சண்டேன்னா மூணு! #கதம்பம் #அரசியல் #புத்தகம்

சென்னையில் இருந்து மனைவியின் உறவினர் ஒருவர் இன்று காலை பேசினார். அவருடைய மகன் சிங்கப்பூரில் இருக்கிறான். கரோனா வைரஸ் பற்றி என்னென்னமோ சொல்கிறார்களே என்று தாய் கவலையோடு கேள்வி கேட்டதற்கு மகன் அதெல்லாம் ஒன்றுமில்லை. நான் பத்திரமாகத்தான் இருக்கிறேன் என்றதற்கு மேல் ஒன்றும் சொல்லமாட்டேன் என்கிறான் என்று திருமதியிடம் ஒரே புலம்பல்! ஆக செய்திகளில் மட்டுமே கேள்விப்பட்டிருந்த கரோனா வைரஸ் பீதி இன்று வீடு வரை வந்துவிட்டது.


சிங்கப்பூர் பிரதமர் லீ இன்று வெளியிட்டிருக்கிற இந்த வீடியோவில் இந்தப்புதிய கரோனா வைரஸ், சீனாவில் இருந்து 17 வருடங்களுக்கு முன் பரவிய SARS (Severe Acute Respiratory Syndrome) வைரசை விட குறைவான ஆபத்து உள்ளதுதான், அச்சப்படத் தேவையில்லை என்று சொன்னதோடு 3 எளிமையான முறைகளில் தங்களைத் தாங்களே ஒவ்வொருநாளும் பரிசோதித்துக் கொள்ளவேண்டும் என்கிறார். மருத்துவ அவசர நிலைக்கு ஆயத்தமாக சிங்கப்பூர் தயாராக இருப்பதாகவும் சொல்கிறார். தைரியமாக இருங்கள்! இதுதான் மேலே 9 நிமிட வீடியோவின் சாரம்.


ஆனால் தற்போதைய செய்திகளில் SARS வைரஸ் தொற்றை விட ஐந்து மடங்கு அதிகமாக, இன்னும் பரவிக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது. SARS வைரஸ் தொற்றில் உலகமெங்கும் இறந்தவர்கள் 774 என்றால் இப்போது சீனாவில் மட்டும் 811 பேர் உயிரிழந்ததாக இன்று காலைச்செய்திகளில் தெரிகிறது. சீனா தவிர 25 நாடுகளில் கரோனா வைரசின் பாதிப்பு பரவி இருப்பதில், சீனாவுடனான எல்லைகளை பல நாடுகள் மூடிவிட்டன. பயணங்கள் தடைசெய்யப்பட்ட நிலையில் இந்தவருடத்தின் முதல் காலாண்டு, வர்த்தகம்,  உலகப்பொருளாதாரத்தில் பாதிப்புடன் இருக்கும் என்று சொல்கிறார்கள். எங்கும் எதிலும் தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்த சீன அதிபர் ஷி ஜின்பிங் கரோனா வைரஸ் பரவ ஆரம்பித்ததும் அதை நிறுத்திவிட்ட மாதிரி, முக்கியமான தலைவர்கள் எல்லோரும் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள், கொஞ்சம் கேலியாகவே வருகின்றன. ஆனால் சார்ஸ் வைரஸ் பிரச்சினையில் 17 ஆண்டுகளுக்கு முன் சீனாவுக்கேற்பட்ட இழப்பு சுமார் 40 பில்லியன் டாலர்கள், உலகப்பொருளாதார வலிமையில் ஐந்தாமிடத்தில் இருந்த சீனா, அடுத்த ஏழே ஆண்டுகளில் உலகின் 2வது மிகப்பெரிய பொருளாதார சக்தியாகவும் உருவெடுத்தது. இப்போதும், கரோனா வைரஸ் பிரச்சினை சீனாவின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்காது என்பது மட்டும் உறுதி. 

வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றம் பதவி உயர்விலும் கூட இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமைகளில் வராது என்பதைத் தெளிவு படுத்தும் தீர்ப்பொன்றை அளித்திருக்கிறது. இங்கே ரஜனிகாந்தை வைத்து மட்டுமே அலப்பறை செய்துவரும் சமூகநீதி ஆசாமிகள் எவர் கண்ணிலும் படவில்லையா?  அல்லது இது ஏழெட்டு ஆண்டுகளாக நடந்து கொண்டிருந்தது தானே! வெற்றுக்கூச்சல், அரசியல் அழுத்தங்களிலேயே சாதித்துக்கொள்வோமே என்கிற மிதப்பா? இந்தத்தீர்ப்பு சமூகநீதிக்கு எதிரானதா, இல்லையா?  எனக்குத் தெரியவில்லை! தெரிந்தவர் கொஞ்சம் தெளிவு படுத்துங்களேன்!  
     
 
முகில் எழுதிய பயண சரித்திரம் புத்தகத்தை நேற்றிரவு மறுபடி வாசிக்க எடுத்துக் கொண்டேன். மகனுடைய புத்தக சேகரத்தில் ஒரு பகுதி என்னிடம் வந்ததில் இதுவும் உணவு சரித்திரமும் இருந்தன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் வாசிக்க ஆரம்பித்து, பாதியிலேயே நிறுத்திய புத்தகங்கள் இவை. என்ன காரணத்தால் ஈடுபாடில்லாமல் நிறுத்தினேன் என்பதே நினைவுக்கு வரமாட்டேனென்கிறது. இந்த வருட வாசிப்புப் பட்டியலில், இப்படி அரைகுறையாக விடுபட்ட புத்தகங்களையும் சேர்த்துக் கொண்டே ஆக வேண்டும்!  இங்கேயும் ஒரு நினைவூட்டலுக்காக.

மீண்டும் சந்திப்போம்.  

2 comments:

  1. எழுதிய பையன் அதி தீவிர மோடி எதிர்ப்பாளர்.

    ReplyDelete
    Replies
    1. இடதுசாரிக் கிறுக்கும் கூட!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!