படித்ததில் பிடித்தது! ஒரு புத்தகம்! பின்னே புத்தகக் கண்காட்சி புராணம்!

படித்ததில்  பிடித்தது என நிறைய விஷயங்களை இங்கே தொடர்ந்து பகிர நிறைய ஆசைதான்! ஆனால் வெவ்வேறு விஷயங்களில் கவனச்சிதறல் இருப்பதால் ஒரு பிடித்தமான விஷயத்தைக் குறித்துப் பதிவுகள் எழுத முடிவதில்லை என்பது என்பக்கமிருக்கும் குறை. இன்றைக்கு இருவேறு தளங்களிலிருந்து படித்ததில் பிடித்த விஷயமாக முதலில் ஒரு புத்தக அறிமுகம்!

ஐந்து குண்டுகள் – சுதாகர் கஸ்தூரி – என் பார்வை என்று எல் கே கார்த்திக் எழுதியிருக்கும் ஒரு புத்தக அறிமுகம் மற்றும் விமரிசனமாக!


புத்தகத்தைப் பற்றி எழுதும் முன் திரு. சுதாகர் கஸ்தூரிக்கு என் அனந்தகோடி நமஸ்காரங்கள். 

அவர் நினைத்திருந்தால் சமகால பிரச்சனைகளான ஜிஎஸ்டி, டீ மானிடைசேஷன் ஆர்டிக்கிள் 370 போன்றவற்றை வைத்து ஒரு கதை எழுதி இருக்கலாம். அப்படி ஒன்றை எழுதி இருந்தால், அவர் இதற்கு எந்த விளம்பரமும் செய்யாமலேயே பல ஆயிரக்கணக்கில் ஹிட்ஸ் கிடைத்திருக்கும். அதை விட்டு சுதந்திர போராட்ட கால பின்புலத்தை தேர்வு செய்ததற்காக மீண்டும் ஓர் நமஸ்காரம். 

திருநெல்வேலி எழுச்சி கண்டிப்பாக நாம் பாடபுத்தங்களிலோ இல்லை புரட்டாய் எழுதப்பட்ட வரலாற்று நூல்களிலோ கண்டிப்பாக காணக் கிடைக்காது. அதன் பின்னணியில் எழுதப்பட்டுள்ளது இந்நாவல்.  இது தினமணியில் தொடராக வந்தது. இப்பொழுது கிண்டிலில் புத்தகமாக வந்துள்ளது.
கதை இரண்டு வேறு காலகட்டங்களில் நடைபெறுகிறது. ஓரளவு சுதந்திர போராட்டங்களைப் பற்றிய அனுபவம் இருந்தால் கதையை படிப்பது எளிது. அக்காலத்தில் எப்படி எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் விடுதலைப் போராட்ட வீரர்கள் கைது செய்யப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டனர் என்பதை எண்ணினால் ரத்தக்கண்ணீர் வரும். உங்களை அறியாமல் இப்பொழுது கருத்துரிமை இல்லை என சொல்பவர்களை நினைக்கத் தோன்றும். ஸ்வதேசி கூட்டத்தில் கலந்துக் கொண்டார் என்பதற்காகவே கண்காணிக்கப்பட்டதெல்லாம் நடந்துள்ளது.
முத்துராசா மற்றும் ஆனி இடையிலான நட்பு கதையின் ஓட்டத்திற்கு முக்கியமானது. அதைத் தவறவிட்டால் இறுதி புரிவது கடினம். தூத்துக்குடி பகுதியில் சில காலம் வசித்த ஆனியின் வம்சத்தவள் என்று இந்தியா வரும் லிண்டா, முத்துராசாவின் வம்சத்தவர் என்று நம்பப்படும் முத்துக்குமார், கதையில் வரும் சிறு பாத்திரமாக இருந்து திருப்பத்தை ஏற்படுத்தும் மாடசாமி என்று அனைவரின் பாத்திரங்களும் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. 
தங்களுக்கு ஒரு பெருந்தொகை வரப்போகிறது என்ற எண்ணத்தில் பல செலவுகளை செய்யும் குடும்பத்தினர் அந்நிலை மாறுகின்ற சமயத்தில் தங்கள் மனநிலையை மாற்றிக் கொள்வது கிராமத்து மனிதர்களின் மனஓட்டங்களை கோடிட்டுக் காட்டுகிறது. இதே நகரத்து மனிதர்களாக இருந்தால் என்றக் கேள்வி மனதில் எழாமல் இல்லை. கண்டிப்பாக கதையின் முடிவு நான் எதிர்பாராத ஒன்றுதான். 
அதிகமாய் கதையை விவரிக்க விரும்பவில்லை. விரிவாக நீங்களே படிக்கவேண்டும். இந்த புத்தகம் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று. எழுத்தாளருக்கு இரண்டு வேண்டுகோள்கள்.
  1. முடிந்தால் இதை அச்சு புத்தகமாய் கொண்டு வரவும் 
  2. இதே போன்று பல நாவல்களை எழுதவும்.
கிண்டில் செயலியில் வெறும் 99 ரூபாய்க்கு கிடைக்கிறது. புத்தகம் வாங்க  இங்கே  சுட்டியை அழுத்தவும்
எல் கே ஏற்கெனெவே கூகிள் குழுமங்களில் அறிமுகம் ஆனவர்தான்! குழும சங்காத்தமே வேண்டாம் என்று நான் ஒதுங்கியிருப்பதில், தொடர்பு விடுபட்டுப் போனவர்களில் ஒருவர் என்பது கொசுறுத்தகவல். இது ஒரே இந்தியா நியூஸ் தளத்தில் இன்று வாசித்தது, பிடித்ததுமாக!  

