மண்டேன்னா ஒண்ணு! அரசியல்!

முதலில் ஒரு பாசிட்டிவ் செய்தி! இந்த வீடியோவைப் பார்த்த பிறகு மூளை வளர்ச்சி 2% தான், கருவைக் கலைத்துவிடுங்கள் என்று டாக்டர்கள் பரிந்துரைத்ததையும் மீறி, மூளைவளர்ச்சி இல்லாத பார்க்கும் கேட்கும் திறனில்லாத குழந்தையைப்  பெற்றெடுத்ததுடன் நம்பிக்கை, மருத்துவர்கள் துணையுடன்  ஆளாக்கி வளர்த்திருப்பதில் தாய்மையின் கருணை எப்படிப்பட்டது என்று வெளிப்பட்டதில் உருகி மெய் சிலிர்த்தேன்!பொய்யில்லை!

நல்ல செய்தியாக ஒன்றைப் பார்த்துவிட்டு, அடுத்து அரசியல் நாராசங்களையும் பார்க்க வேண்டிவருவதில் வெட்கம் தான்! என்ன செய்வது? அரசியல்வியாதிகள் அவரவர் சௌகரியத்துக்கும் சுயநலத்துக்கும் விஷக்கருத்தை விதைத்துக் கொண்டே போவதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருந்துவிட முடிகிறதா? 

ஒரு மரத்தின் தன்மை இன்னதென்று அது கொடுக்கும் கனிகளால் அறியப்படும் என்கிறது விவிலியம்! நேரு, இந்திரா, சஞ்சய், ராஜீவ் அடுத்து சோனியா, ராகுல், பிரியங்கா அப்புறம் ராபர்ட் வாத்ரா என்று விரியும் அரசியலின் வேர் எது? உண்மையில் நேரு பாரம்பரியம் எப்படிப்பட்டது? முகநூலில் ஸ்ரீதர் சுப்பிரமணியம் என்பவர் ஆகஸ்ட் 6, 2014 இல் எழுதிய இந்தப் பகிர்வு கொஞ்சம் விவரங்களை இன்றைய தலைமுறை அறிந்துகொள்ளச் சொல்கிறது. 


