தம்பட்டம் :: அடிப்பதிலும் ஒரு நியாயம் இருக்க வேண்டாமா?

இந்தப்பக்கங்களில் Cambridge Analytica முதற்கொண்டு இங்கே பிரசாந்த் கிஷோரின் IPAC நிறுவனம் வரை வெகுஜன அபிப்பிராயங்களை மாற்ற எப்படி வேலை செய்கிறார்கள் என்பதைப் பல பகிர்வுகளில் பார்த்து  இருக்கிறோம். அது நினைவில் இருக்குமானால், First Post தளத்தில் இன்றைக்கு வெளியாகியிருக்கிற Massive tweet volumes, complex hierarchies, coordinated attacks: Hacker reveals how BJP, Congress IT cells wage war on social media  என்று நீரத் பந்தரிபாண்டே எழுதியிருக்கிற செய்திக் கட்டுரையை புரிந்து கொள்ளவும், அதிர்ச்சி இல்லாமல் கடந்துபோகவும் முடியும்! 

 
இப்படிப்படம் போட்டு இதுதான் காங்கிரசின் IT Cell இயங்குகிற விதம் என்று சொன்னால் என்னவென்று புரிந்து கொள்வீர்கள்? உதாரணமாக எனக்கு ட்வீட்டர் கணக்கு இருக்கிறது. காங்கிரஸ், பிஜேபி  புள்ளிகள் என்ன பகிர்கிறார்கள் என்பதை நான் அதிகம் பார்ப்பதும் இல்லை, அவைகளைப் பகிர்ந்து கொள்வதும் இல்லை என்றால் இவர்களுடைய பிரசார யுத்தம் என்ன மாதிரியான விளைவை என்னிடம் உருவாக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்? அபிப்பிராயங்களை நானாக யோசித்துத்தான் உருவாக்கிக் கொள்கிறேன் என்ற நிலையில், இவர்கள் என்னதான் தலைகீழாக நின்று முயற்சித்தாலும், என்ன ரிசல்ட்டை கொடுத்துவிடும்? முகநூல் கணக்கும் இருக்கிறது. அங்கே என்ன நடக்கிறது என்பதைப் பரவலாக கவனிக்கிறேன், ஆனால் அங்கே எதையும் எழுதுவது இல்லை. ஆனாலும் முகநூல் என்னை வேவு பார்க்கிறது. பிரவுசரில் எதையெல்லாம் தேடினேன், இங்கே பதிவுகள் உட்பட என்னென்ன எழுதினேன் என்பதையெல்லாம் கண்காணித்து, நல்லபிள்ளை மாதிரி suggested pages, suggested friends என்று பல செய்திகளை  முன்னிறுத்தி ஆழம்பார்ப்பதைத் தெரிந்தே வைத்திருக்கிறேன். அதனாலென்ன? நான் பார்க்க வேண்டிய செய்தி எது என்பதை வேண்டுமானால் அவர்கள் முதன்மைப்படுத்தலாம். ஆனால் அவர்கள் என்னுடைய அபிப்பிராயத்தை உருவாக்கவிட நான் அனுமதித்ததே இல்லை என்றால் என்ன செய்வார்கள்?

ஆனால், இப்படி உறுதியாகச் சொல்வதுமே, எந்தச்செய்தியானாலும், அதை   க்ராஸ் செக் செய்யாமல், நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளாமல்,அப்படியே நம்புவதில்லை என்பது இன்று நேற்றல்ல, இளம் வயதிலேயே, கற்றுக்கொண்ட ஒரு விஷயம்! காரணம் நாங்கள் பலவிதமான ஜகஜாலப் புரட்டுகளில் திமுக ஆட்சிக்கு கட்டிலில் அமர்ந்த விதத்தை நேராகப் பார்த்த தலைமுறை! ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம், மாணவர்களால் முன்னெடுக்கப் பட்டது, திமுகவின் மொழிப்போர் தியாகிகள் எல்லாம் அதில் பின்னல் வந்து சேர்ந்துகொண்டு, அரசியல் ஆதாயம் அடைந்தவர்கள் என்பதை அந்தநாட்களிலேயே புரிந்துகொள்ளவும் முடிந்தவர்கள். ஆக கடந்த 55 ஆண்டு கால அரசியலைப் பார்த்து வளர்ந்ததில் கிடைத்திருக்கிற அனுபவ பாடம் அது!


ஜனவரி 30 என்றால் உங்களுக்கு உடனடியாக என்ன ஞாபகத்துக்கு வரும்? என்னது? காந்தியை சுட்டுட்டாய்ங்களா? என்று பழைய கதையெல்லாம் சொல்ல வராதீர்கள்! ஜனவரி 30 என்றால் மதுரைக் காரர்களுக்கு அஞ்சாநெஞ்சன் அழகிரி பிறந்த நாள்! பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக அழகிரி விசுவாசிகள் விதவிதமாய் வசனங்களுடன் போஸ்டர் ஒட்டிக் கலக்குவதில் இந்த ஆண்டு கலக்கல் என்ன என்று வேடிக்கைபார்ப்பதே மதுரைவாசிகளுக்கு ஒரு  தனித்துவமான எண்டெர்டெயின்மென்ட் என்றால் நம்புவீர்களா? இந்த ஆண்டு கலக்கல், கொஞ்சம்  கலக்கத்துடன் வந்திருக்கிற மாதிரித்தான் தெரிகிறது!
கலக்கத்திலும் கூட ரைமிங் விட்டுப்போகவில்லை!
                      

