சண்டேன்னா மூணு!சந்திரபாபு நாயுடு! ஜெகன் மோகன் ரெட்டி! நரேந்திரமோடி

குண்டூரில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதை இங்கே நேரலையில் இப்போதுதான் பார்த்து முடித்தேன். மோடி மீதான பயமே இங்கே சந்திரபாபு நாயுடு உட்பட பல உதிரிக்கட்சிகள் எல்லாம்  மோடி எதிர்ப்பு, மோடி வெறுப்பு என்று இப்படி  விறைத்துப் போய்க் கிடப்பதற்கான முழுக் காரணம் என்பது நாளுக்குநாள் தெளிவாகிக் கொண்டே, 2019 நாடாளுமன்றத் தேர்தல் களம் தயாராகி வருகிறது.

சந்திரபாபு நாயுடுவும் இங்கே திராவிடங்கள் பாணியில் கறுப்புக்கொடி, கறுப்பு பலூன். மோடியே திரும்பிப்போ பேனர்கள் என்று ஆரம்பித்துவிட்டார்.

குண்டூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, நம் நாட்டு சம்பிரதாயத்தில் திருஷ்டி படாமல் இருப்பதற்கு கருப்பு பொட்டு வைப்பார்கள். அதுபோல எங்கள் கட்சிக்கும் எனக்கும் எங்கள் ஆட்சிக்கும் திருஷ்டி ஏற்படாமலிருப்பதற்காக சந்திரபாபு நாயுடு கருப்பு பலூன் விட்டிருக்கிறார்! அவருக்கும் அவர் கட்சிக்கும் நான் நன்றி செலுத்துகிறேன் என்று பேசினார் என்று விரிவாகச் சொல்கிறது தினசரி 

ஆனாலும் கூட சந்திரபாபு நாயுடுவின் கலக்கம் மிக வெளிப்படையாகவே தெரிகிறது. எதிர்வரும் தேர்தல் அவரைப் பொறுத்தவரை வாழ்வா சாவா போராட்டம்! 1995 இல் மாமனார்  N T ராமாராவிடமிருந்து தெலுகு தேசம் கட்சி, ஆட்சி இரண்டையும் ஹைஜாக் செய்த சாமர்த்தியசாலி இப்போது விழிபிதுங்கி நிற்கிறார். YS ராஜசேகர ரெட்டி மகன்  ஜெகன் மோகன் ரெட்டி வேறு உள்ளூரில் கடுமையான போட்டியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்!

ஆக, உதிரிக்கட்சிகள் எல்லாம் சேர்ந்து மெகா கூட்டணி கனவையே கூடத்  தனித்தனியாகத்தான் காணுகிற பரிதாபம் நன்றாகத் தெரிகிறதா?
நரியைவிடவும் தந்திரசாலியான சந்திரபாபு நாயுடுவைப் பற்றி ஆந்திராவுக்கு வெளியே அதிகம் தெரிந்திருக்காது. இவரும், ராஜசேகர ரெட்டியும் ராயலசீமாக்காரர்கள்! இருவரும் 1978 இல் காங்கிரஸ் MLA க்களாகி, எண்பதுகளின் ஆரம்பத்தில் T. அஞ்சையாவின் அமைச்சரவையில் மந்திரிகளாகவும் நெருங்கிய நண்பர்களாகவும், சஞ்சய் காந்தியின் அதிதீவிர விசுவாசிகளாகவும் இருந்தது எத்தனைபேருக்கு இங்கே தெரிந்திருக்கும்? நினைவு இருக்கும்?

காங்கிரஸ் பொதுச்செயலாளராக இருந்த ராஜீவ் காந்தி, விமானநிலையத்தில் ஆந்திர முதல்வராக இருந்த, சொந்தக்கட்சியின் அஞ்சையாவை அவமதித்த போது NT ராமாராவ் கொதித்தெழுந்தார். மா தெலுகு ஆத்ம கௌரவம் கோசம் என்று தெலுகு தேசம் கட்சியை ஆரம்பித்தபோதுகூட, சந்திரபாபு நாயுடு,
காங்கிரஸ் கட்சியில் தான் இருந்தார். 1983 தேர்தலில் தெலுகு தேசம் கட்சி வேட்பாளரிடம் தோற்றபிறகே மாமனார் கட்சியில் வந்து ஒட்டிக் கொண்டார். அதன் பிறகே நாயுடுவும், ராஜசேகர ரெட்டியும் எதிரெதிர் துருவங்களானார்கள்!

1994 இல் மாமனார் மந்திரிசபையில் நிதியமைச்சராக இருந்த சந்திரபாபு நாயுடு, NTR லட்சுமி பார்வதியைத் திருமணம் செய்துகொண்டபிறகு, மாமனாரை ஆட்சியிலிருந்து கவிழ்த்து 1995 இல் ஆந்திர முதல்வர் ஆனார். தேவே கவுடா, IK குஜ்ரால் பிரதமராக இருந்த தருணங்களில் கூடவே ஒட்டிக்கொண்டிருந்த நாயுடு, பிறகு வாஜ்பாயி அரசில் ஒட்டிக் கொண்டு எப்போதும் வெளிச்சத்தில், செல்வாக்கு மிகுந்தவராகவும் இருந்தார்.        

இப்படி ஹைடெக் அரசு,ஊழல் இரண்டிலும் நாயுடு கொடிகட்டிப் பறந்த வேளையில்,     ராஜசேகர ரெட்டி விவசாயிகள் பிரச்சினையில் அரசியல் பாதயாத்திரை நடத்தி ஆட்டையைக்கலைத்தார்! ஆட்சியைப் பிடித்தார்! 2004 தேர்தலில் அசெம்பிளி, நாடாளுமன்றம் இரண்டையும் காங்கிரஸ் கைப்பற்றியது.   

நரேந்திர மோடி குண்டூரில் பேசுகையில் சந்திரபாபு நாயுடு மாமனார் முதுகில் குத்தி கட்சி, ஆட்சி இரண்டையும் ஹைஜாக் செய்த பழைய கதையை ஞாபகப் படுத்தியிருக்கிறார்.  

பழைய நினைவுகள் மட்டுமல்ல, அரசியலில் நாயுடு அடித்த அந்தர்பல்டிகளும் சேர்ந்தே இப்போது அவரை வாழ்வா சாவா என்று வாட்டிக் கொண்டிருக்கிறது  

தேர்தல்களம் தயாராகிக் கொண்டே வருவது தெரிந்த விஷயம்தான்! கேள்வி, நாம் தயாராகிவிட்டோமா? என்பதுதான்!
        

1 comment:

  1. பலவற்றை அழகாக கோர்க்கிறீர்கள்!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!