over to ஸ்ரீதர் சுப்பிரமணியம்
இந்திரா காந்தியை சிலாகித்து நண்பர் ஒருவர் பதிவிட அவர் பதிவுக்கு நிறையப் பேர் 'Iron Lady' என்றெல்லாம் பின்னூட்டம் இட்டிருக்கிறார்கள். யோசித்ததில் நம்மில் நிறையப் பேர் இந்திராவை அப்படித்தான் நினைத்துக் கொண்டு இருக்கிறோம் என்று தோன்றியது. ஒரு தீரமான, வீரமான, 'தேசப் பெருமையை' காப்பாற்றிய பெண்மணி என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் அவர் உண்மையில் எப்படிப்பட்ட பிரதமர்?
இந்திரா காந்தி
=============
இந்திரா காந்திக்கு இப்போதுதான் இரும்புப் பெண்மணி பட்டம் கிடைத்திருக்கிறது. அறுபதுகளில் அவருக்கு இருந்த பட்டப் பெயர் ‘கூங்கி குடியா’, அதாவது ‘ஊமைப் பொம்மை’ என்பதுதான். படிப்புக்கும் அறிவுக்கும் பெயர் போன நேரு குடும்பத்திலே பிறந்த ஒரே மக்குப் பெண். நேருவின் சகோதரி விஜயலட்சுமி பண்டிட்-டால் ரொம்பவும் கிண்டல் செய்யப்பட்டு மனம் நொந்தவர். அந்தக் குடும்பத்திலேயே பட்டப் படிப்பை முடிக்காமல் திரும்பி வந்த முதல் ஆள் (அவரைப் பின்பற்றி அவருக்குப் பின் யாருமே பட்டம் வாங்கவில்லை என்பது வேறு விஷயம்.) இந்தியாவில் எந்த நம்பிக்கையும் இல்லாமல் அறுபதுகளில் குழந்தைகளோடு லண்டனில் போய் செட்டில் ஆகி விடலாமா என்று தன் ஆங்கிலேய நண்பி ஒருத்திக்கு கடிதம் எழுதி பதிலுக்குக் காத்திருந்தவர். சாஸ்திரி அகாலமாக இறந்ததும் ஆளாளுக்கு பிரதமர் நீயா நானா என்று போட்டி போட அதை சமாளிக்க முடியாமல் காமராஜால் பிரதமருக்கு முன் மொழியப்பட்டவர். ஒரே காரணம் அவர் ஒரு கூங்கி குடியா, ஆகையால் சொன்ன பேச்சை கேட்பார் என்பதுதான். என்ன, பதவிக்குப் பின் இந்திரா அப்படி ஒரு அவதாரம் எடுப்பார் என்று யாருமே எதிர் பார்க்கவில்லை.
கொஞ்சம் கொஞ்சமாக காங்கிரசை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அவர் செய்த மறைமுக வேலைகளால் காங்கிரஸ் பிளவுற்றது. ஸ்தாபன காங்கிரஸ், இந்திரா காங்கிரஸ் என்றானது. சுதந்திரத்துக்குப் போராடிய ‘உண்மையான காங்கிரஸ்காரர்கள் எல்லோருமே, காமராஜர் உள்பட, ஸ்தாபன காங்கிரசுக்குப் போனார்கள். அந்தக் கோபத்தில் திமுக உடன் கூட்டு சேர்ந்து காமராஜரை தோற்கடித்து பழி தீர்த்துக் கொண்டார். ஆம், இன்று காமாராஜர் ஆட்சி கொண்டு வருவோம் என்று நொடிக்கு நூறு தடவை முழங்கும் காங்கிரசார் அன்று திமுக-வோடு கை கோர்த்து கர்ம-வீரரை தோற்கடித்தனர்.
இன்று தமிழ்நாடு உள்பட நிறைய மாநிலங்களில் காங்கிரசுக்கு சரியான தலைவர் இல்லை என்று நாம் வருந்துகிறோம். அதற்குக் காரணம் இந்திரா காந்தி. இங்கு காமராஜர், கர்நாடகாவில் நிஜலிங்கப்பா, வீரேந்திர படில் ஆந்திராவில் சஞ்சீவ ரெட்டி, குஜராத்தில் சிமன்பாய் படேல் என்று பெரும் தலைவர்கள் மாநிலங்களில் கோலோச்சிக் கொண்டு இருந்தார்கள். அவர்களை ஒவ்வொருவராக பின்னுக்குத் தள்ளி ஜால்ரா கோஷ்டிகளை மட்டுமே தலைவர்களாக ‘நியமித்து’ பிரதேச காங்கிரசை பலவீனப்படுத்தியவர். வாரிசு அரசியலை முதல் முதலில் இந்தியாவில் அறிமுகப்படுத்தி எதற்கும் பிரயோசனப்படாத தன் மகன் சஞ்சய் காந்தியை இந்தியாவின் மேல் திணித்தவர். சஞ்சயின் அகால மறைவுக்குப் பின் அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கி இருந்த ராஜீவ் காந்தியை வலுக்கட்டாயமாக அரசியலுக்கு இழுத்துக் கொண்டுவந்தவர். Kitchen Cabinet என்று புகழ் பெற்ற ஒரு சிறிய ‘ஆமாம் சாமி’ கூட்டத்தை மட்டுமே வைத்துக் கொண்டு ஆட்சி நடத்தியவர்.
