#ஊர்வம்பு ஒரு பிரிட்டிஷ் "கோமகனின் காதல்" ஒரு புத்தகம்!

பொதுவாக காதல் திருமணங்கள் என்றாலே கூடவே சர்ச்சைகளும் சேர்ந்தே வரும்! ராஜகுடும்பத்துக் காதல் என்றால்? அதுவும் தலைக்கனம் பெருத்த பிரிட்டிஷ் அரச குடும்பத்துக் காதல் என்றால் தனியாகக் கேட்கவே வேண்டாம்! பிரிட்டிஷ் ராணி எலிசபெத்தின் பேரன், டயானாவின் இரண்டாவது மகன் ஹாரி ஒரு அமெரிக்க டிவி நடிகையைத் திருமணம் செய்து கொண்டதில் ராஜகுடும்பத்தில் ஏக சலசலப்பு! அதற்கு நிறையக் காரணங்கள்! சமீபத்தில் ஹாரி - மேகன் தம்பதியினர் அரச குடும்பத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்ததில் இருந்து பிரிட்டிஷ் ஊடகங்களின் ஹாட் டாபிக்காக இந்தத் தம்பதிகளைச் சீண்டுவது இருக்கிறதென்றால் என்ன சொல்வீர்கள்?

   வீடியோ 26 நிமிடம் 
பழைய கதையை ரீவைண்ட் 
செய்துபார்ப்பதற்காக 

மேகன் மார்க்கலை நக்கலடிக்கிற விதமாக பிரிட்டிஷ் ஊடகங்கள் இந்தத் தம்பதி விவதாரங்களை #Megxit என்றே குறிப்பிடுவது கொஞ்சம் அதீதமாகத் தெரிகிறது இல்லையா? ஆனால்  அரசகுடும்பத்தைத் தங்களுடைய அடையாளமாகவும் வரலாற்றுப்பெருமிதமாகவும் நினைக்கிற ஒருபகுதி பிரிட்டிஷ் மக்களுடைய மன வக்கிரம் அப்படிப்பட்டது. அதற்கேற்ற மாதிரியே விக்டோரியா முதல் இப்போதைய ராணி இரண்டாம் எலிசபெத் வரையில் பழமைவாதத்தைக் கட்டிக் காப்பாற்றி வருவதை முதலில் உடைத்தவர் ஹாரியின் அம்மா (இளவரசி) டயானா! பழம்பெருமைக்காக ஒரு பிரபுத்துவக் குடும்பத்தில் பிறந்த டயானாவை, காதல் இல்லாமலே கல்யாணம் செய்து கொண்ட இளவரசர் சார்லசுடைய இமேஜை உடைத்த கதை தெரியும் இல்லையா? டயானா அரசகுடும்பத்தின் பெருமையை உடைக்கிற மாதிரி ஒரு இஸ்லாமியரைத் திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்திகள் வந்து கொண்டிருந்த சமயத்தில், சௌகரியமாக ஒரு கார் விபத்தில் சோலியை முடித்துவிட்டதாகவும் அந்த நாட்களில் பரபரப்பாகவும் பேசப்பட்டதுண்டு. 

ஒருவர் கேட்கிறார்: தாரளமயமாக்கல், உலகமயமாக்கல் என்றால் என்ன?

அதற்குப் பதில் வருகிறது பாருங்கள்!! "இளவரசி டயானாதான்!"

எப்படி என்று மேலும் விளக்கம் கேட்பதற்கு முன்னாலேயே வருகிறது.

