கொறிப்பதற்கு கொஞ்சம் சினிமா சங்கதிகள்!

அமேசான் பிரைமில் The Family Man என்கிற வெப் சீரீஸ் பத்து எபிசோடுகள், மொத்தம்  எட்டுமணிநேரம் ஓடுவதில் முதல் நான்கு எபிசோடுகளைப் பார்த்து முடித்தாயிற்று. தைரியமாக எங்கள் Blog ஸ்ரீராமுக்குப் பரிந்துரை செய்யலாம்!  தமிழிலேயே பார்க்க முடிந்தது என்னுடைய நல்ல நேரம். .


Netflix வெப் சீரீஸ்களில் வருகிற  மாதிரி soft porn மற்றும் நிறைய கெட்ட வார்த்தைகளில் திட்டுவதென்பது, இதில் பார்த்த வரை இல்லை என்பது கொஞ்சம் நிம்மதி! 


ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்கு பதிவர் உண்மைத்த.மிழன் எழுதியிருக்கிற விமரிசனத்தைப் படித்த பிறகு இந்தப் படம் பார்க்கலாமென்று முடிவு செய்தாகி விட்டது. படத்துக்கு அவர்  4/5  ரேட்டிங் கொடுத்திருக்கிறார். பார்த்திபன் ஒருவர் மட்டுமே soloவாக நடித்திருக்கிறார், மற்ற கதாபாத்திரங்கள் எவரையும் காட்டாமல் பின்னணிக் குரலில் மட்டும் அவர்களது இருப்பையும் சேர்த்துக் கதை பின்னியிருக்கிறார் என்று உண்மைத்தமிழன் சொல்கிறார்.

      
இது கார்டூனிஸ்ட் மதனுடைய வீடியோ விமரிசனம். ஆனால் இது பார்த்திபனுடைய ஒரிஜினல் ஐடியா தானா? இல்லை என்பது தமிழில் இதே மாதிரி ஒரு படத்தை யூட்யூபிலேயே ரிலீஸ்  செய்திருந்ததை 2016 வாக்கிலேயே பார்த்துவிட்டு  கூகிள் பிளஸ்சில் திரைப்பட விமரிசனமும் எழுதியிருந்தேன். அதில் ஒரு எழுத்தாளருடைய மனைவியின் மரணத்தை விசாரிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் வருகிறார். கேள்விகள் பதில்கள் என்பதோடு மற்ற கதாபாத்திரங்களுடைய இருப்பு பின்னணிக் குரலாகவே போவதில் க்ளைமேக்ஸ்  யாரும் எதிர்பார்க்காத ஒரு டிவிஸ்டுடன் முடிகிறது.  அதுவரை பார்த்ததெல்லாம் வெறும் ஒத்திகைதான்! மனைவியை இனிமேல்தான் எழுத்தாளர் கொலை செய்யப்போகிறார்! ஒரு குற்றத்தை perfect ஆக செய்வதற்காக என்ற பன்ச் வரியோடு முடிகிற அந்தப்படத்தின் கதை வசனம் தயாரிப்பு எல்லாம் ஒரு விளம்பர ஏஜென்சி நடத்துகிற ஒருவருடையது. இன்ஸ்பெக்டராகவும் எழுத்தாளராகவும் நடித்த்தும் அவரே என்பது தான் கூடுதல் சுவாரசியம். படத்தின் பெயரோ அதைத் தயாரித்தவருடைய பெயரோ இப்போது நினைவுக்கு வரவில்லை. (விரைவில் தேடிக்கண்டுபிடித்துச் சொல்வேன்!) மிகக்குறைந்த செலவில் தயாரித்தது என்பதால் தயாரிப்பாளர் தியேட்டர் ரிலீசுக்கு முயற்சி செய்யவே இல்லை.நேரடியாக யூட்யூபில் வெறும் 25 ரூ கொடுத்துப் பார்க்கிறவர்கள் பார்க்கலாம், காசு கொடுக்காமலும் பார்க்கலாம் என்று விட்டு விட்டார்! பார்த்திபன் இதில் கூடுதல் கொலைகளைச் சேர்த்து இருக்கிறார் என்பதாலேயே இது அவரே ஜொந்தமா ஜிந்திச்சது ஆகிவிடுமா என்பதைத் தெரிந்து கொள்வதற்காக மட்டுமே இதைப் பார்க்க விரும்புகிறேன் என்பது இங்கே பதிவின் twist!


என்னதான் சினிமா கொறிப்பு என்று பதிவை ஆரம்பித்தாலும் அரசியல் பேசாமல் இருந்துவிட முடியுமா? கார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யா வரவர கார்டூன்களிலும் உளற ஆரம்பித்து விட்டார் என்பதற்கு மேல் இந்தக் கார்டூன் சொல்லவருவது தான் என்ன? சென்செக்ஸை வைத்துப் பொருளாதார ஆரோக்கியத்தை அளந்தது எல்லாம் சீனாதானா காலத்துச் சித்துவேலைகள்! பிஜேபியில் எவராவது சென்செக்ஸ் புள்ளிகளை வைத்துப் பொருளாதாரத்தை அளந்திருக்கிறார்களா என்ன? இங்கே சொல்ல வருகிற மாதிரி இந்தியப் பொருளாதாரம் ஒன்றும் படுத்த படுக்கையாகவோ நொண்டிக்கொண்டோ இல்லை!

சினிமாக் கொறிப்போடு, கொஞ்சம்  யோசிப்பதற்காகவும் ஒரு விஷயம் வேண்டாமா?

மீண்டும் சந்திப்போம்.                        

4 comments:

  1. இந்த ஃபேமிலி மேன் அமேசானில் இருக்கிறது என்று பார்த்தேன்.  பார்க்கும் தைரியம் / பொறுமை  இப்போதும் வரவில்லை!  அதில் சிலபல ஆங்கிலப்படங்கள் பார்த்தேன். அவ்வப்போது பார்க்கிறேன். 

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம்! வெப் சீரீஸ் வழக்கமான டிவி சீரியல், சினிமாவிலிருந்து நிறையவே வித்தியாசமானது. இந்த சீரீஸ் கூட வெறும் 10 எபிசோடுகள்தான்! ஒரு சமகால செய்திகளிலிருந்து கதைக்களத்தை உருவாக்கியிருக்கிறார்கள். ஒரு எபிசோட் 46 அல்லது 47 நிமிடங்கள் தான். தைரியமாக ஒன்றிரண்டு எபிசோடுகளைப் பாருங்கள். பிடித்திருந்தால் மிச்சத்தையும் சௌகரியப்படுகிற நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்பதுதான் இதுமாதிரி ஸ்ட்ரீமிங் வீடியோக்களின் விசேஷம்.

      Delete
  2. அந்த யு டியூப் படம் பற்றிய விவரங்களை அப்புறம் கொடுங்கள்.  இலவசமாக கிடைத்தால் பார்க்கலாம்.  25 ரூபாய் பெரிதல்ல..   பக்கத்தில் ஆள் இருந்தால் கொடுத்து விடலாம்..   ஆன்லைனில் இந்த வேலைகள் செய்ய எனக்குத் திறமையில்லை!

    ReplyDelete
    Replies
    1. என்னுடைய நண்பர் ஒருவர் அதை டவுன்லோட் செய்து வைத்திருப்பதாகச் சொல்கிறார். என் கைக்கு அது கிடைத்தாலும், இங்கே வந்துதான் வாங்கிக் கொள்கிற மாதிரி வரும் ஸ்ரீராம்!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!