சோஷலிசம் என்றால் நாம் நிறைய நேரம் நேருவைத்தான் குற்றம் சொல்கிறோம். நேரு காலத்தில் உண்மையில் தனியார் தொழில் முனைவோருக்கு நிறைய சுதந்திரங்கள் இருந்ததன. அதை எல்லாம் நீக்கி அவர்களை எவ்வளவு படுத்த முடியுமோ படுத்தி entrepreneurship என்கிற தொழில் முனைப்பையே நாசம் பண்ணியவர் இந்திரா! . ஏற்றுமதி-இறக்குமதி கட்டுப்பாடுகள் கொண்டு வந்து ‘கள்ள மார்க்கெட்’-டை இந்தியாவில் பரவச் செய்தவர். எழுபதுகளில் இந்தி, தமிழ், தெலுங்கு என்று எல்லாப் படங்களிலும் கோட்டு போட்டுக் கொண்டு வந்த ‘கடத்தல்கார’ வில்லன்கள் எல்லாருமே இந்திரா காந்திக்கு கடமைப் பட்டவர்கள். Pricing-control, production-control அதாவது தனியார் தயாரிக்கும் ஒரு பொருளுக்குக் கூட அரசுதான் விலை நிர்ணயம் செய்தது. அவர்களுக்கு ஒரு வருடத்துக்கு தயாரிப்பு எண்ணிக்கை உச்ச வரம்பையும் அரசே நிர்ணயம் செய்தது. பஜாஜ் ஸ்கூட்டருக்கு புக் செய்து விட்டு மக்கள் வருடக் கணக்கில் காத்திருந்தது நினைவிருக்கிறதா? தொழில் வருமான வரி நிறைய நேரம் 80% வரை கூடப் போய் நியாயமான தொழில் செய்பவர்கள் கூட கறுப்புப் பணம் பதுக்க வேண்டிய நிலையை கொண்டு வந்தவர். பிர்லா மேல் கோபம் கொண்டு அவருக்கு இல்லாத தொல்லைகள் கொடுத்து அவர் பாதிக்கு மேல் தொழிலை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லக் காரணமாக இருந்தவர்.
தனக்கு எதிராக எழுந்த ஜெயப்பிரகாஷ் நாராயணனின் சோஷலிச இயக்கத்தை முறியடிக்க ‘உன்னை விட நான் பெரிய சோஷலிசவாதி’ என்று காட்ட வரைமுறை இல்லாமல் தேசியமயமாக்கியவர். அதன் மூலம் இந்தியா எண்பதுகளின் இறுதியில் கையிருப்பே இல்லாமல் ரிசர்வ் வங்கி தங்கத்தை இங்கிலாந்தில் அடகு வைத்ததற்கு அவரின் இந்த indiscriminate தேசியமயமாக்கல் ஒரு முக்கிய காரணம்.
இன்று இந்தியாவைப் பற்றி நமக்கிருக்கும் பெருமைகளில் ஒன்று அதன் ஜனநாயகம். அந்த ஜனநாயக வரலாற்றில் இருக்கும் ஒரே கரும்புள்ளி எமெர்ஜென்சி. நீதிமன்றத்தில் கூண்டில் நின்ற முதல் (மற்றும் கடைசி) பிரதமர் இந்திராதான். அவரின் எம்பி தேர்தலில் கட்சி செய்த முறைகேடுகளை விசாரிக்க அவர் கூண்டில் ஏற்றப்பட்டார். செய்த முறைகேடுகள் நிரூபிக்கப்பட்டு, அவரின் எம்பி தேர்தலை செல்லாததாக நீதிமன்றம் அறிவித்ததும் அதைத் தாங்க முடியாமல் இந்திய ஜனநாயகத்தையே சஸ்பெண்ட் செய்து எமெர்ஜென்சி கொண்டு வந்தவர். அந்த இரண்டு வருடங்கள் இந்தியாவின் இருட்டு ஆண்டுகள். பத்திரிகை சுதந்திரம் முற்றிலுமாகப் பறிக்கப்பட்டது. தலைவர்கள், எடிட்டர்கள், மாணவர்கள் என்று கண்ட மேனிக்கு கைது