"ஒரு பழமைவாதப் பெருமை பேசும் ஆங்கிலேய அரச குடும்பத்துப் பெண், இளவரசி தன்னுடைய எகிப்துக் காதலனோடு, பிரெஞ்சு  சுரங்கப்பாதையில் டச்சு எஞ்சின் பொருத்திய ஜெர்மன் காரை
பெல்ஜியத்தை சேர்ந்த டிரைவர் ஸ்காட்ச் விஸ்கியைக் குடித்துவிட்டு ஓட்ட, இத்தாலியப் பத்திரிகையாளர் துரத்த எங்கேயோ எப்படியோ இடிபட்டு விபத்தாகிக் காயப்பட்டு,  அமெரிக்க டாக்டர் பிரேசிலிய மருந்தைக் கொடுத்து சிகிச்சை அளித்தும் பயனில்லாமல் இறந்து போனாரே அது தான்!"

தாராளமயம், உலகமயம் என்பதை இதை விட சுருக்கமாக, பொருத்தமாக சொல்லிவிட முடியாது என்று தான் தோன்றுகிறது.


இதை இந்தப்பக்கங்களில் எழுதி ஒன்பதே கால் வருடங்கள் ஆகிவிட்டன!
 
இங்கே உலகமயம்,தாராளமயம்  என்றால், எங்கோ ஒரு வெளிநாட்டில் பிறந்தவர்  இங்கே வாழ்க்கைப்பட்ட  ஒரே காரணத்தால், அந்தக் குடும்பத்துக்குக் கூஜா தூக்குவதற்கென்றே ஆட்களும் அதிகாரிகளில் சிலரும் இருப்பதால் கட்சி ஆட்சி இரண்டையும் கைப்பற்ற முடிகிறது.அந்தக் குடும்பத்தில் பிறந்த ஒரே காரணத்தால் அனுபவமே இல்லாத ஒரு சிறுபிள்ளை, வருங்காலப் பிரதமராக சித்தரிக்கப்படுகிறார். இத்தனை தாராளம், உலகமயம் வேறெந்த நாட்டில் நடக்கும்? இதுவும் கூட அப்போதே என்னை நானே கேட்டுக் கொண்டதுதான்! பதில் சொல்லச் சிரமப்படவேண்டாம் தோழமைகளே!😂😉  


ஆனந்த விகடனில் சாவி என்கிற சா.விசுவநாதன் தொடராக எழுதி 1969 இல் மெர்க்குரி புத்தகக் கம்பெனி வெளியீடாக புத்தகமாகவும் வந்ததே, நினைவிருக்கிறதா? இது தொடராக வந்தநாட்களில், வேறு ஊர்வம்பு எதுவும் கிடைக்காமல் இருந்ததனால்   வரவேற்பு இருந்திருக்கும்! முதல் பதிப்பும் அதே காரணத்தால் விற்றிருக்கலாம்! அல்லயன்ஸ் வெளியீடாக மறுபடியும் முன்னூற்றுச் சொச்சம் பக்கங்களில், 131 ரூபாய்க்குக் கிடைக்கிறது. அல்லயன்ஸ் பதிப்பகம் என்ன நம்பிக்கையில் இந்தப்புத்தகத்தை மறுவெளியீடு செய்தார்கள் என்பது இப்போதுகூட எனக்குப் புரியவில்லை!

கதை என்னவோ பிரிட்டிஷ் அரச குடும்பத்தில் சுமார் 86 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த கதைதான்! எட்டாம் எட்வார்ட் என்று பிரிட்டனின் அரசனாக முடிசூட்டிக் கொண்ட ஒரு கோமகன்! இப்போதைய 2ஆம் எலிசபெத் ராணிக்குப் பெரியப்பா. Edward VIII, later Prince Edward, Duke of Windsor (Edward Albert Christian George Andrew Patrick David; 23 June 1894 – 28 May 1972), was King of the United Kingdom and the Dominions of the British Empire, and Emperor of India, from 20 January 1936 until his abdication on 11 December of same year. இம்சை அரசன் 23ஆம் புலிகேசிக்கு சேவகன் துதி பாடுகிறமாதிரி ரொம்பவும் இம்சையாக இல்லை? 

