மண்டேன்னா ஒண்ணு! #அரசியல் தமிழகம் தனிரகம் தான்!

தமிழ்நாட்டின் அரசியல் காலத்தைக் கொஞ்சம் கூர்ந்து கவனித்தீர்களானால் நாட்டின் எந்தப்பகுதியோடும் ஒட்டாமல் எதையும் ஏற்காமல் தனித்தீவாகவே வைக்க முயற்சிகள் காலம்காலமாக நடந்துவருவதை பார்க்க முடியும். பிராந்தியவாதம், பிராந்தியக்கட்சிகள் செய்து வரும் திரிசமன் இது என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதே இல்லை. 1962 களில்  தலைதூக்க ஆரம்பித்த இந்த விஷவிருட்சம் சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்ந்து வலுவாக வேர் பிடித்திருப்பதில், அகற்றுவதன்பது மிகவும் கடினமான காரியம். நண்பர் மாணிக்கம் சிலகாலமாக கழகங்கள் இல்லாத தமிழகம் என்று கொடிபிடித்து வருவதில், கருத்து உடன்பாடு இருந்தாலும் செயல்வடிவத்தில் அதைச் சாதிப்பது எவ்வளவ் கடினமானது என்பதை அனுபவபூர்வமாகக் களத்திலேயே பார்த்ததுதான்!

  
கட்சிகளை உடைப்பதில் தகப்பன் காலத்திலிருந்தே அனுபவம் நிறைய இருந்த இந்திரா காண்டியே, மாநிலக் கட்சிகளுடன் கூட்டு வைத்துக் கொள்ள வேண்டிய அவலத்துக்குத் தள்ளப்பட்டது சமகால வரலாறுதான்! இந்திரா காலத்தில் PMRY போன்ற மத்திய அரசுத்திட்டங்களில் காசுபார்ப்பது காங்கிரஸ் காரனுக்கென்றும் IRDP போன்ற திட்டங்களில் மாநிலக் கூட்டாளி காசுபார்ப்பதென்றும் ஒரு அறிவிக்கப்படாத கூட்டணி தர்மத்தை, பொதுத்துறை வங்கிகளில் கொள்ளை அடிப்பதற்கு நடைமுறைப்படுத்தின பழைய காலம். மாநிலத்தில் தனிக்கொள்ளை!மத்தியிலே கூட்டுக கொள்ளை! என்பதாக கூட்டணி தர்மத்தில் மத்தய மாநில உறவுகள் தெளிவாக வரையறுக்க படுகிற காலமும் பிறகு வந்தது! UPA 1 & 2 (2004-2014)  


ஆனால் மாமியாரை மிஞ்சிய மருமகளாக சோனியா நிழல் பிரதமராக இருந்த 10 ஆண்டுகளின் கதையே வேறாக! மாநிலக்கட்சிகள் தங்களுடைய திறமையைப் பயன்படுத்தி காங்கிரசுக்கு சம்பாதித்துக் கொடுத்து விட்டு அவர்களும் சம்பாதித்துக்கொள்ளலாம் என்பதே கூட்டணி தர்மமாக இருந்ததை ஐமுகூ வெர்ஷன் 1 & 2 வில் பார்த்த ஞாபகம் இருக்கிறதா? இப்போது அகில இந்தியத் தலைமையோடு (சோனியா & வாரிசுகள்) நெருக்கமான உறவில் இருக்கும் திமுக, தன்னுடைய இருப்பைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, கூட்டணியை முறிக்காது என்பதுதான் கள யதார்த்தம் என்றாலும் கூட்டணியில் விரிசலா, விரிசல் வருமா என்பதெல்லாம் கொஞ்சம் அதிகப்படியான கற்பனை!

இதில் புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயம், காங்கிரசுக்கு இன்னமும் கூட நாடெங்கிலும் வாக்கு வங்கி ஒன்று இருந்தாலும், ஜனங்களிடமிருந்து மிகவும் அந்நியப்பட்டுப்போன பலவீனமான ஸ்தாபன அமைப்பு, காசுபார்ப்பதில் நாற்காலிக்காக அடித்துக் கொள்வதில் மட்டுமே குறியாக இருக்கும் தலைவர்கள் என்று சோனியா காண்டியின் தலைமையை ஏற்பதற்குத் தயங்கும் மாநிலக்கட்சிகள் என்றாகிக் கொண்டிருப்பதிலும் கூட திமுக  தனித்து நிற்பதைக் கவனிக்க முடிகிறதா? மம்தா பானெர்ஜி மாதிரி தைரியமாகத் தனித்தே களமிறங்குவது, திமுகவுக்கு சாத்தியமே இல்லை. விசிக, இடதுகள், மதிமுக மாதிரி பைசா பிரயோசனமில்லாத உதிரிகளையும் கட்டியழ வேண்டிய நிலைமையில் தான் உள்ளாட்சித் தேர்தல்களில் 44% வாக்குகளை வாங்கியதாகச் சொல்லப் படுகிற திமுக இருக்கிறது என்பது மாநிலக் கட்சிகளுடைய வீச்சும் செல்வாக்கும் தேய்ந்து கொண்டே வருகிறது என்பதற்கான மிகச்சிறந்த உதாரணம்.


