இட்லி வடை பொங்கல்! #60 டொனால்ட் ட்ரம்ப்! பட்ஜெட்! ரெண்டு முருகன்!

டொனல்ட் ட்ரம்ப் மீதான தகுதி நீக்க (impeachment) விசாரணை அமெரிக்க செனெட்டில் வருகிற வார மத்தியிலேயே ஆன்டி க்ளைமேக்சாக தோற்று விடும் என்பது இப்போது நிச்சயமாகி விட்டது. கூடுதல் சாட்சிகளை விசாரிக்கவேண்டும் என்று டெமாக்ரட் கட்சியினர் தொடர்ந்து முயற்சித்தாலும், நடக்காது என்றே தெளிவாகிவருகிறதாம்! ட்ரம்ப் தரப்பில் ஏகப்பட்ட அழுகுணி ஆட்டங்கள் நடந்தன என்பதும் அமெரிக்க ஜனங்களுக்குத் தெளிவாகவே தெரிகிறது! முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனுடைய வெள்ளைமாளிகை நினைவுகள் புத்தகமாக வெளிவருவதற்கு வெள்ளைமாளிகை தடை போட்டிருக்கிறது. அவர் உட்படப் புதிய சாட்சிகளை விசாரிக்க  வேண்டும் என்று டெமாக்ரட்டுகள் தலை கீழாக நின்று பார்த்தும், கதைக்காகவில்லை!


100 உறுப்பினர்கள் கொண்ட செனெட்டில் தற்போது ரிபப்லிகன்  53 டெமாக்ரட்டுகள் 47 என்றிருப்பதில், தகுதி நீக்கம் செய்யப்பட மூன்றில் இரண்டுபங்கு ஆதரவு வேண்டும். இல்லை என்பது தெளிவு. புதிய சாட்சிகள் விசாரிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் ஜெயிப்பதற்கு ஆளும்  ரிபப்லிகன் தரப்பில் இருந்து 4 பேர் ஆதரவு வேண்டும். அதுவும் இல்லை என்பதே இந்த தகுதிநீக்க விசாரணை போகிற திசைகாட்டும் கள யதார்த்தம். The Democrats’ push for more witnesses and documents failed 49-51, with only two Republicans joining Democrats in favor. A vote on the verdict is planned for Wednesday.சாட்சிகளை தடை செய்து டொனால்ட் ட்ரம்ப் தகுதிநீக்கக் குற்றச்ச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப் படுகிறார் என்கிறது இந்தச் செய்தி.


நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், நிதிநிலை அறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்து பேசிக் கொண்டிருக்கிறார். இதன் மீது முழுமையான விவாதங்கள், நிதியமைச்சரின் பதில் இதற்குப் பின்னால் இதை இங்கே பேசுவது தான் சரியாக இருக்கும். கொஞ்சம் காத்திருந்து, விவரங்களைத் தெரிந்து கொண்டு எழுத ஆசை. பார்க்கலாம்!  இருந்தாலும் சுவாரசியத்துக்காக , சென்ற ஆண்டு நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யும்போது புறநானூற்றில் இருந்து யானை புக்க புலம் போல என்ற பிசிராந்தையார் பாடல் வரியை மேற்கோள் காட்டியது போல இன்று  அவ்வையின் ஆத்திசூடியில் இருந்து    பூமி திருத்தி உண் என்ற வரியைச் சொல்லி விவசாயத்திற்கான நிதி ஒதுக்கீட்டை இருமடங்காக உயர்த்தி அறிவித்திருக்கிறார். காளிதாசனுடைய ரகுவம்ச காவியத்தில் இருந்தும் மேற்கோள் காட்டி கடல் நீரைச் சிறுகச் சிறுக உறிஞ்சும் சூரியன், நிலப்பகுதிக்கு மழையாகப் பொழிவது போலச் சொல்லப்படும் உவமையைச் சொல்லி, தனிநபர் வருமான வரி விகிதங்களில் கணிசமான வரிக்குறைப்பை அறிவித்திருக்கிறார்.


துரைமுருகனுடைய நக்கல் என்னமாதிரி வெளிப்படும் என்பதை எவராலும் ஊகிக்க முடியாது. பொடி வைத்து பேசுகிறாரா வெடி வைத்துப் பேசுகிறாரா என்பதே புரியாமல் சமயங்களில் திமுகவினரே தடுமாறுவதும் தெரிந்த விஷயம்தான்! திருச்சியில் நேற்று நடந்த உள்ளாட்சிமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் மத்தியில் பேசவந்தவர் "கருணாநிதி கூட முதலமைச்சர் ஆகிய பின்பே அகில இந்திய தலைவர் ஆனார் என்றும், ஆனால் இன்று ஒரு எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் போதே ஸ்டாலின் தேசியத்தலைவராக உருவெடுத்துள்ளார்" "கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு வராத வகையில் வாக்குகளை சிதறவைத்த கட்சிகளை இன்று தனது ராஜதந்திரத்தால் ஸ்டாலின் நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறார்" என்றெல்லாம் பேசியிருப்பதை  எப்படி அர்த்தப்படுத்திக் கொள்வது? 

இசுடாலின் முதலமைச்சராக ஆகாமலேயே தேசியத் தலைவராக ஆகிவிட்டார் என்பதை இன்றைய காமெடியாக எடுத்துக் கொள்ளலாமா? க்கள் லக் கூட்டணியில் இருந்து இப்போது திமுகவுடன் ஒட்டிக் கொண்டிருக்கிற உதிரிக் கட்சிகளைச் சீண்டுகிறார் என்று எடுத்துக் கொள்ளலாமா? தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்! 

மீண்டும் சந்திப்போம். 

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!