காங்கிரசை ஒதுக்கித்தள்ளுங்கள்! மம்தா பானெர்ஜி வழிகாட்டுகிறார்!

தலைப்பைப் புரிந்துகொள்ள முடியாத நண்பர்கள், முந்தைய பதிவை எதற்கும் ஒருமுறை வாசித்து விடுவது உசிதம்! இங்கே காங்கிரசுக்கும் ஏனைய மாநிலக்கட்சிகளுக்கும் இடையிலான உரசலைப் புரிந்துகொள்வது எப்படி?  மாநிலக்கட்சிகள் உருவான விதமும், மாநிலக்கட்சிகளிலிருந்து வரிசையாக நான்கு பிரதமர்கள் காங்கிரஸ் ஆதரவுடன் உருவானதும், மிகக் குறுகிய காலத்திலேயே காங்கிரஸ் தனது ஆதரவை விலக்கிக் கொண்டு  கவிழ்த்ததுமான மிகச் சமீப காலத்தைய வரலாற்றின் முடிவுரைப்பகுதியாக, மாநிலக்கட்சிகள் காங்கிரசுக்கு விட்டுக்கொடுக்க மறுக்கிற நிலைமை உருவாகியிருப்பதைப் பார்க்க வேண்டியிருக்கிறது. இங்கே திமுக கையிலெடுத்த மாநிலத்தில் சுயாட்சி மத்தியிலே கூட்டாட்சி என்ற  வெற்றுக்கோஷம் மத்திய ஆட்சியில் இடம் பிடித்ததும் மாநிலத்தில் தனிக்கொள்ளை மத்தியிலே கூட்டுக்கொள்ளை என்றானது மாதிரி அல்லாமல், பல மாநிலக் கட்சிகள் காங்கிரசிடமிருந்து ஒதுங்கி இருக்க முடிவு செய்திருப்பது தங்களுடைய இருப்பைத் தக்க வைத்துக் கொள்கிற (survival) விதத்திலானது. அதே நேரம் காங்கிரசுடைய நிலைமையோ தன்னால் முடியாததை எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை என்கிற அடுத்தவன் தோள்மீதேறி அதிகாரம் செய்கிற எர்னெஸ்ட் ஹெமிங்வே கதையில் வருகிற முடவனான கடற் கிழவன் மாதிரியானது.


அதிகாரத்தை எந்தவகையிலாவது அடையத்துடிக்கிற காங்கிரஸ் கட்சி CAA NRC இவைகளின் மீதான ஒருமாதப் போராட்டம் வலுவிழந்து வருகிற நிலையில் எதிர்க்கட்சிகளின் துணையோடு மீண்டும் அதைத் தூண்டி விடுவதற்கு முயற்சிப்பதில், மம்தா பானெர்ஜி ஒருவர்தான் சரியான முட்டுக்கட்டை போட்டிருக்கிறார்! தனித்தே நின்று  CAA NRCக்கு எதிராகப் போராடுவோம்  என்று வெளிப்படையாக அறிவித்திருக்கிற ஒரே மாநிலக் கட்சி மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் மட்டும் தான்! மற்ற மாநிலக் கட்சிகள் காங்கிரசிடமிருந்து விலகியே இருக்க முடிவு செய்திருப்பதற்கும், மம்தா பானெர்ஜி முடிவு செய்திருப்பதற்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் மம்தா பானெர்ஜி காங்கிரசுக்கு நேரடியான சவால் விடுத்திருக்கிறார் என்பது தான்!


சேகர் குப்தா அனுபவமுள்ள பத்திரிகையாளர்தான்! ஆனால் காங்கிரஸ் சார்புநிலையை வெளிப்படையாக எடுத்திருப்பவரிடம் மிகச்சரியான அலசலை எதிர் பார்க்க முடியாதுதான்! தவிர மாநிலக்கட்சிகள் புறக்கணித்த 13 ஆம் தேதிக்கு கூட்டத்தன்றே வெளியான வீடியோ இது. மிகநீண்டகாலம் ஆளும் கட்சியாகவே இருந்ததால் எதிக்கட்சிகளின் தலைமையாக காங்கிரசை மாநிலக்கட்சிகள் ஏற்கத் தயங்குகின்றன என்பது மிகவும் சப்பையான வாதம். செல்லாக்காசாகிப் போனபின்னாலும் கூட, காங்கிரஸ் தன்னை இன்னமும் ஆளப்பிறந்தவர்களாக நினைத்துக் கொண்டிருப்பதுதான், அடிப்படையான கோளாறு!  

வீடியோ 26 நிமிடம் 

ஜனங்களுடைய கோபத்தை எப்படிக் கிளறுவது, கலகம போராட்டங்களைத் தூண்டுவது என்பதில் காங்கிரசுக்கு கிடைத்திருக்கும் விதவிதமான உத்திகள், ஜனங்களை மேலும்மேலும் குழப்புகிற மாதிரியே அமைந்து போகிற மாதிரியான தவறுகளை மம்தா பானெர்ஜி கடந்த ஆறுமாதங்களில் அனேகமாகத் தவிர்த்து விட்டார் என்றே சொல்கிறார்கள். (இடையில் எழுந்த Cut money சர்ச்சை,  துர்கா பூஜா பந்தல்கள் சர்ச்சை, மருத்துவர்கள் போராட்டம், இப்படி வரிசையாகப் பலவிஷயங்களை மறந்துவிட்டால் ..) !