செய்யப்பட்டனர். ஜார்ஜ் பெர்னாண்டஸ், அத்வானி போன்ற தலைவர்கள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தனர். அந்த இரண்டு வருடங்களில் சஞ்சய் காந்தி செய்த அட்டகாசங்கள் பற்றி ஒரு தனி புத்தகமே போடலாம். (வந்திருக்கிறது Sanjay Gandhi - A Life by Vinod Mehta). தவிர 356 என்கிற மாநில அரசுகளை டிஸ்மிஸ் செய்யும் சட்டத்தை அவர் போல கண்டமேனிக்கு பிரயோகம் பண்ணிய பிரதமர் வேறு யாருமே கிடையாது. அது போதாதென்று எம்எல்ஏ-க்களை கட்சித் தாவல் செய்வது, குதிரை பேரம் நடத்துவது, (உதாரணம் ஆந்திராவில் என்டிஆர் ஆட்சி கவிழ்ந்து பாஸ்கர் ராவ் வந்தது) எம்எல்ஏ-க்களை ஸ்டார் ஹோட்டல்களில் ஒளித்து வைத்து காப்பாற்றுவது போன்ற ‘ஜனநாயக’ வழிமுறைகளுக்கு முன்னோடியே அவர்தான்.
காஷ்மீர் பிரச்சனை இன்று இந்தியாவின் தலையாயப் பிரச்சனை. நம் ஜிடிபி-யில் கணிசமான பகுதி காஷ்மீரைப் ‘பாதுகாப்பதற்கே’ போகிறது. இந்தப் பிரச்சனை இப்போதிருந்தது போல அப்போது அவ்வளவு மோசமாக இல்லை. இந்தியில் ‘கஷ்மீர் கி கலி’, தமிழில் ‘தேனிலவு’ என்று படங்கள் ஷூட்டிங் நடத்தும் அளவுக்கு அமைதியாகத்தான் இருந்தது. அங்கு கன்னா-பின்னாவென்று தேர்தல் மோசடிகள், ஆட்சியை இஷ்டத்துக்கு டிஸ்மிஸ் செய்தது என்று அந்த அமைதியை நாசம் செய்தவர். பஞ்சாபில் காங்கிரசுக்கு எதிராக அகாலி தள் கட்சி வளர்வதை பொறுக்காமல் பிந்தரன்வாலே என்கிற பிரிவினைவாதியை ஊக்குவித்து அதனால் ஆயிரக்கணக்கில் சீக்கியர்கள் சாக காரணமாக இருந்து கடைசியில் பத்மாசுரன் வரம் கொடுத்த சிவன் தலை மேலேயே கை வைக்கப் போனது போல தான் உருவாக்கிய அசுரனாலேயே தன் உயிரை இழந்தவர்.
பொருளாதார நாசம், தீவிரவாதம், ஜனநாயக சீரழிவு, ஊழல், வாரிசு அரசியல், சர்வாதிகாரம், காமராஜர் மாதிரி சுதந்திரப் போராட்டத் தியாகிகளை அவமரியாதை செய்தது, என்று எந்த விஷயத்தை எடுத்தாலும் அதில் இந்திரா காந்தியின் கைவரிசை இல்லாமல் இருக்காது என்ற அளவுக்கு சர்வகாரணியாய் வியாபித்த தலைவர் அவர்.
Patriots And Partisans என்கிற புத்தகத்தில் ராமச்சந்திர குஹா என்கிற வரலாற்று ஆய்வாளர் ‘இந்திரா காந்தி மட்டும் அறுபதுகளில் இங்கிலாந்துக்கு குடி பெயர்ந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்’ என்று கற்பனை பண்ணி ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். ஹூம்!
======================================================
ஆதாரங்கள்:
* India After Gandhi - Ramachandra Guha
* India - Unbound - Gurcharan Das
* Patriots and Partisans - Ramachandra Guha
* India - A Portrait - Patrick French
* Indira - A Life - Katherine Frank
* Sanjay - A Life - Vinod Mehta
* Kashmir - A Tragedy of Errors - Tavleen Singh  
2019 நாடாளுமன்றத் தேர்தல்கள் நரேந்திரமோடி வெர்சஸ் மற்றவர்கள் என்ற மட்டத்தில் தான் நடக்கப் போகிறதா? வேறு அஜெண்டா எதுவுமில்லையா?
இப்படி நாட்டின் பிற பகுதிகள் கேள்வியெழுப்பிக் கொண்டிருக்கும் நேரத்தில், 