சென்னைப் புத்தகக் கண்காட்சி என்ற டெல்லி அப்பள மகோத்சவம் நாளை நிறைவுபெற இருக்கும் தருணத்தில் முகநூலில் B R  மகாதேவன் தன்னுடைய பார்வையில் புத்தகக் கண்காட்சி பற்றிச் சொல்லி இருப்பது, சுவாரசியமாக அதேநேரம் கொஞ்சம் யோசிக்கவும் வைக்கிறது! பார்க்கலாமா?     

ஒவ்வொரு ஆண்டு புத்தகக் கண்காட்சிதோறும் வழக்கமாக சில விஷயங்கள் நடக்கும்.
சில பதிப்பாளர்கள் தமது புத்தகங்கள் அமோகமாக விற்றதாகச் சொல்வார்கள். சிலர் நேர்மாறாகச் சொல்வார்கள்.
கோலப் புத்தகங்கள், சமையல், சுய முன்னேற்றம், டயட், உடல் பயிற்சி, மருத்துவம், ஆன்மிகம் இவையே அதிகம் விற்பனையாவதாகச் சொல்வார்கள்.
ஒவ்வொரு அரசியல் இயக்கமும் தத்தமது கொள்கைகளைப் பரப்ப புத்தகங்களை அச்சிட்டுத் தள்ளுவார்கள். புத்தகம் விற்று வரும் பணத்தில் அந்த பதிப்பகம் நடப்பதில்லை என்பதால் விற்பனையே ஆகாவிட்டாலும் ஆண்டுதோறும் அச்சிடப்படும் புத்தகங்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டேதான் போகும்.
வாங்கிச் சென்ற புத்தகங்களில் 50% முழுவதுமாகப் படிக்கப்பட்டால் அதிசயம்.
முன்பு வாங்கியவற்றைப் படித்து முடித்திருக்காத நிலையிலும் புதிதாக வாங்கிக் குவிப்பதில் எந்தக் குறையும் இருக்காது. போட்டுக்கொள்வது நாலைந்துதான் என்றாலும் பீரோ முழுக்க வாங்கி அடுக்குவதில்லையா என்ன? அதோடு புத்தகங்களை முழுவதுமாகப் படித்தால் அடுத்தமுறை வாங்குவது கணிசமாகக் குறையும் என்ற அளவிலேயே பல புத்தகங்கள் எழுதப்படுவதால் அப்படிப் படிக்காமல் இருப்பதே பதிப்புலகுக்குப் பெரும் நன்மை பயப்பதாகவே இருந்தும்வருகிறது.
இவை எல்லாவற்றையும்விட ராயல்ட்டியே கிடைக்காவிட்டாலும் அல்லது தனக்கு மட்டும் கிடைத்தால் போதும் என்ற அற/கலக உணர்வுடனும் சற்றும் மனம் தளராமல் புத்தகங்களை எழுதித் தள்ளியும் இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு வருகை தந்து கை வலிக்கக் கையெழுத்திட்டும் பேராதரவும் பெருமகிழ்ச்சியும் அடையும் எழுத்தாளத் திலகங்கள் ஒருபக்கம்.
புத்தகப் பரிந்துரைகள் என்ற பெயரில் பெரிதும் நமக்கு நாமே திட்டமே வெகுஜோராக முன்னெடுக்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் காட்சி ஊடகம் பக்கம் 100 புதிய பார்வையாளர்கள் நகர்வார்கள் என்றால் எழுத்து நோக்கி ஐந்து அல்லது பத்து பேர் வந்தால் அதிகம். இது எப்போதும் இருக்கும் விஷயம் தான்.
இப்போது நம் முன் இருக்கும் கேள்விகள் ஆண்டுக்கு ஆயிரம் புத்தகங்கள் விற்கும் பெஸ்ட் செல்லர்களை ஆண்டுக்கு ஐயாயிரம் என்று விற்க வைப்பது எப்படி?
புத்தகங்களின் உள்ளடக்கம் சார்ந்து தரத்தை மேம்படுத்துவது எப்படி?
எழுத்தாளர்களுக்கு உரிய ராயல்ட்டி கிடைக்கச் செய்வது எப்படி?
வாங்கிச் சென்ற புத்தகங்களைப் படிக்க வைப்பது எப்படி?
புத்தக வாசிப்பு ஒரு பெரும் இயக்கமாக, பழக்கமாக ஆகவேண்டுமென்றால் பள்ளி, கல்லூரிகளில் அதற்கான முயற்சிகளைச் செய்தாக வேண்டியிருக்கும். கணிதம், அறிவியல், வரலாறு போன்ற பாடங்கள் இருப்பதுபோல் நூலக வகுப்பும் தனி முக்கியத்துடன் இருக்கவேண்டும். அதற்கென்று தேர்வுகள் இருக்கவேண்டும். அந்த மதிப்பெண்களும் ஒரு மாணவருடைய பத்தாம் வகுப்பு 12-ம் வகுப்பு சான்றிதழ்களில் இடம்பெற வேண்டும்.
