அயோத்திதாசர் - பார்ப்பனர் முதல் பறையர் வரை! புத்தக முன்னோட்டம்!

நிறையத்தருணங்களில் எழுத்தாளர்கள் எழுதுவதோடு நிறுத்திக் கொள்வது அவர்களுக்கே மிக நல்லது என்பது அனுபவமாக ஆகிவருவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் சமீபகாலங்களில் எழுத்தாளர்கள் தங்களுடைய புத்தக அறிமுக நிகழ்வுகளில் கோமாளிகளாக ஆகிவருவதை ஒரு முகநூல் பகிர்வில் B R மகாதேவன் நேற்று எழுதியிருந்ததைப் படித்தேன். முதலில் அந்த எழுத்தாளர் என்ன பேசினார் என்பதைக் கொஞ்சம் பார்த்துவிடுங்கள்!


கிழக்கு வெளியீடாக வெளிவரும் T தர்மராஜ் எழுதிய அயோத்திதாசர் - பார்ப்பனர் முதல் பறையர் வரை வெளியீட்டு விழாவில் T தர்மராஜ்  பேசியதன் காணொளி 34 நிமிடம். கிழக்கு வெளியீடுகள் எதையும் வாங்குவதில்லை என்ற முடிவெடுத்து பலவருடங்கள் ஆகிவிட்ட படியால் இந்தப்புத்தகத்தை வாங்கவோ படிக்கவோ இயலாது. அதனால்  B R மகாதேவன் இந்தக் காணொளி குறித்து என்ன சொல்கிறார் என்று பார்த்து விடலாம். புத்தக விமரிசனமும் விரைவில் வரும் என்று சொல்லியிருக்கிறார். விமரிசனத்தில் புத்தகத்தை வாங்கிப் படிக்கத் தூண்டுதலாகக் கூட அமைந்து விடலாம். (நான் விரும்பாவிட்டாலும்  கூட என் மகன் கிழக்கு வெளியீடுகளை வாங்கிப் படித்துவிட்டு, என் தலையில் கட்டிவிட்டுப் போய்விடுகிறானே!?)

