நேற்று பொது வேலைநிறுத்தமாமே! பார்த்தீர்களா? என்ன நடந்ததாம்?

ஒரு முப்பது வருஷங்களுக்கும் மேலாக தொழிற்சங்க ஈடுபாட்டோடு தீவிரமாக இருந்திருக்கிறேன். ஒரு இடதுசாரி அரசியலையும் சேர்த்தே  முன்னெடுத்திருக்கிற அனுபவத்தில் நாடு தழுவிய வேலைநிறுத்தம் அல்லது பொது வேலை நிறுத்தம் என்பது மாதிரியான அரசியல் மோசடி வேறெதுவும் இருக்கமுடியாது என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லுவேன்! நேற்று ஜனவரி 8 ஆம் தேதி கூட இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவை சார்ந்த தொழிற்சங்கங்கள் எல்லாம் சேர்ந்து ஒரு பொது வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்திருப்பதாக செய்தி ஊடகங்களில் மட்டும் ஒரு பரபரப்புச் செய்தி தொடர்ந்து ஊதப்பட்டு வருகிற வேடிக்கையை கவனித்தீர்களா? பொத்தாம்பொதுவாக சிலபல நிறைவேற்றமுடியாத கோரிக்கைகளை  சும்மா லுலுலாயிக்கு தொழிலாளர்களுக்குச் சொல்லிவிட்டு, குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகவும் போராடுவதான தங்களுடைய அரசியல் அஜெண்டாவையும்  நடத்திக் கொள்வது, இப்போது புதிதாக நடப்பது அல்ல. வருடா வருடம் குறைந்தது ஒருமுறையாவது நடக்கிற கூத்துதான்!


ஒருபக்கம் பொதுவேலை நிறுத்தம்! இன்னொருபக்கம் பாரத் பந்த் என்று அறிவிப்பு! என்ன நடந்தது? எப்படி நடந்தது? யாராவது பார்த்தீர்களா? குறிப்பிட்டு இந்தத் துறையில் வேலைநிறுத்தம் முழுமையாக நடந்தது என்ற தகவல் இருக்கிறதா? எந்த மாநிலத்திலாவது  பாரத்  பந்த் பாதியளவாவது வெற்றி பெற்றதாக செய்தி எதையாவது பார்த்தீர்களா? ஆனால் சென்னை அண்ணாசாலையில் விசிக திருமா, தொமுச, சிஐடியு ஆசாமிகள் சாலைநடுவே அமர்ந்து மறியல் செய்தபோது போலீசாரால் கைதுசெய்யப்பட்டு வேனில் ஏற்றப்பட்டபோது சாலையில் உருண்டு புரண்டதாக சுமார் 1200 பேரம் கூடவே  கைதுசெய்யப்பட்டு பக்கத்தில் இருந்த திருமண மண்டபத்துக்கு அழைத்துச்  செல்லப்பட்டதாக ஒன் இந்தியா தளத்தில் பில்டப் கொடுக்கப்பட்டதைத் தாண்டி வேறேதாவது impact இருந்ததா?  பார்க்க முடிந்ததா?

நேற்றிரவு புதியதலைமுறை டிவியில் ஒரு 49 நிமிட விவாதத்தில் நெறியாளர் கார்த்திகேயன் என்னமாய் இந்த பொதுவேலைநிறுத்தம் / பாரத் பந்த் பற்றி ஏகத்துக்கும் பில்டப் கொடுக்கிறார், குறுக்குச்சால் ஓட்டிக் கேணத்தனமாய்க் கேள்விகள் கேட்கிறார் என்கிற காமெடியைக் கொஞ்சம் அனுபவித்துப் பாருங்களேன்! ஒரு சங்கம் வேண்டும் எதற்காவது உதவும் என்ற நம்பிக்கையில் பெரும்பாலான தொழிலாளர்கள், குறிப்பாக வங்கி ஊழியர்கள், LIC ஊழியர்கள் (இவர்களில் பெரும்பாலானோருக்கு strike என்பது ஒரு non paid holiday என்பதற்கு மேல் பெரிதாக அபிப்பிராயம் இருப்பதில்லை!) கொஞ்சநேரம் தங்கள் அலுவலகம், அல்லது ஒரு பொது இடத்தில் கோஷங்கள் போட்டுக் கலைந்துவிடுவார்கள் என்பது பார்த்துப் பார்த்துச் சலித்துப்போன விஷயம்! இடதுசாரிகள் இத்தனை வருடங்களாகத் தலைகீழாக குட்டிக்கரணம் போட்டுப் பார்த்தும் கூட இந்தியத் தொழிலாளர்களை அவர்கள் நினைத்தபடி அரசியல்படுத்தமுடியவில்லை என்பதை இடதுசாரி இயக்கங்களின் மிகப்பெரிய தோல்வியாகவும், சறுக்கலாகவும் இருப்பது புரிகிறதா?

அதனால் தானோ என்னவோ இங்கே தமிழகத்தில் இடதுசாரிகள் மார்க்சீயம் பேசுவதைக் கூட மறந்து விட்டு திராவிடர் கழகம், தி மு கழகம், விசிக என்று குறுகிய பார்வைகொண்ட இயக்கங்களின் பின்னால் போய் ஒட்டிக்கொண்டிருக்கிற பரிதாபநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்!

ஒரு காலத்தில் நம்பிக்கைக்குரியவர்களாக இருந்த இடது சாரிகள் இன்றைக்கு கழகங்களிடம் காசுக்காகவும் கையேந்துகிறவர்கள் என்கிற அவப்பெயரை சம்பாதித்ததோடு, ஒரு அரசியல் சக்தியாக இருக்கிற தகுதியையும் இழந்து விட்டு பரிதாபமான முட்டுச்சந்துக்குள் நிற்கிறார்கள்.

ஆனாலும் வாயமட்டும் காதுவரை நீளுவது இன்னமும் குறையவில்லை என்பது இன்னொரு சோகம்.

மீண்டும் சந்திப்போம்.      
         

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!