தேர்வு மதிப்பெண் என்பதெல்லாம் கலை, இலக்கிய ரசனைக்கு எதிரான செயல்கள்தான். என்றாலும் ஏதோவொருவகையில் வாசிப்புக்கு முக்கியத்துவம் தரவைக்க அப்படியான ஒன்று தேவையாகவும் இருக்கிறது. தேர்வு என்பதை வெறும் மனப்பாடம் என்பதாக அல்லாமல் இலக்கிய அறிவு வெளிப்படும் வகையில் வைக்கலாம்.
ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் நூலகம் இருக்க வேண்டும். பள்ளியிலேயே நூலகப் படிப்பு ஒரு பாடமாக இருக்குமென்றால் வீட்டிலும் தினமும் அரை மணிநேரம் புத்தக வாசிப்புக்கும் இடம் தரவேண்டிய நிலையும் ஏற்பட்டுவிடும்.
டிஜிட்டல் பரிவர்த்தனையில் நாம் செலுத்தும் பணத்தில் வரி என்று எப்படி முறையாகச் சென்று சேர வழி இருக்கிறதோ அதுபோல் ஒரு புத்தகம் விற்பனை னதும் எழுத்தாளரின் கணக்கில் ராயல்டி சென்று சேர்வதுபோல் ஒரு ஏற்பாடு செய்யவேண்டும்.
பிரபல எழுத்தாளர்கள் தாமே பதிப்பாளராக ஆவது, தனக்கான ராயல்ட்டியை மட்டும் சாம, தான, பேத, தண்ட வழிகளைப் பயன்படுத்திப் பெற்றுக்கொள்வது என்பதோடு நின்றுவிடாமல் பதிப்பாளர்களிடம் இது தொடர்பாக கொஞ்சம் தைரியமாகப் பேசவேண்டும். ஒரு பதிப்பகம் அது வெளியிடும் அனைத்து எழுத்தாளர்களுக்கும் உரிய ராயல்ட்டியைக் கொடுக்க எழுத்தாளர்களின் பிரதிநிதியாக முன்னால் நின்று குரல் கொடுக்கவேண்டும். என் புத்தகத்தை வெளியிடும் பதிப்பகம் அனைத்து எழுத்தாளருக்கும் ராயல்ட்டியைக் கொடுத்துவிடும் என்று கம்பீரமாகப் பேச முடியவேண்டும்.
ஒரு குறிப்பிட்ட கொள்கை சார்ந்து இயங்கும் பதிப்பகங்கள் கூடிக் கலந்து பேசி புத்தகத்தின் கலை/தரத்துக்கு கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். அகல உழுவதைக் காட்டிலும் ஆழ உழுவதே மேல். ஒரு குறிப்பிட்ட கருத்தியல் சார்ந்து பத்து சுமாரான புத்தங்கள் வருவதைவிட காத்திரமான ஒரே புத்தகம் வருவது நல்லது. செலவு, நேரம், பிற உழைப்பு அனைத்தையுமே முறையாகச் செலவிடவேண்டும்.
எழுத்தாளர்கள் ஒரு புத்தகம் எழுதுவதற்கு முன் பத்து புத்தகங்களைப் படித்து அந்தத் துறை சார்ந்து தம்மைத் தகுதிப்படுத்திக்கொண்டாகவேண்டும். தேவையான நேரங்களில் களப்பணி, பிற மொழிப் பயிற்சி எல்லாம் பெற்று செய்வனத் திருந்தச் செய்யவேண்டும்.
பிராண்ட் பில்டிங் என்பது முக்கியமான விஷயம். பெரும் பதிப்பகங்கள் ஏதேனும் ஒரு எழுத்தாளர் தானாக குட்டிக்கர்ணம் போட்டு மேலே வந்ததும் அல்லது ஏதேனும் சிறு பதிப்பாளர் ஒரு எழுத்தாளரைக் கண்டுபிடித்து கவனத்துக்குக் கொண்டுவந்ததும் பாய்ந்து சென்று அவர்களை வளைத்துப் போடுவதில் காட்டும் சாதுரியத்தை ஒரு திறமையான எழுத்தாளாரை/பிராண்டை உருவாக்குவதிலும் காட்டவேண்டும்.
ஒவ்வொரு பதிப்பகமும் தாம் வெளியிட்ட புத்தகங்களில் மிகச் சிறந்த ஐம்பது அல்லது 100 புத்தகங்களின் பின் அட்டைக் குறிப்பை தொகுத்து சிறிய வெளியீடாகக் கொடுக்கலாம். முன் அட்டையுடன் வண்ணத்தில் பி.டி.எஃப் கோப்பாக வெளியிடலாம். ஒத்த கருத்துள்ள பதிப்பகங்கள் அல்லது குறிப்பிட்ட கருத்தியல் சார்ந்த பதிப்பகங்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒரே தொகுப்பாக வெளியிடலாம்.
திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் எல்லாம் சிறுகதை, நாவல், கவிதை, அபுனைவு எழுத்தாளர்களைத் தமது திரைக்கதை-வசன குழுவில் கட்டாயம் வெளிப்படையாக இடம்பெறச் செய்யவேண்டும். இது காட்சி ஊடகத்துக்கும் நல்லது. எழுத்தாளர்களுக்கும் நல்லது.