இருபது வருடங்களாக பாடுபட்டு ஒரு புத்தகம் எழுதியிருப்பதாகச் சொல்கிறார் தர்மராஜ். ஒரு புத்தகம் எழுத அதிக காலம் எடுப்பது என்பது அதன் மதிப்பையும் அதற்குச் செலவிட்ட அக்கறையையும் எடுத்துக்காட்டலாம். அல்லது அக்கறையின்மையையும் காட்டலாம்.
அயோத்தி தாசரை எங்கு எப்படிப் பொருத்த என்று ரொம்பவே சிக்கலாக இருக்கிறது என்கிறார்.
நல்லவரா கெட்டவரா என்றும் தெரியவில்லை என்றும் சொல்கிறார்.
என்ன குழப்பம்?
அயோத்தி தாசர் பறையர்களை பூர்வ பெளத்தர்கள் என்கிறார். இந்து மதம் பல்வேறு தரிசனங்களைத் தொகுத்துக் கொள்ளுதல், பக்தி இயக்கம் இவற்றின் மூலம் இப்போதைய நிலையை நோக்கி நகரத் தொடங்கியபோது பெளத்தர்களாக இருந்தவர்களும் இந்த மாற்றத்தை எதிர்த்தவர்களுமான பறையர்கள் விளிம்புக்குத் தள்ளப்பட்டார்கள் என்று அயோத்திதாசர் சொல்கிறார்.
இதில் குழம்ப என்ன இருக்கிறது. அவருடைய பார்வை தெளிவாக இருக்கிறது.
குழப்பம் எங்கு வருகிறதென்றால் நம்முடைய இன்றைய அரசியலுக்கு அவரைப் பயன்படுத்த முடியுமா முடியாதா என்பதை யோசிக்கும்போதுதான் சிக்கல் வருகிறது.
அயோத்தி தாசருக்குப் பின்னால் தமிழகத்தில் உருவான திராவிட சித்தாந்தம் 2000 ஆண்டுகளாக எங்களுடைய சிலேட்டு குச்சிகளை பிராமணர்கள் ஒளித்து வைத்துவிட்டார்கள் என்ற அபாரமான கண்டுபிடிப்பின் அடிப்படையில் உருவான இயக்கம்.
அயோத்தி தாசரை திராவிட இயக்கம் புறக்கணித்ததன் காரணம் மிக எளிது. அவர் பறையர்கள் மிகவும் உயர்ந்த நிலையில் இருந்ததாகச் சொல்கிறார்.
2000 ஆண்டு பீலாவின்படிப் பார்த்தால் அயோத்தி தாசர் சொல்வது தவறு. அயோத்தி தாசர் சொல்வதன்படி பார்த்தால் 2000 வருடப் பீலா தவறு.
இன்றைய பட்டியலினப் போராளிகளுக்கு திராவிட இயக்கத்தை எதிர்க்கவும் கூடாது... அதே நேரம் பட்டியலினத்தினர்தான் முன்னோடி என்பதைச் சொல்லியும் ஆகவேண்டும்.
திராவிட இயக்கத்துக்கோ 2000 வருட கட்டுக்கதையை விட்டுக் கொடுக்கவே முடியாது. பள்ளர் பறையருக்கு கை கால் கழுவவே நாங்கள்தான் கற்றுக்கொடுத்தோம் என்பதுதான் திராவிடப் பெருங்கதையாடல். எனவே அவர்கள் அயோத்தி தாசரையோ அவருடைய பெருமிதக் கூற்றுகளையோ ஏற்கவே மாட்டார்கள்.
ஆக குழப்பம் என்பது அயோத்தி தாசரிடம் இல்லை. அவரை எப்படிப் பயன்படுத்துவது... இன்றைய அதிகார மையத்தை எதிர்க்காமல் எப்படி நம் ஜாதியை எப்படி முன்னிலைப்படுத்துக்கொள்வது என்ற அரசியல் கணக்குகளைப் போடும்போதுதான் பிரச்னையே வருகிறது.
இந்தப் பிரச்னைக்கு முடிவே கிடையாது. இது எப்படி என்றால் திருடனைப் பிடிக்கவும் கூடாது. களவு போன பொருள் கிடைக்கவும் வேண்டும் என்பது போன்ற கனவு. ஒன்று திருடனோடு சேர்ந்து கொள்ளையடி... அல்லது திருடனை விரட்டிப் பிடி. இதுவும் வேணும். அதுவும் வேணும்னு சீன் . போட்டாக் குழப்பமாத்தான் இருக்கும்.
இந்த இடத்தில் ஜெயமோகன் அயோத்தி தாசர் பற்றிச் சொன்னது மிகவும் தெளிவாகவே இருக்கிறது.
இந்து பெருங்கதையாடலுக்கு மாற்றாக இந்து மதத்தின் அதே புராண மரபை எடுத்துகொண்டு எதிர் கதையாடலை அயோத்தி தாசர் உருவாக்குகிறார் என்கிறார்.
இதைத் தொடர்ந்து நீட்டித்துப் பார்த்தால், இந்து சமூகத்தின் அனைத்து தரப்பினரின் அறிவுடனும், விவாதங்களுடனும், சம்மதத்துடனும் இன்றைய இந்துப் பெரு மரபு உருவாகி வந்திருக்கிறது. அதற்கான எதிர் மரபை உருவாக்கி வெற்றி பெறவேண்டுமென்றால் அதே விஷயங்கள் எல்லாம் நடந்து அதை சமூகம் முழுவதுமே ஏற்றுக்கொண்டால்தான் நடக்கும்.
