இந்தப்பக்கங்களில் A Wednesday என்று தேடிப்பார்த்தால் உள்ளூர் அக்கப்போர்களே பெரும்பாலான பதிவுகளில் இடம் பிடித்திருப்பதைப் பார்க்க முடியும்! A Wednesday ஹிந்திப்படத்தை கமல்ஹாஸன் ரீமேக் செய்து உன்னைப்போல் ஒருவன் படம் எடுத்தபோது இங்கே தமிழ் வலைப்பதிவர்கள் ரொம்பவுமே பொங்கித் தீர்த்தார்கள்! கொஞ்ச காலத்துக்குப் பின் ஒரு குறிப்பிட்ட பகுதியினர் மட்டும் சொல்லிவைத்தாற் போல தங்களுடைய பொங்கல், பதிவுகளை நீக்கிக் கொண்டார்கள்! 127 பதிவர்கள் இப்படிப் பொங்கித் தீர்த்ததாக நண்பர் உண்மைத்தமிழன் தொகுத்து வைத்திருப்பது இங்கே அங்கே போய்ப் பார்த்தால் பொங்கல் வைத்து அப்புறம் நீக்கிக் கொண்டவர்கள் யார் என்பது தெரியும்! என்று எழுதிய இந்தப்பதிவும் கூட அதில் அடக்கம் தான்! எத்தனை நாட்களுக்குத் தான் கிணற்றுத் தவளைகளாக இதுபோல உள்ளூர் அக்கப்போர்களிலேயே நம்முடைய கவனத்தை வீணடித்துக் கொண்டிருக்கப் போகிறோம்?
மத்தியகிழக்கு நாடுகளின் அரசியல், எதிர்காலத் தலையெழுத்தை நிர்ணயிக்கக் கூடிய ஒரு தேர்தலாகவே கூட நேற்றைக்கு நடந்து முடிந்திருக்கும் இஸ்ரேல் பொதுத் தேர்தல் முடிவுகள் இருக்கலாம் என்பதால் முந்தைய பதிவில் இஸ்ரேல் தேர்தல்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லியிருந்தேன். சவூதி அரேபியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் மீதான தாக்குதல் பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தியை பாதியாகக் குறைத்திருப்பதில் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயரலாம் என்று பேசத் தெரிகிறது. ஆனால் மத்தியகிழக்கில் அமைதியைப் பாதிக்கக் கூடிய ஒரு தேர்தலைப் பற்றியும் பேசுகிறோமா? என்னதான் இங்கே அரசியல் உள்ளூர் அக்கப் போர்களால் ஆனது என்றாலும், அதைவிட அதிகமாகப் பாதிக்கிற விஷயங்களிலும் கொஞ்சம் அக்கறை வேண்டாமோ என்பது என்னுடைய நீண்டநாள் ஆதங்கம்! சரி, இஸ்ரேல் தேர்தல்களில் மே மாதம் நடந்த பொதுத்தேர்தல் மாதிரியே பிரதான கட்சிகள் இரண்டுமே மெஜாரிட்டியைத் தொடமுடியாது, மீண்டும் உதிரிகளோடு கூட்டணி வைத்தால் தான் ஆட்சி அமைக்கமுடியும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புக்கள் சொல்வதாகத் தற்போதைய செய்தி. நீண்ட காலமாக (13 ஆண்டுகள்) ஆட்சியில் இருந்த பிரதமர் நேத்தன்யாஹூவுக்கு பெரும் பின்னடைவு என்று சொல்கிறார்கள்.
உள்ளூர் அக்கப்போர்கள் அவ்வளவு சகித்துக் கொள்கிற மாதிரியாகவா இருக்கின்றன? இந்த 23 நிமிட விவாதத்தையே கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள்! அமித் ஷா என்ன பேசினாலும் அதை நெகடிவாக, சர்ச்சையாக்க வேண்டுமென்றே கங்கணம் கட்டிக் கொண்டு ஊடகங்களும் எதிர்த்தரப்பும் ஒரு கூட்டணி அமைத்துக்கொண்டு செயல் படுகிறமாதிரித் தான் இருக்கிறது! இல்லையென்று மறுக்கும் நண்பர்கள் இருந்தால் பின்னூட்டத்தில் காரணங்களோடு சொல்லுங்களேன்!
