கடந்த வருடமே வெளியாகியிருக்க வேண்டிய படம் சேரனின் ராஜாவுக்கு செக்! ஜனவரி 24 அன்று திரை அரங்குகளில் வெளியாகி இருக்கிறது. சேரனின் படம் என்பதால், பார்ப்பதில் மனத்தயக்கம் எதுவுமில்லாமல் படத்தைப் பார்த்தேன். பார்த்தபிறகு தான் தெரிந்தது இது சேரன் எழுதி இயக்கிய படமில்லை, சேரன் நடித்திருக்கிற படம் மட்டுமே என்று! சேரன் கொஞ்சம் கூட ஏமாற்றவில்லை! இயக்குனர் சாய் ராஜ்குமார் ஏற்கெனெவே தமிழில் மழை என்ற ஜெயம் ரவி, ஷ்ரியா சரண் நடித்த படத்தை இயக்கியவர்! தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பல நடிகர்கள் தமிழுக்குப் புதிது.
ட்ரெய்லரைப் பார்த்தால் ஒரு த்ரில்லர் ரகமாகத் தெரிகிறது இல்லையா? இயக்குனர் இதை ஒரு எமோஷனல் த்ரில்லர் என்று சொல்லிக் கொள்கிறார். படத்தில் சேரன், ராஜா செந்தூர்பாண்டி என்ற போலீஸ் அதிகாரியாக! ஒரு மிக அபூர்வமான, நாட்கணக்கில் தூங்குகிற ஒரு வியாதி! மனைவி காரணமேதும் சொல்லாமல் விவாகரத்து கோருவதில், வழக்கு 10 ஆண்டுகளாக இழுத்துக் கொண்டே வந்து, நீதிபதி முன் விசாரணைக்கு வருவதில் இருந்து படம் தொடங்குகிறது. பத்துவருடமாக மகளைப் பிரிந்து இருந்தேன் ஒரு 10 நாள் தன்னுடன் இருக்க ஒப்புக் கொண்டால் விவாகரத்துக்குச் சம்மதிப்பதாக நாயகன் சொல்ல, அடடே! இந்த தகப்பன் மகள் பாசத்தை ஏற்கெனவே பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பின்னிப் பெடல் எடுத்துவிட்டாரே என்று நினைத்தால், அங்கே ஒரு திருப்பம்!
அங்கிருந்து கதைக்களம் இயக்குனர் சொன்ன மாதிரி ஒரு எமோஷனல் ட்ராக்குடன், ஒரு க்ரைம் த்ரில்லர் ஆகப் பயணிக்க ஆரம்பிக்கிறது. மகள் பத்தாம் நாள் முடிவில், தந்தைக்கு சர்ப்ரைஸாக நான் ஒருவரைக் காதலிக்கிறேன் என்று ஒருவனை அறிமுகப் படுத்துகிற மாதிரி! அங்கே pause செய்துவிட்டு, சேரன் முந்தைய நாட்களில் ஒரு போலீஸ் அதிகாரியாக, சிறைக்கு அனுப்பிய ஒரு வசதியான இளைஞன் விவகாரத்தை பார்வையாளர்களுக்கு சொல்லிவிட்டு, கதை மேலே நகர்கிறது. மகளைப் பணயமாக வைத்து வில்லன் ஆடுகிற விளையாட்டில் சேரன் எப்படித் தவிக்கிறார்? மகளை மீட்க முடியுமா? இப்படிப் பார்வையாளர்களை சூடேற்றிக் கொண்டே கதை மெல்ல மெல்ல நகர்ந்து சேரன் எப்படி ஜெயிக்கிறார் என்பதோடு முடிகிறது.
V 1 மர்டர் கேஸ் மாதிரியே இதுவும் கூட ஒரு பட்ஜெட் படம்தான்! எடுக்கப்பட்ட விதத்தை விட, இயக்குனர் தான் சொல்ல விரும்பிய ஒரு மெசேஜை எப்படி உறுத்தாமல், பா ரஞ்சித் மாதிரி பிரசார நெடி தூக்கலாக இல்லாமல், அளவோடு சொல்லியிருந்தார் என்பதற்காகவே ஒரு விமரிசனமாக எழுதினேன்.
இங்கே இந்தப்படத்தில் இயக்குனர் சமூகத்துக்கு மெசேஜ் எதையும் சொல்லமுற்படவில்லை. தந்தை மகள் பாசப்பிணைப்பு என்று சேரனுக்கு ராசியாகிப் போன ஒரு ட்ராக் ஒருபக்கம்! சேரனால் சிறைக்குப் போன வில்லன் நண்பர்கள் பரிவாரத்தோடு, அதே பாசப் பிணைப்பை வைத்தே, பழிவாங்க முனைகிற ட்ராக் இன்னொருபக்கம் என்று விரிகிற கதைக்களம். அலுப்புத்தட்டாமல் படம் நகர்வதில் சேரனுக்கு இருக்கிற brand image ஒரு முக்கியமான காரணம்.
படத்தில் பரிச்சயமான முகங்கள் என்று பார்த்தால் சேரனைத் தவிர சப்போர்டிங் ரோலில் ஸ்ருஷ்டி டாங்கே மற்றும் அந்தநாட்களில் பிரபலமாக இருந்த கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்த இர்ஃபான் வில்லனாக, என்று இருவர்தான். சேரனின் மகளாக நடித்திருக்கும் நந்தனா வர்மா தமிழுக்குத்தான் புதிதே தவிர மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பிரபலம் தான்! இசையமைப்பாளர் வினோத் யஜமான்யா கூட, அப்படித்தான்! மேலே கடவுளே கடவுளே பாடலைக் கூட இசையமைத்துப் பாடியிருப்பவர் அவர்தான்! பாட்டும் கூடக் கேட்க மிகவும் நன்றாகத்தான் இருக்கிறது!
மிகப்பெரிய லாஜிக் சொதப்பல் என்று பார்த்தால், ட்ரெய்லரில் சொல்கிறார்களே, நாட்கணக்கில் தூங்கும் வியாதி என்று, அது வில்லனுக்கு கூடத் தெரிந்து இருக்கிறது! ஆனால் பணியாற்றும் போலீஸ்துறைக்குத் தெரியாதா? எப்படி ஒரு போலீஸ் அதிகாரியாக நீடிக்கிறார் என்றெல்லாம் தமிழ்ப்பட இயக்குநர்களைக் கேள்வி கேட்டுவிட முடியாதே!
சேரனுக்காக, இந்தப்படத்தை ஒருமுறை பார்க்கலாம்! அதை இன்னொருமுறை இங்கே அழுத்தமாகப் பதிவு செய்கிறேன்!
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment
ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!