அயோத்தி தாசர் செய்ததென்பது பொங்கிப் பிரவகிக்கும் ஒரு பிரமாண்ட நதியை குச்சியால் கோடு கிழித்து திசை மாற்ற முயற்சி செய்வது போன்ற செயல். இலக்கிய கதாபாத்திரத்தை வைத்துச் சொல்வதென்றால், பிரமாண்டக் காற்றாலை விசிறிகளுடன் மோதும் குதிரை வீரனின் சாகசம் போன்றது.
இன்னொரு கோணத்தில் பார்த்தால், பறையர்கள் மிகுந்த அந்தஸ்துடன் இருந்தனர் என்ற வரலாற்று உண்மைக்கான ஆதாரமாக அவருடைய ஆய்வைப் பயன்படுத்திக்கொள்ளமுடியும்.
எல்லா ஜாதிகளுமே தம்மை ஆண்ட பரம்பரையாக (தமது முன்னோர்கள் அரச குடிகளாக இருந்ததாக) சொல்வது வழக்கம். இது வெறும் அரசியல் கோஷம் அல்ல.
பிரிட்டிஷார் வருவதற்கு முன்பாக இந்தியாவின் ஒவ்வொரு கிராமமும் தனிக் குடியரசாக சுய ஆட்சி அதிகாரத்துடன் தான் இருந்தது. எல்லா ஜாதிகளுமே அவர்களுடைய பகுதிகளில் மிகுந்த செல்வாக்குடன் தான் இருந்திருக்கிறார்கள்.
ஆனால், பட்டியல் இன, திராவிடப் போராளிகள் இந்த உண்மையை எதிர்கொள்ளத் தடுமாறுகிறார்கள். ஏனென்றால், கிறிஸ்தவ ஆதிக்க சக்திகளுக்கு அந்த உண்மைகள் பிடிக்காது. எனவே, தர்மராஜ் போன்றவர்களுக்கு வரும் சிக்கல் என்பது கிறிஸ்தவ ஆதிக்க சக்திகளுடைய செல்லப் பிள்ளையாக இருந்தபடியே உண்மையை (சுய ஜாதி சாதனைகளை) எப்படிப் பேசுவது என்றதை அடிப்படையாகக் கொண்டது.
வாய்ப்பே இல்லை ராஜா... உலகத்தை ரட்சிக்கும் பெரும் பொறுப்பை எடுத்துக்கொண்டிருப்பவர்களுக்கு உலகத்தோரைப் பாவி என்று சொன்னால்தான் வியாபாரம் நடக்கும்.
ஒரு சிறிய உதாரணம் சொல்கிறேன்.
அயோத்தி தாசர், ரெட்டை மலை சீனிவாசன் என்ற பெயர்கள்தான் ஒரு ஆய்வாளருக்கு, குறிப்பாக கிறிஸ்தவ செல்வாக்குக்கு உட்பட்ட பட்டியலின ஆய்வாளர்களுக்குப் பெரும் இடைஞ்சலாக இருக்கும்.
மனு ஸ்மிருதியில் நான்காம் வர்ணத்தினர் இழிவைச் சுட்டும் வகையில்தான் பெயரைச் சூட்டிக் கொள்ளவேண்டும் என்று இருப்பதாக எடுத்துக்கொண்டுதான் ஆய்வுலகத்துக்கே வருவார்கள். அவர்களுக்கு ராம தாஸர் என்ற பெயர் கூட அல்ல; ராமருடைய ராஜ்ஜியத்துக்கே தாஸர் என்று சூட்டப்பட்டிருக்கும் பெயர் நிச்சயம் மிகுந்த தர்ம சங்கடத்தையே ஏற்படுத்தும்.
கிறிஸ்தவ எஜமானர்கள் சொல்லித் தந்திருப்பதுபோல்தான் ஜாதி என்பது பாரதத்தில் இருந்திருக்குமா என்ற கேள்வியை அது எடுத்த எடுப்பிலேயே ஒருவர் மனதில் எழுப்பும். ஆனால், உண்மையின் அந்த திசையில் நடக்க ஆரம்பித்தால் கிறிஸ்தவ ஆதிக்க சக்திகள் உருவாக்கித் தரும் பரலோக சாம்ராஜ்ஜியத்துக்குப் போகமுடியாது.
எனவே முதல் காலடியை எடுத்து வைத்த உடனேயே யு டர்ன் போட்டுவிடுவதுதான் ஆய்வாளருக்கு நல்லது.
ஜாதி அமைப்பு முற்காலத்தில் வேறாக இருந்திருக்கும் என்று யோசிக்கத் தொடங்கினால் பிரிட்டிஷாரால்தான் இன்றைய இழி நிலை என்ற உண்மையை நோக்கிக் கொண்டு சென்றுவிடும்.
பாரத நில உடமை அமைப்பை விட பிரிட்டிஷ் கால தோட்டப் பணிகளுக்கான கட்டாய இடப்பெயர்ச்சிகளும் கொடுமைகளும் பல மடங்கு அதிகம் என்ற உண்மையை நோக்கிக் கொண்டு சென்றுவிடும்.
ஆனால், அவற்றைப் பேசினால் சிந்தனையாளர் பட்டமோ, அறிவுஜீவி ஒளி வட்டமோ எல்லாம் கிடைக்காது. எனவே முந்தைய மேலான நிலையை முந்தைய ஆதிக்க சக்தியே பறித்தது என்று இட்டுக்கட்டிச் சொன்னால்தான் சுக ஜீவிதம் சாத்தியம். அயோத்தி தாசராலும் அதுவே முன்வைக்கப்பட்டது.
*