ஜம்மு காஷ்மீரில் சொகுசாய் அதிகாரத்தை அனுபவித்த முன்னாள்  முதல்வர்கள் மூவரும் இப்போது வீட்டுச் சிறையிலும் கூட எந்தக் குறையுமில்லாமல் தான் இருக்கிறார்கள்! எப்போதும் மீசைதாடி எதுவும் இல்லாமல் பளபளவென்று ஷேவ் செய்த முகத்துடன் இருக்கிற ஃபரூக் அப்துல்லா, மகன் ஒமர் அப்துல்லா இருவரில் ஒமர் அப்துல்லா மட்டும் நூறுநாட்களைத் தாண்டி ஷேவ் செய்துகொள்ளாமல் சிரித்த முகமாக தாடி மீசையுடன் இருப்பதாக புகைப்படம் ஒன்று வெளியானது. பார்த்துவிட்டு மம்தா பானெர்ஜி, இங்கே இசுடாலின் எல்லோரும் கலங்கினார்களாம்? !!


தமிழக பிஜேபி சார்பில் ஷேவிங் செட்டை ஒமர் அப்துல்லாவுக்கு அனுப்பி ஏற்றுக் கொள்ளுங்கள் என்று வேண்டிக்கொண்டிருப்பதாக ஒரு செய்தி! சிகுலர் ஆசாமிகள் இதற்கு என்ன சொல்லிப் பொங்கினார்கள் என்பது தெரியவில்லை.  ஒமர் அப்துல்லா மீது தமிழக பிஜேபிக்கு திடீரென்று பாசம் வந்துவிட்டதா என்ன?!
ஓரிரு நாட்களுக்கு முன் காங்கிரஸ்காரர்கள், அரசியல் சாசனப்புத்தகத்தை அமேசானில் ஆர்டர் செய்து பிரதமர் நரேந்திர மோடிக்கு  படித்துப்பாருங்கள் மோடி என்று அனுப்பியதாக செய்தி வந்ததே! நினைவு இருக்கிறதா?  அந்தச் செய்தி கொடுத்த உந்துதலில் தமிழக பிஜேபி இப்படிச் செய்ததோ என்னவோ!!

எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ வந்து நிற்கிறதே பதிவு என்று நினைக்கிறீர்களா? கொஞ்சம் ஒன்றுடன் ஒன்றை சேர்த்துப் பாருங்கள்! தங்கள் ஆட்சியின் சாதனைகளை அழுத்தமாக மக்கள் மனதில் பதிய வைக்க வேண்டிய பிஜேபியின் ஐடி செல், அதில் முழுகவனத்தை செலுத்தவிடாமல், காங்கிரஸ் உள்ளிட்ட உதிரிகள் கிளப்புகிற அக்கப்போர்களுக்கு பதில் சொல்வதிலேயே அதிக நேரத்தை செலவிடுகிறது. காங்கிரசின் ஐடி செல்லுக்கு, அதன் தலைவர்களுடைய சாமர்த்தியம் என்னவென்று சொல்லமுடியாதே! அங்கே இங்கே என்று கிடைக்கிற இடங்களில் எல்லாம் கல்லெறிந்து விட்டு ஓடிவிடுவது எளிதல்லவா? அவர்கள் அதைத்தான் செய்கிறார்கள்!

மு.க. அழகிரிக்கு ஐடி விங், செல் எல்லாம் கிடையாது! இப்படிப் போஸ்டர் அடித்து ஒட்டுகிற விசுவாசிகள் மட்டும்தான்! அவர்கள் போஸ்டர் அடித்துக் கலக்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்!

நம்மூர் அரசியலின் தரம், வீச்சு இவ்வளவுதான்! The Great Hawk என்றெல்லாம் Netflx படமெடுக்கிற அளவுக்கு இன்னமும் போகவில்லை! நம்மூருக்கு பிரசாந்த் கிஷோர் மாதிரி தேர்தல் உத்தி வகுக்கிற உதார்களே கொஞ்சம் அதிகப்படி! காங்கிரசின் இமேஜை மீட்டு (முட்டுக்) கொடுக்க எண்பதுகளில் Rediffusion என்ற ப்ராண்ட் மேனேஜர்களையும் பார்த்த அனுபவம் வேறு இருக்கிறது. அதுவும் போக, ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இங்கே  கட்டமைக்கப்பட்ட  ஈவெரா ப்ராண்ட், ரஜினிகாந்த் என்ற நடிகர் பேச்சிலேயே உடைந்து நொறுங்க ஆரம்பித்ததையும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்? அப்புறமும் என்ன? !!

மீண்டும் சந்திப்போம்.
            

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!