தமிழ்நாட்டில் மட்டும் ..................


அராஜகம், தடித்த வார்த்தைகளால் மட்டுமே பெயர் எடுத்த ஒரு மாஜி சினிமா இயக்குனர்(என்ன படம் இயக்கியிருக்கிறார்?)  தனிக்கட்சி ஒன்றைத்துவக்கி இருக்கிறார்! சட்டசபைத் தேர்தல்களில் 25 சீ ட்டாவது ஜெயிப்போம் என்று காமெடி செய்கிறார் பாருங்கள்! தமிழேண்டா என்று தலையில் அடித்துக் கொள்வதா? அல்லது தலையில் தட்டி உட்கார வைப்பதா?  

வரவிருக்கிற தேர்தல் மக்களவைத்தேர்தல் தான்! ஆனாலும் உதிரிகள், சில்லறைகள் சத்தம் ஓங்கி ஒலிப்பதைத் தலையில் தட்டி அடக்கி வைக்க வேண்டிய நேரமும் கூட!  

என்ன சொல்கிறீர்கள்?   


6 comments:

  1. //ஆம், இன்று காமாராஜர் ஆட்சி கொண்டு வருவோம் என்று நொடிக்கு நூறு தடவை முழங்கும் காங்கிரசார் அன்று திமுக-வோடு கை கோர்த்து கர்ம-வீரரை தோற்கடித்தனர்.//

    திருப்பிப் போட்டிருக்கிறீர்கள். அன்று இந்திரா காங்கிரஸ்-- பழைய காங்கிரஸ் என்று காங்கிரஸ் பிளவு பட்டிருந்தது. தமிழகம் காமராஜரின் தலைமையில் ஸ்தாபனக் காங்கிரஸின் கோட்டையாக இருந்தது. தமிழகம் தான் இன்று வரை தனிநபர் வழிபாட்டுக்குப் பெயர் பெற்றதாயிற்றே! காமராஜர் சொன்னால் இந்திரா காங்கிரஸூடன் சேருவதற்கு தயாராக தமிழக ஸ்தாபன காங்கிரஸ் தயாராக இருந்தது.

    ஆனால் கடைசி வரை அப்படியான ஒரு இணைப்பை காமராஜர் பிரஸ்தாபிக்கவே இல்லை. பாங்குகள் தேசியமயமானதை அடுத்து இந்திரா காங்கிரஸ் தமிழகத்தில் வலுவாக இருந்த திமுகவுடன் கூட்டு சேர்ந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (உங்கள் பாஷையில் வலது கம்யூனிஸ்ட்) அந்த அணியில் இணைந்திருந்தது. விருதுநகரில் சீனிவாசன் என்ற மாணவரை வேட்பாளாராகக் கொண்டு படுத்துக் கொண்டே ஜெயிப்பேன் என்று சொன்ன காமராஜரைத் தோற்கடித்தனர். தமிழகத்தைப் பொறுத்த மட்டில் வலுவான Base கொண்டிருந்த திமுக இல்லையெனில் இந்திரா காங்கிரஸ் இல்லை.