அப்பறம் ஓம் என்ற ஒற்றை எழுத்து அல்லது சப்தத்துக்குள் சம்ஸ்கிருதம் அனைத்தையும் அடக்கப் பார்க்கிறது. தமிழ் மொழியில் மெய் எழுத்துகள் 18 இருப்பதென்பது அதன் பன்மைத்தன்மையைக் காட்டுகிறது. அதோடு மெய் எழுத்துகளுக்கு தனியான ஒலியே கிடையாது. க் என்பதை இக் என்றுதான் ஒலிக்கவே முடியும். ஒலிப்பே இல்லாத பன்மையைக் கொண்ட தமிழுக்கும் ஓம் என்ற ஒற்றை சப்தத்துக்குள் அனைத்தையும் அடக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் இடையில் பெரிய தத்துவ முரண் இருக்கிறது என்றொரு அரிய உண்மையைக் கண்டுபிடித்து முன்வைக்கிறார்.
மூக்கு புடைப்பா இருந்தா இப்படியெல்லாம்தான் யோசிக்கத் தோன்றும்.
தமிழில் ஒரே ஒரு ’க’ தான் உண்டு. சம்ஸ்கிருதத்தில் நாலு ’க’ உண்டு. அதனால் அதுதான் உண்மையிலேயே பன்மைத்துவத்தை ஆதரிக்கிறது என்று பதிலுக்கு ஒருவர் பினாத்தவும் முடியும்.
இந்த உலகின் செவ்வியல் பெரு மொழிகளில் பிற எந்த மொழியையும் அழிக்காத ஒரே மொழி சம்ஸ்கிருதம் மட்டுமே. சம்ஸ்கிருதம் உருவான பாரதத்தில்தான் இன்றும் எண்ணற்ற மொழிகள் கருக்குலையாமல் இருந்துவருகின்றன.
பன்மைத்துவத்தை எது ஆதரிக்கிறது என்பதைக் கண் முன்னால் இருக்கும் தெளிவான உதாரணங்களின் தடயங்களின் அடிப்படையில் பார்க்காமல் மொழியியல் இட்டுக்கட்டுகளின் மூலம் அசட்டுத்தனமான அரசியலை முன்வைப்பது மிக மிக அறிவீனமான செயல். அதுவும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, கம்யூனிஸ அரண்களுக்குள் இருந்துகொண்டு இதைப் பேசுவதென்பது அப்பட்டமான அயோக்கியத்தனம்.
*
அது போல் ’கம்மென்று’ என்று ஒரு வார்த்தை சங்க இலக்கியத்திலேயே இருப்பதைப் பெருமிதத்துடன் சொல்கிறார். ஆனால், அந்த கம் என்பது gam என்ற உச்சரிப்பை உடையது. தமிழில் kam என்ற உச்சரிப்புக்கான வரிவடிவம் மட்டுமே உண்டு. gam என்ற ஒலிக்கான எழுத்து சம்ஸ்கிருதத்தில்தான் உண்டு. தமிழானது அப்படியாக சம்ஸ்கிருதத்தின் ஒலிப்பை ஏற்றுக்கொள்ளும் சகோதர மொழியாகத்தான் ஆதியில் இருந்தே திகழ்ந்திருக்கிறது என்பதுதான் சரியான தீர்மானமாக இருக்கமுடியும். சுனா வெனாவோட காதுல விழற மாதிரி இதை அடிச்சிச் சொல்லியிருக்கணும்.
அப்பறம், ஆய்வுக்கட்டுரைகளை பேராசிரிய உலகம் அனைவருக்கும் புரியும் வகையிலும் படைப்பூக்க நடையிலும் எழுத வேண்டும் என்ற பால பாடத்தை விலாவாரியாக பொது மக்களுக்கு விவரிக்கிறார். அதெல்லாம் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மாநாட்டில் பேசவேண்டியது. அதோடு, தான் அப்படி படைப்பூக்கத்துடன் எழுதுவதையே பெரிதும் சிலாகித்துக் கொள்கிறார்.
பாஸ், ஸ்டைல் மட்டும் இருந்தா வெறும் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு மட்டும்தான் பிடிக்கும். ஸ்டஃபும் இருந்தாத்தான் சென்ஸிபிளானவங்களுக்கும் பிடிக்கும்.
தன் அரசியல் சார்ந்து உள்ளடக்கம், வடிவம் இரண்டிலும் சிறப்பாகச் செயல்படும் ஒருவர்தான் தர்மராஜ். (க்ராஸ் பேட்) சிக்ஸ், ஃபோர் அடிக்கக்கூடியவர் சிங்கிள் எடுக்கறதை சிலாகிக்கறது கொஞ்சம் குழந்தைத்தனமாவே இருந்தது.
இதுல இன்னொரு வேடிக்கை என்னவென்றால் ஐந்தாறு வெள்ளைக்காரர்களின் பெயர்களை, பக்கத்து வீட்டுக்காரன் மாதிரி ரொம்பவே உரிமையோட பேசறார். அயோத்தி தாசரையே அந்த பக்கத்துவீட்டு வெள்ளைக்காரனைப் படிச்சதுக்கு அப்பறம்தான் புரிஞ்சதுன்னு அசட்டுத்தனமான அலட்டல் ஒரு பக்கம்..
இந்த அரை மணி நேர உரைக்கு உலகம் முழுவதிலும் இருந்தும் ஏகோபித்த பாராட்டுகள் வேற...
பின்ன சவேரியார் க்ரூப்பு, ச்சே.என்.யு., பேர் ஆசிரியர்... அப்படின்னா இளிச்சுக்கிட்டே பக்கத்துல நின்னு செல்ஃபி எடுத்துக்க யாருக்குத்தான் கசக்காது.
நீங்க இன்னும் ரொம்ப வளரணும் தம்பிங்களா...
(புத்தக விமர்சனம் வெகு விரைவில்) 