அமித் ஷா என்ன context இல் எப்படிச் சொன்னார் என்பதைப் பேசுவதற்கு முன்னால், இங்கே இந்திய ஜனநாயகத்தில் இருக்கிற மாதிரி உதிரிக்கட்சிகளுடைய ஆட்டம் உலகத்தில் வேறெந்த ஜனநாயகத்திலாவது இருக்கிறதா? அரை, முக்கால் சதவீத வாக்குகளைக் கூடப் பெறமுடியாத உதிரிக்கட்சிகள் சாதித்ததென்ன என்று கொஞ்சம் யோசித்திருக்கிறோமா? உதிரிக் கட்சிகளோடு ஒட்டிக் கொண்டுதான் இங்கே திமுக மாதிரி பெரிய கட்சியே இருக்க முடியுமென்றால் அர்த்தம் இருக்கிறதா? 1977 இல் ஜனதாக் கட்சி எக்ஸ்பெரிமென்ட் முதற் கொண்டு ஏகப்பட்ட பரிசோதனைகள் இந்திய அரசியலில் நடந்து முடிந்திருக்கின்றன. அவைகளிலிருந்து என்ன பாடம் கற்றுக் கொண்டிருக்கிறோம்? எப்போதாவது இவைகளைப் பற்றிச் சிந்தித்திருக்கிறோமா?
இங்கே பிஜேபி அதிபர் ஆட்சிமுறையை மறைமுகமாக வலியுறுத்துவதாகத் தான் பலகட்சி ஆட்சிமுறை தோற்று விட்டதாக அமித் ஷா பேசுவதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று விசிகவின் வன்னியரசு மேம்போக்காகப் பேசிவிட்டுப் போவதை விடுங்கள்! Bihar Movement என்று இந்தச் சுட்டியிலும் இதே வார்த்தையைக் கொண்டு இணையத்திலும் தேடிப் பாருங்கள்! 1971 நாடாளுமன்றத்தத் தேர்தல்களில் இந்திரா காண்டி அமோக(?) வெற்றியடைந்த பிறகு, அவ்ரதுபோக்கில் நிறைய மாறுதல்கள், எல்லா அதிகாரங்களும் ஒரே நபரின் கீழ் என்கிற அமெரிக்க அதிபர் முறை மாதிரி ஒரு தேர்தல் முறைக்குத் தயாராகிறாரோ என்ற சந்தேகம் வலுவாக எழுந்த காலத்தில் பிஹார் இயக்கம் என்று ஊழலுக்கெதிரான மாணவர் போராட்டம் வலுவான தருணத்தில், ஜெயப்ரகாஷ் நாராயணனைத் தமைமைதாங்க அழைத்த தருணம்! தினமணி ஆசிரியர் ஏ என் சிவராமன், பிஹார் இயக்கம் என்ற தலைப்பில் தொடர்ந்து 47 நாட்கள் தினமணி நாளிதழில், ஜெயப்ரகாஷ் நாராயணன் இந்திரா காண்டியின் போக்குக்கு எதிராக ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் தனித்தனியாக கடிதம் எழுதியதும் இதர விவரங்களுமாக தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டது, பின்பு தினமணி வெளியீடாகப் புத்தகமாகவும் வந்தது. கூகிள் தேடலில் பிஹார் இயக்கம் என்று தேடினால் பிபிசி தளத்தில் வெளியான இந்த ஒரு செய்தி தான் கிடைக்கிறது! பிஹார் இயக்கம் தினமணி வெளியீடாக வந்த புத்தகம் தற்சமயம் நானறிந்தவரை புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகத்தில் மட்டும் கிடைக்கிறது.
விசிக மாதிரியான உதிரிக் கட்சிகளுக்கு வரலாறும் தெரியாது, போகும் திசை பற்றிய தெளிவும் கிடையாது. ஆனால் இன்னும் எத்தனைநாட்களுக்கு இவர்களைப் போன்ற உதிரிகள் நாட்டாமை செய்வதை சகித்துக் கொண்டிருக்கப் போகிறோம், சொல்லுங்கள்! இந்தியா முழுவதும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் எத்தனை. அவை எத்தனை தேர்தல்களைச் சந்தித்திருக்கின்றன, எவ்வளவு வாக்கு (சதவீதத்தில்) வாங்கியிருக்கின்றன என்பதெல்லாமே பொதுவெளியில் தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் இருப்பதுதான்!
பதிவுகளின் இங்கே பகிர்வதெல்லாம் உங்களைக் கொஞ்சம் யோசிக்க வைப்பதற்காக மட்டுமே! ஏன் எங்களுக்கு சுயமாக யோசிக்கத் தெரியாதா என்று சண்டைக்கு வருவதற்கு முன்னால், என்ன நினைக்கிறீர்கள் என்பதைச் சொல்லுங்களேன்!
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment
ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!