உயிர்மை பஞ்சாயத்து என்னவென்று 
விமலாதித்த மாமல்லனிடம் கேட்டால் 
மேலதிகத்தகவல் சொல்வார் 

மகாதேவன் சார் ஒன்றை மறந்துவிட்டார் என்று நினைக்கிறேன். இது தமிழ்நாடு! திராவிடங்கள் என்ற போர்வையில் மலைவிழுங்கி மாதேவர்கள் ஆதிக்கம் செய்கிற பிரதேசம்! ராயல்டியா? யாருக்கு சார் வேணும்? நானும் புத்தகம் எழுதி வெளியிட்டு விட்டேன் என்று காட்டிக்கொள்கிற குபீர் எழுத்தாளர்கள் பெருகிக் கொண்டே வருகிற ஏரியா! 

மீண்டும் சந்திப்போம்.            

13 comments:

  1. மிக விளக்கமான பதிவு. ஒரு புத்தகம்
    வெளிவருவதில் இருக்கும் பின்புலம் பற்றி ஏதோ ஒரு பேட்டியில் திரு அகிலன் அவர்கள்,
    சொல்லிய கருத்துகள் நினைவுக்கு வருகின்றன.
    நேர்மையான எண்ணங்கள் வெளிப்பட்டு அனைவரும் ரசிக்கும்படியான புத்தகங்களின்
    உழைப்பு சிலசமயம் வீணாகிவிடுகிறது.

    பீலி பெய் சாகாட்டுக் கதைதான்.
    நீங்கள் சொல்லி இருக்கும் அத்தனை கருத்துகளுடனும் ஒத்துப் போகிறேன்.
    புத்தகம் படிப்பது இந்த நாட்டில் ஒரு கட்டாயமாகப் பள்ளிகளில்
    வலியுறுத்தப் படுகிறது.
    படித்த புத்தகங்களின் விமரிசனத்தையும் எழுதிக் கொடுக்க வேண்டும்.அதிலும் ஜெர்மன், ஆங்கிலப் புத்தகங்கள் என்று வகை வேறு.
    வீட்டில் தாய்மொழியில் பேசி அதில் திறன் பெறவேண்டும் என்றும்
    வலியுறுத்துகிறார்கள்.
    மிக அற்புதமான உரை. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் வல்லியம்மா!