காய்கறி விலைவிசாரிக்கும் மம்தா 
வீடியோ 1 நிமிடம் 

மம்தா பானெர்ஜியை இப்போதெல்லாம் சிரித்த முகத்தோடு பார்க்க முடிகிறது. காய்கறி மார்கெட்டுக்கு போகிறார், ஜனங்களிடம் இயல்பாகப் பேசுகிறார் என்று வீடியோ, செய்திகளில் மாற்றங்கள் எல்லாம் நிஜம் தானோ என்று நினைக்க வைக்கிற விதமாக!  எப்போதிலிருந்தாம்? 2019 லோக்சபா தேர்தல்களில் பிஜேபிக்கு 18 இடங்கள் கிடைத்த உடனேயே மம்தா பானெர்ஜி உஷாராகி விட்டார்! சென்ற வருட ஜூன் மாதம் IPAC நிறுவனத்தின் பிரசாந்த் கிஷோர் மம்தா பானெர்ஜிக்கு உதவிசெய்ய ஒப்பந்தம் போட்டுவிட்டார் என்கிற செய்தியில் ஆரம்பித்து இப்போது வரை கிடைக்கிற செய்திகளைத் தொகுத்துப்பார்த்தால் மம்தா பானெர்ஜி பிரசாந்த் கிஷோர் வகுத்துக் கொடுக்கும் உத்திகளை அப்படியே பயன்படுத்தி வருகிறார் என்ற தகவலை News 18 தளச் செய்தி கொஞ்சம் விரிவாகவே சொல்கிறது. செய்தியை இணைப்பில் கொஞ்சம் வாசித்துத்தான் பாருங்களேன்! 

உதாரணமாக, ஜனவரி 11 அன்று மம்தா பானெர்ஜி அரசுநிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடியுடன் பங்கேற்ற கையோடு கொல்கத்தா எஸ்பிளனேட் பகுதியில் CAA /NRCக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் நடத்திக் கொண்டிருந்த தர்ணா போராட்டக்களத்துக்குத் திரும்பிவிட்டார். இடதுசாரி மாணவர்கள் அவருக்கெதிராக #GoBackDidi  கோஷங்கள் எழுப்பியபோது சிரித்தமுகத்துடன் கைகூப்பி அவர்களை எதிர்கொண்டவிதம், இதுவரை பாயும் புலியாகவே அவரைப்பார்த்துவந்தவர்களுக்கு அதிர்ச்சி! எதற்காக நரேந்திரமோடியுடன் ஒரே மேடையில் பங்கேற்கப்போக வேண்டுமென்பது அவர்களுடைய  கேள்வி! மைக்கைக் கையில் பிடித்து ஒரு முதல்வராகத் தன்னுடைய கடமைகளை செய்யவே போனதாக அவர் பொறுமையாக விளக்கம் சொன்னவிதம்!     எதனால் இப்படியொரு மாற்றம் என்பது புரியாத புதிராகவே இடதுசாரிகளுக்கு இன்னமும் இருக்கிறது என்று ஆரம்பித்து, வரிசையாகக் காரணங்களை அடுக்குகிறார்கள். Her thought-out reactions and 'makeover' seem to be a result of a new political strategy drafted by Prashant Kishor and his firm Indian Political Action Committee (I-PAC) as she prepares to defend her bastion from an aggressive onslaught by the BJP.


பிரசாந்த் கிஷோருடைய டீம் வெறும் பிரசார கோஷங்கள் போஸ்டர்களை மட்டும் டிசைன் செய்கிற நிறுவனமல்ல, அதையும் தாண்டி  என்பதை இந்த நேரத்தில் நண்பர்களுக்கு நினைவுபடுத்த வீரும்புகிறேன். IPAC டீம் மேல்மட்ட, கீழ்மட்டக் கட்சி ஆசாமிகளோடு இணைந்து பணியாற்றுவதில்லை. மாறாக கட்சி ஆசாமிகளைக் களத்தில் அவர்களுக்குத் தெரியாமலேயே கண்காணித்து, அவர்கள் செயல்பாடு, மக்களுடன் இருக்கும் தொடர்பு செல்வாக்கு எல்லாவற்றையும் அதற்கான ஆதாரங்களோடு சேகரித்து, கட்சித்தலைவரிடம் மட்டுமே ரிபோர்ட் செய்கிற ஒரு மாதிரியான வேவு பார்த்துச் சொல்கிற நிறுவனம்! அப்படியே இதர கட்சிகளுடைய பிரசாரத்தை முடியடிப்பதற்கு என்னென்ன செய்யவேண்டும் என உத்திகளை வகுத்துக் கொடுக்கிற, தான் வேலைசெய்கிற கட்சிக்கு ஆதரவான கருத்துக்களை விதைக்கிற ஒரு நிறுவனம். சுருக்கமாக, இதே பக்கங்களில் பேசப்பட்ட Cambridge Analytica  மாதிரி, தகவல்களைக் கொஞ்சம் manipulate செய்து காசுக்காக பொதுஜன அபிப்பிராயத்தைத் திசை மாற்றும் வேலையைச் செய்கிற ஒரு நிறுவனம்.

இங்கே சமூக வலைதளங்களில் கொட்டப்படும் ஜனங்களுடைய உணர்வே பிரசாந்த் கிஷோர் மாதிரியான வியாபாரிகளுக்கு மூலதனமாக இருக்கிறது. அதைவைத்தே அவர்கள் வித்தை காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இங்கே தமிழ்நாட்டிலும் கூட, திமுகவுக்காக வேலைசெய்ய ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதில் மேற்குவங்கம் மாதிரி முன்னேற்றம், மாற்றம் ஏதாவது இசுடாலினிடம் தெரிகிறதா? அதை நீங்கள் தான் வந்து சொல்ல வேண்டும்! எத்தனை நாள் தான் கேள்வியும் நானே பதிலும் நானே என்றிருப்பதாம்? 

மீண்டும் சந்திப்போம்.              

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!