அயோத்திதாசர் குறித்து கொஞ்சம் விரிவாகத் தன் தளத்தில் எழுதிய எழுத்தாளர் ஜெயமோகன் பேசியதன் காணொளி 30 நிமிடம். அயோத்தி தாரைப் பற்றிய ஒரு தெளிவான உரை என்றே சொல்ல வேண்டும்.     சுனா வெனா பேசியதை பார்க்கவேண்டுமானால் (நான் பார்க்கவில்லை)  வலப்பக்கம் சுட்டி இருக்கும். 16 நிமிடம். 

வாசிப்பு அனுபவம் இந்தமாதிரிக் கரடுமுரடாகவும் இருக்கக் கூடும் என்ற அனுபவத்துக்காகவாவது இதைப் படிக்க நினைக்கிறேன். ஆனால்  படிப்பேனா என்று உறுதியாகச்  சொல்ல முடியாது.

மீண்டும் ஒரு வாசிப்பு அனுபவத்தோடு சந்திப்போம்.    
  
  

7 comments:

  1. சுவாரஸ்யமான அறிமுகம்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஸ்ரீராம்! சுவாரசியமான அறிமுகம் என்பதெல்லாம் சரி! என்ன சுவாரசியம் என்பதைப் புரிந்து கொள்ள தர்மராஜ் பேசியதன் காணொளியைப் பார்த்தால் தான், B R மகாதேவன் அதிலுள்ள இடியாப்பச் சிக்கலை விளக்குவதையும் புரிந்துகொள்ள முடியும்.

      ஸ்ரீராமிடம் கேட்கக்கூடாத கேள்விதான்! இருந்தாலும், காணொளியைப் பார்த்தீர்களா? :-))))))

      Delete
    2. பார்த்துவிடலாம் என்ற பிளானில்தான் இருக்கிறேன் ஸார்!!

      Delete
    3. கீழே ஜெயமோகன் பேசிய 30 நிமிட் காணொளிக்கான சுட்டி இருக்கிறது. முடிந்தால் அதையும் பார்த்து விடுங்கள் ஸ்ரீராம்! விஷயத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும். இந்த மாதிரி விஷயங்களில் பிளான் போடுவதெல்லாம் சரிவராது. சௌகரியப்படுகிற நேரமாக ஒதுக்கிப் பார்த்து முடித்துவிடுவது ஒன்றுதான் உசிதமானது ஸ்ரீராம்!

      Delete
    4. எழுத்தாளர் பேசியதை மூன்று தவணைகளாகக் கேட்டு விட்டேன்.  அதற்கு அபிப்ராயம் கேட்காதீர்கள்.  சொல்லத்தெரியாது.  இனி ஜெமோ அப்புறமாய்க் கேட்கவேண்டும்!  

      Delete
    5. திரு B R மகாதேவன் இந்தப் புத்தகத்துக்கு விமர்சனம் எழுதுவாரே ஆயின், அதையும் இங்கு எடுத்துக் போடுங்கள், அல்லது சுட்டி கொடுங்கள்.

      Delete
    6. ஜெயமோகன் பேசியதை முதலில் கேட்டுவிட்டு, அப்புறமாக தர்மராஜ் பேசியதைக் கேட்டால், தர்மராஜ் அதிலிருந்து எதையும் எடுத்துக்கொள்ளாமல் உளறிய தமாஷ் புரியவரும். தர்மராஜுக்கு ஒரு சப்பைக்கட்டை ஜெயமோகன் எடுத்துக் கொடுத்தும் கூட அதைப்பயன்படுத்திக் கொள்ளாத தெரியாத அளவுக்கு அப்படி ஒரு தடுமாற்றம்!

      மகாதேவன் இதற்கு விமரிசனம் எழுதினார் என்றால் சுவாசிக்கப்போறேங்க தளத்தில் போடுகிறேன் ஸ்ரீராம்!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!