என்ன செய்வது கோமகன் என்றாலே இம்சைதானே! இந்த எட்டாம் எட்வார்டுக்கு ஒரு அமெரிக்கக் காதலி!  இரண்டுமுறை விவாகரத்தான வாலிஸ் சிம்ப்சன் என்கிற பெண்மணியைத் திருமணம் செய்து கொள்ள விரும்பியபோது ஒரு அரசியல் சாசனச் சிக்கல், இடியாப்பச் சிக்கலாக எழுந்தது. காரணம் இங்கிலாந்தில் அரசன் அல்லது அரசி தான் இங்கிலாந்து சர்ச்சின் தலைமைப்பொறுப்பையும் வகிப்பவர். விவாகரத்தானாலும் இரு மாஜி கணவர்கள் உயிரோடிருக்கும்போது, அந்தப்பெண் நாட்டின் அரசி ஆகமுடியுமா என்ற சர்ச்சை ஒருபக்கம், நாடாளுமன்ற எதிர்ப்பு இன்னொருபக்கமாக ஒரு இடியாப்பச் சிக்கல்! விதவை மறுவிவாகம் செய்துகொள்வதற்குக்  கூட உலகத்துக்கே நாகரிகத்தைக் கற்றுக் கொடுத்ததாகச்  சொல்லிக்கொள்ளும் இங்கிலாந்து சர்சே  தடையாக இருந்தது என்பது திராவிட வரலாறு மட்டும் படித்தவர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம்! 

எட்டாம் எட்வார்டாக அரசனாகவும் இருந்து கொண்டு காதலியைத் திருமணம் செய்துகொள்ளமுடியாது என்று உறுதியானவுடன், அரசபட்டத்தைத் துறந்து, காதலிக்கு இரண்டாவது கணவனிடமிருந்து விவாகரத்து கிடைக்கிற வரை காத்திருந்து 1937 ஜூனில் திருமணம் செய்து கொண்ட காதலுக்காக அரசையே துறந்த அந்தத் தியாகம்  சாவியை ரொம்பவுமே கவர்ந்து விட்டது போல! காதலுக்கு என்ன மரியாதை என்று வியந்து மயங்கி இதையும் ஒரு தொடராக எழுதினார் என்பது இப்போது திரும்பிப்பார்க்கையில் மிகவும் கேலிக்குரியதாகத் தோன்றுவதில் வியப்பென்ன? அந்த நாட்களில் வேறு ஊர்வம்பு எதுவும் கிடைக்கவில்லை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறதா இல்லையா!?
      
கோமகன் காதல் என்றாலே கொஞ்சம் வில்லங்கம் கொஞ்சம் ஊர்வம்பு என்ற கலவையாக இருப்பது பிரிட்டிஷ் ராஜ குடும்பம் ஒன்றுதான்! உலகில் வேறு பல ராஜகுடும்பங்கள் இருந்தாலும் இந்தக் குடும்பத்தைப் போல, அந்தரங்க விஷயங்கள் ஊடகங்களில் அலசிக் காயப்போட்டது மாதிரி வேறெதுவும் இல்லை!


ஊர்வம்பு பொரணி பேசுவதில் பிரிட்டிஷ் டேப்ளாய்ட்  The Sun இற்கு ஈடு இணை ஏதுமில்லை. இங்கே அரச குடும்பத்தின் ஆஸ்தான புகைப்படக்காரர் ஆர்தர் எட்வார்ட்ஸ், ஹாரி மறுபடியும் அரசகுடும்பத்திற்குத் திரும்பிவிடுவார் என்று அடித்துச் சொல்கிறார்! இதை மேலும் விவரித்துச் சொல்லப்போவதில்லை!

மீண்டும் சந்திப்போம்.     
   

4 comments:

  1. வலம்புரி ஜான் எழுதியுள்ளார். அசிங்கத்தின் தொடக்கமும் முடிவே இல்லாத ரகசியங்களும்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஜோதி ஜி!