காங்கிரஸ்காரனால் சோறுதண்ணி இல்லாமல் கூட இருக்க முடியும்! !ஆனால் பதவி நாற்காலி இல்லாமல் உயிர் வாழமுடியாது என்பதை இந்தப்பக்கங்களில் பல முறை சொல்லி வந்திருக்கிறேன். மஹாராஷ்டிராவில் சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து மந்திரிகளான மிதப்பில் குறிப்பிட்ட அரசு பங்களா தான் வேண்டும்! அந்தக்குறிப்பிட்ட இலாகாதான் வேண்டும் என்கிற குடுமிப்பிடி சண்டை ஓயாததில் ஒரு காங்கிரஸ் தலைவரே சிவசேனாவை ரொம்பவமே நெருக்காதீர்கள் உள்ளதும் போய்விடும் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார். திமுகவைப்பற்றிப் பேசும் போது எதற்கு மஹாராஷ்டிரா உதாரணம்? பிச்சையெடுப்பவனுக்கு எதைப்பிச்சைபோட வேண்டும் என்று அதிகாரம் செய்கிற உரிமை இல்லை! beggars can't be choosers!


ரவீந்திரன் துரைசாமி பார்வையில் ஒரு 32 நிமிட உரையாடல்  கொஞ்சம் யோசித்துப்பார்க்க உதவியாக.

மீண்டும் சந்திப்போம்.  

2 comments:

  1. இதுவரையிலும் வந்த பிரதமர்கள் எவர் மாநில மொழிகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டியுள்ளனர்? எவர் மாநிலங்களின் உரிமையை மிதிக்காமல் மதித்துள்ளனர்? எவர் 356 யை காரணம் காரியம் இல்லாமல் பயன்படுத்தினர்? மொத்த மாநிலமே சூனாமியில் பாதித்த போது எவர் இதுவரையிலும் மொத்தமாக நிதியுதவி அளித்து மாநிலத்தை காப்பாற்றி உள்ளனர்? ஐந்தாண்டுகளில் ஒரு பிரதமர் நினைத்தால் மாநில மொழிகளின் அடிப்படையாகப் பேச கற்றுள்ளனர்? மத்திய அரசு அதிகார வர்க்கத்தில் மாநில பிரதிநிதித்துவம் கொடுத்துள்ளனர். இப்படி எத்தனையோ பட்டியிடல முடியும். பிரிவினைவாதம் பேச மாட்டேன். ஆனால் எந்த காலத்திலும் டெல்லி அரசியல் என்பது வட மாநிலங்களுக்கு மட்டுமே உரியதாக உள்ளது. அது மாநில அரசியலுக்கு எந்த வகையிலும் உதவுவது இல்லை என்பதனை உங்களால் மறுக்க முடியுமா?

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஜோதிஜி!

      மொழிவாரி மாநிலங்கள் என்று பிரிக்கப்பட்டதன் பக்கவிளைவுகளில் இங்கே வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்று அண்ணாதுரை போன்றவர்கள் வசனம்பேசி வளர்வதற்கு உதவியாக இருந்ததும் ஒன்று. இந்த மொழிக்காவலர்கள் வந்து என்ன மொழியை வளர்த்தார்கள்? இதைக்கொஞ்சம் யோசித்துப்பார்த்தாலே தமிழால் இணைவோம் என்று இன்றைக்கும் கூவிக்கொண்டிருப்பவர்கள், அந்தக்கூவலைத்தாண்டி மொழி, இலக்கியம், பண்பாட்டு விழுமியங்களைக் காப்பாற்ற என்ன செய்து கொண்டிருக்கிறார்கள், சொல்லுங்கள்!

      ஒரு பிரதமருடைய வேலை, ஒரு மாநிலமுதல்வரின் வேலை என்ன என்பது அரசியல் சட்டத்திலேயே தெளிவாக வரையறை செய்யப்பட்டதை மதிக்காமல் மனம்போனபோக்கில் நடந்துகொள்வதைத்தவிர மாநிலக்கட்சிகள் என்ன சாதித்துவிட்டன என்று சொல்ல வருகிறீர்கள்?

      சில குறைகளை ஊதிப்பெரிதாக்கினதைத் தவிர இங்கே கழகங்கள் சாதித்ததென்ன? என்னால் நிறைய விவரங்களை அடுக்க முடியும். தரவுகள் இல்லாமல் எதையும் நான் பேசுவதில்லை. இந்தப்பதிவில் நான் சுட்டிக் காட்ட விரும்பிய கள யதார்த்தம், திமுக இன்றைக்கு சிறுபான்மையினர் வாக்குவங்கியில் மட்டுமே ஜீவிக்க முடிகிறது, அதற்கு செகுலர் வேஷம்போடும் காங்கிரசின் தயவு மிகவும் அவசியம். திமுகவால் மம்தா பானெர்ஜி மாதிரி தனித்து நின்று முண்டா தட்டமுடியாத அளவுக்கு பலவீனமாக இருக்கிறது என்பது மட்டுமே!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!