    அந்நாட்களில் சி. சுப்ரமணியம், மணிசங்கர ஐயர், ஓ.வி. அளகேசன் போன்றோர் இந்திரா காங்கிரஸில் இணைந்திருந்தனர்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஜீவி சார்!

      //உங்கள் பாஷையில் வலது கம்யூனிஸ்ட்// இங்கே நிறையப்பேருக்கு கம்யூனிஸ்ட் இயக்கம் எத்தனை கூறுகளாக சித்தரிக்க கிடக்கிறதென்ற கதையே தெரியாது என்பதால் CPI வலது என்றும் CPIM இடது என்றும் அந்தநாட்களில் இருந்தே அடையாளப்படுத்தப் படுவதை ஒட்டியே எழுதுகிறேன். இதில் என் பாஷை என்று எதுவும் இல்லை!

      இன்றையத் தேதியில் இரண்டுபிரிவுகளுமே, இடதுசாரித்தன்மையை இழந்துவிட்டு நிற்கிற பரிதாபத்தை விவரிக்கப்போனால், யாருக்கு அக்கறை இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

      //திருப்பிப் போட்டிருக்கிறீர்கள்//

      நான் எதையும் மாற்றிப்போடவில்லை! ஸ்ரீதர் சுப்ரமணியம் எழுதிய இந்தப் பழைய பகிர்வு தற்செயலாகக் கண்ணில் பட்டது. ஒரே ஒரு எழுத்துப்பிழையைத் தவிர நான் இதில் இந்தத் திருத்தமும் செய்யவில்லை. நிறைய விடுதல்கள் இருந்தாலும் அவருடைய எழுத்து, கருத்தில் கைவைப்பதற்கு எனக்கு எந்த உரிமையும் இல்லை.

      இந்திராவைப் பற்றி முழுமையாகப் பேசுவதானால், கணவரோடு பிரிந்து வாழ்ந்த சமயம் நேரு அவரைத் தனது official hostess ஆக ஆக்கியதில் இருந்து, 1959 இல் காங்கிரஸ் அக்ராசனர் ஆக்கப்பட்டதும், அப்பனும் மகளுமாய்ச் சேர்ந்து NSS மன்னத் பத்மநாபன் கொலையைச் சாக்கு வைத்து நம்பூதிரிபாட் அரசை 356 பிரிவின் கீழ் கலைத்ததில் இருந்து சொல்ல வேண்டியிருக்கும்!. ...

      Delete
  2. வலது கம்யூனிஸ்ட் என்ற வார்த்தையை பிரபலப்படுத்தியது உங்கள் குருநாதர் கணக்கன் தான்.

    ReplyDelete
    Replies
    1. இருந்துவிட்டுப் போகட்டுமே!

      The left–right political spectrum is a system of classifying political positions, ideologies and parties, from equality on the left to social hierarchy on the right. ... In France, where the terms originated, the Left has been called 'the party of movement' and the Right 'the party of order'.
      இது திரு ANS காலத்துக்கு ரொம்பவும் பின்னாடி வந்த விக்கி வியாக்கியானம்! குருநாதர் சரியாகத்தான் சொல்லிவைத்துப் போயிருக்கிறார் ஜீவி சார் !

      Delete
  3. எங்கள் வீட்டில் கூட ஒரு நேரத்தில் இந்திரா காந்தியை இரும்பு மனுஷி என்றுதான் ​சொல்லிக்கொண்டிருந்தோம்! கடைசி விடியோவை ரசித்தேன்.

    ReplyDelete
  4. இரும்புமனுஷியாக பில்டப் கொடுக்கப்பட்டவர் உண்மையில் பெரும் கோழை என்பதை தீரேந்திர பிரம்மச்சாரிகளும், கடைசிநாட்களில் உருத்திராட்சம் அணிந்து உருத்திராட்சப்பூனையாக ஆன வரலாறும் நிரூபித்ததே, ஸ்ரீராம்!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!