      வலம்புரி ஜான் எழுதியதை நான் படித்ததில்லை. என்ன எழுதினார் என்பதை வாசிக்காமல் வெறும் ஒன்லைனரை வைத்து அவரை அல்லது அவர் எழுதியதை மதிப்பிட விரும்பவில்லை. கிண்டில் வாசிப்பைப் பரிச்சயம் செய்துகொள்வதற்காக தரவிறக்கம் செய்த புத்தகங்களில் சாவியின் நவகாளி யாத்திரை புத்தகமும் ஒன்று. மனிதர் மகாத்மா காந்தி மகிமையில் மயங்கி, ஒரு பிக்னிக் போய் வந்தமாதிரி, வரலாற்றின் மிகக்கொடூரமான படுகொலைகளை சர்வசாதாரணமாகக் கடந்து எழுதிய குப்பை அது.

      அதேமாதிரி கோமகனின் காதல் கூட பிரிட்டிஷ் ராஜ குடும்பத்தை அண்ணாந்து பார்த்து, காதலுக்காக மணிமுடியைத் துறந்த அரசன் என்று போற்றித்திருநாமம் பாடாதகுறையாக எழுதிய புத்தகம். இரவல் வாங்கிப் படித்துவிட்டுத்தான் இந்தப் புத்தகத்தைத் தொட்டு எழுதியதே! மிகைப்படுத்துதல் என்பது இயற்கை தான் என்றாலும் இந்த அளவுக்கு பிரிட்டிஷ் ஜனங்களே கூட மிகைப்படுத்தி எழுதி நான் பார்த்ததில்லை.

      Delete
  2. பெரிய அரச குடும்பங்களின் அந்தரங்க கதைகளை சொல்லாவிடினும் நம் இந்திய நிஜாம் போன்ற சமஸ்தானங்கள் கதையை முகில் 'அகம் புறம் அந்தப்புரம்' என்கிற புத்தகமாக எழுதி இருக்கிறார்!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஸ்ரீராம்!

      இந்த ரெண்டுங்கெட்டான் எழுத்தாளர் எழுதிய இரண்டுபுத்தகங்கள் பயண சரித்திரம், உணவு சரித்திரம் --என் மகன் வாங்கி என்தலையில் கட்டிவிட்டுப்போயிருக்கிறான். அதைப்படிப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும் என்கிற மாதிரி ஒரு அலுப்பைத் தருகிற எழுத்து. அகம் புறம் அந்தப்புரம் தொடராக வந்தநாட்களில் பார்த்து விட்டு ஒதுக்கிய எழுத்து. அவருடைய முகநூல் பக்கங்களில் பார்த்தால், ரெண்டுங்கெட்டான் என்று சொல்வதற்கான காரணம் புரியும்.

      அரசனோ சம்சாரியோ இருவருமே ஆசாபாசங்கள் நிறைந்த மனிதர்கள் மட்டும் தான்! புனிதர்கள் அல்ல! அவர்களுடைய அந்தரங்கங்களைப் பொதுவெளியில் கதைப்பது ஒருவகை ஊர்வம்பு மட்டும் தான்! washing the dirty linen in the public என்ற வழக்குச் சொல்லை ஆரம்பித்து வைத்ததே இங்கிலாந்தின் Tudor வம்சத்து அரசர்கள் காலத்தில் இருந்து தான் என்பது பிரிட்டிஷ் வரலாற்றின் கேவலமான அம்சம்! எதனால் தெரியுமா? அரசனும் அரசியும் உறவு கொள்வதற்கு முன்னால் பாதிரிகள் கூடி படுக்கையறையில் ஜெபம் செய்வதும், மறுநாள் காலையில் படுக்கையில் உறவுகொண்டதற்கான சுவடுகள் இருந்ததா என்று பரிசோதனை செய்வதில் இருந்து உண்டான வழக்கு அது.

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!