக இடம் கொடுக்காத blah blah ரகம் தான்! அந்தப் படத்தில் இருந்த அதே கெட்டப்புடன் சரத் குமார் இந்த 38 நிமிட கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில்! ஈவெரா ரஜனிகாந்த் சர்ச்சையை வைத்து எல்லாரிடமுமிருந்தும் கருத்து வந்தாயிற்று என்று நினைத்துக் கொண்டிருந்தவேளையில் ஹரிஹரனுக்கு சரத்குமாரை விட்டுவிட்டோமே என்ற ஞாபகம் வந்துவிட்டதுபோல! அந்த ஒரு கேள்வியை மட்டும் வைத்து ஓட்ட முடியாதல்லவா? சரத் குமார் சமத்துவ மக்கள் கட்சி என்று நடத்துகிறாரே, அதில் இருந்து ஆரம்பித்து ரஜனி, அப்புறம் விஜய் என்று எல்லாவற்றையும் கோர்த்து நிகழ்ச்சியை ஒப்பேற்றி விட்டார்! தந்திடிவி மீது எனக்கு தனிப்பட்ட அபிமானம், பரிதாபம் எதுவுமில்லை! முதலாளிகளை அனுசரித்துப் போகவேண்டிய நிலையில் இருக்கிற ஹரிஹரன் மாதிரி ஊடகக்காரர்களைப் பார்த்துப் பரிதாபப் படாமல் இருக்க முடியவில்லை!

 

இப்படி status ஜம்பமாகப் போட்டுக்கொள்வதற்காகவே நடத்திய  நேர்காணல் மாதிரி இந்த 32 நிமிட நிகழ்ச்சி இருந்தது! நேர்காணல் என்றால் மேலே விழுந்து பிராண்டுவது அல்ல என்பதை மதன் ரவிச்சந்திரன் எப்போது புரிந்துகொள்ளப்போகிறார் என்பது எனக்குத் தெரியவில்லை. கேட்ட கேள்விக்கு பதில் வருகிறதா என்பதைப் பொறுத்திருந்து கவனித்துவிட்டு அப்புறம் அடுத்தகேள்வி அல்லது துணைக்கேள்வி கேட்பது என்பதான நல்ல நடைமுறையை பின்பற்றுவது எப்போது நம்மூர் ஊடகக்காரர்களுக்கு கைவரும்?

மீண்டும் சந்திப்போம். 

4 comments:

  1. ஊடகக்காரர்கள் தங்கள் பிழைப்பைப் பார்க்க வேண்டுமே...  இப்படி கான்ட்ரவர்ஸி செய்து இமேஜ் ஏற்றிக்கொண்டால் ஹிட் கூடும். காசு வரும்!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஸ்ரீராம்!

      இங்கே மூன்று வீடியோக்களிலும் ஊடகங்களின் முகம் ஒவ்வொருவிதமாக இருக்கிறது. controversy ஜனங்களுக்கு மிகவும் பிடித்தமானது என்பதால்தான் ஊடகங்களே அந்த அக்கப்போரைக் கையில் எடுக்கிறார்கள்! மேலே எப்படிக் கொண்டுபோவது என்பது தெரியாமல் தடுமாறுவதுகூட இந்த 3 வீடியோக்களில் புலப்படுகிறதே, அதைக் கவனிக்க முடிகிறதா?

      Delete
  2. அரசியல்வாதிகள் ஊடகங்களை நடத்துவதால் ஏட்டிக்குப் போட்டியாக இப்படி செய்கிறார்கள். நாமும் அதற்கு ஆதரவு வழங்குகிறோமே?

    தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
    ----- முதல் ஓலை பதிவில் பரீட்சார்த்தமாக ஐந்து வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது சண்டேன்னா மூணு! சாணக்யா! ஒரு சினிமா! H ராஜா! பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இந்த நேரத்தில் மிகவும் அவசியமான ஒரு நல்ல முயற்சி. சிகரங்களைத்தொட நல்வாழ்த்துகளுடன்!

      -கிருஷ்ணமூர்த்தி S.

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!