      தமிழ் எழுத்தாளர்களிலேயே அகிலன் ஒருவர்தான் ராயல்டி வருமானத்தை விட்டுவிடாமல், எழுத்தின் மூலம் நாலு காசு பார்த்தவர் என்பதை அறிவீர்களா அம்மா? எழுத்தில் வெளிப்பட்ட ஆவேசம் நேர்மையெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராதென்பதை தெளிவாகப்புரிந்து கொண்டு தன்காரியத்தை சாதித்துக் கொண்டவர் என்பது சக எழுத்தாளர்களிடமிருந்து அறிந்துகொண்ட தகவல்.

      வாசிக்கும் பழக்கத்தைக் கட்டாயப்படுத்திக் கொண்டுவர முடியாது. மேல்நாடுகளில் குழந்தைகளுக்கு தூங்கப்போவதற்கு முன்னால், பெற்றோரோ, செவிலியரோ கதைப்புத்தகத்தை வாசித்துக் காண்பிக்கும் வழக்கமே பின்னாட்களில் புத்தகத்தைத்தானே படிக்க ஆரம்பிப்பதற்கான பிள்ளையார் சுழியாக! இங்கே குழந்தைகளுக்குக் கதை சொல்வது தாத்தா பாட்டி போன்ற குடும்ப உறவுகளே! புத்தகவாசிப்பில் எனக்கு என் அண்ணன்மார்களும், சில ஆசிரியர்களுமே ஆர்வத்தீயை மூட்டினார்கள். என்னிடமிருந்தல்ல, தன்னுடைய பள்ளி நண்பனிடமிருந்தே என்மகன் வாசிக்கும் பழக்கத்தைப் பெற்றான்.

      குழந்தைகளுக்குக் கதை சொல்வது எனக்கு ரொம்பவுமே பிடிக்கும் என்பது அவர்களை வாசிக்கத் .தூண்டுவதற்காகவே.

      Delete
  2. திரு சுதாகர் கஸ்தூரியின் நாவல் படிக்க வேண்டும்.
    புத்தக வடிவில் வந்தால் இன்னும் ஏற்றம்.
    மனம் நிறை வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. ஒரே இந்தியா நியூஸ் தளத்துக்கு சுட்டி கொடுத்திருக்கிறேனே அம்மா! அங்கே உங்களுடைய ஆசையைப் பதிவு செய்யலாமே!

      Delete
    2. புத்தக வடிவில் கொண்டு வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளேன். இது தினமணியில் தொடராக வந்தது

      Delete
    3. நன்றி எல் கே! வல்லியம்மா வேண்டுகோளுக்கு உடனே பதிலும் கிடைத்துவிட்டது! :-)))

      Delete
    4. நன்றி எல் கே! வல்லியம்மா வேண்டுகோளுக்கு உடனே பதிலும் கிடைத்துவிட்டது! :-)))

      Delete
  3. திரு சுதாகர் கஸ்தூரியின் நாவல் ஒன்று முன்பு படித்திருக்கிறேன்.  இந்தக் கதை நன்றாய் இருக்கும் என்று தெரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. நன்றாக இருக்கிறதென்றுதானே எல் கே விமரிசனத்தில் சொல்லியிருக்கிறார், ஸ்ரீராம்!!

      Delete
  4. வணக்கம் சார். நலம்தானே ?? உங்களுக்கும் முன்பே குழுமங்களை தலைமுழுகிட்டேன். இப்பொழுதைக்கு பேஸ்புக் ஒரே இந்தியா தளம், என்னுடைய தளம் lkarthik.in இந்த மூன்று இடங்களில் மட்டுமே எழுதுகிறேன். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றியும் மகிழ்ச்சியும்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம், நலமாக இருக்கிறேன் எல் கே! எனக்கு கூகிள் ப்ளஸ் போனபிறகு blogspot மட்டும்தான் எழுதிப் புழங்குகிற இடமாக இருக்கிறது. குழுமங்களில் எழுதிக்கொண்டிருந்த பல நண்பர்களைத் தேடி வாசிப்பது இன்றும் தொடர்கிறது .

      நண்பர்கள் எழுதுவதில் சிலவற்றை படித்ததில் பிடித்ததாக இங்கே அவ்வப்போது பகிர்வதுண்டு

      Delete
    2. கூகிள் ப்ளஸ் ஒரு கட்டத்தில் அலர்ஜி ஆகி விட்டது.பல காலம் களைத்து சமீபத்தில்தான் உருப்படியாக எழுத துவங்கியுள்ளேன். ஒரே இந்தியாவில் இன்று புதிய கட்டுரைத் தொடர் துவங்கி உள்ளேன் படிக்கவும்

      Delete
    3. தொலைவில் ஒரு அபயக்குரல் தானே! வாசித்துவிடுகிறன்!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!